கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 22,670 
 

கோஞ்சி ரயில் நிலையத்தில் சூவோ மார்க்கத்திலிருந்து வரும் அதிவிரைவு ரயிலில் டெங்கோ ஏறினான். பெட்டி காலியாக இருந்தது. அன்றைய தினத்தை செலவழிப்பதற்கான எந்தத் திட்டமும் அவனிடம் இல்லை. எங்கே செல்வது என்பதோ, என்ன செய்வது என்பதோ (அல்லது செய்யாமல் இருப்பதோ) முழுக்க முழுக்க அவன் விருப்பம். காற்று வீசாத கோடைத் தினம் ஒன்றின் காலை பத்துமணிக்கு வெயில் உக்கிரமாகவே இருந்தது. ரயில் ஷிஞ்சூகு, யோட்சுயா, ஒச்சானோமிசு நிலையங்களைக் கடந்து இறுதியில் டோக்கியோ சென்ட்ரல் ஸ்டேசனில் வந்து நின்றது. எல்லோரும் இறங்கியபின் கடைசியாக இறங்கினான். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து எங்கே போவதென யோசித்தான். “எங்கு வேண்டுமானாலும் நான் போகலாம்” என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான். “இன்று வெயில் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. கடற்கரைக்குச் செல்லலாம்.” தலையை உயர்த்தி நடைமேடையிலிருந்த கால அட்டவணையைப் பார்த்தான்.

அவனுக்குத் திடீரென்று தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உறைக்க, தலையைப் பலமாகக் குலுக்கிக் கொண்டான். ஆனால் மனதில் பதிந்து விட்டிருந்த எண்ணம் அகல மறுத்தது. கோஞ்சியில் சூவோ மார்க்க வண்டியில் ஏறும்போதே உள்மனதில் இதை அவன் தீர்மானித்து விட்டிருக்க வேண்டும். பெருமூச்செறிந்துகொண்டே எழுந்து நிலையப்பணியாளர் ஒருவரிடம் சிகூராவுக்கு விரைவில் போய்ச்சேரக் கூடிய வண்டி எதுவென்று விசாரித்தான். அவர் ஒரு தடிமனான பதிவேட்டைப் புரட்டினார். அவன் 11.30க்கு டாடயாமாவுக்குச் செல்லும் சிறப்பு விரைவு வண்டியைப் பிடித்து அங்கிருந்து நகர் வண்டிக்கு மாறவேண்டும்; சிகூராவுக்குப் பகல் இரண்டுமணி சுமாருக்குப் போய்சேரமுடியும் என்றார். டோக்கியோ – சிகூரா போகவர பயணச்சீட்டு வாங்கிக்கொண்டான். பின்பு நிலையத்திலிருந்த உணவகத்திற்குச் சென்று கறிச்சோறும் ஸாலட்டும் ஆர்டர் செய்தான்.

அப்பாவைப் போய்ப் பார்ப்பதென்பது அவனுக்கு மனக்குலைவை உண்டாக்கும் காரியம், அவரை அவன் எப்போதுமே பெரிதாக நேசித்ததில்லை. அவரும் அவன்மேல் விசேஷமாக அன்பு கொண்டிருந்ததாகச் சொல்லமுடியாது. அவர் நான்கு வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவுடனேயே சிகூராவில் உள்ள ஒரு சானடோரியத்தில் சேர்ந்துவிட்டார். அது அறிதிறன் குறைபாடுள்ள நோயாளிகளைப் பராமரிக்கும் இடம். டெங்கோ அங்கு அவரை இரண்டு முறைதான் போய்ப் பார்த்திருக்கிறான். முதல்முறை அவர் அங்கு சேர்ந்தபோது, அவருக்கு இருக்கும் ஒரே உறவு அவன்தான் என்பதால் சேர்க்கை விதிகளுக்காக டெங்கோ அங்கு செல்ல வேண்டியிருந்தது. இரண்டாவது முறையும் ஒரு நிர்வாகக் காரணத்திற்காக. இரண்டே முறை: அவ்வளவுதான்.

அந்த சானடோரியம் கடற்கரையை ஒட்டியிருந்த ஒரு விஸ்தாரமான பரப்பில் இருந்தது. பழமை வாய்ந்த வசீகரத்தோடு மரக்கட்டிடங்களும் புதிதாகக் கட்டப்பட்டிருந்த மூன்றுமாடி கான்கிரீட் கட்டிடமுமாக ஒரு விநோதக் கலவை. காற்று புத்தம் புதிதாக வீச, அலைகளின் ஓசையைத் தவிர அமைதி சூழ்ந்திருந்தது. தோட்டத்தின் விளிம்பில் பைன் மரத்தோப்பு காற்றுத்தடுப்பாக விரிந்திருந்தது. அபாரமான வைத்திய வசதிகள். டெங்கோவின் அப்பாவுக்கு இருக்கும் மருத்துவக்காப்பீடு, ஓய்வுகால போனஸ், சேமிப்பு, ஓய்வூதியம் இவற்றைக்கொண்டு மிச்ச வாழ்நாளை சௌகரியமாக அவர் அங்கேயே கழித்துவிடலாம். அவனுக்காக அவர் பெரிதாக எந்தச் சொத்தையும் விட்டுச்செல்வதற்கு இல்லையென்றாலும் அவரை கடைசிவரை கவனித்துக் கொள்ள ஓர் இடம் கிடைத்திருக்கிறது என்பதற்காக அந்த நல்வாழ்வு இல்லத்திற்கு நன்றி பாராட்ட வேண்டியவனாக இருந்தான். டெங்கோவிற்கு அவரிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்வதற்கோ, அல்லது அவருக்கு எதையும் கொடுப் பதற்கோ உத்தேசம் எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் தனித்தனியான மனிதர்களாகவே இருந்தார்கள். முற்றிலும் மாறுபட்ட இடங்களிலிருந்து வந்த, வெவ்வேறு திசைகளில் முற்றிலும் மாறுபட்ட இடங்களுக்குச் சென்று கொண்டிருப்பவர்கள். யதேச்சை யாக அவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களிடையே இந்தளவு விலகல் இருப்பது அவமானத்திற்குரியதுதான்.ஆனால் டெங்கோவால் வேறெதுவும் செய்யவும் முடியாது.

டெங்கோ பணத்தைச் செலுத்திவிட்டு, நடை மேடைக்குச் சென்று டாடயாமா ரயிலுக்காகக் காத்திருந்தான். அவனுடன் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் கடற்கரையில் சில தினங்களாகக் கழிக்கச் செல்லும் சந்தோஷமான குடும்பங்கள்.

பெரும்பாலோர் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுதினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறுவயதில் டெங்கோவிற்கு ஒரேயொரு முறைகூட ஞாயிற்றுக் கிழமையை சந்தோஷமாகக் கழிக்க வாய்த்திருக்கவில்லை. அவனுக்கு ஞாயிற்றுக் கிழமை என்பது, அதன் இருண்ட பாகத்தை மட்டுமே காட்டுகின்ற, வடிவமைதியற்ற நிலவைப் போன்றதாக இருந்தது. வார இறுதி வந்தவுடன் அவன் மொத்த உடம்பும் சோம்பல் மிகுந்த வலியெடுக்கும். பசி மறைந்து போகும். ஞாயிற்றுக் கிழமைகளே வரக்கூடாதென்று அவன் செய்த பிரார்த்தனைகள் பலிக்கவில்லை.

டெங்கோ சிறுவனாக இருந்தபோது அவன் அப்பா ஜப்பானின் பொதுத்துறை வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான NHKவில் வரித் தண்டலராக இருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவர் டெங்கோவை கூட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்று சந்தாத்தொகை வசூலிப்பார். இந்த நடைமுறை டெங்கோ மழலையர் பள்ளியில் சேருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஐந்தாம் வகுப்பு முடிக்கும்வரை ஒரேயொரு வார இறுதி நாளில் கூட அவனுக்கு ஓய்வு கிட்டியதில்லை. NHKவின் மற்ற வரித்தண்டலர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலை செய்கிறார்களாவென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் நினைவு தெரிந்தவரை அவனுடைய அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் வேலை பார்த்தார். சொல்லப்போனால் மற்றதினங்களைவிட அன்று மேலும் துடிப்பாக வேலைசெய்தார். வார நாட்களில் வெளியில் சென்றிருப்பவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வீட்டில் பிடிக்கமுடியும் என்பதுதான் காரணம்.

டெங்கோவின் அப்பா இந்த வரிவசூலுக்கு அவனைக் கூடவே அழைத்துச்சென்றதற்குப் பல காரணங்கள் இருந்தன. சிறுவனை வீட்டில் தனியாக விட்டுச்செல்ல முடியாது என்பது ஒரு காரணம். வாரநாட்களிலும் சனிக்கிழமைகளிலும்டெங்கோ பள்ளிக்கோ, பராமரிப்பு நிலையத்திற்கோ சென்றுவிடுவான். இவை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட் டிருக்கும். ஒரு தந்தை எந்த மாதிரி யான வேலை பார்க்கிறார் என்பதை அவர் மகனுக்கு காட்டியாக வேண்டியது முக்கியம் என்பது டெங்கோவின் அப்பா சொன்ன இன்னொரு காரணம். அப்பா எப்படியெல்லாம் உழைத்து தன்னை வளர்க்கிறார் என்பதையும், உழைப்பின் அருமையையும் ஒரு பிள்ளை உணர்ந்துகொள்ள வேண்டு மென்பது அவர் கொள்கை. டெங்கோவின் அப்பா அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அவருடைய அப்பாவின் வயலில் வேலைபார்க்க அனுப்பப்பட்டிருக்கிறார். வேலை அதிகமாக இருக்கும் காலங்களில் அவர் பள்ளிக்குக்கூட அனுப்பப்படமாட்டார். அத்தகையதொரு வாழ்க்கைதான் அவருக்குப் பழக்கப்பட்டிருந்தது.

டெங்கோவின் அப்பா சொன்ன மூன்றாவது மற்றும் கடைசி காரணம் எல்லாவற்றையும்விட தன்னலமும் சூழ்ச்சியும் கொண்டதாக இருந்ததுதான் அவருடைய மகனின் இதயத்தில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சின்னக் குழந்தையைக் கூடவே அழைத்துச் செல்வது தனது வேலையை எளிதாக்கும் என்று டெங்கோவின் அப்பாவுக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. வரிப்பணம் கொடுக்கக்கூடாது என்ற உறுதியில் இருப்பவர்கள்கூட ஒரு சின்னப்பையன் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், சங்கடப்பட்டுப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். அதனால்தான் கொடாக்கண்டர்கள் வீடுகளை அவர் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு ஒதுக்கி வைத்திருந்தார். அவன் ஏற்று நடிக்கவேண்டிய பாத்திரம் இதுதான் என்று டெங்கோவிற்கு ஆரம்பத்திலேயே புரிந்திருந்தது. அவன் அதை முற்றிலுமாக வெறுத்தான். ஆனாலும் அவன் அப்பாவைத் திருப்திப்படுத்துவதற்காக அவன் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொண்டுதான் ஆகவேண்டுமென்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் அப்பாவின் மனம் கோணாமல் நடந்து கொண்டால் அன்றைய தினம் அவன் கரிசனத்தோடு நடத்தப்படுவான். அவன் இதற்குப் பதிலாக ஒரு பழக்கப்படுத்தப்பட்ட குரங்காக இருந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றும்.

டெங்கோவிற்கு இருந்த ஒரே ஆறுதல் அவன் அப்பாவின் வரிவசூல் சுற்று அவர்கள் வீட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தது. அவர்கள் இச்சிகாவா நகரத்தின் புறநகர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார்கள். அவன் அப்பாவின் வசூல்சுற்று நகரத்தின் மையப்பகுதியில் இருந்தது. ஆனாலும் சில நேரங்களில் கடை வீதிகளில் செல்லும்போது அவன் வகுப்புத்தோழன் யாராவது கண்ணில் படுவான். டெங்கோ உடனே தலையைக் குனிந்தபடி அவன் அப்பாவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வான்.

திங்கட்கிழமை காலைகளில் அவன் பள்ளி நண்பர்கள் முந்தையதினம் எங்கு சென்றிருந்தார்கள், என்ன செய்தார்கள் என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்காட்சிகளுக்கும், விளையாட்டுப் பூங்காக்களுக்கும் உயிரியல் பூங்காக்களுக்கும் செல்பவர்களாக இருந்தார்கள். கோடையில் நீச்சலுக்கும் பனிக்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கும் செல்கின்ற கதைகள் அவர்களிடம் இருந்தன. ஆனால் டெங்கோவிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலைவரை அந்நியர்களின் வீட்டு அழைப்பு மணிகளை அழுத்தி, கதவைத் திறப்பவர்களிடம் அவன் அப்பா பணம் வசூலித்துக் கொண்டிருந்தார். பணம் கொடுக்க மறுப்பவர்கள் சிலரை அவர் மிரட்டினார், சிலரிடம் கெஞ்சினார். சாக்குப்போக்குச் சொல்லி நழுவுகிறவர்களிடம் குரலை உயர்த்தினார். சில நேரங்களில் அவர்களிடம் தெருநாய்களைப் போல குலைத்தார். இத்தகைய அனுபவங்கள் டெங்கோவின் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக் கூடியவையல்ல. மத்திய வர்க்க அலுவலக ஊழியர் பிள்ளைகளின் சமூகத்தில் அவன் ஒருவித வேற்றுகிரகவாசி போல உணர்வதை அவனால் தடுக்க முடியாதிருந்தது. வேறோர் உலகத்தில் வேறொருவிதமான வாழ்க்கையை வாழ்பவன் அவன். அதிருஷ்டவசமாக அவன் அபாரமான மதிப்பெண்கள் வாங்கக் கூடியவனாக இருந்தான். விளையாட்டுத் திறமையில் நிகரற்றிருந்தான். எனவே

அவன் ஓர் அந்நியனாக இருந்தாலும் ஒதுக்கப் பட்டவனாக இல்லை. பெரும் பாலான சந்தர்ப்பங்களில் அவன் மரியாதையுடன் நடத்தப்பட்டான். மற்ற மாணவர்கள் அவனை ஞாயிற்றுக் கிழமைகளில் எங்காவது வரச்சொல்லியோ, அவர்கள் வீட்டுக்கோ அழைத்தால் அமைதியாக மறுத்துவிடுவான். பின்னர் அவர்கள் அவனை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

கடும் உழைப்பைக் கோரும் வறட்டு டொஹோகு பகுதியில் ஒரு விவசாயக் குடும்பத்தின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் டெங்கோவின் தந்தை. சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி ஒரு பண்ணைத் தொழிலாளர் குழுவினரோடு சேர்ந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் மஞ்சூரியாவுக்குப் பெயர்ந்து சென்றார். மஞ்சூரியா ஒரு சொர்க்க பூமி, விஸ்தாரமான வளமான நிலப்பரப்பு என்றெல்லாம் அரசாங்கம் பிரச்சாரம் செய்வதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சொர்க்கம் என்பது எங்கேயும் இல்லாதவொன்று என அவருக்குத் தெரியும். பசியோடிருக்கும் ஏழைதான் அவர். வீட்டிலேயே முடங்கியிருந்தால் பசியிலும் பஞ்சத்திலும்தான் வாழ்க்கை கழியும் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்திருந்தது. மஞ்சூரியாவில் அவருக்கும் மற்ற பண்ணைத் தொழிலாளிகளுக்கும் சில விவசாயக் கருவிகளையும் சிறு ஆயுதங்களையும் கொடுத்தார்கள். அவர்கள் நிலத்தைத் திருத்தி, சீராக்கிப் பயிர்வைக்கத் தொடங்கினார்கள். அந்த மண் வளமற்ற, பாறைகள் மண்டியிருந்தது. குளிர்காலத்தில் எல்லா இடங்களும் பனியில் உறைந்து போயின. சில நேரங்களில் தெருநாய்களைத்தான் அவர்கள் வேட்டையாடித் தின்ன வேண்டியிருந்தது. இருந்த போதிலும், முதல் சில வருடங்களை அவர்கள் அரசு மானியத்தால் கடத்திவிட முடிந்தது. ஒருவாறாக அவர்கள் வாழ்க்கை வேரூன்றத் தொடங்கியபோது 1945ஆம் வருடம் ஆகஸ்ட்டில் சோவியத்யூனியன் மஞ்சூரியாவின் மீது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியது. டெங்கோவின் அப்பாவுக்கு நண்பராக இருந்த ஓர் அரசு அதிகாரியின் மூலம் வரவிருக்கும் இந்த ஆபத்தை முன்கூட்டியே அறிந்திருந்ததால் சோவியத் படைகள் எல்லையைக் கடந்திருக்கின்றன என்ற செய்தி எட்டியதுமே பக்கத்து ரயில் நிலையத்திற்கு ஓடிச்சென்று டா – லியென் வண்டியில் ஏறினார். இந்த வண்டிக்கு அடுத்ததோடு போக்குவரத்து முடக்கப்பட்டது. அவருடைய சகாக்களில் அந்த வருடம் ஜப்பானுக்குத் திரும்பி வந்தது அவர் ஒருவர் மட்டும்தான்.

யுத்தம் முடிந்ததும் டெங்கோவின் அப்பா டோக்கியோவுக்குச் சென்று கருப்புச்சந்தையில் சிலகாலம், மரத்தச்சர் ஒருவரின் உதவியாளராகச் சிலகாலம் என்று சிரமஜீவனத்தில் காலத்தைக் கழித்து வந்தார். அஸாகுஸாவில் இருந்த ஒரு மதுக்கடையில் சுமைக்கூலியாக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது மஞ்சூரியாவில் பழக்கமாகியிருந்த அந்த அதிகாரியை அங்கே யதேச்சையாகச் சந்தித்தார். டெங்கோவின் அப்பா பிழைக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அவர் NHK அலுவலகத்தில் சந்தா வசூலிப்புப் பிரிவில் இருந்த தனது நண்பரிடம் சிபாரிசு செய்வதாகச் சொல்ல, டெங்கோவின் அப்பா மகிழ்வோடு ஒப்புக்கொண்டார். NHKவைப் பற்றி அவருக்கு அநேகமாக எதுவுமே தெரிந்திருக்காவிட்டாலும், சீரான வருமானம் தரும் எந்த வேலைக்கும் அவர் தயாராகவே இருந்தார்.

NHKவில் டெங்கோவின் அப்பா உற்சாகத்தோடு வேலைபார்த்தார். அவரது பலங்களில் முதன்மையானது, இடர்ப்பாடுகள் சூழ்ந்த நேரத்திலும் அவர் திடமனதுடன் காட்டும் விடாமுயற்சி. பிறந்தநாளிலிருந்து ஒருவேளைகூட வயிறார சாப்பாடு கிடைக்காதிருந்த ஒருவருக்கு NHK சந்தா வசூலிப்பது ஒன்றும் திணறடிக்கும் வேலையல்ல. அவரை நோக்கி வீசப்பட்ட மிகமோசமான வசவுகள் அவரைச் சீண்டவேயில்லை. கடைநிலை ஊழியர்களில் ஒருவராக இருந்தாலும் ஒரு முக்கியமான நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருப்பதில் அவர் திருப்தியுற்றிருந்தார். அவரது பணியும் நடத்தையும் மிகவும் சிறப்பாக இருந்ததினால் ஒரு வருடம் கழித்து ஒப்பந்த அடிப்படை ஊழியர் என்ற நிலையிலிருந்து நிரந்தரப் பணியாளராக அமர்த்தப்பட்டார். அது NHKவில் அதுவரை கேள்விப்பட்டிராத ஒரு சாதனை. விரைவில் அவருக்கு அந்நிறுவனத்திற்குச் சொந்தமான குடியிருப்பு வழங்கப்பட்டது. கம்பெனியின் மருத்துவ உதவித்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு வாழ்க்கையில் முதன்முதலாகக் கிடைத்த மகத்தான நற்பேறு அதுதான்.

டெங்கோ குழந்தையாக இருந்தபோது அவன் அப்பா ஒருநாளும் தாலாட்டுப் பாடி தூங்கவைத்ததில்லை, படுக்கையில் புத்தகம் வாசித்துக் காட்டியதில்லை. பதிலாக அவரது நிஜவாழ்க்கை அனுபவங்களைச் சொன்னார். அவர் ஒரு நல்ல கதைசொல்லி. அவரது பிள்ளைப்பிராய, இளம்பருவ அனுபவங்கள் அர்த்தம் பொதிந்தவையாக இல்லாவிட்டாலும் வேடிக்கையான கதைகள், நெகிழ்ச்சியான கதைகள், வன்முறைக் கதைகள் என சுவாரஸ்யமாக இருந்தன. ஒரு வாழ்க்கை என்பது அதன் அத்தியாயங்களின் நிறங்களாலும் பன்முகத் தன்மையாலும் அறுதியிடப்படுமென்றால் டெங்கோவின் அப்பாவின் வாழ்க்கை அதற்கேயுரிய தனித்துவமான வண்ணக்கலவையில் இருந்ததென்றே சொல்லவேண்டும். ஆனால் அவர் NHK ஊழியராகச் சேர்ந்த காலகட்டத்தை அடையும்போது அவை சட்டென்று நிறம் வெளுக்கத் தொடங்கின. அவர் ஒரு பெண்ணைச் சந்தித்தார், அவளை மணமுடித்தார், ஒரு குழந்தை – டெங்கோ – பிறந்தது; டெங்கோ பிறந்து சில மாதங்கள் கழித்து அவன் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். அவன் அப்பா அதன் பிறகு NHKவில் கடுமையாக உழைத்து அவனைத் தனியாகவே வளர்த்தார். அவ்வளவுதான் முற்றும். அவர் டெங்கோவின் அம்மாவை எப்படி சந்தித்தார், அவளை எப்படி மணமுடித்தார், எந்த மாதிரியான பெண் அவள், அவள் மரணத்திற்கு என்ன காரணம், சட்டென்று இறந்து விட்டாளா, அல்லது பலநாட்கள் நலிவாகி இருந்து இறந்துபோனாளா – டெங்கோவின் அப்பா இந்த விஷயங்களைப் பற்றி கிட்டத்தட்ட எதையுமே சொன்னதில்லை. அவன் கேட்க முயற்சித்தால், அவர் பேச்சை மாற்றினார். பெரும்பாலான நேரங்களில் அத்தகைய கேள்விகள் அவரை எரிச்சல்படுத்தின. டெங்கோ அம்மாவின் புகைப்படம் ஒன்றுகூட வீட்டில் இருக்கவில்லை.

அவன் அப்பா சொன்ன கதையை டெங்கோ அடியோடு நம்ப மறுத்தான். அவன் பிறந்து சில மாதங்கள் கழித்து அவன் அம்மா இறக்கவில்லையென்று அவனுக்குத் தெரியும், அவளைப் பற்றிய ஒரேயொரு ஞாபகம் அவனுக்குள் இருந்தது. அவனுக்கு அப்போது ஒன்றரை வயது இருக்கும். அவன் படுத்திருக்கும் தொட்டிலுக்குப் பக்கத்தில் அவள் நின்றிருக்கிறாள். அவளை அணைத்துக் கொண்டு நிற்பது டெங்கோவின் அப்பா அல்ல. அவன் அம்மா சட்டையை தலை வழியே கழற்றி எறிந்துவிட்டு உள்ளாடையின் பட்டையைத் தளர்த்தி கீழிறக்கிக்கொள்ள, டெங்கோவின் அப்பாவாக இல்லாத அம்மனிதன் அவள் மார்புகளில் தலையைப் புதைத்து உறிஞ்சுகிறான். பின் அவர்கள் ஒன்றாகப் படுத்துக்கொள்ள, அவர்களுக்குப் பக்கத்தில் டெங்கோ தூங்குகிறான். இல்லை, முழுதாகத் தூங்கவில்லை. அம்மனிதனின் கனமான குறட்டை அவனைக் கலைக்கிறது. டெங்கோ தலையைத் திருப்பி அவன் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவன் அம்மாவைப் பற்றிய டெங்கோவின் புகைப்படம் இதுதான். இந்தப் பத்து – வினாடிக் காட்சி அவன் மூளையில் மிகத் தெளிவாகப் பதிந்திருந்தது. அவளைப் பற்றி அவனிடமிருந்த ஒரே வலுவான ஆதாரம், அவளோடு அவன் மனதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரே நொய்தான இணைப்பு அதுமட்டும்தான். அவனும் அவளும் இந்த அனுமானிக்கப்பட்ட தொப்புள் கொடியால் இணைக்கப் பட்டிருந்தனர். இப்படிப்பட்டதொரு தெளிவான காட்சி டெங்கோவின் ஞாபகத்தில் பதிந்திருக்கிறது என்பதோ, புல்லை மேய்கின்ற பசுமாடு போல இந்தக் காட்சியை அவன் நிறுத்தாமல் அசைபோட்டுக்கொண்டிருக்கிறான் என்பதோ, அவன் பசியாறிக்கொண்டிருப்பது இதிலிருந்து தான் என்பதோ அவன் அப்பாவுக்குத் தெரியாது. அப்பாவும் மகனும் : தத்தமக்குள் ஆழ்ந்திருக்கும் இருட்டு ரகசியங்களோடு தழுவிப் பிணைந்திருக்கும் இரண்டு ஜீவன்கள்.

வயதேறிய பிறகு, அவள் அம்மாவின் மார்பை உறிஞ்சிக் கொண்டிருந்தவன்தான் தன்னுடைய உண்மையான தகப்பனோ என்று அடிக்கடி நினைத்திருக்கிறான். NHK வரித்தண்டலரை டெங்கோ எந்த விதத்திலும் ஒத்திருக்கவில்லை என்பதும் அதற்கு ஒரு காரணம். டெங்கோ உயரமாக, கட்டுறுதி வாய்ந்த உடலும் அகன்ற நெற்றியும் குறுகிய நாசியும் பிரதானமான செவிகளுமாக இருந்தான். அவன் அப்பா கவர்ச்சியற்ற குள்ளமான மோட்டா மனிதர். அவருக்கு சிறிய நெற்றி, தட்டையான நாசி, குதிரைக்கு இருப்பதைப் போல கூரான காதுகள். டெங்கோ தளர்வாக, உதார இயல்பினனாக இருக்கும்போது, அவன் அப்பா பதற்றமாக, கஞ்சனாக இருந்தார். அவர்கள் இருவரும் ஒருவரிலிருந்து மற்றவர் எந்தளவுக்கு வேறுபட்டவர்களாக இருக்கிறார்களென்று பலரும் வெளிப் படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

உருவ வேற்றுமைகளைவிட அவர் களிடையே காணப்பட்ட குணாம்ச வேறுபாடுகள்தான் டெங்கோவை அவன் அப்பாவிடமிருந்து அடையாளப் படுத்திக் கொள்வதில் தடையாக இருந்தது. அறிவார்வம் என்று சொல்லக்கூடிய ஒன்றே அவரிடம் இம்மியளவும் இல்லை. ஏழ்மையில் பிறந்து வளர்ந்ததால் அவருக்கு அடிப்படைக் கல்வியே கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அவன் அப்பா வளர்ந்த சூழ்நிலையைப் பற்றி நினைக்கும்போது அவனுக்கு சற்று பரிதாபம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அறிவுத்தேடலுக்கான ஆதார இச்சை என்ற உந்துதல் அந்த மனிதரிடம் இருக்கவேயில்லை. உயிர் வாழ்ந்திருக்கத் தேவையான நடைமுறை ஞானம் மட்டும் அவருக்கு இருந்தது. ஆனால் பரந்து விரிந்திருக்கும் உலகை அறிந்துகொள்ள தன்னை ஆழப்படுத்திக்கொள்ளும் ஆர்வம் டெங்கோவின் அப்பாவுக்கு இம்மியளவும் இருக்கவில்லை. அவரது இடுக்கமான சின்ன வாழ்க்கையின் மூச்சுத்திணறவைக்கும் அடைசலில் அவருக்கு எவ்வித அசௌகரியமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் எந்தவொரு புத்தகத்தையும் கையில் எடுத்து அவன் பார்த்ததில்லை. அவருக்கு ஆர்வம் இருக்கும் ஒரே விஷயம் அவரது வரிவசூல் வழித்தடம் மட்டும்தான் என்று தோன்றியது. அந்தப் பகுதியின் வரைபடத்தை வரைந்து, வண்ணப் பேனாக்களில் அடையாளம் வரைந்துகொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்து நுட்பமாகப் பார்த்துக் கொண்டிருப்பார், விஞ்ஞானி ஒருவர் குரோமோசோம்களை ஆராய்வதைப் போல.

இதற்கு நேர்மாறாக டெங்கோ எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்டவனாக இருந்தான். இயந்திர மண்வெட்டி நிலத்தைக் குடைந்து அள்ளும் நேர்த்தியோடு, அகன்று பரந்த பல்வேறு துறைகளிலிருந்தும் அவன் அறிவுச்செல்வத்தை அகழ்ந்தெடுத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்து அவனுக்கு கணக்கில் புலி என்ற பெயர் இருந்தது. மூன்றாம் வகுப்பில் இருந்தபோதே உயர்நிலைப்பள்ளி கணக்குகளைப் போட்டு வந்தான். சிறுவன் டெங்கோவிற்கு கணக்கு என்பது அவன் அப்பா வுடனான வாழ்க்கையிலிருந்து தப்பி ஒதுங்குவதற்கான ஓர் அற்புத இடமாக இருந்தது. கணக்கு உலகின் நீண்ட தாழ்வாரங்களில் எண்ணிடப்பட்ட கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டே அவன் நடந்து போவான். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அற்புதம் அவன் முன்னால் அவிழ்ந்து விழும்போது நிஜ உலகின் அசிங்கமான கசடுகள் அவனிடமிருந்து மறைந்து போகும். இந்த முடிவில்லா எண்களின் ராஜ்ஜியத்தில் அவன் அகழ்வாராய்ச்சி செய்துகொண்டேயிருந்த வரையிலும் அவன் சுதந்திரமாக இருந்தான்.

கணக்கு என்பது டெங்கோவிற்கு ஒரு மகத்தான கற்பனைக் கட்டிடமாக இருந்ததென்றால், இலக்கியம் என்பது ஒரு மாயவனமாக இருந்தது. வானத்தை நோக்கி கணக்கின் கிளைகள் முடிவே யின்றி மேலே, மேலே கிளைத்துக் கொண்டேயிருக்க, கதைகள் அவற்றின் கனத்த வேர்களைப் பூமிக்குள் ஊன்றிக் கொண்டு அவன் முன்னே விரிந்து கொண்டிருந்தன. இந்தக் காட்டில் வரைபடங்கள் இல்லை, தட்டுவதற்கு கதவுகள் இல்லை. டெங்கோவிற்கு வயதாக ஆக, இலக்கிய ஆரண்யத்தின் கவர்ச்சி, கணக்கு உலகத்தைவிடப் பலம் வாய்ந்ததாக வளர்ந்துவிட்டது. நாவல்கள் வாசிப்பதும் ஒருவித தப்பித்தல்தான். புத்தகத்தை மூடியவுடனேயே நிஜ உலகத்திற்குத் திரும்பி வரவேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில்தான் அவனுக்கு ஓர் உண்மை புரிந்தது. நாவல் உலகிலிருந்து நிஜ உலகிற்கு வரும்போது ஏற்படுகிற அதிர்ச்சி, கணக்கு உலகிலிருந்து திரும்பும் போது உண்டாகிற அளவுக்கு நிலைகுலையவைப்பதாக இல்லை. அது ஏன்? பலத்த சிந்தனைக்குப் பிறகு அவன் ஒரு முடிவுக்கு வந்தான். கதையின் காட்டுக்குள் எவ்வளவுதான் தெளிவாக விஷயங்கள் தென்பட்டாலும், கணக்கில் கிடைப்பதைப் போல அறுதியான தீர்வு ஒன்று கிடைப்பதில்லை. ஒரு கதையின் பங்கை உத்தேசமாகச் சொல்வதென்றால், பிரச்சனை ஒன்றை அது இருக்கும் வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு இடமாற்றம் செய்வதுதான் எனலாம். பிரச்சனையின் இயல்பு, அது செல்லும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் ஏதாவது ஒரு தீர்வு கதை சொல்லலில் மறைமுகமாகக் குறிப்பிடலாம். அந்த யோசனையைக் கையோடு பற்றிக்கொண்டே டெங்கோ நிஜஉலகிற்குத் திரும்புவான். அது ஒரு மந்திர வசியத்தில் எழுதப்பட்ட பொருள் விளங்காத வாசகங்கள் கொண்ட காகிதத் துண்டைப் போல நடைமுறையில் உடனடி பலன் எதையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒரு சாத்தியக்கூறு மட்டும் அதில் ஒளிந்திருக்கும்.

அவனது வாசிப்புகளிலிருந்து அவனுக்குத் துலக்கமாகியிருந்த ஒரு சாத்தியமான தீர்வு இப்படியாக இருந்தது : என் உண்மையான அப்பா வேறு எங்கோ இருக்கிறார். டிக்கன்ஸ் நாவல் ஒன்றின் துரதிருஷ்டசாலிக் குழந்தையைப் போல டெங்கோவும் ஏதோ சில விநோதமான சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்த வஞ்சக மனிதர் மூலம் வளர்க்கப்பட்டு வந்திருக்கலாம். இத்தகைய ஒரு சாத்தியம் ஒரே சமயத்தில் கதிகலங்க வைப்பதாகவும் ஒரு மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ‘ஆலிவர் ட்விஸ்ட்’ படித்தபிறகு டெங்கோ நூலகத்தில் இருந்த எல்லா டிக்கன்ஸ் புத்தகங்களையும் பேராவலோடு படித்துத்தள்ளத் தொடங்கினான். டிக்கன்ஸ்ஸின் கதைகள் ஊடாகப் பயணிக்கும் போது அவனது சொந்த வாழ்க்கையின் மறு கற்பனை வடிவங்களில் ஆழ்ந்துபோனான். இந்தக் கற்பனைகள் மென்மேலும் சிக்கலாகி பல்கிப் பெருகிக்கொண்டிருந்தன. அவையெல்லாமே ஒரே குறிப்பிட்ட மார்க்கத்தில், ஆனால் கணக்கிலடங்கா பலவித மாற்றங்களோடு வளர்ந்து கொண்டிருந்தன. அவை எல்லாவற்றிலும் அவன் அப்பாவின் வீடு அவனுக்கானது அல்ல என்று தனக்குள் சொல்லிக்கொள்வான். டெங்கோ தவறுதலாக இந்தக் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பவன். ஒருநாள் அவனுடைய உண்மையான பெற்றோர்கள் வந்து அவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்வார்கள். அதன்பின் அவன் மிக அழகான, அமைதியான, சுதந்திரமான ஞாயிற்றுக் கிழமைகளை அனுபவிப்பான்.

டெங்கோவின் அப்பாவுக்கு தன் மகன் அபாரமான மதிப்பெண்கள் வாங்குவதில் ஏக பெருமை. அக்கம் பக்கத்தாரிடம் பையனைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்வார். ஆனால் அதே நேரத்தில் டெங்கோவின் அறிவு, திறமை குறித்து ஒருவித எரிச்சலும் அவருக்கு இருந்தது. டெங்கோ டெஸ்க்கில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அவனை இடைமறிப்பார், ஏதாவது வீட்டுவேலை செய்யச்சொல்வார், அவன் திமிராக நடந்துகொள்வதாக திட்டுவார். அவரது குறைசொல்லல்கள் எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தன. இவர் நாள் முழுக்க ஊரெல்லாம் ஓடிஓடிக் கஷ்டப்பட்டு உழைக்கிறார், கண்டவனும் இவரை வாய்க்கு வந்தபடி திட்டுவதைக் கேட்டுக்கொண்டு வேலைபார்க்கிறார், ஆனால் டெங்கோ எந்த வேலையும் செய்யாமல் சுகமாக உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறான். “உன் வயதில் நான் இருக்கும்போது என்னை சக்கையாகப் பிழிவார்கள். எந்தவொரு விஷயத்திற்காகவும் என் அப்பாவும் அண்ணன்மார்களும் என்னை அடித்துத் துவைப்பார்கள். எனக்கு வயிராற சாப்பாடு போட்டது கிடையாது. ஒரு மிருகத்தைப் போலத்தான் என்னை நடத்தினார்கள். ஏதோ நல்ல மதிப்பெண்கள் எடுப்பதால் மட்டுமே உன்னை ஒரு கொம்பன் என்று நினைத்துக் கொள்ளாதே.”

ஒரு கட்டத்தில் அவர் தன்னைப்பார்த்து பொறாமைப் படுகிறார் என்று டெங்கோ நினைக்கத் தொடங்கினான். நான் இப்படிப்பட்டவனாக இருப்பதைப் பார்த்தோ அல்லது எனக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கையைப் பார்த்தோ அவருக்குப் பொறாமை. ஆனால் ஒரு அப்பாவுக்கு மகன்மீது உண்மையில் பொறாமை வருமா? டெங்கோ அவன் அப்பாவை மதிப்பிட விரும்பவில்லை, ஆனால் அவரது வார்த்தைகளிலும் செய்கைகளிலும் ஒருவித இரங்கத்தக்க அற்பத்தனம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. டெங்கோவை ஒரு மனிதன் என்ற அளவில் அவன் அப்பா வெறுத்ததாகச் சொல்லமுடியாது. அவரது வெறுப்பு டெங்கோவிற்கு உள்ளேயிருக்கும் ஏதோ ஒன்றிற்காக. அவரால் மன்னிக்க முடியாத ஏதோ ஒன்றிற்காக.

டோக்கியோ ரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்பட்டதும் டெங்கோ வழியில் வாங்கிய புத்தகத்தை எடுத்தான். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பயணம் என்ற மையக்கருத்தை உள்ளடக்கிய கதைகள் இருந்தன. அவற்றில் ‘பூனைகள் நகரம்’ என்ற தலைப்பில் டெங்கோ அதுவரை கேள்விப்பட்டிராத ஒரு ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய கற்பனாவாதக் கதை அவன் கவனத்தை ஈர்த்தது. தொகுப்பின் முன்னுரையில் இக்கதை இரண்டு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.கதையில் இளைஞன் ஒருவன் எந்தவொரு இலக்கு மின்றி தனியாகப் பயணம் செய்கிறான். ரயிலில் சென்றுகொண்டிருப்பவன் வழியில் எந்த இடமாவது ஆர்வத்தைத் தூண்டுவது போலிருந்தால், அதே இடத்தில் இறங்கிவிடுவது அவன் வழக்கம். வாடகை அறை எடுத்துக்கொண்டு, சுற்றிப்பார்த்துவிட்டு, விரும்பும்வரை அதே இடத்தில் தங்கிவிட்டு, போதுமென்றானதும் இன்னொரு ரயிலைப் பிடித்துப் பயணத்தைத் தொடர் வான். ஒவ்வொரு விடுமுறை காலத்தையும் அவன் இப்படித்தான் செலவழித்து வருகிறான்.

ஒருநாள் ரயிலின் சன்னலுக்கு வெளியே அழகிய நதி ஒன்றைப் பார்க்கிறான். வளைந்து நெளிந்து ஓடும் நீரொழுக்கிற்கு வரம்பிட்டபடி தொடரும் மென்பச்சைக் குன்றுகள், அவற்றினிடையில் ஒரு பழங்கால கருங்கல் பாலத்தோடு அழகான சிறுநகரம். அந்நகரின் நிலையத்தில் வண்டி நிற்க, இளைஞன் தனது பையோடு இறங்கிவிடுகிறான். வேறுயாரும் ஏறவோ இறங்கவோ இல்லை. அவன் இறங்கியவுடனேயே ரயில் கிளம்பிவிடுகிறது.

நிலையத்தில் ஊழியர்கள் ஒருவரையும் காணவில்லை. நிலைய பராமரிப்பாளர்களெல்லோரும் எங்கே இருக்கிறார்கள்? இளைஞன் பாலத்தைக் கடந்து நகரத்திற்குள் செல்கிறான். எல்லாக் கடைகளும் மூடியிருக்கின்றன. டவுன்ஹால் காலியாக இருக்கிறது. நகரத்தின் ஒரே ஓட்டலில் பரிமாறுபவர் உட்பட யாருமே இல்லை, மனிதர்கள் யாருமே குடியிருப்பதாகத் தெரியாத இது எந்த இடம்? எல்லோரும் வேறு ஏதோ இடத்தில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்(கொண்டிருக்கிறார்களோ)? ஆனால் இப்போது காலை பத்தரை மணி. இன்னுமா தூங்கிக் கொண்டிருப்பார்கள்? எப்படியும் அடுத்த ரயில் மறுநாள் காலைதான். அன்றிரவு அங்கேயே தங்குவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் பொழுதைக் கடத்த நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான்.

உண்மையில் அது ஒரு பூனைகள் நகரம். சூரியன் மறைந்ததும் ஏராளமான பூனைகள் அந்தப் பாலத்தைக் கடந்து வருகின்றன. எல்லாவித ரகங்களிலும் நிறங்களிலும் இருக்கும் பூனைகள். சாதாரணப் பூனைகளைவிட மிகவும் பெரிய அளவில் இருந்தாலும் அவை பூனைகள்தாம். இளைஞன் இந்தக் காட்சியால் அதிர்ந்து போகிறான். நகரின் மையத்திலிருந்த மணிக்கோபுரத்திற்கு ஓடிச்சென்று படிகளில் தாவி ஏறி, உச்சிக்குச் சென்று ஒளிந்து கொள்கிறான். பூனைகள் கடைகளின் கதவுகளைத் திறக்கின்றன, மேசையில் அமர்ந்து அன்றைய வேலையை கவனிக்கின்றன. கொஞ்சநேரத்தில் மேலும் நிறைய பூனைகள் பாலத்தைக் கடந்து மற்ற பூனைகளைப் போலவே நகருக்குள் நுழைகின்றன. கடைகளுக்குச்சென்று பொருட்கள் வாங்குகின்றன, நகரசபை அலுவலகத்தில் நிர்வாகப்பணி மேற்கொள்கின்றன, ஓட்டலில் சாப்பிடுகின்றன, அருந்தகத்தில் பீர் குடிக்கின்றன, இனிமையான பூனைப்பாடல்கள் பாடுகின்றன. பூனைகளால் இருட்டில் பார்க்க முடியுமென்பதால் விளக்குகளே பெரும்பாலும் தேவைப்படாமல் இருக்கிறது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட இரவில் பௌர்ணமி என்பதால் முழுநிலவு நகரை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்து, மணிக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு நகரத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. விடியல் நெருங்கும்போது பூனைகள் வேலையை முடித்து கடைகளை மூடிவிட்டு கூட்டமாகப் பாலத்தைக் கடந்து திரும்பிச் செல்கின்றன.

சூரியன் மேலேறி வந்தபிறகு ஒரேயொரு பூனைகூட இல்லாமல், நகரம் மீண்டும் வெறிச்சோடியிருக்கிறது. இளைஞன் இறங்கி வந்து, ஓட்டல் படுக்கை ஒன்றை எடுத்துப்போட்டுத் தூங்கிப்போகிறான். பசியெடுத்ததும் எழுந்து ஓட்டல் சமையலறையில் மிச்சமிருந்த ரொட்டி, மீன்கறியை எடுத்துச் சாப்பிடுகிறான். இருட்டத் தொடங்கியதும் மணிக்கோபுரத்தில் ஒளிந்துகொண்டு விடியும் வரை பூனைகளின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். ரயில்கள் முற்பகலிலும் பிற் பகலிலும் நிலையத்தில் நிற்கின்றன. பயணிகள் யாரும் இறங்குவதுமில்லை, ஏறுவதுமில்லை. இருந்தும் ரயில்கள் நிலையத்தில் சரியாக ஒரு நிமிடநேரம் நின்றுவிட்டு கிளம்புகின்றன. இந்த ரயில்களில் ஒன்றில் அவன் ஏறி இப்பயங்கரப் பூனைகள் நகரத்தை விட்டுப் போய்விடலாம். ஆனால் அவன் செல்வதில்லை. இளம்

வயதினன் என்பதால் ஆர்வமும், சாகசங்களை எதிர்நோக்கியிருந்த எதிர்பார்ப்பும் அவனை ஆட்கொண் டிருக்கின்றன. இந்த விநோதக் காட்சிகளை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இங்கே தங்கியிருந்து பார்க்க விரும்புகிறான். இயலுமானால் இந்த இடம் எப்போது, எப்படி பூனைகள் நகரமாக மாறியது என்பதையும் கண்டறிந்துகொள்ள விரும்புகிறான்.

மூன்றாம் நாள் இரவில் மணிக்கோபுரத்தினடியிலிருந்து சதுக்கத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டிருப்பதை இளைஞன் கேட்கிறான். “ஏய், ஏதோ மனிதவாடை அடிக்கிறதே, நீ உணர்கிறாயா?” பூனைகளில் ஒன்று கேட்கிறது. “நீ இப்போதுதான் சொல்கிறாய். கடந்த சில நாட்களாக ஒரு விநோதமான வாடை அடித்துக் கொண்டிருக்கிறதே என்று நினைத்தேன்.” இன்னொரு பூனை மூக்கை நீவி விட்டபடி, “எனக்கும் அந்த வாசனை வந்தது,” என்கிறது. “இது விசித்திரமாக இருக்கிறது. இங்கே எந்த மனிதனும் இருக்கக்கூடாதே!” மேலும் சில பூனைக்குரல்கள், “இல்லை, அதற்கு வாய்ப்பே இல்லை. இந்தப் பூனைகள் நகரத்துக்குள் எந்தவொரு மானிடனும் நுழைய முடியாது.”

பூனைகள் குழுக்களாகப் பிரிந்து அந்நகரை ஊர்க்காப்பு வீரர்களைப் போல சல்லடையிட்டுத் தேடத் தொடங்குகின்றன. மனிதவாடை அந்த மணிக்கோபுரத்திலிருந்துதான் வருகிறது என்பதைக் கண்டறிய அவற்றிற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. உச்சியில் ஒளிந்திருந்த இளைஞனுக்குப் படிகளில் அவற்றின் பாதங்கள் மெத்தென்று பதிந்து மேலேறி வருவது கேட்கிறது. அவ்வளவுதான், நான் மாட்டிக் கொண்டேன், என்று நினைக்கிறான். அவன் வாசனை அப்பூனைகளின் கோபத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது போல. மனிதர்கள் இந்நகரத்தில் காலெடுத்து வைக்கக் கூடாது. பூனைகளுக்குப் பெரிய, கூரான நகங்கள், வெள்ளை வெளேரென்ற கோரைப்பற்கள். கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கு என்ன பயங்கரம் நடக்கக் கூடுமென்று அவனால் ஊகிக்க முடியாவிட்டாலும் அந்தப் பூனைகள் அவனை அந்த ஊரைவிட்டு உயிரோடு செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

அவன் ஒளிந்திருந்த உச்சாணி மண்டபத்திற்குள் மூன்று பூனைகள் மெதுவாக நுழைகின்றன. மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடிக்கின்றன. “விநோதம்” என்கிறது ஒரு பூனை தனது மீசையை நீவிக் கொண்டு. “மனித வாடை நன்றாக வீசுகிறது, ஆனால் ஒருவரையும் இங்கே காணோமே?”

“விநோதம்தான்,” என்கிறது இரண்டாவது பூனை. “இங்கே யாருமே இல்லை. வா, கீழே சென்று மற்ற இடங்களில் தேடுவோம்.”

பூனைகள் தலையைக் குலுக்கியபடி ஒன்றும்புரியாமல் படியிறங்கிச் செல்கின்றன. அவற்றின் காலடியோசைகள் இரவின் இருட்டில் தேய்ந்து மறைவதைக் கேட்டபடி அவன் உட்கார்ந்திருந்தான். நிம்மதியோடு பெருமூச்செறிகிறான். ஆனால் அவனுக்கு நடந்தவை எதுவும் விளங்கவில்லை. அவற்றின் கண்களுக்கு அவன் தட்டுப்படாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. எந்தக் காரணத்தாலோ அவன் உருவம் அவற்றிற்குப் புலப்படாமல் போயிருக்கிறது. எப்படியிருந்தாலும் காலை விடிந்ததும் ரயில்நிலையம் சென்று வண்டியைப் பிடித்து இந்த ஊரைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறான். அதிர்ஷ்டம் எப்போதுமே தனக்குத் துணைநிற்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் அடுத்தநாள் அந்தக் காலைரயில் ஸ்டேஷனில் நிற்காமல் செல்கிறது. வேகத்தைக்கூட குறைக்காமல் அது தடதடத்துக் கடப்பதைப் பீதியோடு பார்த்துக்கொண்டிருக்கிறான். பிற்பகல் ரயிலும் நிற்பதில்லை. வண்டியோட்டி தலையைத் திருப்பாமல் நேராகப் பார்த்தபடி ரயிலை ஓட்டிச் செல்வதை அவனால் பார்க்க முடிகிறது. அந்த இளைஞன் அங்கே நின்றிருப்பதை மட்டுமல்ல, அங்கே ஒரு ரயில்நிலையம் இருப்பதையே ஒருவரும் கவனிக்காதது போலிருக்கிறது. பிற்பகல் ரயில் தடத்திலிருந்து மறைந்ததும் அந்த இடம் எப்போதையும்விட அதிக நிசப்தத்தில் ஆழ்கிறது. சூரியன் அஸ்தமிக்கத் தொடங்குகிறது. பூனைகள் வரும் நேரம் : இளைஞன் இனி திரும்பமுடியாதபடிக்கு தொலைந்து போய்விட்டிருப்பதை உணர்கிறான். இது ஒன்றும் பூனை களின் நகரம் அல்லவென்பதை இறுதியில் உணர்கிறான். இது அவன் காணாமற்போக வேண்டுமென்று விதிக்கப் பட்டிருக்கும் இடம். இது அவனுக்காக மட்டுமே விசேஷமாக தயாரிக்கப்பட்டிருக்கும் வேறோர் உலகம். இனி எப்போதும் ரயில் இந்த நிலையத்தில் நிற்கப்போவதில்லை. அவனை ஏற்றிக்கொண்டு, அவன் எங்கிருந்து வந்தானோ அந்த உலகத்திற்குத் திரும்ப அழைத்துச் செல்லப் போவதில்லை.

டெங்கோ அந்தக் கதையை இரண்டுமுறை வாசித்தான். “அவன் காணாமற் போக வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கும் இடம்” என்ற சொற்றொடர் அவன் கவனத்தை ஈர்த்தது. புத்தகத்தை மூடிவிட்டு ரயில் சன்னலுக்கு வெளியே தெரியும் சுவாரஸ்யமற்ற தொழிற்சாலை காட்சிகளை வெறித்துக்கொண்டு வந்தான். தூக்கம் அவனை ஆட்கொண்டது. நீண்ட உறக்கமல்ல, ஆனால் ஆழ்ந்த உறக்கம். அவன் எழுந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தான். ரயில் போஸோ தீபகற்பத்தின் தெற்குக் கடற்கரையோரம் நடுவேனில் உஷ்ணத்தில் சென்று கொண்டிருந்தது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு ஒருநாள் காலை டெங்கோ அவன் அப்பாவிடம் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் வரிவசூல் செய்ய அவருடன் வரப்போவதில்லையென்று தெரிவித்தான். அந்த நேரத்தில் பாடங்கள் படிக்கவோ, அல்லது மற்றப் பையன்களுடன் விளையாடவோ விரும்புவதாகச் சொன்னான். மற்றவர்களைப் போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழவேண்டுமென்பது தன் விருப்பம் என்றான்.

டெங்கோ தான் சொல்லவிரும்பியதைச் சுருக்கமாக கோர்வையாகச் சொல்லிமுடித்தபிறகு, எதிர்பார்த்தபடியே அவன் அப்பா வெடித்தார். மற்ற குடும்பங்களில் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி அவருக்கு அக்கறை இல்லை என்றார். “நமக்கென்று ஒரு வழி இருக்கிறது. இன்னொருமுறை ‘சாதாரண வாழ்க்கை’யைப் பற்றி பேசாதே. எல்லாம் தெரிந்த மேதாவியா நீ? ‘சாதாரண வாழ்க்கை’யைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” டெங்கோ அவரோடு விவாதிக்க முயலவில்லை. வெறுமனே மௌனமாக அவரை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். தான் சொன்ன எதுவும் அவர் மண்டைக்குள் ஏறியிருக்காது என்று அவனுக்குத் தெரியும். கடைசியில், அவன் அவர் சொல்படி கேட்காவிட்டால் அவனுக்கு அவர் சாப்பாடு போடமுடியாது, எங்காவது அவன் போய்த்தொலையலாம் என்றார்.

டெங்கோ அதற்கு உடன்பட்டான். அவன் தீர்மானித்துவிட்டான். அவன் பயப்படப்போவதில்லை. இப்போது கூண்டைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. இது அவனுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது. ஆனால் ஒரு பத்துவயதுப் பையன் எப்படி தனியாக வாழமுடியும்? அன்று வகுப்பு முடிந்ததும் அவனது பிரச்சனையை வகுப்பு ஆசிரியையிடம் சொன்னான். அவள் முப்பதுகளின் மத்தியில் இருந்த மணமாகாத பெண். மிகவும் அன்பானவள். டெங்கோ சொல்வதைக் கனிவுடன் கேட்டுவிட்டு, அன்று மாலையே டெங்கோவை அழைத்துக்கொண்டு அவன் அப்பாவிடம் சென்று வெகுநேரம் பேசினாள்.

அவர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கோவை அந்த அறையை விட்டு வெளியே போகச்சொல்லிவிட்டதால் அவர்கள் என்ன பேசினார்க ளென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அப்பா தனது கத்தியை உறையிலிட்டுக்கொள்ள வேண்டியிருந்தது என்றுமட்டும் தெரிந்தது. அவருக்கு எவ்வளவுதான் கோபமிருந்தாலும் ஒரு பத்துவயதுப் பையனை தனியாகத் தெருவில் அலைய விட்டுவிட முடியாது. மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை என்று சட்டமே இருக்கிறது.

அவன் அப்பாவோடு ஆசிரியை பேசியதன் பலனாக டெங்கோ அவன் விருப்பப்படியே ஞாயிற்றுக்கிழமை சுதந்திரமாகச் செலவழிக்க முடிந்தது. அவன் அப்பாவிட மிருந்து வென்றெடுத்த ஒரே உருப்படியான உரிமை. சுதந்திரத்தை நோக்கி அவன் வைக்கும் முதல் அடி.

சானடோரியத்தின் வரவேற்பு மேசையில் இருந்தவளிடம் டெங்கோ அவனது பெயரையும் அவன் அப்பா பெயரையும் தெரிவித்தான். “இன்று நீங்கள் பார்க்க வருவதைப் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்திருக்கிறீர்களா?” அந்த நர்ஸின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது. குள்ளமானப் பெண். உலோக ஃபிரேமிட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். குட்டையான கேசம் திட்டுதிட்டாக நரைத்திருந்தது.

“இல்லை, இன்று காலை திடீரென்று தோன்றியது. ரயிலேறி வந்துவிட்டேன்,” டெங்கோ நேர்மையாகப் பதிலளித்தான்.

அந்த நர்ஸ் அவனைச் சற்று வெறுப்போடு ஏறிட்டாள். “பார்வையாளர்கள் நோயாளிகளைப் பார்க்க வருவதென்றால் ஒரு நாளைக்கு முன்பே எங்களிடம் தெரியப்படுத்தவேண்டும். எங்களுக்கு அட்டவணைப்படி செய்ய வேண்டிய பணிகள் சில இருக்கின்றன. நோயாளிகளின் விருப்பத்தையும் கேட்க வேண்டும்.”

“மன்னிக்கவும், எனக்குத் தெரியாது.”

“கடைசியாக நீங்கள் எப்போது வந்தீர்கள்?”

“இரண்டு வருடங்களுக்கு முன்,” விருந்தினர் வருகைப்பதிவேட்டைப் பால்பாயின்ட் பேனாவால் சரிபார்த்துக்கொண்டே பேசினாள். “அதாவது கடந்த இரண்டு வருடங்களில் ஒருமுறைகூட நீங்கள் வந்து பார்க்கவில்லை என்கிறீர்களா?”

“ஆம்,” என்றான் டெங்கோ.

“எங்கள் பதிவேடுகளின்படி திரு. கவானா அவர்களுக்கு இருக்கும் ஒரே உறவினர் நீங்கள் மட்டும்தான்.”

“உண்மைதான்.”

அவள் டெங்கோவை ஒருமுறை பார்த்துவிட்டு தழைத்துக்கொண்டாள். எதுவும் பேசவில்லை. அவள் கண்கள் அவனைக் குற்றம் சொல்லவில்லை. வெறும் தகவல் சரிபார்த்தல் மட்டும்தான். இந்த விஷயத்தில் டெங்கோவின் நிலை விதிவிலக்காக இருக்கமுடியாது.

“தற்போது உங்கள் அப்பா கூட்டுப் புனரமைப்பு சிகிச்சையில் இருக்கிறார். அது இன்னும் அரை மணிநேரத்தில் முடிந்துவிடும். அப்புறம் அவரை நீங்கள் பார்க்கலாம்.”

“அவர் எப்படி இருக்கிறார்?”

“உடல்ரீதியாக ஆரோக்கியமாகவே இருக்கிறார். மற்ற விஷயத்தில்தான் . . .” – அவள் நெற்றிப்பொட்டை விரலால் தட்டிக்காட்டினாள் – “மேலும் கீழுமாக அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்.”

டெங்கோ அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு முகப்பறையில் காத்திருக்கச் சென்றான். கையிலிருந்தப் புத்தகத்தைப் புரட்டினான். அவ்வப்போது காற்று, கடலின் வாசத்தையும் பைன் மர அசைவொலிகளையும் சுமந்தபடி கடந்து சென்றது. மரக்கிளைகளிலிருக்கும் சுவர்க்கோழிகள் முழுத்தொண்டையில் கமறிக்கொண்டிருந்தன. கோடை உச்சத்தில் இருந்தபோதும் இந்தப் பருவநிலை வெகுநாட்களுக்கு நீடித்திருக்கப் போவதில்லையென்று சுவர்க்கோழிகளுக்குத் தெரிந்திருக்கிறது போல.

சற்று நேரம் கழித்து அந்தக் கண்ணாடி அணிந்த நர்ஸ் வந்து டெங்கோவிடம் இப்போது அவன் அப்பாவைப் பார்க்கலாம் என்றாள். “அவர் அறையை உங்களுக்குக் காட்டுகிறேன்.” டெங்கோ சோபாவிலிருந்து எழுந்து நடந்தான். சுவரில் பதிக்கப்பட்டிருந்த பெரிய நிலைக்கண்ணாடியைக் கடக்கும்போது எவ்வளவு அசிங்கமாக உடையணிந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான். ஒரு ஜெஃப்பெக் ஜப்பான் டூர் டி – ஷர்ட். அதற்கு மேலே சாயம்போன ஒரு முரட்டு டங்கெரி சட்டை. பொருத்தமில்லாத பொத்தான்கள், முட்டிப்பகுதியில் பீட்ஸா கறைபடிந்த சினோஸ் காற்சட்டை, ஒரு பேஸ்பால் தொப்பி – இரண்டு வருடங்கள் கழித்து மருத்துவமனையில் அப்பாவைப் பார்க்கப்போகும் முப்பது வயது மகன் அணிந்திருக்கவேண்டிய உடை என்று சொல்லமுடியாது. பரிசாகக் கொடுப்பதற்கும் கையில் எதுவுமில்லை. அந்த நர்ஸ் அவனை அப்படி வெறுப்போடு பார்த்ததில் ஆச்சரியமில்லை.

டெங்கோவின் அப்பா அவரது அறையில் திறந்திருந்த சன்னலையொட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் கைகளை கால் முட்டிகள் மேல் வைத்தபடி அசையாமல் அமர்ந்திருந்தார். அருகிலிருந்த மேசையில் வைத்திருந்த தொட்டிச்செடியில் அன்றலர்ந்த மஞ்சள் மலர்கள், கீழே விழுந்தால் பலமாக அடிபட்டுவிடக்கூடாதென்பதற்காக மெத்தென்று அமைக்கப்பட்ட தரை, முதலில் பார்க்கும்போது சன்னலுக்கருகில் உட்கார்ந்திருந்த கிழவர் அவன் அப்பாதானென்று டெங்கோவுக்குத் தெரியவில்லை. அவர் சுருங்கிப் போயிருந்தார் – ‘வாடி வதங்கி’ப்போயிருந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டு, பனிமூடிய புல்தரை போலிருந்தது. கன்னங்கள் உட்குழிந்திருந்ததாலோ என்னவோ முன்பைவிட கண்கள் பெரிதாகத் தெரிந்தன. நெற்றியை மூன்று ஆழமான சுருக்கங்கள் உழுதிருந்தன. அவருடைய புருவங்கள் மிகவும் நீளமாக அடர்ந்திருந்தன. கூரான செவிகள் வழக்கத்தைவிடப் பெரிதாக, வௌவாலின் இறக்கைகள் போலிருந்தன. தூரத்திலிருந்துப் பார்க்க ஒரு மனிதப்பிறவியைப் போலவே தெரியாமல் ஏதோ ஒருவித மாபெரும் எலி அல்லது அணிலைப் போன்ற ஒரு ஜந்துவைப் பார்ப்பது போலத்தான் இருந்தது – அதுவும் வஞ்சகம் மிக்கதொரு ஜந்து. ஆனால் அவர் டெங்கோவின் அப்பாதான். அல்லது டெங்கோவின் சிதைந்து போன அப்பா. டெங்கோவின் ஞாபகத்தில் இருந்த அப்பா ஓர் உறுதியான கடும் உழைப்பாளி. ஆத்மசோதனையும் கற்பனா வளமும் அவருக்கு அந்நியமாக இருக்கலாம்; ஆனால் அவருக்கென்று தனிப்பட்ட அறக்கோட்பாடுகளும் பலமான குறிக்கோளுணர்வும் இருந்தன. டெங்கோவுக்கு முன் இப்போது இருப்பவர் வெறும் காலியான ஓடாகத்தான் இருந்தார்.

நோயாளிகளிடம் பேசுவதற்கெனக் கற்பிக்கப்பட்ட நட்பிணக்கமற்ற தெளிவான குரலில் அந்த நர்ஸ், “திரு. கவானா!” என்று கூப்பிட்டாள். “திரு. கவானா! இங்கே யார் வந்திருப்பது என்று பாருங்கள்! உங்கள் மகன். டோக்கியோவிலிருந்து வந்திருக்கிறார்!”

டெங்கோவின் அப்பா அவனது திசையில் திரும்பினார். உணர்ச்சிபாவமற்ற அவரது கண்கள் டெங்கோவுக்கு இறவாரத்திலிருந்து தொங்கும் வெற்றான தூக்கணாங்குருவிக் கூடுகளை நினைவூட்டின.

டெங்கோ, “ஹலோ”, என்றான்.

அவன் அப்பா எதுவும் பேசவில்லை. பதிலாக, அந்நிய மொழியில் எழுதப்பட்ட அறிக்கையைப் படிப்பதைப் போல டெங்கோவை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நர்ஸ் டெங்கோவிடம், “இரவு உணவு 6.30க்கு ஆரம்பிக்கிறது. அதுவரை நீங்கள் இவருடன் இருக்கலாம்,” என்றாள்.

நர்ஸ் வெளியேறியதும் டெங்கோ ஒருகணம் தயங்கினான். எதிரே அமர்ந்திருந்தவரை மெதுவாக அணுகினான். அவரது நாற்காலியின் மெத்தை உறை சாயமிழந்திருக்க, நெடுநாளையப் பயன்பாட்டில் நாற்காலியின் பாகங்கள் மழமழவென்று தேய்ந்திருந்தன. அவன் அப்பாவின் கண்கள் அவனைத் தொடர்ந்தன.

“எப்படி இருக்கிறீர்கள்?” என்றான்.

“நன்றாக இருக்கிறேன், நன்றி.” அவன் அப்பா சம்பிரதாயமாகப் பதிலளித்தார்.

டெங்கோவுக்கு அதற்குப்பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் டங்கெரி சட்டை பட்டன்களைத் திருகிக்கொண்டே பார்வையைச் சன்னலுக்கு வெளியே பைன் மரங்களுக்குத் திருப்பிக் கொண்டான். சில நொடிகள் கழித்து அவரைத் திரும்பிப்பார்த்தான்.

“டோக்கியோவிலிருந்து வந்திருக்கிறாயா?” அவன் அப்பா கேட்டார்.

“ஆம், டோக்கியோவிலிருந்துதான்.”

“எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திருக்கிறாய் போலிருக்கிறது.”

“ஆம், டாயாமாவிலிருந்து வருகிறேன். பின் அங்கிருந்து சிகூராவுக்குப் புறநகர் வண்டி மாறினேன்.”

“இங்கே கடலில் நீந்துவதற்காக வந்திருக்கிறாயா?” என்றார்.

“நான் டெங்கோ. டெங்கோ கவானா. உங்கள் மகன்.”

அவன் அப்பாவின் நெற்றிச்சுருக்கங்கள் ஆழமாகின. “NHK சந்தா கட்டுவதிலிருந்து தப்பிப்பதற்காக நிறைய பேர் பொய் சொல்கிறார்கள்.”

“அப்பா!” அவன் குரல் உயர்ந்தது. அந்த வார்த்தையை அவன் பல வருடங்களாக உச்சரித்திருக்கவில்லை. “நான் டெங்கோ உங்கள் மகன்.”

அவர் அமைதியான குரலில், “எனக்கு மகன் கிடையாது,” என்றார்.

“உங்களுக்கு மகன் கிடையாது” டெங்கோ இயந்திரத்தனமாக அவர் சொன்னதைத் திருப்பிச் சொன்னான்.

அவர் தலையசைத்து ஒப்புக்கொண்டார்.

“அப்படியானால் நான் யார்?”

“நீ எதுவுமில்லை,” தலையை இரண்டுமுறை உலுக்கிக் கொண்டே சொன்னார்.

டெங்கோ மூச்சிழந்தான். வார்த்தைகள் வரவில்லை. அவன் அப்பாவும் வேறெதுவும் பேசவில்லை. இருவரும் சிந்தனையின் சிக்கல்களில் சிக்கிக் கொண்டு, வார்த்தைகளைத் தேடியபடி அமைதியாக அமர்ந்திருந்தனர். சுவர்க்கோழிகள் மட்டும் எந்தவிதமான மனக்குழப்பங்களும் இல்லாமல் உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தன.

அவர் உண்மையைத்தான் பேசுவதாக நினைத்தான். அவரது ஞாபகங்கள் வேண்டுமானால் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் வார்த்தைகள் உண்மையாகவே இருக்கக்கூடும்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“நீ எதுவும் இல்லை, அவ்வளவுதான்,” உணர்ச்சியற்ற குரலில் அதையே திரும்பவும் சொன்னார். “நீ எதுவுமாக இருந்ததில்லை, நீ எதுவுமாக இருக்கவில்லை, நீ எதுவுமாகவும் இருக்கப்போவதில்லை.”

டெங்கோவிற்கு சட்டென்று எழுந்து ஸ்டேஷனுக்கு ஓடி டோக்கியோ வண்டி பிடித்து இங்கிருந்து போய்த்தொலைய வேண்டுமென்றிருந்தது. ஆனால் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. பூனைகள் நகரத்திற்குச் சென்ற இளைஞனைப் போலிருந்தான் அவன். அவனுக்கு தன்னைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற தவிப்பு இருந்தது. அவன் ஒரு தெளிவான பதிலை எதிர்பார்த்து வந்திருக்கிறான். அதில் அபாயம் பொதிந்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை

நழுவவிட்டால், தன்னைப் பற்றிய ரகசியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்காமலே போகலாம். டெங்கோ அவன் தலைக்குள் வார்த்தைகளை மாற்றி மாற்றியமைத்து, கடைசியில் அவற்றைச் சொல்லிவிடத் தயாரானான். சிறுவயதிலிருந்து அவன் கேட்க நினைத்த, ஆனால் எப்போதுமே கேட்டிருக்க முடியாத கேள்வியைக் கேட்டுவிட்டான்: “நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், நீங்கள் என்னுடைய உண்மை யான தகப்பன் அல்ல, அப்படித்தானே? அதாவது எனக்கும் உங்களுக்கும் எந்த ரத்த சம்மந்தமும் இல்லை, சரிதானே?”

“வானொலி அலைகளைத் திருடுவது சட்ட விரோதமானது,” என்றார் டெங்கோவின் கண்களுக்குள் பார்த்தபடி. “பணத்தை, மதிப்புமிக்க பொருட்களைத் திருடுவதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை, நீ என்ன நினைக்கிறாய்?”

“நீங்கள் சொல்வது சரிதான்.” தற்போதைக்கு அவர் சொல்வதை ஒப்புக்கொள்வதென்று டெங்கோ முடிவெடுத்தான்.

“வானொலி அலைகள் மழையைப் போலவோ, பனியைப் போலவோ இலவசமாக வானத்திலிருந்து விழுபவையல்ல,” என்றார்.

கால் முட்டிகளின் மேல் அமைப்பாக வைத்துக் கொண்டிருந்த அவர் கைகளை டெங்கோ கவனித்தான். சிறிய, கரிய கைகள். பற்பல வருட கடும் உழைப்பில் காய்ப்பேறிய கரங்கள்.

“நான் குழந்தையாக இருக்கும்போதே என் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்கள் என்பது உண்மை யல்ல, அப்படித்தானே?” டெங்கோ மெதுவாகக் கேட்டான்.

“அவர் பதிலளிக்கவில்லை. முகபாவம் மாறாமல், கைகளை அசைக்காமல், டெங்கோவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார், பழக்கமில்லாத எதையோ பார்ப்பதைப் போல.”

“என் அம்மா உங்களை விட்டுச் சென்றுவிட்டாள். உங்களையும் என்னையும் விட்டுப் போய்விட்டாள். இன்னொருவனோடு ஓடிப்போய்விட்டாள். நான் சொல்வது தவறில்லையே?”

அவர் தலையாட்டினார். “வானொலி அலைகளைத் திருடுவது நல்லதல்ல. உங்கள் விருப்பப்படி எதையாவது செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது.”

இந்த மனிதருக்கு நான் கேட்கும் கேள்விகள் நன்றாகவே புரிகின்றன. ஆனால் நேரடியாகப் பதில் சொல்வதில் இவருக்கு விருப்பமில்லை என்று டெங்கோ நினைத்தான்.

“அப்பா, நீங்கள் என் உண்மையான அப்பாவாக இல்லாமலிருக்கலாம். ஆனால் வேறு எப்படி உங்களைக் கூப்பிடுவது என்று தெரியாததால் இப்போதைக்கு அப்படியே கூப்பிடுகிறேன். உண்மையைச் சொல்வ தென்றால் நான் உங்களை எப்போதுமே நேசித்ததில்லை. பெரும்பாலான நேரங்களில் உங்களை மனதார வெறுத்து வந்தேன் என்றே சொல்ல வேண்டும். அது உங்களுக்கும் தெரியும், அப்படித்தானே? ஆனால் நமக்கிடையே ரத்த உறவு இல்லாவிட்டால்கூட இப்போது உங்களை வெறுப்பதற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. உங்கள்மேல் எனக்குப் பாசம் ஏற்படுமா, உங்கள் மேல் பிரியமும் அன்பும் ஏற்படுமாவென்று என்னால் சொல்லமுடியவில்லை; ஆனால் இப்போது உங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமென்று நினைக்கிறேன். நான் யார், எங்கிருந்து வந்தேன் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான். இதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நெடுநாட்களாக முயன்று கொண்டிருக்கிறேன். இந்த உண்மையை இப்போது நீங்கள் சொல்லிவிட்டால் உங்கள் மீதிருக்கும் வெறுப்பு எனக்கு மறைந்துவிடும். உண்மையில் உங்கள் மீதான வெறுப்பைக் களைவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதாவென்றுதான் நான் காத்திருக்கிறேன்.”

டெங்கோவின் அப்பா உணர்ச்சியற்ற கண்களால் தொடர்ந்து அவனை வெறித்துக்கொண்டிருக்க, டெங்கோவிற்கு காலியான தூக்கணாங்குருவி கூடுகளுக்குள் எங்கோ ஆழத்தில் ஒரு குட்டி ஜ்வலிப்பு தெரிவதாக உணர்ந்தான்.

“நான் எதுவும் இல்லை” என்றான் டெங்கோ. “நீங்கள் சொல்வது சரிதான், கடலுக்குள் தூக்கியெறியப்பட்டுத் தனியாக மிதந்து கொண்டிருப்பவன் போலத்தான் இருக்கிறேன். கை நீட்டிப் பார்க்கிறேன், கரைசேர்க்க யாருமில்லை. எதனோடும் எனக்குத் தொடர்பில்லை. குடும்பம் என்று நெருக்கமாகச் சொல்வதற்கு நீங்கள்தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த ரகசியத்தை உங்களுக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஞாபகங்களும் நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டே வருகிறது. உங்கள் ஞாபகங்களோடு என்னைப் பற்றிய உண்மையும் தொலைந்து போய்விடும். அந்த உண்மை இல்லாமல் நான் எதுவும் இல்லை. எதுவாகவும் என்னால் இருக்கவும் முடியாது. அதையும் நீங்கள் சரியாகவே சொல்லிவிட்டீர்கள்.”

“அறிவு என்பது ஒரு விலைமதிப்பற்ற சமூகச் சொத்து,” அவர் ஏற்றத்தாழ்வற்ற குரலில் பேசினார். முன்பைவிட அவர் குரல் இப்போது தழைந்திருந்தது, யாரோ வால்யூம் குமிழைத் திருகி குறைத்துவிட்டதைப்போல. “இந்த சொத்து அபரிமிதமாகச் சேமித்து குவிக்கப்பட்டு, மிகவும் கவனமாகப் பயன்படுத்தப்படவேண்டும். அடுத்த தலைமுறைக்குப் பலனுள்ள வகையில் வழங்கப்படவேண்டும். இந்தக் காரணத்திற்காகவும் NHKவிற்கு உங்கள் சந்தாத்தொகை தேவைப்படுகிறது; மேலும் -”

அவன் இடைமறித்து, “என் அம்மா எப்படிப்பட்டவள்? அவள் எங்கே சென்றாள்? அவளுக்கு என்ன ஆயிற்று?”

அவன் அப்பா தனது மந்திர உச்சாடனத்தை நிறுத்தினார். அவர் உதடுகள் இறுக்கமாகப் பூட்டிக்கொண்டன.

டெங்கோவின் குரல் இப்போது மிருதுவாகியது. “எனக்கு ஒரு காட்சி தோன்றிக்கொண்டேயிருக்கிறது. ஒரே காட்சி. திரும்பத்திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது, அது உண்மையில் நடந்த ஏதோவொன்றின் ஞாபகமா என்று தெரியவில்லை. நான் ஒன்றரை வயது குழந்தையாக இருக்கிறேன். என் பக்கத்தில் அம்மா இருக்கிறாள். அவளும் ஓர் இளைஞனும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆள் நீங்கள் அல்ல. அது யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நிச்சயமாக நீங்கள் அல்ல.”

அவர் எதுவும் பேசவில்லை, ஆனால் அவர் கண்கள் வேறு எதையோ, அங்கே இல்லாத எதையோ, தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு டெங்கோவின் அப்பா சம்பிரதாயமான தொனியில், “எனக்கு ஏதாவது வாசித்துக்காட்ட முடியுமா?” என்றார். “எனக்கு கண்பார்வை மிகவும் மோசமாகிவிட்டதால் புத்தகங்களை இப்போதெல்லாம் படிக்கவே முடியவில்லை. அந்த அலமாரியில் சில புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் எதையாவது எடுத்து படித்துக்காட்டேன்.”

டெங்கோ எழுந்துசென்று அந்தப் புத்தகங்களின் முதுகுகளை ஆராய்ந்தான். பெரும்பாலும் ஆதிகாலத்துச் சாமுராய்கள் உலவிக்கொண்டிருக்கும் சரித்திர நாவல்கள். புராதன மொழிநடையில் எழுதப்பட்ட, பூஞ்சைக்காளான் பீடித்த பழம்புத்தகங்களை எடுத்துப் படித்துக்காட்ட அவனுக்கு விருப்பமில்லை.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் ‘பூனைகள் நகரம்’ என்றொரு கதையை வாசித்துக்காட்டுகிறேன்,” என்றான். “அது நான் படிப்பதற்கென்று இப்போது வாங்கிய ஒரு புத்தகத்தில் உள்ள கதை.”

“பூனைகள் நகரம் பற்றிய கதை,” அந்த வார்த்தைகளை தனக்குள்ளே மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டார். “உனக்கு சிரமம் இல்லையென்றால் அந்தக் கதையையே படித்துக்காட்டு.”

டெங்கோ அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். “ஒரு சிரமமும் இல்லை. ரயிலுக்கு நிறைய நேரமிருக்கிறது. இது ஒரு விசித்திரமான கதை. உங்களுக்குப் பிடிக்குமாவென்று தெரியவில்லை.”

டெங்கோ அந்தப் புத்தகத்தை வெளியே எடுத்து, தெளிவாகக் கேட்கும்படியான குரலில் நிதானமாக வாசிக்கத் தொடங்கினான். அவ்வப்போது மூச்சு வாங்கிக்கொள்ள இடைநிறுத்தினான். அப்போதெல்லாம் அவன் அப்பாவின் முகத்தைப் பார்க்கும்போது அதில் எந்தவொரு மாற்றமும் இல்லாதிருந்தது. அவர் கதையை ரசிக்கிறாரா? அவனால் சொல்லமுடியவில்லை.

“அந்த பூனைகள் நகரத்தில் தொலைக்காட்சி இருக்கிறதா?” டெங்கோ வாசித்து முடித்ததும் அவர் கேட்டார்.

“இந்தக் கதை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜெர்மனியில் எழுதப் பட்ட கதை. அந்தக் காலத்தில் தொலைக்காட்சி இல்லை. ஆனால் வானொலி இருந்திருக்கிறது.”

“அந்த நகரத்தைப் பூனைகளா நிர்மாணித்திருக்கின்றன? அல்லது மனிதர்கள் நிர்மாணித்த நகரத்தில் பூனைகள் குடியேறிவிட்டனவா?” அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வதைப் போல கேட்டார்.

“எனக்குத் தெரியவில்லை,” என்றான் டெங்கோ. “அது மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகத்தான் தோன்றியது. ஒரு வேளை மனிதர்கள் அந்நகரை விட்டு ஏதோ காரணத்திற்காக வெளியேறிவிட்டிருக்கலாம் – அல்லது ஏதாவது தொற்றுநோயால் எல்லோரும் இறந்து விட்டிருக்கலாம் – அதன்பின் பூனைகள் அங்கு குடியேறியிருக்கக்கூடும்.”

அவர் தலையசைத்துக் கொண்டார். “வெற்றிடம் ஒன்று உருவாகும்போது வேறு ஏதோ ஒன்று அங்கு வந்து நிரம்பியாக வேண்டும். எல்லோரும் செய்வது அதைத்தான்.”

“அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்?”

“ஆம், அப்படித்தான்.”

“நீங்கள் எந்தவிதமான வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?”

அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டார். பின், “உனக்குத் தெரியவில்லையா?” என்றார் கேலியாக.

“எனக்குத் தெரியவில்லை.”

அவர் நாசித்துவாரங்கள் விடைத்தன. ஒரு புருவம் மட்டும் சற்று மேலேறியது. “விளக்கம் அளிக்காமல் அதை உன்னால் புரிந்துகொள்ள முடியாதென்றால், விளக்கம் அளித்தாலும் அதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது.”

அம்மனிதரின் முகபாவத்தைப் புரிந்துகொள்வதற்காக டெங்கோ கண்களைச் சுருக்கி உற்றுப்பார்த்தான். இதற்குமுன் அவன் அப்பா ஒருபோதும் இத்தகைய விநோதமான, பூடகமான மொழியில் பேசியதில்லை. நடைமுறைக்கு ஏற்ற வகையில், உறுதியான தொனியில் பேசுவதுதான் அவர் வழக்கம்.

“ஓஹோ. எனவே நீங்கள் ஏதோவொரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்,” என்றான் டெங்கோ. “சரி, அப்படியானால் நீங்கள் விட்டுச் செல்லப்போகும் வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள்?”

“நீதான்,” அவர் டெங்கோவை நோக்கி சுட்டுவிரலை நீட்டி அறிவித்தார். “இது வெளிப்படையாகத் தெரிவதுதானே? வேறு யாரோ உண்டாக்கிய வெற்றிடத்தை

நான் நிரப்பிக் கொண்டிருக்கிறேன் என்றால், நான் உண்டாக்கிய வெற்றிடத்தை நீதான் நிரப்புவாய்.”

“மனிதர்கள் அந்த நகரத்தைவிட்டு வெளியேறியதும் பூனைகள் நிரப்பியதைப் போலவோ?”

அவனை நோக்கி நீட்டியிருந்த கையை இன்னும் தாழ்த்தாமல் அப்படியே வைத்துக் கொண்டு “ஆம்” என்றார். நீட்டிக்கொண்டிருந்த சுட்டுவிரலை ஏதோ ஒரு மர்மமான, இடம் மாறி வந்துவிட்ட பொருளைப் போல வெற்றாகப் பார்த்தார்.

டெங்கோ பெருமூச்செறிந்தான். “சரி, அப்படியானால் யார் என்னுடைய அப்பா?”

“ வெறும் வெற்றிடம்தான். உன் அம்மா அவள் உடம்பை ஒரு வெற்றிடத்தோடு நிரப்பி உன்னைப் பெற்றெடுத்தாள். அந்த வெற்றிடத்தை நான் நிரப்பினேன்.”

இவ்வளவு சொன்னதே அதிகம் என்பதுபோல அவர் கண்களை மூடி வாயையும் அடைத்துக்கொண்டார்.

“என் அம்மா போய்விட்டபிறகு நீங்கள் என்னை வளர்த்தீர்கள். அதுதானே நீங்கள் சொல்வது?”

ஒரு மந்த புத்தி குழந்தைக்கு எளிமையான உண்மை ஒன்றை விளக்க முயற்சிப்பதைப் போல அவர் நியமமாக தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “அதனால்தான் சொன்னேன், விளக்கம் அளிக்காமல் உன்னால் புரிந்துகொள்ள முடியாதென்றால் விளக்கம் அளித்தாலும் உன்னால் புரிந்துகொள்ள முடியாது என்று.”

கைகளை மடக்கி மடிமேல் வைத்துக்கொண்டு அவன் அப்பாவின் முகத்தை நேராகப் பார்த்தான். இவர் ஒன்றும் காலியான ஓடு அல்ல என்று நினைத்துக்கொண்டான். குறுகலும் திடமுமான ஆன்மாவைக் கொண்ட, ரத்தமும் சதையுமான ஒரு மனிதர். கடலோரத்திலிருக்கும் இந்தத் துண்டு நிலத்தில் உயிர்போவதும் வருவதுமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறார். அவருக்குள் மெதுவாகப் பரவிக் கொண்டுவரும் வெற்றிடத்தோடு உடனொத்து வாழ்வதைத் தவிர அவருக்கு வேறு மாற்று இல்லாதிருக்கிறது. இறுதியில் இந்த வெற்றிடம் மிச்சமிருக்கும் அவர் ஞாபகங்கள் எல்லாவற்றையும் விழுங்கிக்கொள்ளப் போகிறது. வெகு சீக்கிரத்திலேயே.

மாலை ஆறுமணியாவதற்கு சற்றுமுன்பாக டெங்கோ அவன் அப்பாவிடம் விடைபெற்றுக்கொண்டான். டாக்ஸி வரும்வரை அவர்கள் எதிரெதிரே சன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. டெங்கோவிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தன. அவற்றிற்குப் பதில் கிடைக்காது என்று அவன் அறிந்திருந்தான். அவன் அப்பாவின் இறுக்கமாக மூடியிருந்த உதடுகள் அதைத்தான் தெரிவித்தன. விளக்கமில்லாமல் ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், விளக்கினாலும் அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அவன் அப்பா சொன்னதைப் போல.

கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கியதும் டெங்கோ அவரிடம், “இன்று நிறையவே என்னிடம் சொல்லி யிருக்கிறீர்கள். அவை நேரடியாக இல்லாமல், புரியவும்

கடினமாக இருந்தாலும் உங்களால் இயன்றவரை நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்லியிருக் கிறீர்களென்று நினைக்கிறேன். அதற்காக உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்க வேண்டும்.”

இப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. ரோந்துப்பணியில் அமர்த்தப்பட்ட போர்வீரன் தூரத்து மலையில் பழங்குடிகள் எழுப்பும் நெருப்பு சமிக்ஞைக்காக கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல வெளியே நிலைத்த பார்வையோடு வெறித்திருந்தார். டெங்கோ அவர் பார்வையின் இலக்கை அறிந்து கொள்ள முயற்சித்தான். அங்கிருந்தது சூரிய அஸ்தமனத்தில் பொன்னிறமாகியிருந்த பைன் தோப்பு மட்டும்தான்.

“இதை நான் சொல்வதற்காக மன்னிக்கவேண்டும். உங்களுக்குள் ஒரு வெற்றிடம் உருவாகும் நேரம் வரும்போது நீங்கள் வலியில்லாமல் இருக்கவேண்டுமென்று விரும்புவதைத் தவிர உங்களுக்காக நான் எதையுமே செய்ய முடியாது. நீங்கள் ஏற்கனவே நிறைய வேதனையை அனுபவித்திருக்கிறீர்கள். என் அம்மாவை எந்தளவுக்கு நீங்கள் நேசித்திருக்கிறீர்களென்று என்னால் உணர முடிகிறது. அம்மா விட்டுச்சென்றது உங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கும் – காலியான நகரத்தில் வாழ்வதைப் போல. இருந்தாலும் என்னை நீங்கள் அந்த காலியான நகரத்தில் வளர்த்திருக்கிறீர்கள்.”

காக்கைகள் கூட்டம் ஒன்று கரைந்தபடி கடந்து சென்றது. டெங்கோ எழுந்துநின்றான். அவன் அப்பாவிடம் நெருங்கி அவர் தோள்மீது கையை வைத்தான்.” போய் வருகிறேன் அப்பா. விரைவில் மீண்டும் வருவேன்.”

கதவுப்பிடியில் கைவைத்து திறப்பதற்கு முன் டெங்கோ கடைசியாக ஒருமுறை அவன் அப்பாவைப் பார்க்கத் திரும்பியதும் அதிர்ந்து போனான். அவன் அப்பாவின் கண்களிலிருந்து ஒரேயொரு கண்ணீர்த்துளி தப்பித்து வெளியே வந்து, அறைக்கூரையிலிருந்த விளக்கின் ஒளியில் மங்கலான வெள்ளி நிறத்தில் மின்னியது. பின் அது மெதுவாகச் சேகரமாகி கன்னத்தில் இறங்கி வழிந்து அவர் மடியில் விழுந்தது. டெங்கோ கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான். வாடகைக்காரில் ரயில்நிலையம் சென்று, அவனை இங்கே கூட்டிவந்த அதே ரயிலில் திரும்ப ஏறிக்கொண்டான்.

– ஹாருகி முரகாமி

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

1 thought on “பூனைகள் நகரம்

  1. இந்தக் கதையின் கதாசிரியர் ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர் ஹாருகி முரகாமியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *