கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 12,252 
 

கதை ஆசிரியர்: சந்திரா.

எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை
மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை
அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி
அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம்
நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட
வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில்
நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று
அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள்
கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில்
நிறைய பூ வைத்திருந்தாள். தெருவில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் நின்றிருந்தது.
நான் ஒரு மகாராஜனைப் போல வீறுநடை போட்டு படியில் இறங்கினேன். பேண்ட் பாதம்
முழுதும் நிரப்பி என்னைத் தடுக்கி விழ வைத்தது. உடனே பிரபுவையும்
சிவக்குமாரையும் பார்த்தேன். அவர்கள் சிரிக்கவில்லை. ஒரு கையில் பேண்ட்டை
நன்றாக தூக்கிப் பிடித்தபடி காரின் முன்சீட்டில் உட்கார்ந்தேன். பேன்ட்டின்
நீளத்தின் குறைக்கவாவது நான் வளர வேண்டும் என்று நினைத்தேன். பிரபுவும்,
சிவக்குமாரும் நாங்களும் காரில் வருகிறோம் என்றார்கள். எனக்கும் அவர்களை என்
பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்ள ஆசைதான். அப்போது என் அண்ணன் வில்லனைப் போல்
அவர்களை ஒரு முறை முறைத்து ஸ்டைலாக கார் கதவை திறக்க முயன்றான். அவனின்
ஒல்லியான கைகளுக்கு கதவு அசைந்துகூட கொடுக்கவில்லை. பிரபு ஓடி வந்து ஒரு
சேவகனைப் போல கதவைத் திறந்துவிட்டான். அப்பவும் அண்ணன் அவனை முறைத்தான். அவன்
தள்ளிப்போய் நின்று கொண்டான்.

காரில் உட்கார்ந்திருப்பதற்கான அனைத்து பந்தாக்களையும் செய்தேன். காரில் இருந்த
கண்ணாடியில் தலையைச் சீவிக் கொண்டேன். அடம்பிடித்து அழுது தைத்த முழுக்கைச்
சட்டையை அப்பாவைப் போல் மடக்கிவிட்டு அண்ணனின் அரைக்கைச் சட்டையைப் பார்த்துச்
சிரித்தேன். சாந்தி அக்காவும் அவளது தோழிகளும் சிரித்தபடி காரில் பின்சீட்டில்
உட்கார்ந்தார்கள். செல்வி அக்கா வழக்கம்போல் சாந்தி அக்காவுடன் சண்டை
போட்டிருப்பாள் போல,  அவள் காரில் ஏறாமல் பழத்தட்டை கையில் ஏந்தியபடி சித்தி,
பெரியம்மா, அத்தை கோஷ்டிகளுடன் நடந்துவர தயாரானாள். ‘சின்னவளே இன்னைக்குமா
வீம்பு புடிக்கணும் நீயும் கார்ல உட்கார்ந்துக்கடி’ என்ற அம்மாவை
முறைத்துவிட்டு, தட்டை படிக்கட்டில் வைத்துவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போய்
உட்கார்ந்துகொண்டாள். செல்வி அக்காள், சாந்தி அக்காவைப் போல் இன்று தாவணி
போட்டிருந்தது அழகாயிருந்தது. மேளக்காரர்கள் காருக்கு முன்னால் நின்று வாசிப்பை
ஆரம்பித்தார்கள். ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ பாட்டு ஒலிபெருக்கியில்
வாசிப்பை மீறி கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒலிபெருக்கியின் சத்தம்
நின்றுவிட்டது.

புது வெள்ளை வேட்டியை மடக்கி கட்டியிருந்த அப்பா விடுவிடுவென்று காருக்குப்
பக்கத்தில் வந்தார். எல்லோரையும் இறங்கச் சொன்னார். சாந்தி அக்காவை தரதரவென்று
வீட்டுக்குள் இழுத்துப் போனார். ஒலிபெருக்கி, பாட்டு, கார், மேளம் எல்லா
சந்தோசமும் போச்சு. எனக்கு அவமானம் பிய்த்துத் தின்றது. அவர் எங்களை பார்த்த
ஒரு பார்வையிலேயே பிரபு, சிவக்குமாரு, கூட்டம் யாரையும் திரும்பிப் பார்க்காமல்
அவர் பின்னால் ஒடுங்கிக்கொண்டு போனோம். முற்றத்திலிருந்த மர நாற்காலியில்
அக்காவை உட்கார வைத்து அறிவியல் புத்தகத்தை கையில் கொடுத்தார் அப்பா. அக்காவும்
அதுவரை படித்துக்கொண்டிருந்துவிட்டு சமையலறையில் தண்ணீர் குடிக்கப் போனவளைப்
போல இயல்பாக படிக்க வேண்டிய பக்கத்தை எடுத்துப் படித்தாள். நீர்மூழ்கிக்
கப்பலின் செயல்பாடுகளை கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு வரியாக மனப்பாடம் செய்தாள்.
அப்பா எங்களிடம் அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் முன்னே நான் முற்றத்தின் தெற்கு
மூலையிலும் அண்ணன் வடக்கு மூலையிலும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தோம்.
செல்வி அக்கா கோவிலை தாண்டியிருந்த கொய்யா மரத்தருகில் நடந்தபடி படித்தாள்.
அம்மா, கல்யாணம் நின்று போனதில் பெரும் வருத்தம் அடைந்தவளாக சித்தி
பெரியம்மாவுடன் சமையலறையில் உட்கார்ந்து அழுதாள். அப்பா வாத்தியாரைப் போல்
கைகளைப் பின்னால் கட்டி எங்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

எல்லாத்துக்கும் காரணம் செல்வி அக்காதான். அவள்தான் முதலில் கோபித்துக்கொண்டு
வந்தாள். மாப்பிள்ளையையும் பார்க்கவில்லை. கார் ஊர்வலமும் போச்சு. கோபத்துடன்
எழுந்துபோய் அவளை என் கை ஓயுமட்டும் அடித்தேன். “டேய் செந்திலு எந்திரிடா
எதுக்கடா இப்படி கையைத் தூக்கி காத்துல அடிச்சுகிருக்க. ராத்திரி பேய்க்கதை
கேட்காத. கெட்ட கெட்ட கனவா வரும்ன்னு சொன்னா கேட்குறியா?”

“எம்மா ராத்திரி கல்யாணக்கதைதானம்மா சொன்ன” என்றேன் கண்களைக் கசக்கியபடி.
“உனக்கு தெனமும் இதே வேலையாப் போச்சுடா ராத்திரி கதை கேக்கிறது. காலையில கனவு
கண்டுட்டே எந்திரிக்கிறது? சரி எந்திரி காப்பியை குடிச்சிட்டு பெரியப்பா
வீட்டுக்கு போயிட்டு வா. சீக்கிரம் சோறாக்கணுமில்ல” என்ற அம்மாவிடம் “சீனி
அண்ணனை போகச் சொல்லு. தெனைக்கும் நானே போக முடியாது. பெரியப்பா
முறைக்கிறாரும்மா.” “அண்ணன் பெரிய பையனாயிட்டான்ல வெட்கப்படுறாண்டா. நீ
போயிட்டு வாடா.” “நான் ஆறாவது படிக்கிறேன் அவன் எட்டாவது படிக்கிறான்
அதுக்குள்ள அவன் பெரிய பையனாயிட்டானா! நானும் டவுசர் போட்டிருக்கேன். அவனும்
டவுசர் போட்டிருக்கான். அவன் பேண்ட் போடட்டும் அப்பதான் பெரியவனாவான்.” அம்மா
என் நாடியை பிடித்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. செல்வி அக்கா அதற்குள் குளித்து
முடித்து யூனிபார்ம் போட்டிருந்தாள். அவள் ஆம்பளப் பையன் சட்டை போட்டிருந்தது
எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படி இவள் சட்டை போட்டுக்கொண்டு அலைந்தால், ஊரில்
யார்தான் என்னை ஆம்பளையாக மதிப்பார்கள். அதுவும் கூடப்படிக்கும் இந்துமதி நான்
ஆம்பளப் பையன் என்பதை கொஞ்சம்கூட மதிக்காமல் சண்டை வரும்போதெல்லாம் என் மேல்
உட்கார்ந்து முதுகில் குத்துகிறாள். அவளுடன் சண்டை போட தினமும் கொஞ்சம் அதிகமாக
சாப்பிட வேண்டியிருக்கிறது. அதற்கும் கொஞ்ச காலமாக வீட்டில் வழியில்லாமல்
போய்விட்டது. ராத்திரி விளையாடும்போது அவள் என்னை அடித்ததும் வீட்டுக்கு வந்து
சாப்பிட்டு விட்டு வீரமாகிப் போய் அடிக்கலாம் என்றால் அம்மா சோத்து
பாத்திரத்தையெல்லாம் கழுவி வைத்திருக்கிறது. பெரியப்பா வீட்டுக்குப் போய்
அரிசியும் பருப்பும் வாங்கும் நாளிலிருந்து இப்படித்தான் வீட்டில் மறுசோறு
சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. தினமும் ஒரு படி அரிசி என்று கணக்கு
வைத்துதான் கொடுக்கிறார் பெரியப்பா.

அம்மா எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி தினமும் என்னை பெரியப்பா வீட்டிற்கு காலையில்
அனுப்பி விடுகிறது. நானும் சாந்தி அக்கா தையல் பீரியடில் பின்னிய சிவப்பும்
வெள்ளையும் கலந்த வயர் பைக்குள் ஒரு மஞ்சள் துணிப்பையை எடுத்து வைத்துக்கொண்டு
அடுத்த தெருவில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குப் போகிறேன். பெரியம்மா நான்
போவதற்கு முன்பே அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ரெடியாக வைத்திருக்கும்.
முன்னெல்லாம் சாப்பாட்டுச் செலவுக்கு மாதம் ஒரு முறை என்று பணமாகத்தான்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாதி மாதத்திலேயே பணத்தை செலவழித்துவிட்டு
சாப்பாட்டுக்கு வழியில்லை என்று அவர்கள் வீட்டுப் பக்கம் போய் நின்றதும்,
இப்படி தினமும் அரிசியாக கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டார்கள். பெரியம்மா
அரிசியைத் துணிப்பையில் கொட்டி வயர்பைக்குள் வைக்கும். காகிதத்திலிருக்கும்
பருப்பு, காய்கறிகளை மேலாக்க போட்டு “சூதானமா கொண்டு போ செந்திலு”. இந்த
வார்த்தையை பெரியம்மா தினமும் சொல்வதைப் போல பெரியப்பாவும் ஒரு விசயத்தை
தினமும் சொல்லிக்கொண்டிருந்தார். “உங்கப்பா கடைப்பக்கம் வரமாட்டாராமா? வேலை
பார்த்தா கிரீடம் இறங்கிப் போகும், ரெண்டு பொம்பளப் பிள்ளைக வளர்ந்து
கல்யாணத்துக்கு நிக்கப் போகுதுக, இவரு சாமிய கட்டிக்கிட்டு அழுகுறாரு. வயலை
வித்தாச்சு, வடக்குத்தெரு வீட்டை வித்தாச்சு இன்னும் எதை விக்கப் போறாரோ?
விக்கிறதுக்கு இன்னும் என்னயிருக்கு, உங்க அத்தகாரிகதான் சொத்தில பங்கு
வேணுமின்னு எல்லாத்தையும் கோர்ட்டுல கொண்டு நிறுத்திட்டாளுகளே” எங்கப்பா
காலையில் கந்தசஷ்டி கவசத்தை பயபக்தியுடன் சொல்வதைப் போல, பெரியப்பாவும்
சிரத்தையுடன் இதை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “சின்னப்பையன் அவங்கிட்ட
போய்த் தெனமும் இதையே சொல்லிக்கிட்டிருந்தா நல்லாவாயிருக்கு” என்று சொல்லும்
பெரியம்மாவை, “எல்லாம் உன் தங்கச்சியை சொல்லணும் புருசன வீட்டுக்குள்ள பொத்தி
பொத்தி வச்சிகிட்டு, புருசனை லட்சணமா வேலைக்கு போகச் சொல்ல துப்பில்ல” என்று
பெரியப்பா பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டின் நீளமான படியைத் தாண்டி
குறுக்குச் சந்து வழியாக எங்க வீட்டின் பின்பக்கம் நுழைந்து வீட்டுக்குள்
வந்திருப்பேன்.

ஊரில் எங்கள் வீட்டை ‘கோவில் வீடு’ என்றுதான் கூப்பிடுவார்கள். துட்டு
பெருத்திருந்த காலத்தில் என்னோட தாத்தா வீட்டோடு சிவன் கோயிலை கட்டி
வைத்திருந்தார். கோவில் வாசல் வடக்குத் தெருவிலும் வீட்டு வாசல் கிழக்குத்
தெருவிலும் இருக்கும். இப்படி இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு செவ்வக
வடிவமைப்பில் இருந்தது எங்கள் வீடு. வீட்டின் நடுவில் நான்கு பக்கமும் ஓடுகள்
மேய்ந்த முற்றம் இருந்தது. முற்றத்தின் மேற்கு பக்கம் இரண்டு அறைகளும்,
முற்றத்தின் கிழக்குப் பக்கம் இரண்டு அறைகளும் இருந்தன. ஒவ்வொரு அறைக்கு
முன்னால் வராண்டாவைப் போன்று கொஞ்சம் இடம் காலியாக இருக்கும். ஒவ்வொரு
முற்றமும் தனித்தனி வீடு போலிருக்கும். தெற்கு முற்றத்தினை தொடர்ந்து ஒரு
படுக்கை அறையும், ஒரு நீண்ட வராண்டாவும், தானியங்களை அடைத்து வைக்க மரத்தால் ஆன
சேந்தியும், அதனைத்தாண்டி கடைசியாக சமையலறையும் இருக்கும். வடக்கு முற்றம்
அறைகளற்று வாசலைக் கொண்டிருந்தது. இதிலிருந்து இருபதடி தூரத்தில் சிவன்
கோவிலும் கிணறும் இருந்தது. சிவன்தான் பிரதான கடவுள் என்றாலும் பிள்ளையார்,
நந்தி, முருகன் எல்லாமே சேர்ந்திருந்தது. வீட்டு கோவில் என்பதால் எப்போதாவது
வரும் ஒன்றிரண்டு ஊர்க்காரர்களைத் தவிர யாரும் எங்கள் கோவிலுக்கு வருவதில்லை.
வீட்டில் கோவில் கட்டியிருந்ததுதான் எங்களின் எல்லா துன்பத்திற்கும் காரணம்
என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். எங்கள் கோவிலில் நந்தி மட்டும் எனக்கு
விருப்பமானதாக இருந்தது. வீட்டில் அப்பா இல்லாத நேரத்தில் அம்மா வீட்டுக்குள்
வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் நந்தியில் சவாரி
செய்வேன். அப்பாவோடு பூஜை செய்துகொண்டிருக்கும் போது “என் மேல் சவாரி செஞ்சதை
உங்கப்பாகிட்ட சொல்லிடவா” என்பதைப் போல் நந்தி பார்ப்பதாகத் தோன்றும். பார்வையை
நந்தி பக்கத்திலிருந்து திருப்பிக் கொள்வேன். அதுமட்டும் அப்பாவுக்கு
தெரிந்தால் என்னைக் கொன்றே விடுவார்.

சாப்பிடுவது தூங்குவதைப் போல தினமும் திருவாசகமும் கந்தசஷ்டி கவசமும் படிக்க
வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகயிருந்தது. அண்ணன் எட்டாம் வகுப்பு
போனதிலிருந்து “பள்ளிக்கூடத்தில நெறையா படிக்கச் சொல்றாங்க” என்று காலையில்
புத்தகத்தை தூக்கி உட்காந்து கொள்கிறான். இன்னும் இரண்டு முழுபரீட்சை லீவு
முடிந்தால்தான் நான் திருவாசகத்திலிருந்தும் கந்தசஷ்டி கவசத்திலிருந்தும்
விடுபட முடியும். ஆனால் தமிழ்ப் பாடத்தில் நான் தான் முதல் மதிப்பெண்
வாங்கினேன். திருக்குறளை அப்பா தினமும் தலைகீழாக மனப்பாடம் பண்ண
வைத்துவிட்டார்.

நாங்கள் சாப்பிடும்போதே அப்பாவும் எங்களோடு சேர்ந்து சாப்பிட்டு, வேலைக்கு
போகிறவரைப் போல நாங்கள் கிளம்பும்போது அவரும் வெளியே கிளம்பிவிடுவார். அப்புறம்
அனுப்பானடியிலிருக்கிற அத்தனை வீட்டுப் பிரச்னைகளுக்கும் சோனையா கோவிலில்
இருக்கும் புங்கைமரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேச ஆரம்பித்து விடுவார்.
அந்தக் கூட்டத்தில் இவர் வயதுள்ளவர்கள் கொஞ்ச பேர்தான் இருப்பார்கள் வேலை
வெட்டி செய்து ஓய்ந்து போய் வீட்டில் பொழுதைக் கழிக்க முடியாமல் இருக்கும்
கிழடுகள் அந்தக் கூட்டத்தில் அதிகமாக இருக்கும். ராத்திரி கூட்டத்தில்
வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பியிருக்கும் இவர் வயதுக்குக் கீழே உள்ள
இளைஞர்களோடு தெப்பக்குளத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கதைப்
பேசிக்கொண்டிருப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் இவர் வக்கிலைப் போய் பார்க்கும்
நாளில் ஏதோ மிகப்பெரும் பிரச்னை முடிக்கப்படாமல் கெட்டுப்போய் கிடப்பில்
கிடக்கிறது என்பதைப் போல ராத்திரி பதினொரு மணிவரை அவசரமாகப்
பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பா பேசிப் பேசி ஓய்ந்து கொண்டிருந்தார். பீடி,
சிகரெட், சீட்டு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நிறையப் பேசுவார். நிறைய
டீ சாப்பிடுவார். அதுவும் ஓசி டீ என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எப்படிப்பட்ட
குடும்பத்து ஆளு ஒருத்தன்கிட்ட ஓசி டீ குடிக்கிறதா என்று குடும்பப் பெருமை பேசி
அடுத்தவனுக்க்கு டீ வாங்கித் தருவாரே தவிர அவர்  யாரிடமும் ஓசி டீ
குடிக்கமாட்டார். பெரியப்பாவிற்குத் தெரியாமல் பெரியம்மா கொடுக்கும் சில்லறைப்
பணத்தை வீட்டு மேற்செலவுக்குப் போக மிச்சத்தை அம்மா அப்பாவுக்கு கொடுக்கும்.

அப்பா வீட்டுக்கு லேட்டாக வரும் ராத்திரிகளில் நாங்கள் முற்றத்தில் பாயை
விரித்து வரிசையாகப் படுத்திருப்போம். அப்போதெல்லாம் யாருடையதோ போல அம்மா
தன்னுடைய கதையை எங்களிடம் சொல்லும். அம்மாவின் ஜாக்கெட் பின்னை நோண்டியபடி
வயிற்றுச் சூட்டின் வெதுவெதுப்பில் படுத்தபடி கதையைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
அம்மாவின் ஜாக்கெட் பின்னை நோண்டும் பழக்கம் வெகு நாட்களாக என்னைவிட்டுப்
போகவில்லை. அக்காக்களும் அண்ணனும் என்னை ஓயாமல் கிண்டல் செய்த பின்புதான்
அதனைக் கைவிட்டேன்.

அம்மாவிடம் கதை கேட்டுக்கொண்டே அதற்கு இணையாக கற்பனையிலும் மூழ்கிவிடுவேன்.
செல்வி அக்கா, சாந்தி அக்கா, சீனி அண்ணன் எல்லோரும் கதையைக்
கேட்டுக்கொண்டிருந்தாலும் அம்மா என்னைப் பார்த்துதான் கதையைச் சொல்லிக்
கொண்டிருக்கும்.

“என்னடா செந்திலு கதையை கேக்குறியா” என்று என் கற்பனையை அறிந்ததுபோல அவ்வப்போது
கடிவாளத்தைப் போட்டு கதையைத் தொடர்ந்து சொல்லும். உலகத்தில் மிக
சுவாரசியமானதும் நெகிழ்வானதும் எங்கம்மா வாழ்ந்த கதைதான் என்று
நினைத்துக்கொள்வேன். வாழ்க்கையைச் சொல்லி தீர்ந்துபோன அம்மா ஒரே கதையை வேறு
வேறு வடிவங்களில் மாற்றிச் சொல்லும். ராஜா ராணி கதை சொல்லும்போதும் முதல்ல ராணி
சந்தோசமாக இருப்பாள் அப்புறம் ராணியோட வாழ்க்கை அலைபுரண்டு சோகமாயிடும்.
இல்லையென்றால் கொடுமைப்பட்டு வேலைக்காரியாக இருக்கும் இளவரசி ஏஞ்சலாக
மாறிவிடுவாள். அம்மா சொல்லும் எல்லாக் கதைகளும் சந்தோசமும் துக்கமும்
சேர்ந்ததாகத்தான் இருக்கும். முன்பு சொன்ன கதையின் ஜாடையில் இன்னொரு கதை
இல்லாமல் இருந்தாலும் அம்மாவைத்தான் எல்லாக் கதைகளிலும் கதாநாயகியாக
நினைத்துக்கொள்வேன்.

எங்கள் வீட்டில் வறுமை இருந்தாலும் அம்மாவும் நாங்களும் நண்பர்களைப் போல்
விளையாடிக்கொண்டிருந்தோம். எது வாங்கிச் சாப்பிட்டாலும் அம்மாவுக்கும் சேர்த்து
ஐந்து பங்காக்கி சாப்பிடுவோம். நான் என்னோட பங்கைச் சீக்கிரம் சாப்பிட்டு
விடுவேன். அம்மா எப்போதும் தன் பங்கை கடைசியில்தான் சாப்பிடும். அது எனக்கு
கொடுப்பதற்காகத்தான். “சீக்கிரம் சாப்பிடும்மா. இவன் உன் பங்கை
பிடுங்கிக்குவான்” என்று அண்ணன் என் பங்கு இருக்கும் கையை பிடித்துக்கொள்வான்.
“சின்ன பையன் அவனுக்கு ஆசையா இருக்கும்ல, இனிமேல் நான் சாப்பிட்டு என்ன
ஆகப்போகுது” என்று தன் பங்கில் பாதியை அம்மா கொடுத்துவிடும். எனக்கு விவரம்
தெரியத் தெரிய என் பங்கை கடைசியாக சாப்பிட்டேன். திருடன் போலீஸ் விளையாட்டு,
தாயம், ஒளிந்து விளையாடுவது என்று விளையாடித் தீர்க்காத தனது இளமைக்
காலத்தையெல்லாம் அம்மா சரிக்குச் சமமாக எங்களோடு பகிர்ந்து கொண்டது.

கையில் பணம் புழங்கவில்லை என்றாலும் வீட்டில் இருந்த பல பொருள்கள் நாங்கள்
வசதிபடைத்தவர்கள் என்பதை எங்களையறியாமல் எங்களுக்குள் ஞாபகப்படுத்திக்கொண்டே
இருந்தது. சுவருக்குள் புதைந்து இருக்கும் மர அலமாரிகள், நீளமான சமையலறை
முற்றத்து பெரிய மரத்தூண்கள், இப்போது காலியாகக் கிடக்கும் தானிய சேந்தி
இன்னும் இன்னும்… சிதிலமடைந்து  கரையான் ஏறிக்கிடந்த மரச்சாமான்கள் ஏழ்மையை
மீறிய ஒரு கர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. புங்கைமரத்தடியில் விளையாடும்போது
உடன் விளையாடும் சிநேகிதர்கள் சாப்பிடக் கொடுக்கும் பண்டங்களை வாங்க மறுத்து
நாங்கள் அறியாத எங்கள் வீட்டின் பழைய செழுமையை அவர்களுக்கு உணர்த்தினோம். ஆனால்
இந்துமதி காக்காகடி கடித்துக் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்காமல் இருக்க
முடியவில்லை.

எங்கள் வீட்டில் இருக்கும் பழங்காலத்துப் பொருள்களில் எனக்குப் பிடித்தமானது
வெண்கல அன்னபட்சி விளக்குதான். பம்பரம் மாதிரியான குடுவை அமைப்பில் இருக்கும்
நடுப்பகுதி. கீழ்பகுதியில் இருக்கும் திரிபோட்ட விளக்கு நடுப்பகுதியோடு திருகு
போட்டு இணைந்திருக்கும். வெண்கலத்தின் அன்னபட்சி உருவம் செய்யப்பட்டு அது
குடுவையின் மேல்பகுதியில் அழகுக்காக பொருத்தப்பட்டிருக்கும். இதுவும்
நடுப்பகுதியோடு திருகு போட்டு இணைந்திருக்கும். அன்ன பட்சியையும், விளக்கையும்
நடுப்பகுதியிலிருந்து தனித்தனியே கழற்றி எடுத்துவிடலாம். விளக்குப் பகுதியைத்
திருகி எடுத்துக் குடுவையில் எண்ணைய் ஊற்றி, பின் விளக்கை மாட்டினால்,
குடுவையிலிருந்து எண்ணைய் வழிந்து விளக்கில் விழும். அன்னப்பட்சிக்கு மேலே
கொக்கியை அரை அடி நீளத்திற்கு செயின் போல செய்து முற்றத்துச் சுவரில்
மாட்டியிருப்பார்கள்.

குடுவையில் ஒரு படி எண்ணைய் நிறையுமாம். கார்த்திகை மாதங்களில் நாளெல்லாம்
விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம். எங்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து
குடுவை முழுமையாக நிறைந்ததில்லை. விளக்கின் கீழ்ப்பகுதியில் மட்டும் எண்ணெய்
ஊற்றி விளக்கு ஏற்றினோம். குடுவை முழுவதும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற
வேண்டுமென்று செல்வி அக்காவும், சாந்தி அக்காவும் தீராத ஆசை கொண்டிருந்தார்கள்.

வீட்டில் யாரும் இல்லாத நாட்களில் எங்களுக்கு விளையாட ஏதாவது பழங்காலத்துப்
பொருள்கள் ஒளிந்து கிடக்கின்றதா என்று வீட்டை நானும் அண்ணனும் சல்லடை போட்டுத்
தேடிக்கொண்டிருப்போம். அப்படித்தான் தானிய சேந்திக்குப் போகும் மெச்சு
படிக்குக் கீழே தூசி படிந்து கிடந்த பழைய தொட்டில், துருப்பிடித்த இரும்புச்
சாமான்களை வெளியே எடுத்துவிட்டு அங்கே தேடியபோது மரப்பலகை ஒன்று தரையோடு தரையாக
சேர்ந்திருந்தது. மரப்பலகையை தனியே எடுத்துப் பார்த்தால் சதுரமான குழி ஒன்று
தரைக்கு அடியில் ஓடியது. யாருக்கும் தெரியாத வீட்டின் பாதாள அறையை
கண்டுபிடித்துவிட்டதாக நானும் அண்ணனும் குதியாட்டம் போட்டோம். இருண்ட குழி
ஆழமாகி உள்ளே இழுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று யோசித்துக்
கொண்டிருக்கும்போதே அப்பா வரும் அரவம் கேட்க எல்லாவற்றையும் பழையபடி
மூடிவிட்டோம். ராத்திரி வீட்டில் எல்லோரும் தூங்கிய பின் நானும் அண்ணனும்
குசுகுசுவென்று இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஆளரவமற்ற இன்னொருநாள்
அண்ணன் பேட்டரிலைட்டை உள்ளே அடிக்க நான் குழிக்குள் இறங்கினேன். அது என்
உயரத்திற்கும் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அந்த குழிக்குள் ஒரு பழங்காலத்து
இரும்பு பெட்டி புதைக்கப்பட்டிருந்தது. அதை முழுவதுமாக துழாவித் தேடினேன். ஒரு
பித்தளை செம்பு, குழந்தைக்கு பால் புகட்டும் சங்கு, களிமண்ணில் செய்யப்பட்ட ஏதோ
சாமியின் உருவம் தவிர காலியாகத்தான் கிடந்தது பெட்டி. ஏமாற்றம் பொங்க பித்தளைச்
செம்பை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினேன். கடகடவென்று செம்புக்குள் ஏதோ
சத்தம் வந்தது. செம்பை கவிழ்த்துப் பார்த்தால் பழைய தாயத்து, பழைய நாணயம்,
அப்புறம் முடிந்த துணி ஒன்றும் இருந்தது. முடிச்சை அவிழ்த்துப் பார்த்தால்
சரஸ்வதி படம் போட்ட ஒரு வெள்ளிக்காசும் ஒரு தங்கக்காசு மின்னிக் கொண்டிருந்தது.
ஓடிப்போய் அம்மாவிடம் கொடுத்தோம். எல்லாச் சொத்தும் திரும்பி வந்ததைப் போல
அம்மா சந்தோசப்பட்டது. தங்கக்காசும் கிடைத்தபின் எல்லோருக்கும் தெரியும்படியே
வீட்டை நோண்ட ஆர்மபித்தோம். அதற்குபின் ஒரு பித்தளைக்காசு கூட எங்கள் கைக்குச்
சிக்கவில்லை. ஆனால் அம்மா மறுபடியும் தாத்தாவின் செல்வச் செழிப்பைப் பற்றி கதை
சொல்ல அது ஆதாரமாய் அமைந்துவிட்டது. அப்போதெல்லாம் தாத்தாவிடம் பெட்டி
பெட்டியாக வெள்ளிக்காசு இருக்குமாம். மாதம் ஒரு முறை பௌர்ணமி வெளிச்சத்தில்
வெள்ளிக்காசையெல்லாம் காயப்போடுவாராம். பளீரென்று மின்னும் நிலா வெளிச்சம்
பட்டால் வெள்ளி கறுத்துப்போகாமல் பளபளவென்று அப்படியே இருக்குமாம். அம்மா
இப்படி கதை சொல்லியே தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்டது.

நல்லா படிக்காமச் சொத்தை நம்பி இருந்ததாலதானே எந்த வேலைக்கும் போக முடியாமப்
போச்சு, படிக்காததால கோர்ட்டு கேஸுன்னு ஏமாந்து போயாச்சு. நாங்களாவது படித்து
பேங்க் ஆபிஸர், கலெக்டர், டாக்டர் என்று பெரிய வேலையில் இருக்க வேண்டுமென்று
அப்பா ஆசைப்பட்டார். சர்வாதிகாரியைப் போல வீட்டில் அமர்ந்துகொண்டு எங்களை
அட்டம் பிசகவிடாமல் படிக்கச் சொல்லுவார். எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க
வேண்டும் என்று வெறி கொண்டு அடக்கினார். அக்காக்களை சமையலறை பக்கம் கூட எட்டிப்
பார்க்க விடமாட்டார். வீட்டுக்குத் தேவையான தண்ணீரையும் கிணத்திலிருந்து அவரே
எடுத்தார். எங்களுக்கு கிடைத்த குறைந்தபட்ச வீட்டு வாடகையிலும், ஒத்தி கிடைத்த
வரன்கட்டை வயலை அம்மா அப்படி இப்படி என்று பணத்தைச் சேர்த்து வைத்து திருப்பி
அதை வாரத்திற்கு விட்டதில் கிடைத்த நெல்லும் எங்களின் வருச சாப்பாட்டுக்குச்
சரியாகப் போய்விட்டது.

சாந்தி அக்கா எம்.எஸ்.சி. முதல் வருசம் படித்துக் கொண்டிருந்தது. அது
காலேஜுக்கு போய்க்கொண்டே பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது. சின்ன
அக்கா பி.ஏ. மூன்றாம் வருசமும், சீனி அண்ணன் பி.எஸ்.ஸியும் படித்துக்
கொண்டிருந்தார்கள். அப்பா இப்போதெல்லாம்  பேச்சையும் டீயையும்
குறைத்துக்கொண்டார். குடும்பத்துப் பெருமைகளையெல்லாம் பிள்ளைகளின் படிப்பில்
மீட்டெடுத்துவிடலாம் என்று அவர் மனதில் புது நம்பிக்கை விட்டிருந்தது. அக்கா
படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை விலைக்கி வாங்க முடியாதென்பதால் அப்பா
மதுரையில் இருக்கும் சென்ட்ரல் நூலகத்திலும், யுனிவர்சிட்டி நூலகத்திலும்
உறுப்பினரானார். அக்காக்கள், அண்ணன் எழுதிக் கொடுக்கும் புத்தகங்களை பகலெல்லாம்
நூலகத்தில் தேடி அலைந்தார். தேவையான பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு
அவர்கள் படித்தார்கள்.

‘சொத்தில்லாம, வேலைக்கு போகாம பிள்ளைகளப் படிக்க வைச்சிட்டாருப்பா’ என்று
ஊர்க்காரர்கள் அப்பாவை பெருமையாகச் சொன்னார்கள். “வீட்ல கஞ்சிக்கில்ல, அதுல
பிள்ளைகளுக்கு படிப்பு என்ன வேண்டி கிடக்குன்னு” பெரியப்பா பொறுமிக்
கொண்டிருந்தார். நான் இப்போது பேண்ட் போட்டு ப்ளஸ் ஒன் போய்க்கொண்டிருந்தேன்.
இப்போதெல்லாம் பெரியப்பா வீட்டுக்குப் பையை எடுத்துப் போவதில்லை. ஆனால் அக்கா
கல்லூரியில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் பெரியம்மா மகள் சுமதி அக்காவிடம் போய் நல்ல
பூப் போட்ட சேலை வாங்கி வா என்று அனுப்பி விடுகிறது. “நல்ல சேலையை குடுடி”
என்று பெரியம்மா சொல்வதைக் காதில் வாங்காமல், சிறிதும் விருப்பமின்றி தன்னிடம்
இருக்கும் மிக மோசமான சேலையைத் தூக்கிக் கொடுக்கும் சுமதி அக்கா. அதுவே சாந்தி
அக்காவிற்கு சந்தோசமாகத்தான் இருக்கும். எப்போதும் கட்டும் மூன்று சேலையைத்
தவிர்த்து, இன்னொரு சேலை கட்டிக்கொண்டு போவதே திருப்தி தந்தது, அக்கா முகம்
சந்தோசமாகிவிடும். அக்காவிற்கு எந்தச் சேலையைக் கட்டினாலும் அழகாக இருப்பது
வேறு சுமதி அக்காவிற்கு எரிச்சலாக இருந்தது.

படிப்புச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவருடைய
சந்தோசமெல்லாம் மிகப்பக்கத்தில் இருந்தது. இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில்
எல்லாம் சம்பாதிக்கப் போகிறார்கள் என்பதே அவர் வாழ்வதற்கான புது உத்வேகமாக
இருந்தது. பிள்ளைகள் படிப்பை முடிக்கும் நேரத்தில் காரியத்தை கெடுத்து
விடக்கூடாதென்று அவர் ஒரு போதும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார்.
ஏற்கனவே நாங்கள் வாடகைக்கு விட்டிருந்த தெற்கு தெரு வீட்டில் இருந்து கொண்டு
இந்த வீட்டை வாடகைக்கு விடலாமென்று அம்மா சொன்ன போதெல்லாம், ‘எங்கப்பா வாழ்ந்த
பூர்வீக வீட்ல வேறெவனும் காலடி எடுத்து வைக்கிறதா? என் உயிரே போனாலும் அதைச்
செய்யமாட்டேன்’ என்றவர் எங்கள் கோவில் வீட்டு முற்றத்தை வாடகைக்கு விட முடிவு
செய்தார். இரண்டு சமையலறையைக் கட்டி இரண்டு குடும்பங்களை வாடகைக்கு
அமர்த்தினார். ஒவ்வொரு வீட்டுக்கும் நானுறு, நானுறு  என்று எந்நூறு கிடைத்தது.
வீட்டின் நிதிநிலைமைக்கு அது உதவியாகத்தானிருந்தது. ஆனால் நாங்கள் எங்கள்
முற்றத்தை இழந்திருந்தோம். அதற்குப் பின் எங்கள் முற்றத்து விளையாட்டுகளும்
பேச்சுக்களும் அம்மா சொல்லும் கதைகளும் எங்களை விட்டுப் போயிருந்தது. தெற்கு
முற்றத்தினைத் தாண்டியிருக்கும் பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். செல்வி
அக்காவும் சாந்தி அக்காவும் அறையினுள் போய் ஓயாமல் படித்துக்கொண்டிருந்தார்கள்.
அண்ணன் வராண்டாவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். எல்லோரும் தனித்தனி
தீவுகளாக படிப்பில் மூழ்கிவிட்டார்கள். நான் நன்றாகப் படிக்கவில்லை உருப்படாமல்
போகப் போகிறேன் என்று அப்பா வழக்கம்போல என்னைத் திட்டிக் கொண்டிருந்தார்.

வாடகைக்கு விடப்பட்ட மேற்கு பக்க முற்றத்தில் ஒரு கணவன், மனைவி அவர்களின்
குழந்தை மூவரும் குடியிருந்தனர். ராத்திரியில் குழந்தையின் அழுகை முற்றம்
முழுதும் நிரம்பி கனத்துக் கிடந்தது. பகல் முழுக்க முற்றத்தில் எப்போதும்
ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்பளம் போடும் சிறுகம்பெனிக்கு கிழக்கு
முற்றத்தினை வாடகைக்கு விட்டிருந்தோம். சாயம் மங்கிய சேலையும் உடைந்து
கொண்டிருக்கும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்த பெண்களும், சேலை கட்டும் பருவம்
வந்தும் தாவணி உடுத்தியிருந்த பெண்களும் செல்வி அக்காவையும் சாந்தி அக்காவையும்
ஞாபகமூட்டி கலக்கமடையச் செய்தார்கள். அவர்களும் எங்களைப் போல் சிரிப்பை
மறந்தவர்களாகவோ அல்லது முற்றத்தை இழந்தவர்களாகவோ இருக்கலாம். ஏக்கங்களின்
பெருமூச்சுகளை சுமந்திருக்கும் முற்றத்தினை நான் முழுவதுமாக துறக்கத்
தொடங்கினேன்.

முற்றத்து ஓடு நனைந்து கிடக்கும் ஐப்பசி மாத மழைக்காலத்தில், என்னோடு எப்போதும்
சண்டைபோடும் இந்துமதியை அவங்க மாமாவிற்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்கள்.
அவளும் நானும் ஒரே வயதில் இருந்தோம். அவள் கல்யாணம் பண்ணிப்போனதும் நான் என்னை
ஒரு இளைஞனைப் போல உணர்ந்தேன். எனக்கான காதலியை நான் கண்டுபிடிக்கவில்லை
என்றாலும் காதல் உணர்வு மனதிற்குள் துருத்திக்கொண்டு நின்றது. வறுமையை மீறி ஒரு
சந்தோசம் புதிதாய் வேர் கொண்டிருந்தது.

தண்ணீரில்லாமல் வற்றிக் கிடக்கும் காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து
தெப்பக்குளத்திற்குள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தண்ணீர் நிறைந்திருக்கும்
காலங்களில் படிக்கட்டில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டும் இருந்தபோது எங்கள்
வீட்டுக்கு ஒரு சாம்பல் பூனை வந்தது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு
குடிவந்திருந்த சாம்வேல் பாதிரியார் வீட்டு பூனைதான் அது. சாயங்கால வேலையில்
ஜெபக் கூட்டம் நடந்தது அந்த வீட்டில். ஜெபக்கூட்டம் நடக்கும் போது உருகி உருகி
மன்னிப்பு கேட்கும் வயிறு கனத்த மனிதரின் கால்களுக்கிடையே பூனை ஓடி அவரை ரத்தம்
பரிய பிராண்டி விட்டது. பாதிரியாருக்கு கோபம் பொத்துக்கொண்டுவர சாம்பல் பூனையை
கையிலிருந்த ஜெபக்கட்டையால் அடித்து விலகி ஓடச் செய்தார். பூனை பெருங்கத்தலாக
தன் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு எங்கள் வீட்டு மதில்களில் நடக்க ஆரம்பித்தது.
பாதிரியாரின் ஜெபக்கூட்டதிலிருந்து தப்பி வந்த பூனைக்கு அப்பாவின் கந்தசஷ்டி
கவசம் பாடாய்படுத்தியது. முற்றத்தின் ஆள் நடமாட்டம் பூனைக்கு மிகவும் வேதனையைத்
தந்து சுதந்திரமற்ற ஒரு இருப்பிடத்தில் அல்லாடிக்கொண்டிருந்தது.

வீட்டில் கிடந்த சிதிலமடைந்த பொருள்களால் விடு பூச்சி பல்லி பாம்பு பூரான்
எலிகளின் வசிப்பிடமாகிப் போனது. முற்றத்தில் அப்பளக் கம்பெனிக்காரர்கள் தினம்
ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்கள். நான் படுத்திருந்த பாய்க்கு கீழே பாம்பை
பார்த்தபின் வீடெல்லாம் பாம்பாகி எங்கள் காலடியில் ஊர்வதாகத் தோன்றியது.
வெளியாட்களை வீட்டுக்கு குடிவைத்து வீடு சுத்தமில்லாமல் போனது சாமிக்குப்
பிடிக்காமல் இப்படி பாம்பாக வீட்டில் நெளிகிறது என்று, அப்பா முற்றத்தில்
குடியேறிய வாடகைக்காரர்களை வெளியேற்றினார். வீட்டில் தேவையில்லாமல் கிடந்த
பொருள்களையெல்லாம் தூக்கி வீசியெறிந்தார். வீட்டைச் சுத்தம் செய்யும்போது
இரண்டு பாம்புகள் அப்பாவின் கைக்குச் சிக்காமல் கோவில் பக்கம் ஊர்ந்து
ஒளிந்துகொண்டது. எங்கள் முற்றம் திரும்ப கிடைத்தது. ஆனால் அதில் பழைய சந்தோசம்
இல்லை. அம்மா கதை சொல்வதை நிறுத்திவிட்டது. முன்புபோல் முற்றத்தில்
பாய்விரித்து வரிசையாக படுத்துறங்குவதில்லை. அக்காக்கள் கல்லூரிப் படிப்பினை
முடித்து விட்டு உள் அறையே கதியென்று ஏதாவது கவர்மெண்ட் பரிட்சைக்கு
படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் கல்லூரியில் முதல் வருடம்
சேர்ந்துவிட்டாலும் இன்னும் மனதளவில் அன்பைத் தேடும் சிறுவனாகவே இருந்தேன்.
வீட்டில் எல்லோரும் என்னை ஒரு இளைஞனைப் போலவே நடத்தினார்கள். அப்பா இப்போது
எதற்காகவும் கை ஓங்குவதில்லை. மடியில் சாய்த்துக்கொள்ளும் அம்மாவின் ஸ்பரிசத்தை
இழந்தேன். எல்லோரும் என்னிலிருந்து தூரமாகிப் போனார்கள். பிடி நழுவிப்போன
அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். சமைக்கும்போதெல்லாம் அம்மாவுக்கு
உதவிசெய்து சிநேகிதத்தை வளர்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் பார்வையில்
படவென்றே ஓயாமல் தடுக்கி தடுக்கி விழுந்தேன். நான் ஒவ்வொரு முறையும் தடுக்கி
விழப்போகும் வேளையில் ‘டேய் செந்திலு பாத்துடா’ என்று அம்மா பதறித்
துடிக்கும்போது அம்மாவிற்கு என் மேல்தான் அதிக பாசம் என்று நினைத்துக்கொள்வேன்.
ஒரு நாளும் அம்மாவைவிட்டு பிரிந்திருக்க முடியாது என்று தோன்றியது. ‘ஏண்டா
எப்பப்பாரு அம்மாவை பயமுறுத்துற’ என்று சீனி அண்ணன் என்னைத் திட்டியது.
அண்ணனும் என்னைப் போலவே அம்மாவின் மேல் யாரும் அறியாத தனிப் பிரியத்தை
வைத்திருந்தது.

தினம் தினம் தொடரும் தனது பால்யகால கனவினை அம்மா மறந்துவிட்டது. மகள்களின்
திருமணத்தைப் பற்றி யோசிக்கும் போது பெருமலையைத் தலையில் தூக்கி வைத்திருக்கும்
சுமையுடன் மருகிப் போனது. சாந்தி அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தார்கள்.
மாப்பிள்ளை நல்ல வேலையில் இருந்தார். ஓரளவுக்கு வசதியும் இருந்தது. அக்கா
படித்திருப்பதால் பத்து பவுன் நகை போட்டால் போதும் என்றார்கள். வீட்டில் ஒரு
பொட்டுத் தங்கமில்லை. இந்தக் கல்யாணம் நடக்குமென்று யாருக்குமே
நம்பிக்கையில்லை. சாந்தி அக்கா மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது.
கட்டிக் கொள்வதற்கு நல்ல சேலைகூட இல்லை அப்புறம் நகைக்கு எங்கே போவது. இப்போது
அம்மா பெரியப்பா வீட்டிற்குப் போனது. நகையோடு திரும்பி வந்து சாந்தி அக்கா
கழுத்தில் பத்துபவுன் பெருமானமுள்ள நகையும் மீதி நகையை செல்வி அக்கா
கழுத்திலும் போட்டது. பெரியப்பாவிற்கு கோவில் கட்டி கும்பிடலாம் என்று செல்வி
அக்காவும் நானும் பேசிக் கொண்டோம். எல்லாம் தெரிந்ததைப் போல சீனி அண்ணன்
பேசாமல் இருந்தது. என்னைவிட அண்ணனிடம்தான் அம்மா இன்னும் ரகசியப் பகிர்வினை
கொண்டிருந்தது. அம்மா வாய்திறந்து “இது நம்மளோட நகைதாண்டா” என்றது. ஒன்றும்
புரியாமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். “நம்ம சொத்து கோர்ட்டு கேஸுன்னு
போயிட்டிருந்தப்ப பெரியப்பா ஜவுளிக்கடையிலும் பெருத்த நஷ்டமா போச்சு. தன்னோட
நகைகளை குடுத்தும் பணம் பத்தலன்னு அக்கா எங்கிட்ட வந்து நகையை கொடு தொழில்
விருத்தியானதும் திருப்பி தந்திர்றேன்னு கேட்டுச்சு. நம்ம வீட்லயும் இருக்கிற
பொருளெல்லாம் அழிஞ்சுகிட்டே போகுது அதாவது மிஞ்சட்டுமேன்னுதான் அதை கணக்குல
வைக்காம விட்டுட்டேன். பெரியப்பா நகையை திருப்பி குடுக்கிறேனு சொன்னப்பல்லாம்
வேணான்னுட்டேன். அதுக்கு வட்டி மாதிரிதான் தினம் தினம் சாப்பாட்டுக்கு அரிசி
கொடுத்தாங்க” என்றதும் எனக்கு கண்ணீர் மிதந்து கொண்டு அம்மாவின் மேல் கோபமாக
வந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு பிச்சைக்காரனைப் போல அவங்க வீட்டு வாசற்படியில்
வெட்கம் பிய்த்து தின்னக் கூனிக் குறுகி நின்று அரிசியை வாங்கி
வந்திருக்கிறேன். அதுவும் பெரியப்பா பையனுடன் கூட விளையாடும்போது நான்
ஜெயித்தாலும் அவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால்
‘நாளைக்கு எங்க வீட்டுக்கு அரிசி வாங்க வாடி எங்கப்பாகிட்ட சொல்லிக் குடுக்க
விடாம செய்யிறேன்’ என்பான். அம்மா என்னைப் பழிவாங்கிவிட்டதாக மொட்டை மாடியில்
தனிமையில் அழுதுகிடந்தேன். ‘டேய் இதைப் போய் பெரிய விசயமா நெனைச்சுக்கிட்டு’
என்று எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள். அம்மாவைத் தவிர யாரும் என்  வலி
அறியாதவர்களாக இருந்தார்கள். அம்மா மட்டும் என் கைகளை பிடித்துக் கெஞ்சியது.

சாந்தி அக்காவிற்கு கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே செல்வி
அக்காவிற்கு கல்யாணம் முடிந்தது. அப்பா ஒத்திக்கு கிடந்த தெற்குத் தெரு வீட்டை
விற்று கல்யாணச் செலவுக்கு பயன்படுத்திக்கொண்டார். அக்கா பற்றிய என் கல்யாணக்
கனவில் வந்தது போல அப்பா நடந்துகொள்ளவில்லை. எல்லா வேலையும் உற்சாகமாக அவரே
செய்து முடித்தார். அக்காக்களை வீட்டில் இருக்காமல் வேலைக்கு போகச் சொன்னார்.
சீனி அண்ணனுக்கு சிவகங்கையில் புரொஃபஸர் வேலை கிடைத்தது. நானும் அம்மாவும்
அப்பாவும் வீட்டில் தனித்திருந்தோம். எங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தை
குறைந்து போயிருந்தது. மசக்கையில் மயங்கிக் கொண்டிருந்த சாம்பல் பூனை
மதிலிலிருந்து இறங்கி மெச்சில் தானிய அறையில் ஒதுங்கிக் கொண்டது. ஐந்து பூனைக்
குட்டிகளை பிரசவித்தது சாம்பல் பூனை. அம்மா தானிய அறையில் ஒரு வட்டியில் பாலை
ஊற்றி வைத்தது. சாம்பல் பூனை குட்டிப்பூனையை வாயில் கவ்வி ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் அழகைப் பார்த்து அம்மா மகிழ்ச்சி கொண்டது.
சாம்பல் பூனை பாதிரியார் வீட்டை முழுவதுமாக மறந்து அதன் குட்டிகளுடன் எங்கள்
முற்றத்து வெளியில் நடந்து திரிந்தது. பூனையின் பொருட்டு நானும் அம்மாவும்
பழையபடி சிநேகிதமானோம். சாம்பல் பூனையையும் அதன் குட்டிகளையும் பற்றி வாய்
ஓயாது அம்மா பேசிக் கொண்டிருந்தது. இரண்டு பூனைகளை நாய் கவ்விக்கொண்டு போனதும்
சாம்பல் பூனை வெறிகொண்டு, என்ன செய்தும் வீட்டில் பெருகிக்கிடந்த எலிகளை
துப்புரவாக வீட்டிலிருந்து அடித்துத் துரத்தியது.

கறுப்பி, சிவப்பி, பொன்னி, என்று ஒவ்வொரு பூனைக்கும் ஒரு பெயர் வைத்து நானும்
அம்மாவும் கூப்பிட்டோம். சாம்பல் பூனையை மட்டும் பெரிய பூனை என்றோம். “டேய்
இந்த கறுப்பிக்கு எவ்வளவு திமிரு பாருடா நான் வச்ச சோறை சாப்பிடாம அப்படியே
வச்சிருக்கு, கறுப்பியும் சிவப்பியும் சண்டை போட்டுச்சுடா…” தினமும் நான்
கல்லூரியிலிருந்து திரும்பும்போது இப்படி பூனைகளைப் பற்றிய கதைகளை மட்டுமே
சொல்லிக்கொண்டிருந்தது அம்மா. நானும் பதிலுக்கு “இந்த கறுப்பி அப்படியா
செஞ்சுச்சு? நான் கவனிச்சிக்கிறேன்” என்பேன். பொன்னி யாருக்கும் தெரியாமல்
காணாமல் போன அன்று அம்மா சாப்பிடாமல் தூங்கியது. பிள்ளைப் பாசம் போல பூனை
பாசமும் அம்மாவிற்கு ஒட்டிக் கொண்டது. சேட்டை செய்யும் சிறுவனை கண்ணெதிரிலேயே
வைத்திருப்பது போல கறுப்பி பின்னாடியும் சிவப்பி பின்னாடியும் அம்மா
அலைந்துகொண்டிருந்தது. எங்கம்மாவின் குழந்தைகளைப் போல கறுப்பியும், சிவப்பியும்
அம்மா மடியில் படுத்துறங்கியது. கறுப்பி பாலை மட்டும் விரும்பி சாப்பிடும்.
மற்ற பொருள்களை மோந்து கூட பார்க்காது. சிவப்பி எது கொடுத்தாலும் சாப்பிட்டுக்
கொள்ளும். சாந்தி அக்கா பிரசவத்துக்கு அம்மா போயிருந்த நேரத்தில் கறுப்பியும்
ஒரு நாள் காணாமல் போனாள். அக்கா வீட்டில் இருந்த அம்மாவிடம் இதை நான்
தெரியப்படுத்தவில்லை. வீட்டுக்குத் திரும்பிய அம்மா நான் கறுப்பிக்கு பால்
ஊற்றாததால்தான் அது வீட்டைவிட்டு ஓடிப்போனது என்று என்மேல்
குறைப்பட்டுக்கொண்டது. தான் ஆசைப்படும் அனைத்தும் இப்படி பாதியிலேயே முறிந்து
போகும் துரதிருஷ்டத்தை நினைத்துப் பெருங் கவலை கொண்டது அம்மா.

அண்ணன் தனியாகச் சமைக்க சாப்பிடக் கஷ்டப்படுகிறது என்று அம்மா அண்ணனோடு
சிவகங்கையில் ஒரு வீடெடுத்து தங்கியது. சிவப்பியை மட்டும் தன்னோடு எடுத்துப்
போகலாம் என்ற ஆசை இருந்தாலும் பெரிய பூனை தனியாகக் கஷ்டப்படுமென்று அதை
விட்டுப் போனது. அப்பா எனக்குத் துணையாக வீட்டில் இருந்தார். நானும் அப்பாவும்
சமைத்துச் சாப்பிட்டோம். சிவப்பி ஒரு குழந்தையின் சிணுங்கலைப் போல கத்திக்
கொண்டு வீடெங்கு அம்மாவை தேடியலைந்து துரும்பாகிப் போனது. கடைசி செமஸ்டர்
முடிந்ததும் சிவகங்கைக்கு உடனே வரச்சொல்லி அம்மாவும் அண்ணனும் கடிதம்
எழுதினார்கள். ‘சிவப்பி எப்படியிருக்கு’ என்று அம்மா விசாரித்து எழுதிய
கடிதத்திற்கு, தெருவில் அடிபட்டு சிவப்பி செத்துப்போனது என்று சொல்லாமல்
சிவப்பியும் எங்கேயோ போய்க் காணாமல் போனது என்றேன். அதற்குப் பின் வந்த
கடிதங்களில் மீதமிருந்த பெரிய பூனையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட அம்மா
குறிப்பிடவில்லை.

எலிகளை வேட்டையாடி ஓய்ந்த பெரிய பூனை தானிய சேந்தியில் செத்து கிடந்தது
பற்றியும் அதை புதைத்த அன்று என் மேல் வீசிய பூனை வாசனைப் பற்றியும் அம்மாவிடம்
சொல்லவில்லை. முற்றத்து வீட்டை அடைத்து போட்டுவிட்டு நானும் அப்பாவும்
சிவகங்கைக்கு போன பின்பும் அம்மா ‘பெரிய பூனை எப்படியிருக்கு’ என்று
கேட்கவில்லை. அதற்கு மேல் பூனையின் தொடர்பாக எந்த கெட்ட செய்தியையும் அம்மா
அறிய விரும்பாமல் இருந்தது. அப்பாதான் போகிற போக்கில் ‘நம்ம பெரிய பூனையும்
செத்து போச்சில்ல’ என்றார். அம்மா எதுவுமே காதில் விழாதது மாதிரி நடந்து
கொண்டது. நானும், அம்மாவும், செல்வி அக்காவும், சாந்தி அக்காவும், சீனி
அண்ணனும் சேர்ந்து படுத்துறங்கிய முற்றம் இன்று பூனைகளும் இல்லாமல் யாருமற்று
வெறுமையாகி தனித்துக் கிடக்கிறது என்பதை அம்மாவுக்கு எப்படிச் சொல்வது.

Print Friendly, PDF & Email

1 thought on “பூனைகள் இல்லாத வீடு

  1. மிக நல்ல கதை . அருமையான அங்கதச்சுவை வாழ்த்துக்கள் .நேரமிருந்தால் எனது கதையை வாசித்து .விமர்சியுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *