கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 6,636 
 

மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.

எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில்.

பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள் தூசு தட்டப்படும், செவிமூடும் மஃப்ளர்கள் தேடியெடுக்கப்படும், அல்லது, புதிதாக வாங்கப்படும், அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகாசனமிங் என்று சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தவர்கள் அலாரத்தை ஒருமணிநேரம் தள்ளிவைத்துச் சோம்பேறிகளாவார்கள்.

நெடுங்காலமாக இவ்வூரில் வாழ்கிறவர்கள், ‘பெங்களூரு முன்னைப்போல இல்லை’ என்று எப்பப்பார் புலம்புகிறார்கள். ‘முன்னெல்லாம் எப்படிக் குளிரும் தெரியுமா?’ என்று நினைவுகளில் சிலிர்க்கிறார்கள்.

நான் இவ்வூருக்கு வந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. பதினெட்டு வருடங்களாக இதே வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்மட்டும் அதிகமாகிறதேயன்றிக் குறைவதில்லை.

அப்படியானால், இவர்கள் ஒப்பிட்டுச் சலித்துக்கொள்ளும் ‘அந்தக்காலப் பெங்களூர் குளிர்’ என்பது உண்மையில் எந்தக்காலம்? ஒருவேளை, இவர்களெல்லாம் பனியுகத்தில் வாழ்ந்தவர்களாயிருப்பார்களோ?

நம்மால் இந்தக்குளிரையே தாங்கமுடிவதில்லை. குறிப்பாக, உதட்டைச்சுற்றிச் சிறு ஊசிகளால் குத்தினாற்போல் அது நிகழ்த்தும் தாக்குதலை.

நல்லவேளையாக, இந்தப் பனித்தாக்குதலைச் சமாளிக்க யாரோ ஒரு புண்ணியவான் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பூச்சைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும் உதட்டுப்பிரதேசங்கள் இந்தப் பூச்சைப் பூசியதும் மந்திரம் போட்டாற்போல் சில விநாடிகளில் குளிர்ந்து இயல்பாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த தாக்குதல் வரும்வரை பிரச்னையில்லை.

குளிர்காலம் தொடங்கியதும் எங்கள் வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கிக்குவித்துவிடுவோம். மேசையிலொன்று, குளியலறையிலொன்று, பெண்டிர்தம் கைப்பைகளில் ஒவ்வொன்று, அலுவலகத்திலொன்று, அங்கு செல்வதற்கான முதுகுப்பையிலொன்று என எங்குநோக்கினும் அவ்வெண்ணிற அதிசயம் இருக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த புண்ணியவானின் சீடர்கள் அதை ஐந்து ரூபாய்க்குச் சிறு டப்பாக்களில் விற்கிறார்கள். ஆகவே, ஒரே நேரத்தில் ஏழெட்டை வாங்கிவைக்கலாம், தொலைந்தாலும் பெரிய இழப்பில்லை, இன்னொன்றை எடுத்துப் பூசலாம்.

இந்த ஐந்து ரூபாய் டப்பாக்கள் சுலபத்தில் தீர்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் தெரிவிப்பதுபோல் இவை பூசப்பூசப் பொங்கிவருவதுபோலோர் உணர்வு. வற்றாத ஜீவநதிகளைப்போல் அந்த டப்பாவின் அடிப்பகுதியை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எப்போதாவது அதிசயமாக ஒரு டப்பா தீர்ந்துபோவதுண்டு, பெரும்பாலும் அதற்குள் அது தொலைந்துவிடும்.

ஐந்து ரூபாய்க்கு இப்படியொரு பொருளைத் தயாரித்துப் பொட்டலம்கட்டிக் கடைகளுக்குக் கொண்டுவந்து விற்கமுடிகிறதென்றால் அதன் அடிப்படை விலை என்னவாக இருக்கும்? அந்த அற்ப விலையில் அது இப்படியோர் அதிசயத் தீர்வைத் தருகிறதென்றால் அதைக் கண்டுபிடித்தவன் எப்பேர்ப்பட்ட மாமேதை!

ஆனால், இப்படி உடனடி, நிச்சயப் பலனைத் தருகிறது என்பதற்காக அதைப் பூசிக்கொண்டே இருத்தல் சரிதானா? ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்? உதட்டுப்பூச்சுதானெனினும் உணவுப்பொருட்களோடு உள்ளே சென்றுவிடாதா?

இதைப்பற்றியும் நான் இணையத்தில் தேடியிருக்கிறேன். பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தக் கெடுதலும் வராதாம். அதை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால்கூட எந்தப் பிரச்னையும் ஆகாதாம். பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்தவர் அப்படிச் சாப்பிட்டு நெடுநாள் வாழ்ந்தாராம்.

வராதாம், ஆகாதாம், வாழ்ந்தாராம் என ‘ஆம்’ விகுதியில் நிறைவடையும் வாக்கியங்களை வாசிப்பதால் எந்த நிரந்தர உறுதியும் கிடைப்பதில்லை. எனினும், அவைதரும் தாற்காலிக ஆசுவாசம் அலாதியானது.

எப்படியோ, பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நம்பத்தான் வேண்டும்; காரணம், குளிர்காலத்து உதட்டெரிச்சலுக்கு அதைவிட்டால் வேறு நம்பகமான தீர்வில்லை.

இயற்கைமுறையில் இதற்கு வெண்ணெய்யைப் பூசலாம், எண்ணெய்யைப் பூசலாம் என்பார்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் ஐந்து ரூபாய்க்குச் சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் சவுகர்யமாகக் கிடைக்குமா?

ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெண்ணிற ஜெல்லியின் அடிமையாதல் சிறப்பானதல்ல, மோசமானதுமல்ல. ஒரே பிரச்னை, அதை மறந்துவிட்டு எங்கேயாவது வெளியே வந்து சிக்கிக்கொள்ளும்போது உதட்டுத்தாக்குதல் தொடங்கினால்தான்.

இன்றைக்கு மாரத்தஹள்ளியில் ஒரு முக்கியமான கூட்டம். அதற்காக அவசரமாகக் கிளம்பிவந்ததில் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டுவர மறந்துவிட்டேன். அதைத் தெரிந்துகொண்டாற்போல் இந்த உதட்டெரிச்சல் தொடங்கிவிட்டது.

ஒருபக்கம் சூரியன், இன்னொருபக்கம் குளிர் குறையாத காற்று, இரண்டுமே உதட்டெரிச்சலை அதிகப்படுத்தின. அதைத் தொட்டால் இன்னும் எரிந்தது.

பக்கத்தில் மருந்துக்கடை எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதைத் தேடுவதற்கு நேரமில்லை. உடனே பேருந்தைப் பிடித்தாகவேண்டும்.

யோசித்துக்கொண்டிருந்தபோதே பேருந்து வந்துவிட்டது. சட்டென்று ஏறிக்கொண்டேன்.

ஒரே நிம்மதி, இன்றைக்கு அவ்வளவாகக் கூட்டமில்லை. இன்னும் ஒன்றரைமணிநேரம் செல்லவேண்டியிருப்பதால், கொஞ்சம் காற்றுவாங்கியபடி உட்காரலாம்.

மெதுவாக ஒரு சன்னலோர இருக்கையை நெருங்கினேன். உட்கார்ந்து எரியும் உதட்டைத் தடவியபடி எதிர் இருக்கையைப் பார்த்தேன், திடுக்கிட்டேன்.

அங்கே காலியாக இருந்த இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெட்ரோலியம் ஜெல்லி டப்பா.

நாங்கள் வழக்கமாக வாங்குகிற அதே ஐந்து ரூபாய் டப்பாதான். இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் கிடந்தது.

அதைக் கிடந்தது என்று சொல்வதுகூடச் சரியில்லை. யாரோ அதை அந்த இடத்தில் வைத்தாற்போல் அழகாக அமர்ந்திருந்தது.

மருந்துக்கடையில் கிடைத்தாலும் பெட்ரோலியம் ஜெல்லியை மருந்தாகக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அநேகமாக FMCG எனப்படும் விரைவாக விற்பனையாகும் பயனாளர் பொருட்களின் பட்டியலில்தான் அது இடம்பெறும் என்பது என் ஊகம்.

இந்தியாவில் பல லட்சம் FMCG பொருட்கள் விற்பனையாகின்றன, அவற்றில் சரியாக இந்த பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி உதட்டெரிச்சலோடு இருக்கும் என் எதிர் இருக்கையில் கொண்டுவந்து வைத்தது யார்? இதற்கான நிகழ்தகவைக் கணக்கிட்டால் புள்ளிவைத்து எத்தனை பூஜ்ஜியங்களை எழுதவேண்டியிருக்கும்?

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டு கடவுளே இந்த டப்பாவை அனுப்பினார் என்று நினைத்துக்கொண்டுவிடுவதில் தயக்கமில்லைதான். அதேசமயம் பக்தர்களின் உதட்டெரிச்சலையெல்லாம் கவனிக்குமளவு உம்மாச்சிக்கு நேரமிருக்குமா என்கிற சந்தேகமும் வருகிறது.

நடத்துநர் வந்தார், என்னிடம் சில்லறையைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அந்த இரு இருக்கைகளுக்கு யாரும் வரவில்லை.

நான் உதட்டெரிச்சலோடு அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எனக்குத்தானா? எடுத்துக்கொண்டுவிடலாமா? இதை மறந்துவிட்டுச்சென்றவர் யார்? ஐந்து ரூபாய் டப்பாவைத் தேடி இன்னொருமுறை இங்கே வருவாரா? நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை! ஒன்றையேனும் தேடியிருக்கிறேனா? அவற்றில் ஒன்றுதான் சுற்றி எனக்கே வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் என்ன தவறு?

ஆனால், யாருடைய உதட்டுப்பூச்சையோ நாம் பூசிக்கொள்வது சுகாதாரம்தானா? பெண்கள் லிப்ஸ்டிக்கைப் பகிர்ந்துகொள்வதுண்டா?

போக்குவரத்தில்லாத சாலைகளில் பேருந்து அதிவேகமாக விரைந்தது. எந்த நிறுத்தத்திலும் அதிகப்பேர் ஏறவில்லை. என்னெதிரில் யாரும் வந்து அமரவில்லை.

நேரம் செல்லச்செல்ல, என்னுடைய உதட்டெரிச்சல் அதிகரித்தது. சட்டென்று அந்த டப்பாவை எடுத்துப் பூசிக்கொண்டுவிடவேண்டும்போல் கைகள் பரபரத்தன. நாவால் உதடுகளை ஈரப்படுத்திச் சமாளிக்க முயன்றேன். எரிச்சல் இன்னும் கூடியது.

நான் மறுபடி அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒருவேளை, இது காலி டப்பாவாக இருக்குமோ? குப்பைத்தொட்டிக்குப்போகவேண்டிய ஒரு பொருளை எதிரில் வைத்துக்கொண்டு தத்துவ நியாயங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனோ?

ரயில் நிலையங்களில் ‘ஆளில்லாத பொருட்களைத் தொடவேண்டாம்’ என்று அறிவிப்பு வைத்திருப்பார்கள். அது பேருந்துகளுக்கும் பொருந்துமா? இந்தச் சிறு டப்பாவுக்குள் வெடிகுண்டொன்றைப் பொருத்துவது சாத்தியமா?

யோசிக்க யோசிக்க எனக்கே என்மீது எரிச்சல் அதிகரித்தது. தேவைப்படும் பொருள் ஏதோ அதிசயத்தால் எதிரில் வந்து உட்கார்ந்திருக்கிறது, குறைந்தபட்சம் அதைத் திறந்துபார்த்தால் என்னவாம்? நெடுஞ்சாலையில் கழிப்பறை தென்படாதபோது சாலையோரமாகச் சிறுநீர் கழிப்பதைப்போல்தானே இதுவும்?

இந்த டப்பாவைத் தொலைத்த ஆள் இங்கேயே உட்கார்ந்திருக்கக்கூடாதோ, அல்லது, இதைத் தேடிக்கொண்டு இங்கே வரக்கூடாதோ!

அப்படி யாராவது வந்தால், ‘இதையா தேடறீங்க?’ என்று அவர்களிடம் எடுத்துத்தந்துவிட்டு ஒரு ‘நன்றி’யை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் அவர்களிடமே கொஞ்சம் கடன்வாங்கிப் பூசிக்கொள்ளலாம்.

நான் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். சிலர் மொபைல் திரைகளில் மூழ்கியிருந்தார்கள். சிலர் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடத்துநரும் ஓட்டுநரும் யாரைப்பற்றியோ கிசுகிசுவில் மும்முரம்.

என்னுடைய நிறுத்தம் வரப்போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான்.

ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தேன். சரியாக அந்நிறுத்தத்துக்குப்பின்னே ஒரு மருந்துக்கடை தெரிந்தது. உள்ளே ஆளிருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

சட்டென்று எழுந்துகொண்டேன். பேருந்து வேகம் குறையும்போதே குதித்து இறங்கி அந்தக் கடையை நோக்கி விரைந்தேன்.

– 29 12 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *