Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புஷ்பாக்காவின் புருஷன்

 

இன்றைக்கு இழுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதுபோல் தோன்றியது. அம்மா கண்களை மூடிக்கிடந்தாள். மார்புக்கூடு சீரில்லாமல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது. சற்று நேரம் அசைவற்றுக் கிடக்க, சந்தேகத்துடன் நெருங்கியபோது பெருங்கேவலுடன் எலும்புக்கூட்டுத் தேகம் திடுக்கென்று தூக்கிப்போட, அதிர்ந்து விலகினாள்.

போனமுறை வந்திருந்தபோதும் படுக்கையில்தான் இருந்தாள் என்றாலும் இத்தனை மோசமில்லை.சுயநினைவு இருந்தது. புஷ்பாக்கா கொடுத்த கஞ்சியைப் புகட்டியபோது மெல்ல மெல்ல சிரமத்துடனே ஏற்றுக்கொண்டாள். கைகளைப் பிடித்துக்கொண்டு போகாதே என்று கெஞ்சினாள். மருமகனையும், பேரனையும் சாவதற்குள் ஒருமுறை பார்க்கவேண்டும் என்று குரல்கம்மக் கேட்டுக்கொண்டாள்.

புஷ்பாக்கா கூடகேட்டாள், “ஏன் கமலி, இதுதான் வீம்பு புடிக்கிதுன்னா நீயும் அப்புடியே வுட்டுடுறதா? மல்லுக்கட்டிக் கூட்டிட்டுப் போவேண்டியதுதானே? உன் வூட்டுக்கார் எதுனா சொல்லுவாரா?”

“ஐயோ…. நீங்க வேறக்கா…. அவர்தான் அத்தையை கூட்டிகிட்டு வா… அவுங்க தனியா கஷ்டப்படவேணாம், என்னையும் ஒரு புள்ளயா நெனச்சிக்க சொல்லுன்னு சொல்றார். எங்க மாமியார் கூட நான் கிளம்பும்போதெல்லாம் உங்கம்மாவை இந்த நடையாவது கூட்டிட்டு வான்னுதான் சொல்லி அனுப்புறாங்க.. அம்மா வந்தா தானே? அதுக்கு பொண்ணு வீட்டுல வந்து தங்க கெளரவம் தடுக்குது. நான் என்ன பண்ணட்டும்?”

“அது சொல்லும், கெழவிக்கு வயசாயிடுச்சில்ல…. புத்தி கெட்டுப்போச்சு…. ”

“அம்மா…. எங்க வீட்டுக்கு வரியா….? பொண்ணு வீட்டுக்கு வரதுன்னா கெளரவம் கொறஞ்சுபோயிடும்னு சொல்லுவியே… நீயாவது வரதாவது? மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு வசனம் பேசுவியே…. வரியா என்ன?”

அம்மா கண்களை இடுங்கிக்கொண்டு மெலிதாய்ப் புன்னகைத்தாள். கமலிக்குப் படபடவென்று வந்தது. எங்கே அம்மா சம்மதம் சொல்லிவிடுவாளோவென்று பயம் அடிவயிற்றைக் கிண்ட, அவசரமாய்க் கிளம்பியபோதுதான் கையைப் பிடித்துக்கொண்டு இன்னும் ஒரு நாள் என்னோடு இரேன் என்று கெஞ்சினாள். அந்தவேலை இருக்கிறது, இந்தவேலை இருக்கிறது என்று என்னென்னவோ சாக்குபோக்கு சொல்லி, விட்டால் போதுமென்று அம்மாவின் கையை உருவிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

இந்த தடவையும் வழக்கம்போலவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுதான் அனுப்பப்பட்டாள் கமலி.

“இங்க பாரு…… போனோமா, வந்தோமான்னு இருக்கணும், ஆத்தாக்காரியக் கையோட கூட்டிகிட்டு வர நெனப்போட போனா அங்கயே இருந்துக்கோ, இங்கே திரும்பி வரவேணாம், புள்ளய நாங்க வளத்துக்குறோம்”

“அவங்களை இங்க கூட்டிவரல…. அவங்க ரொம்ப முடியாம இருக்காங்க, இன்னும் எத்தன நாளோ? அதுவரைக்கும் நான் அவங்களோட இருந்து பாத்துக்கறேனே…”

“ஓ… தாராளமா இருந்து பாத்துக்க…. போறதுக்கு முன்னாடி ஒரு விடுதலைப் பத்திரம் எழுதிக்குடுத்துட்டுப் போயிடு…”

“அத்தே…….. ஒரு வாரமாவது கூட இருந்து பாத்துக்கிறேனே… யாரோ ஒருத்தி… பாவம் பாத்து எங்கம்மாவுக்கு கஞ்சித்தண்ணி ஊத்திகிட்டு இருக்கா… பெத்த பொண்ணு நான் வச்சிருந்து பாக்கக் குடுத்துவக்கல……”

அத்தை எதுவும் சொல்லுமுன் அவள் பெத்த பிள்ளை பாய்ந்தான்,

“ஏண்டி, எங்க மூஞ்சில இளிச்சவாயின்னு எங்கயாச்சும் எழுதி ஒட்டியிருக்கா? சாவுற காலத்துல கெழவி செலவு வச்சிடப்போறான்னு உன் அண்ணனும் அண்ணியும் ரொம்ப சாமர்த்தியமா வீட்ட வுட்டு தொரத்தியடிச்சிட்டங்க… கருமாதி பண்ண நான்தான் கெடச்சனா? நீயும் அப்பப்ப போவலன்னா அந்தப் பொம்பள…யாரு…ஆங்… அதான் புஷ்பா….. கெழவியக் கொண்டுவந்து இங்க தள்ளிவிட்டுவாளேன்னுதான் மாசத்துக்கு ஒருதடவ போய் தலையக் காட்டிட்டு வரதுக்கு சம்மதிச்சிருக்கேன். போன கையோட திரும்பணும் ஆமா…. ”

சே! என்ன மனிதர்கள். இவர்களைச் சொல்லி என்ன குற்றம்? அங்கே ஒருவன் பெண்டாட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு அம்மாவைத் தெருவுக்குத் துரத்திவிட்டான்! இங்கே ஒருவன் அம்மாவின் போதனை கேட்டு பெண்டாட்டியைத் துரத்த முனைகிறான். இரண்டு விளிம்புநிலை ஆண்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு சொல்லமுடியாத அவஸ்தையில் இவள்.

தன் வேதனை சொல்லி அழவும் முடியாத துக்கம் தொண்டையை அடைத்தது. புருஷனும் மாமியாரும் மகா உத்தமர்கள் என்று அம்மாவின் மனம் குளிர என்றோ புளுகிய பொய்யை அடித்தளமாய்க் கொண்டு மளமளவென்று பலமாடிக்கட்டடம் எழுப்பியாகிவிட்டது. இனி அடித்தளத்தை அசைத்தால் ஆபத்துதான். அத்தனைக் கல்லும் இவள் தலையில்தான் விழும்.

“ஏன், கமலி, இதை இப்படியேவா வுட்டுப்போவப்போற? இன்னிக்கோ நாளைக்கோன்னு கெடக்கு, எதுன்னாச்சும் ஆச்சின்னா என்னா பண்ணுறது? நீ இன்னொருக்கா வரமுடியுமா? இருந்து காரியத்த முடிச்சிட்டுப் போயிடு.”

சொரேரென்ற போதிலும் புஷ்பாக்கா சொல்வதிலும் நியாயம் தெரிந்தது. எத்தனை நாள்தான் அம்மாவுக்கு அவள் கஞ்சி ஊற்றிக்கொண்டிருப்பாள்? குடிகாரப் புருஷனாக இருந்தாலும் அவளுக்கும் குடும்பம், பிள்ளைகுட்டி இருக்கிறதே!

புஷ்பாக்கா வீட்டுத் திண்ணையில் தட்டி மறைப்புதான் அம்மாவின் ஜாகை. மனதிலும் உடலிலும் காயம்பட்ட அதிச்சியால் மனம் பேதலித்துத் தெருவில் கிடந்தவளை புஷ்பாக்காதான் அழைத்துவந்து அரவணைத்திருக்கிறாள்.. அக்காவால்தான் அம்மா மறுபிறவி எடுத்திருக்கிறாள். அம்மா சொல்லி புஷ்பாக்கா ஒருநாள் இவள் வீடுதேடிவந்து விவரம் சொல்லிப்போனாள். கமலி வந்து பார்த்து தன் கையிலிருந்த இருநூறு ரூபாயைக்கொடுக்க, புஷ்பாக்கா வாங்கவே இல்லை.

“தே… இது குடிக்கிற ஒரு வா கஞ்சிக்கு என்ன காசு கணக்குப் பாக்குற? அப்பப்போ வந்து போயிட்டிரு…. அதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.”

இப்படிதான் சாதாரணமாக அன்று புஷ்பாக்கா சொன்னாள். எத்தனை மனிதாபிமானம்? ஓட்டைக்குடிசையில் ஒருவேளை உணவில் உயிர்வாழும் இவளுக்கு இருக்கும் இரக்கம் அண்ணனுக்கோ…. அண்ணிக்கோ…. தன் புருஷனுக்கோ…. மாமியாருக்கோ…. ஏன் இல்லாமல் போனது?

சட்டென்று ஏதோ நினைத்தவளாக புஷ்பாக்கா கேட்டாள்,

“ஏன் கமலி, கொள்ளி வைக்க உங்கண்ணனக் கூப்புடணுமில்ல?”

“அக்கா, சும்மா இருக்கா”

“ப்ச், சும்மா எப்புடி இருக்கறது? எல்லாத்தையும் முன்னாடியே யோசிச்சிக்கோ, அப்புறம் கடைசி நேரத்தில நீ பாட்டுக்கு கால்மாட்டில உக்காந்துகிட்டு ஒப்பாரி வச்சிகிட்டு கெடந்தா மத்த வேலையெல்லாம் யாரு பாப்பா? உங்கண்ணன் வீட்டு வெலாசம் கூட எனக்குத் தெரியாது”

உண்மை, அத்தனையும் உண்மை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மனம் இடம் கொடுக்க மறுத்தது. குற்றுயிராய் ஒருத்தியை பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு அவள் காதுபட இதென்ன பேச்சு?

கமலி கண்கள் கலங்க, “அக்கா, சும்மா இருக்கா…” என்றாள்.

“என்ன நீ? எல்லாத்துக்கும் சும்மா இரு சும்மா இருன்னு? சும்மா இருந்தா வேலையாவுமா? உன் அண்ணிக்காரி உன் ஆத்தாளை வெளக்குமாத்தால அடிச்சி வெளியில தொரத்துனப்போ உன் அண்ணங்காரன் சும்மா இருந்ததாலதான் இன்னைக்கு இந்தக் கெழவி அனாதையாக் கெடந்து தவிச்சிட்டிருக்கு. நீ…. ஆடிக்கொருக்கா, அமாவாசைக்கொருக்கா வந்து பாத்துட்டுப் போற… கேட்டா நேரம் ஒழிய மாட்டேங்குதுன்னு சொல்ற… என்னமோ போ… இவ்வளவு ஆனபின்னாடியும் இந்தக்கெழவி உசிரோட இருக்குன்னா அது உனக்கோசரம்தான். ஏதோ போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியமும் பண்ணியிருக்கும்போல… அதான் அந்தப் படுபாவியப் பெத்த வயித்துல உன்னையும் பெத்திருக்கு….”

பேசியபடியே அம்மாவின் முகத்தமர்ந்த ஈயைக் கையால் ஓட்டினாள்.

“தே…. அங்க என்னா அடுப்படியில கொடஞ்சிகிட்டு இருக்க? ஒரு பைசா இல்ல எங்கிட்ட…. போய் ஜோலியப்பாரு….”

அக்கா திண்ணையிலிருந்தபடியே வீட்டுக்குள் பார்த்துக் கத்தினாள்.

“என்னாச்சுக்கா?”

“ஒண்ணுமில்ல, என் வூட்டுக்காருதான், எங்கயாச்சும் என்னமாவுது கெடைக்கிதான்னு ஆராச்சி பண்ணிகிட்டிருக்கு”

அக்கா சிரிக்க, கமலி அதிசயமாய்ப் பார்த்தாள்.புஷ்பாக்காவின் முகத்தில் எப்போதும் ஒரு மலர்ச்சி இருக்கும். பார்ப்பவர்களையும் அது பக்கென பற்றிக்கொள்ளும். அம்மாவுக்கு இவளைப் பார்த்தால் எப்படியோ…. அப்படிதான் இவளுக்கு புஷ்பாக்காவைப் பார்த்தாலும். ஆனால் அவள் புருஷனைத் துளியும் பிடிக்காது. சம்பாதிப்பதில் பாதியைக் குடித்தே அழித்துவிடுவான். அவன் பார்வையில் எப்போதும் போதை வழியும். ஆனால் புஷ்பாக்கா ஒருநாளும் அவனைக் குறைத்து மதிப்பிட்டதில்லை.

கமலிக்கு வியப்பாயிருந்தது. எல்லாப் பெண்களுமே இப்படிதானோ? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நினைத்துக்கொண்டு….? இல்லையே….. அண்ணி அப்படி இல்லையே….. அவளைப் பெண்ணினத்திலும் சேர்க்கமுடியுமாவென்று சந்தேகம் எழும்வகையில் நடந்துகொண்டாளே…..

புஷ்பாக்கா திடீரென்று பதட்டமானாள்.

“ஏத்தா…. கமலி….. இப்புடி இழுக்குதே…. இன்னிக்கு ராத்திரிக்குள்ள போயிடும்னு நெனக்கிறேன்த்தா……….”

கமலி தாயை நெருங்கியமர்ந்து சுருக்கங்கள் நிறைந்த மெலிந்த கரத்தை எடுத்து கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள். கண்ணீர் வழிந்து வறண்ட கரங்களை நனைத்தது. ஒற்றைவிரல் மட்டும் துடித்தது. அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் துடித்ததோ? தெரியவில்லை.

“அம்மா… உன் பேரனப் பாக்கணும்னு சொன்னியே…. போட்டோ கொண்டுவந்திருக்கேன்….. கண்ண முழிச்சிப் பாரும்மா…..”

அம்மா கண்ணைத் திறக்கவேயில்லை. தன் இறுதிப் பயணத்துக்கு தயாராகிவிட்டவளைப் போல் உலகபந்தங்களிலிருந்து விடுபட்டுக்கிடந்தாள். அம்மா இறந்துவிட்டால்…. ?

கமலி அதை நினைத்தே பார்க்கவில்லை. கையில் சுத்தமாய்ப் பணமில்லை. கழுத்தில் தாலிச்செயினைத்தவிர வேறு நகையும் இல்லை. கடவுளே…. என் மனமும் மற்றவர்களைப் போல் கல்லாயிருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாமே….. இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? சுயநலத்துக்காக பெற்றவளையே மூன்றாமவரின் பாதுகாப்பில் இலவசமாய் விட்டுவைத்திருக்கிறேனே…. உண்மையான பாசமிருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்.

கணவனுடன் சண்டை போட்டாவது தாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வைத்திருக்கவேண்டும். செய்யவில்லையே…. கடமைக்கு வந்து பார்த்துப் போவதுபோல் அல்லவா வருகிறேன்?

புஷ்பாக்காவுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை, முன்பெல்லாம் அம்மாவைத் தன்னோடு அழைத்துபோகச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தாள். இப்போதோ அம்மாவின் இறுதியாத்திரை பற்றிப் பேசி கலங்கடிக்கிறாள். மனம் புழுங்கியபடியே கமலி திண்ணையைவிட்டு வெளியில் வந்தாள்.

“கமலீ….. யாத்…..தே…. கமலீ…. அம்மா போயிட்டுதுடீ…. யம்மா…. ஐயோ…. என்னயப் பெத்தவளே…..”

புஷ்பாக்கா ஓலமிட்டாள். தெருசனம் கூடத்தொடங்கியது. யார் யாரோ என்னென்னவோ சொல்லி ஒப்பாரி வைத்தழுதார்கள். கமலி உறைந்துபோய் நின்றிருந்தாள். கல்லாய்ச் சமைந்திருந்தவளின் தோளைத் தொட்டு யாரோ அழும்மா அழும்மா என்று அழுத்தினார்கள்.

அம்மாவை இழந்த துக்கத்திலும் அவள் காரியத்தை எப்படி நடத்துவது என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது. இரண்டு பிள்ளைகளைப் பெத்து ஒற்றையாளாய் அவர்களை வளர்த்து ஆளாக்கியவளுக்கு நேர்ந்த இறுதிகதியைப் பார்த்து மனம் ஊமையாய் அழுதது. அநாதைப்பிணமாக அம்மா அவமானப்படுவதைப் பார்க்க மனம் துணியவில்லை. இப்படியே அம்மாவை விட்டுவிட்டு எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று தோன்றிய நொடியில்….புஷ்பாக்கா காதோரம் வந்து சொன்னாள்.

“கமலீ…. எதை நெனச்சும் கவலப்படாத…. எனக்கு உன் நெலம நல்லாத்தெரியும்…. என் வூட்டுக்காரு பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு……. நீ தெகிரியமா இரு…. உன் அண்ணன் வெலாசமும், உன் வூட்டு வெலாசமும் சொல்லு, அவரு தகவல் அனுப்பிடுவாரு…..”

கமலி துக்கத்தில் துவண்டுபோனாள். கண்ணீர் பெருக புஷ்பாக்காவை ஏறிட்டாள். அக்கா அழுதழுது முகம் வீங்கியிருந்தாள்.

அம்மா எத்தனைப் புண்ணியவதி! சாகும் முன் சொந்தமில்லா சொந்தங்களைச் சம்பாதித்திருக்கிறாளே…..

புஷ்பாக்காவின் புருஷனைப் பார்த்தாள். சற்றுமுன் குடிக்கக் காசுகிடைக்குமாவென அல்லாடியவன், இறுகிய முகத்துடன் ஒரு மகனின் கடமையுணர்வுடன் வாசலில் பந்தல் அமைத்துக்கொண்டிருந்தான். குடிகாரனாயிருந்தாலும் மனிதனாக இருக்கிறான். ஆம், மனிதன்! மகனின் கையால் கொள்ளி வாங்குவதைவிடவும் ஒரு மனிதனின் கையால் கொள்ளி வாங்கவே அம்மாவும் விரும்புவாள். அம்மா…. இந்த முடிவில் உனக்குச் சம்மதம்தானே…..? அம்மா….. அம்மா?

அப்போதுதான் நினைவுவந்தவளாய்……..

“அம்மா…ஆ…ஆ….ஆ…….”

அலறியபடியே ஓடிப்போய் அம்மாவின் காலைக்கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள்.

- பெப்ரவரி 2011 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)