புவனாவும், புத்தகக் கண்காட்சியும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 10,008 
 

முத்துசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார். அவருடைய ஒரே மகள் புவனாவும், மாப்பிள்ளை அறிவுச் செல்வனும் திருப்பூரில் ஆசிரியர்களாகப் பணி புரிகிறார்கள்.

ஞாயிறு தவறாமல் புவனா அப்பாவைப் பார்க்க கோவை வந்து விடுவாள். அப்பா செல்லம்! வந்தவுடன் அப்பாவிடம் ஏதாவது குறை சொல்லி புலம்புவது வழக்கம்! முத்துசாமி ஒவ்வொரு வாரமும் ஏதாவது சமாதானம் சொல்லி திங்கட்கிழமை காலையில் மகளைத் திருப்பூர் அனுப்பி வைப்பார்.

ஒரு வாரம் வீட்டைக் கவனித்து விட்டு வேலைக்குப் போவது சிரமாக இருப்பதால், வீட்டு வேலைக்கு ஆள் வைத்தால், ஒருத்தி கூட ஒழுங்காக வருவதில்லை. அடிக்கடி லீவு போடுகிறார்கள் என்று புலம்புவாள்.

அடுத்த வாரம் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள், பொறாமையால் புரளி பேசுகிறார்கள் என்று வேதனைப் படுவாள்

அவளுக்கு என்று கவலைப் பட தினசரி ஏதாவது காரணம் கிடைத்து விடும். இந்த வாரம் வந்த பொழுது, “ அப்பா!…உங்க மாப்பிள்ளை ரொம்ப வீண் செலவு செய்கிறார்!….” என்று வருத்தப் பட்டாள்.

“ அப்படி என்னம்மா செய்தார்?…”

“ சென்னைக்குப் புத்தகப் கண்காட்சிக்குப் போனவர் மூவாயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்!..அந்தக் காசுக்கு வீட்டுக்கு ஒரு நல்ல சாமான் வாங்கிப் போட்டிருந்தாலாவது உபயோகமாக இருந்திருக்கும்!..”

“ அம்மா… ஒரு ஆசிரியராக இருக்கும் உனக்கு இது கூடத் தெரியவில்லையே! புத்தகத்திற்கு செலவு செய்வதெல்லாம் ஒரு முதலீடு மாதிரி!…இது கூட உனக்கு குறையா படுதா?..உன்னை அடுத்த வாரம் ஒரு நல்ல டாக்டரிடம் கூட்டிப் போய் காட்ட வேண்டியது தான்! .நீ ஒவ்வொரு வாரமும் எதையாவது சொல்லி கவலைப் படுகிறாய்…நீ டீச்சர் உத்தியோகம் தானே பார்க்கிறே?..போன வாரம் தானே ரிசல்ட் வந்தது…..உன் ஸ்கூலில் 100 க்கு 100 மார்க் வாங்கிற பையன்கள் எத்தனை பேர் இருந்தாங்க?…”

“ இந்தக் காலத்து பசங்க எங்கப்பா நூற்றுக்கு நூறு வாங்கறாங்க…ஏதோ இரண்டு பையன்கள் வாங்கினாங்க!….”

“ 100 க்கு 100 எல்லோராலும் வாங்க முடியாது.…40, 50 மார்க் வாங்கிற பையன்கள் நிறைய இருப்பாங்க!…..அது போல் தான் மனித வாழ்க்கையும்! எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது!…வாழ்க்கையில் 30, 40 மார்க் வாங்குபவர்கள் தான் நிறைய இருக்கிறாங்க!.. உனக்கு வாழ்க்கையில் 95 மார்க் கிடைச்சிருக்கு!..நீ அதற்காக ரொம்ப சந்தோஷப் பட வேண்டும்! ஆனால் நீ அப்படி இல்லே! கவலைகளைத் தேடித் தேடி பிடித்து கவலைப்பட பழகி விட்டே! அது ரொம்பத் தப்பும்மா!……..சந்தோஷம் என்பது வெளியே இல்லை!

…..அது நம்ம மனசுக்குள்ளே தான் இருக்கு! அதை கண்ட இடத்திலே தேடாதே! மனசுக்குள்ளே இருக்கிற சந்தோஷத்தை நீ வேண்டும் என்று நெனைச்சா நிச்சயம் கிடைக்கும்! அதை விட்டு விட்டு இனியாவது அது இல்லாத இடத்தில் அதை தேடாதே!. அடுத்த வாரம் எனக்குத் தெரிந்த நல்ல மனோ தத்துவ டாக்டர் இருக்கிறார்…அவரிடம் உன்னைக் கூட்டிப் போய் காட்டுகிறேன்..”என்று அப்பா சொல்ல செல்வி மறு பேச்சு பேச வில்லை! வாயடைத்துப் போய் நின்றாள்!

– பாக்யா ஜனவரி27 பிப் 2 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *