புற்றுநோய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 3,836 
 

(இதற்கு முந்தைய ‘பாம்ப்ரெட்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

மச்சக்காளை கட்டுப்படுத்த முடியாமல் சில நிமிடங்களுக்குள் வாய்க்குள் இருந்தும். மூக்கின் வழியாகவும் ரத்தம் வந்துகொண்டே இருந்ததில், பயத்தில் அதைத்தொடர்ந்து சாப்பிட்டதெல்லாம் பேதியாகிவிட்டது.

உடனே அவர் டாக்டரிடம் செல்வதற்குள் அவர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு கிளம்பிச்சென்று விட்டார். எரிச்சலோடு திரும்பி வந்துவிட்டார் மச்சக்காளை.

டாக்டர் ஜெயராமன் மறுபடியும் சாயந்திரம் ஐந்து மணிக்குத்தான் ‘கிளினிக்’ வருவார். தலையைத் தொங்கப் போட்டவாறு வீட்டில் காத்துக்கொண்டிருந்தார். கோழிக் குழம்பு சாப்பிட்ட சுவாரஸ்யமெல்லாம் பேதியோடு பேதியாக போய்விட்டிருந்தது.

டாக்டருக்குக்காக ஒரு நோயாளி காத்துக் கொண்டிருக்கின்ற மாதிரியான கொடுமை வேறு இருக்கமுடியாது. மனித வாழ்க்கையின் அந்தக் கொடுமையின் முதல் நாளிலேயே துவண்டுபோய் விட்டிருந்தார் மச்சக்காளை.

டாக்டர் கிளினிக் திரும்பியவுடனே மச்சக்காளையின் மார்பை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார். அதில் எதுவுமே அவருக்குப் புலப்படவில்லை. அதை அப்படியே விட்டுவிட அவர் விரம்பவில்லை. மதுரையில் இருக்கும் டாக்டர் ராகவன் என்ற மார்புநோய் நிபுணரைத் தொடர்பு கொண்டார். மச்சக்காளையை மதுரைக்குப் போய் அந்த டாக்டரை பார்த்துவிட்டு வரச்சொன்னார்.

ஆனாலும் மச்சக்காளைக்கு கொழுப்பு! அவர் மதுரைக்கே போகவில்லை. ஏனென்று கேட்டால், அவர் டாக்டர் ஜெயராமனைப் பார்த்துவிட்டு வந்தபிறகு தொண்டையில் இருந்து ரத்தம் எதுவும் வரவில்லை. வேறு பிரச்னையும் பெரிதாக ஏதும் இல்லை. மார்பை மட்டும் எதோ ஒன்று இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல இருந்தது. வாய்வு அதிகமாகிப் போயிருக்கலாம்! வேற எதுவும் இருக்காது! ரத்தத்தைப் பார்த்ததும் தான் அநியாயமாகப் பயந்துவிட்டதாக நம்பினார்.

தொண்டை ஏற்கனவே ரொம்பப் புண்ணாக இருந்திருக்கும். ‘காரசாரமாக’ கோழிக் குழம்பையும் அதையும் இதையும் அளவு இல்லாமல் ஊற்றி ஊற்றிச் சாப்பிட்டதும் தொண்டைப் புண்ணில் இருந்து ரத்தம் வந்துவிட்டது! அவ்வளவுதான். இதைப்போய் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தவறாக முடிவு செய்துகொண்டார்.

அடுத்த சிலநாட்களில் மச்சக்காளை சுதாரித்துக்கொண்டு விட்டார். நான்கு நாட்களுக்கு எப்போதும் போல பீடி பிடித்துக்கொண்டு; ஓசி பேப்பரை ஒருவரி விடாமல் படித்துக்கொண்டு; வட்டிக்கடையில் உட்கார்ந்து காதைக் குடைந்துகொண்டு ஜாலியாக இருந்து கொண்டிருந்தார். ஐந்தாவது நாள் அவரால் அப்படி இருக்க முடியவில்லை.

சின்னக் காகிதம் ஒன்றில் ஏதோ ஒரு பெரிய வட்டிக் கணக்கை எழுதி கூட்டி கூட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது மச்சக்காளைக்கு தொண்டையைக் கமறியது. ஏதோ ஒரு பெரிய பூகம்பத்தில் மறுபடியும் மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது அவருக்கு! மணியோசை வந்தால் யானை வராமல் இருக்குமா? யானை ரத்தம் உருவத்தில் வந்தது!

அடுத்த நான்கு மணிநேரத்தில் மனைவி கோமதியோடும், மச்சினன் ராமனோடும் மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருக்கும் டாக்டர் ராகவன் ஹாஸ்பிடலில் இருந்தார். அடுத்த ஒருமணி நேரத்தில் டாக்டர் ராகவன் அவரைப் பரிசோதித்தார்.

ராகவன் வேகமான ஒரு இயந்திரம்போல் இயங்கினார். ‘ஊர்ப்பட்ட’ டெஸ்ட்களுக்கு எழுதிக் கொடுத்தார். அவைகள் தவிர, முக்கியமாக உணவுக்குழாய்; மூச்சுக்குழாய்; சுவாசப்பைகள் இவற்றை ஸ்கேன் பண்ணி ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார். மச்சக்காளைக்கு வந்த எரிச்சலில் பேசாமல் திம்மராஜபுரத்திற்கே ஓடிப் போய்விடலாமா என்று யோசித்தார். ஸ்கேன் டெஸ்ட்டுக்கும் மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் வேற ஒரு இடத்துக்கு போக வேண்டுமாம்! ஊரில் ஏகப்பட்ட ஜோலியை விட்டுவிட்டு எவன் அலைவது என்று நொந்துகொண்டார்.

மச்சக்காளை செலவழிப்பதற்கு மனசே வராமல் செலவழித்தார். வட்டிக்கடையில் ஒவ்வொரு பைசாவாக எண்ணி எண்ணி கஷ்டப்பட்டு அவர் சேர்த்த துட்டு. அந்தத் துட்டுக்கு இதற்குமேல் பெரியதாக செலவு எதுவும் வந்துவிடக்கூடாது. அப்படிச் செலவாகிற மாதிரி உடம்புக்கும் பெரியதாக எதுவும் வந்துவிடக்கூடாது. இந்த மாதிரிப் பிரச்னைகளோடு மதுரை தல்லாகுளம் நோக்கிக் கிளம்பினார்.

அங்கு இருந்த ‘ஸ்கேனிங் சென்டர்’ அவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டது. அவரின் இரண்டு சுவாசப் பைகளிலும் பீடித்திருந்த புற்றுநோய் அதன் சாம்ராஜ்யத்தை மச்சக்காளையின் உணவுக் குழாய்வரை பரவ விட்டிருந்தது. கடைசியில் விஷயம் என்னவெனில் மச்சக்காளையின் உடம்பில் புற்றுநோய் ரொம்பவும் முற்றிப் போய்விட்டது. எவ்வளவு பெரிய சிகிச்சை செய்தாலும் அவர் ரொம்பநாள் இருக்கமாட்டார்.

டாக்டர் ராகவன் இதைச் சொன்னபோது கோமதி பெரிதாக அழுது கதறிவிட்டாள். மச்சினன் ராமன் அதிர்ந்து கலங்கிப்போனான். வாழ்க்கை அவரிகள் இருவருக்கும் சரேலென கடும் நிராதரவாய் இருண்டு தெரிந்தது.

ரொம்பநாள் இருக்கமாட்டார் என்கிற செய்தியை மச்சக்காளைக்கு தெரியப் படுத்தவில்லை. புற்றுநோய் என்ற செய்தி மட்டும் அவரிடம் சொல்லப்பட்டது. அந்தத் தகவலிலேயே அவர் நடுங்கி ஒடுங்கிப்போனார். மனதிற்கு எந்தக் காட்சியும் புலனாகாமல் மரணம் மட்டுமே நிறைந்து பூதாகாரமாகத் தெரிந்தது. சட்டைப்பையில் வைத்திருந்த பீடிக்கட்டை தாங்க முடியாத துக்கத்தோடும் சோகத்தோடும் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

உலகத்திலேயே அவர் ஒருத்தர்தான் புற்றுநோயாளி என்ற ஒரே மனநிலையில் அவர் டாக்டர் ராகவன் எதிரில் உட்கார்ந்திருந்தார். “பயப்படவே பயப்படாதீர்கள்; வலிமை மிகுந்த சிகிச்சைகளின் மூலம் உங்களை புற்று நோயிலிருந்து கண்டிப்பாக குணப்படுத்துகிறேன்” என்று ராகவன் சொன்ன அதே வாயால், அவர் மச்சினன் ராமனிடம் ‘ரொம்ப அதிகம் இருந்தால் ஏழு அல்லது எட்டு மாதங்கள்தான் உயிரோடு இருப்பார்’ என்ற உண்மையைச் சொல்லிவிட்டார். ராமன் அதை மறைக்காமல் அப்படியே அக்கா கோமதியிடம் சொல்லிபிட்டான். மச்சக்காளையின் பெண்டாட்டி அவள். உண்மையை அவளிடம் மறைக்கக் கூடாது என்பது ராமனின் அபிப்பிராயம்.

ஆனால் அதற்காக டாக்டர் ராகவன் மச்சக்காளைக்கு சிகிச்சையே அளிக்காமல் இருந்து விடவில்லை. எந்தவொரு உத்திரவாதத்தையும் தராமல் முயற்சி செய்து பார்ப்போம் என்ற ரீதியில் சிக்ச்சைகளைத் தொடங்கிவிட்டார். “என் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை” என்று மச்சக்காளை கையெடுத்துக் கும்பிட்டபடி டாக்டரை கேட்டுக்கொண்டார்.

‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என்று மச்சக்காளை அவருடைய வாழ்க்கையில் முதன்முறையாக கூறினார்! ஆனால் சிக்ச்சைக்காக ஆகிக் கொண்டிருந்த செலவைப் பார்த்தபோது ‘பரவாயில்லை’ என்று தோன்றவில்லை அவருக்கு!

புற்றுநோய் என்பது எப்படி அவரை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போட்டிருந்ததோ; அந்த நோய்க்கான சிகிச்சையின் செலவும் மச்சக்காளையை அதேமாதிரி சுக்கல் சுக்கலாக உடைத்துப் நொறுக்கிப் போட்டுவிட்டது. அதையும்விட அவரை நசுக்கி அப்படியே பிழிய வைத்தது – புற்றுநோய்க்கான சிகிச்சைகள்தான்.

‘கீமோ தெரபி’ என்ற அந்த வலிமை மிகுந்த ஊசியை அவருடைய உடம்பால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதைவிட கொடியதாக இருந்தது, அவரது கழுத்தின் கீழ்ப்பகுதியில் தரப்பட்ட நெருப்புப் போன்ற கதீர்வீச்சு சிகிச்சை. சகிச்சை என்ற பெயரில் இந்தப் பாடுபடுவதற்கு பேசாமல் செத்தே போய்விடலாம் போன்றிருந்தது மச்சக்காளைக்கு…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *