புரிந்தும் புரியாமலும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,550 
 

பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என் நாவில் கற்கண்டாய்த் தித்திக்கிறதே! அவளது மழலை மொழி கேட்டால் தேவாமிர்தம் பருகியதாகவே உணர்கிறேன். அவள் துள்ளி விளையாடும் அழகோ பாரதியின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகிறது. “ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி!’ என்று என்னமாய்ப் பேசுகிறாள்! வாய் திறந்தால் மழலையில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. இரண்டரை வயதுதானென்றால் யார் நம்புகிறார்கள்? இயல்பாகவே பெண் குழந்தைகள் அதிகம் பேசுவார்கள். எல்லாவற்றையும் விரைவிலேயே கற்றுக் கொள்வார்கள் என்று ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம். உண்மைதான் போலும். அதிலும் இவள் இன்னும் ஆச்சர்யம்! வெண்மணி என் கண்மணி. அந்தச் செல்லக் குட்டிதான் இன்று என்னைப் பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி! என்ன பதில் சொல்வேன் அவளுக்கு? அவளது அறிவுத் திறனை மெச்சுவதா…இல்லை என் நிலையை நினைத்து நொந்து கொள்வதா? சற்றுத் திணறித்தான் போனேன்.

புரிந்தும் புரியாமலும்குழந்தைகளை அத்துணை எளிதில் ஏமாற்றவும் முடியாது. சமாதானப்படுத்தவும் இயலாது. குழந்தைகளிடம் பொய் சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது . வேறு என்னதான் நானும் சொல்ல? உண்மையைச் சொல்லத்தான் முடியுமா? சொன்னால்தான் அவளுக்குப் புரியுமா? எல்லா நேரங்களிலும் எல்லா உண்மைகளையும் எல்லாரிடமும் சொல்லவும் முடியாதே! அதுவும் இந்தப் பச்சை மண்ணிடம் எப்படிச் சொல்வேன்? யோசித்துப் பார்க்கிறேன்.

இருபதின் வயதிற்கே உரித்தான அந்த வாலிப முறுக்கும், வீராப்பும் சொல் கேளாத சுதந்திர வேட்கையும் கட்டுக் கடங்காத சிந்தனையும், கால்கள் நில்லாத ஓட்டமும், செயல்களும் எனக்குச் சற்று அதிகமாகவே இருந்ததென்றுதான் சொல்ல வேண்டும்!

நான் நினைப்பதே சரி, நான் செய்வதே செயல்! இதில் எனது நட்பு வட்டாரமும் அப்படியே அமைந்துவிட, கேட்கவே வேண்டாம்! ஏதோ ஒரு கொள்கை, ஒரு சித்தாந்தம். நாங்களே உருவாக்கிக் கொண்டு ஊரோடும் உறவோடும் ஒத்துப் போகாமல் அலைந்து கொண்டிருந்தோம்.

எங்களளவில் நாங்கள் பெரிய லட்சியவாதிகள். ஆனால் இந்த ஊருக்கும் உறவுக்கும் நாங்கள் வெட்டிப் பயல்கள். ஊர் சுற்றும் உதவாக்கரைகள். எனது பெற்றோருக்கும் அதே கவலைதான்.

ஒரே மகன் இப்படி வீணாக அலைகிறானே? உருப்படியாகப் படித்து ஒரு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கத்தான் துப்பில்லை. வீட்டுக்கடங்கிய பிள்ளையாகவாவது இருக்க வேண்டாமா? என்று எல்லா பெற்றோர்களையும் போலவே அவர்களும் கவலைப்பட்டார்கள்.

இவனுக்கொரு கால் கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும், பொறுப்பு தானாக வந்துவிடும் என்று பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள்.

பின்னென்ன…நடந்தேறியது எங்கள் திருமணம். திருமணமாகிவிட்டது என்பதற்காக எந்த நேரமும், எச்சூழ்நிலையிலும் என்னை ஒதுக்கிவிடக்கூடாது என்று என் நண்பர்களிடம் உறுதிமொழி பெற்ற பின்புதான், நான் இந்தக் கல்யாணத்திற்கே சம்மதித்தேன்.

நான் நினைத்திருந்தால் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாம்தான். ஆனாலும் சம்மதித்தேன். ஏனென்றால் என் பெற்றோரின் நியாயமான எந்த ஆசைகளையும் நான் ஒரு மகனாக இருந்து நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் இதையாவது செய்து அவர்களைக் குளிர வைக்கலாமென்றுதான்.

ம்….அது மட்டும்தானா காரணம்? தேன்மொழியின் அபார அழகில் நான் மயங்கிப் போனதும் காரணம்தான்! இதைச் சொல்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லை. உண்மையில் சொக்க வைக்கும் அழகுதான் அவள்.

அதற்காக முடங்கிவிட முடியுமா வீட்டோடு? பின்னர் எங்களது லட்சியம்தான்(?!) என்னாவது? மறுநாளே தேடிப் போனேன் நண்பர்களை. முன்னரே முடிவெடுத்தபடி ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினோம். அன்றிலிருந்து எட்டாவது நாள் அதை நிறைவேற்றுவதென்றும் அதுவரை என் புது மனைவியுடன் மனம் விரும்பியபடி இன்புற்றுக் களித்திருப்பதென்றும் முடிவெடுத்தேன். அந்த ஒரு வார காலமும் வீட்டை விட்டு எங்கும் நகரவேயில்லை.

“”பார்த்தியா, நான் சொன்னது சரியாப் போச்சு இல்ல…பையன் குட்டிப் போட்ட பூனையாட்டம் மருமகளையே சுத்திச் சுத்தி வர்றான்!

ஆச்சரியமா இருக்கு. எங்கேயும் வெளியே போகவேயில்லை கவனிச்சியா? ஒரு பய கூடத் தேடி வரவும் இல்லை”

“”பின்ன…என் தம்பி மகளா…கொக்கா!…அவளுக்கு இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் எப்படிப்பட்ட முரட்டுக் காளையையும் முந்தானையில முடிஞ்சிடமாட்டாளாக்கும்!”

அப்பாவும் அம்மாவும் தங்களுக்குள் இப்படிப் பேசிக்கொண்டு தங்கள் செயலைத் தாங்களே மெச்சிக் கொண்டிருந்த வேளையில் என் மனவோட்டம் வேறுவிதமாக இருந்தது.

அந்த நாளும் வந்தது. வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றேன். நண்பர்களும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நாங்கள் போட்ட திட்டப்படி அன்றிரவு “அந்தச் செயலைச்’ செய்யத் தயாரானோம். செயல் திட்டத்தில் கோளாறோ செயல்படுத்தியவிதத்தில் குளறுபடியோ என்னவோ முழுமையாக அச்செயல் நிறைவேறவில்லை. அதற்கு மேலும் எங்களால் அங்கிருக்க முடியாத சூழ்நிலையில் ஆளுக்கொரு திசையில் ஓடித் தலைமறைவானோம்.

எங்கள் கொள்கைப்படி எங்களுக்கு அந்தச் செயல் நியாயமானதாகப்பட்டாலும் சட்டத்தின் பார்வையில் பெரிய குற்றமாகத்தான் தெரிந்திருக்கிறது. மறுநாள் செய்தித்தாளில் “அரசுக்கெதிரான சதித்திட்டம்’ என்ற தலைப்புடன், “அரசு உடைமையைச் சேதப்படுத்த முயன்ற….கும்பல் தலைமறைவு’ என்ற செய்தி. ஏதோ ஓர் இயக்கத்தின் பெயரைப் போட்டு அதனுடன் எங்களுக்குத் தொடர்பு என்றும், அவ்வியக்கம்தான் எங்களுக்குப் பண உதவி செய்து வருவதாகவும் அச்செய்தி கூறியது.

அடுத்த நாள் எங்களின் பெயர் மற்றும் புகைப்படங்களுடன், காவல்துறை வலை வீசுவதாகச் செய்தி. எங்கும் வெளியே தலைகாட்ட முடியவில்லை. விசாரணை என்ற பெயரில் காவல் துறையும், ஊடகங்களும் எங்கள் குடும்பங்களைச் செய்த சித்திரவதையைப் பொறுக்க முடியாமல்தான் சரணடைவது என்ற முடிவுக்கு வந்தோம்.

பிறகென்ன…காவல்துறை விசாரணை, நீதிமன்ற விசாரணை என்று மூன்று மாதம் இழுத்தடித்தது. அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டியது, அரசுடைமையைச் சேதப்படுத்தியது என ஏதோதோ வாயில் நுழையாத சட்டப் பிரிவுகளில் பத்தாண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டேன்.

என் பெற்றோரும், புது மனைவியும் வந்து பார்த்துக் கதறினார்கள். கண்ணீர்விட்டு அழுது புலம்பினார்கள். தலையிலும் மாரிலும் அடித்துக் கொண்டார்கள். அவர்களைக் கண்டு என் மனமொன்றும் உருகிவிடவில்லை. எங்களுடைய திட்டம் தோல்வியடைந்துவிட்டதே என்று வருத்தமும் முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கமும் ஆற்றாமையுமே என்னுள் மேலோங்கியிருந்தது. அதற்கிடையிலும் என் மனைவியின் முகமாற்றத்தையும் உடல் மாற்றத்தையும் கவனிக்கத் தவறவில்லை நான். ஆம்! அவள் தாய்மையுற்றிருக்கிறாள் என்பது தெரிந்தது. இது சந்தோசமா, துக்கமா என்று இனங் காண முடியாத ஒரு தவிப்பில் நான்.

நாட்கள் நகர்ந்தன. அவ்வப்போது என் பெற்றோரும், மனைவியும் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். திடீரென்று மூன்று மாதங்களுக்கும் மேலாக யாரும் என்னைப் பார்க்க வரவில்லை. எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஒரே வேதனையாகவும், குழப்பமாகவும் இருந்தது. மீண்டும் திடீரென்று ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார்கள். என் மனைவியின் கைகளில் ஒரு ரோஜாப் பூச்செண்டு! என் உதிரத்தில் வார்த்தெடுத்த மழலைப் பூங்கொத்து! எல்லையில்லாப் பரவசம் என்னுள்! தவியாய்த் தவிக்கிறேன், துடியாய்த் துடிக்கிறேன்,வாரியணைத்துக் கொஞ்ச…ஆனால் கம்பி வலையல்லவா குறுக்கே நிற்கிறது வில்லனாக! என்ன செய்வேன் நான்…சொல்லவொண்ணாத் துயரமும், பரவசத் தவிப்பும் ஒரு சேர என்னைத் தாக்க, இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தேன். என் நிலையுணர்ந்த சிறை அலுவலர் மனிதநேயத்துடன் எனக்கு உதவ முன் வந்தார்.

சிறைவாசிகளை அவர்களது உறவினர்கள் வந்து நேரில் காண சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. மூன்றடி இடைவெளியில் அமைந்த இரண்டு கம்பி வலைத் தடுப்புகள். அதன் அந்தப்புறம் அவர்கள், இந்தப்புறம் நான். நடுவேயுள்ள இடைவெளிச் சந்தில் காவலர் நடந்து சென்று இரு தரப்பினரையும் கண்காணித்தபடி உலவிக் கொண்டிருப்பார். அந்தக் கம்பி வலையில் ஒரு சதுர அடிக்கும் சற்றுக் குறைவான அளவில் ஒரு திறப்பு உண்டு. அதைத் திறந்து அதன் வழியாகத்தான் உறவினர்கள் கொண்டு வரும் பழம், பிஸ்கட் போன்ற பொருள்களை எங்களிடம் சேர்ப்பார்கள். இப்போது அந்த திறப்பின் வழியாக என் குழந்தையை வாங்கி என் கையில் கொடுக்கும் முயற்சியில் சிறை அலுவலர்.

என் குழந்தையைத் தொட்டெடுத்து அணைத்துக் கொஞ்சப் போகும் பரவசத்தைவிடவும், எங்கே அந்தக் கம்பித் துவாரம் வழியாக நுழைகையில் என் பிஞ்சுக் குழந்தை என் ஒரே சொத்தான அந்த இளந்தளிர் காயம்பட்டுவிடுமோ என்று துடித்தேன்.

இப்படியே மாதங்கள் உருண்டோடிப் போயின. இரண்டு வாரங்களுக்கொரு முறை தவறாமல் குழந்தையுடன் வந்துவிடுவாள் என் மனைவி. என் மகளும் அந்தக் கம்பித்துவாரம் வழியாக நுழைந்து வரப் பழகிவிட்டாள்.

இப்படியாகக் காலங்கள் உருண்டோட, என் மகள் உடலளவிலும், பேச்சிலும், பழக்கவழக்கங்களிலும் அபார வளர்ச்சி காட்டி வந்தாள் என் மனமாற்றத்தைப் போலவே!

இதோ…இன்றோடு அவளுக்கு இரண்டரை வயதாகிறது. அதே நேரத்தில் வயதையும் மிஞ்சிய பேச்சும் அறிவும் என்னை மட்டுமல்ல, அனைவரையும் வியக்க வைத்தது. வழக்கம் போல் அந்தக் கம்பித் துவாரம் வழியாக கை கால்களை வரிசையாக நீட்டி சிரமப்பட்டு நுழைந்து என் மகளை என்னிடம் சேர்ப்பித்தார் சிறை அலுவலர்.

இன்றுதான் அவள் என் ரத்தத்தில் உதித்த செந்தாமரை மொட்டு வியர்வையுடனும் பெருமூச்சுடனும் என் முகத்தைப் பார்த்து வாய் திறந்து கேட்டது இப்படி,””ஏம்பா…இந்தச் சின்ன ஓட்டை வழியாக நுழைந்து உள்ளே வர்றதுக்கு எனக்கே இவ்வளவு சிரமமா இருக்கே…நீங்க எப்படிப்பா இதுக்குள்ள வந்தீங்க?”

கேட்டுவிட்டு வியப்பும் எதிர்பார்ப்புமாய் என் முகத்தைப் பார்க்கும் அந்தப் பிஞ்சு தெய்வத்திடம் என்ன சொல்வது நான்.

“”அது வந்துடா செல்லம், அப்பா முன்னாடி உன்னைவிட (அறிவில்) சின்னவனா இருந்தேனா அதான் சுலபமா உள்ளே வந்துட்டேன். அப்புறமா நீ பிறந்தியா…நீ வளர வளர நானும் வளர்ந்துட்டேன்டா. இப்ப அப்பா பெரியவனாயிட்டேன் அதுதான்” என்றேன்.

புரிந்தும் புரியாமலும் ஏதோ ஒரு விதத்தில் அவள் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு என் முகத்தைப் பார்த்தாள். எனக்கு எல்லாமே புரிந்திருந்தது இப்போது.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *