புத்திர சோகம்

 

“வேணு சாலை விபத்தில் இறந்து விட்டார். இன்று மாலை தகனம். உடனே கிளம்பவும் – சந்துரு.”

காலை பத்தரை மணிக்கு அலுவலகத்தில் இந்த டெலிகிராம் என் கையில் கிடைத்தது. உடனே பதட்டமடைந்தாலும் சிறிது நிதானித்துக் கொண்டேன்.

வேணு, என் மனைவி சரஸ்வதியின் மூத்த அண்ணன். அவளுக்கும் கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது பெரிய துக்கம். இந்த நிலையில், வேணுவின் இழப்பை அவள் நிச்சயம் தாங்க மாட்டாள். எனவே வேணுவின் இறப்பை அவளிடமிருந்து தற்சமயத்துக்கு மறைக்க எண்ணி, டெலிகிராமை என் பான்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன்.

எம்.டி.யிடம் சொல்லிவிட்டு எனக்களிக்கப்பட்ட அலுவலக காரில் டிரைவருடன் கிளம்பி வீட்டையடைந்தேன்.

கதவைத் திறந்த என் மனைவி என்னை அதிசயமாகப் பார்க்க, “சரஸ்வதி, உன்னோட அண்ணா வேணுக்கு ரொம்ப சீரியஸா இருக்காம்… நீ உடனே கிளம்பு, நாம் மருதூர் போகணும்” என்று துரிதப்படுத்தினேன்.

“என்னங்க என்ன ஆச்சு என் அண்ணாவுக்கு, உங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்?” பதட்டமானாள்.

“சந்துரு பத்தரை மணிக்கு டெலிபோன் பண்ணினான். விஷயத்தைச் சொல்லி உடனே கிளம்பி வரச் சொன்னான்.”

சரஸ்வதியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. பூஜையறையின் முன் நின்று, “தேவி, அகிலாண்டேஸ்வரி என் அன்ணாவைக் காப்பாத்து…” என இறைஞ்சினாள்.

என்னிடம் திரும்பி, “என்னங்க, பரத்துக்கு சொல்லியனுப்பினா அவனும் நம்மகூட வருவானே” என்றாள்.

“எல்லாம் எனக்குத் தெரியும்… அவனப் பத்தி இப்ப என்ன பேச்சு?…என்னிக்கு அந்த கிறிஸ்துவச்சிய அவன் கல்யாணம் பண்ணிக் கொண்டானோ, அன்னிலேர்ந்து அவன் நம்முடைய மகன் கிடையாது…நீ சீக்கிரம் கிளம்பு.”

வெடித்தேன்.

வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தோம். கார் மருதூரை நோக்கி விரைந்தது.

எங்களுடைய ஒரே மகன் பரத்வாஜ். வயது இருபத்து நான்கு. பெங்களூரிலேயே ஒரு நல்ல கம்பெனியில் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட். கை நிறைய சம்பளம்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தன்னுடன் வேலை செய்யும் நான்ஸியை தான் மிகவும் விரும்புவதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறும் என்னிடம் கேட்டான்.

நான் வெகுண்டேன். அனுமதி மறுத்தேன். என்னை மீறி இத்திருமணம் நடந்தால், என் ஒரே மகன் இறந்து விட்டதாய் எண்ணி தலை முழுகி விடுவதாகவும் எச்சா¢த்தேன்.

அடுத்த மூன்று மாதங்கள் அமைதியாக அலுவலகம் சென்று வந்தான்.

நான்ஸியை அவன் மறந்து விட்டதாக நான் நம்பினேன்.

ஆனால், சென்ற மாதம் தன்னுடைய பெட்ரூமில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி வைத்துவிட்டு நான்ஸியைத் திருமணம் செய்துகொண்டு எங்களைப் பிரிந்து அவளுடன் குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டான்.

என் மனைவிதான் மிகவும் துடித்துப் போனாள். “அவர்களை அழைத்து, ஆசீர்வதித்து நம்முடன் சேர்ந்து இருக்கச் சொல்லுங்கள்..” என்று கெஞ்சினாள்.

“பெற்று, வளர்த்து, பாசம் காட்டி ஆளாக்கின பெற்றோர்களைவிட, அலுவலகத்தில் அறிமுகமான ஒரு பொட்டச்சியிடம் கிடைக்கும் சுகம் பெரிசாப் போச்சுடி உன் பிள்ளைக்கு” என்று கோபமாய் நான் இரைய, அடங்கிப் போனாள் சரஸ்வதி.

என்னைப் பொறுத்த வரையில் என் மகன் இறந்து போய் ஒரு மாதமாகிறது.

கார் சேலம் தாண்டி நாமக்கல்லை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

சரஸ்வதி வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு வந்தாள்.

“என் தெய்வம் என்னிக்கும் என்னை கைவிடாது. வேணு கண்டிப்பாக பொழச்சுடுவான்..” என்னைப் பார்த்து கலக்கத்துடன் சொன்னாள்.

பான்ட் பாக்கெட்டில் இருந்த டெலிகிராமை தடவிப் பார்த்தேன். மனதை உறுத்தியது.

‘டெலிகிராம் வந்த உண்மையை இப்போது சொன்னால், இவள் என்ன செய்வாள்’ என நினைத்துப் பார்த்து ஒரு கணம் பயந்தேன். வழியில் காரை நிறுத்தி இளநீர் குடிக்கச் சொன்னேன். மறுத்து விட்டாள். நானும் டிரைவரும் மட்டும் குடித்தோம்.

நாங்கள் மருதூரை அடையும்போது மாலை மணி ஐந்து.

காரை விட்டு சரஸ்வதி அவசர அவசரமாக இறங்கும்போதே அவளுடைய இரண்டாவது அண்ணன் ஜம்புநாதன், “வேணு நம்மை விட்டுப் போயிட்டாண்டி” என்று கதறியபடி எதிர்கொள்ள, இவளும் பெருங்க்குரலெடுத்து ‘ஓ’ வென அழ, அங்கிருந்த இன்ன பிற உறவினர்களும், இவளுடன் துக்கத்தினால் வெடிக்க – அந்த இறுக்கமான சூழ்நிலையில் நானும் கலங்கிப்போய் ஈஸிசேரில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த என் வயதான மாமனாரிடம் போய் நின்றேன்.

“இந்தப் பாவிய கொண்டு போயிருக்கக் கூடாதா மாப்ள. தள்ளாத வயசுல நான் எதுக்கு இன்னும் உயிரோட இருக்கணும்…என்னைக் கொண்டு போயிட்டு, வேணுவ உயிரோட விட்டு வச்சிருக்கக்கூடாதா, கடவுளுக்கு கண்ணில்ல மாப்ள…’ என்று துக்கத்தினால் அரற்றியபடி தலையிலடித்துக் கொண்டார்.

மா¢யாதை நிமித்தம் அவரின் நடுங்கும் கைகளைப் பற்றிக்கொண்டு அவரருகில் தரையில் அமர்ந்தேன்.

“பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, பெரியவனாய் வளர்ந்து…வேணுவின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து, அனுபவித்து வளர்த்தவன் நான், புத்திரசோகம் மட்டும் எவனுக்குமே வரக்கூடாது…ஏன்னா, சோகத்திலேயே பெரிய சோகம் புத்திரசோகம். மற்ற உறவுகள் அப்படியில்ல மாப்ள… மனைவி பாதியில் வந்தவள், சகோதர உறவுகள் பாதியில் பிரிகிறவர்கள், ஆனால் மகன் அப்படியல்ல. நம் ரத்தம், உணர்வு, பிரதிபலிப்பு, வாரிசு எல்லாம் அவன்தான். அதனாலதான் புத்திர சோகம் கொடுமையானது, வேதனையானது…இந்த எண்பத்திநாலு வயசுல எனக்கு இது தேவையா?” என்று அழுகையினூடே பெரிதாகப் புலம்பினார்.

வயதான ஒரு பெரிய் மனிதர் அழுது அன்றுதான் நான் பார்த்தேன். மிகவும் கலங்கிப் போனேன்.

மறு நாள் கலை அழுதழுது முகம் வீங்கியிருந்த சரஸ்வதியிடம், நான் பெங்களூர் கிளம்பிச் செல்வதாயும், பத்தாவது நாள் திரும்ப உத்தேசித்துள்ளதாகவும், விரும்பினால் அவளும் என்னுடன் வரலாம் என்றும் சொன்னேன்.

“நீங்க எப்படியும் போங்க, எங்க அண்ணாவைவிட இளநீர் உங்களுக்குப் பெரிசாப் போச்சு… அதுக்கு வண்டிய நிறுத்திய நேரத்துல இங்க வந்திருந்தா, வேணுவின் முகத்தை நான் கடைசியாப் பார்த்திருப்பேன்” என்று வெடித்தாள்.

மனம் நொந்த நிலையில் அவள் கொட்டிய வார்த்தைகளுக்குப் பதிலேதும் சொல்லாது, சம்பிரதாயப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாது மருதூரை விட்டுக் காரில் தனியாக டிரைவருடன் பெங்களூர் கிளம்பினேன்.

என் மனசு மிகவும் சங்கடப் பட்டது. வேணு எவ்வளவு நல்லவன். எதற்கும் கோபப்படாமல் அமைதியாக அதிர்ந்து பேசாது, இன்முகத்துடன்.. ச்சே! இறப்பு என்கிற நிரந்தர உண்மைக்கு முன்னால் எல்லாமே பொய்தான்.

இரவு ஏழு மணிக்கு பெங்களூரை அடைந்தேன். வீடு வெறிச்சென்று போட்டது போட்டபடி கிடந்தது.

மகன் பரத்வாஜ் •போட்டோவிலிருந்து என்னைப் பார்த்து சிரித்தான். ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்தேன்.

மேஜையின் இழுப்பறைகளைத் திறந்து, அவன் எங்களுக்கு கடைசியாக விட்டுச் சென்ற கடிதத்தை தேடி எடுத்துப் படித்தேன்.

” என் அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு -

இக் கடிதத்தை தாங்கள் படிக்கும் தருணத்தில், எனக்கும் நான்ஸிக்கும் திருமணம் முடிந்திருக்கும்.

உங்களுடைய ஒப்புதலுடன், ஆசீர்வாதங்களுடன் இத்திருமணம் நடக்கும் என மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தேன்.

நான்ஸி நலல குடும்பத்துப் பெண். அவள் கிறிஸ்டியனாகவும், நான் இந்துவாகவும் பிறந்தது எங்கள் தவறல்ல. பரஸ்பர அன்பும், புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் எங்களுடைய பலம். கேவலம் அவள் வேறு ஜாதி என்கிற ஒரே அற்ப காரணம் எங்களுடைய இந்த பலத்தை பலவீனப்படுத்திவிட முடியாது.

சந்தோஷமான சாம்ராஜ்யம் எங்களுடையது. ஒரு நேர்மையான ஆரோக்கியமுள்ள வாழ்க்கையை நாங்கள் நல்லபடியாக நடத்திச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எங்களிடம் ஏராளமாக இருக்கிறது.

ஒரே ஒரு •போன் பண்ணினால் நாங்கள் ஓடோடி வந்து உங்கள் காலில் விழுந்து நமஸ்கா¢க்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்.

இப்படிக்கு,
பரத்வாஜ்.

ஒரி மாதத்துக்கு முன் கோபத்தில் படித்து அலட்சியப்படுத்தப்பட்ட கடிதம், இன்று தனிமையில் அமைதியாகப் படிக்கப்பட்டபோது அர்த்தமுள்ளதாகப் பட்டது.

ஏனோ, என் மாமனார் புத்திர சோகம் பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது.

வேணுவின் இறப்பு, என் மாமனாருக்கு நிரந்தரப் பிரிவு, ஈடு செய்ய முடியாதது.

பரத்வாஜின் பிரிவு என் அகம்பாவத்தினாலும், வீம்பினாலும் ஏற்பட்டது. தற்காலிகமானது. எனக்குத் தேவையானது புத்திர சுகம், சோகமல்ல. என் மகனை நான் இழக்கவோ, பிரியவோ தயாரில்லை.

ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தூங்கிப் போனேன்.

மறுநாள், அலுவலகத்திலிருந்து பரத்வாஜைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாலை வீட்டிற்கு வரச் சொன்னேன்.

வந்தான் அவன். கட்டித் தழுவினேன்.

தன் மாமா வேணுவின் இறப்பை எண்ணி வருந்தினான். பத்துக்கு தானும் கூட வருவதாகச் சொன்னான்.

“தனியாக வராதே, நான்ஸியை அழைத்து வா, நாம் அனைவரும் ஒன்றாக மருதூருக்குக் காரில் சென்று திரும்பி வரும்போது அம்மாவையும் அழைத்துக்கொண்டு வரலாம். துக்கத்திலும் அவளுக்கு இது சந்தோஷமான அதிர்ச்சியாக இருக்கும்” என்றேன்.

- சாவி (23-5-1990) 

தொடர்புடைய சிறுகதைகள்
“வா அனந்து...” “அத்தை உடம்பு மிக மோசமாக இருப்பதாக லட்சுமி சொன்னாள். அதான் பார்த்துவிட்டுப் போகலாமேன்னு வந்தேன்... இப்ப எப்படி இருக்கு?” “அன்னிக்கு லட்சுமி வந்திருந்தபோது ரொம்ப மோசமா இருந்தது. ஞாபகமே இல்லை. லட்சுமியைப் பார்த்து திருதிருன்னு விழித்தாள். லட்சுமி என்னிடம், அண்ணா புத்தியே ...
மேலும் கதையை படிக்க...
குமரேசனுக்கு வயது இருபத்தெட்டு. சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.   திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனில் தனி அறை எடுத்து தங்கியிருக்கிறான். இன்னும் இருபது நாட்களில் அவனுக்கு சுமதியுடன் கல்யாணம்.  கடந்த ஒரு வருடமாக அவன் திருமணத்திற்காக பெண் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கோழிக்கோட்டில் வரவேற்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தன. ராஜாராமன் அவனுடைய மனைவி பொற்கொடியை அறிமுகம் செய்து வைத்தான். பெரிய அளவில் வெற்றி பெற்று, பெரிய அளவில் செல்வமும் திரட்டி இருக்கும் புகழ்பெற்ற டாக்டரின் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
ராஜாராமனுக்கு தற்போது வயது அறுபத்தியேழு. அவருக்கு கடவுள்மீது பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. தான் உண்டு தன் தினசரி வாழ்வியல் முறைகள் உண்டு என்று அமைதியாக வாழ்க்கையை ஓட்ட விரும்புபவர். எதற்கும் அலட்டிக்கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் போகலாமுங்களா...கருக்கல்ல போனாத்தான் சீக்கிரம் திரும்பியாரலாம்” என்றான். இவன் ஒரு புன்சிரிப்புடன் மேஜையின் இழுப்பறைகளைப் பூட்டிவிட்டு, சாவிக் கொத்துகளை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘மனைவியும் காதலியும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இருவரும் படித்துறையை அடைந்து அமர்ந்தார்கள். “என்ன கேட்டே சுகுணா?” “இப்ப உங்ககிட்ட பேசிட்டுப் போன பிள்ளை யாருன்னு கேட்டேன்.” “இங்கே தச்சுவேலை பாக்குறாரே மாடசாமி ஆசாரின்னு, அவரோட மகள். கொஞ்ச நாள் முன்னாடி ...
மேலும் கதையை படிக்க...
புதிய படமாதலால் தியேட்டரில் நல்ல கூட்டமிருந்தது. எனினும், திரைப் படத்தில் மனம் செல்லாது, முந்தைய தினம் தன் பெற்றோர்களுடன் பார்த்துவிட்டு வந்த பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. இவனுக்கு கோகிலாவை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
ஆவுடையப்பன் சாரை எனக்கு கடந்த பதினைந்து வருடங்களாக பழக்கம். அவருக்கு தற்போது வயது எழுபத்தி ஒன்பது. ஆனால் பார்ப்பதற்கு ஆறு அடி உயரத்தில் அறுபது வயதுக்குண்டான திடகாத்திரத்தோடு இருப்பார். இந்த வயதிலும் திம்மராஜபுரத்திலிருந்து பாளையங்கோட்டைக்கும், நெல்லை ஜங்க்ஷனுக்கும் அடிக்கடி சைக்கிளில் சென்று வருவார். ...
மேலும் கதையை படிக்க...
டாடா நகர், பெங்களூர். இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது. அரைகுறை இருட்டில் வாசலில் வந்து யாரோ “சார்” என்று அழைப்பது போன்றிருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவன் திகைத்தான். வாசற்கதவை திறந்து எட்டிப் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
புத்திசாலித்தனமும், சாதுர்யமும் எங்கும் எப்போதும் இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்பதுதான் இந்தக் காலத்திற்கான உண்மை!! விதவிதமான சந்தர்ப்பங்களில் விதவிதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்துகொண்டு தங்கள் சாதுர்யத்தால் எப்படி நிலைமையைச் சமாளித்தனர் என்று பார்ப்போம்... நாட்டின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்றினால் அவர் புது பொதுமேலாளராக தேர்ந்தெடுக்கப் ...
மேலும் கதையை படிக்க...
அத்தை
இம்பல்ஸிவ்
மழை வனப்பு
காரியவாதிகள்
சபலம்
படித்துறை விளக்கம்
எண்ணங்கள் மாறலாம்
நூலகம்
உதவி
சாதுர்யப் பேச்சுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)