புதிய பாதை

 

காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை….

தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை ஒரே மூச்சில் படித்தாள்!

உன் கடமையில் தவறும்போது மட்டும் வருத்தப்படு!

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை.

முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை!

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. தத்துவம் சொல்வதைப்போல் நடந்தால் மனிதன் எங்கோ போயிடுவான். கலண்டரில் கடிந்து கொண்டவள் தாளைக் கிழித்துக் குப்பைக்கூடைக்குள் எறிந்தாள். பொங்கலுக்கு இன்னமும் ஐந்தே ஐந்து நாட்கள். தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அனிதாவைப் பொறுத்தவரை மனவலிகள் பிறப்பதைத்தான் கண்கூடாகக் கண்டிருக்கிறாள்.

இந்தத் தத்துவங்களையெல்லாம் எத்தனை வருடமாக வாசித்து, கேட்டு வருகிறாள் என்று அவளுக்கே தெரியாது. சின்ன வயதில் அப்பா சொன்னவை, அத்தை சொன்னவை எத்தனை எத்தனை தத்துவம். ஆனால், அம்மாவின் தத்துவம் ஒன்றே ஒன்றுதான். “உன் அத்தை மகன மட்டும் கட்டின… உருப்படமாட்ட” இன்று நேற்றல்ல, திருமணம் என்றால் என்ன என்று அறியாத வயது முதலே அம்மாவின் தத்துவம் இதுவாகத்தான் இருக்கிறது.

ஒரு நாள் மாலை நேரம். பாடசாலை விட்டு வந்து ஜன்னல் அருகே அமர்ந்து, பாடப்புத்தகத்தில் ஒரு கண்ணும், அத்தை மகன் வருவானோ என ஜன்னல் மீது ஒரு கண்ணுமாய் இருக்கிறாள். இது முற்றத்தில் இருந்த அம்மாவிற்கு எப்படியோ தெரிந்து, புரிந்தும் விட்டது. வேகு வேகமாக உள்ளே வந்தவள், “இங்க பார்,வெகு சீக்கிரத்தில் உனக்கு விளக்குமாறு பிய்யப்போகிறது” என்று அதட்டிவிட்டுச்சென்றுவிட்டாள்.

அனிதாவிற்கு விடயம் புரிந்துவிட்டது. அதற்குமேல் பாடப்புத்தகத்தின் மீதான அக்கறை போய்விட்டது. இப்போது கவனம் எல்லாம் ரகுவின் மீது மட்டும்தான். இப்படித்தான் ஒரு நாள் மாலையில் படித்துக்கொண்டிருக்கும்போது,

“ஏய் அனி!”

“என்னது?”

“இதைப்படிடி”

“என்னடா?”

“இதைப்படிடி”

என்று கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தைக்கொடுத்துவிட்டுச்சென்றுவிட்டான் ரகு!

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தை மூடிவிட்டு ரகு தந்த கண்ணதாசனைப் புரட்டினாள். அதில் முதல் பக்கத்திலேயே “காதலிப்போமா” என்று எழுதியிருந்தது. அனிதாவிற்குத் தலைகால் புரியவில்லை. இதே ஜன்னல் பக்கமாக அடிக்கடி வந்திருக்கிறான், சிரித்திருக்கிறான். அவன் இப்படி…. அவளால் நம்ப முடியவில்லை. அவன் ஒரு வெகுளி.. எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டிருப்பான் பச்சை குழந்தை மாதிரி. என்றைக்கு அனிதா, கிடைக்க மாட்டாள் என்று புரிந்துகொண்டானோ, அன்றிலிருந்து அவனிடமிருந்த வெகுளித்தனமும் சிரிப்பும் காணாமற்போயின அவனின் உறவுகளைப்போலவே. இன்று இத்தாலியில் இருக்கிறான். “அனிதா! எத்தனை மணியடி?” இன்னமும் அரைத்தூக்கத்தில் இருக்கும் அக்காள் விஜிதா குரல்கொடுக்க,

“ம்..இப்பத்தான் அஞ்சு மணி. நீ இன்னும் கொஞ்சம் நித்திரைகொள்!” என்றவள், முன்ஹோலில் உள்ள வானொலியை முடுக்கினாள்.

“செய்திச் சுருக்கம் கேட்டீர்கள்..நேரம் பத்து மணி நான்கு நிமிடம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்… என்றதும்.. அனுசரணையாளர் நிகழ்ச்சிக்கான குறியிசை ஒலித்தது. ம் “அப்ப அவர் இருக்கமாட்டார்..” என்று முடிவுசெய்துகொண்டவள், வானொலியிலும் பிடிப்பில்லாமல், அதனை நிறுத்திவிட்டு, சிந்தனையைத் திசை திருப்ப முயற்சிக்கிறாள். முடியவில்லை. அவ்வளவு எளிதில் மாறிவிடக்கூடிய விடயமா அது? அவளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கும் மனச் சுமை. தகித்துக்கொண்டிருக்கும் துன்பத் தணல்.

அம்மா, அப்பா, அத்தை, ரகு எல்லோரும் தூர விலகிச்சென்றதிலிருந்து கொழும்பில் தம் மூத்த அக்காவின் வீட்டிலிருந்து தொழில் புரிந்து வருகிறாள். அம்மாவுக்கு அம்மாவாய் அக்காள்தான் பார்த்துக்கொள்கிறாள் அவளை. என்றாலும்…என்றாலும் பிறரிடம் சொல்ல முடியாத ஒரு நெருடல், நெஞ்சாழத்தில் நெருடிக்கொண்டிருக்கிறது. இதுவரை அனிதாவுக்கு நான்கு வரன்கள் வந்துபோயிருக்கின்றன. தொண்ணூறு வீதம் சரியாக வரும். இறுதி நொடியில் நிறைவேறாமற்போகும். வாய்க்கு எட்டியது கைக்கு எட்டாது என்பார்களே அப்படி. ஒரு முறை தன்தோழியின் ஊடாக அவளின் அதிபர், அனிதாவின் விருப்பத்தைக்கேட்டிருந்தார்.

“குடும்பத்தினரைக் கேட்காமல் எதுவும்செய்ய முடியாதடி. அக்கா வீட்டுக்கு வந்துகேட்கச்சொல்லு” உறுதியாகச் சொன்னாள் அனிதா அதன் பின்னர் எந்தப்பேச்சும் இல்லை. விடயத்திற்கான காரணத்தை நண்பி விஜி தயங்கித் தயங்கிச் சொன்னாள்!

“நீ பிரின்சிபள ஏதும் குறையா நினைக்காதடி. அவர்மேல எந்தத் தவறும் இல்லை”

“என்னடி சொல்ற?”

“ஓ டி.. நான் உன்கிட்டச்சொல்ல வேணும் எண்டுதான் இருந்தன். நீ வீட்ல பிரச்சினை பண்ண மாட்டன்னு புரோமிஸ் பண்ணினா, சொல்றன்”

“புரோமிஸ்டி! சொல்லு!”

“எல்லாத்திற்கும் காரணம் உன்னோட அத்தான்தானடி”

“என்னடிசொல்றாய்?”

“ஓ..டி.. நீ.. நீ.. உன் அத்தை மகனோட பழகினயாம்.. அவன் விட்டிட்டுப் போய்ட்டானாம். அதனால, நீ..மனக்குழப்பத்திலை இருக்கிறபடியால், இது சரிவராதெண்டு சொன்னாராம்”

“அடப்பாவமே! அவர் எனக்குச்சொன்னார், அவர் ஏதோ கொஞ்சம் அப்பிடி இப்பிடியாம்.. அதனால அவர் சரிவரமாட்டார் எண்டுதானே என்னிட்டச் சொன்னார்!”

“இல்லடி, எனக்கு என்னவோ உன்னோட அத்தான்மேல எனக்குப் பயமா இருக்கு. நீ அங்க இருக்கிறது கவனம். என்ன தப்பா நினைக்காத. உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றன்.”

விஜி சொன்ன பிறகுதான் அனிதாவிற்கு எல்லாம் புரிந்தது. இது நடந்து மூன்றாண்டுகள் கடந்திருக்கும். அவள் அத்தானின் நடவடிக்கை அவ்வளவு திருப்தியாகப் படவில்லை அவளுக்கு. அண்மைக்காலத்தில் வந்த எல்லாப்பொங்கலுக்கும் ஏதோ ஒரு புது கனவு தோன்றும் அவளுக்கு. இறுதியில் எல்லாம் சுக்கு நூறாகும். அதற்குக் காரணம் அத்தான்தான் என்பது அவளுக்கும் நண்பி விஜிக்கும் மட்டுமே தெரியும். எத்தனையோ தடவை இதை அக்காவிடம் சொல்ல முயற்சித்திருக்கிறாள். ஆனால், குடும்பத்தில் வீண் பிரச்சினை வந்து விடுமே என்று பயந்து இற்றை வரை பொறுமை காத்து வருகிறாள். என்றாலும் இந்தப்பொங்கலுடன் இதற்கொரு விடை காண வேண்டும் என்ற முடிவில் மாத்திரம் திடமாக இருந்தாள்.

அக்காவுக்கு ஐந்து வயதில் ஒன்றும் எட்டு வயதில் ஒன்றுமாக இரண்டு பெண் பிள்ளைகள். இப்போதெல்லாம் அக்கா வீட்டைவிட்டு எங்கும் போகமாட்டாள். அத்தான் வலுக்கட்டாயப்படுத்தி அழைத்தாலும் வரமாட்டாள்.

“அனிதாவைக் கூட்டிட்டுப்போங்களன்.போய்ட்டு வாச்செல்லம்” என்பாள். அனிதாவும் அக்காவின் பேச்சைக் கேட்டு அவ்வாறே செய்வாள். சிலவேளைகளில், அத்தானுடன் மோட்டார் சைக்கிளிலும் செல்ல வேண்டும். அத்தான் மீதான அக்காவின் விலகல், விரிசல் என்னவென்பது புரியாதவளாய் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தவள் இந்தப்பொங்கலுக்கு இதற்கொரு முடிவு காணவேண்டும். அதற்கு அக்காவிடம் இதுவிடயமாக மனந்திறந்து பேசவேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள். அதற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தான் நல்ல தருணம். அத்தான் மட்டக்களப்புக்குப்போய் இன்னும் வரவில்லை. இன்று மாலை சிலவேளை வந்துவிடுவார். அதற்குள் ஊருக்கே போகும் திட்டத்திற்கான முடிவு எட்டப்பட்டுவிடும். என்று எண்ணிக்கொண்டவள், அக்காவின் அறைக்குள் நுழைகிறாள். உள்ளே அக்காவின் விசும்பல் ஒலி!

“உங்கள்ட்ட சொல்லாம நான் எங்காச்சும் போறனா, எங்க எண்டாலும் உங்கள்ட்ட சொல்லிட்டுத்தானே போறன். நீங்க உடன வாங்க.. எனக்கு நிம்மதியே இல்ல. இவர் அனிதாவோடத்தான் எங்க எண்டாலும் போவார். நான் போறதில்லை. என்னை நம்புங்க”

அனிதாவிற்கு இப்போது எல்லாமே புரிந்தது.

கனடாவில் இருக்கும் ரவி மச்சானின் தொலைபேசி அழைப்பிற்காகத்தான் அக்கா எங்கும் போகாமல் இப்போதெல்லாம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறாள் என்பதும் விளங்கியது. பொங்கலுக்கு இன்னும் ஐந்து நாள். இவள் பொங்கி எழுவதற்கும் உகந்த நாள். அக்காவின் அறைக்குள் மட்டுமல்ல அவர்கள் எவரது முகத்திலும் இனி விழிக்கக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டது அனிதாவின் மனம்!

- இதயநிலா சுகன்ஜி (ஜனவரி 2016) 

தொடர்புடைய சிறுகதைகள்
1 சமூக சீர்திருத்த வாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது முதிர்ந்தும் பிடிவாதத்தைத் தளரவிடவில்லை அவர். எவ்வளவு வேண்டியவர்கள் வீட்டுத் திருமணமாயிருந்தாலும் வரதட்சிணை, சீர்செனத்தி என்று பெண்ணைப் பெற்றவர்களைக் கசக்கி பிழியும் கல்யாணங்களுக்கு அவர் ...
மேலும் கதையை படிக்க...
“கன்னத்திலே என்னம்மா காயம்? `தொப்பு’ விழுந்துட்டீங்களா?” (ஒரு தலைமுறைக்கு அப்பாலிருந்து அவளுடைய குரலே கேட்டது போலிருந்தது. `அப்பா ஏம்மா தினமும் நம்ப வீட்டுக்கு வர்றதில்லே?’) கலங்கிப் போனவளாக, “ஆமாண்டா ராஜா! விழுந்துட்டேன்!” என்றாள். பொய்! பெற்ற மகனிடமே! அம்மா பொய் சொல்லிவிட்டாள், அப்பாவுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டாள் ...
மேலும் கதையை படிக்க...
சிவராமன் தன்னுடைய அலுவலகப் பணியில் மூழ்கியிருந்தபோது அவனுடைய கைப்பேசியில் அழைப்பு வந்தது. “ஹலோ யாரு” என்றான். “அன்பு தம்பி இருக்காங்களா” என்றது அந்த முனையில் ஒரு அம்மாவின் தளர்ந்த குரல். அன்பு தம்பி என்றவுடன் அவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது. அதை ...
மேலும் கதையை படிக்க...
படுக்கையில் நெருப்பள்ளிப் போட்டதுபோலத் திருமலையின் உடல் கொதித்தது. அவனால் படுத்திருக்கவே முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் பற்றி எரிந்தது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். உடலை முறுக்க எத்தனித்தான். கைகளும் கால்களும் அவன் விருப்பத்திற்கு இணங்காத மெத்தனத்தோடு அப்படியே கிடந்தன. வலது ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும் அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர். பாஸ்கருக்கு படபடப்பாக இருந்தது. தன் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு பார்க்கப் போகிறான். இது எவ்வளவு பெரிய தருணம் ! ...
மேலும் கதையை படிக்க...
ஞானச் செருக்கு
பொய்
அன்பு தம்பி
இரவு
பெண் என்பவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)