புதியதோர் ஆரம்பம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,979 
 

மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை.
“”ஹலோ தாமரை… வீட்டுல தானே இருக்க?”
“”ஆமாண்ணே… சொல்லுங்க.”
“”ஒண்ணுமில்லே… பசங்க ஸ்கூல்லே என்னவோ பிரச்னையாம், போன் வந்தது. நான் குழந்தைகளை அழைச்சிட்டு வந்திடறேன். வீட்லயே இரும்மா.”
“”என்னண்ணா பிரச்னை?”
“”வந்து சொல்றேன்,” போன் கட்டாகி விட்டது.
“என்ன பிரச்னையாயிருக்கும்! கும்பகோணம் தீவிபத்து மாதிரி, அய்யோ…’ அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
மீண்டும் போன்; கணவரின் நம்பர் ஒளிர்ந்தது.
“”ஹலோ… என்னங்க.”
“”தாமரை… நான் ஸ்கூலுக்கு போய் குழந்தைகளை அழைச்சிட்டு வீட்டுக்கு வர்றேன். ஸ்கூல்ல டீச்சரை, அவங்க கிளாஸ் பையன் ஒருத்தன் கொலை செய்துட்டானாம்… ஒரே களேபரமாயிருக்காம். போன் வந்தது,” என்றான் கணவன்.
புதியதோர் ஆரம்பம்!“”என்னது கொலையா?” உடம்பு ஆடியது.
“”ஆமாம்… சரி போயிட்டு வந்து பேசுறேன்.”
“”வேணாங்க… கதிர் அண்ணன் போயிட்டார், இப்பதான் போன் பண்ணினார். அவரே அழைச்சிட்டு வந்திடறேன்னுட்டார்…” என்றாள் அவசரமாய்.
“”ஓ… கதிர் போயிட்டாரா… தாங் காட். நான் பாதி மீட்டிங்குல இருந்து தான் கிளம்பினேன். நன்றி சொன்னேன்னு சொல்லு. சரி அப்புறம் பேசுறேன்.”
உடம்பு வியர்த்தது.
டீச்சரை, ஸ்கூல் பையன் கொலை செய்யறதாவது, அடிவயிறு குழைந்தது.
அது மிகவும் பாரம்பரியமான ஸ்கூல். 100 ஆண்டிற்கும் மேலாக கல்வி சேவை செய்து வருவது, ஒழுக்கத்திற்கும், <உயர்தர கல்விக்கும் பேர் பெற்றது. அண்ணனுடைய இரண்டு பிள்ளைகளும், அங்கே தான் படிக்கின்றனர். அதனால், தாமரையின் பையனுக்கும், பெண்ணுக்கும் இடம் கிடைத்தது. அண்ணனும், அண்ணியும், வேலைக்கு போகின்றனர். அடுத்த தெருவில் தான் வீடு. தாமரை வேலைக்கு போகவில்லை. நால்வருமே, வேற வேற வகுப்பு. யாருடைய வகுப்பில் நடந்திருக்கும்? ஒரு குழந்தை கொலை செய்யும் அளவுக்கா போகும், எவ்ளோ பெரிய ஸ்கூல் அது. கார் ஹார்ன் சப்தம் கேட்டதும், ஓடிப் போய் கேட்டைத் திறந்தாள். எப்போதும் சந்தோஷ கூச்சலுடன் நுழையும் குழந்தைகள், மவுனத்தையே ஏதோ பெரிய சுமையாக சுமப்பவர்கள் போல, சுரத்தேயில்லாமல் உள்ளே நுழைந்தனர். பெரிய அதிர்ச்சி தாக்கினாற் போல, மூன்று பேரும் வர, புஜ்ஜிம்மா மட்டும் ஓடிவந்து, அவள் காலை கட்டிக் கொண்டாள். ""அம்மா, லீவ் விட்டாச்சு... ரொம்ப நாளுக்கு லீவு,'' என்றாள். ""என்னாச்சுண்ணா?'' ""அப்புறம் சொல்றேன்மா... குழந்தைங்க முதல்ல ரிலாக்ஸ் ஆகட்டும்,'' என்ற கதிரவன், சோபாவில் அமர்ந்து, இரு விரல்களையும் நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டான். மூடிய கண்களுக்குள், அந்த ஆசிரியையின் பயமும், அதிர்ச்சியும் நிறைந்த முகமே அலைந்தது. ஒரே கூச்சல், கும்மாளம். சற்றே தொலைவில், தண்ணீர், பம்ப்செட்டில் வேகமாய் விழ, குழந்தைகள் குதித்துக் கொண்டிருந்தனர். தாமரையும், கதிரவனும் அப்பாவின் இரு பக்கங்களிலும் உட்கார்ந்திருந்தனர். அம்மா... சின்ன, சின்ன வாழை இலைத் துண்டங் களில், கரண்டியால் சித்ரான்னங்களை அள்ளி வைத்துக் கொண்டிருந்தாள். ""தாமரை... இவங்க இப்படி, "என்ஜாய்' பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவேயில்லை,'' என்றான் கதிரவன் சந்தோஷமாய். ""ஆமாண்ணா... இந்த டிரிப்பை ரொம்பவே ரசிக்கிறாங்கண்ணா.'' ""ஆமாம். சம்மர் லீவுலகூட கோச்சிங் கிளாசுன்னு பிள்ளைகளை அனுப்புறீங்க. ஊருக்கு நாங்க வந்தாலும், எங்க பேச முடியுது, பார்க்க முடியுது?'' என்றாள் அம்மா. ""ஆமாம்மா... இவ்ளோ பெரிய மாற்றம் கிடைக்கும்ன்னு நினைக்கவே இல்லைம்மா. ரொம்பவும் கிரிட்டிகலா இருந்தது. மனசு கஷ்டத்தோடு தான் வந்தோம்மா,'' என்றான் கதிரவன், உணர்வு செறிந்த குரலில். அப்பா ஏதும் பேசாமல், குழந்தைகளின் மேலேயே கண்களை பதித்திருந்தார். சில கணங்கள், குழந்தைகளின் கூச்சல் தவிர, சப்தமேயில்லாமல் கழிந்தது. பிறகு, கதிரவன் தான் பேசினான். ""ஏம்ப்பா... மனசு தாங்கலைப்பா. கொலைங்கறது எவ்ளோ பெரிய விஷயம். சின்ன பையன் தான்ப்பா... ஏன் இப்படி நடந்தது? நம்ம குழந்தைங்க ஏங்கிப் போயிடக்கூடாதுன்னு தானே, பார்த்து பார்த்து பெஸ்ட்டா குடுக்கறோம். பெஸ்ட் ஸ்கூல், பெஸ்ட் டிரஸ், பெஸ்ட் புட், எல்லாமே பெஸ்ட்டாக தானே தேர்ந்தெடுத்துத் தர்றோம். அப்புறம் ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்?'' குரல் கம்மியது. ""ஆமாம்ப்பா... சின்ன வயசுலே உன் கையை பிடிச்சுகிட்டு ஊஞ்சலாடிகிட்டும், கடை வீதியையும், கோவிலையும் சுத்தி வருவோமே, அந்த நிம்மதி, சந்தோஷம், இப்ப கிடைக்கலையேப்பா... என்ன தான் நான் பணத்தைக் கொட்டி, எதை வாங்கித் தந்தாலும், ஏதோ ஒரு விரிசல், ஒரு பள்ளம் இருக்கிற மாதிரியே தோணுது,'' என்று தொடர்ந்தாள் தாமரை. ""உண்மைதான்ப்பா... தாமரை சொல்றது. நீங்க வாங்கி தந்த பஞ்சு மிட்டாயிலும், நடுராத்திரியில் மணி அடிச்சு, வட்டவட்டமா வெட்டி இலையில் வச்சு தந்த குல்பி ஐசிலும் கிடைச்ச திருப்தி, இப்போ காட்பரீசுலயும், கார்நெட்டோவிலும் கிடைக்கலை. ஏதோ ஒண்ணு மிஸ்சிங். ""ஆனா, அது என்னன்னு தான் தெரியலை. வாழ்க்கைத் தரம் இப்போ ஏகப்பட்ட டெக்னாலஜியோட, பின்னிபிணைஞ்சு உயர்ந்து கிடக்கு. ஆனா, கூடவே மனசளவுலே பெரிய பள்ளம் இருக்கு. அது நிரம்பவே மாட்டேன்கிறது. புரியலைப்பா,'' கதிரவன், இரு கைகளையும் பின்னால் லேசாய் நீட்டி, உடலை தளர்த்திக் கொண்டான். கண்கள் எதனாலோ மூடிக் கொண்டன. தாமரையும், முழங்கால்களை, கைகளால் கட்டிக் கொண்டு, முகம் சாய்த்திருந்தாள். குழந்தைகளுக்கு துண்டு கொடுத்து, துடைக்கச் சொல்லி, புஜ்ஜிம்மாவுக்கு டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தாள் அம்மா. ஏதோ உற்சாகமாய் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தனர். அம்மாவும், பதிலுக்கு ஏதோ சொல்வது தெளிவில்லாமல் கேட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பின், இரண்டு வாரம் விடுமுறை என்று பள்ளி நிர்வாகம் அறிவித்து விட்டது. தாமரை தான், ஊருக்கு போய் வரலாம் என்று ஐடியா தந்தவள். ஊருக்குபோய் வந்தால், தாத்தா பாட்டியின் அண்மையில், மனதளவில் குழந்தைகளுக்கு புத்துணர்வு கிடைக்கும் என்று, தாமரையின் கணவனும் வற்புறுத்தினான். அவனுக்கு, வேலைச்சுமை அதிகம் என்பதால் வரவில்லை. கதிரின் மனைவிக்கு, டில்லியில் செமினார் இருக்கவே, தாமரையும், கதிரவனும் குழந்தைகளுடன் போய் வரலாம் என்று முடிவு செய்தனர். கம்ப்யூட்டரும், கிரிக்கெட்டும் மட்டுமே தெரிந்த குழந்தைகள், ஊரில் எப்படி ஒன்றுவார்களோ என்ற கவலைக்கு மாறாய், தாத்தா பாட்டியிடம், "பச்சக்' என்று ஒட்டிக் கொண்டு, இயற்கையோடு இயைந்து, தம்மை மறந்து, குதூகலம் கொண்டாடினர். செருமிக் கொண்டார் அப்பா. கதிரவனின் தோளை வாத்சல்யமாய் தட்டிக் கொடுத்தார். ""கதிர் ஏண்டா இப்படி கஷ்டப்படுறே... என்ன பண்றது, நடக்கக் கூடாதது தான் நடந்துடுச்சு. இதுக்கு, நாம எல்லாருந்தான் காரணம்டா. நம்முடைய வளர்ப்பு முறையும், வாழ்க்கை முறையும் தான் இதுக்கு காரணம். யோசிச்சு பாரு... பெரியவங்க துணையில்லாத குடும்பம், இரண்டுபேருமே வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம், தனியே குழந்தைகள் வளர வேண்டிய சூழல்... அதுங்க என்ன செய்யும்? ""நல்லது, கெட்டது புரியாத வயசுலே. தனியே இருக்கிற குழந்தை, "டிவி' கம்யூட்டர்ன்னு மீடியா பக்கம் போறப்போ, அதன் மனசுல குழப்பம், வியப்பு, அதிர்ச்சின்னு ஏற்படறாப்போல நிகழ்ச்சிகள், எல்லாமே பிஞ்சு மனசுல நஞ்சைத் தானே விதைக்குது? ""நல்லா கவனி... ஒண்ணு வேணும்ன்னு ஆசைப்பட்டு காத்திருந்து, அதுக்கப்புறமா அது கிடைச்சா, அதுமேல அக்கறை வரும். மரியாதை வரும். பத்திரப் படுத்திக்கணுங்கற எண்ணம் வரும். அதை அடையும் வரை, அதை அடையணும்ங்கற எண்ணம் லட்சியமா நிற்கும். ""நீங்கதான், நினைச்சி முடியுறதுக்குள்ளே வாங்கி வந்து கொட்டிடறீங்களே, அப்போ அந்தக் குழந்தைக்கு என்ன தோணும்? தான் ஏதோ பெரிய பணக்கார வீட்டுக் குழந்தைன்னு தானே தோணும்? ""நீங்க... கடன்பட்டாலும் பரவாயில்லே. நாம சின்ன வயசுலே அனுபவிக்க முடியாம போனதையெல்லாம், குழந்தைகள் அனுபவிக்கணும்ன்னு துடிக்கிறீங்க. அவங்ககிட்டே உங்க கஷ்டத்தை காட்டிக்கிடறது இல்லே. அவங்களுக்கு அதெல்லாம் தெரியறதுமில்லே. பணம் சம்பாதிக்க அப்பா படுற கஷ்டம், பிள்ளைகளுக்கு தெரிய வேணாம்ன்னு மூடி மறைக்கறீங்க. பிள்ளைகள் வெறுமனே ஒரு லட்சியமும் இல்லாமலே, வாழ்க்கையை எதிர் கொள்றாங்க. ""நீ சொன்ன மாதிரி, பெஸ்ட் பெஸ்ட்டா எல்லாத்தையும் கொட்டி, லட்சியக் கனவை ஊதி அணைச்சிட்டா, அதுகளுக்கு குறிக்கோள்ன்னா என்னன்னு தெரியுமா? பண்பாடும், ஒழுக்கமும் எங்கிருந்து வரும்? ""வெறுமனே சம்பாதிச்சா போதாது. பெற்ற குழந்தைங்க மேல கண்காணிப்புமிருக்கணும். அவர்களின் ஒவ்வொரு அசைவும், தகப்பனுக்கு தெரியணும். அது தவறினா, அவன் கடமை தவறிய தகப்பன் தான். ""இந்த கல்விமுறையும், அறிவை வளர்க்கறதுக்கு பதிலா, பணத்தை பிரதானமாக்கி, படிப்பை சொல்லித் தருது. நீதிபோதனை வகுப்போ, கதை சொல்ற வகுப்போ, கை வேலை, தோட்ட வேலை இப்படி எதுவுமே இல்லாத, சாரமேயில்லாத படிப்பா இருக்கு. இயற்கையோடு இயைந்த எந்த அம்சமுமே இல்லாத பாடத்திட்டமாயிருக்கு. ""நிறைய படிக்கிறேன்னு, படிப்பே சுமையாகி, மனசும், உடம்பும் காஞ்சு போய் கிடக்கு. எப்படி அதுல இரக்கம், அன்பு, பண்புங்கற குணங்கள் சுரக்கும்? ""டீச்சர்களுக்கும், ஏகப்பட்ட வேலை, மன இறுக்கம்... தட்டிக் கேட்டு, தண்டனை கொடுத்தா பிரச்னை வருது. இப்படி குழந்தைய சுத்தி எல்லாமே தப்பு தப்பா நடக்கறப்ப, இதுக்கு நடுவுலே உழல்ற குழந்தை என்ன செய்யும்? அதுவும் டிப்ரஷனுக்கு ஆளாகுது. ""ஈன்று புறந்தருதல் தாயின் கடமை. சான்றோனாக்குதல் தந்தையின் கடமை. நல்ல மனிதனாக மாற்றுவது சமூகத்தின் கடமை. இதை எப்போதோ புறநானூறு சொல்லியிருக்கு. படிச்சிருப்பீங்களே?'' என்றார். விரும்பத்தகாத மவுனம் கவிழ்ந்தது அங்கே! காற்று கூட, கவனமாய் நின்று சுழன்றது. அம்மாவைச் சுற்றி, குழந்தைகள் உட்கார்ந்திருக்க, அம்மா சாதத்தை உருட்டி உருட்டி கையில் போட, அங்கே ஒரு சந்தோஷமான அரட்டை கச்சேரி களை கட்டி கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. கொஞ்சம் கழித்து, அப்பாவே கேட்டார். ""ஏன் கதிர்... உன் குழந்தையோ, தாமரையின் பையனோ சாயந்திரத்துலே வெளியே விளையாடறாங்களா?'' ""அவன் எப்படிப்பா தனியே விளையாட முடியும்... அவன் வயது பசங்க, கம்ப்யூட்டர், டியூஷன்னு பிசியால்ல இருப்பாங்க...'' என்றான் கதிரவன். ""இவனுகளைத்தான் கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்த்துருக்கோமேப்பா. சனி, ஞாயிறு, அங்கேயே சரியாயிருக்குமே! மாசத்துலே இரண்டு நாள் நீச்சல் கிளாஸ் வேற. புஜ்ஜிக்கு டான்ஸ் கிளாஸ். விளையாட நேரமேது?'' என்றாள் தாமரை. ""ஆக, பிள்ளைகளை டைம்டேபிள் போட்டு படிக்க வைக்கறீங்க. இயல்பா மலர வேண்டிய பூவை, ஒவ்வொரு இதழா, இந்த டைம்ல நீ விரியணும்ன்னு பலவந்தமா பிரிச்சு பூக்க வைக்கிறீங்க!'' அப்பா விரக்தியாக சிரித்தார். ""உங்களோட சின்ன வயசு, இன்னமும் உங்க மனசுலே உயிர்ப்பா இருக்கு. நாளைக்கு உங்க பிள்ளைகள் எதை நினைச்சு பார்ப்பாங்க?'' தாமரையும், கதிரவனும் பேசாமலிருந்தனர். ""ஆமா... நீ ஏன் உன் பையன்களை சாயந்திரமாய் விளையாட வைக்கக் கூடாது. ஷட்டில் காக்கோ, புட்பாலோ ஏதோ ஒண்ணு, உனக்கும், அவர்களுக்கும் நெருக்கம் ஏற்படும்ல... கூடவே, தாமரையோட பையன். ஏன் தாமரையும் கூட சேரலாம். ""நீங்க நாலுபேர் ஆட ஆரம்பிச்சா, எதிர் பிளாட், கீழ் பிளாட் பசங்க வர மாட்டாங்களா என்ன... குழந்தைகள் என்னைக்கும் விளையாட்டை நேசிக்கிற குழந்தைகள் தான். அவர்களுக்குள்ள நட்பு, விட்டுத்தரும் மனப்பான்மை, வெற்றி தோல்வியை சமமா எடுத்துக்கற பக்குவம் எல்லாமும் கூடவே வருமே...'' என்றார் அப்பா. ""எனக்கு இது தோணவேயில்லையே...'' என்று முகம் மலர்ந்தான் கதிரவன். ""இது சாத்தியமாப்பா?'' என்றாள் தாமரை. ""எல்லாத்துக்கும் ஒரு புள்ளிதான் ஆரம்பம். நீங்க இரண்டு பேரும் உங்க பிள்ளைகளோடு ஆரம்பிச்சு வையுங்க. அது அப்படியே பெருகும். காசு கட்டி, கோச்சிங் போற விளையாட்டை விட, சாயங்கால நேர விளையாட்டு, உங்களை சந்தோஷப்படுத்தும், அமைதி தரும், நிம்மதி கொடுக்கும். எல்லாத்துக்கும் மேல, நெருக்கத்தை கொண்டு வரும்,'' என்றார். முகம் பளிச்சிட, அப்பாவின் தோளில் சாய்ந்தாள் தாமரை. அம்மா மெல்லிய குரலில் பாட, குழந்தைகள் உரக்க கோரசாய், ""மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா... '' என்று, குரலெழுப்பினர். கீழ் வானில் சின்னதாய் மின்னல் ஒன்று, வெளிச்சக் கிளைகளை கோடுகளாய் பரப்பி, மின்னி மறைந்தது. - செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *