புதிதாய் பிறந்தநாள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,549 
 

உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்…
“”என்ன மகி… உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட உன் மாமியார் வீட்டுக்குத் தானே போயிருக்கார். முன்னே, பின்னே தான் ஆகும். ஏன் இப்படி நிலை கொள்ளாம தவிக்கிறே?”
புதிதாய் பிறந்தநாள்!“”போம்மா… உனக்கொண்ணும் தெரியாது. சாயந்திரம் கிளம்பினார்; நாலு மணி நேரமாச்சு. நான், உன் பேரனை விட்டு பிரிஞ்சதே இல்லைம்மா. இந்த வீட்டுக்கு தனியா வந்ததுலேருந்து, இதே வேலையாப் போச்சு. ஞாயித்துக்கிழமை ஆனா போதும், சனிக்கிழமை ராத்திரியில இருந்தே எங்க அத்தை போன் போட்டு, நச்சரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. “பேரனை அழைச்சுட்டு வா… கண்ணுல நிக்கிறான்…’ன்னு ஒரே புலம்பல். காலைலயிருந்து நீ தான் பாத்தியே… எத்தனை போன் வந்ததுன்னு,” சலித்துக் கொண்டாள் மகேஸ்வரி.
அம்மா சிரித்துக் கொண்டே கேட்டாள்… “”அதுல என்ன தப்பு மகி… பேரனை பார்க்கணும்ன்னு அவங்களுக்கும் ஆசையாயிருக்காதா! இத்தனை நாளும் குழந்தையோட குதூகலமா இருந்துட்டு, இப்ப, ரெண்டே பேருன்னா வீடே கல்லுன்னு கிடக்கும்ல?”
“”க்கூம்… அதான் வாராவாரம் பார்த்தாவுதே. அப்பறம் என்ன? இந்த வாரம் நீ ஊருலருந்து வந்திருக்கே. இன்னிக்கும் அந்த வீட்டுக்கு போகலைன்னா என்ன குடியா முழுகிடும்? இவருல்ல சொல்லணும்… “எங்க அத்தையம்மா வந்திருக்காங்க… அடுத்த வாரம் வர்றேன்…’ என்று உன் மாப்பிள்ளையா சொல்வார்… அப்பப்பா,” மகேஸ்வரி நொடித்துக் கொண்டாள். பேச்சு பேச்சாக இருந்தாலும், பார்வை என்னவோ வாசல் கேட்டின் மீது தான்!
“”என்னடீ இப்படி பேசுற… நான் இன்னும், 10 நாள் இருப்பேன். பேரனோட நாளெல்லாம் இருக்கலாம். ஆனா, இன்னிக்கு விட்டா, மாப்பிள்ளைக்கு லீவு கிடையாது. இதுக்குன்னு லீவா போட முடியும். அதுவும் கொஞ்ச நேரம், குழந்தை தாத்தா, பாட்டிக்கிட்டே இருக்கிறதுலே என்ன பிரச்னை உனக்கு?”
“”அய்யோ அம்மா… நீ ஏம்மா இப்படி இருக்கறே?” என்றவாறே நாசூக்காய் தலையில் அடித்துக் கொண்டவளை, போன் மணி அடித்து, கவனத்தை ஈர்த்தது. பாய்ந்து போய் எடுத்தாள்… மறுமுனையில் அண்ணன்! அவளுக்கு சப்பென்னு ஆகிட்டது. “”ஹலோ அண்ணா…”
“”மகி… என்னடா, எப்படி இருக்கே? அம்மா நல்லா இருக்காங்களா?”
“”அண்ணா… அம்மா வந்து மூணு நாள் ஆகலே. நாலஞ்சு தடவை போன் பண்ணிட்டே!”
“”ஒண்ணுமில்லேடா மகி… அம்மா இல்லாம வீடே வெறிச்சோடி கிடக்குடா… பாலாஜி, அதான் உன் மருமகன் வேற ராத்திரியானா, பாட்டி வேணும்ன்னு அழறான்; அண்ணிக்கும் கஷ்டமா இருக்காம்… அம்மா கிட்டே போனை குடேன்.”
“”அண்ணே… இங்கேயும் ஒரு பேரன் அம்மாவுக்கு இருக்கான். அவனுக்கும் அவங்க பாட்டிதான்,” என்றவள், “”அம்மா… அண்ணன் போனுலே… நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு கிடக்காம்… புலம்பறார்; இந்தா…” என்று ரிசீவரை கை மாற்றினாள்.
முகமெல்லாம் பிரகாசமாக, அம்மா, மகனுடனும், மருமகள், பேரப்பிள்ளைகளுட னும் மாறி மாறி பேசுவதைப் பார்த்துக் கொண்டே நின்றாள் மகி.
கடைசியில், “”ஒரு வாரத்திலேயே வந்திடறேன்டா…” என்று முகமலர்ச்சியுடன் முடித்ததும், மகிக்கு எரிச்சல் மண்டியது.
“”ஏன்… நீ இல்லாம அண்ணிக்கு ஒண்ணும் முடியலையாமா?”
“”ஆமா மகி… பானுவும், பாலாஜியும் அவளை படுத்தி வைப்பர். நான் இருந்தா… பாலாவை வச்சிக்குவேன்… அவளுக்கும் வேலை கொஞ்சம் சுளுவா இருக்கும்…” என்றாள் அம்மா பெருமிதமாக.
“”ஆக… சம்பளம் இல்லாத வேலைக்காரியா மகன் வீட்டுலே தேயுறன்னு சொல்லு.”
“”தப்புத் தப்பா பேசுற மகி. அது என் வீடு. என் மகன் வீடு. உன் அண்ணி என் குலம் விளங்க வைக்க வந்த மருமக. பானுவும், பாலாவும் என் பேரப்பிள்ளைக; என் சொந்தம். என் வீட்டுலே என் வேலைகளை சந்தோஷமா, உரிமையோட செய்றேன். என் கடமையாச்சுதே அது…
“”உன் அண்ணனுக்கு நான் இல்லாம கஷ்டமா இருக்குதாம்; உண்மைதானே… அவன் பிறந்ததுலேர்ந்து எதுக்காகவும் அவனை நான் பிரிஞ்சதே இல்லை. படிப்பு, வேலை எல்லாமே என் கண்ணெதிரிலேதான். அப்படி பார்த்தா, 40 வயது ஆகுது உன் அண்ணனுக்கு. நாற்பது வருஷமா என் பிள்ளையை நான் பிரிஞ்சது இல்லை. வாரத்துலே ஒரு நாள், நாலு மணி நேரம் உன் பிள்ளையை பிரிஞ்சி இருக்கவே கஷ்டப்படறீயே நீ. எங்களுக்கு எப்படி இருக்கும்?” என்ற அம்மாவையே உறுத்துப் பார்த்தாள் மகி. அம்மாவின் பேச்சில் அபஸ்வரம் தட்டுவது போல தோன்றியது அவளுக்கு.
“”ஆமா மகி… நல்லா யோசிச்சு பாரு. நாலு மணி நேரத்துப் பிரிவே உன்னை இப்படி படுத்தி வைக்கிறப்போ… மாப்பிள்ளையைப் பிரிஞ்சு கிடக்கிற அந்த வயசானவங்களை நெனச்சுப் பாரு. வாரத்துல ஒரு நாள் அவங்க புள்ளையையும், பேரனையும் பார்த்து, வாரத்துல ஆறு நாள் அவங்க தங்களையே சாமாதானப் படுத்திக்கிறாங்க. மாப்பிள்ளைக்கும், அவங்களை பிரிஞ்சதுலே, வயசான காலத்துலே தனியே இருக்கிறாங்களேன்னு கவலை அடிமனசுல வண்டல் மாதிரி படிஞ்சு கிடக்குந்தான். ஆனா, அவர், உன் சந்தோஷத்துக்காக தணிஞ்சு போயிட்டார்.
“”நான் ஊருல இருந்து வந்ததுமே என்ன சொன்ன… “உன் கையால வத்தக்குழம்பு வைம்மா…’ன்னு தானே கேட்ட. ஒவ்வொரு குழந்தைக்குமே, அம்மாவோட கைப்பக்குவம், கை ருசி சாகிற வரைக்கும் போகாது.
“”அதை புரிஞ்சிக்கிட்டு, மாமியாரும், மருமகளும் விட்டுக் குடுத்து போகணும். மருமகளும் நாளைக்கு ஒரு மாமியாராகித்தானே தீரணும். இந்த சுழற்சியில தான் இருக்குது சூட்சுமம்!
“”என் சமையல் தான் என் மகனுக்கு பிடிக்கும்ன்னு மாமியாரும் சமையல் கட்டுலேயே இருக்கக் கூடாது; நான்தான் சமையல் ராணின்னு வந்தவளும் வழக்காடக் கூடாது. மகனைக் கட்டிக்கிட்டு வந்தவளுக்கும், புருஷன் மேல அக்கறை உண்டுங்கறதை புரிஞ்சு, நாசூக்கா விலகிக்க தெரிஞ்சிக்கணும். மருமகளும், மாமியாரை அனுசரிக்கணும். இதான் வாழ்க்கை!
“”ஆனா மகி… இந்த விஷயத்துலே நான் ரொம்ப பாக்யசாலி… உன்னைப் போல ஒரு மருமக எனக்கு வாய்ச்சு இருந்தா, இந்நேரம் நான் ஒரு முதியோர் இல்லத்திலோ, இல்லை தன்னந்தனியே கிடந்தோ அவதிப்பட்டிருப்பேன். நல்ல வேளை… உன் அண்ணிக்கு இந்த தனிக்குடித்தன ஆசையெல்லாம் இல்லை. அதனால, என் மகனை பிரிய வேண்டிய அவசியமும் இல்லாம போச்சு. உத்தமமான பொண்ணு அவ,” அம்மாவின் குரல் பிசிறே இல்லாமல் வெண்ணையில் இறங்கும் கத்தி போல இறங்கியது.
“”அம்மா… என்னம்மா பேசுற. நான், நீ பெத்த பொண்ணும் மா,” கண்ணீர் குளம் கட்டியது.
“”பெத்த பொண்ணுதான்; இல்லேங்கல. தங்க ஊசிங்கறதுக் காக, கண்ணுல குத்தினா, ரத்தம் வராதா என்ன. வயசான காலத்துலே தாயையும், மகனையும் பிரிச்ச பாவம் உன்னை சேராதா என்ன… இருபது வருஷம் கழிச்சு பூமராங் மாதிரி, திரும்பி உன்னிடமே வரும்.”
அம்மாவின் கேள்விகள் ஒவ்வொண்ணும், “சுருக்’கென மனதை தைத்தன.
மவுனமாய் தலை கவிழ்ந்தாள் மகி. அம்மா மெதுவாக அவளருகில் அமர்ந்து, தலையை கோதினாள். மகியின் கண்கள் நீரைப் பொழிந்தன. தாயின் மடி மீது, தலையை சாய்த்துக் கொண்டாள். இருவருமே ஏதும் பேசவில்லை; அவரவர் எண்ண ஓட்டத்தில் அலைப்புரண்டு கிடந்தனர். எத்தனை நேரமாயிற்றோ!
அந்த மவுனப் போரட்டத்தைக் கலைத்தது, “”அம்மா…” என்ற மழலைக்குரல்.
“சட்டென’ துடித்து எழுந்த மகி, குழந்தையை வாரியெடுத்து அணைத்தாள். மாறி மாறி கன்னத்தில் முத்தமிட்டாள்.
“”சாப்பிட்டீங்களா?” என்று கணவனைக் கேட்டாள்.
“”சாப்டாச்சு மகி… அம்மா ரொம்பவும் வற்புறுத்தினாங்க. அம்மா, உனக்கும், அத்தைக்கும் சுவீட் குடித்தனுப்பிருக்காங்க பாரு,” என்று சில்வர் சம்படத்தை நீட்டினான்.
வாங்கியவள், “”ஏங்க… நான் ஒண்ணு சொன்னா கோபப்பட மாட்டீங்களே,” என்றாள்.
அவனோ, புரியாமல் அவளைப் பார்க்க, அம்மா, பேரனை தூக்கிக் கொண்டு, உள்ளறைக்கு சென்றாள்.
“”என்னங்க… இந்த ஞாயித்துக்கிழமை அவஸ்தை, இனிமே வேணாங்க…” என்று துவங்கியதும், அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவன் புறமாய் வந்து நின்றவள், “”ஆமாங்க… இந்த அவஸ்தை வேணாம். நாம பழையபடி ஒண்ணாவே இருப்போம்…” என்றதும் அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது.
“”உண்மைதாங்க… மாமா, அத்தை கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நாளைக்கு என்னை அழைச்சிட்டு போங்க. நான் கலைச்ச கோலத்தை நானே சரி செய்து அழகா போட்டுடறேன்… என்னை மன்னிச்சிடுங்க,” என்று தோளில் சரிந்து கதறியவளை, அணைத்துக் கொண்டான். உணர்வு மேலீட்டில் உடம்பே ஆடியது. குப்பென்று கண்ணீர் பூத்தது. அவள் முகத்தை கைகளில் ஏந்தி, அவள் கண்களை சந்தித்தன அவன் விழிகள்.
“”உண்மையை தாங்க பேசுறேன்… என் தப்பை உணர்ந்திட்டேன். பழையபடியே சேர்ந்து இருப்போமுங்க. வாரத்துலே ஒரு நாள் சில மணி நேரப் பிரிவை, நாலு வயது குழந்தையோட பிரிவையே, என்னால் தாங்க முடியலையே… அத்தை மனசு உங்களை பிரிஞ்சு என்னமாய் வருத்தப்படும். என்னை மன்னிச்சிருங்க,” என்றவளை, இழுத்து இறுக அணைத்து முத்தமிட்டான்.
வார்த்தைகள் அவசியப்படாத அந்த அழகிய கணங்களில், கண்ணீர் மட்டும் சரம் சரமாய் அவளுடைய இமையோரத்திலிருந்து உதிர ஆரம்பித்தது. அவனுடைய இதழிலும் சங்கமித்து உப்பின், சுவையாய் இனித்தது.
எங்கோ அருகாமையில் பெய்யும் மழையில் பூமி நனைந்து, சுகமான மண் வாசனையை எழுப்பியது… அதை சுமந்து வந்த குளிர் காற்று… மெல்ல இழைந்து தம்பதிகளுக்கு இடையில் நுழைந்து குசலம் விசாரித்தது.

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *