புகார்ப் புத்தகம்

 

திருவரசு தம் மனைவியுடன் கடலூருக்குப் போவதற்காகக் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோடைகாலப் பகல். கேட்க வேண்டுமா? வெயில் தகித்தது. பாட்டிலில் தண்ணீர் தீர்ந்துவிடவே, நிலைய அண்டாவில் நிரப்பிக் கொள்ள எண்ணி, அருகில் போய்ப் பார்த்தால், காலி!

பெருத்த ஏமாற்றம். பயணியர் சேவையில் இன்றியமையாததல்லவா குடிநீர் வழங்கல்? அதுவும் வெயில் காலத்தில்? கடமை தவறிய நிலையத் தலைவர்மீது கோபங் கொண்டார்.

துணைவியின் அருகில் வந்தமர்ந்து, “”தண்ணீர் இல்லை; கடமையைச் செய்பவர்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். யாராவது செல்வாக்கு உள்ளவர் வலுவான இயக்கம் தொடங்கிப் பொதுமக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி முடுக்கிவிட்டாலொழிய, நிலைமை திருந்தாது, மேலும் மோசமாவது உறுதி” என்று பொரிந்து தள்ளினார்.

புகார்ப் புத்தகம்தற்செயலாய்த் திரும்பிப் பார்க்கையில் கண்ணில் பட்டது சுவரில் தொங்கிய பலகை:

“”புகார்ப் புத்தகம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருக்கிறது” என்னும் ரகசியத்தை அது வெளிப்படுத்திற்று.

மூளையில் உதித்தது ஓர் எண்ணம்.

புகார் எழுதப் போகிறேன் என்று கிளம்பியவரைத் தடுத்தாள் மனைவி.

“”வேண்டாம், விடுங்கள். ஏதாவது காரணம் இருக்கும்.”

“”போய்க் கேட்கிறேன். சரியான காரணமாய்த் தோன்றினால் விடுவேன்; இல்லாவிட்டால் புகார்தான்”.

நிலையத் தலைவர் எழுதிக் கொண்டிருந்தார்.

“”குடிநீர் இல்லையே?”

“”தெரியும்.

“”வைக்க வேண்டியது உங்கள் கடமைதானே?”

“”ஆமாம்.”

“”ஏன் வைக்கவில்லை?”

“”வைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“”காலிப் பாத்திரத்தைப் பார்த்தால் தெரியாதா?”

“”வைக்க வைக்கக் காலியாகிறது”

“”சாப்பிடச் சாப்பிடப் பசித்தால் சாப்பிடாமல் இருப்பீர்களா?”

“” நீங்கள் பயணியா, வம்பு தும்புக்காரரா?”

“”இரண்டுந்தான். புகார்ப் புத்தகம் கொடுங்கள்”.

கொஞ்சமும் தாமதிக்காமல் தந்தமை வியப்பளித்தது. கெஞ்சுவார் எனத் திருவரசு நம்பியிருந்தார்.

கடைசிப் புகார் எழுதி இரண்டு ஆண்டுக்குமேல் ஆகியிருந்தது. அது வாபசும் ஆகிவிட்டது! விழிப்புணர்வே இல்லாத பயணிகள்! புகார்மேல் புகாரைப் பதிந்தால்தானே பொதுத்துறை நிறுவனம் சீர்படும்?

தாம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதை எண்ணிப் பெருமிதம் பொங்க, புகாரை எழுதி, பக்கத்தில் நின்ற இரு பயணிகளிடம் (தண்ணீர் இல்லையெனப் புலம்பிக் கொண்டிருந்தவர்கள்) சாட்சிக் கையெழுத்தைப் பெற்றுப் புத்தகத்தைத் திருப்பித் தந்தார்.

வாசித்துப் பார்த்த நிலையத் தலைவர், முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் வைத்துக் கொண்டார்.

வெற்றிப் புன்னகை சிந்தியவாறே, “”கடமை தவறிய குற்றவுணர்வு கொஞ்சங்கூட இல்லை என்பது மட்டுமல்ல, திமிராயும் பேசினார். மாட்டி விட்டுவிட்டேன். சரியான பாடம் படிப்பார்” என மனைவியிடம் தெரிவித்தார்.

அருஞ்சாதனை நிகழ்த்திய மன நிறைவு!

ஒரு மாதத்துக்குப் பின்பு அஞ்சலட்டை வந்தது. விசாரணைக்கு மேலதிகாரி அழைத்திருந்தார். திருவரசுக்குப் பெருமை பிடிபடவில்லை. “”புகார் வேலை செய்கிறது;

என்னாலான சிறு தொண்டு நாட்டுக்கு ஆற்றியிருக்கிறேன்” என்னும் எண்ணத்துடன், குறிப்பிட்ட நாள், நேரத்தில், கும்பகோணம் சென்றார். சாட்சிகளும் வந்திருந்தார்கள்.

மூவரும் உற்சாகத்துடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

திருவரசு அழைக்கப்பட்டார்.

“”நீங்கள்தான் திருவரசா?”

“”ஆமாம்”

“” சொந்த ஊர் எது?”

“”கடலூர்”

“”என்ன வேலை?”

“”நகராட்சி அலுவலர்”

“”இங்கே வந்து போக எவ்வளவு செலவாகும்?”

“” ஐம்பது ரூபாய்”

“”விசாரணை விசாரணை என்று நான்கு தடவை இழுத்தடித்தால்? வீண் செலவு ஒருபுறம், அலைச்சல் மறுபுறம்; அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம்.

இதையெல்லாம் யோசித்துப் பார்த்தீர்களா?”

“”இல்லை; ஆனால் தட்டிக் கேட்க யாராவது வேண்டும்தானே?”

“”தட்டிக் கேட்டாலும் சரி, முட்டிப் பார்த்தாலும் சரி. என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? எங்கள் அலுவலர் மேலே நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம்;

காப்பாற்றத்தான் பார்ப்போம்”

“”அப்புறம் எதற்குப் புகார்ப் புத்தகம் இருக்கிறது என்ற அறிவிப்பு?”

“”இருக்கிறது என்றால் வாங்கி எழுது என்றா அர்த்தம்?”

என்ன பதில் சொல்வது என்று திருவரசுக்குத் தெரியவில்லை.

அதிகாரி தொடர்ந்தார்:

“”புகாரை வாபஸ் வாங்குவதாகப் புத்திசாலித்தனமாக எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் போய்ச் சேருங்கள்”

மறுமொழி கூறாமல், திருவரசு அவ்வாறே செய்த பின்பு வெளியேறிச் சாட்சிகளின் பார்வையில்படாமல் நைசாய் நழுவினார்.

- சொ.ஞானசம்பந்தன் (மார்ச் 2015) 

தொடர்புடைய சிறுகதைகள்
”நீ சரக்கடிப்பியா?” ‘ம்.. எப்பவாச்சும்.. வெளியூர் போனா மட்டும்’ “வெளியூரில் தான இருக்கோம். அப்ப இன்னிக்கு நைட்டுக்கு நாம் சேர்நது சரக்குப்போடுவோம்.. ரூம்முக்கு வந்துடு” என்று கோமதிசங்கர் தான் என்னை அழைத்தார். பொதுவாகவே நான் தண்ணியடிப்பதை விட்டு, பல வருடங்களாகிவிட்டன. பள்ளி இறுதியில் தொடங்கிய பழக்கம், ...
மேலும் கதையை படிக்க...
நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை கொஞ்சமும் விலகாமல் எப்படியோ சுவற்றில் மெல்ல ஏறும். அப்படிப் ...
மேலும் கதையை படிக்க...
படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர் உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
பொதுவாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அதிவீரன் வெளியே செல்வதில்லை. அதற்கு அர்த்தம் வீட்டுக்குள் கொண்டாடுகிறான் என்பதல்ல. புத்தாண்டையே கொண்டாடுவதில்லை. அதற்கும் விசேஷமான காரணம் ஒன்றும் இல்லை. அவனுக்கு கூட்டம் என்றால் பிடிக்காது. அதனால் அன்று இரவு வெளியே ...
மேலும் கதையை படிக்க...
குமரனின் அப்பா இன்று தான் வருகிறார். காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் ...
மேலும் கதையை படிக்க...
பொய் முகம்
ஓட்டைக் காலணாக்கள்
இழப்பு
புத்தாண்டுக் கொண்டாட்டம்
அப்பா வருகிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)