பீரம் பேணில் பாரம் தாங்கும்

 

கிராக்கியை இறக்கி விட்டு, ஓட்டிவந்த சைக்கிள் ரிக்க்ஷாவை ஸ்டாண்டில் ஓரங்கட்டி நிறுத்தினான் துரை. மடித்துக் கட்டியிருந்த அழுக்கு லுங்கியைத் தூக்கி உள்ளே அணிந்திருந்த காக்கி நிஜாரின் பாக்கெட்டிலிருந்து பீடிக் கட்டையும், வத்திப் பெட்டியையும் எடுத்தான். பக்கத்திலிருந்த பெட்டிக் கடையில் ஒரு பாக்கெட் தண்ணீரை வாங்கி, வாய் கொப்பளித்து பின் ஒரே மடக்கில் குடித்துவிட்டு, பீடியைப் பற்ற வைத்தான். தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டால் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி நிழலில் உட்கார்ந்தான்.

சிறிது நேரத்தில் ஸ்டாண்டுக்கு இன்னொரு சைக்கிள் ரிக்க்ஷா வந்தது. அதைத் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தியவனைப் பார்த்து, “இன்னா தாசு, சவாரி ஒன்னும் கெடக்கிலியா?’ என்றான் துரை.

“இல்ல தொரெ, இப்போதான் வண்டி எடுத்தேன். இன்னிக்கி வெள்ளி கெழமையாச்சே, கோயிலாண்ட சவாரி கெடைக்கும்னு வந்தேன். நீ இன்னா, சவாரிக்கி வெய்டிங்கா?” என்றான் தாஸ்.

“ஆமாந்தாசு, எல்பெஜ் ஆஸ்ரமத்திலிருந்து அந்தம்மாவை கோயிலுக்கு கூட்டியாந்தேன். எப்டியும் அந்தம்மா திரும்பி வர ஒருமண்நேரமாயிடும். வரத ராஜ சாமி கோவில்ல இன்னிக்கி கூட்டம் ரொம்பி வழியுமே.”

‘தொரெ , நான் இன்னும் போனி பண்லே, நீ ஒரு டீ சொல்லேன்”

‘சரி, அந்த டீ கடைலெ சொல்லி எனக்கும் சேர்த்து டீ வாங்க்கினுவா” என்றபடி இழுத்துக்கொண்டிருந்த பீடியை கீழே போட்டு காலால் அணைத்தான் துரை.

டீ க்ளாஸை லாவகமாக சுழற்றிச் சுழற்றி ஆற்றியபடியே தாஸ் ‘ஏன் தொரெ, வாராவாரம் அந்தம்மாவை கோவிலுக்கு கூட்டியாறியே, பாக்கறதுக்கு வசதியான குடும்பம் போல தான் தெரியுது. ஏன் இங்க காஞ்சிவரத்தில எல்பேஜ் ஆஸ்ரமத்தில தனியா தங்குது? பசங்கல்லாம் யாரும் இல்லியா?” என்று கேட்டான்.

“அந்த கொடுமையை ஏன் கேக்கற தாசு. நல்லா வாழ்ந்த குடும்பந்தான். போன மாசம் அவங்க புருசனுக்கு தெவசம்னு எனக்கு சாப்பாடு வாங்கி குட்துச்சி. என் பொண்டாட்டிக்கி புச்சா ஒரு சேலை கூட வாங்கி குட்துச்சி, அந்த புண்ணியவதி. புருஷன் போயிட்டாலும், ஒரு புள்ள இருக்காம்பா. இன்ன புரோஜனம் சொல்லு’ என்று பெருமூச்சு விட்டபடி துரை பீடியை எடுத்து தாஸுக்குக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றைப் பற்றவைத்தான்.

“இன்னா தொரெ சொல்றே, புள்ள இருக்கறப்போ இந்தம்மா ஏன் இங்க ஆஸ்ரமத்துல தங்குது? அவன் இன்னா வெளிநாட்லகிறானா?”

“இல்ல தாசு, அவன் பம்பாயில ஏதோ பெரீ உத்தியோகத்துலகிறானாம், அவம் பொண்டாட்டியும் வேலை செய்தாம். ரெண்டு பேரபசங்க இருக்காங்களாம். கார், அடுக்கு மாடி வூடுன்னு நல்லா இருக்கப்பட்ட குடும்பந்தானாம்”. அந்தம்மா தான் ஒரு தபா சொல்ச்சி”.

‘அப்புறம் எதுக்கு தொரெ, இந்தம்மா இங்க வயசானவங்க தங்கற எடத்துல ஒண்டியா இருக்கு? புள்ள வூட்டை வுட்டு தொரத்திட்டானா?”

“என்கிட்டே சொல்லும்போது, அதெல்லாம் புள்ளயை வுட்டுகுடுத்து பேசல தாசு. எல்லாரும் ஒண்ணா தான் பம்பாய்ல இருந்தாங்களாம். இந்தம்மாவும் வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம். ரெண்டு பெரும் ரிடையராகி வூட்லே இருந்தப்போ, ஒரு நாள் திடீர்னு மாரடைப்புல புருஷன் செத்துட்டாராம். புருஷன் செத்து 2,3 வருஷம் இருக்கும் போல. இந்தம்மாவுக்கு டிபி நோய் வந்திடுச்சாம். அங்க இருந்தா பேரபசங்களுக்கு தொத்திக்கும்னு இந்தம்மா, எல்பேஜ் ஆஸ்ரமத்துல காட்டேஜ் வாங்கினு இங்கேயே வந்து தங்கி வைத்தியம் பாத்துக்கறாங்களாம்”.

“இன்னா இது, அக்கரமமா இருக்கு. பம்பாயில இல்லாத வைத்தியம், காஞ்சிவரத்துல கெடைக்குமா? மெட்ராஸ்ல கூட வைத்தியம் பார்க்கலாமே? என்றான் தாஸ்.

“அதான் தாசு, எனக்கும் புரீலெ. இந்தம்மா இங்க வந்து ஒரு வருஷம் ஆவபோது. துட்டு இருக்கறதால ஏதோ வசதியான காடேஜ்ல தான் தங்கி இருக்காங்க. அந்த எல்பெஜ் ஆஸ்ரமத்தில இருக்கறவங்க எல்லாம், சொந்தமா வாங்கனவங்க, வாடகைக்கு தங்கரவங்கன்னு எல்லாமே வயசானவங்க, கொஞ்சம் வசதியானவங்க தான். சோறு தண்ணிக்கி குறைவில்லை. ஒதவிக்கு அந்த ஆஸ்ரமத்தில வேலகாருங்க, செக்யூரிட்டி எல்லாம் இருக்குது. உறவுக்காருங்க யாரும் வந்து பாக்கற மாதிரி தெரில.” என்று சொல்லிவிட்டு துரை மௌனமானான்.

சிறிது நேரம் கழித்து அவனே, “இந்தம்மாவோட புள்ள மூனு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் வந்தான், தாசு. அன்னிக்கி அந்தம்மா ஏதோ டெஸ்ட் எடுக்கனும் டாக்டர் வூட்டுக்கு போவணும்னு என்னை கூப்டிருந்தாங்க. ஆஸ்ரமத்துக்கு போனேன். அன்னிக்கி தான் அந்த கேப்மாரியை பாத்தேன். மெட்ராசுக்கு வேலையா வந்தானாம், அந்தம்மா சொல்லிச்சு. நின்னபடியே பேசிட்டு அப்படியே கெளம்பி போய்ட்டான் தாசு. ரவ நாழி கூட ஆத்தாளாண்ட கிட்டே உட்கார்ந்து பேசல. ஏதோ பேப்பர்ல அந்தம்மா கையெழுத்து வாங்கிட்டு திரும்பிகூட பாக்காம அப்படியே போய்ட்டான். அவன் போனதும் இந்தம்மா அப்படியே கண்கலங்கி நின்னுட்டிருந்தது. ‘வண்டிலே ஏறும்மா, டாக்டர் கிட்டே போவணும்னு சொன்னியே’ன்னு கூப்டேன். ‘வேணாம் தொரை, நாளைக்கு போலாம், இப்போ எம்மனசு சரியில்லேன்னு கண்ணை தொடைசிக்கிட்டு காடேஜுகுள்ளே போயிடுச்சி. எனக்கு ரொம்ப பேஜாரா பூட்சிப்பா”.

“பெத்த ஆத்தா கிட்டே அப்டியா செஞ்சான் அந்த பேமானி?” என்று ஆத்திரப்பட்டான் தாஸ்.

“மறுநாள் அந்தம்மாவை டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போனப்போ, இன்னொரு பெருசும் அந்தம்மாகூட சவாரிக்கு வந்திச்சு. அவங்க பேசிக்கினது என் காதுல விழுந்துச்சி. “என்ன லக்ஷிமியம்மா, நேத்து உம் புள்ளாண்டான் வந்தான் போலே இருக்கே. அவன் உங்க கிட்டே நடந்துகிட்டதை நானும் பார்த்தேன். வந்தான், பழக் கூடை குடுத்தான், ஏதோ பேப்பர்லே கையெழுத்து வாங்கிட்டு கெளம்பி போறானே. உடம்பு எப்படி இருக்கு, மருந்தெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கறீங்களான்னு அம்மா கிட்டே உட்கார்ந்து பேசக் கூட நாழி இல்லியா? கொஞ்சங்கூட பாசம் இல்லியே உம் புள்ளைக்கு?”ன்னு அந்த பெரிசு கேட்டுது, அதுக்கு அந்தம்மா, “தாய்ப் பால் குடுத்து கூடவே வச்சி வளர்த்தா தானேம்மா பாசம் வரும். நான் அவன் கிட்டே பாசம் காட்டி இருந்தா தானே, அவனுக்கு என் மேல் பாசம் வரும். அவன் பொறந்தப்போ நானும் என் வீட்டுக்காரரும் ரொம்ப பிசியா இருந்தோம். ஊர் ஊராகப் போக வேண்டியிருந்தது. ஆறாவது மாசத்திலிருந்து மெய்ட் சர்வண்ட் கிட்டே தான் வளர்ந்தான். ஒரே பையனா இருந்தும் அவனை சரியாய் பார்த்துக்க முடியலே. சின்ன வயசிலிருந்தே அவனை ஹாஸ்டல்ல போட்டு பெரிய ஸ்கூல்லே படிக்க வச்சோம். வெளிநாட்டுக்கும் போய் படிச்சான். நல்லா படிப்பான். ஆனால் யாரோடும் ஒட்ட மாட்டான். அவன் உண்டு, அவன் வேலை உண்டுன்னு தனியாவே வளர்ந்து பழகிட்டான். அவனோட சின்ன வயசிலே நான் பிஸியா விலகி இருந்தேன். இப்போ எனக்கு நேரம் கெடச்சப்போ அவன் விலகி இருக்கான். அவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தோமே தவிர, பாசத்தை ஊட்டி வளர்க்கத் தவறிட்டேன். இப்போ அவன் கிட்டே எப்படி நான் பாசத்தை எதிர்பார்க்க முடியும்”

“இல்லை, உங்களை மெட்ராஸுக்கு கூட்டிட்டுப்போய் டெஸ்ட் எடுத்து மருந்தெல்லாம் வாங்கி குடுத்திருக்கலாமே?”

“மெட்ராஸ்லே எனக்கு உறவுக்காரங்க எல்லாம் இருக்காங்க. அங்கேயே ப்ளாட் எடுத்து தங்கலாம் தான். ஆனா அங்கிருக்கிற உறவுக்காரங்க எளக்காரமா பேசுவாங்க. என் மகனை குத்தம் சொல்லுவாங்க. அதனாலே தான், யார் கண்ணிலேயும் படவேண்டாம்னு இங்க காடேஜ்லே தங்கி காஞ்சியில் இருக்கிற கோவில்களும், அந்த வரதராஜ பெருமாளுமே கதின்னு இருக்கேன். இன்னும் கொஞ்ச காலம். அப்புறம் அவன் திருவடியே சரணம்.”

“உனக்கென்ன லக்ஷ்மியம்மா, 60 வயசு தானே ஆவுது. என்னை விட சின்னவ தானே. எனக்கு ஒரே பொண்ணு. அவள் கல்யாணமாகி, அமெரிக்காவுலே அவ புருஷனுக்கு வேலை, குழந்தை குட்டின்னு செட்டில் ஆயிட்டா. என் புருஷன் போனதும், என்னை அவளோடு வந்து இருக்கச்சொன்னா . நானும் ரெண்டு மாசம் அங்க போய் இருந்தேன். அந்த அந்நிய தேசம் எனக்கு ஒத்து வரலைன்னு இங்கே வந்துட்டேன். உங்க புள்ளே இங்கே பாம்பேலே தானே இருக்கான். அங்கே அவனோட இருந்து நீ உன் டிபி நோய்க்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாமே?”

“எடுத்துக்கலாம் தான் . பீச்சு காத்து வீசுற அந்த அடுக்கு மாடி வீட்லே எனக்குக் கஷ்டமா இருந்தது. எனக்கு இருமல் நோய் முத்திட்டுது. அடிக்கடி நான் இரும்பரதால பக்கத்து குடுத்தனக்காரெல்லாம் கம்ப்ளைன்ட் பண்றாங்களாம். பேரப்பிள்ளைகளுக்கு என் டிபி தொத்திக்கும்னு மருமகள் பயப்படுவதிலும் ஞாயமிருக்கு. என்னை கவனிக்க அவங்களுக்கு நேரமில்லை. அதான் இங்க வந்திட்டேன்” அப்டீன்னு பேசிக்கினாங்க தாசு என்றான் துரை.

“அந்தம்மா சொல்றதும் நாயந்தானே தொரெ”, என்றான் தாஸ்.

“இன்னா நாயத்தை கண்டுட்டே? பெத்த ஆத்தாவுக்கு டிபின்னா தள்ளி வெச்சிடுவியா? இது பாரம்னா, அந்தம்மா பத்து மாசம் சுமந்தது பாரமில்லியா? வளத்தது, படிக்க வச்சது, கல்யாணம் காட்சின்னு பண்ணி வெச்சது பாரமில்லியா? அந்தம்மா ஊட்டுக்காரு உயிரோட இருந்திருந்தா இப்டி உட்டுடுவாரா? இன்னா பேசற நீ?” கோபத்தில் சீறினான் துரை.

பிறகு சீற்றம் தணிந்து தாஸைப் பார்த்து கண்கள் பனிக்க கரகரத்த குரலில், “எங்காத்தா கூட தான் சீக்காளி. லொக்கு லொக்குன்னு இருமிகினு இருக்கும் கெழவி. என் பொண்டாட்டி முத்துமாரி ‘என்னால பாடெடுக்க முடியாது, வேற வூட்லே வை’ன்னு சிணுங்கனா. எட்டி உட்டேன் ஒரு ஒதை. எங்காத்தா என்கூட இல்லாம வேறே எங்க போவா? குடிகார அப்பன் செத்த நாள்லே இருந்து ரோட்ல காய்கறி வித்து, 12, 13 வயசு வரைக்கும் எனக்கு சோறு போட்டு வளர்த்தாளே கெழவி. அவளுக்கு முடியலன்னா வூட்டை வுட்டு தொரத்திடுவியா? கஷ்டந்தான், பளுவு தான். அதை சுமக்க வாணாமா? அவ பத்து மாசம் சுமந்தாளே? பொறந்ததுல இருந்து 2,3 வயசு வரைக்கும் தன் ரத்தத்தை பாலாக்கி குடுத்தாளே? அது கஷ்டமில்லியா? அதான் முத்துமாரி கிட்டே சொன்னேன், ‘நீ எங்காத்தாவை சரியா பாத்துக்கலைன்னா, உம்மவன் உன்னை ரோட்ல விட்ருவான். அவனுக்கு ஒய்ங்கா உம்பால் குடுத்து வளத்தா அவன் பின்காலத்துல உன்னை பாரமா நெனக்க மாட்டான். புட்டிப்பாலை குடுத்து தூரமா வச்சீன்னா, அவனும் உன்ன பாரமா நெனச்சி தூரமா வெச்சிடுவான்”

“ஆமாந்தொரெ, அன்னிக்கி சவாரிக்கு வந்த ஒரு பெரியவர் கூட சொன்னாரு. தாய்ப்பாலு குடிச்சி வளர்ற கொழந்தைங்களுக்கு பெத்தவ மேல பாசம் அதிகமா இருக்குமாம்.எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கற சக்தியும் அதிகமா இருக்குமாம். ரெண்டு வயசு வரைக்குமாவது தாய்ப்பால் தரணுமாம். இப்போ எங்கே, ஆறாம் மாசமே புட்டிப்பால் தானே. அப்டி வளந்த பசங்களுக்கு பாசம்னா என்னன்னு புரியப் போவுது. பெத்தவங்களே பாரமா தான் தெரியும்”.

“வுடு தாசு, அவங்க அவங்க பாரத்தை அவங்க அவங்க சுமந்து தான் தீரணும். அதோ, அந்தம்மா வராங்க. நான் கெளம்பறேன். இந்தா டீக்கு காசு குத்துடு” என்று காசை தாசிடம் கொடுத்துவிட்டு ரிக்க்ஷா வண்டியை ஸ்டாண்டிலிருந்து தள்ளிக்கொண்டு போனான் துரை.

பி.கு: “பீரம் பேணில் பாரம் தாங்கும்” — கொன்றை வேந்தன் (அவ்வையார்)

பீரம் = தாய்ப் பால். 

தொடர்புடைய சிறுகதைகள்
மிகச் சாதாரணமான விஷயம் தான். அது இவ்வளவு பெரிய சண்டையாக மாறி எனக்கும் என் மனைவிக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. எங்களுக்குக் கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. டிகிரி படித்து முடித்த ப்ரியா, கல்யாணம் முடிந்த கையோடு, அண்ணாநகரில் நான் ...
மேலும் கதையை படிக்க...
முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார். ஒவ்வொரு பாடம் துவங்கும் போதும் அதன் பின்னணிக்கு ஒரு கதையோ அல்லது வரலாற்றுத் துணுக்கோ, ஆச்சரியப் படவைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்து மிட்டேர்ம் பரிட்சைக்குப் படித்துவிட்டுத் தூங்கி, காலையில் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது, என் செல்போன் அலறியது. என் க்ளாஸ்மேட் சந்தியா போனில் சொன்ன செய்தி கேட்டு அப்படியே கீழே சரிந்தேன். என் கைகால்கள் நடுங்க ...
மேலும் கதையை படிக்க...
அன்று மாலை , ஐந்து மணி இருக்கும். ஆவி பறக்க காஃபியை எனக்குப் பிடித்த கோப்பையில் நிரப்பிக் கொண்டு, பால்கனிக்கு வந்து சுவரில் சாய்ந்தபடி, எதிரிலிருக்கும் பார்க்கைப் பார்த்தேன். நானும் என் கணவரும் இந்தப் பலமாடிக் குடியிருப்பிலிருக்கும் ஃபிளாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த ...
மேலும் கதையை படிக்க...
சென்ற ஞாயிறன்று என்னைப் பிறந்த வீட்டிற்கு அழைத்துப் போய் பிரசவம் பார்க்க நாள் குறிப்பதற்காக என் பெற்றோர் வந்திருந்தனர். இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன, டெலிவரிக்கு. அதற்குள் வீட்டில் ஆளாளுக்கு குழந்தைக்குப் பெயர்வைப்பதில் போட்டி. பிறக்கப் போவது பெண்ணா பையனா என்பது ...
மேலும் கதையை படிக்க...
அந்த குறுகலான தெருவில், சாலையை ஆக்ரமித்துப் போடப்பட்டிருந்த சிறு கடைகளையும், சாலையின் ஓரத்தில் படுத்திருந்த எருமை மாடுகளையும், அவைகளின் மீது விழுந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களையும், நடுத் தெருவில் நடந்து கொண்டிருந்த மனிதர்களையும் லாவகமாகத் தவிர்த்து, வளைந்து நெளிந்து தன் சைக்கிளை ...
மேலும் கதையை படிக்க...
மூன்றுஆண்டுகளாகப் பிரியப்பட்டு, பிரயத்தனப்பட்டு, இப்போதுதான் நிறைவேறப்போகிறது, மங்களம்மாளின் கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்தயாத்திரை விருப்பம். மங்களம்மாளுக்கு அறுபது வயதாகிறது. அவர்களுக்கு திருநெல்வேலி பூர்விகம். இரண்டு வருடங்களுக்கு முன் கணவர் கூட்டுறவுவங்கி உத்யோகத்திலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே மாரடைப்பில் இறந்துபோனார். மூன்று மகன்கள். முதல்வன் மாசிலாமணிக்கு 40 ...
மேலும் கதையை படிக்க...
தேசிய நெடுஞ்சாலை 4. ஹுண்டாய் கார் பாக்டரிக்கு அருகில் சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல், அந்த மாருதி ஸ்விப்ட் கார் சென்னையை நோக்கிப் பறந்தது. சாலையோரத்தில் இருந்த ட்ராபிக் போலீஸ்காரர் சைகை காட்டியும், விசிலடித்தும் நிற்காமல் வேகமாகப் பறந்தது. போலீஸ்காரர் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் டைனிங் டேபிளில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், டென்ஷனாகாமக் கேளுங்க” என்று முன்னறிவிப்புக் கொடுத்து என்னை டென்ஷன் படுத்திவிட்டு விஷயத்தைச் சொல்லுவது தான் என் மனைவிக்கு வழக்கம். அன்றும் அதே ...
மேலும் கதையை படிக்க...
இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும். மெட்ராஸிலிருந்து 25 மைல் தொலைவிலிருக்கும் திருவள்ளூர் என் தந்தை பிறந்து வளர்ந்த ஊர். அங்கு நடக்கும் 'குரு பூஜை'யில் கலந்து கொள்ள அம்மாவையும், ...
மேலும் கதையை படிக்க...
என் பொண்டாட்டி ரொம்ம்ம்ம்ப நல்லவ!
கர்மயோகி
நீங்களே நியாயம் சொல்லுங்கள், நான் குற்றவாளியா?
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் ….
பெயர்த் தேர்வு
வாக்குச்சாதுர்யம்
அம்முவும் கேதார்நாத் தரிசனமும்
வேகம்
எக்ஸ்சேஞ்ச் ஆபர்
கழுதை சாய்ந்திருக்கும் வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)