பி.ஜி.ஜி

 

அம்மா என் மொபைல பாரு. கால் வருது. கிணற்றிலிருந்து பாட்டி இறைத்துக்கொட்டும் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த வியக்தா அலறினாள். பாம்பு காது. எங்கேயோ இருக்கு உன் மொபைல். நெனப்பு பூரா அதுல தான்.

தப்புடியம்மா. ரொம்ப உபயோகிச்சா காதும் கண்ணும் போயிடுமாம். அடுத்த வீட்டு சாம்பு சொன்னான். பாட்டி ஆரம்பித்தாள்.

எதப் பண்ணறியோ அதுல கவனம் செலுத்து. நிம்மதியா குளி. சுத்திவர பறவைகள் சத்தம் எப்டி கேக்குது பாரு. அம்மாவின் பங்கு.

கிணற்றடியில் சிறிது தொலைவில் பறந்து விரிந்து இருந்த அரச மரத்தில் அமர்ந்திருந்த காக்கா, குருவி, கிளி இவைகளின் சத்தம் தான்.

எங்கேயோ தொலைவிலிருந்து ஆடு கத்தும் ஒலி . விட்டு விட்டு மா… மா…. என பசு மாடு கதறும் ஒலி. வாய்க்காலில் தண்ணீர் ஓடும் சலசலப்பு.

இலைகள் அசையறது கூட கேக்குது. என் மொபைலோட ரிங் டோன் கேக்காதா. சொல்லி முடிப்பதற்குள் மறுபடியும் போன். எப்போதுமே எதையுமே கண்டுகொள்ளாத தாத்தா ஈஸி சேரிலிருந்து எழுந்து மொபைலைக் கிணற்றடிக்கு எடுத்து வந்தார்.

என்னதிது பெயர் எதுவும் போடாம பிஜிஜி னு வருது. தானா கட் ஆயிடுச்சு. ரெண்டு மிஸ்ட் கால் வந்திருக்கு. லதா… இந்தா ஒம் பொண்ணோட மொபைல புடி. ஈரத்தோட தொடச்சொல்லாத. ஷாக் அடிக்கும். அவருக்குத் தெரிந்த டெக்னாலஜியை சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

இடையில் என் பாடு திண்டாட்டம் தான் நான் யோசிக்க ஆரம்பிதேன்.. அம்மா, அப்பா சரி, தப்பு னு சொன்னத அப்டியே ஏத்துக்கிட்டு இதே ஊருல தான் நான் வளந்தேன். எதையும் அதிகமா ஆராய்ச்சி பண்ணினதில்ல.. ஆனா இருபது வருசம் பாம்பே குடித்தனத்துக்கப்புறம் இவங்க சொல்ற எல்லாத்தையும் அப்டியே ஏத்துக்க முடியல.

எங்க அனுபவத்துல சொல்றோம் னு அவங்க சொன்னாலும் உங்களுக்கு அனுபவமே இல்லனு தான் சொல்லத்தோணுது. இப்போ எம் பொண்ண பத்தி பேசக் கூட எனக்கு ஆளில்லாத மாதிரி இருக்கு. வாயத் தொறந்தாலே நீ ரொம்ப செல்லம் குடுத்து தப்பா வளக்கற னு சொல்லுவாங்க.

வியக்தாகிட்ட இந்த போன் கால பத்தி மெதுவா தான் கேக்கணும். அவ அப்பாவ கூப்டா சின்ன சின்ன விசயத்த பெரிசாக்காதம்பாரு. பிஜிஜி யாரா இருக்கும். எதுக்கு இவ்ளோ ரகசியமான பெயர். வயசு இருபது ஆச்சு மூணாவது வருசச் சட்டக் கல்லூரிப் படிப்புவேற. இப்டியே சும்மா விட்டுறக் கூடாது. அதுக்காக உடனே கேக்கவும் முடியாது. விட்டுத்தான் பிடிக்கணும். மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அதற்குள் ஏழு மிஸ்ட் கால்.

குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டு போனை வாங்கிய வியக்தாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.. பாட்டி இன்னிக்கு சாப்ட என்ன ஸ்பெஷல். கொழுக்கட்டையா. தொட்டுக்க என்ன. பாட்டியும் பேத்தியும் குலாவிக்கொண்டிருந்தனர்.

சந்தேகம் ங்கறது கொடும. தீர்வு கெடைக்கற வரைக்கும் மண்டயப் போட்டு கொடையும். பாய் ப்ரெண்ட்ஸ் கிட்ட சகஜமா பழகு னு சொன்னதே நான்தான். எதிலயும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது எல்லா ப்ரெண்ட்ஸையும் ஒருதடவையாவது வீட்டுக்கு கூட்டிட்டு வா. போன லாக் பண்ணக்கூடாது. அப்பா சொன்ன எல்லாத்தையும் இவ்ளோ நாள் கேட்டுட்டு தானே இருந்தா. இப்ப என்ன.

நகுலைக் கூப்பிட்டுற வேண்டியத்துதான். தீர்மானித்தேன்.

எதிர்பார்த்ததுக்கு மாறாக நகுல் பேசினார்.

கொஞ்சம் அவள கவனிச்சுக்கிட்டே இரு. இங்க இருக்கற அவளோட எல்லா ப்ரெண்ட்ஸையும் நமக்கு தெரியும். ஊருல இந்த நாலு நாள்ல பாட்டி கூட போகும்போது ப்ரெண்ட் புடிச்சிருக்கலாம். அடுத்த தடவ போன் வந்தா அவ பேசும் போது அவளுக்கு தெரியாம நின்னு கேளு. நாளைக்கு வரைக்கும் பாரு. இல்லன்னா நான் மெதுவா கேக்கறேன். பெரியவங்க கிட்ட ஏதாவது சொல்லி சமாளி. திட்டாத. அப்பறம் எல்லாத்தையும் மறைக்க ஆரம்பிச்சிடுவா.

என்ன அநியாயம். எம் பொண்ணயே வேற ஆள் மாதிரி வேவு பாக்கணும். பரவாயில்ல. இன்னிக்கு ஒரு நாள் தானே. மனதில் சொல்லிக் கொண்டேன்.

நீ இன்னும் குளிக்கலயா. எதுக்கு பிரம புடிச்ச மாதிரி நிக்கற. ஒம் பொண்ணு பாரு. எவ்ளோ அழகா பட்டுப் பாவாடை தாவணி போட்டு கெளம்பிட்டா. ம் .. சீக்கிரம். அம்மாவின் குரல் கேட்டு நினைவிலிருந்த மீண்டநான் என் மகளைப் பார்த்தேன். பார்த்துப் பார்த்து டிரஸ் பண்ணிருக்காளே.

யோசித்துக் கொண்டே குளித்து புடவை உடுத்தும்போது அம்மா சொன்னாள். உம் பொண்ணு ரெடி. அவ விமலா வீட்டுக்கு போயிருக்கா. அவ பையன் கூட ஏதோ பேசணுமாம்.

அம்மா அவளோட பையன் பேரு என்ன?

பால கணேஷ்…. நல்ல பையன். வியக்தாவோட வயசு தான். பாவம் படிப்பு தான் வர மாட்டேங்குது. ஏதோ பெயிலான பாடத்துல பரீட்சையாம். அதுக்குதான் விமலா நம்ம வியக்தாவக் கூட்டிட்டுப் போறா. அவனுக்கு சொல்லிக் கொடுக்க.

லேசாகப் பெருமூச்சு விட்டேன். விமலா புருசன் பேரு கௌதம். அதனால தான் பாலகணேஷ் கௌதம் ங்கறத பிஜிஜி னு சேவ் பண்ணியிருக்கா. இத மொதல்ல நகுல்கிட்ட சொல்லிடணும்.

எல்லா வேலையும் முடிஞ்சாச்சு. பெரியம்மா வீட்லேந்து மதியச்சாப்பாடு வரும். எல்லாத்தையும் எடுத்துட்டு ஆத்தங்கரை முருகர் கோவிலுக்குப் போகணும். இன்னும் நேரமாக்காத. அம்மா முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

வேகவேகமாகக் கிளம்பி அரை கிலோமீட்டர் தொலைவிலிருந்த பெரியப்பா வீட்டை அடைந்தோம். வாசலிலேயே பெரியப்பா காத்திருந்தார்.

எங்க மைடியர் ஜூனியர் வியக்தா என அவளை அழைத்து ஸ்பெஷலாக கவனிக்க ஆரம்பித்தார்.

லதா வருங்கால வக்கீலுக்கு மொதல்ல நல்ல மாடலா ஒரு போன் வாங்கிக்கொடு. பாவம் அவளால காலைலேந்து எங்கூட பேசவே முடியல. அவருக்குப் பின்னால் நின்று வியக்தா கைகூப்பிக் கொண்டிருந்தாள்.

என்ன ஆச்சு. போன் நல்லாத்தானே இருக்கு. அதுக்கு மேலயும் பொறுமையில்லாம வியக்தாவைக் கூப்பிட்டு கண்டிப்பான குரலில் விசாரிக்க ஆரம்பித்தேன்.

காலைலேந்து என்ன நடிப்பு. விமலா பையன் கூப்பிட்டா சொல்லிட்டு மொபைல எடுத்து பேச வேண்டியதுதானே. இப்போ பெரியப்பா கிட்ட பொய் வேற சொல்ற. என்ன ஆச்சு உனக்கு. நான் உன் அம்மா. நீ என்ன நினைக்கற. செய்யற எல்லாம் நீ சொல்லாட்டியும் எனக்குத் தெரியும். ஞாபகம் வச்சிக்கோ. பட பட என பேசி முடித்தேன்.

நிதானமாக வியக்தா ஆரம்பித்தாள். நீ என் அம்மா தான் ஆனா உனக்கு எதுவுமே தெரியாது. நீ நினைக்கற மாதிரி ரொம்ப ஈஸியா எல்லாரும் யார் பின்னாலயும் போயிட மாட்டோம்.

இப்போ இருக்கற தலைமுறைல யாரும் யாரையும் சுலபமா நம்பிட மாட்டோம். நாலு போன் கால் ல காதலிச்சு எட்டாவது போன் கால் ல இழுத்துட்டு ஓடறதெல்லாம் இப்போ சினிமா ல கூட கெடையாது. எதுக்கு டென்ஷன ஆகற. நீயா ஒரு மாப்ள பாத்தாலும் அவன நல்லா இண்டர்வியூ பண்ணி பாலோ பண்ணி கவனிச்சி அப்புறம்தான் ஒத்துக்குவேன். லூசுமாதிரு எதுக்கு டென்ஷன் ஆகற.

உங்க பெரியப்பா நாம ஊர்லேந்து வந்ததுலேந்து போன்ல எங்கிட்ட ஜுனியர் லாயர் கிட்ட பேசற மாதிரி சட்டம் பேசிக்கிட்டே இருக்கார். நாங்க அந்த காலத்துல அப்டி செஞ்சோம் இப்டி செஞ்சோம் னு. எனக்கு போரட்டிக்குது. அதனால தான் அவர (Big Generation Gap – BGG) பிக் ஜெனரேஷன் கேப் – பெரிய தலைமுறை இடைவெளி னு சேவ் பண்ணினேன்.

ரொம்ப பேசினா உன்னோட நம்பர ஸ்மால் ஜெனரேஷன் கேப் னு சேவ் பண்ணிடுவேன். இப்போ என்ன என்ஜாய் பண்ண விடறியா. சொல்லிவிட்டு ஓடி விட்டாள்.

எது எப்படியோ இந்த பிஜிஜி படுத்திய பாட்டில் பல மணி நேரம் விரயம் ஆனதுதான் மிச்சம். திரும்பவும் நகுலை அழைக்க மொபைலை எடுத்தேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று மேகலாவின் பள்ளியில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிரும் நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் சென்ற அவர்கள் முதன் முதலில் மீண்டும் சந்தித்த போது மகிழ்ச்சிப் பெருமிதத்தில் நனைந்தனர். மேகலா தான் முழு ...
மேலும் கதையை படிக்க...
மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. மதன் மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க. என்ன கேக்கணும். சொல்ல ...
மேலும் கதையை படிக்க...
சென்னை பல்லாவரத்தில் டெக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் மானேஜர் பதவிக்கான நேர்முகத்தேர்வு இன்று. . என்னுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் அமர்ந்திருக்கிறோம். மற்ற நால்வரிடமும் பேச்சு கொடுத்ததிலிருந்து தெரிந்தது. எல்லா விதத்திலும் இந்த வேலைக்கு நான் தான் தகுதியானவன். படிப்பு, அனுபவம் எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
ரொம்ப நாள் கழிச்சு நண்பன் ஜோசப் கிட்ட பேசினதுல மனசுக்குள்ள ஒரு குதூகலம். பழைய நினைவுகளோடு மொட்டை மாடியின் உச்சத்தில் ஏறி மல்லாக்கு படுத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் முழுவதும்இருட்டாத அந்தி மாலைப் பொழுது. கூட்டம் கூட்டமாக பறவைகள் எங்கிருந்தோ அவசரமாக ...
மேலும் கதையை படிக்க...
படம் சூப்பர் பா.. கதை என்னமா போகுது. முழுக்க ஒரே சர்பிரைஸ். ஆமா டேரக்டர் யாரு? குமார் சார் தான். இப்பல்லாம் வித்தியாசமான படம் னாலே அவரோட டேரக்சன் தானே. கடந்த பத்து வருசமா சினிமா இண்டஸ்ட்ரியையே கலக்கிட்டிருக்காறு . புதுப் படம் ரிலீசான முதல் நாளே ...
மேலும் கதையை படிக்க...
தந்தையின் மனைவி
என் மனத்தோழி
மாம்பழ அவதாரம்
சாமியாடி
70எம்எம்ல ரீல்

பி.ஜி.ஜி மீது 2 கருத்துக்கள்

  1. Vasantha says:

    யதார்த்தமான இன்றைய தலைமுறையினரின் தீர்க்க சிந்தனை குறித்த அருமையான கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)