கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 7,641 
 

“வர வர, சுதாவை ரொம்ப அடிக்கிறே நீ!”

`ஒன்னோட மூளையும், சுறுசுறுப்பும் அப்படியே சுதாகிட்ட வந்திருக்கு!’ என்று தனிமையில் ஓயாது தன்னைப் புகழும் கணவரிடமிருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டா!

பெண்ணை முதுகில் அடித்ததன் காரணத்தை இவரிடம் சொன்னால், “குழந்தைகள் என்றால், முன்னே பின்னேதான் இருக்கும்!” என்று த்த்துவம் பேசி, எரிச்சலை இன்னும் அதிகமாக்குவார்.

அன்று காலை ஞானம் குளிக்கப் போயிருந்தபோது, குளியறையில் ஒரே துர்வாசம்! சுவரெல்லாம் தீற்றியிருந்தது…!

வெளியில் வந்து, “ஒன் வேலைதானே இது?” என்று வெறி பிடித்தவள்போல் சுதாவை அடித்திருந்தாள். அவள் அழாமல் அப்படியே நின்றிருந்தது தாயின் ஆத்திரத்தை மிகையாகத்தான் ஆக்கியது.

“முந்தி மாதிரி இல்ல சுதா. என்னமோ, ரொம்பக் கெட்டுப் போயிட்டா!” என்று கணவரிடம் படபடத்தாள்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு, வழக்கம்போல் பள்ளிச்சீருடை அணிந்து, சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள் சுதா. வெள்ளைச் சட்டைமேல் மைலோவைக் கொட்டிக்கொள்ள, அவசரத்தில் உடையை மாற்ற நேரமில்லாது போயிற்று.

ஆத்திரம் பீறிட்டது பெற்றவளுக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டு, குனிய முடியாமல் குனிந்து, அதைத் துவைத்து, இஸ்திரி பண்ணியிருந்தாள்!

“ஒரு காரியம் ஒழுங்கா செய்யத் தெரியுதா, சனியன்!” என்று கன்னத்தில் ஓர் அறை வைக்காமல் இருக்கமுடியவில்லை அவளால்.

சிறுமி எதிர்ப்புக் காட்டாமல் நின்றது ஞானத்துக்குப் புதிய பலம் வந்ததுபோல் இருந்தது, கூடவே குற்ற உணர்ச்சியும் ஓங்கியது.

மத்தியானம் இரண்டு மணிக்கு, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, காலையில் நடந்ததை மறந்தவளாக, “அம்மா! என்னை பேச்சுப் போட்டியில சேர்த்துக்கிட்டிருக்காங்க!’ என்று தெரிவித்தாள்.

ஞானம் புன்சிரிப்புடன் தன் கட்டை விரலை உயர்த்தினாள், மகளைப் பாராட்டும் விதமாக.

‘தம்பி என்ன செய்யறான்?” என்று அம்மாவின் வயிற்றை அருமையாக, ஒரு விரலால், தொட்டுப்பார்த்தாள் சுதா.

அதுதான் காரணமோ?

எட்டு வருடங்களாக, ஒரே குழந்தையாக இருந்த தனக்குப் போட்டியாக ஒரு தம்பி வந்துவிடப் போகிறானே என்ற இனம்புரியாத கலக்கமோ?

சுதாவுக்கு வயது ஏறியது. பள்ளியில் என்னதான் சிறந்து விளங்கினாலும், வீட்டில் தாய்க்கும், மகளுக்கும் சண்டைகள் பலத்தன.

பதினாறு வயதான பெண்ணை அடிக்க முடியவில்லை. வாய்வார்த்தையாகக் கண்டனம் செய்யத்தான் முடிந்த்து. “ஏண்டி! என்ன அலங்காரம் இது? குட்டைப் பாவாடை, வயிறு தெரிய சட்டை! எல்லாத்துக்கும் மேல, லிப்ஸ்டிக், உதட்டுக்கு வெளியே எல்லாம்! சே! ஒன்னைப் பாத்தா, `யாரோ’ன்னு நினைச்சுக்கப் போறாங்க!”

“நினைச்சுக்கட்டும்!” திமிராகப் பதில் வந்தது.

பள்ளியில் ஆசிரியைகள் எல்லாரும் அவளுடைய திறமைகளை, புத்திசாலித்தனத்தைக் கொண்டாடியதால் வந்த வினை என்று ஞானம் குமையத்தான் முடிந்தது.

வலிய ஏதாவது சொல்லப்போகத்தான் வாக்குவாதம் ஆரம்பிக்கிறது என்று புரிய, சுதா என்ன செய்தாலும் ஞானம் வாயே திறக்காமல் இருக்கத் தலைப்பட்டாள். தாய்க்கும் மகளுக்குமிடையே சண்டை இல்லாவிட்டாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோ பிளவு.

`எனக்கு ஒரு தோசை போதும்னா விடுங்களேன்!’ என்று இரைபவளிடம் என்ன பேச முடியும்?

`பசிக்கல. சாப்பாடு வேண்டாம்!’ என்று அனேக இரவுகள் சொல்வதைவிட இது தேவலாம் என்று திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பன்னிரண்டு வயதுப் பெண்ணைப்போல் வளர்ச்சி குன்றியிருந்த மகளைப் பார்த்து அந்தத் தாயின் மனம் குமுறியது.

பார்ப்பவர்களுக்கு அதெல்லாம் பெரிதாகப்படவில்லை. “ஒங்க மகளுக்கான படிப்புச் செலவையெல்லாம் அமெரிக்காவில இருக்கிற காலேஜே ஏத்துக்கிட்டிருக்காமே! பெத்தா, இப்படி ஒரு பொண்ணைப் பெத்துக்கணும்!” வெளிப்படையாகப் புகழ்ந்தாலும், முகத்தில் தோன்றிய பொறாமையை அவர்களால் மறைக்க முடியவில்லை. “ஒரே மகள்! எப்படித்தான் பிரிஞ்சு இருக்கப்போறீங்களோ!”

பத்து வருடங்களுக்கு மேலேயே மனத்தளவில் அவள் தன்னைவிட்டு விலகிவிட்டிருந்ததைப் பிறரிடம் சொல்லவா முடியும்?

தன்னை வெறுக்கும் அளவுக்கு, பெற்ற தாயையே ஒரு போட்டியாகக் கருதி, எப்போதும், எதிலும் வென்று ஜெயிக்க வேண்டும் என்று அவள் இப்படி வெறியாக அலைய தான் என்ன தப்பு செய்தோம்? இன்னும் அதிக நாட்கள் இந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டு வாழ முடியாது என்று பட்டது ஞானத்துக்கு.

“அம்மா! நீங்களும் என்கூட அமெரிக்கா வாங்களேன்!” அதிசயமாகத் தன்னைத் தேடி வந்திருக்கும் மகளை நம்ப முடியாமல் பார்த்தாள் ஞானம். எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசிய பெண்ணா இது! பயந்த குழந்தை பேசுவதுபோல் இருந்தது.

`இதுதான் சமயம், கேட்டுவிடு’, என்ற உந்துதல் எழ, “ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமே, சுதா!” என்று நீட்டினாள். அவளுடைய பதிலுக்குக் காத்திராது, “ஏழு வயசுவரைக்கும் என்னையே சுத்திச் சுத்தி வருவே! எனக்கு அவ்வளவு அருமை நீ! ஆனா, நீயோ, ஓயாம அடியும், உதையும் வாங்கி, அடுத்த வேளைச் சோத்துக்கே திண்டாடற ஏழைக் குழந்தைமாதிரி ஆத்திரமும், படபடப்புமா ஆகிட்டே. நான்.. எங்கே தப்பு பண்ணினேன்?” என்று கேட்டு முடிப்பதற்குள், குரல் தழதழத்துப் போயிற்று. மூச்சு வேகமாக வந்தது.

உடனே பதில் வந்தது சுதாவிடமிருந்து. “அது.. நீங்க செஞ்ச எதனாலேயும் இல்லம்மா!”

ஞானம் ஒன்றும் விளங்காது, அவளையே பார்த்தாள்.

சிறிது நேரம் எதுவும் பேசவில்லை சுதா. அவளுடைய உதடுகள் இறுகி இறுகிப் பிரிந்தன. புருவங்கள் நெரிய, கண்கள் பயத்தையோ, வேறு எந்த உணர்வையோ காட்டின. எதையோ சொல்ல முயன்று, சொல்லவும் முடியாது, மெல்லவும் இயலாதவளாக அவள் அவதிப்படுவதைக் காண தாய்மனம் துடித்தது.

“எனக்கு அப்போ எட்டு வயசு. நீங்க மாசமா இருந்தீங்க. தினமும் சாயந்திரம் வாசல்லே ஸ்கூட்டர்ல வர்றவன்கிட்டே ரொட்டி வாங்க அனுப்புவீங்க. அப்போ.. அவன்.. என்னை..!”

அதிர்ச்சியுடன் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டாள் ஞானம். இரவு ஏழு மணிக்கு தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்ததும்தான் ரொட்டிக்காரன் தொடர்ந்து அமுக்கும் ஹார்ன் ஒலி கேட்கும். இருளில் தான் தவறு செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்ற அலட்சியமா? திமிரா? வீட்டெதிரில் பெரிய மரமும், புதரும், அதை ஒட்டினாற்போல் பெரிய பள்ளமும் இருந்ததை சாதகமாக்கிக் கொண்டானா, பாவி!

எல்லா உணவும் துவேஷமாகப் போனது இதனால்தானா?

செய்யாத தப்புக்குச் சுய தண்டனை!

ஒரேயடியாக அதிர்ந்து, “என்னோட தொப்புள் கொடி கருவில இருந்த குழந்தையோட கழுத்தைச் சுத்தியிருக்கு, ஓய்வா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருந்தாரில்ல? அதான் தினமும், ரொட்டி..,” என்று வேகமாகப் பேசிக்கொண்டு போனவளை ஒரே கைவீச்சில் தடுத்து நிறுத்தினாள் மகள்.

“இத்தனை வருஷம் கழிச்சு, நீங்க எதுக்கும்மா குத்தம் செஞ்சுட்ட மாதிரி பதைபதைச்சுப் போறீங்க? எனக்கு அந்த ரொட்டிக்காரன்மேல கோபமில்ல. பாவம்! அவன் சின்னப் பையனா இருந்தப்போ யார் வதைச்சாங்களோ!”

ஆண்டுக்கணக்காய் உறுத்திக்கொண்டிருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின.

ஞானம் மெல்லக் கேட்டாள்: “நாம்ப அம்மாவுக்குத் தெரியாம ஏதோ தப்பு பண்றோம். அதுக்காக எப்படியாவது அம்மாகிட்ட அடியோ, திட்டோ வாங்கியே தீரணும்னுதான் அப்படியெல்லாம் செஞ்சியா? மேலே மைலோவை வேணுமின்னே கொட்டிக்கிட்டு..!”

சுதா தலையசைத்த விதத்தைப் பார்த்தால், அவள் தலை திடீரென்று கனத்துவிட்டதுபோல இருந்தது. “திட்டு வாங்கணும்னு எதிர்பாத்து, வேணும்னு செய்யல. ஆனா..,” அவள் குரல் விம்மியது. “நீங்க அடிச்சாலோ, திட்டினாலோதான் எனக்கு நிம்மதியா இருக்கும்!”

என்ன நடக்கிறதென்றே புரியாத வயதில், வயதுக்கு மீறிய செயலில் பங்கெடுக்க வைக்கப்பட்டு, அது `தப்பு’ என்றவரை புரிந்து, பயம், குற்ற உணர்வு, வருத்தம் ஆகிய பலவும் அழுத்த, விடுபட வழி தெரியாது, பெரியவளாகப் போனபின், ஆத்திரத்தைத் தன் ஆயுதமாக உபயோகித்திருக்கிறாள்!

கல்லூரியில் மனோதத்துவம் படித்திருந்தும், தன்னால் வாழ்க்கைக்கு அதைப் பிரயோகிக்கத் தெரியாது போய்விட்டதே என்ற பெருவருத்தம் ஞானத்துக்குள் எழுந்தது.

பாலியல் வதைக்குள்ளான குழந்தைகள் நரகலை சுவற்றின்மேல் தீற்றுவது, `அம்மா காப்பாற்ற மாட்டேன் என்கிறார்களே!’ என்ற கோபத்தில் தாயையே எதிரியாக, போட்டியாகப் பாவிப்பது, பிற விஷயங்களிலாவது தன் வயதொத்தவரை மிஞ்சவேண்டும் என்ற வெறியோடு இயங்குவது — தான் எப்படி இதையெல்லாம் ஒன்றுசேர்த்துப்பார்க்கவில்லை?

கேட்க இன்னும் ஒன்றுதான் பாக்கி இருந்தது. “கன்னாபின்னான்னு டிரெஸ் பண்ணிப்பியே! ஆம்பளைங்க ஒன்னைப் பாத்து பயந்து ஓடணும்னுதானே?”

சுதா கலகலவென்று சிரித்தாள் — ஒரு வழியாக அம்மா தன்னைப் புரிந்துகொண்டார்களே என்று.

ஞானம் அவள் கையை ஆதரவுடன் வருடினாள், தாய்ப்பூனை குட்டியை நாக்கால் நக்கிக்கொடுப்பதுபோல.

எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள், இந்தச் சின்ன வயதுக்குள்!

பேச எதுவும் இருக்கவில்லை.

பல்லாண்டு பாரத்தை இறக்கிவைத்த நிம்மதியுடன், சுதா தாயின் தோளில் தலைசாய்த்து, விம்மத் தொடங்கினாள்.

தாயும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.

– வல்லமையில் வெளிவந்த கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *