கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 12,204 
 

எழும்பூர் இரயில் நிலையம், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மதியவேளை. இன்னும் பண்டிகைகளின், தொடர் விடுமுறை தினம் துவங்காத நாட்கள் என்பதால், நெருக்கியடிக்கும் கூட்டமில்லை. பயணிகள், பிளாட்பாரத்தில் வந்து நின்றிருந்த இரயிலின் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த லிஸ்ட்டில் தங்களின் பெயரையும், இருக்கை எண்ணையும் சரி பார்த்துக் கொண்டும், தங்களின் உடமைகளோடும், மனைவி, பிள்ளைகளோடும், அல்லாடிக்கொண்டிருந்தனர்.

கான்ஸ்டபிள் குமரேசனுக்கு, அன்று ரோந்து சுற்றும் பணி. காலையிலிருந்தே, குமரேசனுக்கு மனசு சரியில்லை. ரோந்தில் மனமில்லாமல்தான் சுற்றிக்கொண்டிருந்தார். கூட்டத்திலுள்ளவர்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தவருக்கு, அங்கே யாருக்கும் சம்பந்தமில்லாமல் பிளாட்பார பெஞ்ச்சில் தனியே உட்கார்ந்திருந்த அந்த மூன்று சிறுவர்களைப் பார்த்தவுடன், ஏதோ ஒன்றை உணர்ந்தார். அவர்களுக்கு பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும். தனியாக இருந்த அவர்களின் பார்வையில் கலவரமும், கொஞ்சம் பயமும், கலந்திருந்ததை குமரேசன் கண்டுபிடித்துவிட்டார். பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாததும், திருதிரு பார்வையுமே அவர்களைக் காட்டி கொடுத்துவிட்டது.

அவர்கள் வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள் என்று.

குமரேசன், உடனே விஷயத்தை வாக்கியில் செய்தியாய் அனுப்ப,

“உங்க பேரு என்னங்கடா?” என்று கேட்க,

செய்தியறிந்து, மேலும் இரு கான்ஸ்டபிள்களை வர,

‘சத்தீஸ், பாஸ்கர், ராஜா’ மூவரையும் மடக்கி பிடித்து, போலீஸ் பூத்திற்கு கொண்டுசென்றனர்.

***

ராவுத்தர், ஒரு நோட்டு புத்தகத்தில், அன்றைய வரவு செலவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார். கணக்குகளை அவர் சரி பார்க்கும் இடைவெளியில், கொஞ்சம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ராவுத்தர் சராசரி உயரம்தான் என்றாலும் சற்று பருமனானவர். சின்ன கண்கள். சிரித்தால் அழகாயிருக்குமோ, என்னமோ? அவர் சிரித்து நான் பார்த்ததில்லை. பீடி பிடிப்பார். முரட்டுக் கோபக்காரர். ராவுத்தரை அந்த ஏரியாவாசிகள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மிகுந்த பக்தியுடையவர். அவர் கடை ஒன்று நடத்தி வந்தார். பிஸ்மில்லா பேக் (BAG) ஒர்க்ஸ். சைக்கிள்களுக்கு சீட் கவர், ஸ்பாஞ்சு சீட், மற்றும் ரெக்ஸின் பேக் போன்றவற்றை தைத்துக் கொடுத்தார். பதினைந்து தையல் மெஷின்களுக்கு மேல் வைத்து நடத்தும் பெரிய கடை அது. நிறைய பேர் வேலை பார்த்தனர். நல்ல வருமானம். அவர் வீட்டிலேயே, இரண்டாவது மாடியில், கடையை நடத்தி வந்தார். நல்ல உழைப்பாளி.

இவர் எண்பதுகளில் வாழ்ந்த விதமே அலாதிதான்.

அந்த ஏரியாவில் அவர் பல விஷயங்களுக்கு ‘முதல்’ முன்னோடி.

முதன்முதலில் கலர் டிவி வாங்கியவர்.

முதன்முதலில் (அந்த ஏரியாவிலேயே) இரண்டுமாடி வீட்டை கட்டியவர்

முதன்முதலில் ஸ்கூட்டர், பஜாஜ் சேட்டக் அறிமுகப்படுத்தியதும் வாங்கினார்.

அவர் வீட்டில் மட்டும்தான் அப்போது டெலிபோன் இருந்தது.

அவருக்கு அன்வர், சித்திக், சேட்டு, என்று மூன்று ஆண் பிள்ளைகள்.

எங்கள் வீட்டிக்கு முதல்மாடி மட்டும்தான். பக்கத்தில், இரண்டாவது வீடு, ராவுத்தரின் வீடு. எங்களின் மாடியில் நின்றால், ராவுத்தரின் முதல் மாடி தெரியும். இதனால், என் அம்மாவுக்கு, ராவுத்தரின் மனைவி ஜெரீனா, நல்ல பழக்கம். என் அம்மாவை, அக்காள் முறை வைத்து கூப்பிடுவாள். ராவுத்தர் வெளியே சென்றிருக்கும் சமயங்களில், நேரில் வந்து, என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பாள். அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல், என் அம்மாதான்.

அவர் மகன்கள், மற்ற பையன்களோடு, தெருவில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில், ராவுத்தரின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும்,

“டேய், வாப்பா வாராங்கடா” என்று மற்ற வீட்டுப் பிள்ளைகளும், வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.

ராவுத்தர், மிகச் சிரிய விஷயமென்றாலும் கோபப்படுவார். தன் மகன்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார். அவர் மகன்கள், ஒரு சின்ன தப்பு செய்தாலும் சரி, தண்டனைகள் கடுமையாய் இருக்கும். அவர்கள் சிறு விஷமமோ அல்லது முரண்டு பிடித்துவிட்டாலோ அவ்வளவுதான். பெல்டால் விளாசிவிடுவார். கண் மண் தெரியாது அவருக்கு. அடி பிரித்து மேய்ந்துவிடுவார். அவர்கள் அலரும் சத்தம் தெருவையே அதிரவைக்கும்.

பிள்ளைகளிடம் மட்டும்தான் என்றில்லை, பல நேரங்களில், அவர் தன் மனைவியிடம் சண்டை போட்டாலும், அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார். பக்கத்தில் வீடு என்பதால், எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். கேட்கும். ஒருமுறை, சண்டை பலமாகி, ராவுத்தர் அறைந்ததில், அவரின் விரல் ஜெரீனாவின் இடது கண்ணைப் பதம்பார்த்துவிட்டது. கண்ணில் ரத்தம் கட்டிக்கொண்டு, சிவந்திருந்த விழியோடு, பலநாட்கள், என் அம்மாவிடம் அழுது புலம்பியதை நான் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட சமயங்களில், என் அம்மாவிடமிருந்து வரும் பதில்தான் எனக்கு ஆச்சரியத்தையும், சில நேரங்களில், ஆத்திரத்தையும் தரும்.

அவளிடம், “கோபக்கார மனுஷங்கிட்ட நீ கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும் ஜெரீனா. அவருக்கு, தான் கோபத்தில் என்ன செய்யறோம்னு தெரியாது. நாமளும் சரி சமானமா சேர்ந்துகிட்டு சத்தம் போடுரதுல, கோபம்தான் அதிகமாகும்”

“எவ்வளவுதான் நானும் பொறுத்துக்கறது? என்னையும், பிள்ளைகளையும் கண்டாலே அவருக்கு பிடிக்காலக்கா”

“சீ, இந்த மாதிரில்லாம் ஏதும் உளராத”

“இல்லக்கா. எதுக்கெடுத்தாலும் ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டு, சண்டைய ஆரம்பிச்சிடராரு”

“நாலு எடத்துக்கு வேலயா போற மனுஷன். போன இடத்துல எப்படியோ? எதையெல்லாம் சமாளிக்கணுமோ?. அதையெல்லாம் மீறி தன்னை சமாதானப்படுத்திக்க தெரியாததினாலயே, தன்னோட பலவீனத்த கோபமா வெளி காட்டுறாங்க. நாம அமைதியாய் இருந்திட்டா, கோபம் தானா கொறஞ்சிடும். நீ தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத” என்று ஏதாவது சமாதானம் சொல்லி, அவளை அனுப்பிவிடுவாள்.

காலப்போக்கில், பேக் தைக்கும் தொழிலில், நவீன ரக மெஷின்களும், மின்சாரத்தில் இயங்கும் மெஷின்களுமாக மாறிப்போகவே, அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தொழிலில் ராவுத்தருக்கு தொய்வுநிலை ஏற்பட்டது. இவருக்கு மட்டும் என்றில்லை, இந்தத் தொழிலில் காலகாலமாக இருந்தவர்களுக்கும் இதே நிலைமைதான். அவர்களும் கிடைத்த ஆர்டர்களை செய்து கொடுத்துகொண்டிருந்தனர். தைக்கும் தொழில் நலியவே, இதில் வேலை பார்த்தவர்களும், கூடுதலாக சம்பளம் கிடைக்கிறதென்று வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர்.

திடீரென்று ஒருநாள், மாரடைப்பில் ஜெரீனா இறந்துபோனாள். ஊர் உறவெல்லாம் கூடி, இறுதி சடங்கெல்லாம் முடித்த கையோடு, ராவுத்தர் ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். சொந்த ஊருக்குச் சென்று உடனே, வேறு ஒரு பெண்ணை, இரண்டாம் தாரமாக மணமுடித்து கூட்டி வந்தார்.

ராவுத்தருக்கு அமைவதெல்லாம் தங்கமாகவே அமைந்தது. இரண்டாவதாக வந்தவளும் அற்புதமானவள். அவள், மாற்றாந்தாய் மனோபாவம் ஏதும் இன்றி ஜெரீனாவின் குழந்தைகளை அன்போடும், பாசத்தோடும் நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராவுத்தரின் கோபம் மட்டும் அப்படியே இருந்தது.

இப்படிப்பட்ட ராவுத்தரின் மூத்த மகன் தான், வீட்டைவிட்டு ஓடிப்போய், நண்பர்களுடன் போலீஸில் மாட்டிக் கொண்ட, ராஜா என்கிற அன்வர் ராஜா.

ராவுத்தரின் அருகில் இருந்த டெலிபோன் மணி அடித்தது.

****

மூன்று பையன்களின் பெற்றோருக்கும் தகவல் அனுப்பி, அனைவரும் இன்ஸ்பெக்டர் தர்மசீலன் முன்பு அமர்ந்திருந்தனர். கொஞ்சம் தாமதமாக வந்த ராவுத்தர், ஓரத்தில் இருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்த தன் மகன் அன்வரை நோக்கி அறைவதற்காக கையை ஓங்கிச் சென்றார். சட்டென்று, கான்ஸ்டபிள் ஒருவர், அவரை தடுத்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர், “இது போலீஸ் ஸ்டேஷன். இங்கே வந்து இப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாது.”

ராவுத்தர், “இவனை அங்கேயே பொலி போட்டிருக்கணும் சார் நீங்க”

இன்ஸ்பெக்டர், “நீங்க கொஞ்சம் கோபப்படாம இருங்க பாய்”

ராவுத்தர், “எப்படி சார் கோபப்படாம இருக்கமுடியும்? மூணு நாளாச்சு, ராஸ்கல், வீட்டைவிட்டு ஓடிப்போய். போதாக்குறைக்கு ரண்டு பையனுங்களை வேற கூட இழுத்துக்கிட்டு…. அவன…..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு, மீண்டும் அன்வரை அடிக்க கையை ஓங்கினார், ராவுத்தர்.

இன்ஸ்பெக்டர், “மறுபடியும் நீங்க தப்பு பண்றீங்க பாய்”

“என்ன சார் பண்ண சொல்றீங்க. என் ரத்தம் கொதிக்குது சார். எங்க ஆயுசுக்கு நாங்க போலீஸ் ஸ்டேஷன் பக்கமெல்லாம் போனதில்ல. இந்த நாயால.. என் மானம் மரியாதை எல்லாம் போச்சு.”

“பொறுமையா இருங்க. இப்பத்தான், நாம நிதானமா நடந்துக்கணும். பையன் ஏற்கனவே ரொம்ப பயந்துபோய் இருக்கான். தான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு அவனுக்கு புரியவைக்கணும். ஆனா இவ்வளவு முரட்டுத்தனமாக இல்ல.” ராவுத்தர் குறுக்கிட்டு, “இவனுக்கு அதெல்லாம் சரிபட்டு வராது சார்”

இன்ஸ்பெக்டருக்கு சட்டென்று விஷயம் விளங்கிவிட்டது. ராவுத்தரை மட்டும் சற்று வெளியே இருக்க சொல்லிவிட்டு, மற்ற இருவரின் பெற்றோர்களுக்கு புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டு, ராவுத்தரை உள்ளே அழைத்தார்.

மவுனமாக இருந்த ராவுத்தரை சற்று நேரம் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்.

“இங்க பாருங்க பாய். முதல்ல இந்த வயசு பசங்கள அடிக்கக்கூடாது. அப்படியே அடிச்சு சொல்லி புரிய வைக்கமுடியாது. நமக்கு நம் குழந்தைங்க எப்பவும் சின்னப் பிள்ளைகளாகத் தெரிவாங்க. பெண் பிள்ளைகள் வளர்வதுகூட நமக்கு தெரியும், ஆனா பையன்கள் அப்படி இல்ல. அவங்க இந்த வயசுல வளர்ந்து நிக்கறத நாம புரிஞ்சுக்க தவறிடறோம். பெண்பிள்ளைங்க மாதிரி இவங்க எதையும் வெளிப்படையா பேசுறது கிடையாது. மனசுக்குள்ளேயே வச்சிகிட்டிருப்பாங்க. இவங்களுக்கு ஆதரவாக பேசுறவங்க நண்பர்களாயிருக்கும், இல்லேன்னா, அம்மாதான். நம்மளோட தேவைகளுக்காக ஓடுறோமே தவிர அவங்கள நாம கண்டுக்காம இருந்திடறோம்.”

ராவுத்தர் குறுக்கிட்டு, “இவனுக்கு கொழுப்பு சார்” என்றார். “இதுங்களுக்காக நான் ராப்பகலா கஷ்டப்பட்டு ஒழச்சு, சோறு போடுறேன் இல்ல, அந்தத் திமிருதான்”

இன்ஸ்பெக்டர், “அங்கதான் பாய், நாமெல்லாம் தப்பு பண்றோம். வெறும் சோறும், துணியும் மட்டும் அவங்களுக்கு சந்தோஷம் தராது. எல்லத்துக்கும் மேல துணை, பாதுகாப்புன்னு இருக்கு. குழந்தைங்க அதைத் தேடுறாங்க. அது தனக்கு கிடைக்கலேன்னு நினைச்சுகிட்டு, சண்டைபோட்டோ, கோவிச்சுக்கிட்டோ, அல்லது பயந்துபோய் மனக்குழப்பத்தில, அவன இந்த மாதிரி பண்ணத் தூண்டுது. இல்லேன்னா இந்த வயசுல வீட்டைவிட்டு ஓடிப்போகிற அளவுக்கு அவனுக்கு என்ன பெரிய பிரச்சனை இருக்கமுடியும்?”

ராவுத்தர் மவுனமாக இன்ஸ்பெக்டரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“இனிமேலாவது அவனோட தனியா கொஞ்சம் நேரம் பேசுங்க. அவன்மேல எல்லோருக்கும் பாசம் இருக்குன்னு அவனுக்கு புரியவைக்கணும். அவங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி, அக்கரையோடு பேசுனோம்னா, அவன் சிந்தனை வேற எங்கும் சிதறாது. சமாதானமா பேசி அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க பாய்” என்று முடித்தார், இன்ஸ்பெக்டர்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ராவுத்தர், இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறிவிடைபெற்று, அவர் மகன் அன்வரை அழைத்துச் சென்றார். அது அவனை இழுத்துச் செல்வதுபோலவே இருந்தது.

அதை இன்ஸ்பெக்டர் தர்ம்சீலன் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *