பிரிவென்பது முடிவல்ல!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 6,580 
 

அருணின் பைக் அந்த கட்டிடத்தின் வாயிலை தாண்டி உள்ளே வரும் பொழுதே அனுவின் விழிகள் அவனைக் கண்டுவிட்டன. பின்னே, அவன் வருவான் என்று தானே அவள் விழிகள் வாயிலையே வட்டமிட்டன. அவனை கண்ட மாத்திரத்தில் அவள் முகம் மலர்ந்து விகசித்தது. ஆவலும் ஏக்கமும் நிறைந்த விழிகளால் அவனை தொடர்ந்தாள். அவனும் வண்டியை விட்டு இறங்கி திரும்பியவுடன் அவளைப் பார்த்துவிட்டான். பார்த்தவன் அழகாக பற்கள் தெரிய புன்னகைத்தான்.

அவன் தன்னை நோக்கி புன்னகைத்தவுடன் அவனை நோக்கி ஓடோடி செல்ல வேண்டும் போல் இருந்தது அனுவிற்கு. ஆனால் அது இப்போது முடியதே. அவள் அம்மா பக்கத்திலேயே இருக்கிறாள். அம்மா மட்டுமா அவள் குடும்பமே இருக்கிறதே. சும்மாவே அவனிடம் பேசத் தடைவிதிக்கும் அம்மா. அன்று நடந்த சண்டை தான் அவளுக்கு என்றேனும் மறக்குமா? அன்று அவள் எவ்வளவு அழுதாள்! எவ்வளவு கெஞ்சினாள்! நினைக்கும் போதே அழுகை வந்துவிடும் போல் இருந்தது அனுவிற்கு!

அருண் புன்னகைத்தவாறே அவளை மேலிருந்து கீழ்வரை தன் பார்வையாலே அணைத்தான். எவ்வளவு அழகு என் தேவதை! எத்தனை பெரிய விழிகள்! அதில் எத்தனை உணர்ச்சிகள்?! என்னை பார்க்கும் போதே அவள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி மலர்ச்சி! அவ்வளவும் பிரியம். அவன் இதயம் விம்மியது. அவளை அப்போதே அணைத்துக்கொள்ள துடித்தன அவன் கரங்கள். ஆனால் இப்போது முடியதே! அருகில் அவள் அம்மா இருக்கிறாள். சும்மாவே என்னை கண்டாலே ஆகாது. இதில் இப்போ அனுவிடம் பேசினால் பெரிய நாடகமே நடக்கும். வேண்டாம் அது அனுவை தானே பாதிக்கும்?! மனதிலேயே குமுரியவன், புன்னகையோடு விலகி வேறுபுறம் நடந்தான்! நீர்த்திரையிட்ட விழிகள் அவனைத் தொடர்ந்தன!

அர்ச்சனாவிற்கு மனம் கனத்துப்போயிருந்தது. அன்று காலையில் நடந்த அனைத்தும் அவள் கண்முன் ஓடியது. அருணை பார்த்தவுடன் அனு முகத்தில் எவ்வளவு சந்தோசம்! நான் பார்க்கவில்லை என்றா நினைத்தாள்? இருவரும் கண்ணாலேயே பேசிக்கொள்கிறார்களே! நான் கையை விட்டிருத்தா அவனிடம் ஓடியிருப்பாள் போலிருக்கே. ஏன் நான் அவளுக்கு என்ன கொற(குறை) வைச்சேன்? அவளுக்காக தானே வாழ்றேன்? அவள் தானே என்னோட உயிர்? ஆனால் அனு? என்னை விட அவன் முக்கியமாக போய்ட்டானே. அவனை பார்க்கக்கூடாதுன்னு சொன்னதுக்காக என்ன வெறுக்குறாளே. இப்படியே என்னை அடியோடு வெறுத்துருவாளோ?! ஆனா அவளுக்கு என் வலி எப்படி புரியும்? ஒரு காலத்தில அருணிற்காக நானும் தானே இப்படி உருகினேன்? ஆனால் என்ன, என் காதல அவன் மதிச்சானா? நான் வேண்டாம் நான் பெற்ற பிள்ளை மட்டும் வேண்டுமா? அவள் மனம் குமுறியது. காலை கோர்ட் வாசலில் நடந்ததே அவளை சுற்றியது. அருகில் மூன்று வயது அனு தன் கலரிங் புக்கில் காகத்துக்கு மஞ்சள் நிறம் அடித்துக்கொண்டிருந்தாள்.

அர்ச்சனாவின் அருகில் மெள்ள வந்து அமர்ந்து, அவள் கையை ஆதரவாய் பற்றினார் அவள் தந்தை. அவ்வளவு தான்! அதுவரை அடைத்துக்கொண்டிருந்தது எல்லாம் வெடிக்க, “அப்பா” என்று அவர் தோலில் சாய்ந்து அழுதாள். “போயும் போயும் பொண்ணு ஆசப்பட்டானு அவனுக்கு கட்டிக்குடுத்தனே” என்று ஆயிரமாவது முறையாக வருந்தினார் அவர்.

மௌனமாக அவர் தலையை வருட தந்தையிடம் இன்னும் ஒண்டினாள் அவள். வேகமாக உள்ளிருந்து வந்த அர்ச்சனாவின் அம்மா, சட்டென அர்ச்சனாவை வேகமாக இழுத்து அவள் தந்தையிடமிருந்து பிரித்து விளக்கினார்.

“இன்னும் என்னடி அப்பாமேல ஏறிகிட்டிருக்க? வயசாகுதே அறிவில்ல? இனிமே இந்த அப்பா அப்பானு கொழையற வேலையெல்லாம் வேணாம்” என்று சீறினார்.

திகைத்து போன இருவரில் முதலில் சுதாரித்த அர்ச்சனாவின் தந்தை, “என்னடி திமிறா? எம்பொண்ணு எங்கிட்ட வரகூடாதுனு சொல்ல உனக்கு என்ன தைரியம்”

“ஏன் எனக்கில்லாத உரிமையா? நான் இல்லாம அவ எங்க இருந்து வந்தா?”

“ஓகோ, நீ பெத்துட்டா என்னவேணா செய்வியா? இதோ பாரு இப்படி அசட்டுத்தனமா எனக்கும் என் பொண்ணுக்கும் நடூல வந்த கொன்னுடுவேன்” என்று உருமினார்.

“நான் உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் நடுவுல வரகூடாது, ஆனா உங்க பொண்ணு மட்டும் அவ பொண்ணுக்கும் அப்பாவுக்கும் நடுவுல நிக்கலாமா?” என்று நிதானமாக கேட்டார்.

இத்தனை நாடகமும் எதற்கு என்று இருவருக்கும் புரிந்தது. அர்ச்சனாவிற்கு மீண்டும் அழுகை பீறிட்டது. ஆனால் அவள் தாய் விடுவதாய் இல்லை. இதை விட்டால் மீண்டும் வாய்ப்புக்கிடைப்பது கடினம். எனவே அவளே தொடர்ந்தாள்,
“இத்தனை வயசுல உனக்கு உங்க அப்பா வேணும், ஆனா எம்பேத்தி அப்பா கிட்ட போககூடாது? அவ எதிர்காலத்த பத்தி நீங்க ரெண்டுபேரும் யோசிச்சிங்களா?”

“அப்போ என் எதிர்காலம் எப்பிடி போனாலும் பரவயில்ல? அப்படிதானே? ” அழுகையினூடே கேட்டாள் அர்ச்சனா.

“உன் எதிர்காலம் அப்படி என்ன வீணாபோச்சு? அவர காதலிச்சு தானே கல்யாணம் பண்ண? அப்போ பிரகாசமா தெரிஞ்சது இப்போ என்னாச்சு?”

அர்ச்சனாவிற்கு பழைய ஞயாபகங்கள் வந்து வலித்தது. “அவர் என்ன புரிஞ்சுக்கலம்மா.. எவ்வளவு சண்டை.. எவ்வளவு அழுகை.. போதும்மா. எனக்கு அந்த வாழ்க்கை போதும்.. எம்பொண்ணுக்கு நான் மட்டும் போதும். அவள என்னால நல்லா வளக்க முடியும்”

“எத வச்சு சொல்ற? நீ சம்பாரிக்கிற தைரியதுலையா? அப்போ காசிருந்தா போதும்? உன் பிள்ளையோட ஆசைகள், உணர்ச்சிகள் அதெல்லாம் பெரிசில்ல? அக்கம்பக்கத்து பிள்ளங்க அப்பா கூட விளையாடும் போதும், ஸ்கூல்ல புள்ளைங்க அப்பா அப்பானு பேசும் போதும் அவ மனசு என்ன ஆனாலும் பரவால்ல? நாளைக்கு அவ கல்யாணத்துக்கு வளந்து நிக்கும் போதும் யார் என்ன கேள்வி கேட்டாலும் பரவல்ல?” அடுக்கிக்கொண்டே போனார் அவர்.

அர்ச்சனாவிற்கு அவர் சொன்ன காட்சிகள் கற்பனையில் எழுந்து அச்சுறுத்தியது. இருப்பினும் விடாமல் கேட்டாள், “அப்போ அப்பா இல்லாத கொழ்ந்தைங்க நல்ல வாழ்றதில்லையா?”

“அம்மா அப்பா இல்லாத அனாத கொழந்தங்க கூட தான் ஆசிரமத்துல வளந்து நல்லா இருக்காங்க.. உன் புள்ளய ஆசிரமத்துல விட்றியா?”
“வாயமூடு மா.. நான் உயிரோட இருக்கும் போது என் பொண்ணு ஏன் அங்க போனும்?”

“அவங்க அப்பா கூட உயிரோட தான் இருகாரு அர்ச்சனா!”

“இப்ப என்ன மா சொல்ல வர்ற? அவர் என்ன பண்ணாலும் கொழந்தைக்காக பொருத்துக்கனும்? எனோட வாழ்க்கை எப்பிடி போனாலும் சகிசிக்கனும்? அதானே?”

“அவர் என்ன பண்ணாலும் என்ன பண்ணாலும்னு சொல்றியே அவர் அப்படி என்ன தான் பண்ணாரு? குடிசிட்டு வந்தாரா? வந்து உன்ன அடிச்சாரா? மொறடனா? நடத்த சரியில்லையா? உன்ன அடிமை படுதுனாறா? இல்ல வேற எதவது கொடும செஞ்சாறா? சைக்கோவா? என்ன பண்ணாரு?”

“ஓ இதெல்லாம் தான் தப்பு இல்ல?”

“இதெல்லாம் தான் சஹிச்சுக்க முடியாத தப்புனு சொல்றேன். நான் அவரு தப்பே பண்ணலனு சொல்லல. தப்பு ரெண்டு பேத்துமேலயும் இருக்குனு சொல்றேன். உங்களுக்குள்ள இருந்த கருத்து வேறுபாட்ட பெரிசாக்கிடிங்கனு சொல்றேன்.”

“வாழ்ந்து பாத்தா தான தெரியும்.. அட்வைஸ் பண்றது ஈஸி..”

“ஆமாடி நான் வாழ்ந்து பாக்காம தான் நீ வளந்து நிக்கிற.. உங்க அப்பா எனக்கு உதவினு செஞ்சு நீ பாத்திருக்கியா? இல்ல என்னோட கருத்த கேட்டு தான் பாத்திருக்கியா? நெறைய விசயங்கள்ல எனக்கு இன்ஃபொர்மேசன் இல்லேனா ஆர்டர் தானே வரும். ஆதுக்காக எங்களுக்குள்ள சண்டை வந்ததில்லையா? எத்தனையோ தடவ வந்திருக்கு. ஆனா அது எதுவும் அடுத்த ஒரு நாளைக்கு மேல நிலச்சதில்ல. ஏன்னா அவர் குணத்த நான் ஏத்துகிட்டேன். அவர் கிட்ட இருக்கற நல்லதையும் பாத்தேன். அதே போல உங்க அப்பாவுக்கு எம்மேல ஏதவது கொற இருக்கலாம் ஆனா இது தான் இவனு அவர் புரிஞ்சுகிட்டாரு.
ஆனா நீங்கெல்லாம் அதுக்கு முயற்சியே எடுக்கறதில்லயே. காரணம் நானும் சம்பாதிக்கிறேன். நானும் சரிசமமா படிச்சிருக்கேங்கற ஈகோ! இவ என்ன என்ன மாத்தறதுனு அவரும், இவனுக்காக நம்ப ஏன் விட்டு குடுக்கனும்னு நீயும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தா வண்டி எப்படிடி நேராப்போகும்?

காதலிக்கும் போது நீங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கறதில்ல. உங்களுக்கு பிடிச்ச மாதிரி அடுத்தவங்கள கற்பன பண்ணிக்கிறிங்க. அவன் இப்டீலாம் இருப்பான்னு நீயும்.. அவ கூட இப்பிடியெல்லாம் வாழலாம்னு அவரும் எதிர்பாத்திங்க.. எதார்த்துல அது நடக்கலனதும் உங்களுக்கு ஒருத்தர் ஒருத்தர் மேல இருந்த நம்பிக்க போச்சு. நம்பிக்கையில்லாம காதலில்ல எந்த உறவுமே நிலைக்காது.

என்ன தான் ஆணும் பெண்ணும் சரிசமம்னு சொன்னாலும் ஒரு குடும்பத்த பொருத்த வரைக்கும் பொண்ணுக்கு தான் பொருப்பு ஜாஸ்தி! தன்னோட சேத்து தம்புள்ளைங்களோட வாழ்க்கையையும் பாக்கறதுதான் ஒரு தாய்க்கு அழகு. உன்ன அவர் என்ன பண்ணாலும் சஹிச்சுக்கோனு சொல்லல. ஆனா ஒரு ப்ரட்சனைனு வரும் போது அத பக்குவமா தீக்க முயற்சி பண்ணனும்னு சொல்றேன். அவன விட நான் எந்த விதத்துல கொறஞ்சவனு ஈகோ பாத்தா.. குடும்பம் குடும்பமா இருக்காது! என்ன தான் மாடர்ன் உலகமா இருந்தாலும் ஆண் பெண்ணோட அடிப்படை குணாதிசயங்கள் அப்படியே தான் இருக்கு.
நீ இங்க எப்புடி வளந்தியோ அவரும் அவங்க வீட்ல அவர் வச்சது தான் சட்டம்னு வளந்துடாரு! இப்போ நீங்க ரெண்டு பேருமே அடுத்தவங்கள டாமினேட் (dominate) பண்ண முயற்சி பண்றிங்க. அவர் பண்ணது தப்புனா நீ பண்ணதும் தப்பு தான்! ஒரு தடவையாவது நீ அவருக்காக விட்டுக்குடுத்தியா? இல்ல ப்ரட்சனைனு வரும் போது அத என்னைக்காவது பேசி தீத்திருக்கிங்களா? லவ் பண்ணும் போது மணிக்கணக்கா பேசினிங்களே இப்போ உங்க பொண்ணுக்காக ஒரு நாள் சமாதானமா பேசிருக்கலாமே! குடும்ப சண்டைக்காக நாங்கள்லாம் கோர்ட் வாசப்படி ஏறிருந்தா உங்க ஜெனரேசன்ல முக்கால்வாசிப் பேரு அப்பா இல்லேனா அம்மானு ஒருத்தர் கூட தான் வளந்திருப்பிங்க” என்றவர் அர்ச்சனா அழுவதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார்.

மனைவி சொன்னதில் இருந்த நியாயம் அர்ச்சனாவின் தந்தைக்கு புரியத்தான் செய்தது. மௌனமாக அறைக்கு சென்றார் அவர்!

எப்படி ஒடியது என்றே தெரியாமல் ஒரு வாரம் ஓடிவிட்டது. தன் அலுவலக வரவேற்பறையில் தனக்காக காத்திருந்த அர்ச்சனாவை பார்த்த அருணிற்கு ஆச்சர்யம்! உடனேயே அவளின், அழுத விழிகளை கண்டவனுக்கு வலித்தது. இரவெல்லாம் அழுதிருக்கிறாள் என்ற எண்ணமே அவனை பாதித்தது. தான் விவாகரத்திற்கு மறுப்பதால் தானோ என்ற எண்ணத்தில், அவள் எது கேட்க வந்திருந்தாலும் சரி அதற்கு சம்மதிப்பது என்ற முடிவோடு அவளை நோக்கி நடந்தான். இந்த மாதிரி அவளோடு வாழ்ந்த போது அவளுக்காக விட்டுக்கொடுத்திருந்தால் இந்த நிலையில்லையே என்று அவன் மனம் சொன்னது!

மௌனமாக அவள் எதிரில் அமர்ந்தான். தன்னை திடப்படுதிக்கொண்டு பேசி ஆரம்பித்தாள் அவள்.

“நான் டைவர்ஸ் கேஸ வாப்பஸ் வாங்கிடலாம்னு இருக்கேன் அருண்!”
எதை எதிர்ப்பார்த்திருந்தாலும் அருண் இதை எதிர்ப்பார்க்கவில்லை! விழிகள் விரிய அவளை பார்த்தான்.

“ஆமா அருண், அனுவுக்கு அப்பா அம்மா ரெண்பேரும் வேணும்.”

“அனுவுக்காகவா?” அவன் குரலில் ஏமற்றம்.

“இல்லை! உங்க மேல நான் சொன்ன எல்லா தப்பையும் நானும் செஞ்சிருக்கேன்! நம்ப வாழ்க்கைய சரியான கண்ணோட்டத்தோட அனுகலையோனு தோணுது. எனக்குமே இன்னொரு வாய்ப்பு வேணும் அருண்.” கண்கலங்க ஆனால் திடமாக சொன்னாள்.

அலுவலகம் என்றும் பாராமல் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவளே தொடர்ந்தாள், “நீங்க ஆரம்பத்துலையே டைவர்ஸ் வேணாம்னு தான் சொன்னிங்க. இப்பவும் அப்படி தானே?” கடைசி கேள்வியில் அவள் குரல் உடைந்தது.

“ஆர்ச்சு! இன்னைக்கில்ல என்னைக்குமே அப்படி தான். தேங்க்ஸ் அர்ச்சு! தேங்க்ஸ் அ லாட்! அண்ட் ஐ அம் சாரி டூ” அவன் குரல் உணர்ச்சிவசப்பட்டது.

“பழசெல்லாம் விட்டுடலாம் அருண்! சாயந்திரம் வீட்டுக்கு வாங்க! அனு வில் பி சர்ப்ரைஸ்டு”

ப்லே ஸ்க்கூலிலிருந்து வந்து தூங்கிக்கொண்டிருந்த அனுவின் அருகில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா! மனம் லேசானது போலிருந்தது! மகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“இங்க வாங்கப்பா! ப்ளீஸ் வாங்க” என்று தூக்கத்தில் முனகினாள் அனு!

குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, “அப்பா வந்துவாங்கடா” என்றாள்.

“ஐ லவ் யூ மா” – அரைத்தூக்கத்தில் மெல்ல சொன்னாள் அனு!

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *