பின் நோக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 2,730 
 

மஞ்சள் பலகை வைத்த ஷிப்ட் கார் வந்து நின்றது.

நீண்ட நேரமாக காத்திருந்த சிவன்பிள்ளை தூண் மறைவில் வைதிருந்த கைப்பையை அவசரமாக எடுதுக்கொண்டு சாலையோர கோவில் படியிலிருந்து கார் அருகெ ஓடி வந்தார்.

முன் இருக்கையில் ஓட்டுநருடன் சேர்ந்து மூன்று ஆண்களும் ஒரு சடை அவிழ்ந்த பெண் குழந்தையும் இருந்தனர். ஓட்டுநருக்கு பின் இருக்கையில் ஒரு பெண்ணும் ஒரு பெரியவரும் இரண்டு சிறுவர்களும் இருந்தனர்.

அந்த பெண்ணும் பெரியவரும் சிவன் பிள்ளையை வெறுப்புடன் பார்த்தனர்.

ஓட்டுநர் இறங்கி கார் கதவை மூடி பிடித்தபடி இவரை எப்படி வண்டிக்குள் திணிப்பது என்று எண்ணிக்கொண்டே” நீங்க தான் சிவன் பிள்ளையா?” என்றார்.

ஆறடிக்கு அறுபதை நெருங்கும் உயரமான பருத்த, கருத்த உருவம்.

முன்னே முட்டிக்கொண்ட தொப்பை, சட்டையின் கீழிரண்டு ஓட்டைகளை பெரியதாக்கி அடங்க மறுத்த பொத்தான்கள், குங்குமப்பொட்டு நெற்றி வியர்துக் கொட்டிக்கொண்டிருந்தது. வியர்வையின் வெள்ளை கோடுகளுடன் கருப்பு பட்டையில், பழுப்பேறிய எச்.எம்.டி இடது கை கடிகாரம் அதைத் திமிரிக்கொண்டு தெரிந்த கை உரோமங்கள், பின்னிருக்கையில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மிகக் குறுகிய ஜன்னலோர இடத்தைப் பார்த்த வண்ணம் இதில் எப்படி அமர்ந்து பயணம் செய்வது என்று எண்ணிக் கொண்டே, “ஆமாங்க” என்றபடி கார் கதவின் பிடியை தேடினார் சிவன் பிள்ளை.

“இங்க எங்கன குந்தப்போரீங்க”.

“ஏம்ப்பா டிரைவர் தம்பி நீயாவது சொல்லக் கூடாது!”.

“புள்ளக்குட்டிய வச்சிக்கிட்டு நசிங்கிட்டு வருகிறோம்” பின்னே இருந்த பெண் வெறுப்புடன் முகத்தை சொடுக்கி பெரியவரின் கையை குத்தி சமிக்கை செய்தாள்.

பெரியவரும் “ஆமா எங்கன உக்காருவாரு ஆளு வேற பருமனா இருக்குது” என்று மரியாதையை குறைத்தார்.

சிறுவர்கள் இருவரும் சிவன் பிள்ளை நெற்றியில் கூடியிருந்த உரோமங்கள் அடர்ந்த புருவங்களை பூதம் போல் பயத்துடன் பார்த்தனர்.

முன் இருக்கையில் இருந்த இரண்டு ஆண்களும் தங்கள் எதிர்ப்பை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

ஓட்டுநர் “அய்யா நீங்க திருச்சி வரை உட்க்கார்ந்து வருவது சிரமம் ஏற்கனவே ஒவர் லோடு சைலென்சர் ஸ்பீடு பிரேக்கர்ல தட்டுது, வண்டி இன்னும் அமுங்கினா பொலிஸ்காரன் கேஸ் போடுவான்” என்று வண்டிக்குள் நுழைந்தார்.

அவ்வளவு பெரிய உருவத்தை வளைத்து தலை குனிந்து ஓட்டுநரை கெஞ்சலுடன் பார்த்தார். முகத்தை திருப்பிக்கொண்டு கார் கண்ணாடி வழியே சாலையை நோக்கி வண்டியை முடுக்கினார் ஓட்டுநர்.

திரும்பி சாலையோர கொவில் படியை பார்த்து நகர்ந்தார் சிவன் பிள்ளை.

கைப்பையை கக்கத்தில் வைத்துக்கொண்டு தளர்ந்த வேட்டியின் முனையை வாயை திறந்து தவடைக்கு கீழே அழுத்தி பிடித்தவாறு இரு கைகளாலும் வேட்டியை இறுக்கிக் கட்டிய போது கண்ணில் பட்ட தொப்பை வயிற்றைக் கண்டு அவர் சரீரத்தின் மீது அவருக்கே வெறுப்பு வந்தது. வலது கை விரல்க்ளால் தடவியபடி கீழ் இரன்டு பொத்தான்களை பொருத்தினார். அடங்காமல் அவிழ்ந்தது. எங்கு செல்வது என்று புரியாமல் கோவில் படியிலேறி அமர்ந்தார். திரும்ப மகன் வீட்டுக்கே போய்விடலாமா என்று எண்ணுகையில் நிறைய தயக்கங்கள் இருந்தது மகனிடமும் அவன் மனைவியிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்ட போது “லாக்டவுன் முடிந்து தான் போங்கலேன்ப்பா” என்று மகன் கூறுகையில் அவன் மனைவி முகம் மாறியதை அவர் கவனித்தார்.

உடனே திரும்பி விடுவார் என்று நினைத்து, “தாத்தா வரும்போது முறுக்கு வாங்கிட்டு வா” என்று முத்தமிட்ட மகனின் பெண் குழந்தை நினைவுக்கு வந்தது. முறுக்கில்லாமல் அவளை எதிர் கொள்ள முடியாது என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது.

தெருக்குழாயில் நின்று கொண்டு தண்ணீர் பிடித்த படி அவர் செல்வதை மகிழ்வுடன் பார்க்கும் தண்ணீர் ஊத்தும் கூலி பெண்ணுக்கு ஒரு போட்டியாளர் போட்டியிலிருந்து விலகிய நிம்மதி.

காலை எட்டு மணிக்கு வந்தவர் பன்னிரண்டாகிறது ஒரு தோல்வி மன நிலை திரும்பி மகன் வீட்டுக்குச் செல்ல வெட்க்கமாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தை செர்ந்தவர் சிவன்பிள்ளை சமையல் வேலைக்கு ஒரு குழுவை வைத்து நிர்வகித்து வருகிறார். திருமண வீடுகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்து சமைத்துக் கொடுப்பார். ஒரு

பெண்ணும், ஒரு மகனும் அவருக்கு.

மகன் திருமணம் ஆகி சென்னையில் வாழ்ந்து வருகிறான்.

அவனும் மனைவியும் ஐ.டி.யில் வேலை பார்க்கின்றனர்.

சேலையூரில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அரங்கநாதன் தெருவுக்கு ஜவுளி எடுக்க திருமண வீட்டாருடன் வந்தவர்.

மகன் குடும்பத்தை பார்க்க சேலையூர் வந்தார்.

இன்று தாம்பரத்தில் திருச்சி வண்டி பிடிக்க நினைத்தவர் லாக்டவுன் அறிவிப்பால் குழம்பி போனார். லாக்டவுன் என்பது தமிழகத்துக்கே அன்று புதியது. மக்கள் ஒவொருவரும் வெவ்வேறு மனநிலையில் குழம்பினர்.

சவுதியில் விமானதில் ஏறியவனிலிருந்து,வேலூருக்கு பஸ் ஏறியவன் வரையில் எப்ப வீடு போய் சேர்வோமோ!

நடு வழியில் டெஸ்ட்டுனு எடுத்து ஏதாவது காப்பகத்திலோ, மருத்துவமனையிலோ சேர்த்துவிடுவாங்களோ ! மருத்துவமனையில் கொரனானு புடிச்சி போட்டுட்டு அங்கு மற்றவர்களிடமிருந்து தொற்றி செத்துப் போயி அவங்களே அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு தெரிவிப்பாங்களாமே ! என்று பலவாறு குழம்பினர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் தேரிழுக்க வந்த கூட்டத்துக்குள் மத யானை புகுந்தது போல் திண்டாடினர்.

பைத்தியக்காரனை நாய் துரத்துவது போல் பஸ்கள் பின்னே துரத்திக் கொண்டு ஓடினர். ஊர் செல்ல பேருந்துகளை துரத்தி,துரத்தி ஒய்ந்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் பிடிக்கும் ஒரு நாள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முடியாமல் இன்று அதிகம் காசு கொடுத்தாவது காரில் சென்று விட நினைத்து அதுவும் முடியாமல் கோவில் வாசப்படியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார் சிவன் பிள்ளை.

அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் யார் கண்ணிலும் பட்டுவிடாமல் குறிப்பாக வேலைக்கார பெண் கண்ணில் பட்டு விடாமல் தாம்பரம் நோக்கி

நடக்க ஆரம்பித்தார்.

வெய்யில் கொளுத்தியது. வேளச்சேரி சாலை செங்குத்து வெய்யலில் பள்ளமும் மேடுமாக உடல் வலி எடுத்த நோயாளி கை,காலை விரித்து கவுந்துதடித்து படுத்திருப்பது போல் கிடந்தது.

ஒதுங்க ஒரு செடியோ, மரமோ கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை.

இதை ஒரு நாளும் எந்த மணிதனும் நினைத்துக் கூட பார்க்க நேரமில்லாமல் பயண்பட்ட அந்த நோயுற்ற சாலையை மிதிக்க இன்று ஒரு நாய் கூட இல்லை. காகங்கள் மாடி வீடுகளின் சன்னல் கம்பிகளில் நிழலுக்காக வாலை நீட்டி அமர வசதியற்று ஒரு கட்டிடத்திலிருந்து வேறு கட்டிடத்துக்கு குறுக்கும் மறுக்குமாக சிறகு பந்து போல் பறந்து கொண்டிருந்தன.

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையை அடைவதே சிவன் பிள்ளையின் முதல் வேலையாக இருந்தது. வெய்யில் கடுமையில் ஏதாவது வண்டி வருமா என்று திரும்பி பார்த்த வண்ணம் நடந்தார்.

மகன் வீடு தனக்கு அன்னியமாக ஏன் தோன்றுகிறது என்று அசைப்போட்டார்.

திருச்சி பாலகோடு பள்ளிக்கு சென்று வந்த ஒன்பதாம் வகுப்பு குமரனுக்கு அப்பா வேலைக்கு உதவி செய்ய அவன் படிப்பில் கவனம் சிதறியது. கால்பந்து விளையாட்டில் அவன் பல பரிசுகள் பெற்று
வந்தவன். அவன் ஆர்வம் இவரால் பாதிக்கப்பட்டதை புரிந்துகொண்டு பள்ளி விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்.

எல்லா விடுதி பிள்ளைகள் போல் விடுமுறை தினங்களில் வீட்டுக்கு வருவதில்லை விளையாட சென்று விடுவான். அப்படியே வந்தாலும் ஒருசில மணி நேரங்கள் தான் .

அதன் பின் அவனை சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்த்தார்.

வீட்டில் அவன் வழக்கமாக புழங்கிய பொருட்கள் நீண்ட நாட்க்கள் கழித்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் இடம் மாறியிருப்பது அவன் அக்குடும்பத்திலிருந்து விலகிச்சென்று கொண்டிருந்ததை உணர்த்தியது. அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தாழ்வாரத்திலேயே ஒரு இருக்கையில் தங்கி விட்டு செல்வது வீட்டிலிருந்து அன்னியப்பட்டிருப்பது தெரிந்தது.

கல்லூரி முடிந்த உடனெ வேலை கிடைத்துவிட்டதாக போனில் சொன்னான்.

சிவன் பிள்ளை திருமண கும்பலுடன் சென்னைக்கு வருகையில் மகனை அவன் அறையில் சந்தித்து செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் வந்தபோது அவனில்லை !

ஒரு பெண் அவனுக்காக அவன் அறையில் காத்திருந்தாள்.

மகன் திரும்பும் முன்னமே அவளிடம் அவர்கள் தொடர்பை புரிந்து கொண்டார். பல திருமணங்களை செய்தவர் மகனுக்காகவும் சிறப்பாக செய்தார். இக்காலத்தில் இதெல்லாம் சாதாரணம் என்று கேட்ப்பவர்களையெல்லாம் சமாளித்தார். இருவரும் வேலைக்கு செல்வதாலும் ஸ்ரீரங்கம் அவர்களுக்கு தூரதேசமாக தெரிந்தது.

சிவன் பிள்ளை மகன் வீட்டிற்கு வரும் போதும் திரும்பும் போதும் மருமகள் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொள்வதும் எந்த உணர்வும்மில்லாமல் உணவு பரிமாறுவதும் அவருக்கு ஒட்டுறவில்லாமல் இருப்பது புரிந்தது.

இந்த முறை வேலைக்காரபெண்ணை அழைக்க விடாமல் தோளில் தினம் முப்பது குடம் தண்ணீர் பிடித்து நிரப்பிய போதும் அவள் ஒன்றும் நட்பாக அவரை பார்க்கவில்லை.

ஆனால் மரியாதை குறைவாகவும் நடந்து கொள்ளவில்லை.

முதல் நாளில்லிருந்து இன்றுவரை அவள் நடவடிக்கை ஒரே மாதிரி அசகு,பிசகில்லாமல் இருந்தது, அவருக்கு ஆச்சர்யம்தான்!.

அவள் அவரிடம் முகத்தை சுழித்திருந்தாலும் அவர் அவளைப்பற்றி கணித்திருப்பார்.

பல திருமணங்களில் பெண் வீட்டாருக்கு சமையல் ஒப்பந்தம் போடும் போது ஒரு சில மணப்பெண்கள் மகிழ்வுடன் அவரிடம் பேசுவது அவருக்கு தன் மருமகள் ஒரு முறைகூட இப்படி பேசி மகிழ்ந்ததில்லையே என்று வருத்தத்தைத் தந்தது அவருக்கு சந்தேகமெல்லாம் அவரை அவள் அங்கீகரிக்கிராளா? இல்லையா? என்பதுதான்.

இந்த சூழலில் மகன் வீட்டிற்க்கு சென்று திரும்பும் ஒவ்வொர் முறையும் எதிலிருந்தோ தப்பிய ஒரு விடுதலை உண்ர்வு வரும். பெரும்பாலும் இனி மகன் வீட்டுக்கு வரக் கூடாது, இனி மகனை அவன் அலுவலகத்தில் சந்தித்துவிட்டு அப்படியே போய்விட வேண்டும் என்று தான் முடிவெடுப்பார்.

ஆனால் திருமணக் கூட்டதுடன் சென்னைக்கு வரும் போது பலகார கடையையும், முறுக்கையும், மகன் குழந்தையையும் அவரால் தவிர்க்க முடியாது.

இந்த முறையும் அப்படிதான்இங்கு வந்து மாட்டிக்கொண்டார்

இனி ஒருபோதும் மகன் வீட்டிற்கு வரக்கூடாது என நினைத்துக் கொண்டு தாம்பரம் ஜி.எஸ்.டி. ரோடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

தரை பார்த்து நடந்தவரின் நிழல் புறம் காலில் விழுந்து சாலையில் அவரைத் துன்பம் போல தொடர்ந்த்தது.

பசி படர ஆரம்பித்தது. கைக் கடிகாரம் ஒன்றரைக் காட்டியது.

கிறுத்துவ கல்லூரி பேருந்து நிறுத்தமும் இரண்டு காவலர்களும் அவர் பயணத்தை நிறுத்தினர்.

“அய்யா எங்கே போரீங்க?”

“திருச்சிக்கு.”

“எப்படி போவீங்க?” நக்கலுடன் காவலர் கேட்டார்.

“தெரியவில்லை. “எப்படியாவது ஜிஎஸ்டி ரோடு போயிட்டா வாகனம் ஏதும் கிடைக்குதான்னு பார்க்கனும்.”

“லாக்டவுன் ஆச்சே! வெளியே வர , நடமாட அனுமதி இல்லயே!”

“தெரியும்.”

“அப்ப ஏன் வந்தீங்க ?

“என்ன செய்ய தெரியாமல் வந்து மாட்டிக்கிட்டென்” என்று நொந்துக் கொண்டு சொன்னார் காவலர் முகத்தை எதிர் கொள்ளாமல்.

“ எங்கிருந்து வரீங்க?”

“மகன் வீட்டிலிருந்து.”

“எங்க இருக்கு?”

“சேலையூர்.”

“அவர் வீட்டுக்கே போய்விடுங்க இல்லைன்னா செங்கல்பட்டு விடுதியில பதினாலு நாள் கொண்டு வச்சிடுவாங்க திருச்சிக்கல்லாம் வண்டி கிடையாது. திரும்பி மகன் வீட்டிற்கே பொயிடுங்க “

கனிவா, மிரட்டலா இரண்டுக்கும் இடைப்பட்ட மொழியில் பேசினார் பருத்த அந்த காவலர்.

கூட இருந்த காவலர் கைக்குட்டையில் தன் சொட்டை தலையில் வியர்வையை துடைத்துக் கொண்டு நடப்பதை கண்டு கொள்ளாமல் கண்களால் அந்த நீளமாக ஏறிய பாலதிற்கு அருகில் ஆவலுடன்டன் எதையோ தேடினார்.

சிவன் பிள்ளையிடம் பேசிக்கொண்டிருந்த காவலரிடம் காதில் கிசுகிசுத்தார்.

அவரும் “வரட்டும், வரட்டும்” என்றார்.

சிவன் பிள்ளையை ஏற இறங்க பார்துக்கோண்டே “உங்க நல்லதுக்கு தான் சொல்கிறேன் திரும்ப பையன் வீட்டுக்கே போய்டுங்க இல்லன்னா தொல்லைதான்” என்றார்.

மகனும் மருமகளும் சிவன் பிள்ளை ஊருக்கு போய் விட்டிருப்பதாக நினைத்திருப்பார்கள். மகன் வீட்டுக்குத் திரும்பி செல்வதை நினைத்தால் வயிற்றை என்னவோ செய்தது.

அவருக்கு தோல்வி,வெக்கம், அவமானம் எல்லாம் ஒன்று கூடி அதைப் பற்றி சிந்திக்கவே தடுத்தது.அவருக்கு. பேயிடம் தப்பித்து பிசாசிடம் மாட்டிக்கொண்ட மாதிரி உணர்ந்தார்..

“இல்ல சார், என்னை காப்பகத்திலயே விட்டிடுங்க” என்றார்.

காவலரின் முகத்தை பார்க்காமல் தழு தழுத்த குரலில்.

காவலர்கள் கவனம் சில்வர் தூக்குடன் பாலத்திலிருந்து வெளிப்பட்ட இளைஞன் மீது திரும்பியது. மெலிந்த உயரமான உருவம், மூக்கு கண்ணாடி, கை மடக்கிய கருப்பு சட்டை அணிந்திருந்தான். தாடியை வருடிக் கொண்டே

காவலரிடம் சில்வர் தூக்கை நளினமாக கொடுத்தான்

தலையைத் துடைத்த காவலர் கைக்குட்டையை கால் சட்டை பையில் சொருகிக் கொண்டு வாங்கிக் கொண்டார்.

சிவன் பிள்ளையை விசாரித்துக் கொண்டிருந்த காவலர் சிவன் பிள்ளை மீதிருந்த கவனத்தை விடுத்து இளைஞனை பார்த்து “என்ன விவேக் சாப்பிட”என்று அந்த காவலரிடம் இருந்த சில்வர் தூக்கை வாங்கி எடை பார்ப்பது போல் மேலும் கீழும் உயர்த்தி இறக்கினார்.

“தக்காளி சாதம் சார்” என்றான் விவேக் சிரித்துக்கொண்டே..

“இன்னைக்கு சமையல்காரர் ஊருக்கு மஞ்சள் போர்டு வண்டி போகுது அதில் பொண்ணு குடும்பத்தை கொண்டு விடனும் இனி என்னால் இருக்க முடியது என்று போய்விட்டார். நாங்களே சேர்ந்து தக்காளி சாதம் செய்தோம்” என்றான் சிரித்த முகமாக .

“ஆம்லெட் இல்லாமல் அந்தாளு சாப்பிட மாட்டாரே!”

தொப்பியை கழற்றி யோசித்தார்.

“எப்பா செந்தில் சக்தி ஓட்டல் பின் புறமா போய் ஒரு டபுள் ஆம்லெட்டை வாங்கிக்கொள், தூக்கை எஸ்ஸை அய்யா கிட்ட கொடுத்துட்டு வீட்டுக்கு போ!” என்று அருகெ இருந்த காவலரிடம் கூறிவிட்டு, சிவன் பிள்ளையை நோக்கி “அய்யா நீங்க காப்பகத்துக்கு போரதுக்கு வண்டி வரனும்”

“தற்போது வண்டி இன்ஸ்பெக்டெர் ரவுண்ட்ஸ்க்கு எடுத்துட்டு பொயிருக்கார்”

வண்டியை உதைத்த காவலரை சுட்டிக் காட்டி “இந்த காவலர் சேலையூர் தான் போகிறார்”

“அவருடன் உங்க மகன் வீட்டுக்கே போய்விடுங்க. எங்க டூட்டி முடிந்து விட்டது. அடுத்து டூட்டிக்கு வரும் எஸ்ஸை மோசமனவர் எடக்கு முடக்கா ஏதாவது செய்வார் எங்களைப் போல் பொருமையா கையாள மாட்டார்” என்று மிரட்டும் தொனியில் கூறினார்.

சிவன் பிள்ளைக்கு தர்மசங்கடமாக இருந்தது. அனிச்சை செயலாக ஒரு புறமாக வாகனத்தில் காவலர் பின் அமர்ந்தார்.

அவர் எடைக்கு வண்டி ஒருபுறமாக சரிந்தது.

வண்டியில் இருந்த காவலர் அவர் பக்கம் திரும்பி எரிச்சலாக இரண்டு பக்கமும் கால்களை போட்டு அமர சொன்னார்.

வண்டி அவர் சம்மதமின்றி சென்று கொண்டிருந்தது.

75கிலோ அரிசி மூட்டை போல் ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தார்.

சக்தி ஓட்டல் முன் அவரை இறக்கிவிட்டு அவரை திரும்பிக் கூட பார்க்காமல் அவரை ஏற்றி வந்த காவலர் ஓட்டல் பின் புறத்தை தேடி ஓடினார்.

சில வினாடி அவரையே பார்திருந்த சிவன் பிள்ளை கடலில் எறிந்த ஒற்றைக்கால் செருப்பு கரைக்கே திரும்பியது போல் மகன் வீட்டை நோக்கி நடந்தார்.

இப்போது மதியத்தை கடந்த நிலையில் அவர் நிழல் அவமானமும், இயலாமையுமாக அவருக்கு முன் சென்றது.

இடையே சுடுகாடு போல் இருந்த கடை வீதியில் அவர் கண்கள் ஏதாவது பெட்டிக்கடையாவது திறந்திருக்குமா என்று குழந்தைக்காக முறுக்கை தேடியது.

அவர் வீட்டை நெருங்கினார். கதவு உள்ளே தாழிட்டிருந்தது. மனம் இடம் கொடுக்காமல் அவரின் வெறும் கை கதவைத் தட்டியது.

கதவை திறந்த மகன் வாயில் விரலை வைத்து சத்தம் செய்ய வேண்டாம் என செய்கை செய்தான்.

உள் ஹாலில் மின் விசிறி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நாணல் பாய் நான்காக மடித்து அதன் மீது குழந்தை ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தது மின்விசிறிக் காற்றில் குழந்தை நெற்றியை மென்மையான மயிர்கற்றைகள்.

வருடிக்கொண்டிருந்தது. அருகே நொறுங்கிய கை முறுக்கு துண்டங்கள்.

அவர் கண்கள் குழந்தையை விடுத்து மருமகளை தேடியது.

பெட் ரூம் கதவு மூடியிருந்தது. உள்ளே மருமகள் உறங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

மகனை நிமிர்ந்து தயக்கத்துடன் பார்த்தார்.

“நீங்க போனபின் தாத்தா வேண்டும்னு அதிகம் அடம்பிடித்தாள். வேலைக்கார பொண்ணு நீங்க காரில் செல்லவில்லை என்றும், திரும்பி வருவீங்கன்னு சொல்லி வீட்டிலிருந்த முறுக்கை கொண்டு வந்து கொடுத்து, நீங்க கொடுத்தனுப்பியதாக சமாதனம் செய்து குழந்தையை தூங்க வைத்தாள்” என்றான்.

சிவன் பிள்ளைக்கு பசி காதை அடைத்தது. சாப்பிட கேட்க்க கூச்சம் தடுத்தது.

“சரி சீக்கிரம் கைக்கழுவிட்டு வாங்க” என்றான் அவர் மகன் மேலும் அவள் “ நீங்க கார்ல பொகவில்லை என்று சொன்னதும் நான் நம்பவில்லை. ஆனால் அனித்தா நீங்க பசியா வருவீங்கன்னு சமைத்து டைனிங் டேபில்ல வச்சிட்டு இப்பதான் படுத்தா. எழுப்பட்டா?” என்றான்.

சிவன் பிள்ளை கைக்கழுவிக்கொண்டே “வேண்டாம் மவ தூங்கட்டும்” என்றார் கண்ணீரையும் சேர்த்து கழுவிக்கொண்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *