பாவம் பரந்தாமன்

 

பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். மருமகளுக்குத் தெரிந்தால் வீடே அமளிதுமளிப்படும். அவள் கிடக்கட்டும், தான் தூக்கி வளர்த்த தன் பையன் நாராயணனுமல்லவா இப்படி மாறிப்போய் விட்டான். எல்லாம் தலையணை மந்திரத்தின் வேலை. உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு என்ன பாடு படுத்தினான் அவன்!

“வயசான காலத்தில ஏம்பா இப்படிப் படுத்தறேள்? வாயைக் கொஞ்சம் கட்டிக் கொண்டால் தான் உங்களுக்கும் நல்லது; மத்தவாளுக்கும் நல்லது. புரிஞ்சுதா?” நாராயணனா இப்படிப் பேசுகிறான்! பரந்தாமன் விக்கித்துப் போய்விட்டார். இவ்வளவுக்கும் அவர் என்ன பெரிய தப்பு பண்ணிட்டார்? ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரைப் பொங்கல் கேட்டார். அவ்வளவுதான். அவரால் நம்ப முடியவில்லை. இன்று அவரைவிட ஒரு அடி அதிகம் உயர்ந்து வளர்ந்து நிற்கும் நாராயணன் ஒரு காலத்தில் அவரைத்தான் தாயைப் போலப் பாவித்து அவர் மடியிலேயே வளர்ந்தவன். அவன் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோது திடீரென்று ஊரெல்லாம் பரவிய விஷ ஜுரம் அவன் அம்மா நாராயணியையும் பறித்துக்கொண்டது. புண்ணியாகவாசத்தன்று மகனுக்கு சாமிநாதன் என்று பெயர் வைத்த பரந்தாமன் இறந்துபோன மனைவியை மறக்க முடியாமல் மகனை நாராயணா என்று அழைக்க ஆரம்பித்தார். இதிலே அவருக்கு ஒரு மன ஆறுதல்.

பரந்தாமனுக்கு உலகமே இருண்டு விட்டது போலாகிவிட்டது. துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த அவருக்கு கிடைத்த சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டுவதே பெரும்பாடு. சொத்துபத்து எதுவுமே இல்லாத ஒரு மனிதனுக்கு உறவு என்பது எங்கிருந்து வரும்? பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த வயதான ஒரு பெரியம்மா ஓரளவுக்கு அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்த்துக்கொள்வதில் உதவியாக இருந்தாள். எப்படியோ பிழைப்பை ஓட்டிவந்த பரந்தாமன்மீது இரக்கப்பட்ட மேலதிகாரி அவருடைய நிலைமைக்கு இரக்கப்பட்டு ஒரு விடுதியில் நாராயணனைச் சேர்த்து விட்டதோடு அவனது படிப்புக்கும் உதவியாக இருந்தார். நாராயணனும் தன் நிலமையைப் புரிந்து கொண்டு நன்றாக உழைத்துப் படித்து ஒரு ஆடிட்டர் ஆகிவிட்டான்.

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று அழைக்கவேண்டாமே! அவனுடைய இளமை, அழகு, படிப்பு, அந்தஸ்து இவற்றில் மயங்கினாள் இவன் வேலை பார்த்த கம்பெனியின் ஒர்க்கிங் பார்ட்னர் சந்திரசேகரின் மகள் ஜானகி. அவரும் பரந்தாமனிடம் இதைப்பற்றிப் பேசினார். ஒரே மகளாயிற்றே. பிள்ளையின் வளமான எதிர்காலத்திற்குத் தடைபோட அவருக்கென்ன பைத்தியமா? உடனே கெட்டிமேளம் கொட்டிற்று.

வீட்டில் விளக்கேற்ற ஜானகி வந்தபோது ஒரு சொந்த வீட்டையும் சீதனமாகக் கொண்டு வந்தாள். உண்மையில் அதை வீடு என்று சொல்லக் கூடாது. பெரிய பங்களா! செல்வச் செழிப்புடன் வளர்ந்தவள் என்பதால் கொண்டுவந்த வீடும் வேண்டிய அலங்காரப் பொருட்கள், சோபா செட்டுக்கள் பிரிட்ஜ், டி.வி. என்று நிரம்பி வழிந்தன. அவளுக்கிருந்த ஒரே ஒரு குறை பிறந்த வீட்டில் சமையலுக்கு ஒருத்தி, மேல் வேலைக்கு ஒருத்தி, தோட்டக்காரன், டிரைவர் இப்படி ஏகப்பட்ட வேலை ஆட்கள். இங்கே அப்படி ஏதுமில்லை. ஆனால் அந்தக் குறையும் இல்லாதபடி ஆண்டவன் அவளுக்கு உதவினான். ஆம். அவள் வந்த அடுத்த மாதமே பரந்தாமன் துறைமுக வேலையில் ஓய்வு பெற்று, வேறு புதிய இலாகாவில் பணிநியமனம் பெற்றார்.

இதனால் அவருக்குக் கொஞ்சம் நேரம் கிடைக்கவே, வீட்டில் ஜானகிக்கு ஒத்தாசையாகக் காய் நறுக்குவது, கடைக்கு, ரேஷனுக்கு, பால் கார்டுக்கு, எலக்டிரிக் பில் செலுத்த, டெலிபோன் பில் கட்ட எல்லாம் போவதற்கு, காலையில் கார் துடைக்க என்று எல்லாவற்றிற்கும் உதவிக்கரம் நீட்டினார். அவர் செய்கின்ற காரியங்கள் அனைத்துக்கும் அழகாக நியாயம் கற்பித்தாள் ஜானகி. நடப்பது நல்ல உடற்பயிற்சி, ஓடிஆடி வேலை செய்தால் வியாதி வெக்கைவராது என்று சொல்லி அவரை உற்சாகப்படுத்தினாள். அது மட்டுமா! வயதானால் உப்பைக் குறைக்க வேண்டும் அப்போது தான் வியாதிகள் அண்டாது. இளம் வயதுக் காரர்களே எண்ணை, கிழங்கு வகைகளை விலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். அப்படியிருக்க மாமனார் சாப்பிடலாமா? சர்க்கரை வியாதி இவர் பரம்பரையில் யாருக்கோ இருப்பதாகச் சொன்னார்கள். அதனால் முன் ஜாக்கிரதையுடன் இருப்பதுதான் புத்திசாலித்தனம். மாமா சர்க்கரையைக் கண்ணால் பார்ப்பதுவுங்கூடாது. ஆக மொத்தம் மாமாவிடம் வேலை வாங்குவதில் காட்டிய தாராளம் சாப்பாடு போடுவதில் இல்லை.

நாராயணனுக்கு அப்பாவின் 60வது பிறந்த நாளை ஊர் மெச்சக் கொண்டாட ஆசைதான். “மாமி இல்லாமல் கொண்டாடினால் மாமாவுக்கு வருத்தம்தான் அதிகமாகும். வீட்டோடு கொண்டாடினால் போதும்” என்று ஜானகி சொல்லிவிட்டாள். நாராயணனுக்கு அவள் சொன்னால் வேத வாக்கு. இதனால் வந்த வினைதான் ஒருஸ்பூன் சர்க்கரைப் பொங்கலுக்குக் கெஞ்சியதும், அதற்கு நாராயணன் சத்தம் போட்டதும். மனைவி போனபின் கணவன் உயிரோடு இருப்பது போன்ற கொடுமை அப்பப்பா! ஆண்டவனிடம் அவர் இதுபற்றி முறையிடாத நாளில்லை. அவர் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த போது தான் அது நிகழ்ந்தது.
ஆபீஸ¤க்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த நாராயணன் காருக்குள் ஏறுமுன் மனைவியை அழைத்தான். ஒரு பைலை எடுத்து அவளிடம் நீட்டி “குழந்தை சேகரைப் பள்ளியிலிருந்து கூட்டிண்டு வர வழியில பியூனை இந்த பைலை அட்வகேட்டிடம் குடுக்கச் சொல்லு” என்று சொன்னவன் அவசரமாகக் காரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். அவசரத்தில் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த இரண்டு ரூபாய்த் தாளை அவன் கவனிக்கவேயில்லை. பைலை வாங்கிக்கொண்டு உள்ளே போன ஜானகியும் அதைக் கவனிக்கவில்லை. பரந்தாமன் கண்ணில் மட்டும் பட்டது. அவர் கண்ணில் அது இரண்டு ரூபாயாகத் தெரியவில்லை. லாட்டரி டிக்கெட்டில் 2 லட்சம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி.

அவருக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசை. அவரிருந்த தெரு முனையில் ஐயர் ஒருவர் வீட்டு வாசலில் தினமும் பிற்பகலில் சுடச்சுட பஜ்ஜி, போண்டா, வடை போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தினமும் அந்த வழியாய் வாக்கிங் போகும் போது பரந்தாமன் நாக்கில் எச்சில் ஊறும். ஒரு நாளாவது ஒரு வடை வாங்கிச் சாப்பிட வேணடும் என்று கொள்ளை ஆசை. இன்று அந்த ஆசையைத் தீர்த்துக் கொள்ள அவருக்கு 2 ரூபாய் கிடைத்து விட்டது. மூன்று மணி சுமாருக்குக் கால்களை எட்டிப்போட்டு கடையை நோக்கி விரைந்தார். அவசரமாக ஒரு வடையை வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டிருப்பார். அதற்குள் எதிரே வந்தவரைப் பார்த்தவுடன் மயங்கிக் கீழே விழுந்தார். கையில் இருந்த வடை மண்ணில் உருண்டோடியது.

கூட்டம் கூடிவிட்டது. விழுந்தவர் மலங்க மலங்கப் பார்த்தார். யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்துக் குடிக்கவும் கொடுத்தனர். ஒரு மாதிரியாகத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழுந்த போது வெட்கமாக இருந்தது. கண்கள் தேடிய நபர் அங்கில்லை என்று புரிந்தபோது மெள்ள நடக்க ஆரம்பித்தார். கூட்டமும் நிம்மதியாகக் கலைந்து போயிற்று.

மயங்கிவிழக் காரணம் அவர் பேரன் பியூனின் கையைப் பிடித்துக்கொண்டு எதிரே வந்து கொண்டிருந்ததுதான். அம்மாவிடம் சொல்லாதே என்று குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க சங்கோஜமாயிருந்தது.

பாவம் பரந்தாமன், பியூனும் குழந்தையும் அவரைக்கவனிக்கவே இல்லை என்பது தெரியாமற் போனது அவரது துரதிருஷ்டமே.

- செப்டம்பர் 2003 

தொடர்புடைய சிறுகதைகள்
மணி என்ன? கேசவனிடம் 'ரிஸ்ட் வாட்ச்' கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தான். சாம்பார் சாதத்தை மடமடவென்று சாப்பிட்டு முடித்தான். காலை 9 மணி முதல் ...
மேலும் கதையை படிக்க...
டிரிங்...டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு conference call. அவன் ரிஸீவரை எடுக்கவேயில்லை. அது அடித்துப் பார்த்துப் பின் ...
மேலும் கதையை படிக்க...
மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30 மணிக்கு விழா ஆரம்பம். 8.45க்கெல்லாம் ஸ்வர்ணா வந்து விடுவதாகச் சொல்லியிருந்தாள். லயன்ஸ் கிளப் தலைவி ஸ்வர்ணா. அவளுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ...
மேலும் கதையை படிக்க...
டிரிங் டிரிங்... ரிஷீவரைக் கையில் எடுத்து "ஹலோ" என்றான் ராகவன். அடுத்து 'அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே ! ரிஷீவரைக் கையால் பொத்திக்கொண்டே"மாலதி! அப்பா நம்பகூட வந்து இருக்க முடிவு பண்ணிட்டாராம்." சொல்லியபடி ரிஷீவரை மனைவியிடம் தந்தான். "அப்பா! ...
மேலும் கதையை படிக்க...
உயிரின் விலை
தீபாவளி?
அம்மா!
மனம் மாறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)