பாம்புக்கு வார்த்த பால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 8,316 
 

இருளின் திரை இன்னும் பிரிந்து விழவில்லை. ஒளி மங்கி வந்த போதிலும் பார்வை குன்றவில்லை. என்றாலும் தெருவிளக்குகள் பளிச்சிடத் தொடங்கிவிட்டன.

அடுத்தடுத்த குடிசைகளில் அவரவர்கள் வீடு திரும்பிவிட்ட சந்தடிக் கலகலப்பு. அந்த ஒடுங்கிய வீதியில் குதித்தோடும் குழந்தைகளின் ஆரவாரப் பேரிரைச்சல். குடிசைக்குக் குடிசை சிமினி விளக்குகளும், தெள்ளிய ஒளி சிந்தத் தொடங்கிவிட்டன.

மரகதம் சிலையாய்ச் சமைந்திருந்தாள். களிமண் சுவரில் முதுகைச் சாய்த்துக் கொண்டு இப்படி எத்தனை நேரமாய் உட்கார்ந்திருக்கிர்றாளோ, அவளுக்கே தெரியாது. குடிசைக்குள் சூழத் தொடங்கிவிட்ட இருள், நேரமாகக் கனத்து அவளையே மூடிவிட்ட பிறகுதான் திடுக்கிட்டு எழுந்தாள். ‘ஐயோ, அவர் வருகிற நேரமாகிவிட்டதே!’

அரிக்கேன் விளக்கைப் பொருத்தி வாசலில் மாட்டிவிட்டு, குத்து விளக்கை ஏற்றி வீட்டின் மையத்தில் வைத்துவிட்டு பரபரப்புடன் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள். இயந்திர கதியில் உறுப்புகள் இயங்கினாலும், உள்ளம் என்னவோ திரும்பத் திரும்ப ஒன்றையேதான் சுற்றி வந்தது.

மரகதம் தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முயன்றாள். தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டாள். ஆனால், இப்படி அவளுக்கு அவளே கூறிக்கொள்ளும் ஆறுதலும், தேறுதலும் ஒரு போலிச் சமாதானம் என்பதை அவளுடைய அடிமனமே கண்டு கொண்ட பிறகும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது சாத்தியமாயில்லையே!

ஏதோ சாமான் எடுப்பதற்காகத் திரும்பிய அவளுடைய காலில் எதுவோ இடரிற்று. திரும்பிப் பார்த்தாள். பால் கிண்ணம். அடுத்த கணமே முகம் வெறுப்பினால் சுருங்கிற்று. கண்களில் குரோத வெறி. காரணமில்லாமல் அந்தக் கிண்ணத்தை வெறித்துப் பார்த்தாள்.

அடுப்பில் சோறு பொங்கிற்று. வெடுக்கெனத் திரும்பி உலை மூடியை எடுத்து வைத்துவிட்டு விறகை வெளியே இழுத்து வைத்தாள். சோறு தளதளவென்ற ஓசையுடன் வெந்துகொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் கருப்பையா வீடு திரும்பி விடுவான். சோற்றை வடித்து பகல் வைத்த வெஞ்சனத்தையே சூடு காட்டி வைத்துவிட்டால் தீர்ந்தது. அப்புறம் அவளும் ஏதோ பெயருக்கு இரண்டு கவளத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு படுத்துவிடுவாள்.

மீண்டும் மரகதத்தின் பார்வை அந்தப் பால் கிண்ணத்துக்கே தாவிற்று. கருப்பையா சாப்பிட்டு முடிக்கும் முன்பு அதில் சுடச்சுட பாலைக் காய்ச்சி எடுத்து வைக்க வேண்டும். அதுவும் அவனுக்கல்ல. அவளுடைய நெஞ்சில் நிம்மதியே இல்லாது பண்ணிவிட்ட ஒரு நச்சரவுக்கு. நாளெல்லாம் அவளை நினைத்து நினைத்துப் புழுங்க வைத்துவிட்ட ஒரு நாகத்துக்கு. மகிழ முடியுமா இதற்கு?

கருப்பையாவைப் பொறுத்த மட்டில் அந்த நாகம் அவனுக்குச் சோறு போடும் தெய்வமாக இருக்கலாம். அவளுக்கு அது பரம வைரிதான். பயங்கர விரோதிதான். அது ஒழிகிற வரை அவளுக்கு நிச்சயமாய் நிம்மதி இல்லை. அப்படி ஒழிந்து விட்டால் கருப்பையாவின் பிழைப்பிலேயே மண் விழுந்துவிடும் என்பதும் உண்மைதான். வாழ வேறு வழியா இல்லை. அந்த வழி பிற்க்கும் வரை அவள் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டும் கிடக்கத் தயார். ஆனால் அப்படியாவது கருப்பையாவின் கவனம் அவள் மீது திரும்ப வேண்டுமே. கை வேலைகளில் கவனத்தைத் திருப்ப முயன்றாள் மரகதம்.

இரவு எட்டு மணி இருக்கும். குடிசைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கருப்பையா சோர்வுடன் தலையில் கட்டி இருந்த முண்டாசை அவிழ்த்து எறிந்துவிட்டு வலது கையிலிருந்த மகுடியை கட்டை மண் சுவர் மீது வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்து கொண்டான். அதுவரை கக்கத்தில் இறுக்கி இருந்த அந்தப் பிரம்புப் பெட்டியை கீழே வைத்து மூடியைத் திறந்தான்.

புஸ் என்று மூச்சு விட்டவாறே தலையைத் தூக்கியது ஒரு கருநாகப் பாம்பு.

“பசிக்குதாடா ராஜாக் கண்ணு?” என்று செல்லமாக வினவியவாறே அவன் தன் வலது கையை நீட்ட ஒரு குழைவுடன் அதில் தாவி ஏறியது அது. தன் முகத்தருகில் கையை இழுத்துக் கொண்டு “சொல்லுடா கண்ணு, பசிக்குதா” என்று கொஞ்சினான் அவன்.

இரட்டையாய்ப் பிளந்திருந்த தன் நாக்கி அவன் கன்னத்தில் நீட்டி நக்கிற்று அது.

“மரகதம்” என்று குரல் கொடுத்தான் கருப்பையா. அதுவரை கதவிடுக்கில் நின்று அந்தக் காட்சியை வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த மரகதம் சற்று தாமதித்து உள்ளே வந்தாள்.

“ராஜாக்கண்ணுக்கு பசிக்கிறது, பால் கொண்டா” என்றான் நிமிராமலே.

“இனிமேல்தான் காய்ச்ச வேண்டும்” என்று மரகதம் பதில் சொன்னதும், “நான் எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன் உனக்கு? முதலில் ராஜாக் கண்ணுவுக்கு பால்காய்ச்சி வைத்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டுமென்று? ம்ம், சீக்கிரம்” என்று கடுகடுத்தான் அவன்.

மௌனமாய் உள்ளே சென்ற மரகதத்துக்கு ஒருபுறம் அழுகையும் மறுபுறமும் ஆத்திரமும்தான் பீறிட்டன. இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா? பெற்ற குழந்தையைக்கூட இப்படிக் கொஞ்சுவாரோ என்னவோ?

மரகதம் பாலோடு உள்ளே வந்தபோது கருப்பையா மல்லாந்து படுத்திருந்தான். அவன் மார்பில் சரசரவென்று ஊர்ந்து கொண்டிருந்தது அந்த நாகம். பாலைக் கண்டதும் எழுந்து கொண்ட அவன், அந்த நாகப்பாம்பை மடியில் போட்டுக் கொண்டு பால் கிண்ணத்தை அருகே நகர்த்திக் கொண்டான். விருட்டென உள்ளே சென்றுவிட்டாள் மரகதம்.

இன்று நேற்றா நடக்கிறது இந்த வேடிக்கை? என்றைக்கு அவள் மாலையும் கழுத்துமாய் மங்கலப் பொலிவுடன் இந்த வீட்டுக்கு வந்து நுழைந்தாளோ அன்றிலிருந்தே இப்படித்தான். கட்டிய மனைவி கணவனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் தவித்துக் குமைந்து புழுங்க, எங்கோ கிடந்த நச்சரவொன்றுக்கு இத்தனை முக்கியத்துவமா? கொஞ்சி மகிழ வேண்டிய மனையாள் குமுறி விதிர்க்க, பார்க்கவே பயங்கரமான அந்த விஷ ஜந்துவிடம் இத்தனை பாசமா?

மரகதத்துக்கு பொறுக்கவே முடியவில்லை. மௌனமாய் மனைப்பலகையை எடுத்துப் போட்டு தம்ளரில் தண்ணீரை வார்த்து வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, நயனங்களில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் தரையில் பட்டுச் சிதறின.

பரமசிவன் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிற மாதிரி அந்தப் பாம்பை தன் கழுத்தி சுற்றிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் அவன். அது தன் உடம்பை நீட்டி நெளிந்தவாறு அவன் நெஞ்சில் புரண்டது. குன்று மணி போன்ற அதன் கண்களும், கூரிய வாயிலிருந்து அடிக்கடி வெளியில் நீளும் மெல்லிய நாவும் மரகதத்துக்கு பார்க்கவே அருவருப்பாய் இருந்தன. என்ன செய்வது? அதுவே அவள் கணவனுக்கு பெற்ற குழந்தையைப் போலவும், கட்டிய மனைவியைப் போலவும், உற்ற நண்பனைப் போலவும் இருக்கும்போது அவளால் என்ன செய்ய முடியும்?

அவன் சாப்பிட்டுக் கொண்டே கேட்டான். “ ஏன் மரகதம், நீ என் ராஜாவைத் தொடுவதே இல்லை?”

அவள் பதில் கூறவில்லை.

“பயப்படுகிறாயா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்த அவன், “மற்ற பாம்புகளை மாதிரி இதையும் எண்ணிக் கொண்டிருக்கிறாயா? பைத்தியம்! மனிதர்களிடம் காண முடியாத நன்றி உணர்ச்சியையும் நட்பு உணர்ச்சியையும் இதனிடம் காணலாம். இதற்குள்ள அறிவு எனக்கிருக்கிருக்கிறதா என்பதுகூடச் சந்தேகம்தான்!”

மரகதம் மௌனமாய் இருந்தாள்.

“இவன் என்னிடம் எப்படி சிக்கினான் தெரியுமா? இதே ஊரில் ஒரு தாழங்காடு இருக்கிறது. ஒரு நாள் விடியற் காலம் அந்த வழியாக நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு மரத்தடியில் இது ரத்த காயத்துடன் அசைந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கீறிப்பிள்ளை குதறி இருக்கிறது. பார்க்கப் பரிதாபமாய் இருக்கவே தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன். கொஞ்சம் பாலை வார்த்து, கொஞ்சம் மூலிகையை அரைத்து உடம்பெல்லாம் பூசிவிட்டேன். ஆறே நாளில் காயம் ஆறிவிட்டது. அப்புறம் நானே போகச் சொன்னாலும் அது போகுமா? ரொம்பவும் ஒட்டிக் கொண்டது. ஒரு நாள் மகுடியை எடுத்து ஊதிப்பார்த்தேன். என்னமாய் ஆடிவிட்டது என்கிறாய்? பார்த்தேன். மறுநாள் நானே சுயமாய் பிழைக்கத் தொடங்கிவிட்டேன். மஸ்தானுக்கு அதில் ரொம்ப வருத்தம். அதற்காகக் காலம் பூராவும் அவருக்குக் கூடப் போய்க்கொண்டிருக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டு தண்ணீரை மடமடவென்று குடித்தான் கருப்பையா.

“மஸ்தானா யாரது?” என்று கேட்க மரகதம் வாயைத் திறந்தபோது கருப்பையாவே சொன்னான். “மஸ்தான் என்றால் யாரென்று நினைக்கிறாயா? எனக்கு குரு மாதிரி. கட்டு விரியனிலிருந்து கொம்பேறி மூக்கன் வரை எந்த ரகப் பாம்பு கடித்தாலும் இரண்டே நொடியில் விஷத்தை இறக்கிவிடுவார். கருநாகங்களுக்கு மோடி மஸ்தான்கள் என்றாலே சிம்ம சொப்பனம்தான்.”

அவன் சொன்ன விபரங்களைக் கேட்கக் கேட்க மரகத்துகு ஒருவகையில் பெருமை மேலிட்டாலும், அந்த பெருமைக்குரிய கணவன் தனக்கு முழுமையான உரிமையாய் இல்லையே என்ற வகையில் வருத்தமும் பீறிட்டது.

கையைக் கழுவிக் கொண்டு உள்ளே சென்ற கருப்பையா வழக்கம்போல அந்த சர்ப்பத்தை கொஞ்சத் தொடங்கினான். கைவேலைகளை முடித்துக் கொண்டு உள்ளே வந்த மரகதம் பாயை எடுத்துப் போட்டு விரிக்களானாள்.

நேற்று நடந்ததைப்போல் இருக்கிறது எல்லாம். மரகத்ததின் அம்மா சாகக் கிடந்ததும் சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே ஓடிப்போய்விட்ட அவள் தம்பி கருப்பையா பட்டணத்தில் கைநிறைய சம்பாதிப்பதாக செய்தி வந்ததும் உடனே தந்தி கொடுத்து அவனை வரவழைத்துக் கையில் மரகதத்தை ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடியதும் கனவு போலத்தான் இருக்கிறது. ஆனால் பட்டணத்தில் வாழ்ந்தாலும், வயிறு நிறைய உண்டாலும், கணவனின் பரிபூரணமான அன்பு கிட்டாதிருக்கும்போது, மனதுக்கு நிறைவு ஏற்பட முடியுமா?

இதற்கு எப்படியும் சீக்கிரமே ஒரு வழி கண்டாக வேண்டும்.

விடிந்து சற்று நேரமாகிவிட்ட பிறகுதான் மரகதத்துக்கு விழிப்பே வந்தது. இரவெல்லாம் தூக்கமின்றிப் புரண்டு கொண்டே இருந்ததில் சற்று அயர்ந்து விட்டிருந்தாள்.

எழுந்து உட்கார்ந்த பிறகுதான் கருப்பையா காலையிலேயே புறப்பட்டுப் போய்விட்டது தெரிந்தது. போனவர் எழுப்பிச் சொல்லிவிட்டுப் போகக் கூடாதா என்று நினைத்தவாறே எழுந்தவளுக்கு அவன் அப்படிச் சொல்லாமல் புறப்பட்டுப் போனது ஒரு வேதனையை உண்டு பண்ணிற்று. மனைவி என்கிற உரிமை உணர்வு உள்ளத்தில் ஆழமாக வேறூன்றவில்லையோ அவருக்கு? அதனால்தானே இந்த அந்நிய மனப்பான்மை!

அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. ஒவ்வொரு குடும்பங்களில் தம்பதிகளைப் பார்க்கவில்லையா? அவர்களிடம்தான் எத்தனை நெருக்கம்? எவ்வளவு பிணைப்பு! ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும்போதெல்லாம் இப்படியா உற்சாகம் குன்றி இருக்கிறது அவர்களுக்கு?

முகத்தை அலம்பிவிட்டு வந்து உட்கார்ந்தவளுக்கு அப்படியே குமுறிக் குமுறி அழ வேண்டும் போலிருந்தது. இத்தனைக்கும் காரணமான அந்த நாகத்தை நினைக்கும்போது அவள் நெஞ்சினுள் வன்ம வெறியும் குரோத உணர்ச்சியும்தான் பொங்கி எழுந்தன.

இப்படி நிம்மதியே இல்லாமல் வாழ்வதைவிட, பேசாமல் விஷயத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளலாமே!

பளிச்சென்று ஒரு கீறல் –

விஷத்தைக் குடித்து நாம் ஏன் சாக வேண்டும்? விஷயத்தைக் கொடுத்து சாகவேண்டியதைச் சாகடித்தால்…

மரகதத்தின் முகத்தின் ஒரு தீடிர் மலர்ச்சி. ஆனால் விஷப்பாம்பை விஷமே கொல்லுமா? நஞ்சிலேயே உருவெடுத்துவிட்ட ஒரு நச்சரவை இன்னொரு நஞ்சு வீழ்த்துமா?

மரகதம் யோசித்தாள். முயற்சிப்பதில் ஒன்றும் தவறில்லையே.

இரவு மணி எட்டுக்கு மேலிருக்கும். கருப்பையா இன்னும் வீடு திரும்பவில்லை. வழக்கம்போல மரகதம் சோம்பிய உள்ளத்துடன் சோர்ந்து உட்கார்ந்திருக்க வில்லை. இயந்திர கதியில் காரியங்களை கவனிக்கவில்லை. அதற்கு மாறான உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் அவள் சுழன்று கொண்டிருந்தாள். அடிக்கொருதரம் அவள் விழிகள் தெருப்பக்கத்தை மொய்த்து மீண்டன.

பால் கிண்ணத்தில் பாலாடை விட்டிருந்தது. வந்ததும் எடுத்து நீட்ட வேண்டியதுதான். வற்றக் காய்ச்சப்பட்டிருந்த அந்தப் பசும்பாலின் ஜீவ சத்துக்களின் ஊடே கலந்திருக்கும் கொடிய விஷம் குடலையே தின்று விடும். அந்த நச்சு ஜந்து தன் வழவழத்த உடலை தரையில் புரட்டிக் கொண்டு துடிதுடிக்கும் காட்சி உண்மையில் அவளுக்கு மகிழ்ச்சிகரமானதுதான்.

அடுப்பில் புழுங்கிக் கொண்டிருந்த சோற்றை இறக்கி வைத்துவிட்டு, மரகதம் வீட்டுக்குள் வரவும் கருப்பையா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. வழக்கத்து மீறிய உற்சாகத்துடன் காணப்பட்டான் அவன். உள்ளே வந்து உட்கார்ந்ததும், “மரகதம் உனக்கு சேதி தெரியுமா? நம்ம ராஜா இன்னிக்கி சினிமாவிலே நடித்திருக்கான். என்னமா நடிச்சான் தெரியுமா? பட முதலாளி தட்டிக் கொடுத்தார் என்னை. பேசினதுக்கு மேலே பத்து ரூபாய் போட்டுத் தந்தார்” என்று கூறியவாறே பிரம்புப் பெட்டியைத் திறக்க புஸ்ஸென்று வெளியே வந்தது நாகம்.

மரகதத்துக்கு அந்த வார்த்தைகள் எரிச்சலூட்டவில்லை. மாறாக, அந்தப் பாம்பின்மீது அனுதாபத்தைத்தான் ஏற்படுத்திற்று. “பாவம், தன் கடைசி நாளில் தன்னை வளர்த்தவனுக்கு இப்படி சினிமாவில் நடித்தும் கொஞ்சம் பணத்தைச் சேர்த்துத் தந்திருக்கிறதே!”

”இரு நூறு ரூபா கொடுத்தாங்க! இந்தப் பணத்துல முதல் காரியமா என்ன வாங்கப் போறேன் தெரியுமா?” என்று கேட்டு விட்டு கருப்பையா நிறுத்தியபோது, மரகத்ததின் மனக்கண்ணில் ஒரு ஜோடி தங்க வளையல்கள் தோன்றி மறைந்தன.

கருப்பையா தொடர்ந்தான். “ராஜாவுக்கு வெள்ளியிலே ஒரு பால் கிண்ணம். ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து பிளாஸ்டிக்கிலே ஒரு பிரம்புப் பெட்டி. நல்லதா ஒரு மகுடி செய்யணும்”.

மரகதம் திகைத்துவிட்டாள். இப்படியும் கூடவா ஒரு கணவர் இருப்பார். புது மணக் கருக்கழியாமல் கட்டழகுடன் ஒரு மனைவி எதிரில் நிற்க, பாம்புக்குப் பால் கிண்ணமும் ப்ளாஸ்டிக் கூடையுமா ஞாபகம் வரும்?

“சரி சரி, ராஜாவுக்கு பாலைக் கொடுத்துவிட்டு சீக்கிரம் சாப்பாடு போடு” என்று நாகத்தை மடியில் போட்டுக் கொண்டான் கருப்பையா.

மரகதம் விழிப்படைந்தாள். பால் கிண்ணத்தைக் கையில் எடுத்ததும் அவளையும் மீறி ஒரு நடுக்கம் விரவிற்று. குப்பென்று முகத்தில் பொங்கிய வேர்வையைத் துடைத்தவாறே கிண்ணத்தை கருப்பையாவின் எதிரில் வைத்துவிட்டு, விருட்டென சமையல் கட்டில் நுழைந்துவிட்டாள் அவள். நிற்கவே இயலாமல் கால்கள் உதறல் கண்டன.

அவளால் உள்ளே நிற்க முடியவில்லை. மெல்ல மெல்ல கதவருகே வந்து பார்த்தாள்.

கருப்பையா பால் கிண்ணத்தை நாகத்தின் எதிரே வைத்துவிட்டு, “குடிடா ராஜா” என்றான். ஆவலோடு கிண்ணத்துக்குள் வாயை நீட்டிக் கொண்டு போன அது சரேலென வெளியே இழுத்துக் கொண்டது.

“பசிக்கலையா கண்ணு, பரவாயில்லை குடி” என்று மீண்டும் கிண்ணத்தை இன்னும் நெருக்கமாக நகர்த்தி வைத்தான் கருப்பையா. மறுபடியும் மெல்ல மெல்ல தலையைக் கிண்ணத்தருகே கொண்டு சென்ற அது பழைய படியே தலையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டு பயங்கரமாய் சீறிற்று.

மரகதத்துக்கு நெஞ்சு படக் படக்கென்று துடித்தது. வியர்வை பொங்கிப் பொங்கி வழிந்தது. உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உடம்பே நடுங்கிற்று.

வழக்கம்போல் பாலை ஆவலோடு குடிக்கும் பாம்பு இன்றைக்கு ஏன் இப்படி சீறி விழுகிறது என்று தெரியாமல் விழித்தான் கருப்பையா. அதற்கு மேலும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க இயலவில்லை மரகதத்தால். அப்படியே உட்கார்ந்து முழங்காலில் முகம் புதைத்து ஓசைப்படாமல் கண்ணீர் சிந்தினாள் அவள்.

“பால் உனக்குப் பிடிக்கவில்லையா, இதோ பார் நான் குடிக்கிறேன்” என்று கூறிவிட்டு கிண்ணத்தை எடுத்து வாயில் வைத்துக் கருப்பையா உறிஞ்சியபோது ஓர் ஆவேசத்துடன் பாய்ந்த அந்த நாகம் கிண்ணத்தைத் தட்டிவிட்டது. ஆனால் தொண்டையைக் கடந்து உள்ளிறங்கிய அந்த இரண்டு மிடக்கு பாலின் கசப்பு கருப்பையாவின் முகத்தை விகாரமாக்கிற்று.

மரகதம் திடுக்கிட்டெழுந்தாள். சிதறிய பாலும், சீறிய பாம்பும், கணவனின் நிலையும் நடந்ததை அவளுக்கு உணர்த்தியபோது…

“ஐயையோ, இந்தப் பாவி விஷம் வைத்த பாலை நீங்களே குடித்துவிட்டீர்களே” என்று அலறியபடி கருப்பையாவைக் கட்டிக் கொண்டு கதறினாள் அவள். ஆனால் கொடிய விஷம் கலந்திருந்த அந்த பாலின் சக்தி அவனைக் கண்கள் சொருக வாயில் நுரை தள்ள, தரையில் வீழ்த்தி சில கணங்கள் முடிந்திருந்தன.

கணவனின் நெஞ்சில் தலையை மோதிக்கொண்ட மரகதம் திரும்பிப் பார்த்தபோது, “உன்னுடைய செயலுக்குரிய தண்டனையை நீயே பெற்றுவிட்டாய்” என்று சொல்வதுபோல் அமைதியாகத் தெருவை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது ராஜா, அந்த நச்சரவம்.

– இந்த கதை வெளிவந்த பத்திரிக்கை, ஆண்டு எதுவுமே தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *