Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பாமா விஜயம்

 

“பாமா மிகப் பொல்லாதவள்! படித்த பெண் ஆகவே, அம்மா எதைச் சொன்னாலும் குற்றங் கண்டுபிடிக்கிறாள்” என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள்.

“ஆனால், பாமா, நல்ல அழகு! தங்கப் பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள்! தகப்பனுமில்லை பாபம்! அவர்கள் சொத்தைப் பார்த்துக்கொள்ள, பாமாவிற்குப் புருஷன் எந்தச் சீமையிலிருந்து வருவானோ தெரியவில்லை” என்றாள் அன்னம்மாள்.

“பாமாவின் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு, சினிமாவிலே, யாரது, அந்த தேவிகா ராணியோ என்னமோ பேர் சொல்கிறார்களே, அதே கவனம் வருகிறதடி” என்றாள் குப்பம்மாள்.

“என்றைக்காவது பாமா, குளத்துக்கு வந்தால், எனக்கு. ஒரு பாட்டு கவனத்துக்கு வருவதுண்டு” என்றாள் சொர்ணம்.

“அது என்ன பாட்டுடியம்மா, கொஞ்சம் சொல்லேன்” என்று எல்லோருமாகக் கேட்டனர்.

சொர்ணம் “தாமரை பூத்த குளத்தினிலே முகத்தாமரை தோன்றிட வந்தனளே!” என்று பாட ஆரம்பித்தாள்.

“பாட்டைப் பார்த்தியா, ரொம்ப ருசியா இருக்கிறதே” என்றனர் யாவரும்.

“ஆமாம். சீக்கிரம் வீடு போனால் தான் வீட்டிலே சாப்பாடு ருசியாக இருக்கும், எடுங்கள் குடத்தை போவோம் பாமா பேச்சைப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது” என்று அன்னம் கூறிட , எல்லோருமாகக் குடங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.

உள்ளபடியே பாமாவின் பேச்சை யார் பேச ஆரம்பித்தாலும், அன்னம் கூறியபடி பொழுது போவதே தெரியாது.

நடுத்தர உயரம்! கண் கவரும் சிவப்பு! காதுவரை நீண்டு செவ்வரி படர்ந்த சிங்காரக்கண்கள்! கன்னங்கள், கண்ணாடி! புருவங்களோ, யதனன் வில்லே யென்னலாம்! கொவ்வை இதழ் ! அக்கோமளவல்லிக்கு முத்துப்பற்கள்! அவை எப்போதோ சில சமயங்களே வெளியே தெரிந்து காண்போரை மயக்கிவிட்டு, மாயமாக மறைந்துவிடும்!

இன்பத்தின் உருவம்! இயற்கையின் சித்திரம்! ஆனந்த ஒளி என்றெல்லாம் பாமாவைப் பற்றிப் பேசிப் புகழாதவர்களே இல்லை எனலாம்.

அந்த சிற்றூருக்கு, பாமாதான் தாஜ்மகால்.

அவர்கள் குடும்பத்தின் கோகினூர் பாமாவே. பாமா விற்கு வயது 18 இருக்கும். தகப்பனார் பாமா சிறு பெண்ணாக இருக்கும் போதே இறந்துவிட்டார். தாய் பாமாவைக் கண்டு கண்டு பூரித்து தன் வாழ்வைத் தள்ளி வந்தாள்.

பாமாவின் அழகு வளர்ந்து கொண்டு வந்தது போலவே, அறிவும் வளர்ந்துகொண்டே வந்தது. அறிவு என்றால், அல்லி அரசாணி மாலையும், நல்லதங்காள் புலம்பலும், அந்தகனை மணந்த அற்புத வள்ளியின் கதையும் படிப்பது என்றல்ல. பகுத்தறிவு!

பாவை பொன் போல இருந்தாள். அவளுடைய அறிவு வைரம் போல் மின்னிக்கொண்டிருந்தது. தாய் அந்தக் காலத்து நடத்தை, பழங்காலப் பேச்சு பேசி வருவாள். மகள், சிறு நகையுடன், “அம்மாவே அம்மா ! எங்கள் அம்மா கிரேதா யுகத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். ஏனம்மா அண்டை வீட்டு அகிலாண்டம், எந்த அரசமரத் தைச் சுற்றினார்கள், எனக்குக் காட்ட மாட்டீர்களா? பக்கத்து வீட்டு பாலம்மா, புற்றுக்குப் பால் ஊற்றவே ஒரு மாடு வாங்கலே” என்று கேட்டு கேலி செய்து சிரிப்பாள், பாமா!

“நீ போடி அம்மா! போக்கிரி . அரசமரம், ஆலமரம் இதெல்லாம் என்ன என்று உனக்கென்னடி தெரியும் பவுட ரும் , ரிப்பனும் வராத காலத்திலே, வேப்ப மரத்து பெருமை எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது. உங்க அப்பா இருக்கச்சே, இந்த வீடு கோயில் மாதிரி இருக்கும் தெரி யுமா! நீ பிறந்து தான் அவரையும் உருட்டிவிட்டே . யாரும் இப்போ இங்கே வரக்கூடப் பயப்படுகிறார்கள். வேலாத் தம்மன் கோயில் பூசாரி, நேத்து நீ தூங்கிக்கொண்டு இருக்கும் போது வந்தான். இளநீர் அபிஷேகம் செய்யணு மாம். அம்மாவுக்கு? என்றான்.”

“கொடுத்தனுப்பினாயா? அம்மா, பத்தா ஐந்தா எவ்வளவு ரூபாயம்மா கொடுத்தாய்?” என்பாள் பாமா.

“பாமா பொல்லாத பெண். அது என்னென்னமோ புத்தகம் படித்துவிட்டு, எதுக்குப் பார்த்தாலும் காரணம் கேட்கிறாள்” என்று பாமாவின் தாயார், புரோகிதர் சுப்பய்யரிடம் சொல்வதுண்டு.

சுப்பய்யர் அந்த ஊர் புரோகிதர். அந்த வட்டாரத் திலே இருந்த எல்லா பணக்காரர் குடும்பத்தையும், அவருடைய பஞ்சாங்கத்தினுள்ளே சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டிருந்தார். எஸ்டேட் விஷயமுதற்கொண்டு. வீட்டிலே எருமை வாங்குகிற விஷயம் வரையிலே, சுப்பு சாஸ்திரியைக் கலக்காமல் ஒரு காரியமும் நடப்பதில்லை. ஐயருக்கு அவ்வளவு செல்வாக்கு.

காலையிலே குளித்துவிட்டு, விபூதி பூசி, கடகத்திலே பஞ்சாங்கக் கட்டை வைத்துக்கொண்டு ஐயர் வெளியே கிளம்பினால் வீடு திரும்பி வரும்போது 12 மணிக்கு மேலே ஆகும். மடியிலே இரண்டோ மூணோ பணமும் இருக்கும்.

“கமலம்! அடி அம்மா கமலம்! தூங்கிவிட்டாயோ” என்று கதவைத் தட்டுவார். இருபத்தைந்து வயதான அவருடைய ஒரே மகள் – விதவை கொட்டாவி விட்டுக் கொண்டே வந்து கதவைத் திறப்பாள்.

பாமாவைப் பற்றி சிங்காரவேலுப்பிள்ளை கேள்விப்பட்டிருக்கிறார் ! பார்த்துமிருக்கிறார். சந்தைப்பேட்டை ஜமீந்தார் சிங்காரவேலருக்கு பாமாவின் பேச்சை எடுத்தாலே, காய கல்பம் சாப்பிட்டது போல இருக்கும். எப்படியாவது பாமா வைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்பது அவர் எண்ணம். மனைவி வைசூரியால் மாண்டு போன நாள் முதற்கொண்டு அவர் இதே எண்ணத்தில் இருந்தார். அவருக்கு வேதவல்லி வைப்பு! இருந்தாலும் வேதவல்லிக்கு வயது நாற்பதாகிவிட்டது!

பாமாவைப்போல சின்னஞ்சிறு குட்டி, தனக்கு மனைவியாக இருந்தால், இந்திரலோகத்திலும் இல்லாத ஆனந்தமாக இருக்கலாம் என்று அவர் எண்ணினார். வழக்கப்படி இதைப் புரோகிதரிடமும் சொன்னார்.

“குட்டி ரொம்ப அழகுதான்! ஆனால் பொல்லாத குட்டி. என் தலையைக் கண்டதும் வந்தாரம்மா புரோகிதர், வாழலைக்கோ, வெண்டக்காய்க்கோ” என்று கேலி செய்யும். அவ, அம்மாவுக்கு நல்ல பக்தி. திதி திவசத்தின் போது மனங்குளிர தான தருமம் செய்வான். நேம நிஷ்டை தவறுவதில்லை. அவ அம்மாகிட்ட நானும் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன். உம்ம ஜாதகமும் இப்ப நன்னா இருக்கு உமக்கு ஒரு புதுப் பெண்ணாவது, புது மாடாவது, புது வேஷ்டியாவது இன்னும் கொஞ்ச நாளிலே தானா வந்து சேரணும்” என்று புரோகிதர் சிங்காரவேலருக்கு தேன்மொழி கூறிவந்தார்.

“சாமி அந்த அம்பிகையை நான் இந்த ஐம்பது வருஷமா மறந்ததில்லை, கும்பாபிஷேகம் ஒரு தடவை கூட செய்யாது விட்டதுமில்லை பார்ப்போம் அம்பிகையின் அருள் எப்படி இருக்குமென்று” என்பார்.

“நாளைக்கு நானும் உம்மபேருக்கு ஒரு இலட்சார்ச்சனை செய்யறதுன்னு நினைச்சுண்டே இருந்தேன்” என்பார் புரோகிதர்.

கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு, “ஐயருக்கு வேண்டியதைக் கொடு” என்று சிங்காரவேலு பிள்ளை கூறிவிட்டு நல்ல மயிர் கறுக்கும் தைலம் எங்கு விற்கிறது என்ற ஆராய்ச்சியிலே இருப்பார்.

எப்படியாவது இந்த இரண்டு குடும்பங்களையும் பிணைத்து விட்டால் தன்பாடு கொண்டாட்டம் என்பது சாஸ்திரிகளின் எண்ணம் இரண்டு குடும்பத்திற்கும் ஏஜண்டாகவல்லவோ அவர் இருப்பார்!

ஒரு நாள் மாலை சாஸ்திரியார் பாமாவின் தாயாருக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தார் . ஜாதகப்பலனைப்பற்றி சரமாரியாகக் கூறிக்கொண்டிருக்கையில், பொல்லாத பாமா வந்துவிட்டாள் அங்கே. “உமது ஜாதகக் கணிதத்தில் கமலா கலியாணமான இரண்டாம் மாதம் தாலி அறுப்பாள் என்பது தெரியாமல் போனதே” என்று இடித்தாள். சாஸ்திரிகள் பச்சைச் சிரிப்புடன். “விதிவசம் அம்மா. ஆண்டவன் கூற்று” என்றார். “உமது மகளுக்கு நடக்க விருந்த விபத்தையே உம்மால் கண்டுபிடிக்க முடியாத போது, என் ஜாதகப் பலனைப் பார்த்துச் சொல்ல வந்து விட்டீரே” என்று குத்தலாகக் கூறினாள் மங்கை.

“என்னமோ நடந்தது நடந்து விட்டது, என் மகள் காலம் இப்போது ஏதோ, ஆண்டவனைத் துதித்துக் கொண்டு, சிவனே என்று காலந் தள்ளுகிறாள். அவளுக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்” என்று சற்று வருத்தத்துடன் கூறினார் சாஸ்திரி.

பாபம் கமலாவைப்பற்றி எண்ணினால் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது பெண்ணின் குணத்திற்கென்ன? ரூபத்திற்குத்தான் என்ன? எலுமிச்சம் பழம் போல இருக்கிறது குழந்தை” என்றாள் பாமாவின் தாய்.

பாமா புன்சிரிப்புடன், “அப்புறம், இன்னம் கொஞ்சம் வர்ணியுங்கள், கமலாவைப்பற்றி, அவள் கண்டது இது தானே” என்றாள்.

“போடி போக்கிரி சிறுக்கி , கமலா எவ்வளவு ஆசார அனுஷ்டானந் தவறாது இருக்கிறாள் பார்! ஒரு நாளாவது சிவன் கோவிலைப் போய் பூஜை செய்யாது இருக்கிறாளா? நீ தான் அந்த சங்கத்திற்குப் போகிறேன், இந்த சேரிக் குப் போகிறேன் என்று குலத்தையே கெடுத்துக்கொண்டு வருகிறாய்” என்றாள்.

“கமலா, என் தோழி! அவள் விஷயத்தில் உங்களுக்கு இருப்பதைவிட எனக்கு அக்கரை அதிகம். நாளை மாலை மூன்று மணிக்கு நான் உங்களுக்கு ஒரு “காட்சி” காட்டப் போகிறேன். சாஸ்திரிவாள். நீர் இரவு முழுவதும் குத்து விளக்கடியில் உட்கார்ந்துகொண்டு உமது பஞ்சாங்கக் கட்டையெல்லாம் புரட்டிப்புரட்டிப் பார்த்தாலும், நாளை என்ன காட்டப்போகிறேன் என்பதைக் கண்டு கொள்ள முடியாது. கமலா, அழகி! கமலா ஒரு யுவதி! கமலா ஒரு விதவை! அவள் என் அருமைத் தோழி! அவளை நீங்கள் முற்றும் தெரிந்துகொள்ளவில்லை, நான் தெரிந்து கொண்டேன். இன்று போய் நாளை வாரும். உமது மனம் முதலில் மருண்டு பிறகு குளிரும் காட்சியைக் காண்பீர்’ என்று பாமா கூறிவிட்டு, பெண்கள் முன்னேற்ற சங்கத்திற்குப் போய்விட்டாள்.

***

“இதோ பாருங்கள் ! ‘கப்சிப்’ என்று இந்த அறையில் இருக்கவேண்டும். நான் அறையை வெளிப்பக்கம் பூட்டி விடப்போகிறேன்” என்று கூறி பாமா, சாஸ்திரிகளை ஒரு அறையில் பூட்டிவிட்டாள். மறுநாள் மாலை சாஸ்திரிகளுக்குக் கொஞ்சம் பயம், இந்தப் போக்கிரிப்பெண், என்ன சூது செய்வாளோ என்று. சிறிது நேரத்திற்குப் பிறகு சிரிக்கும் சப்தம் கேட்டது. உற்றுக் கேட்டார். ஆம்! சந்தேகமில்லை. தன் மகள் கமலாவின் சிரிப்புதான். இதுவரை கமலா அப்படி சிரித்ததை அவர் கேட்டதில்லை; விதவைக்கு சிரிப்பும் களிப்பும் ஏது?

“கண்ணே பாமா, நான் இன்றே பாக்கியசாலியானேன். உன்னை நான் என்றும் மறவேன்” என்றாள் கமலம்.

“என்னை மறந்தாலும் மறப்பாய் கமலா! ‘எதுகுலகாம் போதியை மறப்பாயோ” என்றாள் பாமா.

“போ, பாமா உனக்கு எப்போதும் கேலி செய்வது தான் வேலை. எங்களவர் ‘எதுகுல காம்போதி’ ஆலா பனம் செய்வதை ஒரு முறை கேட்ட யார் தான் மறந்து விடுவார்கள்?” என்றாள் கமலா.

பிளேட்டிலே கொடுத்துவிடச் சொல்லு. அவர் வெளியிலே போய்விட்டாலும் நீ போட்டுக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்” என்றாள் பாமா.

பக்கத்து அறையிலே இருந்த சாஸ்திரியாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நட்சத்திர பலன், நாழிகைக் கணக்கு, தர்ப்பையின் மகிமை தெரியுமே தவிர எதுகுல காம்போதி என்ன தெரியும் சாஸ்திரியாருக்கு?

என்னடா சனியன், எதுகுல காம்போதி. எங்களவர் கிராமபோன் பிளேட் என்று எதை எதையோ குட்டிகள் பேசுகின்றனவே என்று எண்ணித் திகைத்தார்.

“பாமா! என் விஷயம் எல்லாப் பேப்பரிலுமாபோட்டு விடுவார்கள்?” என்று கேட்டாள் கமலம். “தடையில்லாமல்! பலான சாஸ்திரியின் மகள் ஸ்ரீமதி கமலத்திற்கும், சிவன் கோயில் நாதஸ்வர வித்வான் சுப்பிரமணியப் பிள்ளைக்கும் சீர்திருத்த மணம், ஸ்ரீமதி பாமாவின் முயற்சியால் இனிது நடந்தேறியது. அதில் ‘ஜில்லா முன்சீப் தோழர் கதிரேசன் அவர்கள் தலைமை வகித்தார்’ எனக் கொட்டை எழுத்தில் போட்டோவுடன் வெளிவரும்” என்று பாமா கூறி முடிப்பதற்குள், சாஸ்திரிகள், “அடி பாவி! குடி கெடுத்தாயே! நான் என் செய்வேன், கமலா! என்ன வேலையடி செய்தாய்?” என்று ஓவென அலறினார்.

“ஒன்றுமில்லை! பயப்படாதே கமலா! உங்க அப்பா சீர்திருத்தத்தைக் கண்டு பயந்து அலறுகிறார். அவ்வளவு தான். கொஞ்சநேரம் சென்று சரியாகிவிடும். சட்டப்படி உன்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமா கூறினாள்.

பக்கத்து அறையின் கதவை, படேர் படேர் என உதைத்தார் சாஸ்திரிகள், “நாசகாலப் பெண்ணே, திற கதவை, நாதஸ்வரக்காரனைக் கட்டித்கொண்டாயா? இதற்குத்தானா நாள் தவறாமல் நீ சிவன் கோயிலுக்குப் போனாய்? நாசமாய்ப் போனவளே! எங்காவது குளத்திலே, குட்டை யிலே விழுந்து சாகக்கூடாதா? கொண்டு வந்து வைத்தாயே என் குடும்பத்தில் கொள்ளியை” என்று கோவென கதறினார்.

“சாஸ்திரியாரே சாந்தமடையும். எல்லாம் ஆண்டவன் செயல்” என்றாள் பாமா. “போதுமம்மா, உன் பேச்சு. நீ ரொம்ப நல்லவள். பிறந்தாயே இந்த ஊரில் என் குடி கெடுக்க” என்றார் சாஸ்திரியார்.

“ஓய் சாஸ்திரியாரே, உமது மகள் செய்ததில் என்ன தவறு கண்டு விட்டீர்? அவள் வேறு ஜாதியானை மணந்து கொண்டதற்காக இங்கு மல்லுக்கு நிற்கிறீரே, உமது சங்கதி என்ன? கமலாவுக்குத் தெரியாது – எனக்குமா தெரியாது என்று எண்ணுகிறீர்? எங்கள் சங்கத்து வேவு காரரிடம் உமது ‘ஜாதகம்’ அத்தனையும் இருக்கிறது. பேசுவது வேதம், வேதாந்தம்! வேஷமோ சனாதனம், நடத்தை எப்படி? ஏன் சாஸ்திரிகளே! உமது வைப்பாட்டி வள்ளி யார்? எந்த இனம்? சொல்லட்டுமா கமலாவுக்கு!” என்று கோபத்துடன் கேட்டாள் பாமா. சாஸ்திரியார், “சிவ சிவ! சம்போ, மகாதேவா! உனக்கு என்ன அபசாரம் பண்ணினேனோ, என் தலையிலே இப்படி இடி விழுந்ததே” என்று அழுதார்.

“சரி கேளும் மேலும் சில சேதியை; கமலாவும் சுப்பிரமணியமும் இன்றிரவே புறப்பட்டு சென்னை போகிறார்கள். அங்கேதான் குடியிருப்பார்கள். நானும் அடுத்தவாரம் அங்கே போகிறேன்” என்றாள் பாமா.

“ஏண்டி பாமா! இது என்னடி பெரிய வம்பாகிவிட்டது?” என்று கூறிக்கொண்டே, பாமாவின் தாயார், சாஸ்திரியாரை அறையை விட்டு வெளி ஏற்றினார். கமலாவை திரும்பிக்கூட பார்க்காது, அவர் வீடு சென்றார்.

அன்றிரவே கமலாவும் அவளுடைய காதற் கணவன் சுப்பிரமணியமும் சென்னை சென்றனர்.

பாமா புன்சிரிப்புடன், தாயை நோக்கினாள். “ஏனம்மா! விதவைக்கு மணமுடித்து வைக்கிற திறமை எனக்கு இருக்கும் போது, என்னை ஒரு கிழவனுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தாயே” என்று கேலி செய்துவிட்டு “இதோ பாரம் மா! படத்தை. இவரைத்தான் நான் அடுத்த வாரம் மணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்று கூறிக் கொண்டே, ஒரு ‘போட்டோ’ வைக்காட்டினாள்.

பாமாவின் தாய் அதைப் பார்த்தாள். படம் ஒரு வசீகரமான இளைஞனுடையது! நாகரீகமான உடை! நல்ல தோற்றம்!

“யாரம்மா இது? என்ன ஜாதி”? என்றாள் தாயார் .

“இவர் தானம்மா எனக்குக் கணவராக வரப்போகிறார், ஜாதி, ஆண் ஜாதி தான். எனக்கு அவ்வளவுதான் தெரியும்” என்று கூறிக்கொண்டே தாயின் கன்னத்தை அன்போடு கிள்ளினாள்.

“நீ செய்வது எனக்கொன்றும் பிடிக்கவேயில்லை. குலத்தைக் கோத்திரத்தை எல்லாம் கெடுக்கிறாய்” என்றாள் தாய்.

“எதைக் கெடுத்தேனும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது தானே அம்மா உன் ஆசை” என்று கொஞ்சினாள் பாமா.

தாயாரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. “போடி பொல்லாத சிறுக்கி, நீ எப்படியோ சுகமாக இரு! பார்த்து மகிழ்கிறேன் நான்” என்று கூறினாள் தாயார்.

- அண்ணாவின் ஆறு கதைகள் , திராவிடப்பண்ணை, திருச்சி -2, மூன்றாம் பாதிப்பு 1968 

தொடர்புடைய சிறுகதைகள்
"சரசா மிகப் பொல்லாதவள் ! படித்த பெண்! ஆகவே, அம்மா - எதைச் சொன்னாலும் குற்றங் கண்டு பிடிக்கிறாள்" என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள். "ஆனால், சரசா, நல்ல அழகு ! தங்கப்பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள் ! ...
மேலும் கதையை படிக்க...
வண்டிக்கார வரதன் வேலையினின்று நீக்கப்பட்டான். கணக்குப் பிள்ளை கந்தசாமி வீடுபோய்ச் சேர்ந்தான். தோட்டக்காரனின் குடும்பம் கலைந்தது. அவன் மாலை வரை வேலை செய்துவிட்டு, வீடு சென்று விடவேண்டும். சந்தான கிருஷ்ண ஐயர் இவ்வளவு 'டிஸ்மிஸ்' ஆர்டர் போட்டதற்குக் காரணம், பெயருக்கேற்றபடி அன்றி, ...
மேலும் கதையை படிக்க...
"என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே! நீர் என் கண்களிலே ஏதோ உமது உள்ளத்தை உருக்கும் ஒளியைக் காண்பதாகச் சொல்கிறீர். என் உதட்டைக் கோவைக் கனி எனக் கூறுகிறீர். பவளவாய்! முத்துப் பற்கள் ! பசும் பொன்மேனி! சிங்கார நடை! கோகில ...
மேலும் கதையை படிக்க...
குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் ...
மேலும் கதையை படிக்க...
என்னைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்தச் சொல். மனப்பிராந்தியல்ல, என் செவியிலே தெளிவாக விழுந்தது அப்பேச்சு. என் மூச்சே திணறிவிட்டது. என்னை நிலை குலைய வைத்த அந்தச் சொல்லுரைத்தவரோ, நெற்றியிலே நீறு பூசி, வெள்ளை ஆடை அணிந்து, விளங்கினார். போக்கிரியல்ல, போக்கற்றவருமல்ல, புத்திதடுமாறி ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: அறிஞர் அண்ணாதுரை. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது. செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: அறிஞர் அண்ணாதுரை. முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
"தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்." பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே! “வைஸராயைப் பார்த்தாயோ, இல்லையோ?” என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் ...
மேலும் கதையை படிக்க...
அவள் மிகப் பொல்லாதவள்
வாலிப விருந்து
துணை நடிகை
தங்கத்தின் காதலன்
கிருஷ்ண லீலா
சரோஜா ஆறணா!
செவ்வாழை
காமக் குரங்கு
நாக்கிழந்தார்
கொக்கரகோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)