பாதை மாறிய பயணம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2013
பார்வையிட்டோர்: 9,282 
 

திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா.

“ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு தா…” சிணுங்கினாள்.

“ ஆமா ஆத்தாக்காரி வந்து உனக்கு சூடா சோறு பொங்கி போடுவா.. கோபத்தில் தெறித்த வார்த்தைகளில் செல்வி கழுத்தை பின் பக்கம் இழுத்து கொண்டு பயத்துடன் பார்க்க, ஒரு நொடியில் மனம் இளகிய கிழவி,

“ யம்மாடி அப்பத்தாவிற்கு வயசாயிடுச்சில்ல .. முடியல.. இன்னிக்கு இத குடிச்சிக்க.. நாளைக்கு எப்படியாவது உனக்கு வைணமா பொங்கி போடறேன்..”

கூரைக்குள் நுழைந்த காற்று உள்ளே தூங்கி கொண்டிருந்த பாப்பாவை குளிர செய்ததோ என்னவோ கையை காலை முறுக்கி சிணுங்க ஆரம்பித்தாள். சின்ன வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்த ராசு புத்தகத்தை மூடிவிட்டு அலமாரியிலிருந்து அம்மாவின் சீலையை அவள் மேல் போர்த்தி தட்டி கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்.

“ அப்பத்தா அம்மா எங்க ரெண்டு நாளா காணோம்..? நான் வேற ஸ்கூலுக்கே போகலை .. எப்ப வரும்?”

தாயம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “ ஆத்தா.. புள்ளைங்களுக்கு எதுவும் புரியற வயசில்ல.. அதுங்க கிட்ட எதுவும் சொல்லிடாத.. ஒரு நாலு நாளைக்கு அங்க வந்து இரு.. அப்புறமா பசங்களை பார்த்துக்க வேற எதாவது யோசிக்கிறேன்..” முருகு கண் கலங்கியதும் தாயம்மா கிளம்பி வந்து விட்டாள். “ பாவி சிறுக்கி அவ பேச்சுக்கு மயங்கித்தானே ஆத்தாவ கூட விட்டுட்டு தனி குடித்தனம் போன..?” என்று வெடுக்கென்று கேட்க முடியாமல் தாய்ப்பாசம் தடுத்தது. “ இந்த கிழவிக்கு இருக்க தாய்ப்பாசம் இந்த மேனா மினிக்கிக்கு எங்க போச்சி தெரியலையே… இப்படி பச்ச புள்ளங்களை தவிக்க விட்டுட்டு.. இப்படியா புத்தி கெட்டு போவா.. இதுங்களுக்கு என்னத்த சொல்வேன்..?” கண்களில் துளிர்த்த உப்பு நீரை சீலை தலைப்பில் துடைத்து கொண்டு,

“ வருவா.. வருவா.. நீ போய் உள்ள சொம்புல மிச்சமிருக்கிற கூழை குடிச்சிட்டு படு..”

மேகம் இருட்டி கொண்டு வந்தது.. கைப்பையில் பிடித்து கொண்டு வந்த பருப்பையும், காயையும் தாயம்மாவிடம் நீட்டிய முருகு, “ ஆத்தா புள்ளைங்க சரியா சாப்பிட்டு ரெண்டு நாளாவுது.. எப்படியாவது நாளைக்கு கொழம்பு சோறு வச்சி போடேன்…” பாப்பாவின் பக்கத்தில் படுத்து கொண்டு அதன் முகத்தையே வெறித்து கொண்டிருந்தான்.

“ எப்பா.. இத பார்க்கத்தான் இவ்வளவு நிமுந்து கல்யாணம் கட்டிவச்சேனாக்கும்.. மானம் கெட்டு போன அந்த கழுதைய தல முழுகிட்டு நடக்க வேண்டியத பாரு..”

முருகு பதில் பேசவில்லை.. பெத்தவளே நினைச்சி பார்க்கதப்ப.. இந்த மூணு குழந்தைங்க கதி என்னாவறது.. ஆத்தா சொல்ற மாதிரி இன்னொருத்தியை நினைச்சு கூட பார்க்க முடியவில்லை அவனால்.
வாசலை கூட்டி கோலமிட்ட கிழவி, கொல்லைப்புறம் போய் முகத்தை அலம்பிகொண்டு அடுப்பை பற்ற வைத்தாள். சுட சுட குழம்பு கொதிக்கும் வாசனையில் செல்வி எழுந்து பார்த்தது.

“ அப்பா இன்னிக்காச்சும் ஸ்கூலுக்கு போவட்டா..? புத்தகத்தை பையில் அடுக்கி ஆவலுடன் கேட்ட ராசுவை பார்க்க முடியாமல்,
“ தம்பி.. அப்புறம் போவலாம்ப்பா.. அப்பத்தாவால இரண்டு பேரையும் சமாளிக்க முடியாது.. ரெண்டு நாள் போவட்டும் அப்பறம் போவ…”

“ ரெண்டு நாள்ல அம்மா வந்திருமாப்பா…”

திரும்ப திரும்ப அம்மாவை கேட்பதிலேயே குறியாக இருந்த அவன் ஏக்கத்தை சகித்து கொள்ளாமல் கண்களில் குபுக்கென அழுகை வந்து விட்டது.

“ ஏம்ப்பா.. அம்மா சாமி கிட்ட போயிருச்சா.. எதுக்கு அழுவுற?

“ஒண்ணுமில்ல ராசா.. ஆத்தா.. அடுப்ப புகைய விடாதே கண்ணுல தண்ணி வருது.. “ என்று சொல்லிவிட்டு “ ராசு அம்மா ஊருக்கு போயிருக்கா.. கொஞ்ச நாள்ல வந்திடுவா.. அதுவரைக்கும் தங்கச்சி,பாப்பாவை நீதான் பத்திரமா பார்த்துக்கனும். அப்பறம் படிப்பியாம். அப்பா வேலைக்கு போனாதான நாம சாப்புட முடியும்..?”
இன்றும் ஸ்கூல் கட் ஆனதில் ராசுவிற்கு வருத்தம்.

“ ண்ணா.. அம்மா எங்க..”? செல்வி ராசுவை கேட்டு கொண்டே இருந்தாள்.

அப்பத்தா சுட சுட குழம்பு சோற்றை உருட்டி உருட்டி ரெண்டு பேருக்கும் கையில் கொடுத்து கொண்டிருந்தாள். பாப்பா அழுதது. கிழவி எழுந்து பாலை புட்டியில் ஊற்றி புகட்டினாள். பசிக்கு குடித்து விட்டாலும் அழுது கொண்டேயிருந்தது. ‘ ஆத்தா முகம் காணலையேன்னு கூட இருக்கும்..’ முணுமுணுத்து கொண்டு மடியில் போட்டு கொண்டாள். இன்னமும் வீறிட்டு கத்த ஆரம்பித்தது. வயிற்றை அழுத்தி பார்த்து அடுப்பு நெருப்பில் சுடுவானை சுட்டு நீரில் குழைத்து வாயில் விட்டு வயிற்றிலும் தடவி பார்த்தாள். அப்படியும் அழுது கொண்டேயிருந்தது.

“ எலே ராசு நான் ரோட்டு பக்கம் போயி ஓம தண்ணி எதுனாச்சிம் வாங்கியாறேன்.. பாப்பாவை தூக்கி வச்சிக்கோ”

பாப்பாவை இடுப்பில் தூக்கி வைத்து கொண்ட ராசு வெளியில் வந்து..” இந்த்தா.. இதப் பாரு கோயி…” வேடிக்கை காட்டி கொண்டிருந்தான்
“ ண்ணா.. அம்மா எங்க..?” செல்வி அழுதது.

அவளையும் கை பிடித்து தெரு முனை வரை போய் கொண்டிருந்தான். எதிர்ப்பட்ட பூவாயிடம்,
“ பெரிம்மா… பாப்பா அழுதுகிட்டேயிருக்கா.. அம்மா எங்க போயிருக்குது..?

“ க்கும் உங்கம்மா.. ஓடுகாலி கழுத எங்க போனாளோ..?” அவள் வெறுப்பில் ஒன்றும் புரியாத அவன் பக்கத்தில் இருந்த அம்முவிடம் கேட்டான்,

“ க்கா.. நீயாவது சொல்லு அம்மா எங்க?”

“ ராசு உங்கம்மா கோவாலு மாமா கூட ஓடி போயிட்டதா பேசிக்கிறாங்கடா”

வீட்டிற்கு வந்தவன் வெகு நேரம் யோசித்து கொண்டிருந்தான். ஓடிப்போறதுன்னு என்ன.. அம்மா காணாமத்தான் போயிருக்காங்களோ.. போன கட்டுரை க்ளாசில் காணாமல் போன பொருளை தேடி கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்துக்கு கடிதம் எழுத டீச்சர் சொல்லி தந்தது நியாபகம் வந்தது. மட மடவென்று கட்டுரை நோட்டில் ஒரு பக்கத்தை கிழித்து எழுதினான்.
பேப்பரை மடித்து கையில் எடுத்து கொண்டு பாப்பாவை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு செல்வியை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

சிவப்பு கலரில் இருந்த அந்த பில்டிங் போலிஸ் ஸ்டேஷனாகத்தானிருக்கும் என நினைத்து தயங்கி தயங்கி நின்றான். வெளியில் வந்த அந்த கான்ஸ்டபிள், “ என்னலே.. குழந்தைய வச்சிகிட்டு பிச்சையா எடுத்துகிட்டிருக்க..”?

“ இல்லிங்க ஐயா.. இந்த லட்டர குடுக்கலாம்னுதான் வந்தன்…” மெல்ல பேப்பரை நீட்டினான்.

பேப்பரை பிரித்தார்,

விடுநர்.. பெறுநர் எல்லாம் எழுதி மதிப்பிற்குரிய ஐயா,
என் பெயர் ராசு.. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. அப்பா கூலி வேலை பாக்கிறாங்க. அம்மா ரெண்டு நாளா வீட்டுக்கே வரலை. தங்கச்சி அம்மா எங்கன்னு கேட்டுகிட்டே இருக்கா. பாப்பா அழுதுகிட்டே இருக்கு. அப்பா ரெண்டு நாளா சாப்பிடவேயில்ல. அப்பத்தாதான் ரெண்டு நாளா வந்திருக்கு. அதால முடியலைன்னு நான் வேற ஸ்கூல் போகலை. நான் வேற நல்லா படிப்பேனா எங்க தமிழ் வாத்தியாரு என்னைய தேடுவாரு. எங்க அம்மான்னு எங்கன்னு தெரியலை. அப்பாட்ட கேட்டா சும்மா அழுவராரு. அம்மு அக்காதான் சொல்லிச்சி உங்கம்மா கோவாலு மாமா கூட ஓடி போயிடுச்சுன்னு.. நீங்கதான் அம்மாவை தேடி கண்டுபுடிச்சி தரனும்.
இப்படிக்கு தாழ்மையுடன்,
ராசு.

கான்ஸ்டபிள் காபி வரவழைத்து அவர்களுக்கு கொடுத்து, “ தம்பி., பத்திரமா வீட்டுக்கு போ அம்மாவை நாங்க கண்டு பிடிச்சி தர்றோம்…” அனுப்பி வைத்தார்.

“ எப்பா.. சூடா கொழம்பு வச்சிருக்கேன்.. சாப்பிடு ராசா.. இப்படி பட்டினி கிடந்தா இன்னும் ரெண்டு நாள் போனா உன்னால எந்திரிச்சி நடக்கவே முடியாது. .”

“ எறங்கலை ஆத்தா.. மானம் மரியாத அதுக்காவ வேண்டிதானே வாழறம்… இப்படி கூட இருந்தே குழி தோண்டி பாப்பாங்கன்னு நினைச்சி பார்க்கலையே ஆத்தா…”

“ அந்த கோவாலு சகவாசம் வேண்டாமின்னு அப்பவே தலப்பாடா அடிச்சிகிட்டேன்.. இவ சீவி சிங்காரிச்சிகிட்டு இருக்கறதுக்கும் அவன் மைனர் கணக்கா திரிஞ்சி குடிய கெடுத்துப்பிட்டான். போன கழுதய நினைச்சிகிட்டு இருக்காம.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க பார்ப்பா.. எத்தன நாளைக்கு நான் துணையா இருக்க முடியும்? இந்த புள்ளைங்க கதி என்னாவறது?

“ கண்ணுக்கு கண்ணா இருக்கற இந்த புள்ளைங்களை இன்னொருத்தி வந்து கொடுமை பண்ணா என்னால தாங்கிக்க முடியாது ஆத்தா.. தல எழுத்து பிரகாரம் நடக்கட்டும்…”

தாயம்மா கிழவி அசந்து தூங்கிவிட்டாள்.

பாத்திரம் உருண்ட சத்தத்தில் எழுந்த ராசு, “ அப்பா.. இன்னும் நீ தூங்கலையா? நான் ஸ்டேஷன் போய் எழுதி குடுத்துட்டு வந்தேன்பா.. அவங்க அம்மாவை கண்டுபுடிச்சிடுவாங்க… அழுவாம தூங்குப்பா..

“ சரிப்பா.. ரெண்டு பேரும் இந்த பாலை குடிச்சிடுங்க.. செல்வியையும் எழுப்பி கொடுத்தவன்.. பாப்பாவுக்கும் புட்டியில் புகட்டினான்.

“ எப்பா.. அடுப்பு பத்த வெக்க சுள்ளி பொறுக்கியாரேன்.. மெதுவா எந்திரிங்க.. தனக்குள்ளே சொல்லி கொண்டு கதவை வெறுமனே சாத்தி கொண்டு தோப்பு பக்கம் போனாள் கிழவி.

கான்ஸ்டபிள் சுந்தரத்திற்கு அந்த பையன் கடிதமே நினைவில் ஆடியது. மேஜரில்லாத சிறுவனின் கடிதத்தை கம்ப்ளெய்ண்ட்டாக எடுக்கலாமா யோசித்தவர், உதவும் உள்ளங்கள் ராஜசேகரனை தொடர்பு கொண்டு அவர்களை விசாரிக்க சொல்லி நடவடிக்கை எடுத்தார்.

தன்னார்வ தொண்டர்களுடன் கடிதத்தில் குறிப்பிட்ட வீட்டை அடைந்த கான்ஸ்டபிள் சுந்தரம் கதவை தட்டினார். எந்த பதிலும் வராமல் போகவே கதவை தள்ள.. அங்கே
கலைந்த கோணத்தில் அப்பனும் மூன்று குழந்தையுமாய் பிணங்கள்.
சுள்ளிக்கட்டோடு வந்த தாயம்மா..” சாமி.. இந்த கொடுமைய எங்க சொல்வேன்.. இதுக்காகவா நான் உசிரோடு இருக்கேன்…? தலையில் அடித்து கொண்டே விழுந்தாள்.

ம்.. சின்ன குழந்தைக்கு இருக்கும் தைரியம் கூட அவன் அப்பாவிற்கு இல்லாமல் போய்விட்டதே சிறுவன் எழுதி தந்த கடிதத்தை இன்னொரு முறை பார்த்த கான்ஸ்டபிள் சுந்தரத்தின் மனம் கனத்து போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *