பாதிக் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 2,856 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உலகமெல்லாம் தேடினேன் ஒரு மனிதனை கூடக் காண வில்லை!” என்று யாராவது சொன்னால் அவனைப் பைத்தியக் காரன் என்றோ தான் உலகம் முடிவு கட்டும். ஆனால் மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள் தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாவரும் மறுக்க மாட்டார்கள்.

நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷமில்லை யென்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத் தாடுகிறான்? இதுதான் இன்றைய உலகத்தில் முற்றுப் பெறாமல் விடப்பட்ட வசனம்; அல்லது வசனம் முடிவு பெறாத முற்றுப் புள்ளி. இது ஆண்டவனுக்குப் புரியவில்லை. மனிதர்கள் எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

ஏன் மனிதனுக்குப் பகுத்தறியும் தன்மை கிடையாதா? விஷத்தை விடக் கொடியவர்கள் மனிதன் என்ற போர்வையில் நடமாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே! ஏன்? உலகம் அத்தகையவர்களை மதித்து மரியாதை செய்கிறதே ஏன்?

உருவமே இல்லாத ஆண்டவனைப் போல், உண்மையும் உருவற்றுப் போய்விட்டதா? எல்லாம் பைத்தியக்காரத்தனம் சீ…!

சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு குடிசைக்குள் இருந்தபடியே பாதி திறந்திருந்த கதவிடுக்கால் உலகத்தை எட்டிப் பார்த்தாள் சுபைதா. அவள் கண்களுக்கு ஒன்றுமே தெரிய வில்லை . உலகம் உருண்டு கிடந்தது.

இரவுப் பெண் அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள். தென்றல் அவள் முந்தானையை இழுத்துப் பிடித்தாள். கருப்பு முந்தானை விரிந்து பரந்து உலகத்தை மறைத்தது. அந்தத் திரை மறைவிலே எத்தனையோ அற்புத அக்கிரமங்கள்! இன்று மட்டுமா?

யுகம் யுகங்களாக நடந்துகொண்டிருக்கும் சம்பவம் இது.

சுபைதாவின் குடிசைக்குள்ளும் இருட்டுப் புகுந்துவிட்டது. “விளக்கேற்ற வேண்டும்” என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதைச் செய்ய அவளால் முடியவில்லை. கால்கள் இரண்டையும் நீட்டியபடி அந்தக் களிமண் சுவரிலே சாய்ந்து கொண்டிருந்தாள் சுபைதா. காரணம் அந்த வேதனை! அத என்ன வேதனையோ?

வயிற்றுக்குள் தொங்கும் மற்றொரு உயிர் வெளியே குதிப் பதற்காக வழி செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு முன்பு தான் ஆரம்பமாகிறது அந்த வேதனை. ஆரம்ப வேதனையையே அவளால் தாங்க முடியவில்லை!

அப்பொழுது இரவு ஏழு மணி இருக்கும். இருட்டு, அவள் குடிசைக்குள் புகுந்து வெகு நேரமாகிவிட்டது. இன்னும் விளக் கேற்றவில்லை காரணம் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சுவரில் சாய்ந்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

அது புது அனுபவம் அவளுக்கு. தெரிந்து கொள்ள முடி யாத ஒரு பயம் அவள் மனதைத் துவைத்துக் கொண்டிருந்தது. என்ன நேரம் போகிறது என்று அவள் உள்ளத்தில் எழுந்த கேள் விக்கு விடை கிடைக்கவில்லை. அவளுடைய துடிதுடிப்பு காலத் திற்குத் தெரியுமா? தொழிலாளியின் துன்பம் தெரியாத முத லாளியைப் போல் மெத்தையில் புரண்டு கொண்டிருந்தது அந்த இரவு! உடல் வேதனையும், உள்ள வேதனையும் ஒன்று சேர்ந்து அவளைப் பேயாட்டமாட்டியது. நோவு அவள் உள்ளத்தைத் துவைத்துக் கொண்டிருந்தது.

துன்பத்திலே மறைந்து போன நாட்களின் மறந்துபோன சம்பவங்கள் வந்து மனதில் வட்டமிட ஆரம்பிக்கின்றன. இந்த அனுபவம் சுபைதாவுக்கு எப்படி ஏற்பட்டது? அவளுடைய எண்ணம் வந்தவழியே திரும்பிச் செல்கிறது.

சுபைதா அந்தக் குடிசைக்கு வரும்பொழுது தனிமையாகத் தான் வந்தாள். சுபைதா வந்த சில நாட்களில் கிழவி காலை நீட்டி விட்டாள். இப்பொழுது சுபைதா தனிமைக்கும், அந்தக் குடிசைக்கும் சொந்தக்காரியாகி விட்டாள். இன்றிரவோ அல்லது நாளைக்கோ அவள் தனிமையைப் போக்க வயிற்றிலிருக்கும் குழந்தை பிறந்து விடும். இதை நினைத்த பொழுது அவள் முகத்தில் சந்தோச ரேகை மின்வெட்டியது. மறுகணம் கிழவியின் முகம் போலாகிவிட்டது அவள் முகம். பிறக்கப்போகும் குழந்தை அவளுடையதுதான். ஆனால்? அவள் அதை விரும்பவில்லை. உண்மை விரும்பாத போது உடல் விரும்பாத போது அந்தக் குழந்தை அவள் வயிற்றுக்குள் உருவாகிவிட்டது! அப்படியானால்? மனம் எட்டித் தாவியது ஆரம்பகாலத்திற்கு.

சுபைதா இந்த உலகத்துக்கு வந்து பதினாறு வருடங்களாகி விட்டன. என்றாலும் எட்டு வருட வாழ்க்கைதான் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. தாய் தந்தையர்களைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்தாள் அவள். தாயின் மடியில் உறங்கிய குழந்தை கண்விழிக்கும் பொழுது தொட்டிலில் கிடப்பதை உணருவதைப்போல, சுபைதாவுக்கு ஞாபகம் தெரிந்தபொழுது ஹாஜியார் உமரு லெப்பையின் வீட்டில் வேலைக்காரியாக இருந்தாள்.

ஹாஜியார் உமரு லெப்பை அந்தக் கிராமத்துக்கே பெரிய மனிதன். பாபமும், பணமும் அவரைப் பெரிய மனிதனாக்கி விட்டது. வாங்கியக் கடனைத் திருப்பிக் கொடுப்பதுபோல செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக ஒருமுறை மக்காவுக்கு போய் வந்தார். பிறகு திரும்பவும் அகரத்தில் ஆரம்பித்துக் கொண்டார் தனது சுபாவத்தை.

பாபமூட்டைகளைத் தாங்கிக் கொள்ள மக்கா என்றொரு சுமைதாங்கியை அமைத்துக் கொண்ட பிறகு பணக்காரன் பாபம் செய்யப் பயப்படவேண்டியதில்லையல்லவா? இந்தத் தைரியத் தில் கண் மூடிக் கழித்தார் ஹாஜியார். வீட்டிலே மனைவி. தென்னந்தோட்டத்தில் ஒரு ஆசைநாயகி – ஊருக்குக் கடைசியிலே ஒரு கள்ளக்காதலி இவைகளையெல்லாம் விட சந்தர்ப்பத்துக்கேற்ப பகல் காட்சிகள் பல. அவருடைய பணத்திற்கும் பருத்த உடலுக் கும் பணிந்து போகாத பருவப்பெண்களே இருக்க முடியாது அந்த வட்டாரத்தில்.

இப்படி செய்வது தவறு என்று அவர் கருதவில்லை . நாலு கல்யாணமும், நாற்பது கள்ளக்காதலிகளும் வைத்துக் கொள்ள இடம் அளிப்பதாக அவர் கருத்து.

பணம் என்றால் ஹாஜியாரின் உயிர் என்று அர்த்தம். ஏழைகளின் வயிற்றில் இருக்கவேண்டியது ஹாஜியாரின் பணப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான வயல் பூமிகளை மிகவும் அற்பமாகத் தன் சொந்தமாக்கிக் கொண்டார் அவர். எவ்வளவுக்கெவ்வளவு பணம் அதிகரித்ததோ, அவ்வள வுக்கவ்வளவு சந்தானம் குறுகிக்கொண்டே போயிற்று. பிறந்தது ஒரே குழந்தை! அதுவும் இறந்து போயிற்று.

கணவனின் கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்கா மலோ அல்லது பணத்தின் பாரம் தாங்காமலோ ஒரு நாள் அவர் மனைவியும் இறந்துவிட்டாள். அவள் இறந்தது ஒரு பாபம் கழிந்த மாதிரி அவருக்கு! வீட்டில் தட்டிப் பேச ஆளில்லை. அவருடைய தாயார்! உலகமே தெரியாது. மூத்துப் போனவள் முடங்கிக் கிடந்தாள் ஒரு மூலையில். தனது கடைசி நாளை எதிர்பார்த்த வண்ணம்.

சுபைதாவுக்கு அப்பொழுது பதினாறு வயது பூர்த்தியாகி விட்டது. இளமையின் பூரிப்பில் மணம் வீசிக் கொண்டிருந்தது அவள் மேனி! இஸ்லாமியப் பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் அழகு கொஞ்சம் அதிகமாகவே ஆட்கொண்டிருந்தது அவளை. என்ன இருந்துமென்ன அவள் உமரு லெப்பை ஹாஜி யாரின் வேலைக்காரி அவ்வளவோடு திருப்தியடைய வேண்டியது தான்.

நாளடைவில் ஹாஜியாரின் போக்குக் கலக்கத்தை உண்டாக் கியது சுபைதாவுக்கு. எனவே எப்படியாவது அங்கிருந்து விடு தலை பெறவேண்டுமென்று நினைத்தாள். பலன்? முதலை வாயில் இருந்து மீண்டு, புலியை நாடிய கதையாகத்தான் முடியு மென்பதை உணர்ந்தாள்! இந்தச் சமூகம் அப்படித்தான் காட்சியளித்தது அவளுக்கு.

இளமை ஒரு காந்தம். அத உமருலெப்பை ஹாஜியாரைப் போன்ற கம்பியாணிகளை இலகுவாக இழுத்துக்கொள்ளும். துருப்பிடித்துக் போன அவரது இரும்பு உள்ளத்திற்கு சுபைதாவின் பருவம் பாயும் மின்சாரம். ஆனால் அவளது அடக்கமும் அமைதி யும் அவளை அண்டவிடவில்லை.

தங்கம் சொக்கத் தங்கமாகவேண்டுமானால் அதை நெருப் பில் புடம் போட்டாக வேண்டும். ஆனால்! மனிதன் தன்னைத் தானே புடம் போட்டுக் கொண்ட பிறகு? காலமும் மனிதனைப் புடம் போட்டுப் பார்க்கிறது. மனிதன் அதை விடுத்து ஆண்டவன், விதி என்ற குப்பை கூழங்களை அள்ளித் தலையில் போட்டுக் கொண்டு திரும்பவும் சீரழிந்து போகிறான். யாத்திரை போனால் மனிதனாகலாம் என்பதை விடுத்து கடமையாலும், நேர்மை யாலும் மனிதனாகலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் உமருலெப்பை ஹாஜியார் குற்றமற்றவர்தான். ஆனால்! மனச்சாட்சி மரக்கட்டையாகி விட்ட ஹாஜியாரின் வீட்டில் ஒரு நாள்:

இரவு எட்டுமணியிருக்கும். இராச் சாப்பாட்டை தயார் செய்து விட்டு ஹாஜியாரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் சுபைதா. மணி ஒன்பது அடித்தது வரவில்லை. வீட்டிலுள்ள ஏனைய பகுதிகளையெல்லாம் சாத்திவிட்டு மண்டபத்துக்குள் வந்து அங்கே கிடந்த கட்டிலில் உடம்பைச் சாய்த்தாள் அவள். நேரம் ஆக ஆக அவள் கண்களை தூக்கம் கவ்வியது. அப்படியே உறங்கிவிட்டள்.

இரவு மணி பனிரெண்டிருக்கும். ஹாஜியார் வீட்டுக்கு வந்தார். மண்டபக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர் கண்கள் தூக்கத்தில் கிடந்த சுபைதாவைப் பார்த்துவிட்டன. வேலை செய்த களைப்பால் தன்னிச்சையாக உறக்கத்தில் கிடந்த சுபைதாவின் சேலை அங்குமிங்குமாக விலகிக்கிடந்தது. காலத்தின் வரவால் கன்னியின் பூரிப்பில் தலைநிமிர்ந்து நின்ற அவளது மார்பகம் ஹாஜியாரின் உள்ளத்தைக் கிள்ளிவிட்டது. உழைப்பின் மிகுதியால் உரமேறிப்போன அவளது அவயங்கள் நிலையழிந்த ஒருவித போதையை ஏற்படுத்தி விட்டன அவருக்கு. நடு இரவும் சுடுகாட்டமைதியும் இச்சையின் சுறுசுறுப்பும் எல்லாமாகச் சேர்ந்து சுபைதாவின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிட்டன. அவள் அனாதை.

சாப்பிட்ட எச்சிலை விட்டுவிட்டு எழுந்து போகும் முதலாளி யைப் போல ஹாஜியார் நடந்தார் கிணற்றடியை நோக்கி. வாயால் உமிழ்ந்ததை கையால் வாரி எடுக்கும் தொழிலாளியைப் போல தன் சேலையை வாரி உடம்பை மூடிக்கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள் சுபைதா. பணக்கார வீட்டில் இதுவும் ஒரு வேலைதானோ என்னவோ? ஆனால் அந்த அனுபவம் அன்று ஏற்பட்டது அவளுக்கு. -ஹாஜியார் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார். நீண்ட காலச் சுமையை இறக்கி வைத்த மனநிம்மதி அவருக்கு.

சுபைதாவுக்குத் தூக்கம் வரவில்லை. உள்ளம் விம்மிக் கொண்டிருந்தது. கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. வெட்கமும் பயமும் கலந்து துன்ப வேதனை அவளைக் கசக்கிப் பிழிந்தது.

காலத்திற்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. அதிகாலை மணி ஐந்தடித்தது. ஹாஜியார் அவசர அவசரமாக எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் காலை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவள் வேலைக்காரி. அடிமை தன் கடமைகளைச் செய்ய வேண்டுமல்லமா? வெட்கத்தையும் வேதனைளையும் அடுப்பங் கரைச் சாம்பலுக்குள் புதைத்துவிட்டு, வீட்டு வேலையில் ஈடுபட்டாள்.

ஹாஜியாரின் வீட்டில் இருந்த அராபி மாதக் காலண்டரில், மூன்று தாள்கள் கிழிக்கப்பட்டு விட்டன. சுபைதாவின் அடிவயிறு பெருத்து விட்டது! ஒரு குழந்தைக்காக ஓராயிரம் தவம் புரிந்தும் கிட்டாது என்று மனம் ஒடிந்து போனவர்கள் எத்தனையோ பேர்? இந்த உலகத்தில். வேண்டாம் என்று சொல்லும் பொழுது வேண்டு மென்றே வாய்க்குள் திணிப்பது போல் விரும்பாத பொழுது அவள் உடலுக்குள் உருவாகிக் கொண்டிருந்தது அந்தப் புது ஜீவன். அதன் உற்பத்திக்குக் காரணமாக இருந்த அந்த இரத்தம் அநீதி என்ற அழுக்கேறி அசுத்தப்படுத்தப்பட்ட கிழட்டு இரத்தம். சீ! அவள் தேகம் குலுங்கியது. சிந்தனையும் கலைந்தது.

மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள் சுபைதா. பாதி திறந்திருந்த கதவின் வழியாக வானத்தில் சிதறிக் கிடந்த நட்சத் திரங்கள் தெரிந்தன அவளுக்கு.

பிரசவ வேதனை அதிகரித்துக் கொண்டே இருந்தது. உடல் மெதுவாக அசைந்தது. “உம்மா!” என்று முனகினாள். அங்கே அந்தக் கிழட்டு நாய் வாலை ஆட்டிக் கொண்டு படுத்திருந்தது.

அந்த நாய் அந்தக் குடிசையைத்தான் தனது இராப்படுக் கைக்கு இடமாக்கிக் கொண்டிருந்தது. கிழவிக்கு அந்த நாய் தான் தோழன். அவள் அந்த நாயை அன்பாகத் தடவியபடி சொல்வாள் ‘இந்த உலகத்தில் மனிதனைவிட இது எவ்வளவோ மேல்’ என்று.

அந்த உண்மை சுபைதாவுக்கு இப்பொழுது தான் தெரிந்தது.

தனிமையில் தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு அந்தக் கிழ நாயின் கூட்டு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது.

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏன்! உமருலெப்பை கூடத்தான் இருக்கிறார். அவருக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய இரத்தத்தில் இருந்து ஒரு புது ஜீவன் உதயமாகப் போகிறது என்று. ஆனால்! அவர் என்ன செய்து விட்டார்? இந்தக் கிழ நாயை விட அவ்வளவு கிழமாவிட்டாரா? இல்லையென்றால் என்னை, வீட்டை விட்டு வெளியேற்றி இருப்பாரா? உம்…..! அவர் என்ன செய்வார்? அவர் குடியேறி இருக்கும் உலகம் அப்படி. ஏன் இந்தச் சமூகமும் அப்படித்தான்.

ஒன்றுக்கு பதில் இரண்டு உயிர்களைத் துன்புறுத்துவதைத் தவிர வேறு நல்ல காரியம் இந்த சமூகத்துக்குத் தெரியாது. உயிரும் உண்மையும் அற்றுப் போன இந்த சமூகம் எனது இன்றைய நிலையைத்தான் ஆதரிக்கும். இவைகளையெல்லாம் நினைத்து நடக்கப்போது என்ன? அவள் ஒரு முட்டாள்.

முடிவில்லாத அந்த இரவு நீண்டு கொண்டே இருந்தது. உள்ளத்திற்கும் உடலுக்கும் வேதனையை தந்து கொண்டே இந்த இரவு நீண்டது. விடிந்து விட்டால் எப்படியாவது அந்த வெட்ட வெளியில் போய் படுத்துக் கொள்வாள். அங்கே சூரியனின் சுடு வெய்யிலும், சோலைக்காற்றும் அவளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும்.

பிரசவ வேதனை நிமிசத்திற்கு நிமிசம் முன்னேறிக் கொண்டிருந்து. மார்பின் மேல் ஒரு கல்லைத் தூக்கி வைத்தது போல் இருந்தது அவளுக்கு. வாயைத் திறந்து மூடினாள். உடலை அசைக்க முடியவில்லை. எண்ணங்கள் தடைப்பட்டன. பிணம் போல் கிடந்தாள். இருதயம் துடித்துக் கொண்டிருந்தது துண்டிக் கப்பட்ட புழுவைப்போல.

மெல்ல மெல்ல உலகம் தெளிவடைந்து கொண்டிருந்தது. இருள் மங்கை தன் முந்தானையை இழுத்துத் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றாள். குடிசை வாசலில் படுத்துக்கொண்டிருந்த நாய் தனது நாலு கால்களையும் நீட்டி உடம்பை நெளித்தது. அப்பொழுது அதற்கு ஒரு புது வாசனை மூக்கு வரை வந்து மோதி யது. மோப்பம் பிடித்துக் கொண்டே சுபைதாவை நெருங்கியது அந்த நாய். சுபைதாவின் படுக்கை நீரால் நனைந்திருந்தது. நாய் தன் முகத்தை தாழ்த்தி முகர்ந்து பார்த்தது. அதற்கு என்ன தோன் றியதோ? உறுமிக் கொண்டே தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டது!

சுபைதா மரக்கட்டையாகிக் கொண்டிருந்தாள். அவளது வேதனைக்கும் நீண்ட இரவுக்கும் காரணமாக இருந்த அந்த புது ஜீவன் உதயமாகிக் கொண்டிருந்தது.

குழந்தை பிறக்கும் வரை சுபைதா காத்துக் கொண்டிருக்க வில்லை. முடியவில்லை அவளால். குழந்தையின் உதயத்துக்காக உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள். ஆனால்! உயிர் அவள் பிடியிலிருந்து பாய்ந்துவிட்டது! சுபைதா பிணமாகி விட்டாள். குழந்தை கழுத்தை நீட்டி உலகத்தை எட்டிப்பார்த்தது. இந்த உலகத்தைப் பற்றி என் நினைத்ததோ? பாதி வழியிலேயே தங்கிவிட்டது. பூமியில் குதிக்காத குழந்தை வந்த வழியே போக முடியாமல் தத்தளித்தது. முடிவு….? பிறப்பதற்கு முன்பே பிணமாகி விட்டது. அந்தப்பாதிக் குழந்தை!

சிருஷ்டி தத்துவத்தின் சீர்கேட்டைப் பார்த்த சிரித்திருக்க வேண்டும் அந்த நாய். அது தன் தலையைத் தூக்கி ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டது. அந்த நாயின் குரலோடு ஒரு மோட்டார் காரின் ஊதுகுழல் சத்தமும் வந்து கலந்து கொண்டது.

சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நாலைந்து கார்கள். அந்த வழியே பறந்தன. அதில் முதலாவது காரில் உமருலெப்பை ஹாஜியார் இரண்டாவது முறை மக்காவுக்குப் போகிறார்.

– 1952, முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *