பாட்டி கொடுமை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,153 
 

“உள்ள ராசப்பனிருக்கானுங்களா?”

-வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில் கண்ணைக் கரித்தது. பக்கத்து வீட்டு அங்காத்தாள்.

“சாமி ராசப்பா உன்ன எங்கெல்லாம் தொளாவறது போ. ஒரு மணி நேரமா சுத்துசுத்துன்னு சுத்தீட்டு வந்திருக்கம்போ.”

“அது சரிக்கா மெட்ராஸிலிருந்து எப்ப வந்தே? என்னை எதுக்குக்கா தேடணும்?”

இருபது வயது வாலிபனா அவன்? தலையெல்லாம் எண்ணை காணாது பஞசாய் பறக்க, அழுக்கு சட்டையில் ஒர்க்ஸாப் போரவனாட்டம் ஒல்லியாய்த் தெரிந்தான்.

“உங்க பாட்டிக்கு வேளை வந்திடுச்சு போலிருக்கு ராசப்பா”

அவள் வார்த்தை சவுக்காய் விழ, “ என்னக்கா சொல்றீங்க?” அதிர்ந்து போய்க் கேட்டான்.

“ஆமாப்பா துடுக்கு துடுக்குங்குது நொடிக்கொரு தரம் ராசப்பா ராசப்பாங்கறா. உங்க அத்தைதான் அக்கா கொஞசம்போய் கூட்டிட்டு வாங்கன்னா. நானும் உன்னைய மார்யாத்தா கோயிலு, ஸ்ரீராம் கொட்டாயி, பஸ் ஸ்டேணடு அஞ்சலி பேக்கரி, மஸ்தூர் சங்கம்னு தேடாத இடமில்ல.அப்புறம் எதுக்கால வந்த வேல்முருகந்தா லைப்ரரிக்குப் போய்ப் பாருன்னான். அதான் வந்தேன்.”

“வேல வெட்டியில்லாத பயலுகளுக்கு இந்த இடந்தானே போக்கிடம்.அதுசரி மெடராஸிலிருந்து எப்ப வந்தீங்க மச்சானும் கூட வந்திருக்கா?”

“காலைலே நானும் மச்சானும்தான் வந்தோம். பாட்டிக்கு உடம்பு சரியில்லாமப் போய் நா பாக்கவேயில்லையே பாக்கலாம்னு வந்தேன். நாம் பாத்த வேளையோ என்னவோ மூஞ்சியே கோணிப் போய் எல்லாத்தை ஒருமாதிரி பாக்கறாங்க ராசப்பா. ராசப்பாங்கறது மட்டும்தா காதுலே கேட்குது. அதுசரி உங்க பாட்டிக்கும் உனக்கும்தான் ஏழாம் பொருத்தமாச்சே. எப்பிடி இப்படி ஒரு கரிசனம் தீடீர்னு.”

அங்காத்தா சொந்த அக்காவாக இல்லாவிட்டாலும் அவன் மேல் ஒருபாசம்.அவள் கேட்பதில் ஒரு நியாயமிருந்தது. அவள் ஊருக்கு வந்தே ஐந்து வருடமிருக்கும். ராசப்பன் நினைத்துப் பார்த்தான் அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் அவனை ஒரு எதிரியாகத்தான் பாட்டி பாவித்திருக்கிறாள்.

அவள் தாத்தாவும் அப்பாவும் ப்ளேக் வந்த போது ஒரே சமயத்தில் இருவரும் போய் சேர்ந்து விட்டார்கள். தாத்தா வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலை பார்த்ததனால் வாரிசுக்கு மாமாவை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்கள்.

இதற்கு ராசப்பனோடு பிறந்தவர்கள் யாருமே இல்லை. புழுக்கை மாதிரி ஒட்டாத ஒண்டி ஆளாய்த்தான் பிறந்தான். அந்த பாவமோ என்ன்வோ பாட்டிக்கு அவன் மேல் வெறுப்போ வெறுப்பு.

ராசப்பனுக்கு ஐந்து வயதிருக்கும் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் ஒரே மாதிரி பொம்மை சட்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள் தனக்கும் அது மாதரி வேணும் மாமாவிடம் சொல்லி வாங்கித் தர அவன் அம்மாவிடம்தான் கேட்டான்.

“நீ கெட்ட கேட்டுக்கு பொம்மை சட்டை ஒண்ணுதான் பாக்கி. சோத்துக்கே வழியக் காணோம் உங்க மாமன் சம்பாரிக்கறது அவனிருமலுக்கே பத்தாம கெடக்குது. போடா மாமா காதுலகான விழுந்துச்சு உன்னக் கொன்னே போடுவான்.

பாட்டி அதட்டினாள் சிறுகுழந்தைதானே ஆசை அவ்வளவு சீக்கிரம் விடுமா? அழுதான். அடம் பிடித்தான். அம்மாகூட சமாதானம் செய்தாள். அப்போதுதான் வெறுப்பேற்படும்படியான முதல் நிகழ்ச்சி நடந்தது.

“அவன இப்படியெல்லாம் விட்டா சரிப்படாது. இஙகவுடு”

அவன் கையைப் பிடித்திழுத்து திண்ணைகாலில் வாழை மட்டையால் கட்டி வைத்து ரெண்டு கண்ணிலும் வெங்காயத்தை தட்டிப் பிழிந்து விட்டாள் பாட்டி.

அப்போது எப்படி துடித்தான் என்பது இருபது வருடம் கழிந்தும் கூட நினைவில் பசுமையாய் நின்றது.

இது போல ஏதேதோ காரணத்துக்காக ஒரு தரம் சமையல் அறைக்குள் படியில் நெருப்பைப் போட்டு ஒருகை மிளகாயைப் போட்டு கார நெடி மூக்கிலேற அந்த அறைக்குள் ராசப்பனைத் தள்ளிக் கதவை சாத்தி விட்டாள்.

சாதாரணமாகத் தாளிக்கும் போது ஏற்படும் கார நெடியே தாங்க முடிவதில்லை. மிளகாய்ப் புகை அறை முழுக்கப் பரவியிருக்கும் போது அந்த பிஞ்சு எப்படி அழுந்தியிருக்கும்.

இன்னொரு தரம் கூடையை கயிற்றில் கட்டி அவனை உட்கார வைத்துக் கிணற்றில் இறக்கி விட்டாள்.

அவனுக்கு அப்படியே குதித்து விடலாமா என்றுகூட தோன்றியது. இருந்தாலும் அடிக்கடி அம்மா சொன்னது நினைவுக்கு வரும் “ஏண்டா எனக்கு நீ ஒரே பையன்.நீ பெரியவனாயி சம்பாரிச்சு என்னைய காப்பாத்தணும்பா பெரிய உத்தியோகத்திலே உக்காந்து உங்கப்பா பேர் எடுக்கணும்.”

-என்று சொல்லியதற்காக பாட்டி சொன்னதை யெல்லாம் கேட்டான். தன் ஆசைகளையெல்லாம் காலில் போட்டு நசுக்கினான். மாமாவின் வருமானம் வறுமையிலிருந்து எழவே முடியாமல் போனது.

ஒருவழியாக மேல் வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான்.

காலை ஐந்து மணி ஆனால் போதும்…

“டேய் எந்திரிடா. எந்திரிச்சு படிடா” என அதட்டல் போடுவாள் பாட்டி. காலை நேரத்தில் நல்ல தூக்கம் வரும். சவுடாலாய் ரெண்டு நிமிடம் தாமதிப்பான்.

உடனே, “இன்னும் எத்தனை காலம் உங்களுக்கு வடிச்சுக் கொட்டிட்டு உங்க மாமானிருக்கணுமோ?” என்பாள்.

அவனுக்குக்கூட வேடிக்கையாயிருக்கும் மாமா என்ன காரணத்திற்காகவோ திருமணத்தைத் தளளிப்போட அதற்குக் கூட அவர்கள் தான் காரணம் என்பது எப்படி பொருத்தமாகும்.

நல்லவேளை எப்படியோ சீக்கிரம் ஒரு வசதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ரெண்டு பையன்களுக்கும் அப்பாவாகி விட்டார். அத்தை வந்த வேளை அவனுக்கு ஆதரவு கிடைத்தது. ஆனால் பாட்டிக்குத் திடீரென பக்கவாதம் வந்து கைகால்கள் விளங்காமல் போனது. படுத்த படுக்கையாகி விட்டாள். பாட்டி எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாட வேண்டியிருந்தது. புது மருமகள் செய்வாள் எப்படியோ ஏதாவது ஒரு நேரத்திற்குத்தான் கவனிக்க முடியும். அந்த வேளை பார்த்து அம்மாவிற்கு ஒரு விடுதியில் வேலை கிடைத்தது. வீட்டின் வறுமையை விட பாட்டியின் நோய் பெரிதாய்படாததால் அம்மா விடுதி வேலைக்குப் போய் சேர்ந்து அங்கேயே தஙகிவிட்டாள்.

பாட்டியைக் கவனிக்க அத்தையைத் தவிர யாருமில்லாமல் படாதபாடு பட்டாள்.

அவனுக்கு ஆரம்பத்தில் கொஞசம் சநதோசமாக இருந்தாலும் பின்னால் பாட்டி மருமகளிடம் படும் கொடுமைகளுக்காக இரக்கப்பட ஆரம்பித்தான்.

அவளைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அவன் பள்ளிப்படிப்பு முடிந்து வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான் இந்த நேரத்தில் அவன் மாமாவும் திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.

துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எல்லாம் கிழவியைக் கரித்துக் கொட்டினார்கள்.

“இந்தக் கிழவி போயிருக்கக் கூடாதா? கையும் காலும் வராம கெடயிலேயே கெடந்துட்டு எத்தனை காலம் இருக்கப் போகுது.”

அதை நினைத்து நினைத்துக் கிழவி மிகவும் குமைந்து போனாள். ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டிருந்ததையும் நிறுத்தி விட்டாள். சுத்தமாய் ஆகாரமென்பதே இல்லாமல் போனது.

மாமா இறந்த பின் அவர் வேலை செய்த கம்பெனியிலேயே வேலையில் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அதற்கான முயற்சியில் அலைய வேண்டியிருந்தது.

நாளாக நாளாக கிழவி அசையக்கூட முடியாமல் படுத்துக் கிடப்பாள். கிடயிலேயே ரட மூத்திரம் இருந்து நாறும். கட்டெறும்புகள் கூட்டமாய்ப் படையெடுத்து இருபுறமும் வரிசையாய் நின்று கடித்துப் பிடுங்கும் வலி பொறுக்க முடியாமல் “ஐய்யோ ஐய்யோ ” என்று கறித்துடிப்பாள்.

புருசனை இழந்த துக்கத்தில் கிழவியை அறவே வெறுப்பதனால் அத்தைக்காரி கவனிப்பதையே நிறுத்திக் கொண்டாள்.

இப்போது கிழவியை கவனிப்பது ராசப்பன் மட்டுந்தான் சாப்பிடுவதையே கிழவி நிறுத்தி ஒரு பத்து நாட்களுக்குப் பின் சாப்பிட முடியாமல் போனது.

“பசிக்கிறது” என்பாள்.சாப்பிட என்ன கொடுத்தாலும் வாயில் போட்டவுடன் குமட்டி வாந்தி எடுப்பாள்.

அவளுக்கு ஆதரவாய் சில சமயங்களில் பேசிக் கொண்டிருப்பான். ராத்திரி கூட அவன் வேலை விசயமாய் பேசிக் கொண்டிருந்தான்.

“பாட்டி மாமா கம்பெனியிலேயே வேலை கெடச்சிருக்கு செக்யுரிட்டி போஸ்ட் பணங்கட்டணும் ஐயாயிரம் தேவைப்படுது. எங்கியாச்சும் கடன் வாங்கித்தான் கட்டணும். யார்கிட்ட கேக்கிறதுன்னு தெரியல்ல.”

அவளிடம் சொல்லி என்னபிரயோசனம் சாகப் போகிறவள் என்னவோ ஒரு ஆதங்கத்திற்கு அப்படி பேசினான்.ஆனால் அதுவே கடைசி பேச்சாக இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை.

*****

வீடு வந்து விட்டது. கிழவி திண்ணையில் நாராய் கிடந்தாள். யாரும் பக்கத்திலில்லை. அத்தை வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். பையன்களுக்கு சாப்பாடு அனுப்பனும் அங்காத்தா கூட,

“தோ வந்துட்டேன் நீ போய் கிழவியப் பாரு என்ன சொல்லுதுன்னு?”

அவள் கழண்டு கொண்டாள்.

கிழவி துடித்துக் கொண்டிருந்தாள் அடிக்கொருதரம் விக்கல் எடுத்தது. பேச நா வரவில்லை. ராசப்பனை கண்டதும் முகத்தில் மலர்ச்சி பிறந்தது.

அருகில் வரும்படி சைகைக் காட்டினாள்.

“என்ன பாட்டி என்ன செய்யுது டாக்டரக் கூட்டிட்டு வரட்டுமா?”

அவள் சிரமப்பட்டு வாயைத் திறக்க முயற்சி செய்து, “தலகானிலே தாலி” என்றாள்.

தலகாணிக்குள் கையை விட்டுப் பார்த்தான். ஒருசின்ன சுருக்குப்பை. அதனுள் அவளுடைய தங்கத்தாலி.அவன் கண்களில் நீர் வழிந்தது.

“வச்சுக்கோ“ என்றாள் தண்ணீர் தருமாறு சைகை செய்தாள். தண்ணீர் தந்தான். ஒருமிடறு உள்ளே போயிற்று உயிரும் பிரிந்தது.அவளுடைய தாலியைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

இவளா கொடுமைக்காரி? இவள் அதட்டி அப்படி தன்னை முறைப்படுத்தி இருக்காவிட்டால் இப்படி ஒரு முழுமையான ஒழுங்கான ஆளாய் ஆகியிருக்க முடியாது என்பதை உணர்ந்தான்.

எந்தப் பாட்டி கொடுமைக்காரி என நினைத்தானோ அவள் தான் தன் எதிர்கால வெளிச்சத்திற்கு ஒளி தந்திருக்கிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *