Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பழங்கணக்கு

 

மாமா வந்திருந்தார். சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது வீட்டிற்கு எங்கள் வீட்டு சாப்பாட்டு அறையின் மேஜை போலவே ஒன்று செய்ய விரும்பினார்.

“அம்மாடி, ஒரு அளவு நாடா எடுத்துட்டு வாம்மா.”

“இதோ மாமா, இந்தாங்க, என்ன செய்யப்போறீங்க?”

“ஒரு தாளும் பேனாவும் எடு, நான் இந்த மேஜை அளவை அளந்து சொல்றேன், குறிச்சுக்கோ.”

“சரிங்க மாமா, சொல்லுங்க.”

“அகலம் ….ம்ம்ம்.. (என்று ஹம் செய்துவிட்டு) மூணு அடி மூணு அங்குலம்னு, எழுதிக்கோ.”

மெட்ரிக் அளவு படித்த என் கணித அறிவை மாமாவிடம் காட்ட எண்ணினேன், “ஒரு மீட்டர்னு எழுதவா மாமா?”

“வேணாம் எனக்கு அது ஒத்து வராது, இது ஒரு 99 சென்டிமீட்டர் சொச்சம்தான் இருக்கு, எனக்கு பழைய கணக்குதான் வசதி, பேசாம நான் சொல்றத எழுது.”

சே …சே… இந்த பழைய பஞ்சாங்கங்கள் மாறவே மாறாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்யாமல் சொன்னதை எழுதினேன்.

கல்லூரியில் வேறு பாடம் எடுத்துப் படித்திருந்தாலும் மாமா கணக்கில் புலி என்று பள்ளியில் படிக்கும் காலத்தில் பெயர் வாங்கியவர். இருபதாம் வாய்ப்பாட்டை இருபது வரைப் படித்தவர். நம்மைப் போல பன்னிரண்டாம் வாய்பாட்டை பன்னிரண்டுடன் நிறுத்தியவர் இல்லை. பள்ளிநாட்களில் தங்கப் பதக்கம் கொடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், ஒவ்வொரு ஆண்டும் என் அண்ணன் தங்கப் பதக்கம் வாங்கியிருக்குமாக்கும் என்று அம்மா தனது அண்ணனைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.

மாமா மேஜைக்கு அடுத்த பக்கம் சுற்றி வந்தார். ஒரு கை தேர்ந்த சிற்பி தான் வடித்த சிற்பத்தைப் பல கோணங்களில் இருந்து பார்ப்பது போல யாரோ முன்பின் தெரியாத ஒரு தச்சர் செய்த மேஜையைப் பல கோணங்களில் நின்று பார்த்தார்.

“நீளம் இந்த மேஜைய விட கொஞ்சம் ஒரு அடி அதிகமா வச்சு செஞ்சுக்கலாமா?” என்று சித்திரகுப்தன் போல வெறும் கணக்கைக் குறித்துக் கொண்டிருந்த என்னிடம் யோசனை கேட்டார்.

நானும் என் மேதா விலாசத்தை காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாமல், “மாமா, உங்க வீட்டு சாப்பாட்டு அறை நீளத்திற்கு இன்னமும் கொஞ்சம் 30 சென்டிமீட்டர் அதிக நீளமாக செய்யலாமே” என்றேன்.

“அப்படியா சொல்ற?” மாமா நாற்காலியில் அமர்ந்தார், “என் வீட்டு சாப்பாட்டு அறையை இந்த அறையோட ஒப்பிட்டா அது கொஞ்சம் பெரிசுதான், இல்லியா?”

சொல்லிவிட்டு மாமா அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தார். நானும் எதிர் நாற்காலியில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவரைப் பார்த்தேன். மாமா அவர் வீட்டின் அறையை மனக்கண்ணில் கொண்டு வருவதற்காக விட்டத்தைப் பார்த்து யோசித்தார். நானும் அவருடன் சேர்ந்து விட்டத்தைப் பார்த்தேன். விட்டத்தில் எந்தக் காட்சியும் எனக்குத் தெரியவில்லை. மாமா எழுந்து யோசனையுடன், “சரி நாம ஒரு அடி கூட அளவு வச்சுக்கலாம், சரியா?”

“சரி மாமா, ஒரு 30 சென்டிமீட்டர் அதிகமா வச்சுக்கலாம்.”

எனக்கென்ன போயிற்று, அவர் வீடு, அவர் மேஜை. மேலும் ஒரு 45 சென்டிமீட்டர் என்றாலும் அதனால் எனக்கென்ன பாதிப்பு?

“சரி நாடவப் புடி அம்மாடி,” நான் தாளையும் பேனாவையும் மேஜையில் போட்டு விட்டு நாடாவின் ஒரு பக்க முனையைப் பிடித்தேன்.

“நீளம்..ம்ம்ம்….(மீண்டும் ஹம்மிங்) இந்த மேஜை அஞ்சு அடி, கூட ஒரு முக்காலே அரைக்கால் இருக்கு. நாம கூட ஒரு அடி வச்சுக்கலாம், ஆறு அடி முக்காலே அரைக்கால் அப்படின்னு எழுதும்மா”

என்னது முக்காலே அரைக்காலா? இத எப்புடி மெட்ரிக் அளவாக மாற்றி எனது புத்திக் கூர்மையைக் காட்டுவது? குழம்பினேன். நமக்கெல்லாம் அட்ரா.. அட்ரா.. நாக்க முக்க, நாக்க முக்கதானே தெரியும்.

“என்னம்மா யோசனை? எழுதும்மா.”

“நீளம் ஆறு அடி முக்காலே அரைக்கால்” என்று சத்தாமாகச் சொல்லிக் குறித்துக் கொண்டேன்.

அடுத்து மாமா தொடர்ந்து மேஜையின் கால் ஒன்றினை அளந்து “காலே அரைக்கால்” என்று ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

“இல்லீங்க மாமா, மேஜையோட கால் முழுக்காலாத்தானே இருக்குது.”

“அம்மாடி, அறுக்காதம்மா.”

“அறுத்தாதானே மாமா அரைக்காலா மாத்த முடியும்”

“என்னால தாங்க முடியல, பேசாம நான் சொல்றத எழுது,” என்று சொல்லிவிட்டு மேஜையின் கால் அளவு, மேற்பலகையின் தடிமன் என அளந்து மாமா சொன்னதை எல்லாம் மறு பேச்சில்லாமல் குறித்துக் கொண்டேன்.

இருவரும் மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தோம். “அந்த தாளக் கொடு, அளவைப் பார்ப்போம்,” என்றார் மாமா.

மாமா பார்த்துவிட்டு சிரித்தார். ஹி..ஹீ.ஹீ.ஹீ….

எனக்குக் கோபம் வந்தது. “ஏன் மாமா சிரிக்கிறீங்க?”

மாமாவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. ஹி..ஹீ.ஹீ.ஹீ….என்று சிரித்துவிட்டு மீண்டும் தாளைப் பார்த்தார். மீண்டும் ஹி..ஹீ.ஹீ.ஹீ…..

அவரால் படிக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு நகைச்சுவையையும் நான் எழுதவில்லையே. என் கையழுத்து அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது? கோபத்துடன் அவர் கையிலிருந்த தாளைப் பிடுங்கிப் பார்த்தேன்.

முக்காலே அரைக்கால் என்பதில் எழுத்துப் பிழை, ‘மூக்காலே அரைக்கால்’ என எழுதியிருந்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் ஒரு சின்னத் தவறுக்கு இப்படி ஒரு சிரிப்பா? என்று எரிச்சலும் வந்தது. உர்ர் என்று முகத்தை வைத்துக் கொண்டு பிழையைத் திருத்தி அவரிடம் நீட்டினேன். கையில் வாங்கிப் பார்த்த மாமா மீண்டும் சிரித்தார். ஹி..ஹீ.ஹீ.ஹீ….

“போதும் மாமா, அதான் திருத்திட்டேனே, இன்னமும் என்ன சிரிப்பு?” என்று கடுப்படித்தேன். மாமாவிற்கு சிரித்துச் சிரித்துக் கண்ணீரே வந்து விட்டது.

“காலே அரைக்கால், முக்காலே அரைக்கால், இந்த அளவெல்லாம் உனக்கு எழுதத் தெரியாதாம்மா?”

“அதான் எழுதி இருக்கேனே மாமா!!”

“இல்லம்மாடி, எழுத்தால இல்லம்மா, எண்ணால் எழுதணும். கால், அரை, முக்கால் இதெல்லாம் எப்படி எழுதுவியோ…. ஒன்னுங் கீழ நாலு, ஒன்னுங் கீழ ரெண்டு, மூனுங் கீழ நாலு அப்படின்னு, அதுபோல எண்ணால எழுதணும்மா.”

காலே அரைக்கால் = 3/8, முக்காலே அரைக்கால் = 7/8 என்று மாமா எழுதிக் காண்பித்து, “இப்படி எண்ணால எழுதணும்மா” என்றார்.

“இல்ல மாமா, என்னால எழுத முடியாது, எனக்குத் தெரியாது.”

மாமா சிரித்த காரணம் புரிந்து அசடு வழிந்தேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஐயா, ஆலயத் திருப்பணி அலுவகத்திற்கு போகும் வழி எது? திருவிளக்கு பணியின் அதிகாரியை நான் சந்திக்கவேண்டும் ஐயா, உதவி செய்யுங்கள்" என்று பயந்த சுபாவத்துடன் உள்ள குட்டன் கேட்டான். அவன் குரல் கேட்டு ஆலயக் காவலன் திரும்பிப் பார்த்தான். தோளில் தாங்கிய கழியின் ...
மேலும் கதையை படிக்க...
தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த ஹீலியம் பலூன் இருக்க, இடதுகை கட்டை விரலை சூப்பிக்கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர் அவளது அம்மா ராஜலக்ஷ்மியும் அண்ணன் ...
மேலும் கதையை படிக்க...
மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள். "பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்," என்று புன்னகைத்தாள் உடன் ...
மேலும் கதையை படிக்க...
அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர் கூறியவற்றை, அந்த ஆலோசனைகளை, உலக மக்கள் போற்றபடவேண்டிய நல்ல அறிவுரைகள் என நம் முன்னோர்கள் நமக்குப் போதித்ததில்லை. அறிவுரைகளைப் பலரும் ...
மேலும் கதையை படிக்க...
சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க் பெட்டிகள் வைத்து விழாமல் நன்கு கட்டப் பட்டிருந்தது. வலதுபக்கம் திரும்பியவுடன் சாலையில் புழுதியைக் கிளப்பிக் ...
மேலும் கதையை படிக்க...
இளவரசியின் பரிசு
காசியில் பிடிச்சத விடணும்!
நீ என்றுமே என் மகன்தான்
சொல்லவா கதை சொல்லவா?
பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)