பல் மருத்துவன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,317 
 

மணிமேகலைப் பல்கலைக்கழகம். துணைவேந்தர் மாளிகை, வரவேற்பறையில் காத்திருந்தேன். மக்கள் தொடர்பு அதிகாரி எட்டினார்…
“”துணைவேந்தர் அழைக்கிறார்; போங்கள்!”
வணங்கியபடி உள்ளே போனேன்.
துணைவேந்தர் பதில் வணக்கம் செய்து, ஒரு நீள்கவரை நீட்டினார்…
“”உங்க மகனுக்கான பல் மருத்துவ சேர்க்கை கடிதம் இதோ… வாழ்த்துக்கள்!”
“”நன்றி,” என்று கவரை வாங்கி, அறைக்கு வெளியே வந்தேன்; மக்கள் தொடர்பு அதிகாரிக்கு நன்றி கூறினேன்.
இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி, பல்கலைக்கழகக் குடியிருப்புக்கு விரைந்தேன். மனைவியையும், மகனையும் ஒருசேர அழைந்தேன். சமையற்கட்டிலிருந்தும், கணினி அறையிலிருந்தும் வெளிப்பட்டனர்.
பல் மருத்துவன்!“”நிலாவுக்கு நம்ம பல்கலைக்கழகத்திலேயே, பி.டி.எஸ்., அட்மிஷன் கிடைச்சிருக்கு!”
“”ஊழியர் ஒதுக்கீடா… முத்தமிழ் அறிஞர் ஒதுக்கீடா?” என் மனைவி.
“”ஆயிரம் பின்னடைவுகள் இருந்தாலும், முப்பது வருடங்களாக இலக்கியம் படைத்து, பல்கலை புகழ் பரப்பும் ஒரு விசுவாசிக்கு, பல்கலை தந்த அன்பு ஒதுக்கீடு குட்டிம்மா!”
கவரை பிரித்தான் நிலாமகன். சேர்க்கை கடிதமே பட்டச் சான்றிதழ் போல் பல வர்ணங்களில் பளபளத்தது. பிரித்து படித்தவன் முகத்தில் பெரிதாய் சந்தோஷமில்லை; கறுத்தான். வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். மகனின் முணுமுணுப்பை காதுற்றாள் என் மனைவி.
“”என்ன முணுமுணுத்தான் பாப்பா, அவன்?”
“”ஒண்ணுமில்லை!”
“”மறைக்காதே… சொல்!”
“”கடைசில, எல்லாருடைய நாத்தம் புடிச்ச வாய்க்குள்ளயும் கை விட வச்சிட்டாருல அப்பா!” என்றான்.
கோபத்தை மறைத்து, மகனை உன்னித்தேன்.
“”வேற எதுல சேருவோம்ன்னு நினைச்சிக்கிட்டிருந்த நிலா?”
“”எம்.பி.பி.எஸ்.,சில்!”
“”உன் வார்த்தைகளின் படி பார்த்தா, எல்லாருடைய நாத்தம் புடிச்ச உடலையும், தொட்டுப் பார்த்து, நோயை குணப்படுத்துற படிப்புதானே எம்.பி.பி.எஸ்.,? மெரிட்ல எம்.பி.பி.எஸ்., கிடைக்கணும்ன்னுதான் உன்னை நாமக்கல் பசுமை பூங்கா உறைவிட மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். 1,160 மார்க் எடுப்பேன்னு பார்த்தா, 1,060 தான் எடுத்தே. எல்லா அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ, பொறியியல் நுழைவு தேர்வுகளை எழுத வச்சேன். பத்திரிகை நண்பர்களை வச்சும் எம்.பி.பி.எஸ்., முயற்சித்தேன்; நடக்கல. இளங்கலை காட்டியல், இளங்கலை மீன்வளம், ஹோமியோபதி, சித்தா, கால்நடை மருத்துவம், விண்வெளி பவுதிகம் இப்படி பல சாய்ஸ்களை உன் முன் எடுத்து வச்சேன்; நிர்தாட்சண்யமாக வேணாம்ன்னு சொல்லிட்ட. இப்ப கடவுளோட அருளால உனக்கு பி.டி.எஸ்., கிடைச்சிருக்கு. எம்.பி.பி.எஸ்., சிவப்பு ஆப்பிள்னா, பி.டி.எஸ்., பச்சை ஆப்பிள்டா மகனே!”
“”உதாரணம் சொல்லி ஏமாத்தாதீங்கப்பா!”
“”எந்த படிப்பிலும் உயர, தனி மனித புத்திசாலித் தனமும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் கடின உழைப்பும் தேவை நிலா. விளைநிலத்தை கொடுத்துள்ளேன்; நீ தான் பயிரிட்டு, களை எடுத்து, நீர் பாய்ச்சி, மருந்தடித்து, அமோக விளைச்சல் காட்ட வேண்டும். “அமோக விளைச்சல்’ என்று நான் பணத்தை குறிப்பிடவில்லை; “கல்வி வெற்றி’யைத்தான் சுட்டினேன். மருத்துவப் படிப்புக்கு, சேவை மனப்பான்மை அடிப்படை மகனே. மனித உடம்பே நாற்றம் பிடித்ததுதான். “காயமே பொய்யடா காற்றடைத்த பையடா…’ என, பட்டினத்தார் கூறவில்லையா? மனிதனின், ஒன்பது துவாரங்கள் வழியாக திரவக் கழிவுகள் வெளியேறி கொண்டேதான் இருக்கின்றன. உள்ளும், புறமும் மனிதன் கிருமிகளுடன் போரிட்டுக் கொண்டேதான் வாழ்கிறான்…”
நெற்றியில் கை வைத்துக் கொண்டான் நிலாமகன்.
“”மகப்பேறு மருத்துவர் பிரசவம் பார்க்கும் போது, கர்ப்பப்பை கழிவுகளை இரு கைகளிலும் ஈஷி கொள்கிறார். இப்படி ஒவ்வொரு சிறப்பு பிரிவு மருத்துவரும் நோயாளிகளின் ரத்தத்திலும், நிணத்திலும் நீந்தித்தான் வெளி வருகின்றனர். பல் மருத்துவம் விரும்பாதவன், பொது மருத்துவத்தில் சோபிக்க முடியாது. எம்.பி.பி.எஸ்.,சும், பி.டி.எஸ்.,சும் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள்!”
“”புது உதாரணம்!”
“”சுயநல ஒப்பீடு செஞ்சா பல் மருத்துவம், பொது மருத்துவத்தை விட சிறப்பானது என்பதை உணரலாம்!”
“”எப்படி?”
“”ஒரு மனிதனுக்கு ஒரு இதயம், இரண்டு நுரையீரல்கள், இரு சிறுநீரகங்கள், இரு காதுகள், இரு கண்கள், ஒரு மூக்கு வச்சான் கடவுள்; ஆனால், பற்களை மட்டும், 32 வச்சான். அதில், எதாவது ஒரு பல் வலிச்சாலும், உனக்கு வேலை வந்திடும். பல் மருத்துவத்தில், நாலுவித சேவைகள் உள்ளன. பற்களை லேசர் வைத்து சுத்தம் செய்யலாம். வேர் சிகிச்சை செய்து, சொத்தையான பற்களை காப்பாற்றலாம். சொத்தை பல் அகற்றலாம்; பொய் பல் பொருத்தலாம். வாய் மருத்துவமும், அழகு அறுவைச் சிகிச்சையும் செய்யலாம். பல் மருத்துவத்தில் பி.ஹெச்.டி., முடித்து, பற்சொத்தைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கலாம்!”
“”பல் மருத்துவத்தின் பிராண்ட் அம்பாசிடர் போல் பேசுகிறார் அப்பா!”
“”ஒரு தகப்பன் ஸ்தானத்திலும், பி.டி.எஸ்., எனக்கு இனிக்கிறது. எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்கும் செலவில், ஐந்தில் ஒரு பங்கு பணம் செலவழித்து, பி.டி.எஸ்., – எம்.டி.எஸ்., படித்து விடலாம். எம்.டி.எஸ்., மெரிட்ல கிடைச்சா இன்னும் பணம் மிச்சமாகும். எம்.டி.எஸ்., முடித்து, நீ கிளினிக் வைக்கலாம். பி.டி.எஸ்., படித்த பெண்ணை மணந்து, கிளினிக்கை கூட்டாய் கவனிக்கலாம். பல் மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராக போகலாம். புலத்தலைவர் வரை பதவி உயர்வு பெறலாம். அரபு நாடுகளுக்கு சென்று, கிளினிக் வைக்கலாம்.”
“”உங்கள் அப்பா சொல்றதை கேட்க, கேட்க எனக்கே பி.டி.எஸ்., படிக்க ஆசை வருகிறது!” என் மனைவி.
“”அப்பா கருணாநிதின்னா, அம்மா நீ அன்பழகன்!”
“”நிலா… இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனி. நாம் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கல்வியின் முக்கியத்துவத்தை இப்பத்தான் உணர ஆரம்பிச்
சிருக்கோம். நாம் மாமிச உணவு அதிகம் உட்கொள்வதால், பொதுவாகவே பல் பராமரிப்பில் மெத்தனமாக இருக்கிறோம். நீ பல் மருத்துவம் முடித்து, மதுரையிலோ, திருநெல்வேலியிலோ டென்ட்ல் கிளினிக் வைத்தால், மக்கள் உன்னிடம் உரிமையாய் வந்து சிகிச்சை பெறுவர். நிலாமகனுக்கு அரபியில், “இப்னு பத்ர்’ என்று பொருள். உன் கிளினிக்குக்கு, “இப்னு பத்ர் டென்டல் கிளினிக்’ என பெயர் சூட்டலாம்!”
“”ஓவர் கற்பனை அப்பாவுக்கு!”
“”கும்பக்கோணத்திலிருந்து பல் டாக்டர் புரொபசர் ராமசாமி என்னை பார்க்க வருவாரில்ல. இருபது வருஷத்துக்கு முன், அவர் பி.டி.எஸ்., படிக்கிறப்ப கும்பகோணத்தில, ரெண்டு மூணு பல் டாக்டர்தான் இருந்தாங்களாம். இன்னைக்கு, 45 பல் டாக்டர் இருக்காங்களாம்; இருந்தும், டாக்டர் ராமசாமி கிளினிக்குக்கு தினம், இருபது நோயாளிகளாவது வருவாங்களாம். பத்துதான் பார்ப்பாராம். போட்டி அதிகமாக இருந்தாலும், தன் திறமையாலும், நோயாளிகளுடனான அனுசரணையான பழகும் விதத்தாலும் ஜெயிக்கிறார் ராமசாமி. பி.டி.எஸ்.,சில் நீ வாங்கும் மார்க்கோ, கோல்டு மெடலோ வெற்றி தராது. நோயாளிகளுக்கு உன் மருத்துவம் முழு திருப்தி தர வேண்டும்.”
“”என்னதான் சொல்ல வருகிறீர்களப்பா?”
“”தூண்டிலை குறை கூறிக் கொண்டே மீன் பிடிக்க போகாதே. எது கிடைத்ததோ அது சிறப்பானது என்ற சித்தாந்தத்தோடு படிப்பில் இறங்கு. பல் மருத்துவத்தால், நீ உயர வேண்டும்; உன்னால் பல் மருத்துவம் கண்ணியப்பட வேண்டும்.”
தலையாட்டினான் நிலாமகன்.
“”நீ இங்கு படிப்பது எனக்கும், அம்மாவுக்கும் கூடுதல் சவுகரியம் தரும்!”
“”எப்படி?”
“”ஏற்கனவே எங்களை இரண்டு வருஷம் பிரிந்திருந்து பிளஸ் 1, பிளஸ் 2 படித்தாய். அக்காவை கட்டிக் கொடுத்து விட்டோம்; பெங்களூரு போய் விட்டாள். உன்னை வெளியில் சேர்த்தால், மீண்டும், ஐந்து வருஷம் உன்னை பிரிந்திருக்க வேண்டியிருக்கும். நீ இங்கு படிப்பதால், நாங்கள் உன் அன்புமழையில் தொடர்ந்து நனைவோம். அந்த சந்தோஷத்தை, கோடி ரூபாய் தராது. தவிர, முப்பது வருடங்களாக நான் பணிபுரிந்த பல்கலைக் கழகத்தில் நீ படிக்கப் போகிறாய். தாத்தா – பாட்டி வீட்டில் குருகுலக்கல்வி கற்கப் போவது போன்றது இது. என்னுடைய கதைகளை படிக்கும் அபிமானிகள் பலர் அங்கிருக்கின்றனர். அவர்கள் உன்னை கவனித்துக் கொள்வர். மருத்துவ நூலகத்தையும், பல் மருத்துவ நூலகத்தையும் நீ அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நம் வீட்டிற்கும், பல் மருத்துவக் கல்லூரிக்கும் நடக்கும் தூரம்தான். ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் நீ போய் வரலாம்!”
“”நான் பல் மருத்துவம் படிக்கிறேன்ப்பா; போதுமா?” என்னை விட உயரமாய் இருந்த மகனை, குதிகாலில் நின்று அணைத்துக் கொண்டேன்.
ஜெர்மானிய கட்டடக்கலை சாயலில் மணிமேகலை பல் மருத்துவக் கல்லூரி அமைந்திருந்தது.
நிர்வாகி அலுவலகத்தில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. டியூஷன் பீசை வங்கியில் கட்டினோம். மாலையில் அறிமுக வகுப்பு நடக்க இருந்தது.
வகுப்பறைக்குள் போன நிலாமகன், ஸ்தம்பித்தான்; 120 மாணவர்களில், 82 பெண்கள். மாணவர்கள் யார் முகத்திலும் அதிருப்தி இல்லை.
அறிமுக வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் எழுந்து தன் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த ஊர், என்ன காரணத்துக்காக பல் மருத்துவம் படிக்க வந்திருக்கின்றனர் என சொல்ல ஆரம்பித்தனர்.
ஒரு மாணவி எழுந்தாள்…
“”என் பெயர் ரஞ்சனி. என் குடும்பம் விவசாயக் குடும்பம். ஊர் கோவில்பட்டி. முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளை போல ஒரு ஸ்பெஷாலிட்டி படிப்பு இளங்கலை பல் மருத்துவம். இளங்கலை பல் மருத்துவம் படித்துவிட்டே எம்.டி., படித்து, எம்.பி.பி.எஸ்., டாக்டர்களை விட அதிகம் சம்பாதிக்கலாம். பெண்கள் பல் மருத்துவத்தில் அதிகம் சோபிக்கலாம். பொறுமையும், தாயுள்ளமும் பெண்களின் பிளஸ் பாயின்ட்!”
ஒரு மாணவன் எழுந்தான்…
“”என் பெயர் அப்பாஸ்; ஊர் திருச்சி. பெற்றோர் இருவருமே குழந்தைகள் நல மருத்துவர். எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்க பணிமிருந்தும், பல் மருத்துவம் விரும்பி சேர்ந்திருக்கிறேன்!”
மூன்றாவதாக ஒரு மாணவி எழுந்தாள்…
“”என் பெயர் அஸ்வினி. ஊர் தஞ்சாவூர். அப்பா பல் மருத்துவர். நான் படித்து முடித்து, அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, அப்பாவின் கிளினிக்கை கவனித்துக் கொள்வேன். பல் மருத்துவப் பணி, ஆபீஸ் போய் வருவது போல… நள்ளிரவில் எம்.பி.பி.எஸ்., டாக்டரை நோயாளிகள் எழுப்புவது போல பல் மருத்துவரை எழுப்ப மாட்டார்கள். இப்பணியில் மன இறுக்கம் குறைவு!” என்றான்.
நான்காவதாக ஒரு மாணவன் எழுந்தான்…
“”என் பெயர் சின்னசாமி; ஊர் கரூர். பெற்றோர் ஆசிரியர்கள். எங்கள் ஊரில் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ்., படித்து, பி.டி.எஸ்., சேர்ந்திருக்கிறார். அவருக்கு பி.டி.எஸ்., மூன்று வருடங்கள்தான். கேட்டால் எம்.பி.பி.எஸ்.,சை விட, பி.டி.எஸ்.,சுக்கு பிரகாசமான எதிர்காலம் என்கிறார். அதுவரை என்ன படிப்பது என்ற குழப்பத்திலிருந்த நான், பல் மருத்துவம் சேர்ந்தேன்!”
ஐந்தாவதாக ஒரு மாணவி எழுந்தாள்…
“”எனக்கு மெரிட்ல பி.டி.எஸ்., கிடைக்கும்; இருந்தாலும், இங்கு சேர வந்தேன். காரணம், மணிமேகலை பல் மருத்துவக் கல்லூரி தரத்தில் ஆசியாவில், இரண்டாவது இடம். மணிமேகலை பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரியுடனும், மற்ற, 72 துறைகளுடனும் இணைந்துள்ளது. இங்கு படிப்பது சகல ரீதியிலும் அறிவை மேன்படுத்தும் என நம்புகிறேன்!”
மாணவ – மாணவியரின் அறிமுகம் தொடர்ந்தது. நிலாமகன் முறை வந்ததும் எழுந்தான்…
“”என் பெயர் நிலாமகன். என் தந்தை இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்; எழுத்தாளரும் கூட. பல் மருத்துவம் எனக்கு லவ் மேரேஜ் அல்ல; அரேன்ஞ்டு மேரேஜ். ஆனால், திருமணத்திற்கு பின் காதலிக்க ஆரம்பிக்கும் கணவனைப் போல, பல் மருத்துவ படிப்பை நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன்!”
அறிமுக வகுப்பு முடிந்தது. டாக்டர் கோட்டு அணிந்து, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டான் நிலாமகன். பல் மருத்துவ அகராதி மற்றும் பல் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் வாங்கிக் குவித்தான்.
ஒரு மாதத்திற்கு பின்…
மெழுகை செதுக்கி, செதுக்கி பல் செய்து கொண்டிருந்தான் நிலாமகன்.
கைபேசி சிணுங்கியது; எடுத்து காதில் இணைத்தேன். எதிர்முøனையில் ஒரு பத்திரிகையின் எடிட்டர்.
“”உங்க மகனுக்கு புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., ப்ரீ சீட் ஏற்பாடு செய்துள்ளேன். கேபிட்டேஷன் பீஸ் கிடையாது; டியூஷன் பீஸ் வருடத்திற்கு, ரெண்டே முக்கால் லட்சம் ரூபாய். நாளையே நீங்கள் போய், “ஜாய்ன்’ பண்ணலாம். மணிமேகலைல கட்டின பணத்தை, “ரீ-பண்ட்’ செய்து, வாங்கிடுங்க!”
மகனிடம் ஓடினேன்…
“”உனக்கு எம்.பி.பி.எஸ்., ப்ரீ சீட் கிடைச்சிருக்கு; நாளை போய் சேர ரெடியாகு!”
மகன் திரும்பி என்னை ஆழமாக பார்த்தான்…
“”ஐ எம் மேரீடு டு டென்டிஸ்டிரி. திருமணத்திற்கு பின் மணப்பெண்ணை மாற்றலாமா? இலக்கியத்தில் பல சாதனைகள் செஞ்சிருக்கீங்கப்பா. உங்களைப் போல நானும் பல் மருத்துவத்தில் பல சாதனைகளை நிகழ்த்துவேனப்பா!”
நானும், என் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்!

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *