Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பலாத்காரம்

 

அவர்களை நான் அறியேன். ஓல்சன் அவர்களின் குடும்பப் பெயர். அது தெரியும். ‘ ‘உடனே புறப்பட்டு வாங்க டாக்டர்…. என் பொண்ணுக்கு ரொம்ப முடியவில்லை. ‘ ‘

அந்த அம்மா வாசலில் காத்திருந்தாள். பளிச்சென்ற சுத்தத்துடன் குண்டு அம்மா. அழைத்துவிட்டதற்கு வருந்துகிறாப் போல முகபாவம். ‘ ‘டாக்டர் ? ‘ ‘ உள்ளே கூட்டிப்போனாள். பேசியபடி என் பின்னால் வந்தாள். ‘ ‘பின்கட்டுல… ‘ ‘ என்றாள் அவள். ‘ ‘சமயத்ல இங்க ஜில்லுனு ஆகிப்போகுதா, அதான். சமையலறைன்னா கொஞ்சம் கதகதப்பா இருக்கும்லியா… ‘ ‘

முழுக்கப் பொதித்தாற்போல உடையணிந்திருந்தது குழந்தை. சமையல் மேடைப்பக்கம் அப்பா மடியில் உட்கார்ந்திருந்தது. எழுந்துகொள்ள அவர் – /வேண்டாம்/ என நான் கையமர்த்தினேன். மேல்கோட்டை அவிழ்த்தவாறே அந்தச் சூழலை நோட்டமிட்டேன்… அவர்கள் எல்லாருமே பதட்டமாய் இருந்தார்கள். இந்தாளு குணப்படுத்தி விடுவானா, என சின்ன அவநம்பிக்கைப் பார்வை. என்னிடம் வரும் பிறர் போலவே இவர்களும். தேவைக்குமேல் எந்த விவரமும் பேசவில்லை. விவரங்களை நான் சொல்லக் காத்திருந்தார்கள். வேறெதற்கு எனக்குச் சம்பளந் தருகிறார்கள் ?

குழந்தை என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருச்தது. அசைவற்ற முகம். சலனமே கிடையாது. சுபாவத்திலேயே அது அமைதியான குழந்தை. பார்த்த ஜோரில் எல்லாருக்குமே அவளைப் பிடிக்கும். பருவம் வந்துவிட்டாப்போல கிண்ணென்று இருந்தாள். முகம் கன்னிச் சிவந்து போயிருந்தது. சரியான ஜுரம். புஸ் புஸ்சென்று மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள். அடர்த்தியும் மென்மையுமான நிறைந்த கேசம்… விளம்பர நோட்டிசுகளிலும் ஞாயிறு மலர்களிலும் போடுகிறாப்போல இருந்தாள்.

‘ ‘மூணு நாளா ஜுரம் இவளுக்கு… ‘ ‘ அப்பா ஆரம்பித்தார். ‘ ‘எப்பிடின்னு தெரியவில்லை. கைவைத்தியம் என்னென்னவோ இவ குடுத்துப் பார்த்தாள். ஒண்ணும் ஒத்துவரவில்லை. அத்தோடு இப்ப ஊர்முழுக்கக் காய்ச்சலா இருக்கே… அதான் உங்ககிட்ட காட்டிறலாம்னு… ‘ ‘

எல்லா வைத்தியரையும் போலவே நானும் முதல் கேள்வியைக் கேட்டேன். ‘ ‘குழந்தைக்குத் தொண்டைல வலி இருக்கா ? ‘ ‘

பெற்றவர்கள் இரண்டு பேரும் ஒரே குரலில் ‘ ‘இல்ல ‘ ‘ என்றார்கள். ‘ ‘வலிக்கல, என்கிறாள் இவள். ‘ ‘

‘ ‘வலி இருக்காடி ? ‘ ‘ அம்மா குழந்தைப் பக்கம் திரும்பிக் கேட்டாள். குழந்தை அந்தக் கேள்வியைக் கண்டுகொள்ளவே யில்லை. என்னையே பார்த்தபடி யிருந்தது அது.

‘ ‘உள்ளாற புண் இருக்குதான்னு நீங்க பார்த்திட்டாங்களா ? ‘ ‘

‘ ‘முயற்சி பண்ணினேன் ‘ ‘ என்றாள் அம்மா. ‘ ‘ஆனால் பார்க்க முடியவில்லை. ‘ ‘

இதே மாதத்திலேயே இந்தக் குழந்தை படிக்கிற அதே பள்ளியில் இருந்தே நிறையப் பிள்ளைகள் டிப்தீரியா, டிப்தீரியா என வந்து கொண்டிருந்தார்கள். வைத்தியர்கள் நாங்கள் அனைவருமே அதையேதான் யோசித்தபடி இருக்கிறோம்.

‘ ‘ம்… ‘ ‘ என்றேன் நான். ‘ ‘வாயைத் திறந்து மொதல்ல பாத்திறலாம். ‘ ‘ வைத்தியர்த்தனமான புன்னகை. குழந்தையின் செல்லப் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ‘ ‘மெதில்டா… ஆ- காட்டும்மா. தொண்டை எப்பிடி இருக்கு, பாத்திறலாம்… ‘ ‘

கல்லுளி மங்கன்.

‘ ‘அட, அடம் பிடிக்கப்டாது ‘ ‘ – நான் தாஜா பண்ணினேன். ‘ ‘லேசா வாயைத் திறப்பியாம்… நான் பாத்துக்கறேன்… இங்க பாத்தியா… ‘ ‘ இரண்டு கையும விரித்துக் காட்டினேன். ‘ ‘என் கையில் எதுவுமேயில்லை. கொஞ்சம் வாயைத் திற… ‘ ‘

‘ ‘டாக்டர் மாமா எவ்வளவு நல்லவர் பார்த்தியா, ‘ ‘ என்றாள் அம்மா. ‘ ‘உன்கிட்ட எத்தனை பிரியமாய்ப் பேசுகிறார் பார். அவர் சொன்னபடி கேட்கணும் ‘ ‘ என்றாள். ‘ ‘உனக்கு வலிக்கிற மாதிரி அவர் எதுவும் பண்ண மாட்டார். ‘ ‘

ச், என நான் கடுப்பானேன். வலி பற்றி அவள் சொல்லாமல் இருந்திருக்கலாம். அதை அவள் நினைவு படுத்தாமல் இருந்திருந்தால் குழந்தையைக் கிட்டத்தட்ட நான் வழிக்குக் கொண்டு வந்திருப்பேன். ஆனால்… என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அமைதியாய் நிதானமாய்க் குழந்தையிடம் மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

என் நாற்காலியை அதன் பக்கமா இ ழு க் – எதிர்பாராமல் அந்தக் குழந்தை என்மேல் பாய்ந்து பூனைபோல் பிறாண்டினாள். கிட்டத்தட்ட என் கண்ணை எட்டிவிட்டாள். என் கண்ணாடி, நல்லவேளை உடையவில்லை, நாலைந்தடி தள்ளி துள்ளி துாரப்போய் விழுந்தது.

அப்பா அம்மா ரெண்டு பேருமே திகைத்துப் போனார்கள். என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். ‘ ‘அடிப்பாதகத்தி ‘ ‘ என்றாள் அம்மா. குழந்தை கையை இறுக்கினாள். ‘ ‘என்ன காரியம் பண்ணினே நீ பார்… டாக்டர் ரொம்ப நல்லவரு… ‘ ‘

‘ ‘அம்மா உங்களுக்குப் புண்ணியம்… ‘ ‘ நான் இடைமறித்தேன். ‘ ‘நான் நல்லவன்னு அவள்கிட்ட வியாக்கியானம் எல்லாம் வேணாம். நான் அவள் வாயைப் பார்க்கணும். அவளுக்கு டிப்தீரியாவா தெரியவில்லை. கவனிக்காட்டி அவள் உயிருக்கே உலை வெச்சிரும்… ‘ ‘ ஆனால் இது எதைப் பத்தியும் அந்தப் பெண் சட்டைபண்ணவே யில்லை. ‘ ‘இங்க பாரும்மா… ‘ ‘ நான் குழந்தையிடம் சொன்னேன். ‘ ‘நாங்க உன் வாயைப் பார்க்கணும். பெரிய பெண்தானே நீ ? உனக்குப் புரியுதில்லியா ?… வாயை நீயே திறக்கறியா, இல்ல, நாங்க திறந்துக்கட்டுமா ? ‘ ‘

குத்துக்கல். சிறு அசைவும் இல்லை அதனிடம். முன்னைவிட இப்போது மூச்சுவிட அதிகம் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.

எங்கள் போராட்டம் ஆரம்பித்தது. அவள் நலனுக்காகவாவது நான் அவள் தொண்டையைச் சோதித்தாக வேண்டும். அம்மா அப்பாவிடம் நான், ‘ ‘நீங்க சொன்னால் பார்க்கிறேன்… ‘ ‘ என்றேன். ஆபத்தினை எடுத்துச் சொன்னேன். ‘ ‘ஆனால் இந்த விபரீதத்தை நீங்களா உணராதவரை நான் பார்க்கப் போறதில்லை ‘ ‘ என்றேன்.

‘ ‘மாமா சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா உன்னை ஆஸ்பத்திரிலதாண்டி சேக்க வேண்டி வரும் ‘ ‘ என அம்மா அவளைக் கண்டித்தாள்.

ம் என நான் புன்னகைத்தேன். எது எப்படி யிருந்தாலும் எனக்கு அந்தக் குழந்தையைப் பிடித்திருந்தது. மூத்தவர்கள்தான் என்னிடம் சில்லரைத்தனமாக நடந்து கொண்டிருந்தார்கள். இந்தக் களேபரத்தில் அவர்கள் மேலும் அசடுகளாய் பலவீனர்களாய்த் துவண்டு கொண்டிருந்தார்கள். குழந்தையோ தன் ஆத்திரத்தை அதியற்புதமாய்ச் சேகரித்துக் கொண்டிருந்தாள். என் மீதான பயத்தில் எதற்கும் தயார் என கவனமாய் இருந்தாள்.

அப்பாவும் முடிந்தவரை முயற்சிகள் செய்தார். பார்க்க பேருரு என இருந்தாலும் குழந்தையிடம் அவர் இளகினார். அவளை வருத்த அவர் மனம் வாடினார். அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட நான் வசியப் படுத்திய நேரம்பார்த்து அவர் நிலைமையின் கட்டுக்களைத் தளர்த்தி விட்டார். மூக்கறுபட்ட ஆத்திரத்தில் எனக்கு அவரைக் கொன்னுட்டா என்ன என்றிருந்தது. குழந்தைக்கு டிப்தீரியா இருக்கலாம் என்று பெரியவருக்கு பயமும் இருந்தது. ஆகவே அவன் என்னை மேலும் அனுமதிக்க வேண்டியிருந்தது. இந்த உணர்ச்சிப் பிரளயத்தில் அவருக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. பயம் ஒருபுறம். குழப்பம் வேறு… அம்மாக்காரி மேலும் கீழுமாய் நடந்து கொண்டிருந்தாள்.

‘ ‘மடில, முன்பக்கமாக் குழந்தையை வெச்சிக்கோங்க ‘ ‘ நான் அப்பாவை அதட்டினேன். ‘ ‘அவ ரெண்டு கையவும் இறுக்கிக்கிடணும்… ‘ ‘

குழந்தை திடாரென்று அலறினாள். ‘ ‘வேணாம்ப்பா. வலிக்குது. அவரைப் போகச் சொல்லிருங்க சொல்ட்டேன்… ‘ ‘ ஆவேச ஊளை. ‘ ‘நிறுத்துங்கப்பா. போதும். என்னை சாவடிச்சிறாதீங்க… ‘ ‘

‘ ‘அவளால இதைத் தாள முடியுமா டாக்டர் ? ‘ ‘ என்றாள் அம்மா.

‘ ‘நீ வேணா வெளில போய் இரு… ‘ ‘ பெரியவர் சம்சாரத்திரம் சொன்னார். ‘ ‘என்ன நீ டிப்தீரியால குழந்தை சாவட்டும்ன்றியா ? ‘ ‘

‘ ‘சரி சரி. குழந்தையைப் பிடிங்க ‘ ‘ என்றேன் நான்.

மரக் கரண்டி ஒன்றை அவள் பல்லில் கொடுக்க வேண்டும். குழந்தையின் தலையை இடது கையால் பற்றிக் கொண்டேன். பல்லை இ-ற்-றுக மூடிக் கொண்டு பிடிவாதமாய் மறுப்புச் சொன்னாள் குழந்தை. நானும் ஆத்திரமாகி யிருந்தேன். அதுவும் ஒரு குழந்தையிடம்! – கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்னால். உள்ளே பார்க்கிற தோதுக்கு வாயை விரிக்க முயன்றேன். கடைவாய்ப் பால்லுக்கும் பின்னால், வாயின் குழி ஆரம்பம் வரை மரக் கரண்டியைச் செலுத்தி விட்ட போது, சட்டென்று ஒரே தரம் குழந்தை வாயைத் திறந்து… நான் எதையும் கவனிக்குமுன், மூடிக்கொண்டது. கரண்டியை ஒரே கடி! குச்சி குச்சியாய்த்தான் எடுக்க வேண்டியதாகி விட்டது.

‘ ‘ஏன்டி உனக்கு வெக்கமே கிடையாதா ? ‘ ‘ அம்மாக்காரி கத்தினாள். ‘ ‘ஒரு டாக்டர்கிட்ட இப்பிடி நடந்துக்கறியே… ‘ ‘

‘ ‘கூர்மை இல்லாமல் இன்னொரு கரண்டி கொண்ட்டு வாங்க ‘ ‘ என்றேன் அம்மாவிடம். ‘ ‘நான் பார்த்தே ஆகணும்! ‘ ‘ குழந்தை வாயில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நாக்கில் காயம் பட்டிருக்கக் கூடும். வெறியான அலறல். அப்போது போய்விட்டு நான் சாவகாசமாக வந்து பார்த்திருக்கலாம். அது நல்ல முடிவுதான். ஆனால் இப்பிடி கவனியாமல் அசட்டையா விட்டு விட்டதினால் குறைந்தது ரெண்டு பசங்களாவது இறந்து போயிருக்கும். அதுதவிர, நானுங்கூட இப்ப பார்க்கிறதானால் பார்ப்பம், இல்லாட்டிப் போனால் விடு கழுதைய… என்கிறாப்போல எரிச்சலாகிப் போனேன். எப்பாடு பட்டானும் அதன் வாயைத் திறந்து பார்ப்பேன்! சிந்திக்கிற கட்டம்லாம் போயிற்று. நான் ஆக்ரோஷமாகி விட்டேன். அதை நார் நாராக் கிழிச்சிற உள்ளில் குமுறியது. அவளைப் பணிய வைப்பதில் திருப்தி. என் முகமே ஆத்திரத்தில் வீங்கி விட்டது.

குழந்தைகள் என்கிற முட்டாச் சென்மங்களை அதுங்களோட அசட்டுத்தனங்கள்லேர்ந்து காப்பாத்தியாகணும். நாம பொதுவா இப்பிடிச் சொல்லிக் கொள்கிறோம். ஆ மத்தவங்களையும் அதுங்ககிட்டேயிருந்து காப்பாத்தியே தீரணும்! ஆதுகூட ஒரு சமூக சேவைதான்!… குருட்டுத்தனமான கோபம் என்னுள். கொதித்துக் கிடந்தது மூளை. நாடி நரம்பெல்லாம் அதிர்ந்தது. சீண்டப்பட்ட ஆத்திரம். கடைசிவரை ஆடித்தான் அது அடங்கும்…

கட்டக் கடேசியான ஆங்காரப் பாய்ச்சல்! குழந்தையின் கழுத்தையும் தாடைகளையும் அழுத்திக் கொண்டேன். கனமான வெள்ளிக் கரண்டி. பற்களுக்குள் தொண்டைவரை செலுத்தினேன். ஹா அவள் உமிழ்நீர்ப் பைகள் இரண்டும் சதை மூடிக் கிடந்தன. அந்த ரகசியத்தை என்னிடம் இருந்து மறைக்க அவள் தைரியமாய்ப் போராடி யிருக்கிறாள். இந்த மூணு நாளாய், இந்த விபரீதம் சம்பவிக்கும்… நான் அழைக்கப் படுவேன் – அவளுக்குத் தெரியும். ஆனால் தாய் தந்தையிடம் கூட அவள் காட்டிக் கொள்ளவில்லை.

மெதில்டா இப்போது நிஜமாகவே ஆவேசமாகி யிருந்தாள். இதுநேரம் வரை தன்னைக் காத்துக் கொள்கிறவளாய் இருந்தவள், அடித்து நொறுக்க வேகங் கொண்டாள். அப்பாவின் மடியில் இருந்து எகிறி என்னை நோக்கிப் பாய்ந்தாள். தோல்வியைத் தாள முடியவில்லை அவளால். கண்ணீர் பெருகி அவள் பார்வையை மறைத்தது.

- The use of force – short story பி William Carlos William/ அமெரிக்க
( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )
தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன் (பெப்ரவரி 2006)
 

தொடர்புடைய சிறுகதைகள்
வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேரு பாணி குர்தா ஜிப்பா. 'ஏய்' என முதுகு பின்னால் கேட்ட எழுச்சி மிக்க குரல் ஒன்றே போதும் அவனை அடையாளம் ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகம் இத்தனை சந்தோஷமானதா என அவளுக்கு ஆச்சரியமாய், திகைப்பாய் இருந்தது. உஷாவின் மறுபெயர் நெருப்பு அல்லவா... சற்று தள்ளி ஆண்களை நிறுத்தி, நிறுத்தி அவள் பேசுவதான உணர்வலைகளால் ஆண்கள் அவள் அருகில் தாக்கப்பட்டார்கள். அதனால் அவளைவிட- அவர்கள் அவளிடம் சிறு ...
மேலும் கதையை படிக்க...
நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள். புதிதாய் முளைத்தவை. சில இன்னும் முடிவடையாதவை. தாண்டி வயல்கள். சாலையின் இருமருங்கும் மரங்கள். மூப்பாகிப்போன, தாழத் தொங்கும் அதன் கிளைகள். ...
மேலும் கதையை படிக்க...
அப்போது பிச்சைக்கனிக்கு ஆறேழு வயதிருக்கும். பாட்டையா இறந்துபோய் வாசல் நிரம்பி வழிந்தது. பெஞ்சுகளில் திண்ணைகளில் மரத்தடியில் என சாதிசனம் நண்டு சிண்டு பரிவாரங்களுடன் திரண்டிருந்ததில் அவனுக்கு ஒரே கிறுகிறுப்பு. ஆனந்த போதை. மூக்கை உறிஞ்சியபடி பரபரப்புடன் சுற்றி வந்தான். குமாரசாமியைக் குனியச்சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும், தேவாலயத்தை நோக்கி மேடேறும் தெரு நெடுகிலும், கையால் செய்த சவப்பெட்டிகளின் வரிசை. ...
மேலும் கதையை படிக்க...
வித்யாசாகரின் ரசிகை
ஆண்மேகம் பெண்மேகம்
கல்லறைக்குச் செல்லும் வழி
குடும்பப் புகைப்படம்
சமுத்திர ஆண்டவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)