கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 10,768 
 

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ? சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்த்போது.

உண்மையில் சந்திராதான் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.

“பாலா.. நீதானே.. ஸ்ஸ்.. நீங்க”

என் கணிசமான தொந்தி.. மூக்குக் கண்ணாடி.. முன் வழுக்கை.. காதோரம் மட்டுமின்றி பரவலாகத் தெரிந்த நரை.. இவை மீறிய கண்டுபிடிப்பு!

“சந்.. சந்திரா” என்றேன் ஒரு திடுக்கிடலுடன்.

பெண்கள் வயதாவதை ஒப்புக் கொள்வதில்லை. ஜோடனைகள் தவிர்த்து ஒப்பனையின்றி நின்ற சந்திராவிடம் இன்னமும் பழைய வசீகரச் சிரிப்பு மிச்சமிருந்தது.

“பாலா..” என்றாள் மீண்டும் உரிமையாய்.

குரல் நெகிழ்ந்திருந்தது. கண்களில் சட்டென்று ஈரம் பூத்துக் கொண்டது. கூட்டத்தில் தொலைந்த சிறுமி உரியவர்களில் ஒருவனை இனங்கண்ட பரவசம், நிம்மதி போல் முகத் தெளிவு.

“ஏதாவது சாப்பிடலாமா”

“எனக்குப் பசிக்கலே” என்றவன் சுதாரித்தேன்.

அழைப்பு பசிக்காக அல்ல. அமர்ந்து பேச ஓரிடம்.

“வா.. போலாம்” என்றேன்.

கை தன்னிச்சையாய் உயர்ந்து சட்டைப்பையைத் தொட்டுக் கொண்டது. அவசியம் இல்லைதான். கூடுதலான தொகைதான் உள் பாக்கட்டில். மூவாயிரம். அதை மீறியா சாப்பிட்டு விடப் போகிறோம்.

“என்ன வேணும்”

“கூல் ட்ரிங்க் ஏதாச்சும்”

சர்வர் நகர்ந்து போக என்னைப் பார்த்தாள்.

அவள் அளவு என்னுள் பரவச அலைகள் இல்லை. புரிந்திருக்க வேண்டும்.

“பாலா.. நீ மாறிட்டே”

“நீயும்தான். கொஞ்சம் பருமன்.. முகங்கூட லேசா”

“ப்ச்.. நான் அதைச் சொல்லலே.. மனசுல”

மெளனமானேன்.

“பாலா.. உனக்கு கல்யாணமாயிடுச்சா?”

“ம்..” என்றேன் தலை கவிழ்ந்து.

“ஓ”

என்னென்னவோ நினைவுகள் அவளுக்குள் ஓடியிருக்க வேண்டும். மிகப் பெரிய விஷயத்தை ஜீரணித்தவள் போல பெருமூச்சு விட்டாள்.

“எத்தனை பசங்க?”

“ஒரு பையன். சந்திரன்னு பேரு”

சர்வர் கொண்டு வந்து வைத்த பாட்டில்களை வெறித்தாள்.

“பாலா. நான் இப்ப டெல்லில இல்லை. திரும்ப வந்துட்டேன். பெரியப்பாவும் தவறிட்டார்”

“அடடா”

“கணேசன் என்னை விரட்டிட்டான். ப்ச்.. போன்னு ரொம்ப நாகரிகமா”

கூல்ட்ரிங்க் குடிக்க மனதின்றி ஸ்ட்ராவை உருட்டினேன்.

“உன் ஞாபகம்தான் வந்தது.. பாலா”

சந்திரா.. என்னைக் கொல்லாதே என்று கத்த வேண்டும் போலிருந்தது.

“எம்பேர்லதானே தப்பு.. பாலா”

குரல் பிசிறியது. தன்னிரக்கம் வழிந்தோடக் கேட்டாள்.

“இல்லை சந்திரா. எனக்கு அதிர்ஷ்டம் இல்லை”

“ப்ச்.. பொய் சொல்லாதே பாலா. நீ இப்ப வெல் ஸெட்டில்டு”

அவள் என்னை உற்றுப் பார்த்தது உறுத்தியது.

குற்றம் சாட்டும் பார்வை. சரியாக பத்து வருடங்களுக்கு முன் அவள் பார்வையில் என்மீது காதல்தான் வழிந்திருக்கும்.

“வேண்டாம் பாலா. பிளீஸ்”

“ஊஹம். வேணும். இன்னைக்கே. இப்பவே..”

“பாலா..”

“சரி. அவ்வளவுதானே. உன்னை நான் வற்புறுத்தவே இல்லை.”

“கோபமா?”

“இல்லே. ரொம்ப சந்தோஷம். ஒண்ணு தெரியுமா.. நீ மறுக்கறது இதோட எட்டாவது முறை. உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை. உன்னைப் பொறுத்தவரை நான் கெட்டவன். அதானே?”

“பாலா..”

“ப்ளீஸ் போ. எனக்குத் தனிமை வேணும். வீட்டுலயும் யாரும் இல்லை. நிம்மதியா இருக்கேன். போ..போயிடு.”

“அம்மணி வருவாளா?”

“அது எதுக்கு?”

“சொல்லேன். வருவாளா?”

“வர மாட்டா. மூணு நாளைக்கு அவளுக்கு லீவு கொடுத்தாச்சு.”

“சரி. வா. என்ன பார்க்கிறே. நாதானே வேணும். வா. எடுத்துக்க.”

“இப்படி இல்லை. முழு மனசா. பிச்சை போட வேணாம்.”

“”இடியட். முழு மனசா சொல்றேன். வா. ஐ பிலீவ் யூ.

“வே..ணாம்.”

என் மறுப்பு உதாசீனப்பட்டது. ஏனெனில் அது பொய்யானது. அவளின் அன்பு நிதர்சனமாய் வென்றது.

“இப்ப சொல்லு. எனக்கா உன்மேல நம்பிக்கை இல்லை?”

தலை கவிழ்ந்தேன். அன்றும். இன்றும்.

“பாலா.. என்ன யோசிக்கறே.. என்னை ஏன் பார்த்தோம்னு இருக்கா”

“இல்ல.. சந்திரா. நான் ஒரு கோழை. என்னால யாருக்கும் சந்தோஷமே இல்லை”

இம்முறை என் குரலில் ஒப்பனை தொலைந்து நிஜம் பீரிட்டது.

“அழகான மனைவி.. மகன்.. அப்புறம் என்ன பாலா”

என் வசதிகளை விட அவள் இழப்புகளின் கனம் குரலில் தொனித்தது.

“இப்ப எங்கே இருக்கே சந்திரா”

“ப்ச்.. என்ன செய்யிறதுன்னே புரியலே பாலா. மறுபடி டெல்லிக்கே போயிரலாமான்னு. அங்கே எனக்கு உதவ யாராவது இருப்பாங்களான்னு..ஆனா”

“என்ன சந்திரா”

“ஒண்ணுமில்லே பாலா. என்னவோ தெரியலே. உன்னை மறுபடி பார்த்தப்ப எனக்கு பழைய திடம் மனசுல வந்த மாதிரி.. சில சமயங்களில் வாழ்க்கை என்னை சந்தோஷமாவும் வச்சிருக்கு. இன்றைய சோகம் மட்டுமே சாஸ்வதம் இல்லை” எழுந்து கொண்டாள்.

“இதோ வரேன் பாலா. ஒரே நிமிஷம்”

வாஷ்பேசினுக்குப் போனாள். மேஜை மீதிருந்த கைப்பையை அவள் கவனிக்கிறாளா என்று நோட்டம் விட்டு அவசரமாய்த் திறந்தேன்.

‘டெல்லிக்கே போலாம்னு’

சந்திரா. மனசுக்குள் கேவல் கேட்டது.

திரும்பி வந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள். பளீரெனச் சிரித்தாள்.

“நீதான் கூல்ட்ரிங்க்ஸ¤க்கு பணம் தரணும். உனக்கு செலவு வைக்கிறேன்”

“என்னது சந்திரா.. ·ஆப்டர் ஆல்”

வெளியே வந்தோம்.

“மறுபடி எப்ப வருவே”

“வர மாட்டேன்.. பாலா”

திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்.

“பயப்படாதே பாலா. நான் வாழப் போறேன். எனக்கு ஏதாச்சும் ஒரு நல்ல வழி கிடைக்காமலா போயிடும். பாலா.. மறுபடியும் நாம சந்திக்கிறவரை என்னை ஞாபகம் வச்சிருப்பியா?”

கடைசி வரியில் தேம்பி சுதாரித்தாள்.

“வரட்டுமா”

திரும்பியே பார்க்காமல் போய்விட்டாள்.

வத்சலா என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.

“அடுத்த வாரம் நம்ம மேரேஜ் டேக்கு ஏதோ வாங்கித் தந்து அசத்தப் போறேன்னு கிளம்பிப் போனீங்க. வெறுங்கையா திரும்பி வரீங்க”

“அடுத்த வாரம் தானே. இன்னும் ஆறு நாள் இருக்கே” என்றேன் லேசான சிரிப்புடன்.

– ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *