கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 9,830 
 

ஊரில் கெத் கெத்தென்று தண்ணீர் தத்தளித்துக் கிடந்த கண்மாயைப் போனவருசம் வந்தவேளை கண்டிருக்கிறாள். கண்மாயின் ஒரு அத்தத்திலிருந்து இன்னொரு அத்தத்துக்கு முங்கு நீச்சல் போட்டு நீர்ப்பாம்பு சேர்ந்ததுபோல், மேகங்களினூடாக ஒரே நீச்சலில் விமானத்தில் தமிழ்நாட்டை எட்டிப்பிடித்துவிட்டாள் நிலா. வசிப்பது அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் குளிர் மூலை; வந்தடைந்தது வெப்பப் பிரதேசத்தின் தென்கோடி. சென்னைப் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இரண்டு வருடம் முன்பு வரை பகலும் இரவும் மாறி மாறி மொத்தமாய் 28 மணிநேரப் பயணம். இடைத்தங்கல், விமான மாறுதல் ஏதுமில்லாமல் தொயந்தொடியாய் விருட்டென்று வந்தடைகிற சூறாவளிப்பயணம் இன்று.

பயணிகள் கீழிறங்க, மேலேற விமான நிலையத்தில் இயக்கப்படும் ‘ரேம்கள்’ பதின்மத்துக்குத் தோதில்லை. மான்குட்டி துள்ளித் துள்ளித் தவ்வி ஓடி தூரத்தைக் கடப்பதுபோல், படிக்கட்டுகளில் தாவித் தாவி இறங்கி வந்தாள். சிறப்பு அனுமதி பெற்று உள்ளே வந்திருந்த முருகர் தாத்தா குதித்துக் குதித்துப் படியிறங்கி வந்த பேத்தியைக் கண்டதும், “இதுதான் சரி” என்று கைகளைப் பிடித்துக் கொண்டார்.

முருகர் போல உண்டுமா? எவரையும் கேட்டுப் பார்க்கலாம், ஆனால் கேட்கக் கூடாது. அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்ற முருகர் தாத்தா பற்றி, கட்டிக்கொண்டு வந்த பாட்டியைக் கேட்டால், உண்மைகள் கந்தலும் கதுக்கலுமாய் வெளிவரும். அத்தனையும் கதைகளல்ல; உண்மைகள். பாட்டி சொல்லச் சொல்ல கடந்த சிறுபருவம் முதலாக கேட்டுக் கேட்டுச் சேகரித்த தானியக் குதிர் நெஞ்சில் நிரம்பி நிற்கிறது.

“கருக்கிருட்டு மழையானாலும் – மந்தி
கொப்பிழக்கப் பாயாது”

என்ற சொலவம் அரசுப் பணியாளர்களுக்குரியதோ இல்லையோ, தாத்தாவுக்கு அச்சொட்டாய்ப் பொருந்தும். அதன் அர்த்தத்தில் மூழ்கி நனைந்தால் அப்போது எழும் புன்னகை, துளசிப்பாட்டியின் இதழ்களில் பெரு வெள்ளம் போல் மீறிப்பாயும்.

அரசுப்பணி என்னும் கொப்பைப் பிடித்துக்கொண்டே, இன்னொரு வருமானம் என்கிற கொப்பைப் பிடிக்கத் தாவும் லாகவம் முருகரின் வாழ்வாக மாறிற்று. இத்தனை ஆண்டுக்கால அரசுப் பணியும், இன்னொரு சேவையில் கழிந்து அவர்களின் சொத்துச் சேமிப்புக் கணக்காக மாத்திரமே எகிறிடவில்லை: மகழ்ச்சிக் களியின் உச்சமாகவும் ஆகியிருக்கிறது. மேலிருப்போர் என்றால் அலுவலர்கள் முதல் அமைச்சர் வரை அளக்க வேண்டியதை அளந்து மேற்பதவிக்கு உயருதல். அப்படிக் கோத்துக்கொண்ட பிற்பாடு மேட்டிமைக்கு வந்த வாழ்வில், அவருடன் உடனுறையும் ஆத்மா அறியாததொரு பூர்விகம் உண்டுமா?

அரசு அலுவலரிலிருந்து ஓய்வடைந்த முருகர் தாத்தாவை விவசாயம் கைப்பற்றிக் கொண்டது. விவசாயத்தின் கடைசி மூச்சு தாத்தா மடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. காட்டுவேலை, களத்துவேலை, களையெடுப்பு, கதிரறுப்பு என்று விவசாய வேலைக்கு ஆட்களை அழைத்து வர பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு கிலோ மீட்டர் ஓடுகிறார். கல்யாணம், பூப்புனித நீராட்டு, குழந்தை பிறப்பு, மருத்துவமனைக்கு என்று காரில் தனிப் பயணங்களுண்டு.

“நா ஒன்னைய மாதிரித்தான்’மா. தினமும் ரெண்டு கிலோ மீட்டர் ஓடறேன்.”

அப்பா அம்மா, ‘ரேமில்’ இறங்கி வரும்வரை இவர்கள் காத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் பிறந்தவளுக்கு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சூட்டிய பெயர் நிலா. நீளநீளமான தமிழ்ப் பெயர்கள் உச்சரிக்க அமெரிக்கர்களுக்கு நாக்குப் புரள மறுத்தது. அமெரிக்க ஆங்கிலத்தில் இப்பெயர்களை எழுதத் தவிதாயப்பட்டார்கள். ஒருமொழிக்கும் மற்றொரு மொழிக்கும் எழுத்து, உச்சரிப்பு, ஒலி இலக்கணம், சொல்லமைப்பு மாறுபாடாய், ‘அத்துவானத் தொலைவில்’ இருப்பது உண்மை.

சிப்பிக்குள் அடங்கிய முத்துப்போல் ‘நிலா’.

இளந்தும்பி ரயிலில் ஏறியவுடன் குண்டு குண்டுக் கண்களுக்குப் பட்டதெல்லாம் புதுசுகள்; பார்த்ததெல்லாம் அதிசயங்கள். சொந்த மண்ணுக்குள் கால் வைக்கிறபோது எதிர்ப்படும் காட்சிகள் மினுக்கட்டாம் பூச்சியைப்போல வித்தை காட்டும். மல்லுவேட்டியையும், ஜரிகைப் புடவையையும் தமிழ்நாட்டில் நிலா எதிர்பார்த்தாள்; முழங்கால் வரை அணியும் ஷார்ட்ஸ், டி ஷர்ட்ஸ், ஜீன்ஸ், லேசில் டவுசர், குட்டைப்பாவாடைத் தோரணையில் உடுத்திய இளவட்டப் பொடிசுகளைக் கண்டாள். சென்னை விமானத்தினின்றும் இறங்கி வெளிப்பட்ட அம்மாவின் புடவையில் தமிழகத்தைக் கண்டாள்.

சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது அதிவிரைவு ரயில். ஒவ்வொரு நிலையத்திலும் இரவு ரயில் பெட்டிகளில் பயணியரைவிட, மற்றொரு கூட்டம் முண்டியடித்து அலைமோதியபடி ஏறியது; ஆண்,பெண் வித்தியாசமில்லாமல் எல்லோர் கையிலும் இரண்டிரண்டு குடங்கள். மத்திய சர்க்காருக்குக் கீழ் இயங்கும் ரயில்வே போலீசாரின் தொண்டைக்குழியிலிருந்து சிறு முணுகல்கூடப் பிறக்கவில்லை.

“ஏறுறவங்களுக்குத் தொந்தரவு தராமப் பாத்துக்குக்கோங்க” வார்த்தைகளால் நழுவிக் கொண்டார்கள்.

ரயில்பெட்டியின் இருபக்கமும் உள்ள கழிப்பறைகளில் குழாயைத் திருகி, குடங்களை நிரப்பி, ‘சர் சர்’ரென்று கீழே அனுப்புகிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் கைமாற்றிக் கீழிறக்க, பல வண்ணக் குடங்களால் நிறைந்தது நடைமேடை. முதல் வகுப்புப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகளின் கதவுகள் சட்டதிட்டங்களால் இறுக்கப்பட்டிருந்தன. தண்ணீரில் ஏற்றி வைத்த தீபங்களாய் ஒவ்வொரு குடமும் தளதளப்பாய்த் தெரிகிறது. தலையில் ஒன்று இடுப்பில் ஒன்று எனப் பெண்கள் இந்தத் தீபங்களை வீடுகளில் ஏற்றி வைக்க எடுத்துப் போகிறார்கள்.

குட்டித்தும்பி நிலா கேட்டது “தாத்தா, இவங்கள்ளாம் யாரு?”

“அவங்களுக்குத் தண்ணிக்கஷ்டம்” ஒத்தை வார்த்தையில் முடித்துக்கொண்டார் முருகர் தாத்தா. தண்ணீர் எங்கெங்கு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். ரயில் இன்ஜின் கூடத் தப்பவில்லை. இன்ஜினிலிருந்து ஓட்டுநரும், உதவியாளரும் எரிச்சல் இல்லாமல் காருண்யவான்களாய் தரிசனம் தருவதை ஒவ்வொரு நிலையத்திலும் பிசகாமல் கவனித்தாள்.

“எங்க நாட்டுல இப்டியெல்லாம் இல்லயே.”

சொல்லித் தேற்ற தாத்தாவின் கண்களில் முழிப்பில்லை; குறட்டை தொடங்கியிருந்தது. ஒவ்வொரு நிலையத்திலும் பார்த்த காட்சி, தண்ணிக்கு அலையாய் அலையும் மக்கள்; வேக வேகமாய்க் குழாய்களிலிருந்து தொழிற்கூடங்களுக்கு உறிஞ்சியெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – மாறி மாறிக் கண்களில் வந்தார்கள். இதுவரை கண்டிராத ஏதொன்றையும் புதுசாகக் காணும் சிறுசுக்கு இது ஒரு தரிசனம்தான். இரவு முழுக்கத் தூக்கம் தொலைத்தது குட்டித்தும்பி. ஓயாத அசைவுகளால் அசதி கூடியிருந்தும் கண்கள் கோக்கவில்லை.

ரயிலிலிருந்து இறங்கி பிரதான சாலையிலிருந்து ஊருக்குச் செல்லும் புறவழிச் சாலையில் கார் ஊர்ந்தது. கரிசலின் அனல் கொழுந்துகள் கார்மீது தாக்குதல் தொடுத்தபோது காலை 11 மணி. கண்ணாடியைக் கீறிக்கொண்டு, உள்ளே புகமுடியாதிருந்தும் முற்றுகையைத் தளர்த்துவதாயில்லை. இப்படியான வெயில் வேண்டியும் தேடியும் சூரியக் குளியலுக்காகவும் அமெரிக்கர்கள் உடுத்தும் உடை குறைவுபட்டுக் கொண்டுபோகிறது. வெப்பத்தைத் தீண்டுவதைப் பேரின்பமாகக் கருதுகின்றனர்.

கிராமத்தை நெருங்குகையில் மேற்குத் திசையில் இடது பக்கம் ஒரு கூடாரம்: தென்னங்கீற்று வேய்ந்த கூடாரத்தின் மேல் குடை பிடித்திருந்தது பெருத்த வேம்பு. வெயிலடிப்புக்கும் மழையடிப்புக்கும் தாக்குப்பிடிக்க, கெட்டியான தென்னங்கிடுக்குகளால் வேயப்பட்டிருந்தது ‘உக்களம்.’ தீக்கொழுந்து வீசியடிக்கும் கோடையில் மழைக்கு அதிகாரமில்லை.

“ரொம்ப நாளா ஆகாயம் ஈர வார்த்தை விடாம, தாகத்துல விக்கி நிக்கிது பூமி” என்றார் முருகர் தாத்தா.

“கொஞ்சம் நிறுத்தப்பா” உக்களக் கூடாரத்தில் தாத்தா இறங்கினார்.

“நீ எங்க எறங்கப் பாக்குற?” அம்மா அவளை இருக்கையில் இழுத்துப் பொத்திக்கொண்டாள்.

வைகாசி, ஆனி மாதங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடியதாய் வந்து போகின்றன. வெப்பக் காற்றும், வாடையும் இல்லாத இதமான மாதங்களின் வருகைக்கு மண் காத்திருக்கிறது. ஆயினும் சித்திரை என்ற கொடுங்கனவின் பிரவேசம் இன்னும் நீடித்து, பருவமாறுதலைக் கர்ப்பமுற்ற அந்த மாதங்கள் கருக்கலைப்புக்கு உள்ளாகியதுபோலத் திணறுகின்றன.

“இது என்னா சித்திர மாசமாட்டம் இப்புடி வெளுக்குது? கொஞ்சமும் வெக்கை தணியக் காணோம்” – அலுத்துக்கொண்டாள் ஏ.சி-யிலிருந்த நிலாவைப் பெற்றவள்.

“நா ஏன் அங்க போகக்கூடாது?”

“அங்க போகக்கூடாது.”

“அவங்க என்ன செய்றாங்க?”

“மிளகாய் உடைக்கிறாங்க. விதை வத்தல்னு பேரு, உடைச்சி வெதையை வெளியே எடுப்பாங்க. கூலி மூட்டைக்கு 200 ரூபா.”

“ஒரு ஆளு உடைச்சிருமா?”

“ஒரு ஆளும் உடைக்கும். கூட்டாயும் உடைப்பாங்க. நிமிந்த ஆளு ஒரு மூட்டையைத் தனியே உடைச்சி வீசிருவா.”

வெப்பக் கொடுமை குறையாத கோடையில் பெண்கள் மிளகாய் வத்தல் உடைக்கிறார்கள். வத்தல் உடைக்கும் பெண்கள் கைகளில் உறை இல்லை. முகத்தில் ‘வலை’ மாட்டிக் கொள்ளவில்லை. தலையைச் சுற்றி ‘வண்டு’ கட்டிக்கொள்ளக் காணோம். உடலுறுப்புக்களில் தாவும் காரநெடியைத் தடுக்கும் எந்தத் தடுப்புக்கருவிகளும் அவர்கள் கைவசம் வைத்தில்லை.

“ஏன் அவங்க இதெல்லாம் போட்டுக்கீறலை?”

“கொடுத்தாத்தான போட்டுக் கீற”

“கை எரியாதா?”

“ஏன்டி, ஒனக்கெதுக்கு இத்தனை விசாரிப்பு?” என்பதுபோல் அம்மா எரிச்ச லுற்றாள்; அந்தப் பொங்குதலை நிலா கண்ணுற்றதும் அடங்கி அமராவதியானாள்.

மிளகாய் விதைகள் கைகளில் தெரிக்கின்றன. கை எரியும்; காற்றில் பறந்து கண்களில் விழும். சில பொழுதுகளில் கண்ணுக்குள்ளே விழுந்து கதகதவென்று கண்கள் காந்தல் கொடுக்கும்.

வெள்ளன வந்து வத்தல் உடைக்கிற வர்கள் வெள்ளனப் போகலாம் என்ற விதி ‘உக்களத்தில்’ செயற்படவில்லை. அஞ்சாறு தூத்தல் போட்டதுபோல் முற்றம் தெளித்துவிட்டு, பனைநார்த் துடைப்பம் கொண்டு பர, பரவென்று பெருக்கிவிட்டு, இடுப்பில் சேலையைச் செருகி ‘உக்களம்’ வந்தால் சூரியன் எண்ணற்ற கரங்களைக் கூப்பி இரவுக்கு வழிவிட்ட பின் தான் அவர்கள் அங்கிருந்து விலகமுடியும். வேலை மும்மரத்தில் பரபரக்கும் பகல்கள் அவர்களுக்குச் சுருக்காய் முடிவதில்லை; அலுத்துத் தூங்கும் இரவுகள் சுருக்காய் முடிந்துபோகின்றன. நேரக்கணக்கு இல்லை.

மூட்டைக் கணக்குதான். கேட்டுத் தெரிந்து கொண்டபோது, மூங்கில் குருத்துப் போல் மிளிர்ந்த சிறு பெண்ணின் உள்மனசில் தாளமாட்டாத வெப்பம் மூண்டது.

“விதைக்காக இந்தவட்டம் அஞ்சு மூட்டை உடைக்கப்போட்டிருக்கு. அதான் பாக்கப்போனேன்.”

சொல்லிக்கொண்டே திரும்பி வந்த தாத்தா காரில் ஏறியதும், நிலா கேட்டாள்.

“ஏந் தாத்தா, நம்ம பாட்டி இங்க வரல?”

சட்டென்று தாத்தா எக்களித்தார்.

“அம்மாடியோ, ஒம் பாட்டி இந்த வேலை செஞ்சா, பெறகு அவளுக்கு வைத்தியம் பாக்கிறது யாரு?”

அறியாத்தனமாய் இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்று அம்மா வாயில் விரலை வைத்து ‘உஷ்’ என்றாள். அமெரிக்கச் சமுதாயத்தில், குடும்பப் பெரியவர்கள் முதல் கல்விச்சாலை ஆசிரியர் வரை, குழந்தைகளின் விசாரிப்பை ஒத்தை அதட்டல் போட்டு நிறுத்தவியலாது. அமெரிக்க மண்ணில் இருக்கிற வரை அமெரிக்கர்; இங்கு இந்த மண்ணில் கால்வைத்ததும் ஊர்க்காரர்.

பதினான்கு வயதின் கண்களுக்குள் உலக விசாரிப்பு அடங்கியிருந்ததைப் பெற்றவர்கள் கண்ணுற்றனர். கேள்விகளால் கிலுகிலுப்பை உலுக்கியபடி இயங்கும் விழிகளைக் கண்டனர். அடிக்கடி அவளை நோக்கி எச்சரிக்கைச் சாட்டை சொடுக்கிக்கொண்டு வர வேண்டியதாயிற்று.

“பெரிய மனுசி மாதிரிப் பேசிட்டு வராதே” அம்மா அடக்கினாள்.

முந்தின ஆண்டு நிலா வந்தபோது கொடுவேனிலின் வெக்கை வாட்டி எடுத்த கிராமம். அது அவளோட கிராமம்தான். இன்றைக்குத் தாத்தா உறவுகளுடன் இணைந்து புதிய உலகமாய் ஒரு மாயம் செய்திருந்தார். அலங்காரமற்ற ஒரு எளிய பெண்ணாகத் தோற்றமளித்த ஊர் இந்நாளில் நம்பமுடியாத மணக்கோல ராணியாய் மாறியிருந்தது.

தெருக்கள் ‘வாழைத்தண்டு’ டியூப்லைட் வரிசையில் பளபளத்தன. கண்மாய்க் கரையின் கீழாக ஊர்ச்சாலை. கண்மாய்க்கரை மரங்களின் தூர் முதல் உச்சிவரை ‘சீரியல் லைட்’டுகள் மின்னின. ‘இன்னைக்கு ஒரு நேரம் ஒங்களுக்குப் போட்டியா இருந்திட்டுப் போறம்’ என வானத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தன. பல வண்ணங்களில் கண் சிமிட்டுபவை முன், ஒற்றை வெள்ளை நிறத்து நட்சத்திரங்கள் தோற்றுப்போயின.

அவள் முன்னால் ஒரு மாயாஜால உலகத்தைத் திறந்து காண்பிக்கிறார் தாத்தா. விழா வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்வையிட முருகர் தாத்தா புறப்பட்டபோது நிலாவையும் கூப்பிட்டார்.

“அவ எதுக்கு?” பாட்டிக்குத் தீப்பற்றிக் கொண்டது.

நாளை நடக்கும் விழாவில் அவளை எல்லோரும் கண்டுகொள்ளப் போகிறார்கள். அதற்கு முன் இப்போதே போய் எல்லாருக்கும் காட்டவேண்டுமா? கூட்டிக் கொண்டு போய் பேத்தியைக் காட்டிப் பெருமை பீத்தப் போகிறார் கூறுகெட்ட ஆள் என்று பாட்டிக்குப் பட்டது.

“எம் பேத்தி அமெரிக்காவில இருந்து வந்திருக்கா, வந்திருக்கான்னு ஊர் முழுக்கப் போய்ச் சொல்லணுமா?”

தாத்தா சட்டென்று தாவினார்.

“நா ஒன்னையக் கூப்பிட்ட மாதிரில்ல சடைச்சிக்கிறே?”

அதற்கு மேல் எதுவும் பேசத் தோதில்லை. தாம்பத்திய வாழ்வில் கால் வைத்த 45 வருசமாய்க் கண்டு வருகிறாள். ஒரு பெண் கோபம் கொள்ளவோ நியாயத்தை வெளிப்படுத்தவோ எந்த ஆண் சகித்துக் கொள்வான்? நூறு நாக்குள்ள ஒரு ஆளோடு, ஒரு நாக்குக்காரி சண்டை போட ஏலுமா? மனசுக்குள் அடங்கி விட்டாள்.

நிலா தாத்தாவின் கைப்பிடித்துத் துள்ளாட்டம் போட்டு நடந்தாள். நேற்றைய வருகையின்போது நேர்கொண்ட காட்சிகளால் அலைப்புற்றிருந்த மனசு, இன்று அவள் சம்பந்தமான நிகழ்வுக்கு இணக்கமாகியிருந்தது. மெழுகித் துடைக்கப்பட்ட பழையதன் மேல் புதிய களிதுள்ளும் விரிப்புப் போர்த்தப்பட்டது. முருகர் தாத்தாவின் விசாரிப்புகளுக்குப் பதில் இல்லாமல், அவளைப் பற்றிய விசாரிப்புகள் எதிர்ப்பட்ட முகங்களில் நிறைந்திருந்தன.

“ஒங்க பேத்தியாளா… இப்பத்தான் கண்ணுலயே காட்டுறீங்க.”

சின்னஞ்சிறிய மின்மினித் தீபத்தைக் குவிந்த கரங்களுக்குள் காத்துச் செல்வதுபோல், அடுத்த நாள் அம்மாவும் பெண்டுகளும் நிலாவை மேடைக்குக் கூட்டிப் போனார்கள். சனத்திரளுக்கு முன் உட்காரக் கூச்சப்பட்டு நெளிந்தாள். அத்தனை கூட்டமும் அவளை என்ன செய்யப் போகிறதென்று மிரண்டு பார்த்தாள். வீட்டுக்கு முன்னாலிருந்த பரந்த களத்தில், பிரமாண்ட சாமியானா பந்தல். பட்டுச்சேலை, ரவிக்கை அணிந்து ஜவுளிக்கடை பொம்மை அங்கு மேடையில் உயிர்ப்போடு பளபளத்தது.

“அமெரிக்கப் பொண்ணுக்குக் கூச்சமா?”

மேடையில் ஒருபாகம் தள்ளி நாற்காலியில் அமர்ந்திருந்து பகடி செய்தவர், முறைப் பெண்டுகளைக் கேலி, கிண்டல் செய்வதில் வல்லவரான கருணாமூர்த்தி மாமா. கேலி செய்த அவரை நிமிர்ந்து நோக்கினாள்.

“ம், அப்படித்தான், சபையை நிமிந்து பாரு” என்றார்.

அமெரிக்காவில் போன வருசம் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் நிலா பூப்பெய்தினாள். தேர்வு நடந்து கொண்டிருந்த காலம். மறுநாள் தலைக்குத் தண்ணீர் விட்டுப் புதுப்பாவாடை அணிந்து ‘சானிடரி நேப்கின்’ மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனாள்.

கோடை விடுமுறை விட்டதும் இந்த ஆண்டு ஊர் வருவது தவறக்கூடாது என்று கட்டளை போட்டிருந்தார் தாத்தா. அம்மாவும் அப்பாவும் அவளைக் கூட்டிப் போவதில் குறியாக நின்றார்கள்.

15 வருசங்களுக்கு முன் நடந்த நிலாவின் அப்பா, அம்மாவின் திருமணம்தான் அவர்கள் குடும்பத்தில் கடைசியாய் நடந்த நல்ல காரியம்; இத்தனை ஆண்டுகளும் ஒவ்வொரு வீட்டு நிகழ்வுக்கும் போய், சில வீடுகளில் ஒரு கல்யாணம் முடிந்து அடுத்த கல்யாணம் என அடுத்தடுத்து நடந்த வைபவங்களில் எழுதிய மொய் ஊரூருக்கு, திசை திசைக்குக் குவிந்து கிடந்தது. மொய்யை மறுபடி சுரக்கும் ஒரு கற்பகத்தரு மேடையில் நின்றது.

நேற்றைய நினைவலைகளில் ஒரு துளியும் அவளிடம் மிஞ்சியிருக்கக் கூடாதெனப் பெற்றோர் நினைத்தது நிறைவேறியிருந்தது. முந்தின நாள் காட்சிகளைக் கண்ணுற்ற போது, இருந்த நிலா வேறு. அப்போதைக்கு அவள் அவளாக இல்லை. வெளியில் நடப்பவற்றை இரண்டாவது நபர், மூன்றாவது நபராய்ப் பார்ப்பதும், தன் சொந்த வாழ்வு என வருகிறபோது வேறொரு உயிரியாக வலம் வருவது என்பதற்கு அந்தப் பதின்மவயது சாட்சியாகிப்போன, அந்தச் சரணடைவு பெற்றவர்களுக்கு மெத்த சந்தோஷத்தை வாரித் தந்திருந்தது.

அவளுடைய வாழ்வின் விதியை அவள் எழுதவில்லை. வேறு எவரோ தனியாகவோ, கூட்டாகவோ எழுதின வழி வாழ்வு நடந்து கொண்டிருக்கிறது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுப் பத்தாவது ஆண்டில் நிற்கும் முருகர் தாத்தா, இப்படியொரு நிகழ்ச்சிக்குத் தன்னையே சாட்சியாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தச் சமுதாயம் விதி செய்து பாதை போட்டுக் கொடுத்து அவரை ‘நடந்து போ’ என்றது; அவர் நடந்தார்.

திருநீறு பூசி வாழ்த்தினார்கள். மோதிரம், தோடு, கழுத்துச் சங்கிலி பூட்டி மகிழ்ந்தனர். பிரிக்கப்படாமல் இருந்தன சில பரிசுப் பெட்டகங்கள். மொய் எழுத, பெரிய வரிசை நின்றது. பந்தலின் நுழைவில் இருபுறமும் இரண்டு டேபிள் போட்டுத் தனியே மொய் எழுதிக் கொண்டிருந்தனர் இருவர். அவளுடைய பூப்புனித நீராட்டை முன்னிட்டு நகரம் ஊருக்குள் வந்திருந்தது.

வெள்ளைச் சீருடை அணிந்த ஒரே மட்டத்துப் பையன்கள் பரிமாறினார்கள். தலையில் வலையும், கைகளில் உறையும் அணிந்திருந்தனர். அத்தனை வகைகளுடன் கிராமம் காலையிலும் மதியத்திலும் விருந்தைக் கண்டதில்லை. மதியச் சாப்பாட்டுப் பந்தி தொடங்கியிருந்தது. அவர்கள் விவசாயிகள், விவசாயத் தொழில் செய்யும் கூலிகள். எந்த வேலையையும் சுத்தமாகச் செய்பவர்கள். இலையில் கூட்டு, பொரியல், காய், தொடுகறி என விதவிதமாய்ப் பட்சணங்கள். ஒரு துளியும் அவர்கள் வீணாக்கவில்லை.

இலையெடுக்கும் பெண்கள், மீந்துபோன கனமான இலைகளைத் தூரமாய்ப் புளிய மரத்தடியில் கொண்டுபோய்ப் போட்டார்கள். நகரத்தின் விருந்துகளில் வழக்கமாய் இலையெடுக்கும் இப்பெண்கள் அறிவார்கள். கனமான இலைகளுக்குரிய வாயும் வயிறும் எங்கிருந்து வருபவை, எவ்வளவு உயரத்திலிருப்போர் என்று. பக்கத்துச் சிறு, பெரு நகரங்களிலிருந்து கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என வந்து குழுமிய வயிறில்லாத ஒரு கூட்டத்தின் இலைகள்.

சடங்கு முடிந்த பின்னும் மேடையிலிருந்து கீழிறங்க அனுமதிக்கவில்லை புகைப்படக்காரர். அங்கே, இங்கே, இப்படிப் பார், அப்படித் திரும்பு எனப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தார் நிழற்படக் கலைஞர். இது ஒன்னும் சாதாரணமான விசயமில்லை. அமெரிக்காவுக்குப் போய் தோழிகளிடமும் சுற்றியிருப்போரிடமும் அதிசயமாய்க் காட்டப்போகும் புகைப்பட ஆவணம்.

பட்டுப்புடவை மலையைப்போல் கனத்தது; இதுவரை காலம் ஜீன்ஸ், சார்ட்ஸ், டிஷர்ட்ஸ் என அமெரிக்க வேடத்தில் இருந்தவளைச் சடாரெனத் தமிழ்த்தோட்டப் பெண்ணாக மாற்றியிருந்தனர். நகை, நட்டு, அலங்காரம் என்று ஒரு கிலோவுக்குச் சுமந்தாள். மதியப் பந்தி முடிந்து சடங்கு முடிந்ததும், வீட்டுக்குள் நுழைந்து ‘சட்’டென்று எல்லாவற்றையும் கழற்றி வீசினாள். முழங்கால் அளவு சார்ட்ஸ்; மேலே டி ஷர்ட்.

விழா காலைச் சிற்றுண்டியில் ஆரம்பித்து, பகல் சாப்பாட்டுப் பந்தியில் நிறைவுபெற்றது. மாலையில் வீட்டுக்குள் அமர்ந்து அவர்கள் மொத்த வசூலை எண்ணிக் கணக்குப்போடத் தொடங்கினர். பத்து, இருபது, ஐம்பது, நூறு, ஐந்நூறு, இரண்டாயிரம் எனத் தனித்தனியே பிரிக்க வேண்டியிருந்தது.

“எண்ணுறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்போல” ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எண்ணும் பொறுப்பெடுத்துச் செய்தபோது உள்ளூறும் மகிழ்ச்சியுடன் அலுத்துக்கொண்டனர். அத்தனை பலமான வசூலை அவர்கள் எதிர்பார்க்க வில்லை என்பதுதான் அந்தப் பொதுமலான முகவிரிவுக்குக் காரணமானது.

பலர் உறைக்குள் போட்டு, மேலே ‘இவ்வளவு என்று எண்ணம் குறிப்பிட்டு’ கொடுத்திருந்தனர். எல்லோரையும் நம்ப முடிவதில்லை. ஒருநேரம் போல் ஒருநேரம் இருப்பதில்லை என எச்சரிக்கையாகி, உறைபிரித்து எண்ணிச் சரிபார்த்த பின் மொய்க்கணக்கு பதிவாகியது. சிலர் மோதிரம், தோடு, பிரேஸ்லெட், சங்கிலி என்று வாங்கிய ரசீது நகலையும் உள்வைத்து பரிசுப்பெட்டகங்களாய் வழங்கியிருந்தனர். தாத்தா, அம்மா, அப்பா, சித்தப்பா எனக் கணக்குப் பார்த்து எழுதிக்குறிக்கும் கூட்டத்தில் நிலாவும் பங்கேற்றாள். தாத்தா வசூலான தொகை, தங்க நகைகள் அனைத்தையும் தயாராய் வைத்திருந்த சூட்கேஸில் போட்டு, நிலா கையில் கொடுத்தார்.

“இது எதுக்கு என்கையில?” புரியாதவளாய் இதழிடுக்கில் புன்சிரிப்பைச் செருகிய நிலா கேட்டாள்.

”சொல்றேன், சொல்றேன், புடி” என்று அடுக்குமொழி வைத்தார் முருகர் தாத்தா.

“இதை ஒன்னக் கட்டிக்கப் போறவனுக்குக் கொடு.”

முருகர் தாத்தா கொடுத்த சூட்கேஸ் ரூபாய் நான்கு லட்சத்து முப்பத்தைந்தாயிரம்.

“இன்னும் அறுபத்தஞ்சாயிரம் நா போட்டு நிரப்பீர்றேன். வட்டமா அஞ்சு ஆகிரும். பத்திரமா கொண்டுபோயி வீட்டுக்காரருட்ட சேத்திரு.”

எதிரில் அமர்ந்தபடி சொற்களை உருட்டி விடுகிற தாத்தா எழுபதில் இருக்கிறார். நிலாவுக்குப் பதினான்கு. கோடை வெப்பத்துக்குக் குளுமையும் குளிருக்கு வெதுவெதுப்பான தொடுதலும் தருகிற ஒருவன் வந்தடைய இன்னும் பத்தாண்டுகள் எடுக்கும்; இன்னும் பத்து வருடம் கழித்து வந்தடையும் இனிய நாள்களுக்குத் தாத்தா அச்சாரம் தருகிறார்.

“இப்பத் தெரியாது ஒனக்கு” இழுத்தார் முருகர் தாத்தா.

நிச்சயதார்த்தம், திருமண ஏற்பாடு, சீர் செனத்தி, பணம், பவுன், கார், வரதட்சிணை என்னும் குகை திறக்கையில் தெரியும் சேதி.

“பொண்ணுக்கு என்ன செய்வீங்க, எவ்வளவு செய்வீங்க” என்ற மாயச் சொற்களை உச்சரிக்காது, எந்த ஆணும் குகையினுள் நுழைந்ததாகத் திருமணச் சரித்திரம் இல்லை.

“எல்லாம் ஒனக்குத்தான்; எல்லாம் ஒன்னால கிடைச்சதுதான்” – முற்றுப்புள்ளி வைத்தார் தாத்தா.

“எல்லாம் இந்த மகாராணியால வந்தது” அம்மா இடுப்பில் செல்லமாய்க் கிள்ளினாள்.

– 25 செப்டம்பர் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *