பரமசிவம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 5,391 
 

‘இன்றைக்கு எப்படியாவது கதை எழுதி காசு பண்ணியே ஆக வேண்டும்.! ‘ பரமசிவம் நினைப்பு, நிலைமை அப்படி.!!

”வர்றேன் பாமா !” என்று அலுவலகத்திற்குச் சொல்லிக் கொண்டு புறப்படும்போதே…. ”ஒரு நிமிசம்! மாசக்கடைசி கையில காசில்லேன்னு அரசாங்க மருத்துவமனை இலவச வைத்தியம், கை வைத்தியமெல்லாம் பார்த்து குழந்தைக்கு காய்ச்சல் நிக்கலை. இன்னைக்கு டாக்டர்கிட்ட கூட்டிப் போகலைன்னா….வலிப்பு, கைகால் இழுப்புன்னு மாறினா.. விபரீதம். குழந்தையை பாஸ்கரன் டாக்டர்கிட்ட கூட்டிப் போகனும். அவருக்கு நூத்தி அம்பது ரூபாய். ஊசி மாத்திரை மருந்துக்குப் பணம்ன்னு ஐநூறுக்குக் குறையாம வாங்க.” சொல்லி அனுப்பி விட்டாள்.

மாதத்தில்…. வாங்க வேண்டிய கடனெல்லாம் வாங்கி முடித்தாகி விட்டாச்சு. இது அதிகப்படி, எதிர்பாராதது. கதை எழுதிதான் காசு பார்க்க வேண்டும் வழி இல்லை.!

இவனுக்குப் பெண் பார்க்கும் போதே பெரிய பிரச்சனை.

”பத்திரிக்கை அலுவலகத்துல பத்தோடு பதினொன்னாய் துணை ஆசிரியர் தொழிலா ? வர்ற கதை, கடிதங்களைப் படிச்சு பிரசரத்துக்குத் தேர்ந்தெடுக்கிற வேலை. அதிலென்ன காசு சம்பளம் கிடைக்கும். ஒண்டிக்கட்டைன்னா…. ஏதோ ஒருத்தன் அறையில வாடகையைப் பகிர்ந்துகிட்டு ஓட்டல்ல அரையும் குறையுமாய் வயித்தைக் கழுவிக்கிட்டு காலம் தள்ளலாமேத் தவிர… கலியாணமெல்லாம் கட்டி குடும்பம் நடத்துற அளவுக்கு அது பெரிய உத்தரவாதமான தொழில் இல்லே.” — நிறைய இடங்களில் இப்படி சொல்லி நிராகரித்துவிட்டார்கள்.
இவனுக்கு எடுத்து செய்த பெரியசாமி பெரியப்பாவே துவண்டு போனார்.

கடைசியாய்ப் பிடித்ததுதான் இந்த பாமா.

”இப்படியே தட்டிக் கழிச்சா வாழ்க்கை என்னாகிறது. அவருக்கு இனிமேலா ஒரு பெண் பொறக்கப்போறாள்.!? அப்படிப் பொறந்தவள் நானாய் இருக்கேன். நீங்க மாப்பிள்ளையை வரச் சொல்லுங்க” என்று தைரியமாக சொன்ன தைரியலட்சுமி.

காலாகாலத்தில் வந்து பார்த்து, ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் முடிந்து….. கையோடு ஒரு பெண் குழந்தையும் ஆச்சு.

வாழ்க்கைக் கஷ்டம்தான். எப்படியாவது உருட்டித்தானே ஆகவேண்டும்.!

சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு அலுவலகத்தில் நுழைந்தான்.

”பரமு ! சீக்கிரம். அடுத்த வார இதழுக்கான கதைகளை இன்னைக்கு ஆசிரியர் மேசையில வைக்கனும்.!” – காத்திருந்தவன் போல் நண்பன் சொல்லி வேலை அறைக்குச் சென்றான்.
இவனும் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைய……சுற்றிலும் உள்ள பத்துப் பதினைந்து கணனிகளில் சகஊழியர்கள் மேய்ந்து கொண்டிருந்தார்கள். மேசைமேல் ஒரு அஞ்சல் குவியல் கிடக்க…. அதைச் சுற்றி ஐந்தாறு பேர்கள். அழைத்த நண்பனுக்கருகில் இவன் அமர்ந்தான். அஞ்சல் உறைகளைப் பிரித்து ஆளாளுக்குப் படிக்க….. இவனும் வேலையைத் தொடங்கினான்.
நாலைந்து உறைகள் உடைத்து படித்ததுமே மூளைக்குள் ஒரு பொரி மின்னலாய் விழ………அடுத்த விநாடி பரமசிவம் அந்த கருவை உருவாக்கும் வேலையில் மும்முரமாக இறங்கி முடித்தான். அடுத்து, பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து பளிச்சென்று ஆக்குவது போல் அழகான கையெழுத்தில் சிறு சிறு திருத்தங்கள் செய்து படியெடுத்து தேர்வு கதைகளுடன் தன் கதையையும் சேர்த்ததும்தான் ‘அப்பாடி ! காசு பண்ணியாச்சு !’ மனசுக்குள் நிம்மதி வந்தது.

‘ஐந்து மணி;க்கெல்லாம் காசாளரிடம் சென்று காசு வாங்கிக்கொண்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் !’ நினைத்து மதிய வேலையில் ஆழ்ந்திருக்கும் போதுதான்…..
”சார். உங்களைப் பெரிய சார் கூப்பிடுறாங்க.” ஆசிரியர் வாசலில் இருக்கும் பியூன் பரமசிவத்தை அழைத்;தான்.

”ஏன் கந்தா ? ”

”என்னமோ தெரியலை. மனுசன், கையில ஒரு கதையை வைச்சிக்கிட்டு… போய் பரமுவை இங்கே சட்டுன்னு அனுப்புன்னு காராமாய்ச் சொன்னார்.” சொல்லிப் போனான்.

‘காரமாய் இருக்காரா !? கதை நல்லா இருந்தா கையெழுத்துப் போட்டுத்தானே அனுப்பனும். ஏன் அழைப்பு ?!” மனசுக்குள் கிலி அடிக்க எழுந்தான்.

கையில் கதையுடன் அவர் அப்படியேதான் இருந்தார்.

இவன் மனசுக்குள் தந்தியடிக்க…..அருகில் நின்றான்..

‘சார்….” குரல் கொடுத்தான்.

”நான் கண்காணிப்புக் கேமராவுல பார்த்தேன். இந்தக் கதையை எங்கே எழுதினே ? ” குரல் காரமாக வந்தது.

”இங்கேதான் சார்…..”

”அதாவது…… அலுவலக நேரம், தாட்களை உன் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தறே……?”

இப்போதுதான் பரமசிவத்திற்குள் இடி இறங்கியது.

‘எவரும் அலுவலக நேரத்தைத் தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தி கதை, கட்டுரை,கவிதைகள் என்று அலுவலக தாட்கள் பேனாக்கள் எடுத்து எழுதக் கூடாது. சொந்தப் படைப்புக்களை வீட்டில் எழுதி எடுத்து வந்து சமர்ப்பிக்க வேண்டும்.!’ என்கிற கண்டிப்பான விதி மீறல் சுரீரென்று சுட்டது.

‘தப்பித் தவறி இந்த தவறைச் செய்தால் அதற்கான தண்டனை….அவரது படைப்பு நிராகரிப்பு மற்றும் கண்டிப்பு. இதையும் மூன்று முறைக்கு மேல் மீறினால் சம்பளத்தில் இருநூறு ரூபாய் பிடித்தம்!’ என்பதும் புரிந்தது. கைகளைப் பிசைந்தான்.

”ஏன் இப்படி செய்ஞ்சே……. ? ”

”வந்து… வந்து….. குழந்தைக்கு ரொம்ப முடியலை சார். டாக்டர்கிட்ட அழைச்சுப்போகனும்… பணத்தேவை என்கிற முனைப்பு, நினைப்பிலேயே….. தவறு நடந்துடுச்சு.”

”சால்சாப்பு ?!”

”ச…சத்தியம் சார்.”

”குழந்தைக்கு என்ன ? ”

”காய்ச்சல். ஒரு வாரமாய்க் கைவைத்தியம் பார்த்தும் சரியாகலை.”

.”…………………………….”

”ச…சார்……!”

”கதை நல்லா இருக்கு. பாராட்டலாம், கண்டிக்கலாம்ன்னு அழைச்சேன். காரணத்தைச் சொல்றே. நான் போன்ல சொல்றேன். காசாளர்கிட்ட ஐநூறு வாங்கிப் போய் குழந்தையைக் காப்பாத்து.”

”சார்ர்ர்…. !”

”புள்ளைப் பெத்தவனுக்குத்தான் அதோட அருமை தெரியும்ன்னு நெனைக்காதே! அதைத் தாண்டி என்னைப்போல புள்ளை இல்லாதவங்களுக்கு அதன் வலி, வருத்தங்கள் அதிகம். இந்தா… உன் கதைக்குப் பரிசாய் என் சிறப்பு அன்பளிப்பபு.” சொல்லி தன் சட்டைப் பையிலிருந்து ஐநூறு எடுத்து நீட்டினார்.

”ந… நன்றி சார்.!” பரமசிவம் உணர்ச்சிப் பிரவாகத்தில் தழுதழுத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *