பரத்தையர் சகவாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 5,543 
 

இதற்கு முந்தைய ‘ஆசையும் மோகமும்’ சிறுகதையைப் படித்தால் இதைப் புரிதல் எளிது.

கல்யாணியை எப்படிப் படிய வைப்பது என்கிற யோசனையில் இருந்தேன்.

அன்று மாலை ட்ராய்ட் கார்டனில் குடித்துக் கொண்டிருந்தபோது எனது நெருங்கிய ஆபீஸ் நண்பன் மகேஷிடம் கல்யாணியைப் பற்றி பூடகமாக விசாரித்தேன்.

அவன், “ஐயையோ… அது பெரிய கை. அவளை நம்ம ஆபீஸ்ல ஜிஎம் வச்சிருக்கான்..” என்றான்.

எனக்கு சப்பென்று ஆகிவிட்டது.

“உனக்கு வேண்டியது சரீர ஒத்தாசை…. அவ்வளவுதானே?”

“ஆமா மகேசு… காஞ்சு கெடக்கேன்.”

“அட.. இதுக்குப்போய் கல்யாணி கில்யாணின்னு… ஆபீஸுல எதையுமே வச்சிக்காத சுந்தர். எல்லாப் பெண்டாட்டிகளுமே கொஞ்ச நாளைக்குத்தான் நம்மைக் கொஞ்சுவாளுங்க… ரெண்டு பிள்ளைங்க பிறந்தாச்சின்னா அசல் ஆயாவா மாறிடுவாளுங்க. என் வீட்ல வந்து பாரு, என் பெண்டாட்டியைவிட பாத்திரம் தேய்க்க வர்ற வேலைக்காரி ஜோரா இருப்பா.”

“…………..”

“இன்னிக்கி அன்றாட வீட்டு வாழ்க்கைங்கறது பொம்பளைங்களுக்கு அவ்வளவு ஹெவியா இருக்கு. இத்தனைக்கும் முன்ன மாதிரி கல் உரல்; அம்மி, ஆட்டுக்கல்; விறகு அடுப்புன்னு எந்தப் பேஜாரும் அவங்களுக்கு இப்ப கிடையாது. ஸ்விட்ச் போட்டா அரைச்சித்தள்ள கிரைண்டர், மிக்ஸி, சுடவைக்க ஓவன், கேஸ் அடுப்பு. ஆனாலும் பாரு முன்னே மாதிரி யாரும் பெத்துக்கறதும் கிடையாது. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு… அப்படியும் அவங்களால சமாளிக்க முடியாம முக்கி முனங்குறாளுங்க. தாக்குப் பிடிக்க முடியலை பாவம். பிள்ளைங்களுக்கு வீட்ல ஹோம் ஒர்க் சொல்லிக் குடுத்தே தாவு தீர்ந்து போயிடும்.

“எப்படா படுத்துத் தூங்கலாம்னு மனசும் உடம்பும் ஓய்ந்து போய்க் கிடப்பாளுங்க. அவங்களைப்போய் நாமும் நாமும் நம்ம பங்குக்கு பிடுங்கி எடுத்தா என்னதான் பண்ணுவாளுங்க சொல்லு? அதனால் பழைய கதையையே நெனச்சுக்கிட்டு இருக்காத சுந்தர். நீதான் மாறணும். இனிமே உன் பெண்டாட்டி உன்னோட பிள்ளைங்களுக்குத்தான் அம்மாவா இருப்பாளே தவிர, உனக்கு முழுமையான பெண்டாட்டியா இருக்கமாட்டா. இதுதான் யதார்த்தம். இதை உன்னாலேயும் என்னாலேயும் மாத்த முடியாது. அதனால நாம் மாறிட வேண்டியதுதான். பெண்டாட்டி மாதிரியான ஒருத்தியை வெளியில செட்டப் பண்ணிக்க வேண்டியதுதான்”.

“அதுக்குத்தான மகேசு நம்ம கல்யாணியை ஆசைப்பட்டேன்..”

“அவள மறந்திரு சுந்தர்… அவ ஜாலக்காரி. தவிர நம்ம ஜிஎம் ஆளு.”

“சரி. என் பிரச்னை தீர நீ என்ன வழி சொல்ற? வாழ்க்கையை அனுபவிக்க எனக்கு ஒண்ணு ரெண்டு பொம்பளைங்க வேணும்…”

“ஒண்ணு ரெண்டு இல்ல. பத்துப் பதினைஞ்சே காட்டறேன்… பேசாம என்கூட வா.”

இருவரும் அவனுடைய காரில் ஏறிக்கொண்டோம்.

அவன் நேராக என்னை ஜெயநகரில் உள்ள ஒரு பெரிய பங்களாவிற்கு கூட்டிச் சென்றான்.

அது மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கிடைக்கும் இடம். அந்த இடத்தை நடத்திவந்த பங்கஜம் என்கிற பெண்மணியிடம் மகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்தான். அவள் தமிழ் சினிமாவில் வரும் சொர்ணாக்கா மாதிரி தாட்டியாக இருந்தாள். மிகவும் சகஜமாகப் பேசினாள்.

பங்கஜம் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தவுடன், உடனே ஒன்பது அழகிய பெண்கள் அங்கு பிரசன்னமானார்கள். நான் சொக்கிப் போய்விட்டேன். அவ்வளவுபேரும் வனப்பின் மொத்த வடிவங்கள்.

அன்று வீட்டுக்கு திரும்பும்போது எனக்குள் உற்சாகம் கரைபுரண்டது. பல மாதங்களாக என்னுள் உறைந்து போயிருந்த இறுக்கம் கரைந்து போனது. வனஜாவைப் பார்த்தபோது, ‘இனி இவள் எப்படியிருந்தாலும் கவலை இல்லை, எனக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுகிறாள்; துணிகளைத் துவைக்கிறாள்; என் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்கிறாள். வனஜா இப்போது வெறும் பெண்ணில்லை. ஒரு மரியாதைக்குரிய தாய்!’ என்று தோன்றியது.

எனக்கு விருப்பமான நேரத்தில் பங்கஜம் வீட்டுக்குப்போய் உல்லாசமாக இருந்தேன். அங்கிருந்த எல்லாப் பெண்களும் எனக்கு நன்கு பரிச்சயமாகி தோஸ்த் ஆகிவிட்டார்கள். பணம் கொடுத்தவுடன் எந்த நிர்பந்தங்களும் இல்லாமல் அவர்களை சந்திக்கிறேன், விடைபெறுகிறேன். அதனால் வாழ்க்கை லேசாக இருந்தது.

சமூகத்தில் நிறைய சம்பளம் வாங்குகிற பெரிய மனுஷனாகவும்; வனஜாவுக்கு நல்ல கணவனாகவும்; பொறுப்புள்ள அப்பாவாகவும் அங்கீகரிக்கப்பட்டு தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அதேசமயம் தேவைப்பட்டபோது பங்கஜம் வீட்டில் உல்லாச கேளிக்கைகளில் திளைத்துக் கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு புதிய ஆசை முளைத்தது. இவர்களில் ஒருத்தியை எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு தள்ளிக்கொண்டு போய் ஒருவாரம் அலுக்க அலுக்க இருந்துவிட்டு வந்தால் என்ன? உஷா நல்ல கம்பெனி கொடுப்பாள் என்று தோன்றியது. மனைவியுடன் எல்டிஏ போவதாக ஆபீஸில் பொய் சொல்லிவிட்டு உஷாவுடன் டெல்லிக்கு கிளம்பினேன். வனஜாவிடம் ஆபீஸ் விஷயமாக டெல்லி செல்வதாக கதையும் விட்டேன். மகேஷிடம் சொன்னேன். அவன் கன்னடத்தில் “என்ஜாய் மாடி” என்றான். பங்கஜம்தான் பணம் அதிகமாகக் கேட்டாள். கடன் வாங்கித்தான் என்னால் அந்தப் பணத்தை தயார் செய்ய முடிந்தது. அவள் விதித்த ஒரே நிபந்தனை உஷாவை பத்திரமாக அவளிடம் திரும்பிக் கொண்டுவந்து சேர்த்துவிட வேண்டும் என்பதுதான்.

உஷாவுடன் மெஜஸ்டிக் ஸ்டேஷன் போகும்போது அந்த ஓலா டிரைவர் அவளிடம் “என்ன உஸா ஊருக்கா?” என்றான்.

“அட… ராகவா அண்ணனா… ஊருக்குத்தான் வரட்டுமா?” என்றாள்.

எனக்கு என்னவோபோல் இருந்தது. “நீ அவனுக்கு பதில் சொல்லியிருக்க வேண்டாம் உஷா” என்றேன்.

“அதனாலதான் சுருக்கமா பதில் சொன்னேன்… பதில் பேசலைன்னா அப்புறம் கஸ்டமர்களை அவன் கூட்டியாரமாட்டன்…”

‘கஸ்டமர்’! அந்த வார்த்தை என்னைச் சுட்டது. என் உற்சாகம் சற்று வடிந்தது. ஸ்டேஷனில், ரயிலில் நிறைய ஆண்கள் உஷாவை உற்று உற்றுப் பார்த்தார்கள். அதில் மரியாதையே இல்லாமல் ஒரு இளக்காரம் இருந்தது. அப்புறம்தான் எனக்கு உறைத்தது…. அவளுடைய உடம்பு ஒருத்தனுக்கு வெறும் மனைவியாக மட்டும் இருக்கின்ற ஒருத்திக்கானது இல்லை. மேய்வதற்கு தோதான உடம்பு. பாதுகாப்புக்கு புதிதாக ஒரு மஞ்சள் தாலிக்கயிறு அணிந்திருந்தாள்.

நான் பெரிய தப்பு பண்ணுகிறேன் என்கிற குற்ற உணர்வு எனக்குள் ஆரம்பித்தது. ச்சே… வனஜா இடத்தில் இவள். ரொம்ப ஓவரா எனக்கே தோன்றியது. ரயில் பயணம் நெடுகவே என்னால் உஷாவுடன் இயல்பாகவே இருக்க முடியவில்லை. நான்கு சுவர்களுக்குள் உரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுடன் எதற்காக இந்த வெளிப்படைப் பயணம்? டெல்லியில் இருத்த ஒருவாரமும் முள்ளின்மேல் இருப்பது போலத்தான் இருந்தது. எல்லா ஆண்களுமே அவளை வெறித்துப் பார்த்தனர். ‘உஷா ஒரு அறைப் பறவை. குடும்பப் பறவையோ…வீட்டுப்பறவையோ அல்ல.’

இந்த ஞானம் வருவதற்கு நான் ஆயிரக்கணக்கில் செலவழித்து டெல்லி வரவேண்டியிருந்திருக்கிறது…

எல்லாம் முடிந்து ரயலில் திரும்பும்போது “என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்வீர்களா சுந்தர்?” என்று உஷா என்னிடம் உருக்கமாக கேட்டாள்.

“இதைப்பற்றி இன்னொரு நாள் சாவகாசமாக உன்னிடம் பேசுகிறேன் உஷா…” என்றேன். மனதிற்குள் ‘ரொம்ப முக்கியம்’ என்று கிண்டலடித்தேன். ஆனால் இந்த டெல்லி விஜயத்தில் ‘வாழ்க்கைக்கு உண்மையில் எது தேவை’ என்பது நன்றாகப் புரிந்துவிட்டிருந்தது.

பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், “வா உஷா, உன்னை ஜெயநகரில் பங்கஜத்திடம் ஒப்படைத்துவிட்டு அப்புறமா நான் வீட்டுக்குப் போறேன்” என்றேன்.

“பரவாயில்லைங்க உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நானே ஆட்டோல போயிடறேன்…”

“பங்கஜம் அம்மா சொன்னாங்க…”

“அவங்க சொல்வாங்க… நீங்க பயப்படாதீங்க நான் பத்திரமா போயிடுவேன்.”

“ஒருவாரம் கழித்து நான் வந்து உன்னைப் பார்க்கிறேன் உஷா” என்றேன் பொய்யாக. ஆனால் மனதுக்குள் இனி ஜெயநகர் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கக்கூடாது… என்று தீர்மானித்தேன்.

திரும்பிப் பார்க்காமல் வீடு போய்ச் சேர்ந்தேன். நிம்மதியாக இருந்தது. வீட்டின் அழகும், மனைவியின் நிர்மலமான தேஜும் அழகும் என்னவென்று புரிந்தது. வீடு வீடுதான்… ஒருபக்கம் குழந்தைகளின் கூச்சல், ஆயா துணி துவைக்கும் சத்தம். சமையல் அறையில் வியர்வை நெடியில் வனஜா… எல்லாமே ரம்மியமாக இருந்தன. வாழ்க்கையின் அடித்தளம் பாலுறவு மட்டும் இல்லை என்பதாகத் தோன்றியது. மேலும் மூன்று நாட்கள் ஆபீஸ் போகாமல் விச்ராந்தியாக வீட்டிலேயே படுத்து நன்றாகத் தூங்கினேன். நன்றாகச் சாப்பிட்டேன். நிம்மதியாக இருந்தேன். இனிமேல் எவளும் வேண்டாம்… என் வனஜாவுடன், என் குழந்தைகளுடன் யோக்கியமாக ஒரு நேர்கோட்டில் வாழ முடிவு செய்தேன். மனம் முழுவதும் சந்தோஷம் கொப்புளித்தது.

ஆனால் மறுநாள் ஆபீஸ் போனபோது என் நிம்மதி முற்றிலும் நாசமானது. நான் ஆபீஸ் போகாத மூன்று நாட்களும் பங்கஜம் என்னைத் தேடி ஆபீஸுக்கே வந்திருக்கிறாள். உஷாவை நான் வேறு எங்கோ கூட்டிச் சென்று குடித்தனம் வைத்துள்ளதாக சந்தேகப்பட்டு உஷாவைத் தேடி வந்திருக்கிறாள். அந்த மூன்று நாட்களும் நான் இன்னமும் டெல்லியிலிருந்து திரும்பி வரவில்லை என்று சொல்லி மகேஷ் சமாளித்து திருப்பி அனுப்பியுள்ளான். மகேஷை நான் மொபைலில் தொடர்பு கொள்ளாததால் அவனும் நான் டெல்லியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான்.

“அவள் ஜெயநகருக்கு ஆட்டோவில் போனதை நான் பார்த்தேன் மகேஷ்.”

“அவ இன்னும் வீடு போய்ச் சேரலையே சுந்தர். அந்தப் பங்கஜத்துக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?”

“போலீஸ்ல புகார் கொடுத்து உஷாவை தேடச் சொல்லுவேன்…”

“அவளுக்கு போலீஸ்ல எல்லாரையும் தெரியும். ஆளுங்கட்சி பிரமுகர்கள் அனைவரையும் தெரியும். நீ உஷாவை கடத்தி ஒளிச்சு வச்சிருக்கிறதா உன்மேல அவ உடனே புகார் கொடுப்பா… விஷயம் பேப்பர்லே வரும். உன் பொளப்பு நாறிடும் சுந்தர்.”

எனக்கு உடம்பு வியர்த்தது.

‘நல்ல புத்தி வந்த பிறகு இது என்ன சோதனை? கடவுளே எப்படியாவது என்னை இந்த இக்கட்டிலிலிருந்து காப்பாற்று.. நிஜமாகவே நான் திருந்திவிட்டேன். திருந்திய பிறகு வீணாக என்னைத் தண்டித்து விடாதே. எப்படியாவது அந்த உஷா சனியனை பங்கஜம் அம்மாளிடம் கொண்டுபோய்ச் சேர்த்துத்விடு.’

ஒவ்வொரு நிமிஷமும் அடுப்பின்மேல் இருப்பதுபோல் உணர்ந்தேன். பகல் ஒருமணிக்கு பங்கஜம் ஆபீசினுள் வந்தாள். நேராக மகேஷிடம் போனாள். மகேஷ் எழுந்து அவளுடன் என்னை நோக்கி வந்தான். வெளியில் வரச்சொல்லிக் கூப்பிட்டான். எல்லோரும் எங்களையே பார்த்தார்கள் கல்யாணி உட்பட.

என்னை பயமும், வெட்கமும் வேதனையும் பிடுங்கித் தின்றன. வெளியே பங்கஜத்திற்கு துணையாக வந்திருந்த இரண்டு குண்டர்கள் என்னை முறைத்துப் பார்த்தார்கள்.

கடவுளே, எனக்கு இது தேவைதானா?!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *