கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,803 
 

லண்டன் 1991.

பத்து வருடங்களுக்கு முன் இரு இளம் நண்பர்கள்,தங்களுக்கிடையில் அந்தப் பந்தயத்தைச் செய்துகொண்டபோது அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது வயது. அந்திசாயும்,அழகிய மாலை நேரத்தில் டியுட்டரியால் வரும்போது, யாழ் நகர்,பண்ணைக்கடற்கரையில் தங்கள் சைக்கிள்களை நிறுத்திவிட்டு பலதையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.பேச்சுக்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்த, தெரியவேண்டப்படவேண்டும் என நினைக்கும் பெண்களைப் பற்றியிருக்கும். அல்லது அவர்கள் அண்மையிற் பார்த்த சினிமாப் படங்களைப் பற்றியிருக்கும்.

அரசியல் என்பது பொது மக்களின் வாழ்க்கையில் நுழையாத காலமது. உலகம் பரந்த வித்தில் சாதாரணமாக மாணவர்கள் எந்த மூலையிலிருந்தாலும் தங்களது பொழுதுபோக்காக எது செய்வார்களோ அதையே சுதாகரனும் உதயனும் செய்து கொண்டிருந்தார்கள்.

பத்துவருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம்,அரசியற் பூகம்பத்தால் தலைகீழாக மாறாத சாதாரண உலகமாக இருந்தது. அங்குமிங்கும் சில ‘இயக்கப் பெடியன்கள்’ ஆயதம் எடுத்து,எப்போதோ இருந்துவிட்டு ஒன்றிரண்டு போலிசாரைத் தாக்கிவிட்டு அல்லது கொலை செய்து விட்டுப்போவது தொடர்ந்து கொண்டிருந்தாலும்,பொது மக்களின் வாழக்கை பெரும்பாலும் அவ்வளவாக மாறவில்லை.

பெரும்பாலான இளம் தலைமுறையினர் வழக்கம்போல் ஒன்றாகக் கூடித்திரிந்தார்கள். பாடசாலை,கல்லூரிகள், டியுட்டரி,நூல்நிலையம் என்ற அவர்களின் உலகத்தில் வாழ்க்கைப் பொறுப்பற்ற அலட்டல்கள், வம்பளத்தல்கள் என்ற அந்த வயதுக்குரிய வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு நாள், சுதாகரனும் அவன் நண்பனும் வழக்கம்போல் தாங்கள்,’பெட்டைகள்’ பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரிந்த கவிதா என்றொரு அழகிய பெண் அவர்களைத் தாண்டிப்போய்க்கொண்டிருந்தபோது, அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசவெளிக்கிட அது அவர்களிடையே ஒரு பந்தயம் போடுமளவுக்கு வந்து விட்டது.

அந்த அழகிய மாலை நேரத்தை, இன்று பத்து வருடங்களுக்கப் பின், லண்டனில் ஒரு கல்யாணவீட்டில் வைத்து நினைத்துப் பார்க்கிறான் சுதாகரன்.

பத்து வருடங்களுக்கு முன் பண்ணைக் கடற்கரையில் அந்தமாலை நேரத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அந்திமாலை நேரம், சூரியதேவன் தனது பூமிக்காதலியைப் பிரிய மனமின்றி அடிவானத்தில் மெல்லமாக நகரும் காட்சியைப் பண்ணைக் கடற்கரையில் ரசிக்க யாருக்கும் எந்தவிதமான கலரசனையும் இருக்கத் தேவையில்லை,அங்குபோனால் அது தன்பாட்டுக்கு வரும்.

அந்த மாலைநேர அழகு மிகவும் சிறப்பானது. காதற் கவிதையைத் தன்பாட்டுக்கு வரவழைப்பது. அலைபாயும் பண்ணைக்கடல் நீரில் குளிர்த்தெழுந்து மெல்லெனத் தவழும் தென்றலும்,மேல்வானத்தில் கோலமிடும் பலவர்ணசிவப்பு, மஞ்சள் நிறக்கோர்வையின் பிரதிபலிப்புக்கள்,ஆழமற்ற நீரில் பட்டு தக தகக்கும் அழகும் கண்ணையும் கருத்தையம் கவருபவை. அந்த நேரத்தில்,பெரும்பாலான இளம் வயதினருக்குத் தன்னைச் சுற்றியிருக்கும் எதுவுமே அழகாக, அற்புதமாக, வர்ணனைகளுக்கு அப்பாற் பட்டதாகத்தான் தெரியும்.

சுதாகரனின் நண்பன்,உதயன் அந்தக் காலத்தில் ஒரு ஆரம்பக் கவிஞனாக எதையெல்லாமோ எழுதிச் சுதாகரனிடம் படிக்கக் கொடுப்பான்.சுதாகரன் நண்பனுக்காக அவன் எழுதும்’ கற்பனை’ உலகை ரசிப்பான். உதயனின் உலகம் அழகானது. பிரச்சினையற்றது. அடிமனத்தின் களங்கமற்ற சிந்தனைகளைப் பிரதிபலிப்பவை.

அப்போது கவிதா அவர்களைத் தாண்டிச் செல்வாள்;. அவளுக்கு அவர்களைவிட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கலாம். கஸ்தூரியார் தெருவிலுள்ள துணிக் கடையொன்றில் வேலை செய்கிறாள்.மேற்படிப்பெல்லாம் படிக்க வசதி கிடையாது. அவள் மிகவும் அழகான பெண் என்ற சொல்வது பொருத்தமில்லை.வர்ணனைகளால் சிறைப் படுத்த முடியாத ஒருவித அழகு அவளுடையது. ஓடிப்போய்த் தொட்டுப்பார்க்கவேண்டும் என்ற துடிப்பை நிறுத்தித் துரத்தில் இருந்து தரிசிக்கத் தக்கதான மரியாதையாதையைத் தரும் பெண்மையது.

அற்புதமான கலைஞனின் கைகளால் வடிக்கப் பட்ட ஒரு காவியச்சிலை நடந்து வருவதை அவள் ஞாபகப் படுத்துவாள். ஓரு ஓவியன் மிகச் சிறந்த தனது கற்பனையெல்லாவற்றையும் ஒன்று திரட்டி தீட்டிய ஓவியமவள். அவள் ஒருநாளும் உயர்ந்த விலை உடுப்புக்கள் அணிந்தததை அவர்கள் காணவில்லை. ஓரு சாதாரணமான பெண்ணாக நடந்து செல்வாள். கோயிலி;ல் வைத்து பூசிக்க வேண்டிய புனிதம். வறுமையால் தெருவில் வதைபடுவது யதார்த்மற்றதாகத் தெரிந்தது.

சுதாகரனும், உதயனும் அவள் அழகை ரசிப்பார்கள். அவள், நடையை ,இடையை, ஒருகணம் இவர்களை ஏறிட்டுப்பார்த்துவிட்டுத் தரைபார்க்கும் அழகிய அந்த விழிகளை ஏக்கத்துடன் ரசிப்பார்கள். முத்தான அவளது பல்வரிசையை அவர்கள் அடிக்கடி காணாவிட்டாலும், அவள் வெள்ளிக்கிழமைகளில் தனது சினேகிதப் பெண்களுடன சிரித்துப் பேசிக் கொண்டு,கோட்டைப் பக்கமிருக்கும்,முனிஸ்வரர் கோயிலுக்குப் போகும்போது கண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மத்தியவர்க்கத்துப் பையன்கள். படிப்பு முடிந்ததும், பல்கலைக்கழகம், அல்லது மேற்படிப்புக்காக வெளிநாடு போகும் வசதியுள்ளவர்கள்.அவள் துணிக்கடையில் வேலை செய்பவள். காலை பத்து மணி தொடக்கம்,பின்னேரம் ஐந்து மணிவரை, துணிகளை அளப்பவள், மடித்துவைப்பவள். வாடகைக்காரர்களைத் திருப்திகரமாக நடத்துபவள்.குடும்பம் கஷ்டமானதாக இருக்கலாம். அவளின் குடும்ப நிர்வாகத்திற்கு,அவள் உழைபபு அத்யாவசியமாகவிருக்கலாம்.

அவளைப் பற்றிப் பேசி அவள் அழகைப் பார்த்து வாயுறும் அந்த இளைஞர்களுக்கு அந்தப் பிரச்சினை ஏதும் கிடையாது. அவர்கள் இன்னும் சிலகாலங்களில்,அவர்களை விரும்பும் பெண்களைப் பெரிய சீதனங்களுடன் திருமணம் செய்து கொள்ளலாம். இந்த ஊரையே தாண்டி எங்கேயோ ஓடிப்போகலாம். கவிதா பற்றிய இந்தக் காட்சிகள் அவர்களின் நினைவிற் சிலவேளை தட்டுப்படலாம்.

அப்போதுதான் அவர்கள், எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது,மாறப்போகிறது என்ற எந்தவிதமான முன்யோசனையுமின்றி அந்தப் பந்தயத்தைப் பிடித்துக்கொண்டார்கள்.

அப்படி அவர்களைப் பந்தயம் பிடிக்கப் பண்ணிய கவிதா, இன்று லண்டனிலுள்ள பிரமாண்டாமான கல்யாண மண்டபத்தில்,கோயிற் திருவிழாவில் அலங்காரம் செய்யப் பட்ட அழகிய தேராக அவனைக் கடந்து பவனி போகிறாள். அவள் அழகு இன்னும் பல மடங்காகப் பளிச்சிடுகிறது. ஏழ்மையுடன், துணிக் கடையில் வேலை செய்த கவிதாவாக அவள் தெரியவில்லை. ஏதோ ஒரு நாட்டு இளவரசி மாதிரித் தெரிந்தாள். அவள் கையில் ஒரு குழந்தை.ஒரு வயதிருக்கலாம். விலையுயர்ந்த மெழுகுப் மொம்மைபோல்,அவளின் அச்சுடன் அழகாகவிருந்தது.

அவள் பின்னால் ஒரு அழகிய பெண் கவிதாவுடன் பேசிக் கொண்டுபோனாள். அது கட்டாயம் கவிதாவின் தங்கையாக அல்லது ஒன்றைவிட்ட தங்கையாக அல்லது மருமகளாக இருக்கலாம் கவிதாவின் சாயல் அப்படியே இருக்கிறது. கல்யாண மண்டபத்துக் கலையழகாய் அவனைக் கடந்து சென்ற கவிதா சுதாகரனைக் காணவில்லை. கண்டால் அடையாளம் கண்டு கொள்வாளா? ‘எங்களை விட நல்ல நிலையில் நான் இருக்கிறேன் ‘ என்பதைச் சொல்லாமற் சொல்வாளா?

அவன் பெருமூச்சு விடுகிறான்.

அவர்கள் பிடித்த பந்தயத்தை அவளுக்குச் சொன்னால் அவள் என்ன நினைப்பாள்?

பத்து வருடங்களுக்கு முந்திய,அன்றைய பின்னேரத்தின் பின் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டன.

83ம் ஆண்டுக் கலவரமும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும்,பெரும்பாலான தமிழர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி விட்டது. சுதாகரன், 85ம் ஆண்டு அகதியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தான். தமக்கை லண்டனிலிருந்ததால் அவன் வாழ்க்கை முன்னேறியது. லண்டன் வாழ்க்கையில் யாழ்பாணத்துப் பண்ணைக் கடற்கரையின் அழகை எங்கும் ரசிக்க முடியாது. தேம்ஸ்நதி பிரமாண்டமாக,பிரித்தானிய பாராளுமனறம் மட்டுமல்லாது உலகத்தை அவர்கள் ஆளும்போது நிர்வகிக்கக் கட்டிய பல தரப்பட்ட பிரமாண்டமான கட்டங்களைப் பெருமையுடன் அணைத்துத் தவழ்கிறது. எப்போதாவது இருந்துவிட்டு, தேம்ஸ்நதியைத் தாண்டிப் பிரயாணம் செய்யும்போது பழைய ஞாபகங்கள் வரும்.

பண்ணைக் கடற்கரையும், யாழ்ப்பாணத்துக் கோட்டையும், ஆயிரக்கணக்கான மலர்க்கொத்துக்களுடன் பார்த்தோர் கண்ணையும் கருத்தையும் கவரும் சுப்பிரமணியம் பூங்காவும், தமிழ் உலகத்தில் எங்குமே கிடைக்கமுடியாத பழம்பெரும் நூல்களைத் தன் மடியில் வைத்துப் புகம் பாடும் யாழ்ப்பாண நூல் நிலையமும், மாலை நேரத்தின் மயக்க உணர்வுகளைத் தடுக்கும்; முனிஸ்வரர் கோயில் மணியோசையும்,அத்தோடு கவிதாவின் சிலகணநேர காட்சியும், தேம்ஸ்நதிக்கரையில் கிடைக்காது.

கவிதாவின் கயல்விழிகள் கற்பனையில் வதைக்கும். அவளுக்கு என்ன நடந்திருக்கும்? பல்லாயிரக்காண ஏழைத்தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் அவளுக்கும் நடந்திருக்குமா என்று ஏங்குவான்.

படிப்பு, உழைப்பு, குடும்பப்பொறுப்பு,

அவனுக்கு நிகரான படிப்பைப் படித்த ஒரு பெண்ணை அண்மையிற் திருமணமும் செய்து கொண்டான். சாதி சமயம், சீதனம் எல்லாம் திருப்தியாக வந்ததால் அவனது குடும்பம் அவனை மெச்சியது. அவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறதா என்பதை விட, அவர்களின் பொருத்தங்கள் சரியாக இருக்கிறதா என்பதில் அவனின் தாய் மிகவும் அக்கறையாகவிருந்தாள். அவன் அம்மாவின் எதிர்பார்ப்புககளுக்கு மேலாக எதுவும் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்காததால் திருமணம் விமரிசையாக நடந்து இரண்டு வருடமாகிறது.

அவன் தனது நண்பனுடன் செய்து கொண்ட பந்தயம் சுதாகரனின் திருமணகாலத்தில் அவன் மனதில் நிழலாடியது. திருமணமாகி இரண்டு வருடங்களாகியம் அவர்களுக்குக் குழந்தை வரவில்லையே என்று அம்மா முணுமுணுக்க அவன் மனைவி சொன்னாள்,’இன்னும் சில வருடங்களுக்கப் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டாம்’.

அவன் மறுமொழி சொல்லவில்லை.மறுமொழி சொல்லத் தயக்கம்.அவன் என்ன விரும்புகிறான் என்பதை வெளிப் படையாகச் சொல்லமுடியாத ஒரு தர்மசங்கடம். அவனுக்கு பெண்வீட்டார் நிறைய சீதனம் கொடுத்திருக்கிறார்கள்.அதன் பெறுமதி அவனின் சுதந்திர உணர்வுகளுக்கு, தேடல்களுக்குத் தடையாக இருப்பதை அவன் எப்போதோ தெரிந்துகொண்டிருக்கிறான்.

அவன் அவளிடம் பெரிதாக வாதம் செய்ய முடியாது. அவள் படித்த பெண் மட்டுமல்ல, லண்டனிலும் தங்கள் மகன்களுக்குச் சீதனம் தேடும் தாய்களில் ஒருத்தியான அவனின் தாயைத் திருப்திப் படுத்தியவர்கள்.

இருவர் வீட்டாரும். சாதி, சமயம், வருவாய் என்பன பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் இது. சுதாகரனின் மனைவி சாதாரணமான ஒரு பெண். பெரிய அழகி என்று யாரும் இன்னொரு தரம் தலையைத் திருப்பிப் பார்க்க வைப்பவள் அல்ல. ஆனால் சிறந்த நிர்வாகியாய் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவாள் என்று அவனுக்குத் தெரியும்.

கவிதை எழுதிய உதயனுடன் பழகியதாலோ என்னவோ,சுதாகரன் சாடையாக ஒரு கலாரசிகன். பணத்தற்கப்பால் மனதுக்குச்; சந்தோசம் தரும் வாழ்க்கை ஒன்று இருப்பதைச் சாடையாகத் தெரிந்து கொண்டவன்.அழகை ரசிப்பவன். மனைவியுடன்,கடற்கரையில் கால் பதித்து விளையாட ஆசையாயிருப்பவன். மனைவிக்கு அந்தவிதமான ‘பைத்திய’ உணர்வுகள் ஒன்றுமில்லை என்று அவனுக்குத் தெரியும்.

இருவரும் இப்போதுதான் வாழ்க்கையின் ஆரம்பப்படிகளில் ஏறியிருக்கிறார்கள். தங்களுக்கென்று ஒரு வசதியான வாழ்க்கையை அமைக்கும் வரையும் தங்களுக்கு பிள்ளைகள் தேவையில்லை என்று அவன் மனைவி சொல்கிறாள். குழந்தை வந்தால் அவள் வேலை செய்ய முடியாது. வாழ்க்கையில் ஏதோ ஒன்று திருப்தியற்ற வழியில் நகர்வதாக அவனுக்குப் பட்டது.

இன்று, அவனின் மனைவியின் சொந்தக்காரர்களின் நண்பர் ஒருத்தரின் மகனுக்குத் திருமணம் நடப்பதால் அங்கு வந்திருக்கிறான்.

கல்யாண வீட்டில் அவனின் நண்பன் உதயனைக் காணவில்லை. லண்டனுக்கு வந்தபின் அவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.

பண்ணைக் கடற்கரையில் அந்தமாலை அழகை ரசித்து அலட்டல் செய்யும் வாழ்க்கை நேற்று ருசித்த மாம்பழத்தின் நினைவாக எப்போதோ மறந்து விட்டது.

உதயனின் வாழ்க்கை நிலை சுதாகரனின் வாழ்க்கைத் தரத்தை எந்த விதத்திலும் எட்டாதவிதத்தில் மாறிவிட்டது. 81மு; ஆண்டு அவர்கள் பண்ணைக் கடற்கரையில், தங்கள் வாழ்க்கையை முதலீட்டாக்கிச் செய்த பந்தயம் பிடித்தது குழந்தை விளையாட்டைவிட வேறோன்றுமில்லை அவர்கள் உணரத் தொடங்கியது இன்றல்ல.

அவர்களின் அந்தச் சந்திப்பின் சில வாரங்களின் பின் அவர்கள்களின் கலைப் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரிந்தபோது கலாச்சாரத்தின் ஆத்மா யாழ்ப்பாணத்தில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த ஐக்கியதேசியக் கட்சியால் குழி தோண்டி புதைக்கப் பட்டதைக்கண்டு துடித்தெழுந்தவர்களில் பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள். ஏற்கனவே, மறைமுகமாக நடந்துகொண்டிருந்த ‘விடுதலைப்போரின்’ தாக்குதல்கள் பல பக்கங்களிலும் வெடித்தன. தமிழர்களிடையே பல கட்சிகள் பல தலைவர்கள், பல குழுகுழுக்கள்…அப்பப்பா எத்தனை மாற்றங்கள்!

பண்டைய தமிழ்க்கலாச்சாரத்தைப் பறைசாற்றும் கோயில்கள், நாற்சார வீடுகள், பல பொருட்களையும் வாங்கக் கூடிய பிரமாண்டமான பெரியகடை,சிங்கள இராணுவத்தின் அகோர இனவெறிக்குத் தீயிலிட்டுப் பலியாகின.

உதயன் குடும்பத்தினர், இராணுவத்தின் ஊழிக்கூத்தால் எரிக்கப் பட்ட வீடிழந்து தெருவுக்கு ஓடிவந்த பல தமிழ்க் குடும்பங்களில் ஒன்று.

பிரச்சினை யாழ்ப்பாணத்தில் பெரிதாக வரமுதல் கொழும்புக்கு ஓடிவந்த சுதாகரன் குடும்பத்தை, 83ம் ஆண்டு கொழும்பிலிருந்து,ஆட்சி பீடத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களின் உதவியுடன் குண்டர்கள், தமிழர்களைக் கொலைசெய்து,அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்து அவர்களை நாடோடிகளாகளாத் துரத்தியது.

இரண்டு வருடங்களின் பின் எப்படியோ சுதாகரன்; லண்டனுக்கு வந்து விட்டான். உதயனின் வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. ஓருகாலத்தில் உதயனின் பெற்றோர்களுக்குச் சமுதாயம் கொடுத்த மரியாதையைக் கண்ட சுதாகரனே பொறாமைப் பட்டிருக்கிறான். உதயனின் தாய் தகப்பன் இருவரும் ஆசிரியர்கள். நல்லவிடயங்களைப் போதிப்பவர்கள். அத்துடன் உதயனின் தமயன் ஒரு முற்போக்கான கவிஞன்.உதயன் கவிதை என்ற பெயரில் தனது கற்பனைக் குதிரையை ஓடவிட்டதற்கு அவன் தமயனும் ஒரு காரணம்.

தமிழர் விடுதலைப்போராட்டத்தின் பலதரப் பட்ட பிரசாரங்களால் இயக்கத்திற் சேர்ந்து தங்களையழித்துக்கொண்டவர்களில் உதயனின் தமயனும் ஒருத்தன். இராணுவத்தின் ஷெல் அடியால் காலிழந்த உதயன் பலவருடங்கள் டியுட்டரியில் படிப்பித்துப் பிழைத்துக்கொண்டிருந்தான்.

அண்மையிற்தான் யாரோ ஒருத்தரின் உதவியில் லண்டன் வந்திருக்கிறான்.

இன்று நடந்த கல்யாணம், லண்டனில் பிரபலமாகவிருக்கும் ஒரு தமிழ்ப் பிரமுகரின் மகனின் திருமணம். மிகவும் ஆடம்பரமாக நடக்கிறது. ஓருகாலத்தில் துணிக்கடையில் வேலைசெய்த அழகி கவிதாவும் வந்திருக்கிறாள். அவள் யாரைத் திருமணம்; செய்தாள், எப்படி லண்டனுக்கு வந்தாள், என்றெல்லாம் சுதாகரனுக்குத் தெரியாது.

அவன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிப் பலவருடங்களாகி விட்டன.

அன்று பின்னேரம்,கல்யாண மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது அவனின் மனைவி,அந்த ஆடம்பரமான திருமணத்தைப் பற்றி எதோ பேசிக் கொண்டிருந்தாள்.

‘அப்படி ஆடம்பரமாகத் திருமணம் செய்ய எங்களைப்போல் அரசாங்க உத்தியோகத்தர்களால் முடியாது.அவர்கள் ஆள்கடத்தல் வேலை செய்து உழைப்பவர்கள். வரிகட்டாத செல்வத்தை வாரி இறைக்கிறார்கள்’ என்று முணுமுணுத்தாள்.அவளுக்குப் பணம் முக்கியம். வசதியான வாழ்க்கைவரும்வரை பிள்ளையே வேண்டாம் என்று சொல்லி விட்டவள். லண்டனிற் தமிழர்கள், எப்படியெல்லாமோ பிழைக்கிறார்கள் அதற்கெல்லாம் அவன் விளக்கம் தேடமுடியாது.

அவனுக்குப் பணத்தின் அடிப்படையில் வாழ்க்கையின் சந்தோசத்தை அடிப்படையாக வைத்துப் பேசுவதைக்; கேட்கத் தர்மசங்கடமாகவிருந்தது.அவன் லண்டனுக்கு வந்து இப்போதுதான் ஏதோ தலைநிமிர்ந்து கொண்டிருக்கிறான்.

அன்றிரவு கவிதா தேவையில்லாமல் அவன் நினைவில் வந்து குழப்பிக் கொண்டிருந்தாள். பணத்தை மேன் படுத்தித்தானே அவர்களும் அன்று கவிதாவைப் பற்றிப் பந்தயம் பிடித்தார்கள்?

உதயனுடன் பேசவேண்டும்போலிருந்தது.டெலிபோன் எடுத்ததும் உதயன் வீடடிலிருந்தான்.இரவுவேலை செய்யும் உதயன் அன்று லீவில் நின்றிருந்தபடியால் சுதாகரன் மகிழ்ச்சியுடன் தனது நண்பனுடன் பேசினான்.

உதயன், ‘கல்யாணம் எப்படி என்று கேட்டான்.

‘நீ ஏன் வரவில்லை’ என்று கேட்டான் சுதாகரன்.

‘கவிதா வந்திருப்பாள் அதுதான் நான் அங்கு வரவில்லை’,

கவிதாவுக்கும் உதயனுக்கும் இந்தக் கல்யாணத்துக்கம் என்ன சம்பந்தம்?

‘இன்றைய கல்யாண மாப்பிள்ளை அவளின் சொந்தக்காரன்’;..உதயனின் குரலில் சோகம்.

சுதாகரனுக்க விளங்கவில்லை.

‘என்னடா பேசாமலிருக்கிறாய்?’ உதயன் சுதாகரனின் மௌனத்தைக் கண்டு கேள்வி கேட்டான்.

‘உனக்கும் கவிதாவுக்கும் இந்தக் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ சுதாகரன் குழப்பத்துடன் கேட்டான்.

‘உனக்கு நாங்கள் ஒருகாலத்தில் நாங்கள் அவளைக் காரணம் காட்டிச் செய்து கொண்ட பந்தயம் ஞாபகமிருக்கிறதா??’

உதயன் ஆறுதலாகக் கேட்டான்.

‘ம் ம்;..அதற்கென்ன?’

‘நீ கொழும்புக்கு ஓடிவந்தபின், அவனது சொந்தக்காரன் ஒருத்தன் எனது சினேகிதனானான். அவனிடம் வேடிக்கையாக நாங்கள் செய்து கொண்ட பந்தயத்தைச் சொன்னேன்..அதாவது கவிதாவை விட அழகியாக, பணக்காரியாக, பெரிய சீதனத்துடன் கல்யாணம் செய்யவேண்டும் என்ற நீ என்னுடன் செய்த பந்தயத்தை முட்டாள்த் தனமாக அவனிடம் சொல்லிவிட்டேன்.அவன் அநியாயப்போனவன்,அவளிடம் போய் அதைச் சொல்லி விட்டான்.

அவள்,கவிதா, நான் படிப்பித்த டியுட்டரி தேடிவந்து என்னைக் கண்டபாட்டுக்குத் திட்டினாள். சாபம் போட்டாள்.தன்னை ஒரு போக்கற்ற பெண்ணாக-வேடிக்கைப் பொருளாக, வக்கில்லாத ஏழையாக நாங்கள் நடத்தியதைத் திட்டினாள். அவள் திட்டிய கொஞ்சநாளில், கனடாவிலிருந்து வந்த அவளது தூரத்துச் சொந்தக்காரனைச் செய்து கொண்டு போய்விட்டாள். மிக மிக வசதியாக வாழ்வதாகக் கேள்விப் பட்டேன். இலங்கையில் நடந்த திருமண வீடியோவை யாரோ கனடாவுக்க அனுப்ப, அந்த வீடியோவிலிருந்த எத்தனையோ பெண்களுக்கு நடுவில் பேரழகியாகத் திரிந்த அவளைத் தேடிப்பிடித்து அவள் கணவன்; திருமணம் செய்துகொண்டானாம்’.

சுதாகரனுக்குக் குற்ற உணர்வு வந்தது. சுதாகரன்தான் வேடிக்கையாகப் பந்தயம் பிடித்தான். அது வெறும் விளையாட்டு நிகழ்ச்சியல்லவா?

‘நாங்கள் வசதியானவர்கள் என்றபடியால் அவளை தூரத்தில் வைத்துப் பார்த்தோம். அவள் ஒரு அழகி மட்டுமல்ல, நல்லதொரு பெண் என்பதை நாங்கள் அடையாளம் காணவில்லை.’உதயனின் குரல் கரகரத்தது.

சுதாகரனுக்கச் சடடென்ற ஏதோ விளங்கியது.

‘ உதயன் நீ கவிதாவை விரும்பியிருந்தாயா?’

உதயன் மறுமொழி சொல்லவில்லை.

சுதாகரனுக்குப் பலவிடயங்கள் இப்போது விளங்கின. அந்தக் காலத்தில், பண்ணைக் கடற்கரையின் அந்திமாலைஅழகை ரசிக்கச் சுதாகரனை இழுத்தக்கொண்டு போனவன் உதயன். உதயன்,தனது அழகிய கவிதைகளில் நிலாவையும் மலரையும் வர்ணித்ததெல்லாம் கவிதாவுக்காகவா?

அவள் அழகுபற்றி அவர்களுக்கள் விவாதம் வந்தபோது, பந்தயம் பிடித்தவன் சுதாகரன், அப்போது உதயன் தர்மசங்கடப் பட்டது ஞாபகம் வருகிறது;. இந்த உண்மைகளை அவன் ஏன் கவிதாவுக்கச் சொல்லவில்லை?

நண்பனிற் பரிதாபம் வந்தது.

‘நான் அங்கு வந்து அவளைச் சந்திக்க விரும்பவில்லை.அவள் தன்னை விரும்பியவனைச் செய்திருக்கிறாள்..தான் விரும்பியவனைச் செய்திருக்கிறாளா தெரியாது.அவனுக்கு இவள் இரண்டாம்தாரம்..அவனுக்கு இவளை விட பதினைந்த வயது வித்தியாசம்..எங்களுக்குப் பாடம் படிப்பிக்க ஒரு பணக்காரனைச் செய்திருக்கிறாள். அது ஒரு அன்பான கல்யாணமா? அல்லது எங்களிலுள்ள ஆத்திரத்தின் பிரதிபலிப்பா எனக்குத் தெரியாது. அதுதான் நான் அங்கு வரவில்லை’ உதயன் சோகமாகச் சொன்னான்.

உதயனின் பதில் ஒருவித்தில் எரிச்சல் தருவதாக இருந்தது. ஓருகாலத்தில் வேடிக்கையாகச் செய்து கொண்ட பந்தயத்தை, இன்னொருவனிடம் சொன்னதால் அவனது காதலையே இழந்துவிட்ட கையாலாகத்தனம் கோபத்தைத் தந்தது.ஆனால் சந்தர்ப்பங்கள் எப்படி ஒருத்தனின் வாழ்க்கையைத் தலைகீழாக்கும் என்பதற்கு உதயனின் வாழ்க்கை உதாரணம்.

சுதாகரனுக்குக் கவிதாவிலும்; கோபம் வந்தது. ஆனாலும் அவள் உதயனைக் கோபத்தில் திட்டியதற்கும்; காரணம் புரிந்தது.

அவள் அழகி மட்டுமல்ல. தனது அழகால் தலைக்கனம் பிடிக்காத பெருந்தன்மையான பெண்.

தன்னை இளைஞர்கள் வாயுறப் பார்ப்பதை அவள் தெரிந்து கொண்டும் ஒருநாளும்,’ என்ன வேணும் உனக்கு, உனக்கு அக்கா தங்கச்சி கிடையாதா?’ என்று சண்டைக்கு வரவில்லை.

தனது கடைக்கண்ணால்- ஒரு கணப் பார்வையால் இவர்களை அளந்து விட்டுத் தன்பாட்டுக்குப் போனவள்.

ஆனால் தன்னை இவர்கள்,ஒரு நுகர்ப் பொருளாக வைத்து இலாப நட்டப் பார்வையுடன் வாழ்க்கை; பந்தயத்தைப் பிடித்ததை அவளாற் தாங்க முடியாதிருந்திருக்கிறது.

அந்தக் காலத்தின் அவள் அனுபவித்த ஏழ்மை,இல்லாமை என்பன இவர்களின் பந்தயத்தின் மூலமாகவிருந்தது என்பது அவளாற் தாங்கமுடியாதிருந்திருக்கின்றது.

‘யார் இந்த பந்தயத்தில் ஜெயித்தவர்கள்?

சுதாகரன் கண்களை மூடிக்கொண்டு யோசித்தான். அவன் நிச்சயமாகக் கவிதாவை விட அழகான பெண்ணைத் திருமணம் செய்யவில்லை. கவிதாவை விட வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டதாகவும் தெரியவில்லை.!

சுதாகரனின் ஆணவத்தால் உண்டாகிய பந்தயத்தில் தோற்றுப்போனவன் உதயனா?,

பாவம் உதயன், நல்ல மனம் படைத்தவன். அவன் உண்மையைக் கவிதாவுக்குச் சொல்லியிருந்தாலும் காலிழந்த அவனைக் கவிதா செய்திருப்பாளா?அளந்துபேசத் தெரியாத வாயால் அல்லது, ஒருகாலிழந்த தன்னைக் கவிதா விரும்புவாளோ என்ற தயக்கத்தில்,வாழ்க்கையில் அவன் மனமார ரசித்த-காதலித்த–மறைமுகமாக ஆராதனை செய்த பெண்ணை இழந்துவிட்டான்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *