Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பதுங்குகுழி வாழ்வு

 

எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூர வாழ்க்கை. அவள் மீண்டும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

“அழாதையம்மா! கண்ணைத் துடை. என்ன செய்யிறது? தமிழராய்ப் பிறந்து தொலைச்சிட்டோம் அதுதான்.”

“அதுக்கு கடவுளுக்குக் கூடக் கண்ணில்லையா?” என்றபடி அவள் மேலும் விம்மத் தொடங்கினாள். பதுங்கு குழிக்குள் இருந்து இன்றுடன் வெளியுலகு பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டிருந்தது. நேற்றும் முந்தாநாளும் பிள்ளைகள் நித்திரை கூடக் கொள்ளவில்லை. ஒரே செல்லடி. இன்றுதான் செல்லடி கொஞ்சம் குறைந்து பிள்ளைகள் நித்திரை கொள்கிறார்கள்.

பாவம் அவள் என்னதான் செய்வாள்? வாழ வேண்டிய வயதில் கணவனை யுத்தத்தின் கோரப் பற்களுக்கு இரையாக்கிவிட்டு தனிமையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து கண்ணை இமை காப்பது போல காத்து வந்தாள். இப்போது அவளுக்கு தன் வயதான தந்தைதான் எல்லாமே. சிறு வயதில் தாயை யுத்தத்தில் பலி கொடுத்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த அவள் போரின் பல்வேறுபட்ட முகங்கள் பற்றி நன்கறிவாள்.

என்னதான் இருந்தாலும் இன்று இப்படியொரு இக்கட்டான சூழலில் இருப்பதை எண்ணி அல்லும் பகலும் அழுது கண்ணீர் வடித்தாள்.

மூத்தவன் ஏழு வயது. இளையவள் மூன்று வயது. நடுவிலான் ஐந்து வயது. ஒட்டி உலர்ந்த தேகம், நீண்ட அழுக்கேறிய தலைமுடி என்று பிள்ளைகள் பிறர் பார்ப்பதற்கே அசிங்கமாக நீண்ட நாள் குளிப்பின்றி உண்ண உணவின்றி, தாகம் தீர்க்க, நீர் இன்றி பதுங்கு குழியில் சோர்ந்து துவண்டு படுத்திருந்த தன் பிள்ளைகளை உற்றுப் பார்க்கிறாள்.

‘என்ரை பிள்ளையளுக்கு ஒரு நேரக் கஞ்சிக்கெண்டாலும் வழி காட்டு கடவுளே.’

வந்தாரை வாழ வைச்ச வன்னியிலே இப்பிடி ஒரு நிலையா என்று எண்ணி பெருமூச்செறிந்து கண்ணீர் விட்டாள்.

“பிள்ளை! நான் போய் ஏதும் பாத்துக்கொண்டு வாறன். கொஞ்சம் அமந்து கிடக்குது. இந்த இடைக்குள்ளை ஒருக்கால் கவனமாய் இருபுள்ளை! வாறன்” என்றபடி எழுந்து நடக்கத் தொடங்கினார்.

“அப்பா பாத்து போட்டு வாங்கோ” என்று வழியனுப்பி வைத்துவிட்டு பதுங்கு குழி வாசலில் அமர்ந்தாள். சற்று நேரம் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவளை எங்கோ மிக அருகில் விழுந்த ஒரு செல்லின் சத்தம் மீண்டும் சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.

இப்போது இன்னும் மிக அருகில் சரமாரியாக செல்கள் விழுந்து வெடிக்கின்றன.

‘கடவுளே! அப்பா போனவர் என்னபாடோ தெரியாது. கடவுளே அவரைச் சுகமாய் கொண்டு வந்து சேர்த்திடு’ என்றபடி தானும் பதுங்கு குழிக்குள் இறங்கினாள்.

“என்னம்மா செல்லடிக்கிறாங்கள்! உள்ளுக்கை வாங்கோ! அம்மா! தாத்தா எங்கேயம்மா”

கண்ணை கசக்கிக் கொண்டு கத்தினான் அவள் தலைமகன்.

“தாத்தா கிட்டத்திலைதான் போயிருக்கிறார். வருவாரடா!”

“அம்மா பசிக்குதம்மா. இண்டைக்கெண்டாலும் சாப்பிட ஏதாவது தாவெனம்மா”

கடைக்குட்டி அழுதபடி எழும்பினாள். அவள் தனது பிள்ளையின் ஒட்டிய வயிற்றைப் பார்க்கிறாள். மூன்று மாதங்களுக்கு முன் மெழுகு போல தளதளவென்று இருந்த தன் மகளா இது? மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து. மொத்தத்தில் எல்லோருமே உருமாறி மெலிந்து எலும்பும் தோலுமாய்.

பதுங்கு குழியின் ஓர் மூலையில் வைக்கப்பட்ட தண்ணீர்ப் பானையில் இருந்த சொற்ப தண்ணீரை பங்கிட்டுக் குடித்து விட்டு பிள்ளைகள் மீண்டும் பங்கருக்குள் போடப்பட்டிருந்த கிடுகில் சுருண்டு படுத்தனர்.

இப்போது செல்ச் சத்தம் கொஞ்சம் குறைந்து அமைதியானது. மெதுவாக பதுங்கு குழி வாசலால் வெளியே தலையை நீட்டி தன் தந்தை வருகிறாரா என உற்றுப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தறப்பாள் குடிசைகள் தான் கண்ணில் பட்டன. தொலைவில் ஒற்றைப் பனை மரமும் பெருவெளியும் அவளை மேலும் அச்சுறுத்தின.

நீண்ட நேரத்தின் பின் கையில் ஒரு சிறு முடிச்சுடன்:

“கடவுளே! என்ன கொடுமையப்பா. உதிலை போட்டு வரக்கிடையிலை உயிர் போய் வந்திட்டுது பிள்ளை” என்றபடி பதுங்கு குழி வாசலில் வந்து மூச்சு வாங்க, பொத்தெண்டு குந்தி விட்டார்.

“ஒரு பிடி சோத்துக்காக உயிரைப் பணயம் வைச்சு வாழ வேண்டிய கொடுமை உலகத்திலை தமிழருக்கு மட்டும்தான். கடவுளே! ஏன்தான் நாங்கள் தமிழராய்ப் பிறந்தோமோ?”

“நீ கத்துறது ஒண்டும் கடவுளுக்கு கேக்கப் போறதில்லை. பிள்ளை சும்மா உதுகளை விட்டிட்டு போ! போய் ஏதும் ஏதனம் எடுத்து வா! பாவம் பிள்ளையள்”

அவள் முடிச்சை மெதுவாக அவிழ்த்துப் பார்க்கிறாள். காய்ந்து உதிர்ந்த தாமரைப் பூக்களின் வட்ட வடிவிலான பதினைந்துக்கு மேற்பட்ட அடிப் பகுதிகள்.

“என்னப்பு இது தாமரைப் பூவின்ரை…”

“ஓம் பிள்ளை! இதுதான் இண்டைக்கு கிடைச்சது. இதை உடைச்சு அந்த முத்துக்களை எடுத்துத் தா. நான் வடிவாய் பதப்படுத்தி தாறன்.”

“என்னன்டப்பா.”

“உந்த ஆராய்சியளை விட்டிட்டு முதல்ல வா. இதை உடைப்போம். இது சோக்காய் இருக்கும் மோனே! பச்சையாய் திண்டால் சும்மா தேங்காய் பூரான் மாதிரி சோக்காயிருக்கும். உனக்கெங்கே இது பற்றி தெரியப் போதுது.” என்றபடி அவர் உடைத்து மணிகளை ஒன்றாக்க தானும் கூடச் சேர்ந்து உடைத்து சீராக்கிளாள்.

பின்னர் நீரில் வடித்து எடுத்து மகள் கையில் கொடுத்தார்.

“என்னப்பா இப்பிடியே சாப்பிடலாமோ அல்லது…”

“இல்லை மோனே! சில வேளை வயித்துக்குள்ளை ஏதும் செய்யும். வெறு வயித்திலை… எதுக்கும் அவிச்சு எடு மோனே!”

“ஓமப்பா..” என்றபடி அவள் பச்சை விறகை மூட்டி அடுப்பை பற்ற வைத்து அவிக்கத் தொடங்கினாள்.

“பசியோடை எத்தினை நாளைக்குத்தான் கிடக்கிறது. அந்தக் காலத்திலை மோனே, நாங்கள் பொழுது போக்காய் வத்துக் குளத்திலை பெடியளாய் இறங்கி காஞ்சு போன தாமரைப் பூக்களைப் புடுங்கி, சேத்து, காய வச்சு மாவாக்கி புட்டவிச்சு, நல்ல மீன் குழம்பு விட்டு, பிசைஞ்சு சாப்பிடுவோம் இண்டைக்கு ஒரு உரல் இல்லை. தேங்காய் இல்லை. ம் எல்லாம் காலந்தான் பதில் சொல்ல வேணும்.”

சிறிது நேரம் அடுப்புடன் போராடி ஒருவாறு அவித்து எடுத்து பாத்திரம் ஒன்றில் போட்டு தன் பிள்ளைகளுக்குக் கொடுத்தாள்.

அவசர அவசரமாக பிள்ளைகள் உண்பதைப் பார்த்து வருத்தப்பட்டபடி ஒரு கை அள்ளி தந்தையிடம் கொடுத்து விட்டு தானும் ஒரு பிடியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீரைக் குடித்து மீதி வயிற்றை நிறைத்தாள்.

“அம்மா! கடலை மாதிரி நல்லாய் இருந்ததம்மா. நாளைக்கும் கொஞ்சம் அவிச்சுத் தருவியாம்மா?”

நடுவில் செல்லக் குட்டி தன் பங்குக்கு அவளைக் கேட்க அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

கையில் இருந்த கழுவிய வெற்றுப் பாத்திரத்தையும் வெறுமையாகத் தரையில் கிடந்த தண்ணீர்க் குடத்தையும் மீண்டும் ஒரு தடவை பார்த்துப் பெருமூச்செறிந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)