பதினோராவது பொருத்தம்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2013
பார்வையிட்டோர்: 39,532 
 

இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?”

தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம்.

” ‘மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத் துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம் இல்லை. இது எல்லாம் ஒரு நாள் சந்தோஷம்!”

மூத்த நிருபர் ஒருவர் கேட்டார்…

”இந்தச் சின்ன வயதிலேயே சமூக சேவையில் இறங்கிட்டீங்க. அதுல சிறப்பா சேவை செஞ்ச துக்காக தேசிய விருதையும் வாங்கிட்டீங்க. உங்களுடைய எதிர்காலக் குறிக்கோள் என்ன?”

அழகாகப் புன்னகைத்த வர்ஷாவின் சீரான பல் வரிசை ஒரே ஒரு விநாடி வெளிப்பட்டு உடனே மறைந்தது.

பதினோராவது பொருத்தம்

”நான் இப்போ ஒரு குழந்தையோட மனநிலையில் இருக்கேன். ஒரு குழந்தைக்குத் தன்னோட கடந்த காலத்தைப் பத்தின கவலையும் இருக்காது. எதிர்காலத்தைப் பற்றின பயமும் இருக்காது. அது தன்னோட நிகழ்காலத்தில் மட்டும் சந்தோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருக்கேன். என்னோட அப்பா சத்தியநாதன் ஒரு பெரிய பிசினஸ் மேன். எனக்கு அம்மா கிடையாது. அப்பாகிட்ட செல்லம் அதிகம். நான் எம்.ஏ. சோஷியாலஜி முடிச்சதும் அப்பா என்கிட்ட ‘என்னம்மா… அடுத்தது கல்யாணம்தானே? மாப்பிள்ளை பார்க்கட்டுமா?’னு கேட்டார். நான் அதுக்கு உடனே,

‘இல்லப்பா… எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். ஒரு மூணு வருஷத்துக்காவது சமூக சேவை பண்ணாலாம்னு இருக்கேன். நான் சொல்லும்போது நீங்க எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சா போதும்னு சொன்னேன். அவரும் ஒப்புக்கிட்டார். நான் கடந்த ஆறு மாத காலமாக இந்த ‘மயிலிறகு’ என்கிற சமூக அமைப்பை நடத்திட்டு வர்றேன்!”

”மயிலிறகு என்ற தலைப்பைத் தேர்ந்து எடுத்ததற்கு என்ன காரணம்?”

”மயிலிறகு ஒரு மென்மையான பொருள். நான் தொடங்கி இருக்கிற இந்தச் சமூக அமைப் போட நோக்கமே, வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திச்சு, ஒருவித விரக்தி மனப்பான்மையோடு இருக்கிறவங்களோட இதயங்களை மென்மையான வார்த்தைகளால் வருடி, அவங்களுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் ஊட்டுவதுதான்!”

”அதாவது, இது ஒரு வகையான கவுன்சிலிங்?”

”ம்… அப்படியும் வெச்சுக்கலாம்.”

”உங்களுடைய மயிலிறகு மூலமாகப் பயன் அடைந்து, வாழ்க்கையில் வெற்றிபெற்ற நபர்கள் யாராவது உண்டா?”

”ஒரு சின்னப் பட்டியலே இருக்கு. அவங்க சம்பந்தப்பட்ட விவரங்களை நான் தர்றேன். நீங்க அவங்களையே போய்ப் பார்க்கலாம். வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலையோட விளிம்புக்குப் போன எத்தனையோ பேருக்கு வாழ்க்கையோட வசந்த காலத்தைக் காட்டியிருக்கேன்” – வர்ஷா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளுடைய இடது உள்ளங்கையில் பதுங்கி இருந்த செல்போன், தன்னுடைய ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து நிருபர்களுக்கு ஒரு ‘எக்ஸ்கியூஸ் மீ’யைச் சொல்லிவிட்டு… இடது காதுக்குப் பொருத்தினாள். மெள்ளக் குரல் கொடுத்தாள்.

”ஹலோ!”

”அம்மா வர்ஷா… நான் சபாபதி பேசறேன்…”

சபாபதி அவளுடைய அப்பாவின் பால்ய காலத்து நண்பர். மாதம் ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்துவிடுவார். ஒரு மணி நேரமாவது அப்பாவோடு உட்கார்ந்து அயனாவரத்தில் நடந்த விபத்தில் இருந்து ஐ.நா. சபையில் நிறை வேற்றப்பட்ட அண்மைக்காலத் தீர்மானம்வரை பேசிவிட்டுப் போவார்.

நிருபர்களைவிட்டுச் சற்று விலகி வந்து பேசினான்.

”வணக்கம் அங்கிள்!”

”என்னம்மா… விருதெல்லாம்வாங் கிட்டே போலிருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் பேப்பரைக் கொண்டுவந்து காட்டினான் விகாஷ். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. கங்கிராட்ஸ் வர்ஷா!”

”தேங்க்யூ அங்கிள். பை த பை… உங்க சன் விகாஷ் எப்போ யு.எஸ்-லேர்ந்து வந்தார்?”

”ரெண்டு நாளாச்சும்மா. ஜெட்லாக்னு சொல்லி, பகல் பூராவும் தூங்கிட்டான். ஒரு மாச லீவுல வந்திருக்கான். உன்னை நேர்ல க்ரீட் பண்றதுக்காக அங்கே கிளம்பி வந்துட்டு இருக்கான்.”

”வரட்டும் அங்கிள்… நான் பேசிக்கிறேன்.”

”வர்ஷா…”

மறுமுனையில் குரலை இழுத்தார் சபாபதி.

”சொல்லுங்க அங்கிள்…”

”இந்தத் தடவையாவது நீ அவனை கன்வின்ஸ் பண்ணி, கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைக்கணும். இன்னிக்குக் காலையிலகூட ரிட்டையர்டு ஹை கோர்ட் ஜட்ஜ் ராமானுஜத்தோட பொண்ணு ஜாதகமும் போட்டோவும் வந்தது. பொண்ணு பேரு லயா. பொண்ணு அவ்வளவு லட்சணம். ஆனா, விகாஷ§க் குப் பிடிக்கலை. போட்டோவை ஒரு விநாடிதான் பார்த்தான். தூக்கி வீசிட்டுப் போயிட்டான். பொண்ணுக்கு டபுள் சின்னாம். பிடிக்கலைனு சொல்லிட்டான். எவ்வளவு அழகான பொண்ணைக் காட்டினாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லித் தட்டிக்கழிச்சுடறான்.”

”அங்கிள்… நீங்க கவலையை விடுங்க. இந்தத் தடவை விகாஷை மடக்கிடலாம். போன தடவை அவர் வந்தபோது நான் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். இந்தத் தடவை அவரை எப்படியாவது கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைக்க வேண்டியது என் பொறுப்பு.
அவர் ஒரு அழகான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறார். நம்மோட பார்வைக்கு அழகா இருக்கிற பெண்கள் அவரோட பார்வைக்கு அப்படி இருக்கிறது இல்லை. அது மட்டும் எனக்குப் புரியுது. அவருக்குக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கு. ஆனா, அவரோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு
அமையாததுதான் பிரச்னை.”

”அம்மா வர்ஷா… நீ ‘மயிலிறகு’ சமூக அமைப்பின் மூலமா யார் யாருக்கோ கவுன்சிலிங் பண்ணி, மனரீதியா ஒரு ரிலீஃப் கொடுத்திருக்கே… அந்த ரிலீஃபை விகாஷ§க்கும் கொடும்மா. அவன் எந்தப் பெண்ணை விரும்பினாலும் சரி, நான் அந்தப் பெண்ணையே அவனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கத் தயாரா இருக்கேன்.”

”அட! கவலையை விடுங்க அங்கிள். இந்தத் தடவை விகாஷ் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு யு.எஸ்ஸுக்குக் கூட்டிட்டுப் போறது நிச்சயம்!”- உற்சாகமான குரலில் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தாள் வர்ஷா.

நிருபர்களிடம் பேசிவிட்டு வந்த வர்ஷாவுக்கு முன்பாக அமர்த்தலாகக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் சாய்ந்திருந்தான் விகாஷ்.

ஆறடி உயரம். அவனுடைய இயற்கையான சிவப்பு நிறம் லேசாக அமெரிக்கச் சிவப்புக்கு மாறியிருந்தது. சீராக ட்ரிம் செய்யப்பட்டு இருந்த தாடியும் மீசையும், தலைகொள்ளாத சுருள் முடியும் அவனுடைய தோற்றத்துக்கு போனஸ் பாயின்ட்களை அள்ளிக் கொடுத்திருந்தது. உதட்டில் ஒட்டியிருந்த புன்னகையோடு பேசினான்.

”அரசாங்கம் விருது குடுத்திருக்காங்க போலிருக்கு. வாழ்த்துக்கள்!”

”நன்றி!” என்றாள் வர்ஷா.

”அப்புறம்?”

”அமெரிக்கா எப்படியிருக்கு விகாஷ்?”

”அப்படியேதான் இருக்கு.”

“ஒபாமா?”

”அமெரிக்காவோட பொருளாதாரச் சீர்குலைவைச் சரிப்படுத்த அமெரிக்காவில் டாஸ்மாக் கடைகளை ஆரம்பிக்கலாமானு யோசனை பண்ணிட்டு இருக்கார்.”

வர்ஷா சிரித்தாள். ”விகாஷ்! நீ இப்போ ஜாலியான மூடுல இருக்கே. உன்னோட கல்யாண விஷயத்தைப் பத்திப் பேசலாமா?”

”அதாவது, நீ எனக்கு கவுன்சிலிங் குடுக்கப்போறே.”

”நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. நீ உன்னோட கல்யாண விஷயத்துல ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே?”

”என்னடா இது பெரிய வம்பாப்போச்சு. எனக்கு வரப்போற மனைவி அழகா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?”

”இதோ பார் விகாஷ்… உன்னோட அப்பாவும் என்னோட அப்பாவும் நெருங்கின ஃப்ரெண்ட்ஸ். நீயும் நானும் சின்ன வயசில் இருந்து ஒண்ணாப் பழகிட்டு வர்றோம். ஒரு சமயத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிற முடிவுக்கு அவங்க வந்தபோது, நாம ரெண்டு பேருமே மறுத்துட்டோம். காரணம், அது மாதிரியான எண்ணத்துல நாம பழகலை. போன வருஷம் நீ அமெரிக்காவில் இருந்து வந்தபோது உனக்குப் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தன. அந்த ஒரு மாச காலத்துல சுமார் பத்துப் பெண்களை யாவது பார்த்திருப்போம். என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த பத்துப் பெண்களுமே அழகா இருந்தாங்க. அதுல ஆறு பெண்கள் ரொம்பவுமே அழகா இருந்தாங்க. உன்னோட குடும்ப அந்தஸ்துக்கு ஈடான பெண்களும்கூட. ஆனா, நீ யாரையுமே பிடிக்கலைனு சொல்லிட்டு அமெரிக்காவுக் குக் கிளம்பிட்டே. உன்னோட அப்பா எவ்வளவு வருத்தப் பட்டார் தெரியுமா?” – வர்ஷா பேசப் பேச… விகாஷ்
தன் இடது கையை உயர்த்தி அவளை அமர்த்தினான்.

”என்னோட அப்பா வருத்தப்படறாருங்கிறதுக்காக நான் என் மனசுக்குப் பிடிக்காத பெண் ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன? என் வாழ்க்கையோட லட்சியம் ஒரு அழகான மனைவி!”

”அதாவது ஐஸ்வர்யா மாதிரி?”

”அதுக்கும் மேல!”

”விகாஷ்! உன்னோட மென்டாலிட்டி ஏன் இப்படி இருக்குனு தெரியலை. உனக்குப் பார்த்த பெண்கள் எல்லாருமே அழகா இருந்தாங்க.”

”எனக்கு அப்படித் தெரியலையே?”

”ஜோதிடரீதியா பத்துக்குப் பத்து பொருத்தமும் இருந்தது.”

”நான் எதிர்பார்த்த பதினோராவது பொருத்தம் இல்லையே?”

”விகாஷ்… நான் ஒண்ணு சொல்லட்டுமா?”

”என்ன?”

பதினோராவது பொருத்தம்2

”நீ தேடற அந்த அழகான பெண், உனக்கு இந்தியாவில் கிடைக்க மாட்டா. பேசாம அமெரிக் காவுல எவளையாவது பார்த்துக் கட்டிக்கிட்டு செட்டிலாயிடு.”

”எனக்கு இந்தியப் பொண்ணுதான் வேணும். உலகத்திலேயே இந்தியப் பெண்கள்தான் அழகுன்னு ‘டபிள்யூ.ஹெச்.ஓ’ சொல்லுது தெரியுமா?”

வர்ஷா விகாஷையே முறைத்தாள். அவன் உதட்டில் ஒரு புன்னகை இழையோடியது.

”என்ன அப்படிப் பார்க்கிறே?”

”ஒண்ணுமில்லை. இந்த ‘மயிலிறகு’ மையத்துக்கு எத்தனையோ பேர் எத்தனையோ பிரச்னைகளோடு வர்றாங்க. நான் அவங்களோட பிரச்னைகளை எல்லாம் கேட்டு கவுன்சிலிங் பண்றேன். மன வேற்றுமைகளோடு வருகிற கணவன்-மனைவியை ஒற்றுமைப்படுத்தி அனுப்பிவைக்கிறேன். வாழ்க்கையில் விரக்தி அடைஞ்சு தற்கொலை எண்ணத்தோடு வர்றவங்களைக்கூட ஒரு புது வாழ்க்கைக்குத் திருப்பியிருக்கேன். ஆனா, உன்னோட விஷயத்துல நான் தோத்துட்டேன். உன்னை
எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு தெரியலை.”

”அட! என்ன வர்ஷா? இதுக்குப் போய் இவ்வளவு ஃபீல் பண்றே? எனக்கு வர்ற மனைவி ரொம்பவும் அழகா இருக்கணும்னு நினைக்கிறேன். இதை ஏன் ஒரு பிரச்னையா நீ நினைக்கிறே? நான் லீவு முடிஞ்சு அமெரிக்கா போறதுக்குள்ள நான் தேடிக்கிட்டு
இருக்கிற அந்த அழகான பொண்ணு கிடைச்சுடுவா.”

”ஸாரி விகாஷ்…”

”எதுக்கு ஸாரி?”

”நியாயமான ஆசைகள் மட்டுமே ஜெயிக்கும். உன்னோடது பேராசை. இந்தத் தடவையும் நீ அமெரிக்காவுக்கு தனியாத்தான் போகப்போறே.”

”உன்னோட சாபத்துக்கு நன்றி… நான் வரட்டுமா!” விகாஷ் எழுந்து கொண்டான்.

“உனக்குக் கிடைச்சிருக்கிற ‘மகிள ரத்னா’ விருதுக்கு மறுபடியும் என் வாழ்த்துகள்.”

வர்ஷாவின் கையை வலிந்து பற்றிக் குலுக்கிவிட்டு வேகமாகக் கிளம்பினான் விகாஷ்.

அந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் கரைந்துபோயிருக்க, மூன்றாவது நாள் மதியம் வர்ஷா பிளஸ் டூ பரீட்சையில் தோல்வி அடைந்த ஒரு மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்துவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நினைத்த நேரத்தில், வாசலில் கார் வந்து நின்றது.

விகாஷ§ம் அவனுடைய அப்பா சபாபதியும் காரைவிட்டு இறங்கி உள்ளே வந்துகொண்டு இருந்தார்கள்.

வர்ஷா மலர்ந்தாள்.

”வாங்க அங்கிள்…”

”என்னம்மா… வீட்டுக்குக் கிளம்பிட்டியா? ஒரு ரெண்டு நிமிஷம் உன்கிட்டே பேசிட்டு நான் கிளம்பறேன்.”

”மொதல்ல உட்காருங்க அங்கிள். விகாஷ் நீயும் உட்கார்.”

இருவரும் உட்கார்ந்தார்கள். வர்ஷா அவர்களுக்கு எதிரே இருந்த
நாற்காலியில் குழப்பத்தோடு சாய்ந்தாள். ‘இரண்டு பேரும் சேர்ந்து
வந்திருக்கிறார்கள். எதற்காக இருக்கும்?’

”சொல்லுங்க அங்கிள்…”

”மொதல்ல உனக்கு ஒரு பிக் தேங்க்ஸ். நீ என்ன சொன்னியோ… ஏது சொன்னியோ… எனக்குத் தெரியாது. விகாஷ் கல்யாணம் பண்ணிக்க ஒப்புக்கிட்டான். இன்னிக்குக் காலையில் புரோக்கர் ஒரு அலையன்ஸ் கொண்டுவந்தார். மிடில் க்ளாஸ் ஃபேமிலிதான். பொண்ணோட அம்மா ஒரு ஸ்கூல்ல ஹெச்.எம். அப்பா பேங்க் அக்கவுன்டன்ட். பொண்ணு ஐ.டி. கம்பெனியில வேலை பார்க்குது. பொண்ணோட போட்டோவைப் பார்த்துட்டு, விகாஷ் ஓ.கே. சொல்லிட்டான். இன்னிக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கு பெசன்ட் நகர்ல இருக்கிற பொண்ணு வீட்டுக்குப் பெண் பார்க்கப் போறோம். நீ அவசியம் வரணும்!”

வர்ஷா தன் அழகிய விழிகளை வங்கக் கடலாக விரித்தாள்.

”என்ன விகாஷ்… அப்பா சொல்றது நிஜமா?”

”நிஜமோ… நிஜம். சாயந்தரம் நாலு மணிக்கெல்லாம் நீ ரெடியாயிடணும். நான் கார்ல வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்”- சொன்ன விகாஷ் சபாபதியிடம் திரும்பினான்.

”அப்பா… நீங்க ஆபீஸுக்குப் போய்ட்டு எனக்கு காரைத் திருப்பி
அனுப்புங்க. நான் வர்ஷாகிட்ட பேசிட்டு வீட்டுக்குப் போயிடறேன்.
வீட்டுக்குப் போற வழியில் எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு.”

சபாபதி மறுபடியும் வர்ஷாவிடம் சொல்லிக்கொண்டு காரில் கிளம்பிவிட, வர்ஷா ஒரு குறுஞ்சிரிப்போடு விகாஷை ஏறிட்டாள்.

”யார் அந்தப் பேரழகி?”

”பேரு பூஜா.”

”பூஜா?”

”ம்… போட்டோவைப் பார்க்கறியா?” – சொன்னவன், தன்னுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து போட்டோவை எடுத்து வர்ஷாவிடம் நீட்ட, அவள் அதை வாங்கிப் பார்த்துவிட்டு கண்கள் நிறைய அதிர்ச்சி காட்டினாள். பதற்றத் தோடு எழுந்தாள்.

”வி… வி… விகாஷ்… பூஜாவை உங்களுக்கு எப்படித் தெரியும். இந்த போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?”

விகாஷ் ஒரு புன்னகையோடு அவளைக் கையமர்த்தினான்.

”இப்ப எதுக்காக உன்னோட குரலில் இப்படிஒரு சுனாமி? கூல் டவுன். இந்த பூஜாவை ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் எனக்குத் தெரியும். இந்த லெட்டரும் பூஜாவோட போட்டோவும் உன்னோட இதே மேஜை மேலிருந்து தான் எடுத்தேன். ரெண்டு
நாளைக்கு முன்னாடி நீ விருது வாங்கினதைப் பாராட்டறதுக்காக நான் இங்கே வந்தப்ப, நீ பத்திரிகை நிருபர் களுக்குப் பேட்டி கொடுத்துட்டு இருந்தே. நான் உன்னோட ரூமுக்குள்ளே வந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப, மேஜை மேல லெட்டரும் லெட்டரோடு இணைக்கப்பட்டு இருந்த பூஜாவோட போட்டோவும் என் பார்வைக்குப்பட்டது. என்னையும் அறியாம அதைக் கையில் எடுத்துட்டேன். படிச்சும் பார்த்துட்டேன்.”

”அந்த லெட்டரைப் படிச்சுப் பார்த்த பின்னாடியும் அந்த பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் உனக்கு எப்படி வந்தது விகாஷ்?”

”இதோ பார் வர்ஷா… அந்த பூஜா தன் சித்தி பையனோட கல்லீரல் மாற்று ஆபரேஷனுக்குத் தன்னோட கல்லீரலில் இருந்து இருபது சதவிகிதத்தைத் தானமாக் குடுத்து அந்தப் பையனோட உயிரைக் காப்பாத்தி, அவனுக்கு ஒரு புது வாழ்க்கைக் கொடுத்திருக்கா. பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்க எந்த வரன் வந்தாலும் பூஜா ஒரு லிவர் டோனர் என்கிற விஷயம், மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரியக் கூடாதுனு பூஜாவோட அப்பாவும் அம்மாவும் சொல்றாங்க.

அவங்க அப்படிச் சொல்றதுல பூஜாவுக்கு உடன்பாடு இல்லை. இது சம்பந்தமா உன்கிட்ட ஆலோசனை கேட்டு பூஜா லெட்டர் எழுதியிருக்கா. தன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறவன்
யாராயிருந்தாலும், அவனுக்கு, தான் ஒரு லிவர் டோனர் என்கிற விஷயம் தெரியணும்னு நினைக்கிற நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

அதனால பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிற முடிவுக்கு வந்தேன். லெட்டர்ல அட்ரஸ் இருந்ததால பூஜா வேலை செய்யற ஐ.டி. கம்பெனிக்குப் போய் அவளைப் பார்த்தேன். பேசினேன்.

ஆரம்பத்துல அவள் சம்மதிக் கலை. அதுக்கப்புறம் அவளுக்கும் எனக்கும் இருக்கிற பதினோராவது பொருத்தத்தைப் பற்றிச் சொன்னதும் ஒப்புக்கிட்டா.”

வர்ஷா குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினாள்.

”பதினோராவது பொருத்தமா?”

”ஆமா… இந்த கவர்ல என்ன இருக்குன்னு பாரு”- விகாஷ் நீட்டிய கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

அது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட். அமெரிக்காவின் சின்சினாட்டி மெடிக்கல் லேப்பில் இருந்து எண்டாஸ்கோப்பிக் டாக்டர் ரோஜர் ஹென்றி என்பவரால் பூர்த்திசெய்யப்பட்ட ஒரு ரிப்போர்ட்.

ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்துப் பார்த்த வர்ஷா அதிர்ந்து போய் விகாஷை ஏறிட்டாள்.

”வி… வி… விகாஷ். நீ… நீ… ஒரு ‘ஸ்மால் இன்டஸ்டைன்’ டோனரா?”

விகாஷ் ஒரு புன்னகையோடு தலையசைத் தான்.

”ஆமா… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அமெரிக்காவின் சின்சினாட்டி நகர்ல ஒரு சாலை விபத்தில் என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு வயிற்றில் அடிபட்டு, சிறுகுடல் பகுதி முழுவதும் சிதைந்து உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தான். அவனோட உயிரைக் காப்பாற்ற உடனடியாக ஒரு மீட்டர் நீளம் அளவுள்ள சிறுகுடல் வேணும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

பொதுவா, மனிதர்களோட சிறுகுடல் மூணு மீட்டர் நீளம் இருக்கும். ஒரு மனுஷன் ஆரோக்கியமா வாழ அவனுக்கு ரெண்டு மீட்டர் நீளம் உள்ள சிறுகுடல் போதுமானதுனு டாக்டர்கள் சொன்னதால, நான் என்னோட ஃப்ரெண்ட்டுக்கு ஒரு மீட்டர் நீள அளவுக்கு என்னோட சிறுகுடலை டொனேட் பண்ணினேன்.

அவனும் இப்போ ஆரோக்கியமா இருக்கான். நானும் எவ்விதமான ஆரோக்கியக் குறைபாடும் இல்லாம சந்தோஷமாக இருக்கேன். நான் சிறுகுடலை டொனேட் பண்ணது என் அப்பா உட்பட வெளியுலகத்துல யாருக்கும் தெரியாது. ஆனாலும், நான் இந்த உண்மையை மறைச்சு எந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலை.

அதனால்தான் அப்பா காட்டின பெண்களை எல்லாம் பிடிக்கலைனு சொன்னேன். எனக்கு ஏத்த மாதிரியான ஒரு பெண் கிடைக்கிற வரை கல்யாணத்தைத் தள்ளிப்போட ரொம்பவும் அழகான பொண்ணு வேணும்னு அழிச்சாட்டி யம் பண்ணினேன். இப்போ நான் எதிர்பார்த்த படி பூஜா எனக்குக் கிடைச்சுட்டா. பூஜா ஒரு லிவர் டோனர். நான் ஒரு ஸ்மால் இன்டஸ்டைன் டோனர். எங்க கல்யாணத்துக்கு பத்துப் பொருத்தங்களைக் காட்டிலும் இந்த ஒரு பொருத்தம் போதாதா?”

வியப்பிலும் அதிர்ச்சியிலும் விக்கித்துப்போயிருந்த வர்ஷா, சுதாரித்து மெள்ள நடந்து போய் சுவரோர பீரோவைத் திறந்தாள். நீளமான அந்த பிரவுன் நிற கவரை எடுத்தாள்.

”வி… வி… விகாஷ்!”- குரல் உடைந்து இருந்தது.

”என்ன வர்ஷா?”

”இப்படி என் பக்கம் திரும்பி நில்லு…”

விகாஷ் நின்றான்.

வர்ஷா தன் கையில் இருந்த கடித உறையை விகாஷின் கைகளில் திணித்தாள்.

”விகாஷ்! நான் செய்த சமூக சேவைக்காக அரசாங்கம் எனக்குக் கொடுத்த ‘மகிள ரத்னா’ விருது இது. இந்த விருது உன் வீட்டை அலங்கரிக்கிறதுதான் சரி… என்னோட கல்யாணப் பரிசா இது இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு விகாஷை பெருமை பொங்கப் பார்த்தாள் வர்ஷா.

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

1 thought on “பதினோராவது பொருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *