பண்ணைச் செங்கான்

 

“இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத் தென்ன மரம் அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!” என்று வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.

நானும் அவனும் என் நிலத்தின் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் kupara கொண்டிருந்தோம்.

“இதை எப்போப்பா அறுக்கலாம்?” என்றேன்.

நிலத்தில் நின்ற பயிரைக் காட்டிக் கொண்டு செங்கான், ” இன்னும் கொஞ்ச நாள் போவானுங்க. தொண்டேக் கதிர இருக்குது. கொஞ்சம் மேப்பக்கம் பூரா கதிரு வாங்கி நிக்குது.. இந்த மாமரத்து நெளலிலேயே குந்துங்க. ஏ, கங்காணி மவனே ! சின்னசாமிக்கு ரெண்டு எளனி புடுங்கியா!” என்றான்.

எனக்கு இளநீர் குடிக்கத் தெரியவில்லை. மேலேஎல்லாம் கொட்டிக் கொண்டு விட்டேன்.

“அந்த ஒலெய அளுத்திப் புடிச்சிக்கிட்டு, சட்டுன்னு சாச்சுக்கணும்” என்று செங்கான் சிரித்துகொண்டே கையால் செய்து காட்டினான்.

‘பறச்செங்கான்’ என் பாட்டனார் காலம் முதல் எங்கள் நிலத்தைச் சாகுபடி செய்கிறவன். சொக்கனூர் கிராமத்திலேயே அவன்தான் வயது முதிர்ந்த கிழவன். எண்பது வயது என்று பேச்சு. ஆனால் பார்த்தால் அறுபதிற்கு மேல் சொல்ல முடியாது. கையில் அவன் உயரமுள்ள மூங்கில் தடி. தடி எடுத்தவன் தோட்டி என்பார்கள்.ஆனால் செங்கான் தோட்டியல்ல. பழுப்பு நிலத்தில் பயிரேற்றிப் பிழைத்தான். தளதளவென்று செழித்திருந்த மார்பளவு பயிரின் நடுவில் சதா ஏதாவது வரப்பைக் கிண்டிக் கொண்டே இருப்பான்.

நிலத்தை விட்டு வெளியே வந்தாலும் அந்த தடி, இடுப்புக் கோவணந்தான். கறுப்பு கம்பளி ஒன்றைத் தலையிருந்து கால் வரை, மழைக்காலத்தில் சாக்கை மடித்துப் போட்டுக் கொள்வது போலப் போட்டுக் கொண்டிருப்பான். காலில் செருப்பு, கறுத்த உடல் நரைத்த மீசையும் உச்சிக் குடுமியும்.

“அம்மா சொகமாயிருக்கா ? நம்ம கொளந்தே நல்லா இருக்கா? ஏன், ஒரு வாட்டி அம்மாளைக் கூட்டியாந்தா என்ன?”

செங்கான் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து கொண்டு கால் செருப்பின் வாரை இறுக்கிக் கொண்டிருந்தான்.

2

காலாவதி காலத்தில் நான் வருசா வருசம் என் கிராமத்திற்குப் போயி விட்டு வருவது வழக்கம். நான் போகாவிட்டால் செங்கான் விட மாட்டான். அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வருவேன். பாதிப் பணம் போய் வருவதில் செலவாகிவிடும். அவன் கொடுக்கும் குத்தகை என் பாட்டனார் காலத்தில் ஏற்பட்டது. பக்கத்துக்கு நிலங்களுக்கெல்லாம் குத்தகை இரடித்துவிட்டது. அந்த தடவை நான் கிராமத்திற்குப் போயிருந்த பொது எல்லோரும் என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்கள். சிலர் அருகில் நெருங்கி யோசனை கூறினார்கள்.

“பாவம்! ஆண்டுக்கு ஒரு முறை வருகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊர் நிலைமை எப்படித் தெரியும்? கிழவன் ஏதவாது குத்தகை தருகிறானா இல்லையா? ஊரெல்லாம் குத்தகை ஏறிப்போச்சு. உங்களை மட்டும் அவன் ஏமாற்றுகிறான்” என்று சொல்லிக்கொண்டு ஒருவர் முன் வந்து தாம் ஓர் ஆளை இரண்டு பங்கு குத்தகைக்குப் பேசி விடுவதாகச் சொன்னார்.

“இல்லை இதனால் என்ன பிரமாதம்? ஏதோ ரொம்ப நாளாய் இருக்கிறான். இருந்து விட்டுப் போகட்டும்” என்று நான் வழவழவென்று பேசினதை கேட்டதும் அந்த மனிதருக்கு தைரியம் வந்து விட்டது.

“நீங்கள் சும்மா இருங்கள் ஸார்! நீங்கள் தாக்‌ஷிண்ணியப்படுகிறீர்கள், நான் எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன். மேலும் பாருங்கள். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஊரில் ஏற்பட்ட குத்தகை வர வேண்டாமோ?” நீங்கள் இப்படிவிட்டால் குடிப்பிரியம் கெட்டுப்போகும்.

“இல்லை இல்லை அவனை நீக்க எனக்கு மனம் வரவில்லை. அவன் தான் சாப்பிடட்டுமே. இதையே நான் நம்பி இருக்கவில்லை” என்றேன்.

“ என்ன ஸார் நீங்கள் பேசுகிறது? ரொம்ப அழகு! பின் அவனுக்குதான் நிலத்தைச் சாஸனம் எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விடுங்களேன். இந்த போக்கு வரத்துச் செலவு வேண்டாமே” என்று என்னைக் கொஞ்சம் பரிகாசம் செய்து ஆரம்பித்தார் அந்த மனிதர்.

நான் எப்போதும் தாக்‌ஷிண்யப் பிரகிருதி. புது மனிதன் கூட ஒரே கணத்தில் என் தலை மேல் ஏறிவிடுவான். நான் மெல்ல ஞேஞ்ஞ மிஞ்ஞவென்று சொன்னதை அந்த மனிதர் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. வேற ஆளைப் பேசி என் பேருக்கு குத்தகைச் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விட்டார் ! இதை எப்படி செங்கானிடம் சொல்வது? அவனை எப்படி அப்புறப்படுத்துவது!” என்பவையே எனக்குப் பெரியபிரச்சனைகளாகி விட்டன.

3

அவன் அதிகமாக பேசி என்னை மடக்கித் தன வசமாக்கிக் கொள்ளாமல் இருக்கும் பொழுது அவனிடம் கண்டிப்பாக விசயத்தைச் சொல்லி விட வேண்டுமென்று, மறு நாள் வயலுக்குப் போன போது,நான் இரண்டு மூன்று தடவை வாயெடுத்தேன். ஒவ்வொரு தடவையும் வாய்வார்த்தை வெளியில் வராமல் நெஞ்சில் சிக்கிக் கொண்டது.

“பொளச்சுக்கெடந்தா வர வருசம் கிணத்தைக் கட்டி தொலெ வைக்கணும். சாமி! எனக்கு ஒரு சோடி மாடு வாங்கிக் குடுங்க;இந்த நெலத்துலே பொன் வெளயச் செய்யறேன்!” என்றான் செங்கான்.

“செங்கான் உனக்குத்தான் வயசாகிவிட்டதே; இனிமேல் உன்னால் உழுது பயிரிட முடியுமா?” என்று மெள்ள நான் ஆரம்பித்தேன்..

“நல்ல சொன்னீங்க. என்னைப்போலே இந்தவூரிலே யாரு காலத்துலே பயிரேத்துறான்? ஏரி மொதத் தண்ணி நமக்கு”

“ஒனக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இல்லையே?”

“என் மவன் பொந்திலியன் இருந்தா இந்த ஊரையே சாகுபடி பண்ணிட மாட்டேனா? மூணாம் வருஷம் மகமாயி ஆத்தா-!” என்று சொல்லி செங்கான் பெருமூச்சு விட்டான்.

“அவன் மவன் ஒரு பய இருக்கான். அவன் செய்வானே ஒரு பெரிய ஆள் வேல!” என்றான் சற்று நேரம் கழித்து.

செங்கான் மறுபடியும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.விஷயத்தை அந்த சமயத்தில் அவனிடம் சொல்ல எனக்கு மனமே வரவில்லை. செங்கான் மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பொந்திலியனை மாரியாத்தா கொண்டு போன வகையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் போலும்! திடீரென்று தலை தூக்கி என் முகத்தைப் பார்த்தான்.

“ஏஞ்சாமி, நான் பயிரிட முடியாம போட்டுடுவேன்னு ரோசனே பண்றீங்களா? அது இந்த உசிரிலே இல்ல! நெலத்துலே ஈரமில்லே; சக்கையாப் போச்சு மண்ணு, ஏளேட்டுக் கடே கட்டினா நல்லாயிருக்கும் கட்டலாங்களா ?”

பொழுது விழுந்துவிட்டது. தூரத்தில் நரிகள் ஊளையிட்டன.

“வாங்க நேரத்திலே வூட்டுக்குப் போவோம் சாமி! ஒங்களுக்கு இருட்டிலே நடந்து பளக்கமிருக்காது” என்று முன்னே வழிகாட்டிக் கொண்டு செங்கான் வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அவனைப் பின்பற்றிச் செல்வது கூட எனக்குச் கொஞ்சம் சிரமமாகப் போய்விட்டது.

“ஏஞ்சாமி என்னெ விட்டு நெலத்தெ மாத்தணும்னு ரோசனெயா ? என் உசிரிலே இன்னொருத்தன் அதுல ஏரு பிடிக்கவா? முடியுமா எங்கணாச்சியும்? என் நெலத்துலே எவன் நொளைவான் ..? பாக்கறேன். அந்த மண்ணுத்தான் அவனுக்கு வெளைவாளா?”

கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தான். நான் ஒரு வரப்பில் கால் தடுமாறி, வயலில் தண்ணீர் கட்டியிருந்த சேற்றில் காலை வைத்துவிட்டேன்.

“கெடக்குங்க வாய்க்கால்லே கால களுவிக்கலாம்.. நாப்பது வருசமா என் கையாலே வரப்புப் பிடிச்சி வாய்க்கா பிடிச்சி… பெரிய அய்யா இருந்தா என்னே வுட்டு மாத்தணும்னு நெனைப்பாங்களா ? மண்ணே கண்ணாக் காப்பாத்தி “ என்று சொல்லி வந்தவன் திடீரென்று “நான் வுடமாட்டேஞ்சாமி !” என்றான்.

“நான் மாற்றுகிறேன் என்று உன்னிடம் சொல்லவில்லையே!” என்றேன்.

“அது தானே கேட்டேன்! ஒரு கலம் அரைக்கலம் நீங்க சாப்பிடறது நான் சாப்பிட்டா என்ன இந்த வயக்காட்டிலே நான் பட்ட பாட்டுக்கு? நெத்தி வேர்வ நெலத்துல விள எம்பாங்க. அது எனக்கல்ல தகும்! ராப்பவலா எவன் என்னைப் போல காட்டுலே கெடப்பான்? ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்குறாப் போல எவன் தண்ணி கட்டுவான்? – நேரமறிஞ்சு? நம்ம காட்டு லெச்சுமி என்னோடே பேசுவாளே! ஒரு வருஷம் சூறை உண்டா, சாவி உண்டா, தரிசு உண்டா? மூணாம் வருஷம் மழை இல்லாதப்பக்கூட பயிரேத்திப்பிட்டேனே ! இந்த வயக்காட்டுலே ஒளச்சேதான் நான் சாவனும் சாமி! இதெ வுட்டா நான் செத்துப் போவேன்!”

4

காலை ஐந்து மணிக்குப் பல் துலக்க நிலத்துப் பக்கம் போனேன். செங்கான் கணீரென்ற குரலில் ஏற்றப் பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.

“மூங்கிலிலை மேலே – தூங்கு பனி நீரே

தூங்கு பனி நீரை – வாங்கு கதிரோனே!”

என்ற பாட்டின் ஒரு அடி என் காதில் விழுந்தது. வேலை மும்முரத்தில் அவன் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“என்ன ஸார் செங்கான்கிட்ட சொல்லி விட்டீர்களா, இந்தப் பயிரை அறுத்து கொண்டு நிலத்தை விட்டு விட வேண்டுமென்று?” என்று என் நண்பர் கேட்டார்.

“இல்லை சொல்லப் போவதில்லை. செங்கான் கொடுக்கும் நெல் போதும் எனக்கு!” என்றேன், தலை நிமிர்ந்து.

*****

மணிக்கொடி 23.09.1934

தட்டச்சு: V. மணிகண்டன் 

தொடர்புடைய சிறுகதைகள்
‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். ...
மேலும் கதையை படிக்க...
நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, ...
மேலும் கதையை படிக்க...
பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து ...
மேலும் கதையை படிக்க...
தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் – டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது ...
மேலும் கதையை படிக்க...
ஆற்றாமை
நூருன்னிசா
திரை
தாயாரின் திருப்தி
விடியுமா?

பண்ணைச் செங்கான் மீது ஒரு கருத்து

  1. Thamizhmani Nagappan says:

    Very nice story. I like very much this story. Thanks for this nice story for Mr. K.P.Rajagopalan Sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW