பட்டால் தான் தெரியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 19,528 
 

குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. “சரிம்மா”, என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள் ஜெயம்.

“நீ ஏன் அனாவசியமா அலட்டிக்கறே? வரப் போறது யாரு? எங்க அம்மா அப்பா தானே? தாத்தா பாட்டிகிட்டே எப்படி நடந்துக்கணும்னு மிலிடரி டிரெயினிங் குடுக்கணுமா என்ன?”
ராமச்சந்திரன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

இப்போது சிரிப்பாகத்தான் இருக்கும். சமயம் வரும்போது பார்க்கணுமே இவருடைய உக்ர தாண்டவத்தை… என்று நினைத்துக் கொண்டாள் ஜெயம்.

ஆனால் அவரைச் சொல்லிக் குற்றமில்லை. குழந்தைகள் செய்யும் விஷமம், அடம் அப்படிப்பட்டது. பொழுது விடிந்தது முதல் பன்னிரண்டு வயது குமாருக்கும், ஒன்பது வயது முரளிக்கும் ஆரம்பிக்கும் யுத்தம் இரவு வரை ஓயாது.

ஒருவன் உட்கார்ந்த இடத்தில் தான் இன்னொருவன் உட்கார வேண்டும். அவன் நின்ற இடத்தில் தான் இவன் நிற்க வேண்டும். அப்படி ஒரு போட்டி, சண்டை.

“ஏண்டா இப்படிச் சண்டை போட்டு என் பிராணனை வாங்கறீங்க? சனியன்களா…. நீங்கள் உருப்பட மாட்டீங்க.”

எந்த சமாதானமும் பலிக்காமல் ஜெயம் உபயோகிக்கும் சரளமான சாபம் இது. கையாலாகாத சாபம்.

பாடம் படிக்கச் சொன்னால், பெரியவன் பேனா ரிப்பேர் பண்ண ஆரம்பித்து விடுவான். இங்க பேனாவில் தினமும் இங்க் போடுவான். பால் பாயிண்ட் பேனாவை தினமும் நாலு தடவையாவது திறந்து ரீபில் தீர்ந்து விட்டதா என்று பார்ப்பான். படிப்பு முடிந்த மாதிரிதான். எழுந்து விடுவான்.

சின்னவனோ …சொல்லவே வேண்டாம். காலையில் படிக்கச் சொன்னால், “கொஞ்ச நேரம் டயர் ஓட்டறேம்மா. சாயந்திரம் படிக்கிறேன்” என்பான். எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும், அவர்கள் நினைத்ததைதான் செய்வார்கள். சாயந்திரம் ஆளே கண்ணில் பட மாட்டான். பிளே கிரௌண்டில் போய்த்தான் தேடி அழைத்து வர வேண்டும்.

‘இரவு டி.வி.யில் நல்ல நாடகம்மா” என்பான் பெரியவன். சாம பேத தான தண்டம் ஒன்றும் பலிக்கவில்லை இவர்களிடம். கத்திக் கத்திப் பெற்றவர்கள் ஓய்ந்து போனது தான் மிச்சம்.

க்ஷேத்ராடனம் போகும் வழியில் விசிட் அடிக்க வரும் மாமனார் மாமியாரிடம் இந்தக் குழந்தைகள் நல்ல பெயர் வாங்கித் தருவார்களா? “குழந்தை வளர்த்திருக்கற அழகைப் பாரேன்!” என்று குத்திக் காட்ட மாட்டார்களா?

மறுநாள் விடிந்தது. பெரியவர்கள் வந்து இறங்கினார்கள்.

வானரங்கள் பழையபடி ஆரம்பித்து விட்டன.

வந்ததும் வராததுமாகத் தாத்தாவின் பிளாஸ்கை உடைத்தான் சின்னவன். வேண்டுமென்று உடைக்கவில்லை என்பது நிச்சயம். அது என்னவோ எதைப் பார்த்தாலும் அதைத் திருகி, குடைந்து உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறார்கள் குழந்தைகள். ராம! ராமா!

எவ்வளவு தான் ஜாடை காட்டினாலும் புரிந்து கொள்ளாமல் அவர்களின் சூட்கேசை ஆராய்கிறான் பெரியவன்.

பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள் ஜெயம். ராமச்சந்திரனால் அப்படி இருக்க முடியவில்லை.

சுள் சுள்ளென்று குழந்தைகள் இருவர் முதுகிலும் அடி வைத்தான். தர தரவென்று இழுத்து வந்து ஜெயத்திடம் விட்டான்.

“போனாப் போறதுடா… அடிக்காதடா!” என்று தடுத்த பெற்றோரைப் பொருட்படுத்தவில்லை.

“உருப்படாத குழந்தைகள்… உருப்படாத குழந்தைகள்…. பிராணனை வாங்கறதுகள்…எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்கறது…பீடைகள்… நாளைக்குக் கல்யாணமாகி இதே மாதிரி ரெண்டு குழந்தைகள் பொறந்து, படுத்தினால்… அப்பத்தான் புத்தி வரும் போல இருக்கு!”

உறுமினான் ராமச்சந்திரன்.

அப்பாவும், அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

“சரிதாண்டா… போடா, குழந்தைகள்…என்ன பண்றது?”

அம்மா சிரித்துக் கொண்டே சின்னவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டார்.

அப்பா பெரியவனைக் கூப்பிட்டு பிஸ்கட் பாக்கெட்டையும் கலர்ப் பென்சில் பாக்சும் தருகிறார்.

அப்பா தொண்டையைச் செருமிக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டார். பிள்ளையை அருகில் அமர்த்திக் கொண்டார்.

“இதோ .பாருடா…ராமா! நான் இப்ப இங்க பார்த்தது அப்படியே முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்ததோட ரீ -பிளே தான்..என்ன.. நான் சொல்றது?” என்று கேட்டு அர்த்தத்தோடு நிறுத்தினார்.

அம்மாதான் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். “என்னடா? ஒண்ணும் தெரியாத மாதிரி பார்க்கறே? சின்ன வயசில் நீ செய்யாத விஷமமா? அடிக்காத லூட்டியா? உன் தங்கையோடு போடாத சண்டையா? எல்லாம் மறந்தே போயிடுத்தா? எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது கூட படிப்பில் கவனம் இல்லாம, அடுத்த வீட்டு மாமி ரேடியோல சினிமாப் பாட்டு வைப்பதை கவனமாக் கேட்டுப்பாயே. நான் கூட இதற்காக அவளுடன் சண்டை போட்டிருக்கிறேன். எங்களை நீ படுத்தாத பாட்டையா உன் பிள்ளைகள் படுத்தறான்கள்?”

அம்மா பழைய நினைவுகளில் ஆழ்ந்து உணர்ச்சியோடு பேசும் போதுதான் ராமச்சந்திரனுக்கு உண்மை உறைக்கிறது.

மாமியார் சொல்லச் சொல்ல, தான் கூட தன் தாய் எதாவது வேலை செய்யச் சொன்னால் எதிர்த்துப் பேசியதும், தன் தம்பியோடு ஏட்டிக்குப் போட்டி சண்டை போட்டதும்… நினைவுக்கு வருகிறது ஜெயத்திற்கு. தலையைக் குனிந்து கொள்கிறாள்.

நால்வரையும் பழைய நினைவுகளின் ஆழம் தாக்குகிறது.

அடுத்த அறையில் குழந்தைகள் இருவரும் தாத்தா கொடுத்த கலர்ப் பென்சிலை ஒரு வழி பார்ப்பதில் ஈடுபட்டிருந்தார்கள்.

“சரி. போனது போகட்டும், அப்போ எங்களோட அறிவுரையை எற்கற வயசு உங்களுக்கும் இல்லை. எங்களுக்கும் பொறுமை இல்லை. எங்களால முடியாம போன போது, இப்ப நீ சபிச்சா மாதிரியே வயிறு பத்தி… நானும் சபிச்சுருக்கேன். உங்க அம்மாவும் சபிச்சுருக்கா. ஒரு வேளை அதோட பலன்தான் நீ அனுபவிக்கிறாயோன்னு இப்ப தோணறது. அப்போ நீங்களும் நாங்களும் இருந்த அதே நிலைமையில இப்ப உன் குழந்தைகளும் நீங்களும் இருக்கீங்க. ஆனால் எங்களுக்கு இப்ப அனுபவம் கூடியிருக்கு. உங்களுக்கும் பக்குவம் வந்திருக்கு அதனால் நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ ” என்றார் அப்பா.

“என்ன?” என்பது போல் பிள்ளையும் மருமகளும் பெரியவரை ஏறிட்டுப் பார்க்கிறார்கள்.

அப்பா தொடர்ந்தார்.

“இதோ பாரும்மா ஜெயா! உன் பிள்ளைகள் விஷமம் பண்றாங்களே.. அடம் பிடிக்கறாங்களேன்னு கவலைப்படாதே. அதுக்காகத் தவிக்கவும் வேண்டாம். கொதிக்கவும் வேண்டாம். சாபம் கொடுக்கவும் வேண்டாம். எல்லாம் உன் புருஷன் பண்ணின பால லீலைகள்தாம். உன் புருஷனைச் சின்ன வயசுல பார்க்கறாப் போல நினைச்சுகோயேன். கோபம் மறந்து போய் சிரிப்பு வந்துடும். நீயும் தாண்டா… ராமா! நாங்களும் உன்னைச் சபிச்சோம், “பட்டாத்தான் தெரியும்”னு. ஒரு வேளை அதுதான் பலிச்சுடுத்தோன்னு இப்ப திக்கு திக்குங்கறது. நீயாவது அந்த தப்பை பண்ணாதே. இது ஒரு தொடர்கதையாக வேண்டாம். நயமாச் சொல்லிப் பாரு. பிஞ்சுகளைப் போட்டுக் கரிச்சு கொட்டாதீங்க! புரியாத வயசு. தானாச் சரியாப் போய்டும். இப்ப நீயே இல்லையா? காலேஜில் சேர்ந்த பின் நல்லா படிச்சு முன்னுக்கு வரலையா? எல்லாம் வேளை வரணும். என்ன நான் சொல்றது?”

மனைவியைப் பார்த்து கேட்கிறார் அப்பா. முதியவர்கள் இருவரும் கலகலவென்று சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பு இளம் தம்பதிகளையும் தொற்றிக் கொள்கிறது. அவர்கள் மனத்தில் ஒரு தீர்மானமும் ஏறுகிறது.

“சரி… சாப்பிட வாங்க! நாழியாறது,” என்கிறாள் ஜெயம், சிரிப்பினூடே.

-மங்கையர்மலர் அக்டோபர் 1990 ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *