பட்சி

 

பட்சிபிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ எழுதும்போது, அதுவும் ‘பட்சி’ என்ற தலைப்பிட்டு அதை எழுதும்போது – ஒரு சிறு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. ஒரு வழியாக அவர் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘‘‘ஒரு மணி நேரமா எதையோ மிகுந்த ஈடுபாடோடு எழுதறீங்க.

கதையா? கட்டுரையா?’’ என்றபோது அவர் முகத்தில் ஒரு சிறு மலர்ச்சி உண்டானது. ‘‘கதைதான்…’’ என்றார். தொடர்ந்து கொஞ்ச நேரத்துக்கு தமிழ் சிறுகதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு என்ன தோன்றியதோ, தான் எழுதிய கதையை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அரவிந்தின் அலுவலகத்தில் மிக வித்தியாசமான பெயருடன் ஒருத்தி சேர்ந்தாள். பட்சி. ஒரு நாள் இருவருமாகச் சேர்ந்து காப்பி குடிக்கும்போது (அலுவலகத்தில்தான்) அவளிடம் ஒரு புதிரைப் போட்டான் அரவிந்த். ‘‘ஒரு விமானத்திலே மொத்தம் 30 பேர் பயணமானாங்க. அந்த விமானத்துக்கு நேர்ந்த விபத்தில் அதிலிருந்து 31 பயணிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எப்படின்னு சொல்லுங்க பார்க்கலாம்?’’

பட்சி தன் கீழ் உதடுகளைப் பிதுக்கியது மிக அழகாக இருந்தது. ‘‘அந்தப் பயணிகளிலே ஒரு பெண் கர்ப்பிணி. பயணத்தின்போது அவளுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது!’’ சிரித்து முடித்த பிறகு பட்சியின் முகத்தில் ஒரு புன்னகை வெளிப்பட்டது. ‘‘உங்களுக்குத் தெரியுமா? நான் பிறந்ததே ஆகாய விமானத்தில்தான்!’’

ஒரு கணம் வியந்தான். விதிர்விதிர்த்தான். ஆக, தன்னவள் பட்சிதானோ? என்றாலும் அறிவார்த்தமான கேள்விகள் அடுத்தடுத்து அவன் மனதில் எழுந்தன. கேட்டான். ‘‘அப்படியானால் உங்க அம்மா நிறைமாத கர்ப்பிணியாக விமானப் பயணம் செஞ்சாங்களா?’’

‘‘ஆமாம்! நான் குறைப் பிரசவத்திலே பிறந்தவ இல்லே?’’

‘‘32 வாரங்கள் வரைதானே விமானத்திலே பயணம் செய்ய அனுமதிப்பாங்க?’’

‘‘அம்மாவுக்கு வயிறு பெரிதாகத் தெரியல்லியாம்!’’‘‘இருந்தாலும் கூட டாக்டரின் சான்றிதழைக் கேட்பாங்களே!’’

‘‘விமான சர்வீஸின் டாக்டர் என் அப்பாவின் நெருங்கிய நண்பர். புரியுதில்ல? தவிர, என் அப்பாதான் அந்த விமானத்தின் பைலட்!’’ பட்சி அடுக்கிய விவரங்களில் அரவிந்த் மிரண்டு கொண்டிருக்க, அவள் மேல்விவரங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். ‘‘என் அம்மாவுக்குப் பிரசவம் ஆனபோது விமானத்திலிருந்த அத்தனை பேரும் ஒவ்வொரு விதத்தில் உதவினார்கள். அம்மாவுடன் என் சித்தியும் வந்திருந்தாங்க. நல்லதாப் போச்சு…’’

வாழ்க்கைதான் சிலருக்கு எவ்வளவு வித்யாசமாக அமைந்து விடுகிறது! தனது எதிர்பார்ப்பு இவ்வளவு பிரமாதமாக நிறைவேறி இருக்கிறதே.

ஆகாய விமானம் பறக்குமளவுக்கு ஓர் அடுக்கு மாடிக் கட்டடம் எழும்ப வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு தளங்கள் இருக்க வேண்டும்!

தனது வருங்கால மனைவிக்கான முக்கிய தகுதியை அவன் தன் பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் அடைந்த அதிர்ச்சி இப்போதும் அவன் மனதில் தெளிவாகப் பதிந்திருந்தது.

‘‘என்னடா உளர்றே?’’ ஒரே சமயத்தில் இருவரும் சேர்ந்திசை பாடினார்கள்.

‘‘ஏம்மா, உன் பிரசவம் எங்கே நடந்தது? நான் எங்கே பிறந்தேன்?’’

‘‘பம்பாயிலே நடந்தது. எங்கப்பா அங்கே ஏழாவது மாடியிலேதான் குடியிருந்தார். பிரசவ வலி எடுத்ததும் உங்கப்பா டாக்ஸி கூட்டி வரப் போனார். ஆனால், அதுக்குள்ளே நீ வீட்லயே பிறந்துட்ட… அதுக்காக?’’

‘‘எனக்கு மனைவியா வரப் போறவளும் ஏழாவது மாடியிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட மாடியிலோ பிறந்திருக்கணும். அதுதான் கண்டிஷன்!’’

‘‘இதென்ன பேத்தல்! பிரசவ ஆஸ்பத்ரிகளிலே கூட பிரசவப் பிரிவு முதல் ரெண்டு தளத்திலேதானே இருக்கும். மிக உயரமான ஃப்ளாட் கட்டடமாகவே இருந்தால் கூட ஏழாவது மாடிக்கும் அதிகமான ஃப்ளாட்டுலே பிறந்த பொண்ணுங்க எவ்வளவு பேரு இருந்துடுவாங்க?’’ என்று அவன் அம்மா பதறினாள்.

‘‘அப்படியே பிறந்திருந்தாலும் இந்த நிபந்தனையைக் கேட்டதும் இவனை மனநிலை சரியில்லாதவன்னு நினைச்சு ஒதுக்கிடுவா…’’ என்றார் அவனது அப்பா கடும் கோபத்துடன்.‘‘பட்டதாரி மாப்பிள்ளை பட்டதாரிப் பெண் வேணும்னு சொல்றதில்லையா? செவ்வாய் தோஷ ஜாதகத்துக்கு அதே தோஷமிருக்கிற பையனைப் பார்ப்பதில்லையா? அப்படியானால் என் எதிர்பார்ப்பும் தப்பில்லே!’’ உறுதியாகக் கூறிவிட்டான் அரவிந்த்.

‘மேட்ரிமோனியல்’ தளத்தில் விளம்பரம் செய்தபோது கூட இந்த நிபந்தனையைத் தெளிவாகவே தெரியப்படுத்தினான் அரவிந்த்.

‘எதற்கும் தயார்’ என்னும் மனநிலை கொண்ட இளைஞர்களுக்கே தகுந்த மணப்பெண் கிடைப்பது குறிஞ்சி மலராக இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் அரவிந்தின் எதிர்பார்ப்பு செல்லுபடியாகுமா?

காலச்சக்கரம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. அதாவது உருண்டோடியது. அரவிந்தின் நெற்றிப் பகுதி விசாலமாகத் தொடங்கியது.

இந்த சமயத்தில்தான் அவன் ஸ்வேதாவைப் பற்றி அறிய நேர்ந்தது. ரயில் பயணமொன்றில் அவள் அப்பா நீலகண்டனை சக பயணியாக சந்தித்தபோது தன் மகள் ஏழாவது மாடியில் உள்ள ஃப்ளாட்டில் பிறந்ததை அவர் அறிவித்தார்.

அரவிந்த் பரபரப்பானான். தன் குடும்பப் புகைப்படத்தை அவர் காட்ட, ஸ்வேதாவின் அழகு அவனை மயக்கியது. காத்திருந்தது வீண் போகவில்லை. தொலைபேசியிலும் பின்னர் ஒரு ஹோட்டலிலும் அரவிந்த், ஸ்வேதாவை சந்தித்துப் பேசினான். பரஸ்பரம் பிடித்துப் போனது.

‘‘வீட்டுக்கு வாங்க…’’ நீலகண்டனின் அழைப்பை உடனே ஏற்றுக் கொண்டான் அரவிந்த். அவனது பெற்றோரும்தான். அனைவரும் காரில் ஸ்வேதாவின் வீட்டை அடைந்தனர். உயர்ந்த பல தளங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது அந்தக் கட்டடம். முப்பது வருடங்களாக அதே ஃப்ளாட்டில்தான் வசிக்கிறார்களாம்.

லிஃப்ட்டுக்குள் ஏறும்வரை எல்லாமே இனிமையாகத்தான் நடந்து கொண்டிருந்தது. அங்கு நீலகண்டன் ‘6’ என்ற பட்டனை அழுத்தியதும் அரவிந்த் கலவரம் ஆனான். ‘‘ஒருவேளை ஆறு மாடிவரைதான் இந்த லிஃப்ட் போகுமா? அதற்குமேலே ஏழாவது மாடிக்கு நடந்து போகணுமா?’’ என்று கேட்டான். ஸ்வேதாவின் அப்பா ‘‘இல்லையே… இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு மாடிகள்தான். அதற்குமேலே மொட்டை மாடி!’’ என்றார்.

அரவிந்தின் உடல் முழுவதிலும் அட்ரினலின் வெகுவெகமாகச் சுரந்தது. நாசி விடைத்தது. பெரும் கோபத்துடன் தன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான். அன்று மாலை ஸ்வேதா அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். ‘‘என் அப்பா அமெரிக்காவில் பல வருடங்கள் வசித்தவர். அங்கே எல்லாம் தரைத்தளத்தை முதல் மாடின்னுதான் சொல்வாங்க. முதல் மாடியை செகண்ட் ஃபளோர்னுதான் குறிப்பிடுவாங்க…’’ என்று அவன் பொது அறிவை விரிவாக்க முயன்றாள்.

‘‘ஸ்டுப்பிட். ஏமாற்றுக்காரக் குடும்பம் உன்னுடையது!’’ என்று கத்தினான் அரவிந்த். ஸ்வேதாவின் கண்ணீருக்கு எந்தப் பலனும் இல்லை. ‘‘என் சாபம் உன்னை சும்மா விடாது…’’ என்று கத்திவிட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தாள் ஸ்வேதா. இந்த நிலையில்தான் பட்சி, அரவிந்தின் அலுவலகத்தில் சேர்ந்தாள். விமானத்தில் பிறந்த பட்சியை தன் நிபந்தனைக்கு ஏற்றவளாகவே கருதினான் அரவிந்த். பறக்கும் விமானத்தில் பிறந்தவள். அதனால்தான் அவளுக்கு பட்சி என்று பெயரிட்டிருக்க வேண்டும்.

ஸ்வேதாவுக்கு ரவிவர்மா ஓவியக் கண்கள். பட்சி கொஞ்சம் பிக்காஸோ ரகம். ஸ்வேதா சிரித்தாலும் புன்னகைத்தாலும் சொக்கவைக்கும். பட்சி கீழ் உதட்டைப் பிதுக்கினால் மட்டும்தான் அழகு. ‘இருக்கட்டுமே. என் நிபந்தனை… அதுவல்லவா முக்கியம்’ என்று கூறிக் கொண்டான் அரவிந்த்.

அடுத்தடுத்த விஷயங்கள் வழுக்கிக் கொண்டு வெகு சிறப்பாக நடந்தன. அரவிந்துக்கும் பட்சிக்கும் திருமணம் ஆனது. திருமணம் முடிந்தது. முதல் வேலையாக மகனின் மேட்ரிமோனியல் விளம்பரத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார் அவனது அப்பா. பிறரது கேலிச் சிரிப்பை எவ்வளவு காலத்துக்குத்தான் தாங்கிக் கொள்வது!

தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து போகலாம் என்று முடிவெடுத்தான் அரவிந்த். அதற்கான பலவித பின்புல ஏற்பாடுகளை அவன் செய்து விட்டிருந்தான். பட்சி பிறந்திருந்த அந்த விமான சர்வீஸ் அவர்களது விமானப் பயணத்தின்போது பிறந்த குழந்தை வளர்ந்தவுடன் அவளது திரு
மணம் மற்றும் தேனிலவுச் செலவுகளை முழுவதுமாக ஏற்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த விவரங்களை எல்லாம் பட்சியிடம் பகிர்ந்து கொண்டபோது அவள் திகைத்தாள். ‘‘இந்தச் சலுகைகள் எல்லாம் எனக்குக் கிடைக்காது!’’ என்றாள். ‘‘நான் விமான சர்வீஸின் வலைத்தளத்தை முழுசுமா படிச்சுட்டேன். அவங்க விமானத்திலே பறந்துகிட்டிருக்கும்போது குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு இத்தனை சலுகைகளும் உண்டு…’’

‘‘ஆனா, அரவிந்த், நான் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சுக்கல்லே. எங்கம்மா அந்த விமானத்திலே ஏறினவுடனேயே அவங்களுக்குப் பிரசவ வலி வந்திடுச்சு. விமானம் கிளம்புவதற்கு முன்பாகவே நான் பிறந்துட்டேன்!’’ அரவிந்தின் மனக்கண்ணில் ஸ்வேதா தோன்றினாள். ‘என்னதான் முக்கிப் பார்த்தாலும் ஓர் ஆகாய விமானத்தின் உயரம் என்பது ஆறு மாடி உயரத்தைத் தாண்டிடாது!’ என்றாள். பறக்கும் விமானத்திலிருந்து கீழே தள்ளப்பட்டதைப்போல உணர்ந்தான் அரவிந்த்.

கதையைப் படித்து முடித்தபோது என் முகத்தில் தோன்றிய புன்னகையைப் பார்த்தார் அறிவழகன். ‘‘கதையிலே நகைச்சுவை புலப்பட்டாலும் இதிலே வேறே எதையோ சொல்லவரீங்கன்னு தெரியுது. ஒருவேளை உருவகக் கதையோ?’’அவர் பதில் சொல்ல முயற்சித்தபோது அப்போது மேல் பர்த்தில் இருந்த ஒரு பெண்மணி குரல் கொடுத்தாள். ‘‘என்னங்க, பிளாஸ்கிலேயிருந்து எனக்கு போர்ன்விட்டா எடுத்துக் கொடுங்க…’’ என்றாள்.

‘‘இதோ தரேன்…’’ என்றவர் என்னைப் பார்த்து, ‘‘என் மனைவி. இந்த ரயிலிலே மட்டுமல்ல, எல்லாவற்றிலுமே என்னைவிட ஒரு படி மேலேன்னு நினைக்கிறவ!’’ என்றார். அவரது மனைவியின் பெயர் மைனா அல்லது அஞ்சுகம் என்று இருக்கக்கூடும் என்று தோன்றியது.

- மார்ச் 2019 

தொடர்புடைய சிறுகதைகள்
சோமு அந்த ஊருக்குப் புதிது. அவன் அப்பாவுக்கு போன வாரம்தான் வேலை மாற்றலாகி இருந்தது. அவன் தெருவில் நடந்துகொண்டு இருந்தபோது நாலைந்து சிறுவர்கள் பக்கத்தில் வந்துகொண்டு இருந்தார்கள். புதிய பள்ளியில்நேற்று சேர்ந்தபோது அவர்களை அங்கே பார்த்திருந்தான். சோமுவைப் பார்த்த சிறுவர்கள் நட்பாகச் சிரித்தார்கள். பிறகு ...
மேலும் கதையை படிக்க...
எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனுக்கு மிகவும் அழகான, பெரிதான, துறுதுறுவென்ற கண்கள். அவன் கண்களைப் பார்த்து, அம்மா கோமதியிடம் சொல்லி ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது. அன்று வீட்டுக்குள் வரும்போதே அப்பாவின் முகம் பரபரப்புடன் இருந்தது. ‘’அப்பா’’ என்றபடி உள்ளே இருந்து ஓடி வந்தான் ...
மேலும் கதையை படிக்க...
வசந்தனுக்குப் பாடங்கள் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். வீட்டுவேலை செய்யப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான், யாரிடமும் பகைமை கொள்வது. தன்னைப் பற்றி ஒரு முறை ஆசிரியரிடம் ராமு கோள் மூட்டினான் என்பதை அறிந்தபோது “அவ்வளவுதானே... சொல்லிட்டுப் போகட்டும்’’ என்றான் சிரித்துக்கொண்டே. இதற்குப் ...
மேலும் கதையை படிக்க...
தங்கவயல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் பேசுவார். கோயில் மண்டபத்தில் அவரது பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் பேசத் -தொடங்கினார் -பெரியவர். அங்கு வந்திருந்த சிறுவர், சிறுமிகள்கூட அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். கொஞ்ச நேரம் ...
மேலும் கதையை படிக்க...
அன்பழகன் பாடங்களில் கெட்டி. வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்க் எடுத்து வருபவன். இதற்காக ஒவ்வொரு வருடமும் அவனுக்கு கோப்பை, சான்றிதழ் கிடைக்கும். அவற்றை எல்லாம் பெருமையாக வீட்டு ஷோகேஸில் வைத்திருந்தான் அன்பழகன். ஒருமுறை அவன் வகுப்பு ஆசிரியர் ‘‘ஜெர்மனியிலிருந்து சில கல்வி அறிஞர்கள் ...
மேலும் கதையை படிக்க...
கலவரக் குழி
ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே வந்தது. மனதில் ஓர் அமைதியின்மை தோன்றியது. குழந்தையை அவனிடம் கொடுத்திருக்கக் கூடாதோ? எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ‘‘ஏம்மா, குழந்தையைக் கொடுத்தனுப்பினீங்களே... அவர் ...
மேலும் கதையை படிக்க...
மோசமான ஆமை!
அழகிய கண்ணே..!
யாரையும் பகைக்காமல்…
குறை ஒன்றும் இல்லை..!
போரில் பயப்படுபவர்களுக்கு…
கலவரக் குழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)