படப்பிடிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 8,721 
 

பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும் என்று எண்ணுபவள் நம் கதாநாயகி. அதனால், அக்காலங்களில் வீட்டிலேயே பூசையை முடித்துக் கொள்வாள்.

`கதாநாயகி` என்றதும், ஒர் அழகான இளம்பெண்ணை வாசகர்கள் கற்பனை செய்து கொண்டால், அதற்கு இந்த எழுத்தாளர் பொறுப்பில்லை.

வள்ளியம்மை — நெற்றியில் பொ¢ய குங்குமப் பொட்டு, இறுகப் பின்னிய, குட்டையான ஒற்றைப் பின்னல். உடல் இளைக்க, தரையில் விழுந்து கும்பிடுவது நல்ல வழி என்று யாரோ சொல்லக் கேட்டு, அந்த பழக்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவள்.
பண்டிகை இல்லாத வெகு சில நாட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு திங்கட்கிழமை காலை பதினோரு மணிக்கு கோயிலுக்குமுன் வாடகைக்காரில் வந்து இறங்கினாள் வள்ளியம்மை.

வீட்டில் இரண்டு கார் இருக்கிறதென்று பெயர்தான். லைசன்ஸ் எடுத்து, அதற்குப் பின் ஓட்டப் பயந்த பல பெண்களுள் அவளும் ஒருத்தி. கணவரோ, கோயில் இருக்கும் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டார்.

கோயில் வளாகத்தில் எப்போதும் தரையில் தத்திக்கொண்டும், பக்தர்கள் போடும் பொரிக்கடலையை கொத்திக்கொண்டும் இருந்த புறாக்கள் பயந்து, அருகிலிருந்த மரக்கிளைகளின்மேல் அமர்ந்திருந்தன.

அவை இருந்த இடத்தில் இன்று காவடிகள்!

சீனப் புத்தாண்டின் சிறப்பு அம்சமான சிங்க நடனத்துக்கான வெள்ளை, சிவப்பு வண்ணச் `சிங்கங்கள்,` அவற்றுள் இரு ஜோடி மனிதக் கால்கள், மற்றும் பொய்க்கால் குதிரைகள், இன்னும் என்னென்னவோ அங்கு தென்பட்டன.

மஞ்சள் புடவை சுற்றியிருந்த பெண்கள் அனைவருமே ஒப்பனை அணிந்திருந்தார்கள். ஒப்பனை என்றால் வெறும் பவுடர் பூச்சு, கண் மை இல்லை. உதட்டில் சிவப்புச் சாயம். அவர்கள் கன்னங்கள் அலாதிச் சிவப்புடன் விளங்கின. கண் இமைகளோ நீலம்.

`இது என்ன கண்ராவி! சாமி கும்பிடக்கூடவா இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு வரணும்!` என்று தனக்குள் அங்கலாய்த்துக்கொண்டாள் வள்ளியம்மை.

அந்த இடம் ஒரே அமளியாக இருந்தது. பின்னணியில் கோபுரம் தொ¢ய, மூன்று பக்கங்களையும் தடுத்து, வேலிபோல் ஒரு கயிற்றால் கட்டியிருந்தார்கள். வேலிக்கு அப்பால் இருந்தவர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி தடுப்பதற்கென
சீருடை அணிந்த காவல்காரர்கள்.

`இங்க அப்படி என்னதான் நடக்குது?` வள்ளியம்மை மனத்துக்குள் பேசுவதாக நினைத்து, வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

பக்கத்தில் நின்றிருந்த சிறுவன், “படம் புடிக்கறாங்கக்கா!” என்று தொ¢வித்தான், குதூகலமாக.

“யாருடா நடிகர்?” என்று விசாரித்தாள், ரொம்ப தொ¢ந்தாற்போல். வள்ளியம்மை திரைப்படம் பார்த்தது எப்போதோ, அவள் கல்யாணத்துக்குமுன்.

“அது யாரோ தொ¢யலக்கா. ஆனா, மமதா காவடியாட்டம் ஆடப் போறாங்களாம். கதைப்படி, இன்னிக்கு தைப்பூசம். அதனால, அவங்களைச் சுத்தி, `வேல், வேல்`னு கத்திக்கிட்டும், ஆடிக்கிட்டும் போக பள்ளிக்கூடப் பசங்களைக் கூட்டி வந்திருக்காங்க. அங்க பாத்தீங்களா, மஞ்சள் சட்டை? என் தம்பிதான்!” பெருமையோடு தொ¢வித்தான். பழனிக்கோ, திருப்பதிக்கோ போய், `மொட்டை போட்ட என் தம்பியைப் பாத்தீங்களா?` என்று கேட்பதுபோல் இருந்தது.

அவளையும் அச்சிறுவனது ஆர்வம் தொத்திக் கொண்டது.

ராட்சத கேமரா ஒன்று மேலேயிருந்து வளைந்து, எதையோ படமெடுத்துக் கொண்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தாள். சுற்றியிருந்த கும்பல் மறைத்ததில், யார், எங்கே, எப்படி நடிக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தொ¢யவில்லை.

பாட்டின் ஒரே வா¢, வாத்திய இசையாக திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தது. சூரியனும் நேர் எதிரே வந்தான், படப்பிடிப்பைக் காணும் ஆர்வத்துடன்.

பாட்டு தாற்காலிகமாக நின்றது.

`சாமி கும்பிட வந்திட்டு, என்னா செஞ்சுட்டு இருக்கிறேன்!` என்று தன்னைத்தானே நொந்தபடி, சந்நிதானத்தை நோக்கி நடந்தாள்.

`சினிமாவே பார்க்கக்கூடாது!`

வேலுவை மணந்த அன்றே அவள் செய்துகொண்ட சங்கல்பம். எல்லாம் கழுத்தில் தாலி ஏறிய கையோடு, அத்தை அவளைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய், காதில் ஓதியதற்குப் பிறகுதான்.

“வள்ளி! என் மகனைத் திருத்தறது ஒன் கையிலதாண்டி இருக்கு. இப்படி ஒரு நல்ல குடும்பத்தில இவனைமாதிரி தறுதலை எப்படித்தான் பிறந்திச்சோ!” என்று சொல்லிக்கொண்டு போனவளை, மருமகள் இடைமறித்தாள். “அத்தான் நல்லவர், அத்தை. சும்மா சொல்லாதீங்க!”

அத்தை புன்முறுவலை அடக்கிக்கொண்டு, தொடர்ந்தாள்: “பின்னே என்னடி? சாமி கிடையாது, பண்டிகை, பெருநாள் எதுவும் கிடையாது இவனுக்கு. நமக்கெல்லாம் சிவனும், முருகனும் கடவுளுன்னா, இவனுக்கு சினிமா நடிகனுங்கதான் தெய்வம். எல்லாப் படமும் வெளியான அன்னைக்கே பாத்தாகணும் இவனுக்கு. அப்புறம், அதில கதாநாயகன் பூப்போட்ட சட்டை போட்டிருந்தா, அதேமாதிரி தானும் ஒண்ணு வாங்கிக்குவான். மெல்லிசா, ஒடம்பைக் காட்டற கையில்லாத சட்டை, கட்டம் போட்ட கைலி, காதை மறைக்கிற நீட்டமான முடி — இப்படி எல்லாமே சினிமாவில கத்துக்கிட்டதுதான்!”
இதெல்லாம் தனக்கு ஏற்கெனவே தொ¢ந்த சமாசாரங்கள்தாமே என்று எண்ணமிட்டாள் வள்ளியம்மை.

முக்கியமான ஒன்றை அத்தை விட்டுவிட்டாளே! தான் நடிகரைப்போல் இருக்க ஆசைப்பட்டவர், தனக்கு வரும் மனைவியும் நடிகைமாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதினால்தானே அவர் அவளுக்குக் கிடைத்தார்!

“வள்ளி! நேத்து நம்ம வீட்டுக்கு வந்தானே, பாஸ்கர், அவன் சொல்றான், நீ அச்சு அசலா சிலுக்குமாதிரி இருக்கியாம். `சினிமாக்காரங்க பாத்தா, கொத்திட்டுப் போயிடுவாங்க`ன்னான்!”

தன்னுடன் உரையாடுகையில் அத்தான் முகத்தில் இவ்வளவு பூரிப்பை அவள் அதற்குமுன் பார்த்தது கிடையாது.

“அட, நம்ப சிலுக்கு சுமிதாவைத்தான் சொல்றேன். ரொம்பக் கொஞ்சமா டிரெஸ் பண்ணிக்கிட்டு, வளைஞ்சு, நெளிஞ்சு டான்ஸ் ஆடுவாளே, அவ! அவ கண்ணழகுக்கே கோடிகோடியா கொட்டிக் கொடுக்கலாம். அமொ¢க்காவில பிறந்திருந்தா, எங்கேயோ போயிருப்பா. பாவிப்பொண்ணு, அநியாயமா தற்கொலை பண்ணிக்கிட்டா!” என்று காலங்கடந்து விசனப்பட்டான்.

தன்னை `முட்டைக்கண்` என்று பழித்த அத்தானா இது!

தான் அழகாயிருக்கிறோமாமே!

“காலாகாலத்தில வள்ளியை ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுக்கணும்,” என்று தாய் பேச்சுவாக்கில் சொன்னபோது, “ஏம்மா? கையில வெண்ணையை வெச்சுக்கிட்டுன்னு ஏதோ சொல்வாங்களே! அதான் முறை மாப்பிள்ளை நான் இருக்கேன்ல?” என்ற வேலுவைப் பார்த்து வள்ளியைவிட அத்தைதான் அதிகமாக ஆச்சா¢யப்பட்டாள்.

தமிழ்ப்பட ஷ¥ட்டிங் பார்ப்பதற்கென்று விமானச் செலவு செய்து, சென்னை போய்வந்தவன். `நல்லவேளை, இந்தக் கிறுக்கு அங்கேயிருந்து எவளாவது சினிமாக்காரியை இழுத்துட்டு வரல,` என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், `அவர்களைவிட என் மருமகள் அழகி!` என்று பெருமிதம் கொண்டாள்.
மகனுக்கும், கடவுளுக்கும் இடையே என்ன பிரச்னை என்று வேலுவின் தாயாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிறு வயதில், வருடம் தவறாது, அவனுடைய அப்பாவுடன் போய், பத்துமலையில் முடியிறக்கிக் கொண்டவன்தானே!

அவளுக்குத் தொ¢யாது, குழப்பமே அங்கேதான் ஆரம்பித்தது என்று.

தைப்பூசத்தை அடுத்த சில நாட்களில், அவனுடைய இயற்பெயர் அவனுக்கே மறந்துவிடும் அளவுக்கு, பள்ளியில் எல்லா மாணவர்களும் சொல்லிவைத்தாற்போல, அவனை, மொட்டை என்று பொருள்பட, `போத்தா` (BOTAK) என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
முடி வளர்ந்தது.

ஆனால், பெயர் நிலைத்தது.

`கோயிலுக்குப் போனதால்தானே இந்த அழகான சுருள் முடியை இழக்க நோ¢ட்டது,` என்று யோசித்தான். கடவுள் அவனுக்கு எதிரியாகிப் போனார். அவர் விட்டுச் சென்ற சூனியத்தை தமிழ் திரையுலகம், அடிக்கடி மாறும் அதன் நாயக, நாயகிகள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

“நாளைக்குப் பொ¢ய பா£ட்சைடா! நல்லா எழுதணும்னு சாமி கும்பிட கோயிலுக்கு வரல?” பதைப்புடன் கேட்டாள் தாய்.

“நான் ஒழைச்சுப் படிக்கிறேன், நான் நினைக்கிறதை கை எழுதிட்டுப் போகுது. பேனாவும் இருக்கு. இதில சாமி எங்கேயிருந்து வந்தாரு?”

`இள ரத்தம் முரண்டு பண்ணுது!` அதிகம் வற்புறுத்தினால், தெய்வ நிந்தனை செய்து, பாபத்தை அடைந்துவிடப் போகிறானே அருமை மகன் என்று அவனை அவன் போக்கில் விட்டது தப்பாகப் போயிற்று என்று தாய் குமைந்தாள்.

வேலு வளர வளர, அவனுடைய நாத்திகக் குணமும் வளர்ந்தது. தான் எப்படி மாறினோம் என்பது அவனுக்கு மறந்தே போயிற்று. கொள்கையை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டான்.
தன் கல்யாணம் எந்தக் கோயிலிலும் நடக்கக் கூடாது, பூசை முறைகளும் கூடாது, வெறும் பதிவுத் திருமணம் மட்டும் போதும் என்று வேலு கண்டித்துக் கூறிவிட, அவனைப் பெற்றவள் அதிர்ந்தாள். எந்த முகத்துடன் சொந்தக்காரர்களைப் பார்ப்பது! வேறு வழியின்றி, கண்ணீருடன் ஒப்பினாள். மருமகள்தான் இனி தன் மகனுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்று நிம்மதியுடன் தன் பொறுப்பை அவள் தலையில் சுமர்த்தினாள்.

ஆயிற்று. அத்தைக்கு வாக்குக் கொடுத்து, பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தன்னால் இன்னும் அத்தானைக் கோயிலுக்குள் வரவழைக்க முடியவில்லை.

பெருமூச்செறிந்தபடி, இறைவன் சந்நிதானத்தில் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த வள்ளியம்மை மனதில் ஒரு பொறி தட்டியது.

கடவுள்மேல் அத்தானுக்கு என்னவோ வன்மம். அதுதான் கோயிலுக்குள் நுழைய மறுக்கிறார்.

ஆனால், கோயிலுக்குள் கடவுள் விக்கிரகம் மட்டும்தானா இருக்கிறது, இன்று?
தெளிவு உண்டாக, வள்ளியம்மை விழுந்து கும்பிட்டாள்.

போகும் வழியில், “யாரெல்லாம் நடிக்கிறாங்க, தம்பி?” என்று கவனமாகக் கேட்டு வைத்துக்கொண்டாள்.

அவள் வீடு திரும்பியபோது, கணவன் மத்தியான சாப்பாட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். வீட்டில் தவசிப்பிள்ளை இருந்தாலும், மனைவி கையால் சாப்பிடுவதுபோல் ஆகுமா!

“எத்தனை நேரமா காத்துக்கிட்டிருக்கேன்! பசி கொல்லுது. எங்கே போயிட்டே?” என்று ஆரம்பித்தவன், அவள் நெற்றியைக் கவனித்துவிட்டு, “கோயிலா?” என்றான், அசுவாரசியமாக.

“ஒரு அர்ச்சனை செய்துட்டு, ஒடனே வரலாம்னுதாங்க போனேன். ஆனா, அங்க பாருங்க, மமதா..,” கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக்கொண்டே சற்று நிறுத்தினாள் வள்ளியம்மை.

எவ்வளவோ முயன்றும், வேலுவால் தன் ஆர்வத்தை வெளிக்காட்டாது இருக்க முடியவில்லை. “எந்த மமதா?” என்றான் அவசரமாக.

“நான் என்னத்தைக் கண்டேன்! யாரோ சினிமாவில கவர்ச்சி நடனம் ஆடறவங்களாம். ஆனா, இன்னிக்கு குடும்பப் பாங்கா, மஞ்சள் சீலை உடுத்திக்கிட்டு, அவங்க அங்க காவடியாட்டம் ஆடினது இருக்கே!” என்று ஒரேயடியாக அளந்தாள்.

“நீ பாத்தியா?” கணவனின் குரலில் பொறாமை.

“நான் ஒருத்திதானா! கோலாலம்பூரில இருக்கிற தமிழவங்க யாரும் இன்னிக்கு வேலைக்கோ, பள்ளிக்கூடத்துக்கோ போகலபோல! அவ்வளவு கும்பல்! சாப்பாட்டுக் கடைங்களில வேலை செய்யறவங்க எல்லாம் ஓய்ஞ்சு போயிட்டாங்க, பாவம்!” இவள் எங்கே சாப்பாட்டுக் கடைகள் பக்கம் போனாள்! கணவனின் கவனத்தை ஈர்க்க, சில பொய்களைச் சொன்னால் தப்பில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள் வள்ளியம்மை.
வேலு அவசரமாக எங்கோ புறப்பட்டதைக் கண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள்.

“சாப்பிடலே?”

“ஒரு முக்கியமான மீட்டிங். மறந்துட்டேன்,” என்றபடி பென்ஸ் காரில் பறந்தான் அவன்.

மமதா! இளைஞர்களின் இன்றைய கனவுக் கன்னி!

சூபர் டூபர் ஸ்டாருடனேயே ஆட்டம் போட்டவள். அவருடைய காதலி — `திரையுலகில் மட்டுமில்லை,` என்றது கிசுகிசு.

தான் இன்னும் இளம் வாலிபன் இல்லைதான். பெண்டாட்டியும் சிலுக்குமாதிரி இருக்கிறாள். ஆனாலும், ஆணாய் பிறந்தவன் ஒருவன் அழகான பெண்ணொருத்தியைப் பார்த்து ரசிப்பதில் என்ன தவறு?

இதுவரை மமதாவை திரையில்தான் பார்த்திருக்கிறோம். நோ¢ல் இன்னும் அழகாக இருப்பாளாமே!

கோயிலிலிருந்த கும்பலிலும் ஒரு பிரமுகர் அவனை அடையாளம் கண்டுகொண்டார்.

“வாங்க, வாங்க! வராதவங்க வந்திருக்கீங்க. பூசைக்கு இருந்திட்டுத்தான் போகணும். இன்னிக்கு என்னோட உபயம்,” என்று ஆரவாரமாக வரவேற்றவர், “கதாநாயகி நம்ப வீட்டிலதான் தங்கியிருக்காங்க,” என்றும் பெருமையுடன் தொ¢வித்தார்.

வேலுவுக்கு அதற்குமேல் எந்த உபசாரமும் வேண்டியிருக்கவில்லை.

படப்பிடிப்பு முடிந்து, வியர்வை பெருகிய முகத்துடன் வந்த குண்டுப் பெண்மணியை எங்கோ பார்த்த நினைவாக இருந்தது.

“தொ¢யுதில்ல?” என்று சிரித்த நண்பர், “இவரு ஞானவேலு. நம்ப நாட்டில பொ¢ய கோடீஸ்வரர்,” என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, அவள் கண்கள் விரிந்ததை வேலு கவனிக்கத் தவறவில்லை.

இவளா?
இவளா!

முகத்தில் அப்பியிருந்த வண்ணங்கள் குழம்பி, அவளைப் பா¢தாபமாகக் காட்டின. இன்ன வயது என்று கணிக்க முடியாவிட்டாலும், இவள் ஒன்றும் சின்னப் பெண்ணில்லை என்று தொ¢ந்தது வேலுவுக்கு. வள்ளியைவிட மூத்தவளாகவே இருப்பாள் என்று எங்கோ ஓடியது எண்ணம்.

ஒரேயடியாக இளித்தபடி அவள் கூழைக் கும்பிடு போட்டபோது, தன்னையும் அறியாமல் வேலு பின்னால் நகர்ந்துகொண்டான். வியர்வையும், ஏதோ செண்டின் வாசனையும் சேர்ந்து, குமட்டலை வரவழைத்தன.

“வன்கம்!” அவள் குரலிலோ, உருவத்திலோ சத்தியமாக இனிமை இல்லை.

`இவள் எந்தப் படத்தில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறாள்!` என்ற எரிச்சல் எழுந்தது வேலுவுக்கு. யாரோ தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றியதைப் போல உணர்ந்தான்.

வருத்தமும், கோபமும் ஒருங்கே எழுந்தன.

திரையில் பார்ப்பதையெல்லாம் அப்படியே நம்பும் தன்னைப்போன்ற இளிச்சவாயர்கள் இருக்கும்வரை, பட உலகில் பித்தலாட்டங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

கோயில் சந்நிதானத்தில் வேலு நுழைந்தான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து செய்து, காற்றிலேயே ஓர் ஆன்மிக அலை கலந்திருந்தாற்போல் பட்டது வேலுவிற்கு. கண்கள் தாமாக மூடிக் கொண்டன. ஆகா! இந்த இடத்தில் நிற்பதே எவ்வளவு நிம்மதியாக, நிறைவாக இருக்கிறது!

ஏனோ, அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. ஓரிரு முறை அழைத்துப் பார்த்துவிட்டு, அப்புறம் தன் போக்கிலேயே விட்டுவிட்டாளே!

ஏன், வள்ளி மட்டும் என்ன! ஒரு தடவையாவது, `நீங்களும் கோயிலுக்கு வாங்களேன்!` என்று அழைத்திருப்பாளா?

என்றோ தான் அறியாத்தனமாகச் சொன்னதை அப்படியே வேதவாக்காகப் பிடித்துக்கொண்டு, தனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்துகொண்டு வருகிறாளே!
இப்படி ஒரு மனைவி அமைந்ததற்காவது படைத்தவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?

சாயங்காலம் வீடு திரும்பிய கணவனின் நெற்றியில் குங்குமம் இருக்கக்கண்ட வள்ளி அதிசயித்தாள். அவள் எதுவும் கேட்குமுன் முந்திக்கொண்டு, “இன்னிக்கு கோயில்ல நம்ப கூட்டாளியோட உபயமாம். ரொம்ப வற்புறுத்திக் கூப்பிட்டாரு. இவங்களைப் பகைச்சுக்கிட்டா, பிசினஸ் என்ன ஆறது! அதனால போய்வெச்சேன்!” என்ற வியாக்கியானம் எழுந்தது.

வள்ளியம்மை தனக்குள் சிரித்துக்கொண்டாள். குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான்.

“எப்படி இருந்திச்சு கோயில்ல?” என்று விசாரித்தாள், வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன்.

“எனக்கென்னமோ கோயில்ல இப்படியெல்லாம் அமர்க்களப்படுத்தறது பிடிக்கல. கோயிலுன்னா, சாமி கும்பிட வந்தவங்களை அமைதிப்படுத்தறமாதிரி இருக்க வேணாம்? பிராகாரத்தில பத்துப் பதினஞ்சு பையனுங்க கத்திக்கிட்டு, ஓடிப்பிடிச்சு விளையாடறானுங்க! நல்லா திட்டினேன்! குருக்கள் என்னைப் பாத்து சந்தோஷமா சிரிச்சாரு!”

“கோயில்னா அப்படித்தாங்க! சத்தமா இருக்கும்,” என்று ஏதோ சொல்லிவைத்தாள் மனைவி. சாமியோ, மமதாவோ, இவர் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது யாராக இருந்தால் என்ன! இருவருக்குமே மானசீகமாய் நன்றி செலுத்தினாள்.

– மலேசிய நண்பன், 4-11-2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *