பஞ்சாயத்துக் கூட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 5,258 
 

(இதற்கு முந்தைய ‘பொருந்தாக் காதல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

சபரிநாதன் பெட்ரோல் டேங்கின் வட்ட மூடியை நீக்கினார். குப்பென்று பெட்ரோல் நெடி நாசியைத் தாக்கியது. அவரது விரல்கள் நடுங்கின.

யாருக்கும் தெரியாமல் ஒரு கர்ம காரியம் செய்வதாக அவருக்குத் தோன்றியது. அப்போது பார்த்து காதுக்குள் ஏதேதோ பேச்சுக்குரல் குழப்பமாகவும் அதிர்வாகவும் ஒலித்ததில் உணர்வுச் சிதறலுக்கு உட்பட்டு சபரிநாதன் தீக்குச்சியை உரசி பளீரென அதை பெட்ரோல் டேங்கிற்குள் நழுவ விட்டார்.

அந்த வினாடியே செந்தீ குபீரென்று மேல்நோக்கி எழுந்தது. மிரண்டுவிட்ட சபரிநாதன் ஓடிப்போய் வீட்டுக்குள் நுழைந்து அவசரமாக கதவைப் பூட்டிக் கொண்டார். மூச்சு வாங்கியது.

படுக்கையை விட்டு எழப் பயந்து கண்களை மூடியபடியே படுத்திருந்த ராஜலக்ஷ்மி நடக்கக்கூடாத ஒன்று ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்ற நடுக்கத்தில் கூர்மையாக இருந்தாள். ஓசையில்லாமல் நடந்து வந்து சபரிநாதன் அவளருகில் படுத்துக்கொண்டு விட்டார். அவருடைய வனவிலங்கு மனசுக்குள் கொக்கரித்தது. ரொம்ப திருப்தியுடன் கண்களை மூடிக்கொண்டார். ஆனால் அவரிடமிருந்து வந்த மெலிதான பெட்ரோல் நெடி ராஜலக்ஷ்மியை சிறிது கலவரப்படுத்தியது. சபரிநாதன் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை.

திடீரென வெளியில் இருந்து கனத்த பெட்ரோல் வாசனையும், அனல் கலந்த காற்றும் வீசியதில் ஏதோவொரு பயங்கரம் நடந்திருப்பதை ராஜலக்ஷ்மியால் உணர முடிந்தாலும், அவளுக்கு எழுந்து போய்ப் பார்க்க தைரியம் வரவில்லை. உறங்குவது மாதிரி நடிக்க வேண்டியிருந்தது.

இதற்குள் வெளியில் யாரோ உரத்த குரலில் கூக்குரலிடுவது கேட்டது. தெருவில் சிறுநீர் கழிக்க வந்த ஒரு சிறுவன், “அய்யோ தீ, அய்யோ தீ” என்று விடாமல் கத்தினான். ஒரு சில நிமிடங்களில் எல்லா வீட்டுக் கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. தெருநாய்கள் விடாமல் குரைத்தன. பட்டியில் அடைபட்டிருந்த மாடுகளும் ஆடுகளும் திமிறின. கோழிகள் பயக்குரல் எழுப்பின. தூக்கத்தில் இருந்த பறவைகள் கிறீச்சிட்டன. எங்கும் சப்தமும் கூக்குரலுமாகக் கேட்டன. தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜலக்ஷ்மி எழுந்து நின்றுவிட்டாள். அப்போதுதான் சப்தம்கேட்டு எழுந்து கொண்டவர் மாதிரி சபரிநாதனும் “என்ன, என்ன ஆச்சி?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து நின்றார். ஒன்றும் தெரியாதவர் மாதிரி வெளியில் ஓடியவரின் பின்னால் ராஜலக்ஷ்மியும் ஓடினாள்.

எரிந்து கொண்டிருந்த மொட்டார் பைக்கைச் சுற்றி பெரிய கூட்டமே திரண்டு விட்டிருந்தது. நெருப்பின் சிவந்த வெளிச்சம் எல்லோரின் முகங்களிலும் கோரமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. சுப்பையா விக்கித்துப்போய் நின்றான். நடந்த உண்மையைப் புரிந்துகொண்டு விட்டதாலேயே ராஜலக்ஷ்மி உறைந்து போயிருந்தாள். இவ்வளவு பெரிய கொடிய குற்றத்தை புருஷனிடம் எதிர்பார்க்காததால் அவளுடைய மனம் அதிர்ந்து வெல வெலத்துப் போயிருந்தது. கண்ணால் பார்க்கவில்லையே தவிர இந்தப் பயங்கர செயலைச் செய்திருப்பவர் தன் கணவன்தான் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இல்லை.

ஆனாலும் இந்த நிமிஷத்தில் இந்த விஷயத்தில் என்ன செய்யவேண்டும் என்றும் அவளுக்குத் தெரியவில்லை. தன் புருஷன்தான் தீ வைத்தார் என்று ஒரு நிமிடத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அதைக் கண்ணால் பார்க்காத ஒரே காரணத்தால் அவளால் அதை நிரூபிக்க முடியாது. சாட்சி இல்லாத நிலையில் சபரிநாதன் எளிதாகத் தப்பித்தும் விடுவார்.

அதுவும் இல்லாமல் ராஜலக்ஷ்மி பழிவாங்க வேண்டியது தீ வைத்த சபரிநாதன் என்கிற பயங்கரவாதியை அல்ல; மாறாக சபரிநாதன் என்கிற வயோதிகக் கணவனைத்தான் அவள் பழிவாங்கியாக வேண்டும். அவளுக்கும் சுப்பையாவுக்கும் இடையே பனிப்பந்து போல மலர்ந்திருக்கும் காதல் தக்க தருணத்தில் ஊரறிய வெளிப்படுவதுதான் கணவனுக்கான பொருத்தமான தண்டனையாக விளங்கும். அதனால் ராஜலக்ஷ்மி எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு மெளனமாக நின்றாள்.

சுற்றி நின்ற எல்லாரும் தீ வைத்தது யார் என்று தெரியாமல் அவனை வசைமாரி திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் திட்டுக்கள் சபரிநாதனுக்குள் ஒரு வெற்றிக் குதூகலத்தை மனதுள் ஏற்படுத்தினாலும், கலைந்து கிடந்த நீண்ட கூந்தலை அள்ளி முடிந்தபடி காந்திமதி திருநெல்வேலி மாவட்ட கெட்ட வார்த்தைகளை சரமாரியாக அள்ளி அள்ளி வீசியதில் படுகாயப்பட்டு விட்டார்! அவருக்குள் இருக்கும் வனவிலங்கு காந்திமதியையும் தீயிட்டுக் கொளுத்த வாலைச் சுழற்றியது. நிஜத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் இப்படிக் கெட்ட வார்த்தைகளை இதுதான் சாக்கென்று நினைத்து அள்ளிக் கொட்டுகிறாளோ என்ற சந்தேகம்கூட சபரிநாதனுக்கு ஏற்பட்டது!

ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவருக்குப் புரிந்துவிட்டது. காந்திமதியின் இந்தக் கெட்டவார்த்தைகள் சுப்பையாவை வலை போட்டுப் பிடிக்கத்தான் என்பதை எளிதாக மோப்பம் பிடித்துவிட்டார். எல்லாம் அவருடைய நேரம்! அவர் எது செய்தாலும் அதில் அவருக்குப் பிடிக்காத ஒரு எதிர்விளைவு நிகழ்ந்து விடுகிறது! மிதிபட்ட சிறுத்தையாக சபரிநாதன் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

தீயை அணைக்கிற பணியில் விழுந்து விழுந்து ஈடுபட்டதில் காந்திமதிக்கு சில தீக்காயங்கள் கூட ஏற்பட்டன. அவளுக்கு இதெல்லாம் விழுப்புண்கள். இதெயெல்லாம் பார்த்து சுப்பையா ஒரே ஒரு நாளாவது அவளின் உடம்பை அள்ளி எடுத்து அவளின் ஆசைதீர முயங்கினால் போதும்… அவளின் கட்டை எளிதாக வேகும்…!

எல்லோருமாகச் செர்ந்து நெருப்பை அணைத்து விட்டாலும், மோட்டார் பைக் முக்கால்வாசிக்கும் மேல் எரிந்து நாசமாகிவிட்டது. மறுநாளே அவசரமாக ஊர் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப் பட்டுவிட்டது. இப்படியொரு குற்றம் அந்த ஊர் எல்லைக்குள் இதுவரை நடந்தது கிடையாது. அதனால் ஊரே மிகவும் பதட்டமடைந்திருந்தது. குற்றவாளி யார் என்பதை யாராலும் ஊகிக்கவே முடியவில்லை. அதனால் ஆள் ஆளுக்கு குற்றவாளிக்கு சாபம் கொடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். சபரிநாதன் எந்த உணர்ச்சியையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மெளனமாகவே ஊர் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார். ஏதோ ஒரு வெறியில் தீ வைத்துவிட்டாரே தவிர, கண்டு பிடித்துவிடுவார்களோ; மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று மனசுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார். அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தார். சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த சுப்பையாவையும் அடிக்கடி கள்ளப்பார்வை பார்த்தார்.

சுப்பையாவுக்கு சபரிநாதன் மேல் சந்தேகம் வரத்தான் செய்தது. ஆனாலும் சந்தேகத்தை அவனே நிராகரித்துவிட்டான். சபரிநாதன் ஒரு மனமுதிர்ச்சியற்ற மிகக் கடினமான ஆணாதிக்க மாமனாராகத்தான் தெரிந்தாரே தவிர, தீ வைக்கிற அளவிற்கு பயங்கர மனிதராகத் தெரியவில்லை. அதே நேரம் தீ வைக்கிற அளவிற்கு அவன் மேல் பகைமை பாராட்ட கிராமத்தில் வேறு யார் இருக்கவும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவில்லை. பகைமை காட்ட காரணமும் இல்லை. பிறகு எப்படி இப்படி?

எந்த முடிவிற்கும் வரமுடியாமல் ஊர் பஞ்சாயத்துக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டபோது சுப்பையா சுருக்கமாகத் தன் தீர்மானத்தைச் சொல்லிவிட்டான். இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் தொடர்ந்து திம்மராஜபுரத்தில் தங்கியிருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவன் சொன்னான். ஆனால் அதை ஊர்ஜனம் ஏற்றுக்கொள்ள ஒட்டு மொத்தமாக மறுத்துவிட்டது. சுப்பையாவுக்கு நடந்துவிட்ட அநியாயத்துக்கு அவனிடம் ஊர்ஜனம் மன்னிப்பும் கேட்டது. குற்றவாளியை எப்படியும் கண்டுபிடித்தே தீர்வோம் என்று உறுதி சொன்னது. முடிவு தெரிகின்றவரை கிராமத்தில் இருந்துவிட்டு சந்தோஷமான மன நிறைவுடன்தான் அவன் கிளம்பிச்செல்ல வேண்டும் என்றும் ஊர்ஜனம் ஒட்டுமொத்தமாக சுப்பையாவுக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் சபரிநாதனுக்கு ஊர் பஞ்சாயத்து அலுப்பாக இருந்தது. “போறேன்னு சொல்றவனை போய்த் தொலைய விடுங்கலே” என்று மனதிற்குள் முணங்க நினைத்தவர், கட்டுப்பாடு இழந்து அதை கொஞ்சம் உரக்கச் சொல்லிவிட்டார்.

“அண்ணாச்சி என்னவோ சொல்றீயளே…” என்று இரண்டு மூன்று பேர் கேட்டதும் சபரிநாதன் ஏதோ கலைந்தவர் போல முழித்தார்; பயந்தார்; திரும்பிப் பார்த்தார். உடனே சுதாரித்துக்கொண்டு, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சட்டென எழுந்து நின்றார். “பேசவே தடுமாறுது எனக்கு… ஏன்னா என் வீட்டுக்கு வந்திருக்கிற என்னோட மாப்பிள்ளைக்கு இப்படியொரு அநியாயம் நடந்திருக்கு. இதுக்கும் மேல வேற ஒரு கொடுமை இவருக்கு நடந்து போயிருச்சின்னா அது எனக்குத்தான் அசிங்கம்! என் மவளுக்கு நான்தான் பதில் சொல்லியாக வேண்டும்! அதான் சொல்றேன், மாப்பிள்ளை மனசுக்கு பட்டதுன்னா போயிடலாம்னு.. அவரைப் போக விட்டுருவோம்! ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சின்னு நெனச்சி நம்மளும் பெருமூச்சு விடலாம்…”

திக்கித் திணறி சொல்லி முடித்தபோது காந்திமதிக்குத் தாங்கமுடியாத கோபம் மூண்டது. வரிந்துகட்டிக்கொண்டு, “அண்ணாச்சி சொல்லுறதை ஏத்துக்க முடியாது” என்றாள். இதற்குப் பதிலாக அவர் கன்னத்தில் அறைந்திருக்கலாம். சபரிநாதனின் மனதில் மிருக வால் சுழன்றது. அவருடைய வார்த்தைக்கு எதிர் வார்த்தை அவர் பார்க்கப் பிறந்த சிறுக்கியிடம் இருந்தே வருகிறது. “தீ வச்ச சிறுக்கி மவனை யாருன்னு கண்டுபிடிக்காம சுப்பையா சாரை நம்ம கிராமத்தை விட்டுப் போகவிடவே கூடாது! அவுஹளுக்குச் செய்யிற பாவம் அது. நாமதான் பாதுகாப்புத் தந்து அவுஹளை பத்திரமாகவும் பாத்துக்கணும்…”

சபரிநாதன் காந்திமதியை ஒரு நாயைப் பார்ப்பது போலப் பார்த்தார். அவரின் வன்முறைப் பசி அடுத்த இரையைக் கேட்டது! எதிர்ப்பே இல்லாமல் வாழ்ந்தவர் அவர். இப்போது எதிர்படும் எல்லாமே அவருள் எதிர்ப்புணர்வைக் கிளறிவிட்டன. மிகுதியாக உணர்வு வேகப்பட்டார். பட படத்தார். தடுமாறித் தரையில் சாய்ந்தார்.

உடனே கூட்டம் கலகலத்து விட்டது. அவரை அலாக்காகத் தூக்கிக்கொண்டு அவருடைய வீட்டிற்கு ஓடினார்கள். டாக்டர் விரைந்து அழைக்கப்பட்டார். அவர் அவசரமாக ஒரு ஊசியைப் போட்டார். இருபது நிமிடங்கள் கழித்து சபரிநாதன் கண் விழித்தார். ரத்தக்கொதிப்பு அவருக்கு இருநூறைத் தாண்டியிருந்தது. டாக்டர் வழக்கமான மாத்திரைகளைத் தராமல் அதிக வீரியமுள்ள புதிய மாத்திரைகளைக் கொடுத்தார். மனப் பதட்டத்தை தணிக்கவும்; நன்றாகத் தூங்கவும் சில மருந்துகள் தந்தார். மறுநாள் வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு டாக்டர் கிளம்பியபோது ராஜலக்ஷ்மி வாசல்வரை அவரைப் பின் தொடர்ந்தாள்.

“டெய்லி ரத்தக் கொதிப்புக்கான மாத்திரைகளை அவர் சாப்பிடுகிறாரா?”

“எனக்குத் தெரிஞ்சி எந்த மாத்திரையும் அவர் சாப்பிடற மாதிரி தெரியலையே டாக்டர்…”

“அவர் டெய்லி மாத்திரைகள் சாப்பிட்டே ஆகணுமே…ஏம்மா உனக்குத் தெரியாதா?”

“தெரியாது டாக்டர்.”

டாக்டர் சிறிது குழம்பினர். “நாலைஞ்சி வருஷமாவே அவருக்கு அதிக ரத்தக்கொதிப்பு இருக்கும்மா… அப்ப இருந்தே நான் எழுதிக் குடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வரார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மாத்திரைகள் சாப்பிடறதை அவர் நிறுத்திடக்கூடாது. நிறுத்தினா ஆபத்து. அவரை நல்லா கவனிச்சுக்குங்க…”
டாக்டர் வெளியேறியதும் எல்லோரும் கலைந்து போனார்கள். சபரிநாதன் பேசாமல் கட்டிலில் படுத்துக் கிடந்தார். ராஜலக்ஷ்மிக்கு அவரைப் பார்க்கவே அருவறுப்பாக இருந்தது. தன்னிடம் அவரது ரத்தக்கொதிப்பை மறைத்திருக்கிறார்…. தவிர பயங்கரவாதியாகவே மாறிவிட்ட அவரின் அருகில் நடமாடக்கூட பயமாக இருந்தது. மனத்தால் சுப்பையாவுடன் ஏற்பட்டிருக்கும் இணைப்பு, நிரந்தர உறவுப் பிணைப்பாக எப்போது எப்படி தன் வாழ்வில் அமையும் என்று அவள் மனம் கலங்கியது.

சபரிநாதனுடன் இந்த வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கடக்கும் அவலத்தை நினைத்து அவளது கண்கள் கண்ணீரை உகுத்தன. ராஜலக்ஷ்மியைப் பொறுத்தவரையில் அற்றது அற்றதாகிவிட வேண்டும். எல்லாமே அற்றுப் போய்விட்ட வயோதிகன் ஒருத்தனுக்கு சமைத்துப் போட்டுக்கொண்டு, அவனுடைய தீய குற்றத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு… ‘யம்மாடி, இதுக்குமேல என்னால முடியாதும்மா. சுப்பையா என்னை சீக்கிரமா கரை சேர்த்திடு. இல்லேன்னா என்னைக் காப்பாத்தவே முடியாம போயிடும்யா…என்னை உடனே கூட்டிக்கிட்டு போயிடு.. அப்டி இல்லே நானே இல்லாமப் போயிடுவேன்யா…’ மனசுக்குள் உருகினாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *