பச்சைப் புறா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 13,908 
 

அப்பாவுக்கு நான்கு வாய் சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் என்றிருந்தது. அப்பாவின் வாயைத் துடைத்து, மாத்திரையும், குடிக்க தண்ணீரும் கொடுத்து, படுக்க வைத்து, போர்வை போர்த்தி விட்டு நிமிர்ந்தபோது, எனக்கே நோய் கண்டவள் போன்ற அசதி உண்டானது. ஏழு மாதங்களாக அம்மாவும், நானும் இப்படித்தான் அப்பாவுக்கு கையாகவும், காலாகவும் இயங்குகிறோம்!

அயர்ந்து நாற்காலியில் சரிந்தபோது, போன் அழைத்தது. “அம்மணீ! பச்சப் புறா வேணும்னு கேட்டீங்களே! கொண்டாந்திருக்கேன். வீடு எங்க இருக்கு?”

பேசியது அஞ்செட்டி வேட்டைக்காரர். அப்பாவுக்கு மருந்துக்காக பச்சைப் புறா கொண்டு வந்திருக்கிறார். வீடு தெரியாததால், கோயில் பக்கத்தில் நின்று செல்போனில் பேசியவரிடம், “அங்கயே இருங்க… நானே வர்றேன்…” என்று சொல்லிவிட்டு ஓடினேன்.

பெருமாள்கோயில் சந்தில்தான் என் இரண்டு சித்தப்பாக்களும் குடியிருக்கிறார்கள். சந்து திரும்பியதுமே பெரிய சித்தப்பாவை பார்த்துவிட்டேன். கூடவே ரெண்டாவது சித்தப்பாவும், அவர் மகன்களும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் வேட்டைக்காரர். சித்தப்பாக்களின் கண்களில் படக்கூடாது என்று, கோயில் மதிலுக்குள் மறைந்து நின்றேன்.

“ஏங்க, சிதம்பரம் அய்யாவ பாக்கணும். வீடு தெரியல. எப்படிப் போகணுங்க..?” என்று வேட்டைக்காரர் கேட்டது என காதிலும் விழுந்தது. இரண்டாவது சித்தப்பா இளக்காரமாக ஒரு கேள்வி கேட்டார்!

“சிதம்பரம் அய்யாவ இப்பவே பாக்கணுமா? இல்ல கொஞ்ச நாள் கழிச்சி பாக்கணுமா?”

“இப்பவே… அவசரமா பாக்கணுங்க. அவர் வைத்தியத்துக்குத்தான் இந்த புறாவ கொண்டாந்திருக்கேன்…” என்றார் வேட்டைக்காரர். கறுப்பு புல்லட்டில் இருந்த முதல் சித்தப்பா, கடகடவென்று சிரித்தார். “அவருக்கு வைத்தியம், புறாவெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவாது. இப்பவே உங்க அய்யாவ பாக்கறதுனா, சாத்துக்குடி, ஆப்பிளுனு ஏதாவது பழம் வாங்கிட்டுப் போ. ரெண்டு, மூணு நாள் கழிச்சி வந்தா, ரோஜாப் பூ மாலை, ஊதுவத்தி, சுடுகாட்டு சென்ட் எல்லாம் வாங்கிட்டு வந்து பாக்கலாம்!” என்று அவர் சொல்ல, இரண்டாவது சித்தப்பாவும் அவர் மகன்களும் இடிச் சிரிப்பு சிரிக்க… எனக்கோ கண்களில் நீர்.

அவர்களிடமிருந்து விலகி சந்து திரும்பிய வேட்டைக்காரர், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நின்றிருந்த என்னை அடையாளம் கண்டுவிட்டார்.

“அம்மணீ! நீ இங்கதான் நிக்கறியா?! அங்க நிக்கறவனுக யாரு உங்க பங்காளிங்களா?”

“ஆமா!”

“நெனச்சேன். சுத்தபத்தமா உடுத்திகிட்டு நடுரோட்டுல நின்னு அழுக்கு மனசோட பேசறானுங்க பாருங்க… ச்சீ” முணுமுணுத்தார். அவர் கையில் இருந்த புறாக் கூண்டை பார்த்தேன். கூண்டில் இருப்பது புறா இல்லை; அப்பாவின் ஆரோக்கியம்.

வீடு வந்தடைந்தபோது, மில்லில் இருந்து வந்த அம்மா, அப்பாவை ஈரத் துணியால் துடைத்து, தலை சீவி, பவுடர் பூசி, தலையணை வைத்து உட்கார வைத்திருந்தாள். வேட்டைக்காரர், கூண்டோடு அப்பாவுக்கு முன்பாக அமர்ந்தார். புறாவையே பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா.

ஒரு இடத்தில் ஐந்து நிமிடம்கூட உட்காராத அப்பா, இப்படி பக்கவாதம் வந்து படுத்த நாளில் இருந்து… வீடெல்லாம் கசிந்து கொண்டிருக்கிறது துயரம். இந்த ஏழு மாதத்தில் எத்தனையோ வைத்தியங்கள்… எத்தனையோ ஆயிரங்கள். ஆனாலும், குணமாகவில்லை. “கம்பைநல்லூர் போங்க. நாட்டு மருந்து கொடுப்பாங்க. சரியாகும்!” என்று பாட்டி ஒருத்தி சொல்ல, அங்கு சென்றோம். அப்பாவின் வைராக்கியமா, இல்லை நாட்டுமருந்தின் தீவிரமா தெரியவில்லை… அப்பாவின் வாய் கோணல் சரியாகி, மெள்ள பேசுகிற அளவுக்கு முன்னேற்றமிருந்தது.

வைத்தியர், “பச்சைப் புறா வைத்தியம் பாத்தா, மனுஷன் ரெண்டு மாசத்தில பழைய நெலமைக்கு வந்துடுவார்” என்றார். ஆனால், ”காடுகளில் மட்டுமே இருக்கும் பச்சைப் புறா கிடைப்பது சுலபமில்லை” என்றார்கள் பலரும். அஞ்செட்டியில் இருந்த இந்த வேட்டைக்காரரைப் பிடித்தோம். தகுதிக்கு மிஞ்சிய செலவாக, ஒரு புறாவுக்கு மூவாயிரம் ரூபாய் என்று பேசி, முன்பணம் கொடுத்துவிட்டு, நடந்தோம்… அப்பா எழுந்து நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்.

”அம்மணீ! ஒரு கத்தியும் பாத்திரமும் கொண்டா. அறுத்து உடம்பெல்லாம் ரத்தம் பூசணும்.”

– வேட்டைக்காரர் சொன்ன நிமிடத்தில் கூண்டுக்குள் இருந்த புறா படபடத்தது. கத்தி, ரத்தமென்றது புறாவுக்கு புரிந்திருக்குமா?!

“அய்யா… புறா முழுசையும் எலும்பு நரம்பு மிச்சம் வெக்காம நீங்க ஒரே ஆளா சாப்பிடணும்…” என்றவரிடம் கத்தியும், பாத்திரமும் கொண்டு வந்து கொடுத்தேன்.

“ஏம்மா… உள்ளயே சமைக்கலாமா, இல்ல பின்கட்டுல சமைக்கணுமா? காரம், புளி சமைச்ச பாத்திரத்துல இத சமைக்கக் கூடாது. புது மண்சட்டி இருக்குதா வீட்டுல?”

“இருக்கு! ஆமா… ஏன் புறாவ ஒரே ஆள்தான் சாப்பிடணும்னு சொல்றீங்க?”

– நான் கேட்டதும், வேட்டைக்காரர் சிரித்தார்.

“தாயீ… அந்தக் காலத்துல முனிவருங்களுக்கு பக்கவாதத்தை குணப்படுத்தற மூலிகை தெரிஞ்சது. கணக்கா அத எடுத்துட்டு வந்து வைத்தியம் பாத்தாங்க. இப்ப நமக்கு அது எந்த மூலிகைனு தெரியல. அது உச்சிமலைக் காட்டுலதான் இருக்கும். இந்த பச்சைப் புறா இருக்கே… இதும் உச்சிமலையிலதான் இருக்கும். தானியத்தோட சேத்து மூலிகை இலையும் சாப்பிடற பக்குவம் பச்சைப் புறாவுக்கு உண்டு. மூலிகை சாப்பிட்டு வளந்ததால இந்த புறா ஒடம்புல ஓடற ரத்தத்துக்கு மூலிகை குணம் இருக்கும். இதோட ரத்தத்த ஒடம்புல பூசினா பக்கவாதம் குணமாகறது இப்படித்தான்…”

வேட்டைக்காரரின் விளக்கம், எனக்கு நம்பிக்கை தந்தது. கூண்டுக்குள் இருந்து புறாவை எடுத்த வேட்டைக்காரர், கத்தியும், கையுமாக அப்பாவின் பக்கத்தில் போய் நின்று, “அய்யா… சட்டைய கழட்டுங்க! வெதுவெதுனு ரத்தத்த ஒடனே பூசிடணும்!” என்றார்.

சட்டையை கழட்டுகிற உத்தேசமில்லாமல் வேட்டைக்காரரைப் பார்த்தவர், “நான் பிழைக்கறதுக்காக இந்த ஜீவன ஏன் கொல்றீங்க? நான் நடக்காட்டியும் பரவாயில்ல… விட்டுடுங்க! இதுக்கு குஞ்சுங்க இருந்து, இது தரப்போற இரைக்காக அதுங்க காத்துக்கிட்டு இருந்தா…?” என்று வாய் குழறினாலும், ஒரு வேகத்திலும், வேதனையிலும் அப்பா சொன்னதையெல்லாம் கேட்ட வேட்டைக்காரருக்கு, அதிலிருந்த உறுதி எதையே புரிய வைத்தது.

“சரி அம்மணீ… உங்க அய்யாவுக்கு வந்த மாதிரியே பக்கவாதம் வந்த பெரியவர் ஒருத்தர், அன்னசாகரத்துல இருக்காரு. ரெண்டு நாள் கழிச்சு அவருக்கு இத அறுத்துக் கொடுத்துட வேண்டியதுதான்!” என்று சொன்னபடி வேட்டைக்காரர் மூட்டைக்கட்ட ஆரம்பித்ததும், மனதைப் பிசைந்தது எனக்கு.

“வேணாம்! புறாவ குடுத்துட்டு போயிடுங்க. நான் வளத்துக்கறேன்” என்று மிச்சக் காசையும் கொடுத்தேன். கூண்டை என் கையில் கொடுத்தார்.

“அம்மணீ! இது பக்கத்துல… நாய், பூனை அண்டாம பாத்துக்க. நாய் சத்தம் கேட்டாவே… இதுக்கு உயிர் போயிடும். பாக்கதான் அழகா தெரியும். ஆனா, ரொம்ப நோஞ்சான். சத்தம் சந்தடி இருக்கிற இடத்துல கூடும் கட்டாது, முட்டையும் வெக்காது. அவ்ளோ பயந்தாங்கொள்ளி. இன்னொரு விஷயம். இத மருந்துக்கு அறுக்கணும்னு நெனைச்சா… வேற தீவனம் எதையும் வெச்சிடாதீங்க. அதைத் தின்னுட்டா மருந்து குணம் போயிடும்” – விவரங்கள் சொல்லி விடை பெற்றார்.

கூண்டுக்குள் படபடத்த புறாவை, குற்ற உணர்ச்சியோடு பார்த்தேன். இரண்டு நாள் பசி, அதன் கண்களில் தெரிந்தது. அப்பாவி ஜீவனின் மரணத்தில் சந்தோஷத்தை தேடுகிற குரூர புத்தி சித்தப்பாக்களிடம் மட்டுமா இருக்கிறது? நானும் அற்பமாக சந்தோஷப்பட்டவள்தானே! அப்பாவைப் பார்த்தேன். இத்தனை நாள், ஆடும் கோழியும் தின்று வளர்ந்தவருக்கு, இந்த புறாவிடம் மட்டும் அப்படிஎன்ன கரிசனம்? அப்பாவிடமே கேட்டேன்.

“நான் இல்லேனா… உங்களுக்கு எவ்ளோ கஷ்டம் வரும்னு படுக்கையில விழுந்தப்பறம்தான் தெரியுது. வேணாம்மா… நான் மெதுவா குணமானா போதும். இத விட்டுடு!”

கூண்டுக்குள் தானியம் போட்டேன். அது கொத்திச் சாப்பிட ஆரம்பித்தது. வலுவாக சிறகடிக்கவும் செய்தது. கூண்டுக்குள் கைவிட்டு புறாவை எடுத்தேன். அந்த ஜீவனின் ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும், வெதுவெதுப்பும் என் உள்ளங்கையில் தெரிந்தது.

‘மூவாயிரம் ரூபாய்’ என்று அம்மா பதறினாலும், எனக்கு அது ஒரு உயிராகத்தான் தெரிந்தது. நான் மாடிக்குச் சென்றேன். “சின்ன உயிரே…. உன் கூடு தேடிப்போ” என்று பறக்க விட்டேன். சற்று நேரம் வீட்டையே சுற்றி வந்த புறா, பிறகு பறந்து மறைந்தது.

கீழே வந்த நான் கதறி அழ ஆரம்பித்தேன். புறாவுக்காக இல்லை. வேட்டைக்காரர் வழி கேட்டபோது சித்தப்பாக்கள் பேசிய பேச்சையும், சிரித்த சிரிப்பையும் சொல்லி அழுதேன். உடன் பிறந்தவர்களின் மரண அவஸ்தையைக்கூட கேலிப் பொருளாக்கி சிரித்த குரூரம்… அப்பாவையும் உலுக்கியது.

அப்பாவுக்கு இரண்டு தம்பிகள். தாத்தாவின் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒற்றுமையாகத்தான் பாகம் பிரித்துக் கொண்டார்கள். தாத்தா இறந்த பிறகு, பாட்டிக்கு பக்கவாதம் வந்து படுத்துவிட்டார். படுக்கையில் அசுத்தம் செய்கிற தாயைப் பராமரிக்க… ஆளாளுக்குப் பதற, அப்பாவும், அம்மாவும் முழு மனதோடு வைத்துப் பார்த்தார்கள்.

பாட்டி இறந்ததும் பாட்டிக்குச் சொந்தமான இந்த காரை வீடு அப்பாவுக்கு வந்துவிட்டது. தாய்க்கு சோறு போட விலகி ஓடியவர்கள், சொத்து என்றதும் பங்குக்கு வந்தார்கள். ‘அம்மாவைப் பார்க்கறதுக்கு ஒரு பயலுக்கு மனசில்ல. இப்போ சொத்துக்கு மட்டும் வர்றானுங்களா..?’ என்ற வருத்தத்தில், கோபத்தில் வீட்டைக் கொடுக்க மறுத்துவிட்டார் அப்பா.

சித்தப்பாக்கள் சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள். “சிங்கம் மாதிரி ஆண் பிள்ளைங்களா பெத்து வெச்சிருக்கோம். பரம்பரை வீட்ட ஒரு பொட்டச்சிக்கு குடுத்துட்டு, இவனுங்க வேடிக்கை பாப்பானுங்களா? பூர்விக சொத்து பேரன்களுக்குத்தான் வந்து சேரணும்!” என்று ஆண் பிள்ளை பெற்ற எக்களிப்பில் கர்ஜித்தார்கள். எதிரிகளோடு போராடி ஜெயித்தவரால், நோயை ஜெயிக்க முடியவில்லை. பக்கவாதம் வந்து படுத்துவிட்டார்.

இப்போது… அப்பாவின் மரணத்துக்காகத்தான் காத்திருக்கிறார்கள். அவர் இறந்ததும்… என்னையும் அம்மாவையும் துரத்திவிட தயாராக இருக்கிறார்கள். நரமாமிசத்துக்காக அலைகிற பேய்களைப் போல எதிரிகள் சுற்றியிருக்க, சுடுகாட்டில் அடைபட்டிருப்பது போல அச்சத்தோடு எத்தனை நாளைக்கு இந்த வீட்டில் இருப்பது? முகம் தெரியாத அந்நியனுக்கு இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு ஊருக்கு போய்விடலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

அப்பாவின் உடம்பில் நல்ல மாற்றம் இருந்தது. பலமிழந்த கால்களோடு தள்ளாடித் தள்ளாடி வீதியில் அவர் நடமாட ஆரம்பித்தார். ‘ஊர்ல கோணல் மாணலாக டான்ஸ் ஆடற ஒரு கூத்துக்காரன் வந்திருக்கான்! பாத்தீங்களா, டேய்!’ என்று சித்தப்பாக்கள் கேலி பேசினார்கள்.

‘உறவுகள் வகுக்கும் மரண வியூகத்துக்குள் சிக்கித் தவிக்கிற எங்களுக்கு விடுதலை கிடைக்காதா?’ என்று மொட்டைமாடியில் உட்கார்ந்து பலநாள் நான் அழுதிருக்கிறேன். அப்படி இன்றைக்கும் மாடியில் உட்கார்ந்திருந்தேன். தலைக்கு மேல் சடசடவென்று ஒரு சத்தம்… நிமிர்ந்து பார்த்தால், புறா பறந்து கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தால்… பச்சைப் புறா! நான் பறக்கவிட்ட அதே பச்சைப் புறா!

இது காட்டுக்குப் போகவில்லையா? நான் அதிசயமாக பார்த்தேன். மாடியில் இறங்கிய புறா, தரையில் நடந்தது. பிறகு செடி முளைத்த சுவற்றின் பிளவில் பதுங்கியது. பதுங்கிய இடத்தை எட்டிப் பார்த்தேன்… நம்பவே முடியவில்லை. அங்கே ஒரு கூடு… கூடவே ஜோடிப் புறா சடசடக்கிற சத்தம்!

காட்டில் மட்டுமே வசிக்க வேண்டிய பச்சைப் புறா, இங்கே எப்படி வந்தது? பாசி படர்ந்த இந்த வீடும், கத்தியை கீழே வைத்த எங்களின் அன்பும் இதற்கு பிடித்துப் போனதா? வேட்டை நாய்கள் குரைக்கிற இடத்தில், இந்த புறா முட்டையிட்டு குஞ்சு பொறிக்காது என்று வேட்டைக்காரர் சொன்னாரே! அன்பானவர்கள் உறவாகக் கிடைத்தால்… துன்பத்துக்கு மத்தியிலும் வாழ முடியும் என்று சொல்கிறதா இந்தப் புறா?

அப்பாவை மெள்ள மாடிக்கு கொண்டு வந்து, புறா கூட்டைக் காட்டினேன். சடசடவென்று புறா பறக்க, கூட்டுக்குள் குஞ்சுகள் இருப்பது தெரிந்தது. முகம் மலர்ந்து சிரித்தார் அப்பா, ‘தொந்தரவு பண்ணக் கூடாது’ என்று சைகையால் சொல்லிவிட்டு, நடந்தார். அந்த நடையில் கொஞ்சம் திடம் கூடியிருப்பது தெரிந்தது. வீட்டை விலைக்கு வாங்க வந்த ஆளிடம், அதே திடத்தோடு அப்பா சொன்னார்-

“இந்த வீட்டை நாங்க விக்கிறதா இல்ல. காலத்துக்கும் இது எங்க வீடுதான்!”

ஆம்! வேட்டை நாய்களுக்கு மத்தியில் ஒரு பச்சைப் புறா கூடுகட்டி குஞ்சு பொறிக்குமென்றால், எதிரிகளுக்கு மத்தியில் எங்களால் வாழ்ந்து ஜெயிக்க முடியாதா?

பாசி படர்ந்த வீட்டுக்கு மேல் புறாக்கள் சடசடவென்று பறக்கிற சத்தம் கேட்டது. ஆகாயம் எத்தனை பெரியதாக இருந்தால் என்ன… சிறகுகள் இருக்கிறதே… என்று சொல்வது போல இருந்தது அந்தச் சத்தம்!

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *