Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பசி

 

எயர்கனடா விமானம் முகில்களை கிழித்துக்கொண்டு உயர உயரப்பறக்கிறது ஆனால் எண்ணங்கள் என்றும் பூமியைச்சுற்றித்தான் வலம்வந்து கொண்டிருக்கிறது. சகோதரங்களை எல்லாம் கனடாவுக்கு அனுப்பும் மட்டும் எந்தவெளிநாட்டையும் நான் எட்டிப்பார்த்ததே கிடையாது. செக்குமாடுபோல் வீடும் வேலையுமாக பதினைத்து வருடங்கள் உருண்டோடி விட்டது. உறவுகள் பற்றிய கனவும், சகோதரங்கைளைக் காணும் துடிப்பும் இப்படி இப்படி எப்படி எப்படியோ எண்ணங்கள் ஏக்கங்கள்…! சாப்பாட்டை எண்ணும் போது சந்திராமாமி தான் கண்முன் நிற்பா. என்ன உணவானாலும் மாமியை வெல்ல யாருமில்லை. ஊரில், கிழமைக்கு ஒருதடவையாவது மாமியினுடைய சாப்பாடு சாப்பிடவில்லை என்றால் எனக்கு வாழ்வே விடியாது. அப்படி அமிர்தமாய் இருக்கும் அவருடைய உணவு. அவருடைய கையுக்கென்று ஒரு தனிச்சிறப்பு…அது கையல்ல அச்சயபாத்திரம். மாமியும் இப்போ கனடாவில்தான். அவவை நினைக்கும் போதே வாயூறத்தொடங்குகிறது.

எனக்கு நான்கு தாய்நாடுகள்.. அகதிதானே! பிறந்தது சிங்கப்பூர், வளர்ந்தது இலங்கை, படித்துப் பட்டம் பெற்றது நோர்வே, கனடாவின் என்காலடி படவில்லையாயினும் நான்காவது தாய்நாடு போன்ற உணர்வு. என் உற்றம், சுற்றம், உறவு எல்லாமல்ல, மாமியின் சாப்பாடும் அங்கேதானே.

கனடா விமானநிலையம் என் உறவுகளாலும், நண்பர்களாலும் நிரம்பியது… ஏதோ ஒரு மந்திரி குடும்பத்துடன் வந்து இறங்கியது போன்ற ஒர் உணர்வு. மாமியைத் தேடுகிறேன் காணவில்லை. தம்பிசொன்னான், அண்ணா!! மாமி வரவில்லை, வேலையாம், நாளைக்கு இரண்டு மணிக்கு சாப்பிட வரட்டாம். கனடா வந்து இறங்கியதை விட, உறவுகள் நண்பர்களைச் சந்தித்ததை விட மாமி வீட்டில் நாளை விருந்து என்பது தான் என்னை எங்கோ கொண்டு சென்றது. மாமியை நினைத்தாலே பசியெடுக்கத் தொடங்கும்… சீ..மாமிக்கு ஒரு பெண்பிள்ளை இருந்தால் மாமியின் சாப்பாட்டுக்காக ஆவது அவளைத் திருமணம் செய்திருப்பேன் என்று என் மனைவியைச் சீண்டுவது வழக்கம்.

காலை புலர்ந்தது பயணக்களைப்புத் தீர உறங்கி எழுந்தாயிற்று மனைவி சாப்பிடக் கூப்பிடுகிறாள். யாருக்கு வேணும் உந்தச் சுட்ட பாணும், செத்த பிண இறைச்சியும். என்னுக்குள் எண்ணிக்கொண்டேன். மாமியின் சாப்பாடு சாப்பிட்டிருந்தால் தெரியும் அதன் அருமை. நான் பசியுடனே மாமியின் சாப்பாட்டுக்காகத் தயாராகிறேன். எந்தப்பரிசுப் பொருளைக் கொடுத்தாலும் மாமியின் சாப்பாட்டுக்கு ஈடாகாது.

மணி ஒண்டரை, மரணப்பசி, மாமி வீட்டை நோக்கி தம்பியின் மகிழுந்து பறக்கிறது. சிரித்த முகம், பாசமான கண்கள், அன்பான வார்த்தைகள்… மாமி மாறவே இல்லை. பரிசுப் பொருட்களைக் கொடுத்து விட்டு இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறோம். மாமி,மாமா இருவரும் எம்முடன் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள. ஊர்க்கதைகள், உலகக்கதைகள், இனசனம் என்று கதை வளர்ந்து கொண்டு போனது. சாப்பாட்டு மணமே இல்லை. அடுக்களைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். அங்கே சாப்பாடு எதையும் காணவுமில்லை. இன்று என்வயிற்றில் அடிதான். தம்பியின் காதில் மாமி விருந்துக்கத்தானே வருச்சொன்னவ? ஒண்டையும் காணேல்லை? தம்பி ஆம் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அமைதியாக இருக்கிறான். என்னுள் பெரும் கலவரம். தேநீர் போடுவதாகக் கூடத்தெரியவில்லை. ஊரில் மாமி வீட்டுக்குப் போனால் அவ முதலில் ஓடுவதே குசினிக்குள்தான். சாப்பாடும் தேனீரும் தராமல் அனுப்பமாட்டா… எனக்கு ஒன்றுமாய் புரியவில்லை.

கொட்டாவி விட்டு என்பசியை உணர்த்துகிறேன். சிறுகுடலைப் பெருங்குடல் தின்று கொண்டிருந்தது. எனக்கு பசிக்கிறது என்பதை உணர்ந்த மாமி, “மருமகன் ரீ போடட்டோ” என்றபடி இருக்கையை விட்டு எழுகிறார். மரியாதைக்காக கொஞ்சம் பொறுத்துக் குடிப்பம் என்று என்பசியையும் பொருட்படுத்தாது மாமியை உற்றுப்பார்க்கிறேன். மாமி எதுவித சலனமும் இல்லாமல் மீண்டும் ஆசனத்தில் அமர்ந்து விடுகிறார். எனக்கு இன்று தேநீரும் கிடைத்தபாடில்லை. கொடுத்த பரிசுப் பொருளும் வீண்தான் என்று என்மனம் என்னை எள்ளி நகையாடிக்கொண்டது. மாமியும் மாமாவும் ஊர்க்கதைகளையும் பழைய நினைவுகளையும் மீட்டுக்கொண்டிந்தனர். எனக்கே வயிறு அழுவது கேட்டுக் கொண்டிருந்தது.

வீட்டுமணியடித்தது. என்னடாப்பா எமக்கே சாப்பாடு தந்தபாடில்லை இதற்கும் இன்னும் புதிய விருந்தாளிகளா? இனித்தான் மாமி சமைக்கப்போகிறாவா? இப்ப சமைத்து எப்ப சாப்பிடுவது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மாமி எந்தவித சலனமும் இன்று வெளிக்கதவை திறக்கிறார். சாப்பாட்டு வாசம் மூக்கைப் பிரித்தது. ஓ…ஓ மாமி சாப்பாட்டை கடையில் ஒழுங்கு பண்ணியிருக்கிறா..

வந்தசாப்பாடு பரிமாறப்படுகிறது. தோசை, இடியப்பம், சாப்பாறு, சட்ணி, இறைச்சிக்கறி, சொதி, மிளகாயுடன் வடகப்பொரியல். மாமி சமைத்திருந்தால் இப்படி பல கறி வைத்திருக்கமாட்டா தான். சாப்பாடும் மாமியின் சாப்பாட்டுக்கு ஈடுகொடுக்கிறது. எல்லோரும் மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்தோம். வயிறு நிரப்பியது ஆனால் மனம்மட்டும் நிரம்பவே இல்லை…ஆள்மனதில் ஒரு வருடல், நெருடல், வருத்தம், வேதனை…ஆயிரமாயிரம் கேள்விகள்…?ஏன் ஏன் இப்படி…?

எப்படி…எப்படி…எனக்கு எப்படித்தெரியும் என்று மனம் குழம்பிக் கொள்கிறது. சாப்பிட்டாயிற்றே என்ன குழப்பம். கடையிலே சாப்பாடு எடுப்பது என்றால் கடையிலே எல்லாரும் சாப்பிட்ட பின் மாமி வீட்டுக்கு வந்திருக்கலாமே. பணம் எம்மிடமும் உண்டுதானே. என் எதிர்பார்ப்பு உடைந்தது… மனதைச் சமாதானமப்படுத்திக் கொள்கிறேன்… மனமே எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருந்தால் ஏமாற்றம் என்ற இன்னொன்று நிச்சயம் இருக்கும்…. இருப்பினும் மனம் அடங்கியதாக இல்லை… மாமியின் முகத்தையே பார்க்கிறேன்..அது பழையமாதிரி சலனமற்று, குற்றம் குறையற்று தெளிவாகவே இருக்கிறது.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனடியாக வெளிக்கிட்டுப் போய்விடவேண்டும் போல் இருக்கிறது. தம்பியைப் பார்த்து வெளிக்கிடுவமா எனச்செய்கை காட்டுகிறேன். சரி எனச்செய்கை காட்டினான் அவனும். மாமிக்குப் புரிந்துவிட்டது நாங்கள் புறப்படப்போகிறோம் என்று. மருமகன் பால் ரீ இருக்கு குடிக்கேல்லையே என சுடுநீர் போத்தலை எடுத்துவந்தார். அதுவும் ஓடர் செய்யப்பட்டு வந்தது தான்…

“சாப்பாடு பிடிச்சுதோ” இதுமாமி. ஏதோ தான்சமைத்த சாப்பாடுதிரி என்ற என்மனம் புலம்பியது. சூப்பராய் இருந்தது…கனடாவிலை நல்லாச் சமைக்கிறார்கள் என்றேன். மாமியும் மாமாவும் தமது கடையில் இருந்து சாப்பாடு வந்ததுபோல் கடைகளையும் சாப்பாடுகளையும் புகழத் தொடங்கினார்கள். போதும் போதும் என்றாகி விட்டது. மனைவி என் முகத்தை ஒரு நக்கலாக பார்க்கிறாள் |ஏதோ மாமி மாமி மாமியின்டை சாப்பாடு என்றாய் எங்கே..? என்பதுபோல் இருந்தது. என்முகத்தில் அசடுதான் வழிந்தது

வீட்டில் வாசல்வரை மாமியும் மாமாவும் வந்தார்கள். பிரிந்து போகும்போது மாமியை மீண்டும் திரும்பிப்பார்க்கிறேன்… சலனமற்றிருந்தது அவவின் முகம். வயிறு முட்டச்சாப்பிட்டும் பசியுடனே தான் திரும்புகிறேன் என்றது மனது. வயிறு நிறைந்துதான் இருந்தது மனம் மட்டும் வெறுமையாய் பசி பசி என்று பதைத்துக்கொண்டது. சாப்பாடு இருந்தது அங்கு மாமியில்லை. சாப்பாட்டில் மாமியில்லை. அவரின் உடல் இருந்தது உயிர் இல்லை. உதவாத உணவை மாமியின் கையால் செய்து பரிமாறியிருந்தால் கூட சாப்பிட்ட திருப்தியும், மனநிறைவும் இருந்திருக்கும். பசியுடன் உயிரை இழந்தவன் போல் திருப்தியற்றவனாக மகிழுந்தில் வந்து ஏறிக்கொள்ள அது உறுமிக்கொண்டு கிளம்பியது. தம்பிக்கும் பசிதான் என்று மகிழுந்து சொன்னது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத சோகம்? ஆறுபோல் ஓடுகிறதே கண்ணீர். உருண்டோடும் நீலவிழிகளுக்குள் இத்தனை கண்ணீர் துளிகளா? உறைபனிகாலத்தில் கூட வெப்பத்தால் உறையாத கண்ணீர் நூல்கோத்த முத்தாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது ...
மேலும் கதையை படிக்க...
காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில் அங்கே அழகாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு சிறைச்சாலை. எமக்குச் சிறைச்சாலை என்ற தும் நினைவுக்கு வருவது சித்திரவதைகூடங்கள் தான். பாதுகாப்பு என்பது இல் ...
மேலும் கதையை படிக்க...
"முருகா, அம்மனே, சிவனே, வட்டுவினியானே இந்த பஸ் எல்லாவிடங்களிலையும் நிக்காமல்...யாரும் ஏறாமல்,இறங்காமல் நேரேபோய்; கடசி பஸ்ரொப்பில் நிக்கவேணும். ம்...ம்... இதுக்கிள்ளை யாரே ஒண்டு பெல்லை அடிச்சிட்டுது, இறங்கப்போகுது போலை.  நான் நேரத்துக்குப் போய் சேர்ந்த மாதிரித்தான். சரி இறங்கிறதாவது கதவருகிலுள்ள சீட்டில் ...
மேலும் கதையை படிக்க...
ஐந்துநாளும் வேலை, விடியற்காலை போனால் பின்நேரம்தான் வீடு. சனி ஞாயிறு நின்மதியாக நித்திரை கொள்ளுவோம் என்று நினைத்தால் சடங்கு, சம்பிரதாயம் எண்டு ஏதாவது வந்துவிடும் அவற்றுக்கொன்றே பிறிம்பாக உழைக்கவேணும். செக்கில் கட்டிவிட்டமாடாய் உழன்றாலும் காசாவது மிஞ்சுகிறதா? அதுவும் இல்லை. உழைத்து உழைத்துக் ...
மேலும் கதையை படிக்க...
தனிமரம்
சிறைக்குள் எரிந்த என்னிதயம்
புலத்தில் ஒருநாள்
மே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)