பசி

 

எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று சொர்ணபுரி என்ற பெயர் கொண்ட அந்தக் கிராமத்துக்குக் கார்கள் வருவதுண்டு. சின்னக் கிராமம் என்றாலும் கிழக்கே சிவன் கோயில், மேற்கே பெருமாள் கோயில் ஊர் எல்லையில் அன்ன பூர்ணேஸ்வரி என்று ஒருகாலத்தில் பிரசித்திபெற்ற மூன்று கோயில்கள் அங்கு உண்டு. இந்தக் கோயில்களுக்கு விவரம் தெரிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வெளியூர்களிலிருந்து வருவார்கள். அந்த மாதிரி வந்த வெள்ளைக் கார் ஒன்று சிவன் கோயில் கோபுரம் முன் நின்றது.

சிவனுக்கு கால பூஜை, நைவேத்யம் எல்லாம் காலை எட்டு மணிக்கே முடிந்து விட்டாலும் பத்து மணி வரை கோயில் திறந்திருக்கும். அதற்கப்புறம் நடை சாத்தினால் மாலை ஐந்து மணிக்குத்தான் நடை திறப்பார்கள். காரிலிருந்து சாம்பு இறங்கினார். வெள்ளை வெளேர் பேண்ட்-சட்டை, டிரைவர் முன்னதாக இறங்கி, பின் இருக்கைக் கதவைத் திறந்து விட்டதிலிருந்தே ஆசாமி பெரிய புள்ளியோ எனக் காண்போரை நினைக்க வைத்தது.

ஹரி பூஜையெல்லாம் முடித்துவிட்டு, ஆலயப் பணியாள் சேமலை கிணற்றில் நீர் இழுத்துக் கொட்ட, வாளியில் நீர் முகந்து வந்து முன்புறம் இருந்த முல்லைச் செடிகளுக்கு ஊறறிக் கொண்டிருந்தான். காரைப் பார்த்ததும், வாளியைக் கிழே வைத்துவிட்டு விரைவாக வெளியே வந்தான்.

‘‘நமஸ்காரம். வாங்கோ! வாங்கோ!’’ என்று இரு கைகளையும் கூப்பி வந்தவரை வரவேற்றான்.

துவைத்து உலர்த்திய வேட்டி, இடுப்பில் சுற்றிய சிவப்பும் மஞ்சளும் பச்சையும் கரையிட்ட துண்டு, சுமார் 15 வயது சிறுவன், ஒல்லி உருவம், நெற்றியில் குழைத்துப் போடப்பட்டிருந்த விபூதி, புருவ மத்தியில் சந்தனம், குங்குமம்…

‘‘தம்பி, அர்ச்சகர் இல்லையா? ஒரு அர்ச்சனை பண்ண வேண்டும்’’ என்றார் சாம்பு.

கிணற்றில் வாளியை இறக்கி நீர் சேந்திக் கொண்டிருந்த சேமலை களுக்கென்று சிரித்துச் சொன்னான். ‘‘சாமி, இந்தக் கோயிலுக்கு இவருதான் ஐயிரு. ஆளு சிறிசா இருக்காரேன்னு பாக்கறீங்களா, மகா சூரரு. மந்திரமெல்லாம் தலைகீழ்ப் பாடம். ஆளு வெகு சூட்டிகை!’’

சாம்புவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு சின்ன வயதில் ஒரு பையன் ஆலயத்தில் குருக்கள் பொறுப்பில் இருப்பான் என்று அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வியப்போடு சிறுவனைப் பார்த்தார்.

‘‘உள்ளே வாங்கோ. மொதல்ல சித்தி விநாயகர். சேவிச்சுக்குங்கோ. மகா சக்தி வாய்ந்த பிள்ளையார். பக்தாள் வேண்டியதைக் குறைவில்லாம வழங்கும் வள்ளல். மனசில் நினைச்சதைச் சித்தியாக்கிட்டுத்தான் மறுகார்யம் பார்ப்ப்பார்.’’

மந்திரங்களை ஸ்பஷ்டமாக உச்சரித்து, கற்பூர ஆரத்தி காட்டி, வெளியே வந்து தட்டை நீட்டினான் சிறுவன். தீப ஜ்வாலையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார் சாம்பு. விபூதி பிரசாதம் கொடுத்து விட்டு, அவரை மற்ற சந்நிதிகளுக்கு அழைத்துச் சென்றான்.

ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீஆஞ்சநேயர், நவக்கிரக மூர்த்திக்ள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகாலபைரவர் – மூலவராக ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர், தனிச் சந்நிதியில் அம்பாள் ஸ்ரீபிரஹதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தனர். ‘‘ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர், ஸ்ரீபிரஹதாம்பாள் ரெண்டு பேரையும் மனமுருகித் தொழுதால், தனம் பெருகும், தோஷ நிவர்த்தி, திருமணத் தடை நிவர்த்தி, குழந்தைப் பேறு… எல்லாம் கிட்டும்…’’ – என்று தீபாராதனைக்குப் பின் சிறுவன் பெரிய அர்ச்சகர் போலத் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தான்.

சாம்புவுக்கு சிறுவனின் தெளிவான பேச்சு பிடித்திருந்தது. ஆலய தரிசனம் முடிந்ததும் வெளிப் பிராகாரத் திண்ணையில் சற்று அமர்ந்தார். அவனை முன்பு எங்கோ பார்த்த உணர்வு மேலோங்குவதை அவரால் தவிர்க்கமுடியவில்லை…

‘‘தம்பி, இங்கே வாங்க. ஸ்கூலுக்குப் போய் படிக்கலையா?’’ என்று மெல்லக் கேட்டார்.

சிறுவன் அருகில் வந்தான் எதிரில் அமர்ந்தான். ‘‘என் பேர் ஹரி. பிளஸ் டூ வரைக்கும் படிச்சேன். ஆயிரத்து நூற்று ஐம்பத்தேழு மார்க். டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை. ஆனால், குடும்ப சூழ்நிலை மேற்கொண்டு படிக்க முடியலை. மூணு மாசத்துக்கு முன்னே அப்பா ஹார்ட் அட்டாக்ல போயிட்டார். அவரு பண்ணிண்டிருந்தது இந்தக் கோயிலில் அர்ச்சகர் வேலை. இதை நான் பார்க்கணும்னு அம்மா சொன்னா. வேறு வழியில்லை. பகவான் விட்ட வழி இதுதான்னு செய்ய ஆரம்பிச்சுட்டேன்…’’ சிரித்தான் ஹரி.

பகீரென்றது சாம்புவுக்கு.

இதே ஊர்தான் சாம்புவுக்குப் பூர்வீகம்.. பள்ளிப் படிப்பை இங்குதான் முடித்தார். தந்தை தாசில்தார் என்பதால் மாற்றலாகி வெளியூர் போகும்படி ஆகிவிட்டது. கல்லூரிப் படிப்பை மதுரையில் முடித்து பெங்களூரில் வேலை. கணிணி தொடர்பான வேலை என்பதால், அடிக்கடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு. கை நிறையச் சம்பளம்…

திருமணம் முடிந்தது. ஒரு பெண் குழந்தை. அவள் வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை செய்கிறாள். திருமணத்துக்காகவும் காத்திருக்கிறாள். நாலைந்து வரன் வந்தது. பூர்வீகச் சொத்துக்களும், தற்போது லட்சங்களில் சம்பாதிக்கிற பணமும் இருந்தும் அதிசயமாக ஏதேதோ காரணங்களால் மகளுக்கு வந்த வரன்கள் திகையாமல் தள்ளிப் போனதால் அம்மா சொன்னார்: ‘‘சாம்பு, நீ ஸ்கூல் படிச்ச சொர்ணபுரிக்கு ஒரு நடை போய், அந்த சொர்ணபுரீஸ்வரர் பிரகதாம்பாளைச் சேவிச்சுட்டு வாயேன். அதுக்கப்புறம் நம்ப அம்முவுக்கு மாப்பிள்ளை அமையலைன்னா என்னைக் கேள்!’’

அம்மாவின் நம்பிக்கையைத் தள்ளுவானேன் என்று பெங்களூரிலிருந்து சாம்பு காரில் புறப்பட்டுவிட்டார். அருகாமை பெரிய நகரத்தில் லாட்ஜில் தங்கிவிட்டு, காலையில் சொர்ணபுரிக்கு வந்திருந்தார் சாம்பு.

அம்பாளையும் சிவனையும் மனமுருகப் பிரார்த்தித்தார். ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்த சிறுவனும் திருமணத் தடை விலகும் என்று சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ந்தது.

எதிரில் அமர்ந்திருந்த சிறுவன் ஹரியிடம் சாம்பு கேட்டார்: ‘‘மூணு மாசத்துக்கு முந்தி அப்பா தவறிட்டாருன்னு சொன்னியேப்பா, உங்கப்பா பேர் என்ன? என்ன பண்ணிண்டிருந்தார்?’’

‘‘தாத்தா, அவருக்கப்புறம் அப்பா எல்லாம் இதே சொர்ணபுரீஸ்வரர் கோயில்லதான் பூஜை பண்ணிண்டிருந்தா. அப்பா பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு மேலே காலேஜுக்குப் போக ஆசைப்பட்டார். குடும்ப சூழல் இடம் தரலை. அதே பிரச்னைதான் எனக்கும். நல்ல மார்க் எடுத்தேன். மெடிகல் ஸீட் கிடைக்கும்னு சொன்னா. வெளியூர் போய் தங்கிப் படிக்க பண வசதி இல்லாததால் சொர்ணபுரீஸ்வரரே கதின்னு வந்துட்டேன். எங்கப்பா பேர் மணிகண்டன்’’

சாம்புவுக்கு பளிச்சென்று மணிகண்டன் ஞாபகத்துக்கு வந்தார். இங்கு வந்ததிலிருந்து சிறுவன் ஹரியின் முகம் யாரையோ நினைவுபடுத்துகிறதேயென்று அவர் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இப்போது புரிந்துவிட்டது. மணிகண்டனின்… மணியின் மகனா இவன்?

அவனை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். ‘‘உங்கப்பாவும் நானும் ரொம்ப நெருங்கிய சிநேகிதர்கள் ஹரி. சின்ன வயதில் இந்த ஊரில் படித்தவன் நான். ரெண்டுபேரும் சேர்ந்து நாயக்கர் தோப்புல மாங்காய் திருடுவோம். பெருமாள் கோயில் மண்டபத்துல உக்காந்து பரீட்சைக்குப் படிப்போம். உங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம், உங்க பாட்டி தயிர்சாதம் பிசைந்து மாவடு வைத்து கவளம் கவளமாகக் கொடுப்பாங்க. அது அமிர்தமா இருக்கும். ஐயோ மணி போயிட்டானா? எப்படி..? எப்படி?’’

சாம்புவுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

ஹரி கண்களிலும் நீர். ‘‘என் அப்பாவின் ஃபிரண்டா நீங்க? அவர் நல்லாத்தான் இருந்தார். கோயில் வருமானம் பத்தலை. இருந்தாலும் ஈஸ்வரனைப் பசியோடு வாட விடக்கூடாதுன்னு ஊர்ப் பெரிய மனுசாளிடமெல்லாம் பிச்சையெடுக்காத குறையா அவா அனுபவிச்சு வர்ற கோயில் சொத்துக்களிலிருந்து கோயிலுக்கு விளக்கேற்ற, நைவேத்யம் செய்ய உதவி செய்யும்படி கெஞ்சுவார். பகவானைப் பசியோட வாட விடப்படாதுன்னு சொல்லிண்டே இருப்பார். ஒரு முறை அவருக்கு நெஞ்சு வலி வந்தது. அப்ப ஏதோ கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட் கொடுத்தா. தப்பிச்சுண்டார். ரெண்டாவது ஸ்ட்ரோக் வந்துச்சு. எங்களால் அவரைக் காப்பாத்த முடியலை!’’

‘‘தம்பி ஹரி, என்னை உங்க வீட்டுக்கு அழைச்சுண்டு போறியா? என் நண்பன் இறந்த துக்கத்தை உங்க தாயாரிடம் விசாரிக்கணும். அது என் கடமை…’’

ஹரி ஆலயப் பணியாள் சேமலையிடம் கோயிலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் தருமாறு கூறிவிட்டு சாம்புவுடன் காரில் ஏறிக்கொண்டான்.

ஹரியின் தாய் மைதிலி காரில் வந்து இறங்கும் மகனைப் பார்த்தாள். கூடவே ஒரு புது மனிதரும் வரவே, ‘‘வாங்கோ!’’ என்று கூறினாள். ஹரி சாம்புவை அறிமுகம் செய்து வைத்தான். ‘‘உங்க பெயர் சாம்புவா? தாசில்தார் பையன் தானே? அவர் அடிக்கடி உங்களைப் பத்திப் பேசிண்டிருப்பார். உள்ளே வாங்கோ!’’ என்றாள்.

சாம்புவுக்கு கண்களில் கரகரவென்று நீர் வழிந்தது. அந்தக் கால நிகழ்வுகளை அவர் ஹரியின் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டார். பிறகு மெல்லச் சொன்னார்: ‘‘ரொம்ப மனசுக்குக் கஷ்டமா இருக்கு அம்மா. இந்தக் குடும்ப பாரத்தை உங்க தலையிலும் ஹரியின் தலையிலும் ஏற்றி வெச்சுட்டு மணி போயிட்டான். என் அதிதியந்த சிநேகிதன் பிள்ளையான ஹரி வாங்கியிருக்கிற மார்க்குக்கு மெடிகல் சீட் கட்டாயம் கிடைக்கும். பணம்தானே பிரச்னை? அது என்கிட்டே எதேஷ்டமா இருக்கு. இதோ இந்த நிமிடத்திலிருந்து ஹரி என் பிள்ளை. அவன் விரும்பின படிப்பைப் படிக்கட்டும். எத்தனை லட்சம் செலவு ஆனாலும் அது என் பொறுப்பு. என் சிநேகிதனுக்கு நான் ரொம்பக் கடன் பட்டிருக்கேன்… இதை நீங்க பெரிய மனசோட ஏற்றுகிட்டு ஹரியைப் படிக்க வைக்க அனுமதி தரவேணும் அம்மா!’’

ஹரியின் தாய் மைதிலி நம்ப முடியாமல் சாம்புவைப் பார்த்தாள். ‘‘சொர்ணபுரீஸ்வரரும் பிரகதாம்பாளும் இந்த ஏழைக் குடும்பத்தின் மீது கருணை வெச்சுட்டாளா? இது உண்மைதானா? என் புள்ளை, மேலே படிச்சு டாக்டர் ஆகப் போறானா? தெய்வமே!’’ பரவசப்பட்டாள் மைதிலி.

ஹரியும் சாம்புவை வியப்புடன் பார்த்தான்.

‘‘அப்ளிகேஷன் போட ரெண்டு வாரம் டைம் இருக்கு ஹரி. மெடிகல் சீட் வாங்கறது ஒண்ணும் கஷ்டமில்ல. மெரிட்லேயே உனக்குக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கலைன்னா, எத்தனை லட்ச ரூபாய்னாலும் கேப்பிடேஷன் கொடுத்து வாங்கித் தர நானாச்சு.’’

ஹரி சாம்புவைப் பார்த்துச் சொன்னான்: ‘‘உங்க பெரிய மனசு என்னைச் சிலிர்க்க வைக்குது. என் அப்பா எப்பேர்ப்பட்ட மனுஷாளைத் தன் நண்பரா வெச்சு பழகியிருக்கார்னு நினைக்கறச்சே, உடம்பு புல்லரிக்குது.’’

சாம்பு சொன்னார்: ‘‘ ஹரி! ரெண்டு நாளில் நீ கிளம்பி பெங்களூருக்கு வா. உனக்கு டிக்கெட் எடுத்து அனுப்பி வைக்கிறேன். என் வீட்டுல இருந்து விண்ணப்பம் போடற வேலையை முடி. திரும்பி வந்துடு. அப்புறம், சீட் கிடைச்சு, ஹாஸ்டலிலும் இடம் வாங்கியதும் நீ உன் படிப்பு வேலையைப் பார்க்கலாம். எத்தனை செலவு ஆனாலும் உனக்காக என்னால் செய்ய முடியும்… நீ தயங்கவே வேண்டாம். நான் இருக்கேன். அநத சொர்ணபுரீஸ்வரரை நான் பார்க்க வந்தது, என் பெண்ணுக்கு திருமணம் தடைபட்டுப் போகுதேன்னு வேண்டிக்கொள்ள! ஆனால், ஈஸ்வரன் என் விசிட்டுக்கு வேறு காரணம் வெச்சிருக்கான்… ஹரியின் மேல்படிப்பைப் படிக்க உதவி செய்வதற்குத்தான் என்னை இங்கே ஈஸ்வரன் வரவழைச்ச்சிருக்கான்னு இப்பதான் எனக்குப் புரியுது…’’

ஹரி இரு கைகளையும் கூப்பி சாம்புவைப் பணிவாகக் கும்பிட்டான். பின் கணீர்க் குரலில் சொன்னான்:

‘‘என் அப்பாவின் நண்பர் நீங்க. எனக்கும் தகப்பனார் மாதிரித்தான். உங்க மனசு வேறு யாருக்கும் வராது. உங்களுக்கு நமஸ்காரம் பண்ணிக்கிறேன்’’ என்று சொல்லியபடியே சாம்புவின் பாதங்களில் வீழ்ந்து அவரை நமஸ்கரித்தான்.

பின் எழுந்து மெல்லச் சொன்னான்: ‘‘நீங்க உங்க பெருந்தன்மையால் என்னைப் படிக்க வைக்கிறேன்னு சொல்றேள். எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. ஆனால், சொர்ணபுரீஸ்வரர் பிரகதாம்பாள் ரெண்டுபேரும் பட்டினி கிடக்கக்கூடாதுன்னு எங்க அப்பா படாதபாடு பட்டதெல்லாம் ஞாபகத்துல இருக்கு. என் தாத்தா இந்தக் கோயிலே தன் வாழ்வுன்னு இருந்தார். என் அப்பாவும் அப்படியே இருந்தார். ரெண்டு கால பூஜையை ஒழுங்காச் செஞ்சு, கோயில் இருண்டு போகாதபடிக்கு விளக்கு ஏத்தி,, ஸ்வாமிக்கு நைவேத்தியம் படைச்சு, ஸ்வாமியோட பசியைப் போக்கறதும் ஒரு புண்ணியக் காரியம்தான். காலேஜில் போய் யாரும் படிச்சு முன்னுக்கு வந்து கை நிறையச் சம்பாதிக்கலாம். ஆனால், இந்த ஈஸ்வரனையும் அம்பாளையும் பசியால் வாடாமல் பார்த்துக்க யார் இருக்கா, சொல்லுங்க பார்ப்போம்? என் குடும்பத்துப் பசியை விட ஸ்வாமியோட பசியைப் போக்கறதும், ‘‘எங்க குறைகளை நிவர்த்தி செய்யுடாப்பா ஈஸ்வரா’’ன்னு நம்பிக்கையோட வர்ற பக்தாளுக்கு மன நிம்மதியைத் தரும் விதத்துல அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை பண்ணி வைக்கிறதும் ஒரு கடமையாத்தான் நான் நினைக்கிறேன்… என்னை மன்னிச்சுடுங்க. இந்தக் கோயில்லயே என் வாழ்நாள் கழிஞ்சுடட்டும்… என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ!’’

ஹரியின் தாயார் மைதிலி தன் மகனைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் பெருக்க, சாம்பு திக்பிரமையுடன் ஹரியையே பார்த்துக்கொண்டு சிலையாக நின்றார்.

- நெல்லை தினமலர் தீபாவளிச் சிறப்பிதழில் (29-10-2016) வெளிவந்த கதை. 

தொடர்புடைய சிறுகதைகள்
பர்ஸன்டேஜ்!
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்மா கடத்த அரை மணி நேரமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தார். மானேஜர் நல்ல மூடில் இருப்பதாக அவர் அறையிலிருந்து வந்த 'ஓஹோ ...ஹோ.." என்ற சிரிப்பொலி தெரிவித்தது. உள்ளே பேசிக் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத் துழாவினாள். கஞ்சி காய்ச்சலாம் என்றால் ஒரு பொட்டுத் தானியம் கூடச் சிக்கவில்லை. முந்தின நாள் இரவு, பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தது ...
மேலும் கதையை படிக்க...
தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான். அவர் உறுதிப் படுத்தினார். ``ஆமாம் சந்திரன், பெயிண்ட் கடை ராகவ் பாகாயத்துலேர்ந்து மோட்டார் சைக்கிள்ல நேத்து சாயந்திரம் கௌம்பினப்பவே, வழக்கம்போல சரக்கை ...
மேலும் கதையை படிக்க...
சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான் நாச்சான். பிறகு மெல்ல நடந்து யானை படுத்திருப்பதான தோற்றம் கொடுத்திருந்த மலைப் பாறையில் ஏறி உட்கார்ந்து மடியிலிருந்த பீடிக்கட்டை எடுத்தான். ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழை மனமிரங்கிக் கடந்த அரை மணி நேரமாக சிறு தூறலாக மாறியிருந்ததை வரவேற்றான் சங்கர். சே, இதென்ன போர்! தொடர்ந்த மழையின் ஓயாத ஓசை, பகலிலும் இருள் கவ்வினாற்போன்ற சோம்பல் சூழ்நிலை, தெருவில் முழங்கால் நீரில் சளக், ...
மேலும் கதையை படிக்க...
``ஸார்!” ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த கார்த்தியை பிளாட்பாரத்தில் நின்ற ஓர் இளைஞன் அழைத்தான்: ``ஸார் ட்ரிச்சினாப்பள்ளி போறாப்பிலியா?'' ``நோ, நோ!... மயிலாடுதுறை!'' ``அடடே, மாயவரத்துக்கா... ரொம்ப நல்லதாப்போச்சு! சுமதி! ஸார் மாயவரம் போறாராம்.. உன் கவலை எனக்கு விட்டுச்சு!'' என்றான் இளைஞன். இவன் பக்கம் திரும்பி, ``கைக் குழந்தையோடு ராத்திரி ...
மேலும் கதையை படிக்க...
ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான். பாதிக்கு மேல் பண்டம் பாடிகள் மேய்க்கிற வறண்ட பூமியானாலும், மிச்சமிருந்த பூமியில் நல்ல விளைச்சல் காணும். கன்னியாத்தா கோயிலை ஒட்டியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர் பார்க்கிறார்கள். நீங்கள் வேலைபார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் கிராமத்துக்கு வர விரும்புகிறேன். உங்கள் காலடியில் விழுந்து கதற வேண்டும்போல் ...
மேலும் கதையை படிக்க...
வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார். தாராபுரம், திருப்பூர், காங்கேயம் - மூன்று ஊர்களுக்கு நடுவில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கிராமம் அமைந்திருந்தது. சுற்று வட்டாரக் ...
மேலும் கதையை படிக்க...
கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு வரும் ``ஆதி டீலக்ஸ் பஸ்சில் நம்ம ஆபீசுக்கு புது ஹெட்கிளார்க் பஞ்சநாதம் வர்றார்.அவரை ரிஸீவ் பண்ணி நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸில் சேர்க்க வேண்டியது உம்ம பொறுப்புய்யா!'' என்று எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷன் ரங்காச்சாரி, ஸ்டோர்ஸ் தங்கப்பனிடம் முந்தின ...
மேலும் கதையை படிக்க...
பர்ஸன்டேஜ்!
கிழவி
நெருப்பு
வேட்டை
மழையில் ஓர் கிழவர்!
அந்த ரெயில் வண்டியில் ஒரு விபரீதம்…
நரிகள்
நான் இன்னும் குழந்தையாம்…
பழையன கழிதலும்…
சிக்கன் 88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)