பக்கத்து அறைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,358 
 

araigalவழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது. வெளியில் நல்ல வெயிலடித்தாலும், குளிர் காற்றடிக்கும்போது ஊசி முனையாற் குத்துவதுபோல்; காற்று முகத்தில் பாய்கிறது. தெருவில் பல குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் குளிரையும் பொருட்படுத்தாமல் மிக ஆரவாரமாரமாச் சத்தம் போட்டு,ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.வாழக்கையில் மிகவும் சந்தோசமான பருவம் குழந்தைப் பருவம்தானே?

அவன் பெருமூச்சுவிட்டான்.

இலங்கையில் அரச விமானங்கள் தமிழ்ப்பகுதிகளிற் குண்டுபோடுவதாகப் பத்திரிகைகளிற் படித்தான்.இங்கு லண்டனில் குழந்தைகள் கவலையின்றி ஆடி ஓடிப் பிடித்து விளையாடும்போது அங்கு எத்தனை குழந்தைகள் அவலக் கதறலுடன் அழிந்து போயிருப்பார்கள்? குழந்தைகள்,மனிதர்கள்,மிருகங்கள் என்று இறப்புக்கள் எத்தனை இலங்கையில்?

அவன் பெருமூச்சுடன் தனது முன்வீட்டுக்கதவைத் திறந்தான். மேல்மாடியில் சினிமாப்பாட்டின் சத்தம் கேட்டது.குமரனின் அறையிலிருந்து பாட்டு ஒலிக்கிறது.

கதவைச் மூடமுதல் தன்னைத் தாண்டியோடி விளையாடும் குழந்தைகளிற் தன் பார்வையை ஒருதரம் படரவிட்டான்.

இந்தத் தெருவில் பல தரப்பட்ட,இன,மத,மொழிகள் வித்தியாசமுடைய மனிதர்கள் வாழ்கிறார்கள். கோடி வீட்டு இந்தியர் பட்டேலின் குழந்தைகள்,பெரியவீட்டுக்கார ஆங்கிலேயர்;; பார்க்கிளேயின் இரு சின்னப் பெண்களும் மகனும்,,பக்கத்து வீட்டு ஐரிஷ்கார மேர்பியின் பெரிய பையன், முன் வீட்டுப் பாகிஸ்தானியரின் இருபையன்களும் ஒரு சின்னப் பெண்ணும், தூரத்திலிருக்கும் மேற்கிந்திய நாட்டுப் பெண்குழந்தைகள் எல்லோரும் ஒற்றுமையாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களும் ஒருகாலத்தில்,இனத்துவேசத்தின் அடிப்படையில் தங்களுக்குள் ஒருத்தரை அடித்தும் கொலைசெய்தும் அழிவைத் தேடிக்கொள்வார்களா? அவனால் விடை காண முடியாத கேள்வியது.

அவன் கதவைத் திறந்த சத்தம் கேட்டதும்,’ யாரது? துரையா?’மேல் மாடியிலிருந்து குமரனின் குரல் விசாரித்தது.

‘ம்,நான்தான்’

துரை சொல்லிக் கொண்டான்.மேல் மாடியிலிருக்கும் தனது அறைக்குப் போவதா?அல்லது குமரனிடமிருந்து தப்பக்,கீழேயிருக்கும் சமையலறைக்குள் தஞ்சம் புகுந்து இரவு சமையலைத் தொடங்குவதா என்று ஒருகணம் யோசித்துக் கொண்டிருக்கும்போது,மேல் மாடியிலிருந்து குமரன் கீழே இறங்கி வருவது கேட்டது.

குமரன் தனது சமையலைத் தொடங்கப் போகிறான் போலும். துரை தனது அறைக்கு மேலே செல்லப் போனான்.’என்ன வெள்ளண்ண வந்த விட்டீர்? இரவில் இந்தச் சனியன்கனின்ர சண்டையால நல்ல நித்திரையில்லை. உமக்கும் தலையிடிக்குதா?’ குமரன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான். இனி அவனிடமிருந்து தப்ப முடியாது.

குமரன,;’சனியன்கள்’ என்று குறிப்பிட்டதும்,அவன் பக்கத்து அறைத் தம்பதிகளின் சண்டையைச் சொல்லப் போகிறான் என்று தெரிந்தது.

செல்லத்துரைக்குக் குமரனின் தரம் கெட்ட, அசிங்கமான அலட்டல்களை ஒருநாளும் பிடிக்காது. ஆனாலும் ஒருவீட்டில் பக்கத்து அறைகளில் குடியிருக்கும்போது,என்ன செய்வது என்று ஏனோ தானோ என்று குமரனின் அலட்டல்களைப் பொறுத்துக் கொள்வான்.

‘ம்,தலையிடிதான்,அதுதான் கொஞ்சம் முந்தி வந்தன், போய்ப்படுக்கப் போகிறன்’ குமரனின் பேச்சுக்கு இடம் வைக்காமல் துரை பட படவென்று படிகளில் ஏறினான்.

குமரன் தேவையில்லாமல் யாரையோ அல்லது எதையோபற்றிப் பேசிக்கொண்டிருப்பான். அவன் ஒரு பெட்ரோல் ஸரேசனில் இரவிலும் துரை இன்னுமொரு பெட்ரோல் ஸ்ரேசனில் பகலிலும் வேலை செய்கிறார்கள்.

வெளியில் விளையாடும் பல குழந்தைகளும் பல இனத்தவர்கள். இந்த வீட்டில் வாழும் ஐவரும் தமிழர்கள். ஓரே இனத்தைச்சேர்ந்த ஒரே மொழியைப் பேசும் மனிதர்கள். ஆயிரக்கணக்கான அபிப்பிராய பேதங்களைக் கொண்டவர்கள். ஓருத்தரை விட மற்றொருத்தர்,’பெரியாள்’ என்ற மனப்பான்மையைக் கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையற்றவர்கள். ஒற்றுமையாய் வாழ்வதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள்.

இப்படிப் பலகாரணங்களாற்தான் இன்று நாடோடிகளாக வாழ்கிறோமா? யோசித்தபடி ,துரை தனது அறைக்குள் நுழைந்தான்.அவனின் கதவடியில் ஒரு நீலக்கவர்க் கடிதம் கிடந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிறது. முன்னறையிலிருக்கும் சம்பந்தர்,மற்றவர்களுக்குக் கடிதம் வந்தததைக் கண்டால் அதை எடுத்துக் கதவுக்கு இடுக்காற் தள்ளிவிடுவார்.

கடிதங்கள் குமரனின் கையில் அகப்பட்டால் ‘இந்தக்கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கிறது?’ என்று கேட்டுக் கொண்டிருப்பான். கீழேயிருக்கும் தம்பதிகள் எடுத்து வைக்கமாட்டார்கள். அவர்கள் கொஞ்ச நாட்களாகத் தங்களுக்குள் சண்டை பிடித்து ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கொள்ளும் ஆபாசவார்த்தைகள், மூடப்பட்டிருக்கும் கதவுகளைத்தாண்டிக்கொண்டு நிர்வாணமாக வெளியில் பறக்கின்றன.

சிவப்புக் கார்ப்பெட்டில் கிடந்த கடிதம் துரையைப் பார்த்துக் கண்ணடித்தது.குனிந்து எடுத்தபோது,கடிதத்தில் எழுதியிருந்த விலாசம் இவனைப் பார்த்து விசும்புவதுபோலிருந்தது.

அவனின் பெயரை அழகான குண்டுமணி எழுத்துக்கள்போல எழுத அவன் காதலி திலகாவைத் தவிர யாராலும் முடியாது என்று அவனுக்குத் தெரியும்.

அம்மாவிடமிருந்து நேற்றுத்தான் கடிதம் வந்திருந்தது.வழக்கமான அழுகைதான். ‘தம்பியை எப்படியும் லண்டனுக்கு எடுக்கப்பாh, இஞ்ச நிலமை படுமோசம். சிங்கள இராணுவம் குண்டுபோட்டதால தேவாலயமும் அழிஞ்சு,ஆட்களும் பலபேர் இறந்து போட்டினம் ,இளம் பெடியள் வந்து தம்பியை இயக்கத்தில சேரச் சொல்லுகினம் ,தம்பியைக் கெதியாக எடுக்கப்பார்;’ அம்மாவின் கடிதங்கள் எப்போதும் அவனைக் கண்கலங்கவைப்பவை.

அந்தக் கடிதத்தால் அவன் நேற்றெல்லாம் மனத் துயருடனிருந்தான்.

இன்று அவனின் அன்புக்குரிய திலகாவின் கடிதம் வந்திருக்கிறது.கடிதத்தை மார்பிலணைத்தபடி அப்படியே கட்டிலில் விழுந்தான். அவளின் அணைப்பில் விழுந்தது போன்ற கற்பனை அவனுக்கு. .மூடிய கடிதத்துக்குள்ளிருந்து அவள் மூச்சுக்கள் இவனின் அணைப்புக்குத் துடிப்பது போன்றிருந்தது.

அம்மாவைப்போல அவளும் ஒப்பாரிவைத்து எழுதியிருப்பாள்.’என்னை எப்போது லண்டனுக்க எடுக்கப் போறியள்?’ என்று கேட்டிருப்பாள்.

லண்டனுக்கு எடுப்பதை எவ்வளவு இலகுவாக எதிர்பார்க்கிறார்கள், புதுச்சடடை போட்டுக்கொண்டு கோயிலுக்குப் போவது போலவா லண்டனுக்கு வருவது?

ஓரு பிரயாணியை இலங்கையிலிருந்து லண்டனுக்கு எடுக்க,ஏஜென்சிக்காரன்; பத்தாயிரம் பவுண்ஸ் கேட்கிறான். துரை பெருமூச்சு விட்டான். அவளின் துடிப்பு அவனுக்குத் தெரியும்.

‘லண்டனுக்குப் போனதும் என்னை மறக்க மாட்டியளே?’ அவனிடம் அவள் கண்ணீருடன் கேட்ட கேள்வி அடிக்கடி கனவில் வந்து அவனைக் குழப்புகிறது.

‘நிலவை வானம் மறக்குமா?

ஆழ்கடல் தனது அலையை அடித்துத் துரத்துமா?

நான் உன்னை மறக்கமுடியுமென்று நீ நினைப்பதை வெறுக்கிறேன்.

என் நிலையை உனக்குத் தெரியாது.

கிழமையில் ஆறுநாளும் அதிகாலையிலிருந்து மாலை வரையும் வேலை செய்கிறேன்.அப்படி வேலை செய்து உழைத்தும், இன்னும் நான் இங்கு வந்த கடனை அடைக்க முடியல்ல. அம்மா பெரியக்காவின்ர கல்யாணத்துக்கு வாங்கின கடனும் கட்டி முடிக்கல்ல.’

அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான். அவளை நினைத்ததும் அவனின் நினைவு கசிந்தது. அவன் அவளின் கடிதத்தை இன்னும் பிரித்துப் பார்க்கவில்லை. கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும்,அவளின் வேதனையான வார்த்தைகளை எதிர்கொள்ள அவன் பயந்தான்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கதவைத் தட்டுவது குமரனாகத்தானிருக்கும்.மற்றவர்களின் மனநிலையை மதிக்காத மனிதர்களில் அவனும் ஒருத்தன்.

‘ துரை, இஞ்ச வந்து இந்த புதினத்தைப் பார்’;. குமரன், துரையின் சேர்ட்டைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்தான். பக்கத்திலுள்ள தனது அறையின் வழியாக வெளியில் நடப்பதைக் காட்டினான்.

‘ இந்த சின்ன வயதில இந்த சின்ன பெட்டைகளின்ர கூத்தைப்பார்’குமரன் கோபத்தில் வெடித்தான்.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில், பார்க்கிளெய் குடும்பத்து சின்னப் பெண்ணும், பாகிஸ்தான் குடும்பத்தின் பையனும் ஒருத்தரை ஒருத்தர் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். களங்கமற்ற பிஞ்சுக் குழந்தைகளின் வஞ்சமற்ற முத்தமது. பிரித்தானிய டி.வியிலும் பத்திரிகைகளிலும் பார்ப்பதைப் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘என்ன கேவலமான உலகமிது?’குமரன் பிரபஞ்சத்துக் கண்ணியத்தின் சார்பில் கண்ணீர் வடித்தான்.

குமரனின் ஆத்திரத்தைப் பார்த்து துரைக்கு எரிச்சல் வந்தது.

குமரனின் இரட்டைவேடம் துரையின்; கோபத்தைக் கூட்டியது. குமரன், தனது மூடிய அறைக்குள் இருந்துகொண்டு ஆபாசப் படங்கள் பார்த்து ரசிப்பது இந்த வீட்டிலுள்ள மற்றவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறானா?

குமரன்.முப்பத்தைந்து வயது வந்தும் இன்னும் தனக்குச் சரியான விலையில் பெண் கிடைக்காததால்,அவனது ஆசைகளை ஆபாசப் படங்கள் மூலம் தீர்த்துக்கொண்டு, தெருவில் போகும் பெண்களைக் கண்களால்ப் புணர்ந்து கொண்டும், கயமையின் உருவமாகவாழும் இந்த வயதில்,முதிர்ந்து,வாழ்க்கையில்’காய்ந்து’போன வரட்சியான மனிதன்,களங்கமற்ற குழந்தைகளின் முத்தத்தைப் பார்த்து காறித் துப்புகிறான்!

துரை குமரனுக்குப் பதில் சொல்லாமல்த் தன் அறைக்குள்ப் போனான். குமரன் அவனைப் பின் தொடர்ந்தான்.

‘இந்த நாட்டில் கேவலங்கள் மலிஞ்சுபோச்சு,ஆனானப் பட்ட பிரித்தானிய அரச குடும்பத்துப் பெண்களே,தங்களின் முலைகளை வெளியே காட்டிக்கொண்டு ,மொட்டையன்களைப் பகிரங்கமாகக் கொஞ்சும்போது,இந்த சின்னம் சிறிசுகள் என்ன செய்யும?’

குமரன் பிரசங்கம் செய்துகொண்டிருந்தான்.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி, ஸேரா, அவளின் அமெரிக்க காதலன் ஜோன் பிராயனை அன்னியோன்னியமானவிதத்தில் முத்தமிட்ட விடயம் பத்திரிகைகளில் வந்திருந்தததைப் பற்றித்தான் குமரன் குமுறுகிறான் என்று தெரிந்தது.

‘ இந்த நாடு அவ்வளவு கேவலமானால், நீ இங்கே வர யாரும் வெற்றிலை வைத்து உன்னை அழைக்கவில்லையே?’ துரை கோபத்துடன் முணுமுணுத்தான்.

‘பக்கத்து அறைவாசி சம்பந்தர் எங்கே போய்விட்டார்? இந்தக் காட்சிகளைக் கண்டால் துயர் தாங்காமல் தேவாரம்; பாடத்தொடங்கி விடுவாரே’குமரன் கிண்டலாகச் சொன்னான்.அவனுக்குச் சம்பந்தரின் கடவுள் பக்தியும் கண்ணியமான வாழ்க்கையும் பிடிக்காது.

குமரன் அவனைப் பொருட்படுத்தாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.குமரன் நகர்ந்ததும், கதவை மூடிக்கொண்டு திலகாவின் கடிதத்தைப் பிரித்தான்.

‘லண்டனுக்குப்போன பலர் அங்கே போனதும் மாறிவிட்டார்கள்,நீங்களும் அப்படி மாற மாட்டீர்கள், என்னை மறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்’

அவளின் கேள்வி அவனுக்குப் பேதைத்தனமாகவிருந்தது.

கடிதத்தின் கேள்விகள் துயர் மறக்க டி.வியைப் போட்டான்.

அவனது அறைக்கு வெளியில் காலடிகள் கேட்டன.அந்த நடையின் தளர்ச்சியிலிருந்து,அது சம்பந்தர் என்று தெரிந்துகொண்டான்.

அவருக்குத் தளர்ந்த நடைமட்டுமல்ல, ஓயாத கவலைகளின் காரணமாக அவர் உடலும் உள்ளமும் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்தன. லண்டனுக்கு வந்து தவிக்கும் பரிதாபமான தமிழர்களில் சம்பந்தரும் ஒருத்தர்.

அவருக்கு அறுபதுவயதாகிறது. உத்தியோகமிருந்தால் ஓய்வு பெறும் வயது.ஆனால்,அவரின் குடும்பநிலை நிமித்தமாக ஓடி உழைக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை மற்றவர்களுக்காக வாழு;ந்து முடிக்கும் மனிதர்களில் அவரும் ஒருத்தர். அவரின் முப்பத்தைந்து வயது வரைக்கும் அவரின் தம்பி தங்கைகளைக் கரையேற்ற உழைத்தார். இன்று மூன்று மகள்மாரை வைத்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கைக்காகத் திண்டாடுகிறார்.

லண்டன் தெருக்களில் பொற்காசுகள் கொட்டிக்கிடப்பதாகக் கனவு கண்டு,தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஐந்து வருடங்களுக்கு முன் லண்டன் வந்தவர்களில் அவரும் ஒருத்தர். வாழ்க்கையின் அந்திமகாலத்திலும் புதிய வாழ்க்கைக்கு முகம் கொடுக்கும் அவரின் துணிவு துரையை ஆச்சரியப் பட வைத்தது.

சம்பந்தர் இப்போது தனது மூத்த மகளை லண்டனுக்கு எடுக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அதற்காக அயராது உழைத்து ஒரு ட்ரவல் ஏஜென்சிக்காரனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அலைகிறார்.

ஏஜென்சியால் வெளிநாடுகளுக்கு அழைத்து வரப்படும் இலங்கை இளம் பெண்களுக்கு லண்டனுக்கு வரும் வழிகளில்,என்னென்னவெல்லாமோ நடப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். சம்பந்தர் கடவுளிடம் தனது மகளின் லண்டன் பிரயாணம் சரிவரவேண்டும் என இடைவிடாது பிரார்த்திக்கிறார்.

கடவுள் இருந்தால் இலங்கையில் இவ்வளவு கொடுமைகள் நடக்குமா?

இன்றைய நம்பிக்கைகள் நாளையவாழ்வின் எதிர்பார்ப்புக்கள் என்ற நியதியை நம்பி வாழும் சம்பந்தர் போன்ற மனிதர்கள் பலர்.

குமரனின் அறையிலிருந்து, அசிங்கமான ஒலிகள்,கதவிடுக்கால் ஓடிவந்து துரையின் கவனத்தைக் குழப்புகிறது. குமரன் ஆபாசப்படம் பார்க்கிறான்.அதில்வரும் முக்கல் முனகல்கள் எரிச்சலையுண்டாக்குகின்றன.குமரன் அந்தமாதிரியான படங்களைப் பார்த்து விட்டு வெளியில் வரும்போது வியர்க்க வியர்க்க வெறிபிடித்த நாயின் முகபாவத்தோடு வருவான். இடைவிடாமல், ஆபாசப் படங்களைப் பாhத்து அவன் வாழ்வது அசாதாரணமான விடயம் என்று அவனுக்குத் துரை சொன்னால் அவனுக்குப் பிடிக்காது.அவன் அப்படியான வாழ்க்கையில் தன்னையிணைத்துக் கொண்டு, தெருவில் குழந்தைகளின் முத்தத்தைக்கண்டு கண்ணியம்,பெண்மை என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது போலியான நாடகம் என்று துரை நினைக்கிறான்.

குமரனின் அறையிலிருந்து வரும் ஆபாச ஒலிகளைக் கேட்டு சகிக்க முடியாததால்,தன்னுடைய அறையைச் சாத்திவிட்டு கீழே இறங்க முதல், பக்கத்திலுள்ள சம்பந்தரின் அறை சாடையாகத் திறந்திருப்பதை அவதானித்தான்.

‘பாவம், அவர் ஏஜென்சிக்காரனிடம் இரண்டு வருடங்களாக நாயாக அலைகிறார்’ அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். ஏஜென்சிக்காரனிடம் போகும்போது, அவன் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சாட்டுச் சொல்லித் தட்டிக் கழிப்பதாக சம்பந்தர் முறையிட்டார். அந்த நாடகம் இரண்டு வருடங்களாக நடக்கிறது.

ஓருதரம் அவர் சென்றபோது,’எனக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது…கொஞ்சம் பொறுமையாக இருங்கள்..எல்லாம் செய்து தருகிறேன்’ என்றானாம். அதன் பிறகு, சிலமாதங்கள் கழித்து, ‘எனது மனைவி கர்ப்பமாகவிருக்கிறாள்.. நான் பிசியாக இருக்கிறேன்’ என்று சத்தம் போட்டானாம். இன்னொருதரம் போனபோது,’ புதுவீடு வாங்கியிருக்கிறேன்..அதற்கு டொய்லெட் போட்டுக்கொண்டிருக்கிறேன். தேவையில்லாமல் கரைச்சல் தரவேண்டாம்’ என்று சீறினானாம்!.

சம்பந்தர் போன்ற நல்லமனிதர்கள் மிக மிகக் கஷ்டப்பட்டு உழைத்த காசில் ஆடம்பரமாகவாழும் ஏஜென்சிக்காரனுக்கு,இரண்டு வருடம் அவருடைய மகள் ஏதோ ஒரு ஆபிரிக்க நகரில்,லண்டன் வரும் நாளை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவரிடம் பணம் வாங்கியவனோ ஒரு பதற்றமும் இல்லாமல் குடும்பம், மனைவி, புதுவீடு:, டொய்லெட் என்று ஆடம்பரமாக வாழ்கிறான்.

ஏஜென்சிக்காரனுக்கு அவனின் ஆடம்பரமான டொய்லெட் பெரிது. சம்பந்தருக்கு அவர் மகளின் பெண்மை பெரிது. இளம் பெண் ஏதோ ஒரு நாட்டில் என்ன துன்பங்களை அனுபவிக்கிறாளோ?

என்ன தமிழர்கள்?

என்ன கருணை? அவர் இன்றும் ஏஜென்சிக் காரனிடம் போய்வந்திருக்கவேண்டும். அவன் அவரிடம் ஒன்றும் பேசாமல் சமையலறைக்குப் போனான்.குமரன், மத்தியானம், பனங்கிழங்கு ஒடியல் கூழ் செய்திருக்கிறான் போலும். இறால் உடைத்த தோல்,மீன் செதில்கள் என்பன் அங்குமிங்குமாகக் கிடந்தன. கூழ் நாற்றம் மூக்கிலடித்தது.அந்த நாற்றம் வெளியேறட்டும் என்று, துரை ஜன்னல்களைத் திறந்து விட்டான்.

வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பலசாதி, பலநிற, பலஇனக் குழந்தைகளிற் பலர் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ஐரிஷ் பையனும் ஆங்கிலேயப் பையனும் முன் வீட்டு மதிலில் ஏறியிருந்துகொண்டு ,’சுப்பர்மான்’ பற்றித் தங்கள் கீச்சுக்குரலில் கத்தி,சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஐரிஷ்காரப் பையன் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான் அவன் ஒருகாலத்தில்,; பிரபல ஐரிஷ் எழுத்தாளர்களான,ஒஸ்கார் வைல்ட்,அல்லது பேர்ணார்ட் ஷா ஆகவோ வந்து ஆங்கில இலக்கியத்தில் ஒரு போடு போடலாம்..

ஜன்னலுக்கப்பால் பார்வை நீண்டபோது, தூரத்தில் துரையிருக்கும் வீட்டின் கீழ்ப் பகுதியில் குடியிருக்கும் பொன்மலர் வருவது தெரிந்தது. தளர்ந்த நடையும் குனிந்த தலையுமாய்ப் பொன்மலர்; வந்து கொண்டிருந்தாள். துரை, அவள் தன்னைக் கவனிக்காத மாதிரி ஒதுங்கிக் கொண்டான்.

பொன்மலரையும் அவள் கணவன் சுந்தரலிங்கத்தையும்தான், குமரன்,அந்தச்’சனியன்கள்’ என்று வர்ணித்தான். துரை அரிசியைக் கழுவி அடுப்பில் வைத்தான். பொன்மலர்,இனி எந்த நேரத்திலும் குசினிக்குள் வரலாம்.சுந்தரலிங்கம் வரமுதல் அவள் சமைத்து வைக்காவிட்டால்,அவன் வாயிலிருந்து வரும் வர்ணனைகளைக் கேட்டு,காற்றே நடுங்கிவிடும்.

‘பொன்மலர் லண்டனுக்கு வந்து ஆறுமாதம்கூட ஆகவில்லை.அதற்குள் நாயும் பூனையும் மாதிரி அடித்துக்கொள்கிறார்களே,திலகா வந்ததும் நாங்கள் எப்படி வாழ்வோம்?’அவன் தனக்குள் யோசித்தான்.

நெருப்பில் அரிசி பொங்கியது. அவன் மனதில் திலகா தொங்கினாள்.

‘நான் சுந்தரலிங்கம்மாதிரிக் கேவலமாக நடந்து கொள்ளமாட்டன்.பெண்கள், ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒருபாதி,ஒதுக்கி வைப்பதற்கும், ஓங்கியடிப்பதற்குமா அவர்கள் பிறந்திருக்கிறார்கள்?நான் நல்ல மனிதனாகத் திலகாவைப் பார்த்துக்கொள்வேன்’ அவன் தனக்குள் சபதம் செய்துகொள்கிறான்.

சுந்தரலிங்கம் பொன்மலரைத் திருமணம் செய்து இருவருடங்களாகின்றன. ஆனால் ஒன்றாக வாழத்தொடங்கிக் கொஞ்சக்காலம்தான் ஆகிறது.

அவர்களின் திருமணம், ஊரில் அவர்களின் தாய்தகப்பன் பார்த்துப்பேசி முடிவுகட்டிய திருமணம்.

கல்யாணம் பேசும்போது, இலங்கையிலிருந்து வந்த பொன்மலரின் புகைப் படத்தைக் கண்டபோது சுந்தரலிங்கம் பூரித்து விட்டான்.எத்தனை கவர்ச்சியாக இருந்தாள் அந்தப் புகைப் படத்தில்?

‘இஞ்ச பாருடா மச்சான் உன்ர பெட்டையின்ர சிரிப்பு நடிகை குஷ்புவின்ர சிரிப்புமாதிரி இருக்கிறது’ எச்சில் வழியச் சொன்னான் குமரன். சுந்தரலிங்கம் அவனை முறைத்துப் பார்த்தான்.குமரனின் இச்சை வழியும் முகத்தைக் கண்டதும் துரைக்கும் கோபம் வந்தது.ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.

இலங்கையில் பிரச்சினையிருந்தபடியால், சுந்தரலிங்கம்,பொன்மலருடனான தனது திருமணத்திறகாக இந்தியா சென்றான்.

இந்தியாவில்,சென்னைக்; கோயில் ஒன்றிற் திருமணம். பூம்பகார் கடையில் ஷாப்பிங்,மரினாக் கடற்கரையில் ஒருகிழமை உல்லாச நடை.அத்துடன் அவன் லண்டனுக்குத் திரும்பி விட்டான்.அதன்பின் பொன்மலர் லண்டனுக்கு வந்துசேர எவ்வளவோ காலம் எடுத்தது.

துரையின் சிந்தனை எங்கேயோ போய்க்கொண்டிருந்தது. அடுப்பில் சோறு அவிந்து விட்டது.

அப்போது குசினிக்குள் பொன்மலர் வந்தாள்.அந்தச் சமையலறையில் ஒரேயடியாக இரண்டுபேருக்கு மேல் நின்று சமைக்க முடியாது. அத்துடன் துரை பொன்மலருடன் அதிகம் பேச்சு வைக்க விரும்பவில்லை.

அது சுந்தரலிங்கத்துக்குப் பிடிக்காது என்ற அவனுக்குத் தெரியும்.

சுந்தரலிங்கம் போன்ற ஆண்களுக்கு,பெண்களின் இனவிருத்தி உறுப்புக்கள்தான் பார்வையிற்படுமே தவிர அவர்களின் இதயநாதம் கேட்காது.

பொன்மலரில் துரைக்குப் பரிதாபம்.அதை சுந்தரலிங்கம் ஆபாசமாக்கிவிடுவான்.அந்தத் தம்பதிகளின் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அவன் விரும்பவில்லை.

அவள் அருகே வந்ததம் துரை அவளைச் சாடையாகக் கடைக்கண்களாற் பார்த்தான்.இரவெல்லாம் அவள் அழுதிருக்கவேண்டும், பொன்மலரின் முகம் மிகவும் உப்பிக் கிடந்தது.அவளும் துரையைச் சாடையாகப் பார்த்தாள். ஏதும் கேட்கமாட்டானா என்ற தவிப்பு அவள் முகத்திற் பரவிக் கிடந்தது.

அவன் கவனிக்காத மாதிரிப் பாவனை செய்துகொண்டு தனது சமையலிலற் கவனத்தைச் செலுத்தினான்.

‘ஏன் இந்த உலகம் இப்படி நாறுது?’ பொன்மலர் எரிச்சலுடன் கேட்டுக் கொண்டு அவள் கொண்டுவந்த மரக்கறிவகைகளை மேசையில் வைத்தாள்.. அவள் இந்த உலகம் என்று குறிப்பிட்டது அந்த சமையலறையை மட்டுமல்ல என்ற அவனுக்குத் தெரியும்.

‘குமரன் பனங்கிழங்கு ஒடியற் செய்யப் பாவித்த, இறால்,மீன் நண்டு எல்லாம் சேர்ந்துதான் இந்தச் சமையலறை உலகம் இப்படிநாறக் காரணம்’ என்று சொல்ல துரை நினைத்தான்.

பொன்மலர் இலங்கையில் ஒரு பட்டதாரி ஆசிரியாகவிருந்தவள்.லண்டன் மாப்பிள்ளைக்காக அவள் தான் மிகவும் விரும்பிய தனது உத்தியோகத்தையும் விட்டு வந்திருக்கிறாள் சாதாரண பெண்களை விட வித்தியாசமானவள். துன்பங்களைக் கண்டு இலகுவில் சோர்ந்து போகாதவள். அவளுடைய மூன்று தமயன்களையும், முறையே இந்தியப்படை,இலங்கைப் படை, தமிழ் இயக்கம் என்போர் செய்த கொடுமைகளால் இழந்தவள். அவளது தாய்தகப்பனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தவள். இலங்கையிற் தொடரும் போராட்ட சூழ்நிலைகளுக்குள்ளும், அம்மா அப்பா, பாட்டி, உற்றார் உறவினருடன் நிலவின் ஒளியில், மென்காறிறின் அசைவில்,கோயில் மணி ஓசையில் துன்பங்களை மறந்தவள்.லண்டனுக்கு வந்ததும் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.அவள் துன்பங்களைப் பல தடவை துரைக்குச் சொல்லி அழுதிருக்கிறாள்.

‘வாழ்க்கையில் அவள் கண்ட பொல்லாத கொடுமையான அனுபவங்கள் அவளை உறுதியுடன் வைத்திருக்கிறது.அவள் ஒரு பொறுமையின் தெய்வம்’ என்று துரை நினைத்ததுண்டு. ‘இல்லையென்றால் சுந்தரலிங்கம்போன்ற குடிகாரனுடன் வாழமுடியாது.அவன் பாவிக்கும் தரம் கெட்ட மொழிகளைச் சகிக்க முடியாது’இப்படிப்பல தடவை பொன்மலரைப் பற்றி துரை நினைத்ததுண்டு..

திருமணமாகி,இந்தியாவால் வந்த கொஞ்ச நாட்கள் பொன்மலர் பற்றி ஓயாமல் புழுகிக்கொண்டிருந்தான் சுந்தரலிங்கம்.அவள் லண்டனுக்கு வந்திறங்கியதும் சுந்தரமூர்த்தியின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இவனின் அளவுகடந்த குடிப் பழக்கத்தை அவள் கண்டிக்கத் தொடங்கியதும் பிரச்சினை ஆரம்பமாகியது.

‘என்னடி பெரிய சீதனம் தந்து என்னைச் செய்த மாதிரி அப்படிக் குதிக்கிறாய்..’அவன் அவளைக் கண்டபாட்டுக்குத் திட்டத் தொடங்கினான்.அவனின் பேச்சுக்களை ஆரம்பத்தில் அவள் மௌனமாகப் பொறுத்துக்கொண்டாள்.

நாளடைவில் அவனது குடிப்பழக்கத்தால் பொருளாதார நிலை தடுமாறியது.

பொன்மலர் ஒரு இந்திய மரக்கறிக் கடைக்கு வேலைக்குப்போனாள். மாணவர்களுக்குக் கணக்கு எழுதிப்;படிப்பித்த கைகள் ‘கல்லா’ தட்டியது. சரித்திரம் சொல்லிக்கொடுத்த உயர்கல்வி, தாங்க்யு,பிளிஸ் சொல்லியது.

‘லண்டனில் என்ன இருக்கிறது? கடினமான உழைப்பு தனிமை, சோகம், குளிர்,குடிகாரக் கணவன்…..’ அவள் தனக்குத் தானே சொல்வதுபோல் சிலவேளைகளில் விம்முவாள்.

இப்போதெல்லாம் கட்டிய கணவனுடன் உக்கிரமாகப் போராடுகிறாள்.அவர்களின் அறையில், நடுச்சாமத்தில் வார்த்தைகள் வெடிக்கின்றன.பகலில் தடுக்கப் பட்டிருந்த பல வார்த்தைகள் இரவின் இருட்டில் அவர்களின் அறையிலிருந்து தறிகெட்டு ஓடுகின்றன.

பொன்மலர் தான் வாங்கிக் கொணடுவந்த மரக்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள்.அவள் சைவம் அவள் கணவன் சுந்தரலிங்கம் அசைவம். இவள் அளவுக்கு மீறிப் பேசிளால் அவளையே சாப்பிட்டுவிடுவான்–அந்த அளவு அசைவம்!

சம்பந்தர் சமையலறைக்குள் வருவது தெரிந்தது.அவரின் முகத்தில் ஓயாத துயரவடு. அவர் மிக மிச் சோர்ந்து காணப் பட்டார். சமையலறைக்கு வந்ததும் அவரின் மூக்கைத் தாக்கிய குமரனின் கூழ்மணத்தால் முகத்தைச் சுழித்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, சம்பந்தர் சட்டென்று விம்மத் தொடங்கிவிட்டார். அவரின் வயது, அவர் ஒரு ஆண் என்ற திமிர் தாண்டி அவரின் மனவேதனை விம்மலாக வெளிப்பட்டது.

அதைக்கண்ட பொன்மலர் துடித்து விட்டாள்.

‘என்ன நடந்தது ஐயா?’ பொன்மலர் பதறினாள் தனது தந்தையிடம் காட்டும் பாசம் அவள் குரலில் இழையோடியது.

அவர் தேம்பினார்.’இந்தப் பெட்டை…என்ர மகள்.. கடிதம் போட்டிருக்கிறாள்..’அவர் தனது கையிலிருந்த கடிதத்தைப் பொன்மலரிடம் கொடுத்தார்.

பொன்மலர் சம்பந்தரின் மகளின் கடிதத்தைப் படித்தாள்.

‘..அப்பா,நான் உங்களுக்குத் துரோகம் செய்ததாக நினைக்கவேண்டாம்.லண்டனுக்கு வர முயற்சித்த கடந்த இருவருடங்களாகப் பல இடங்களில் ஒன்றாகப் பழகிய,எனக்கு உதவி செய்த, கௌரவமாக என்னை நடத்திய ஒருத்தரைக் கல்யாணம் செய்ய முடிவு செய்து விட்டேன். மற்றவர்களிடமிருந்து இந்தச் செய்தி உங்களுக்கு எட்டமுதல் நான் இதை எழுதுகிறேன். உங்களில் என்றும் அன்பும் மதிப்புமுள்ள மகள் ராதா.’

பொன்மலர் கடிதத்தைப்படித்து முடித்தாள்.

பொன்மலர் தனது இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி வைத்துக்கொண்டு சம்பந்தரை,ஏற இறங்கப் பார்த்தாள்.அவர் அவமானம் தாங்காமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தார்.

‘ஐயா இதில் அவமானப்படவோ அழுது வடிக்கவோ என்ன இருக்கிறது?’ பொன்மலர் வினவினாள்.

‘போன இடத்தில முன்பின் தெரியாத ஒருத்தனோட…’அவரால் மேற்கொண்ட பேசமுடியவில்லை.

‘ஐயா, நல்லா யோசிச்சுப்பாருங்கோ,அவள் முன்பின் தெரியாத யாரையும் செய்யல்ல. அவள் நாடுகடந்துபோயிருந்த அன்னிய நாட்டில்,இருவருடங்களாக அவளுடன் பழகிய, அவளைப் புரிந்துகொண்டு,அவள் நிலைமையைச் சரியாகக் கணித்துக்கொண்ட ஒருத்தனைத்தான் தனது எதிர்காலத்துணையாக ஏற்றுக்கொள்ளப் போகிறாள,இதில் என்ன தவறு?;.’

பொன்மலர் விளக்கிளாள்.

‘எதுக்கும் ஒரு ஒழுங்கு முறைவேணும்”அவர் முணுமுணுத்தார்.

‘என்ன ஐயா ஒழுங்கு முறை? பிறந்த நாட்டில எங்களுக்குப் பாதுகாப்பில்ல,ஏதோ கல்யாணம் செய்துவிட்டு வந்தால் லண்டனில எங்களுக்கென்ன கொட்டிக்கிடக்கு? பல பெண்கள் என்னைப்போலக் கடையில போய் உழைக்காட்டா ஒரு வாழ்க்கையுமில்ல? ஓரு நேரச்சாப்பாடும் பாதுகாப்பும்தர எத்தனை ஆண்கள் இருக்கிறார்கள்? ஓரு பெண் டாக்டரோ அல்லது. கடையில் வேலை செய்யுறவளோ,யாராயிருந்தாலும் பெரும்பாலான பெண்கள்; தங்களின்ர காலில் நிற்கிறம்..’பொன்மலரும் அழத்தொடங்கிவிட்டாள்.

துரை அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.

அவன் ஏஜென்சிக் காரனைப் பார்க்கப்போக வேண்டும்.இலங்கையிலிருந்து ஒரு ஆளை லண்டனுக்கு எடுக்க எவ்வளவு முடியும் என்று கேட்கவேண்டும்.அவன் இலங்கையிலிருந்து எடுக்கப்போகும் அந்த ‘ஒரு ஆள்’ அவனின் தம்பியா அல்லது திலகாவா என்று அவன் இன்னும் முடிவுகட்டவில்லை.

இருவரும் இலங்கையில் அபாயவாழ்க்கை வாழ்பவர்கள். இருவரையும் தமிழ் இயக்கம் தங்களுடன் இணையச்சொல்லி அவர்களை வற்புறுத்தும், இருவரையும் இலங்கை அரசு குண்டுபோட்டுக் கொலை செய்யும் அல்லது சிறைபிடித்து சொல்ல முடியாத சித்திரவதைகள் செய்யும்.அவன் அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற உதவி செய்யவேண்டும்.

துரை அவசரமாகக் கதவைத் திறந்து தெருவிற் கால் வைத்தான். இருள் பரவத் தொடங்கியிருந்தது. ஐரிஷ் பையனும்ஆங்கிலேயப் பையனும் அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.எத்தனை ரம்மியமான உறவது?.

ஐரிஷ்காரரும்,ஆங்கிலேயரும் பரம்பரை விரோதிகள்,ஆனால் இவர்கள் குழந்தைகள,;பகைமை தெரியாதவர்கள்

ஓருகாலத்தில் இவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்கொள்வார்களா?அவனுக்குத் தெரியாது.

இளம் நிலா வானத்தில் பவனி வரத் தொடங்கியது. ‘ஐ லவ் யு திலகா’அமைதியான அந்த அந்திநேரத்தில் அவன் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான்.

உறவின் மகிமையைப் பக்குவமாக உணரத் தெரிந்தவன் அவன்.

‘திலகா, இந்த வினாடியில் நான் உன்னில் வைத்திருக்கும் அன்பும் நேசமும் வார்த்தைகளுக்குள் அடங்காதவை.ஆனால் நாளைக்கு என்ன நடக்கும் என்ற எனக்குத் தெரியாது.’அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

‘நான் சுந்தரலிங்கம் மாதிரி நடக்கமாட்டேன்’ துரை வானத்து நட்சத்திரங்கள் சாட்சியாகச் சபதம் செய்துகொண்டான்.

இரவு சண்டையில் பொன்மலா சுந்தர லிங்கத்திடம் கேட்டகேள்வி கதவிடுக்கால் புகுந்து வந்து அவன்; கருத்தைத் தாக்கியிருந்தது. பொன்மலர் கேட்டாள.

‘கல்யாணத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்கிறது? பாதுகாப்பு எதிர்காலத் துணை என்று பெண்கள் ஆண்களை எதிர்பார்த்தால் பெரும்பாலான நீங்கள் எங்களக் கட்டில்தேவைகளுக்குத் தானே பாவிக்கிறியள்? பெண்கள் அதற்கு மட்டுமா பிறந்திருக்கிறம்?’

(யாவும் கற்பனையே)

‘சுபமங்களா’-இந்தியா பிரசுரம் 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *