நேர்த்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 8,821 
 

மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக் கட்டினாள். நாலு எட்டுப் போட்டால் தாமிரவரணி வடிகால் வந்துவிடும். சுமை கனத்தது. வேர்க்க விறுவிறுக்க நடந்தாள். இருபுறமும் நாற்று நெகுநெகுவென வளர்ந்திருந்தது. மாலைக் காற்றில் தலையை அசைத்தன. சாலாச்சிக்கு நினைவெல்லாம் பெருமாளைப் பற்றித்தான். பால்பண்ணை நடத்தும் அவரை இன்னும் அரை மணி நேரத்துக்குள் பார்த்தாக வேண்டும். இல்லாவிட்டால் ரவைக்குத்தான் வருவார். பால்கேனை வண்டியில் கட்டினாரென்றால் பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு மனிதர் வீடு வீடாகச் சென்று பால் ஊற்றி வர நேரமாகிவிடும். பொழுதோடு போய்விட வேண்டும். அதற்குள் கைக்கு காசு வர வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள்தான் கிடைக்கும். மனிதர் சற்று நாள் நட்சத்திரம் பார்க்கக் கூடியவர். ஆத்திர அவசரத்துக்கு உதவுவதில் அவரின் குணம் வேறு யாருக்கும் வராது.

நாளைக்கு காலையில் திருச்செந்தூருக்குச் சென்று வருமாறு சிவன்கோவில் குருக்கள் கூறியது மனதில் நிழலாடியது. வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்குச்சென்று தன் குறைகளை மனம் உருகப் பிரார்த்தித்தபோது குருக்கள் வந்தார்.

“என்ன சாலாச்சி.. உன்னோட குறை தீர கடவுளைப் பிரார்த்திக்கிற மாதிரியிருக்கு.. எதுக்கும் கவலைப்படாதே. இந்த வருஷம் குருபெயர்ச்சி நல்லா இருக்கு… உன் கவலையெல்லாம் தீர்ந்திடும். அதுக்கு முன்னாடி நாளைக்கே திருச்செந்தூருக்குப் போயிட்டு வா.. குருதலம். உன் பிரச்னையெல்லாம் தானாவே தீர்ந்திடும்.” அவர் சொன்னது வேதவாக்காயிட்டு சாலாச்சிக்கு.

“”ரொம்ப நன்றி குருக்களே.. எப்பாடு பட்டாவது நாளைக்கு போயிடறேன்” என்றாள். காசுக்கு என்ன செய்வது? என மண்டைக்குள் குடைச்சல். நல்லவேளையாக பெருமாளுக்கு புல் கட்டு தருவது அவசரத்துக்கு உதவிடும் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

குருக்கள் சொன்னதுபோல திருச்செந்தூருக்குப் போய் தனது நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டு வந்தால் போதும். அதற்கு எப்படியும் 500 ரூபாயாவது வேண்டும்.

குடிகார மகன் ராசப்பனைப் பெற்றதற்கு தான் இன்னும் எத்தனைக் காலம்தான் கஷ்டப்பட வேண்டுமோ? “ஆண்டவா… நல்ல வழிகாட்டுப்பா. நாளைக்கு கருக்கலிலே உன் சன்னிதிக்கு வந்திடறேன்..’ மனதில் வேண்டிக் கொண்டாள். எந்த நேரமும் குடியும் குடித்தனமுமாக இருக்கும் ராசப்பனைக் கட்டிக்கிட்டவள் ஆறுமாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினாள். வயிற்றில் புள்ளையைச் சுமந்துகொண்டு போனவள்தான். வருஷம் மூன்றாகப் போகிறது.

இன்னும் கட்டியவன் வீட்டுக்கு வரவில்லை. மூன்று வருஷகாலத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பழ வியாபாரம் செய்யும் ராஜவல்லிபுரம் ராசம்மாதான் தகவல் சொன்னாள்.

“ஏய்..தாயி சாலாச்சி.. லட்டு மாதிரி உனக்கு பேரன் பிறந்திருக்கான். போயி பார்த்துட்டு வந்தா என்ன?” என்றதும் வயிறு குளிர்ந்தது. கையில் பிரட், ஹார்லிக்ஸ், பழங்களுடன் சாலாச்சி போய் பார்த்தாள். அப்போது சம்பந்தி

புரத்தா நாக்க பிடுங்குற மாதிரி கேட்டகேள்வியில தீயில விழுந்த மாதிரியாயிடுச்சி சாலாச்சிக்கு. அவமானத்தோட பேரப் பிள்ளைய எட்டிப் பார்த்துவிட்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தவள்தான்.

சம்பந்தி கேட்டதில் என்ன தப்பிருக்கு? குடிகார மகனைக் கட்டி வச்சது தன்னோட தப்புதானே? என்று மனதுக்குள் புகைந்தாள். குடிகாரன் கல்யாணம் செஞ்சு வச்சா திருந்திடுவான் என பலரும் சொன்னதைக் கேட்டு இந்த காரியத்தைச் செய்தாள். ஆனால் பலன்?… ராசப்பன் திருந்தியபாடில்லை.

மருமகள் ராசாத்தி, “ஏய் கெழவி நீயாச்சி.. உன் மவனாச்சி .. மருவாதையா.. என் கணக்கைத் தீர்த்து வை.. இல்லே கோர்ட்டுக்கு போயிடுவேன் …உன்மகனோட வேற எவளாவது குடும்பம் நடத்தட்டும்” என காய்ச்சி எடுத்துவிட்டாள். பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள் சாலாச்சி.

அருணாசலம்பிள்ளையென்றால் வண்ணார்பேட்டையில் தெரியாத ஆளே கிடையாது.அந்த அளவுக்கு பிரசித்தமான மனிதர். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தள்ளுவண்டியில் மனிதர் இட்லியை அவிக்கத் தொடங்கினால் போதும்.

சட்னியும், சாம்பாரும், எள்ளுப்பொடியும் ஊரே மணக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பெரிசுகள் வந்து நிற்பார்கள். காலை வியாபாரம் முடிந்து அப்புறம் மாலையில் தொடங்கி இரவு 12 வரையில் விதவிதமான பதார்த்தங்கள். மனிதரின் கைவண்ணமும், நாவன்மையும் அவருக்குப் பெரிய மதிப்பைத் தந்திருந்தது. நாளடைவில் சிறியதாய் ஹோட்டல் ஆரம்பித்தார்.

கழுகுமலையில் ராசலிங்கத்தின் ஒரே மகளான சாலாச்சியை அருணாசலத்துக்குப் பெண் கேட்டார்கள். தாழையூத்து ரவி ஜாதகத்தோட ராசலிங்கத்தைப் பார்த்து,”எலே… ராசலிங்கம். பையனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. நல்ல உழைப்பாளி. சாலாச்சியை ராசாத்தி மாதிரி வச்சுக்குவான். யோசனை பண்ணாதேப்பா” என்று நடையாய் நடந்தார் மனிதர். அதன் பிறகு சீர்செனத்தியென்று நல்ல நாளில் கல்யாணம் நடந்தது. ஆரம்பத்தில் வாழ்க்கை அமோகமாக ஓடியது. மூத்ததாக பிறந்தவன்தான் ராசப்பன். இரண்டாவதாக மீனாட்சி. ராசப்பன் பிளஸ் டூ வரையில் படித்தான். சகவாசம் சரியில்லை. கல்லாவில் கை வைக்க ஆரம்பித்தான். குடி, கூத்து என தறுதலையாகிவிட்டான். செல்லம் கொடுத்ததால் வந்த வினை. நாளாக நாளாக சோதனை. ஏதோ மீனாட்சி படித்தாள். திடீரென ஒருநாள் கடையில் இருந்த அருணாசலத்துக்கு கையும், காலும் இழுக்க கீழே விழுந்தவர்தான் மனிதர். பாரிச வாயுவாம். கை, கால் விளங்காமல் போனது. பார்க்காத வைத்தியம் இல்லை. சரிப்படவில்லை. மொத்த பாரமும் சாலாச்சியின் தலையில் விழுந்தது.

நல்லவேளை… இருக்க சொந்தமாக இடமாவது இருந்ததே என்ற தைரியத்தில் வாய்க்கும் வயிற்றுக்குமாக சாலாச்சியின் போராட்டம் தொடர்ந்தது. வைத்தியம் பார்த்ததில் இருந்த காசெல்லாம் கரைந்தது. வியாபாரமும் படுத்துவிட்டது. மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம். தறுதலைப் பிள்ளையை நம்பி வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? என்ற கவலை. பத்துவட்டி பலராமனிடம் இடத்தை அடமானம் வைத்து ரெண்டு லட்சம் புரட்டினாள். மனுசர் சேட்டை விட மோசம். பணம் கொடுக்கும்போது கறாராகப் பேசினார்.

“உனக்கு வேற வழியில்லனுதான் பணத்தைக் கொடுக்கேன். மாசாமாசம் மருவாதையை வட்டியக் கொடுக்கற வழியப் பாரு.. இல்லே என் குணம் தெரியும்ல”என்றார். வேறு வழியின்றி பணத்தைக் கைநீட்டி வாங்கியவள், நல்ல வரன் வந்ததால் மீனாட்சிக்கு திருமணத்தை முடித்தாள்.

ராசப்பன் குடித்துவிட்டு, ரோட்டில் கிடப்பது, ரகளை செய்வது தொடர்ந்தது. மகள் திருமணத்தைப் பார்த்த மறுவாரமே அருணாசலம் உடம்பு முடியாமல் போய்ச் சேர்ந்தார். அப்புறம் ராசப்பனின் நினைவால் நொந்து போனாள் சாலாச்சி.

“”பேசாம.. கண்ணாலத்தை முடிச்சு வைலே.. மகன் திருந்திடுவான்” என உறவு வட்டாரம் சொல்ல, வேறு வழியில்லாமல் பெண் தேடினாள். ஜாதகத்தைக் கொடுக்கும்போதே தரகரிடம் விஷயத்தைக் கூறினாள். அதன்படியே ராஜவல்லிபுரத்தில் ஓர் இடம் வந்தது. திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனிடம் பக்குவமாகப் பேசி கல்யாணத்தை நடத்தினாள்.

ஆரம்பத்தில் பவ்யமாக இருந்தான் ராசப்பன். எத்தனை நாளைக்கு இப்படி இருக்கமுடியும். பழைய மாதிரி குடிக்கத் தொடங்கினான். ராசாத்தி ஊரைக் கூட்டிவிட்டாள். ஏமாற்றப்பட்டதை அறிந்து அரற்றினாள். ஆறே மாதத்தில் புகுந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

மீண்டும் கஷ்டத்தில் ஜீவனம் ஓடியது. சாலாச்சி கடையை நடத்த முடியவில்லை. கிடைத்த வேலைக்குச் சென்று வந்தாள். மகள் நல்ல இடத்தில் வாழ்வதை எண்ணி சந்தோஷம் மிஞ்சியது. “கடல் வற்றுவது எப்போ…கருவாடு தின்பது எப்போ?’ என்ற நிலையில் தள்ளாடினாள் சாலாச்சி. பலராமனிடம் வாங்கிய அசலையும், வட்டியையும் கட்ட முடியவில்லை. மூழ்கிப்போனது. கிடைத்த பணத்தை வாங்கி கடன்களை அடைத்தாள்.

ஒரு இருநூறு ரூபாய் வாடகையில் ஒன்டுக் குடித்தனம்.

நாளை காலையில் திருச்செந்தூர் செல்ல வேண்டும். எப்படியும் ஐநூறு ரூபாய் வேண்டும், நல்லவேளை சிறுவாடாக அடுக்குப் பானைக்குள் சேர்த்து வைத்த பணம் இருநூறு தேறும். மீதி பணத்துக்குத்தான் பெருமாளை நம்பியிருந்தாள். நேராக புல்லுக்கட்டுடன் பால் பண்ணைக்குச் சென்றாள். அப்போதுதான் பெருமாள் சைக்கிளில் பால் கேனுடன் வெளியில் புறப்பட்டதாக மாரியம்மாள் சொன்னாள். வேறுவழியின்றி வீட்டுக்குப் போய்விட்டு வரலாம் என புறப்பட்டாள் சாலாச்சி. குடிசையின் கதவு திறந்துகிடந்தது. ராசப்பன் குடித்துவிட்டு மல்லாக்க தாறுமாறாகக் கிடந்தான். ஏதோ உளறிக்கொண்டிருந்தான்.

“”டேய்…எடுபட்ட பயலே.. ஏன்டா என் உயிரை வாங்க வந்திருக்க.. செத்துத் தொலையேன் மூதி…” கத்தியவள் உள்ளே நுழைந்தாள். அடுக்கிவைத்திருந்த பானைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து கடைசி பானைக்குள் கையை நுழைத்தாள். வெறும் சில்லறை நாணயங்கள் மட்டுமே கிடந்தன. நோட்டுகளைக் காணவில்லை. திடுக்கிட்டுப் போனாள். அங்குமிங்கும் தேட, எங்கும் கிடைக்கவில்லை. கத்த ஆரம்பித்தாள். பக்கத்து வீட்டிலிருந்த கனகாதான் சொன்னாள்.

“ஏய் கெழவி..சும்மா கத்தாதே.. ராசப்பன்தான் உள்ளே புகுந்து ஏதோ பிறாண்டிகிட்டிருந்தான்” சாலாச்சிக்கு புரிந்தது. ராசப்பன் அங்கே இங்கேயென்று இப்போ வீட்டுக்குள் கை வைத்துவிட்டான்.

“”நாசமாப் போறவனே” என திட்டித் தீர்த்தாள்.

மணி ஏழாகிவிட்டது. பெருமாள் பால் பண்ணைக்கு ஓடிவந்தாள் சாலாச்சி. கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தவர், சாலாச்சியைப் பார்த்து, “என்ன?” என்றார். “அய்யா…காத்தால திருச்செந்தூருக்குப் போகனும்…ஒரு நேர்த்திக்கடன்.. அதான் பணம் தேவைப்படுது” என இழுத்தாள். கோவில் என்றதும் மறுவார்த்தை பேசாமல்,

“எவ்வளவு வேண்டும்?” என்றார்.

“எப்படியும் ஐநூறு ரூபாயாவது வேணும்” என்று சாலாச்சி சொன்னதும், “உன் பாக்கி இருநூத்தம்பது.. மேல போட்டுத் தர்றேன்.. தாராளமா போயி உம் மகனுக்கு நல்லபுத்தி வரணும்னு நல்லா வேண்டிகிட்டு வா.. தாயி” என்றார். அந்த திருச்செந்தூரானே அருள்வாக்கு சொல்வதுபோல இருந்தது சாலாச்சிக்கு. பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தவள் நடையைக் கட்டினாள். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

அதிகாலையில் எழுந்தால்தான் 7 மணி ரயிலைப் பிடிக்க முடியும். பொழுது விடிந்ததும் புறப்பட்டாள் சாலாச்சி.

“ஏலே ராசப்பா..கஞ்சி வச்சிருக்கேன் குடிச்சிட்டு கெட. நான் திருச்செந்தூரு போயிட்டு வாரேன்” என்றவள் ஆற்றங்கரை ஓரமாக ஜங்ஷனை நோக்கி நடந்தாள். ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் சுமாராக இருந்தது. டிக்கெட்டை எடுத்துக் கொண்டு இரண்டாவது பிளாட்பாரத்துக்குச் சென்றாள். நேரம் இருந்தது. இன்னும் அரை மணி நேரமாகும். டீ விற்றவரிடம் ஒரு கப் வாங்கி சூடாகக் குடித்தாள். இதமாக இருந்தது. குழந்தை குட்டிகளுடன் பயணிகள் வந்த வண்ணமிருந்தனர். சற்று நேரத்தில் திருச்செந்தூர் பாசஞ்சர் வந்தது. பரபரப்புடன் சாலாச்சி ஓடினாள். நல்லவேளை கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. கடைசிப்பெட்டிக்கு முன்னதாக ஒரு வயதான பாட்டி அமர்ந்திருந்தார். கூட ரெண்டு ஆள்கள் இருந்தனர். அப்பாடா என ஜன்னலோரமாக அமர்ந்தாள். எதிரே இருந்த பாட்டி, “உட்காரு தாயி.. கூட்டம் இனிமேத்தான் வரும்.. லேட்டா வந்தாலும் இந்த டிரைவர் நிறுத்தி ஏத்திட்டுப்போவாரு” என்றார். அப்படியே பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்ததை எண்ணி சாலாச்சி மகிழ்ந்தாள்.

சரியாக 7 மணிக்கு வண்டி புறப்பட்டது. சிலுசிலுவென காற்று வீசியது. எப்படியும் ஒன்றரை மணி நேரமாவது பிடிக்கும். அதுவரையில் பேச்சுத் துணைக்கு பாட்டி இருப்பதால் கவலை இல்லை. நைசாக பாட்டி பேச்சைத் தொடங்கியது. விவரம் புரிந்தது. ஆதரவற்றவர். கோவிலுக்குப் போகிறார். சரி வயதானால் எல்லாருக்கும் இதே கதிதான். வயது 70 ஐத் தாண்டியிருந்தாலும் நன்றாக கண்பார்வையுடன் திருத்தமாக பேசினார். இசக்கியம்மாள் என்பதும் கோவில்பட்டியிலிருந்து வந்ததாகவும் தெரிவித்தார். தனது கதையையும் சாலாச்சி பகிர்ந்தாள்.

வண்டி கருங்குளம் தாண்டி வேகமெடுத்தது. பாட்டி லேசாக கண்ணயர்ந்த மாதிரி தெரிந்தது. “சரி தூங்கட்டுமே’ என சாலாச்சியும் கண்ணை மூடியவாறு அசைபோட்டாள். மூத்தவனுக்கு நல்லபுத்தி தரணும்… மருமகள் மீண்டும் வந்து குடும்பம் நடத்தனும் என்று மனமுருக முருகனைப் பிரார்த்தித்தாள். வெள்ளரிக்கா, முறுக்கு, கடலைமிட்டாய் என வியாபாரிகள் குரல் கேட்க பசங்களின் லூட்டி வேறு வண்டி காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. திடுமென வண்டி வேகம் குறைய பதட்டமடைந்த சாலாச்சி கண்ணைத் திறந்துப் பார்த்தாள்.
திருச்செந்தூர் நெருங்கிவிட்டது. “அட.. அதுக்குள்ளே தூக்கம் கண்ணைக் கட்டிப்போட்டுட்டு..’ என்றவள் ரயில் நின்றதால் பையைத் தூக்கினாள். ஆளாளுக்கு வழி
விடாமல் நின்றனர். எதிர் சீட்டில் இருந்த இசக்கிபாட்டியை எழுப்பிவிட்டு சேர்ந்த மாதிரி போகலாமே என நினைத்தவள்.

“ஏய்..தாயி கோயிலு வந்துட்டு. வாங்க போகலாம்” என்றாள். பாட்டியிடமிருந்து பதில் வரவில்லை. சரியென்று நினைத்தவள் பாட்டியைத் தொட்டு எழுப்பினாள். தேகம் சில்லென்றிருந்தது. பாட்டியின் உடல் துவண்டு சீட்டிலேயே சரிய, சாலாச்சிக்கு மூச்சே நின்றுவிட்டது. “அட முருகா.. என்னடா இது சோதனை.. நல்லா பேசிட்டு வந்த பாட்டிக்கு இப்படி ஆயிடுச்சே’ சத்தம் போடவும் பயணிகள் திரும்பி வந்தனர். கூட்டம் கூடிவிட்டது. “”யாரோ ஒரு பாட்டி அனாதையாம் இறந்து கிடக்கு” என்றனர். சாலாச்சிக்கு எதுவுமே புரியவில்லை. அதற்குள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க. கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டது.

“”யாரும்மா இந்த பாட்டியோட கூட வந்தது?” என்றார் ஒரு போலீஸ்காரர்.

“தனியா வந்தாங்க ஐயா.. எங்கூட பேசிகிட்டே வந்தாங்க. அப்புறம் தூங்கிட்டாங்க. யாருன்னு தெரியாது” – சாலாச்சி சொன்னாள்.

“சரி அனாதைப் பிணம்னு எழுதி ஆக வேண்டியத பாருங்க ஏட்டய்யா” என சக போலீஸ்காரர் சொன்னார். ஆக வேண்டிய காரியங்கள் நடந்தன. சாலாச்சிக்கு திக்பிரமை பிடித்தவளாக நிற்க. மனதுக்குள் திடமான முடிவு எடுத்தாள்.

“ஏட்டய்யா… இந்தம்மா அனாதைன்னு புதைச்சிடாதீங்க…அவங்களுக்கு செய்ய வேண்டியத நான் செய்யறேன்” என கெஞ்சினாள். யோசித்த போலீஸ்காரர், “சரி ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு ஆக வேண்டியதப் பாருங்க” என்றார். அன்றுகாலையில் தொடங்கி பாட்டியை அடக்கம் செய்ய மணி பிற்பகல் 1 ஆகிவிட்டது. இருந்த பணத்துக்கு மாலை, இத்யாதி என்று தன் சொந்த தாய்க்கு செய்வது போல அத்தனையும் செய்துமுடித்துவிட்டு நேராக கடற்கரைக்கு வந்தாள்.

“அய்யா செந்தூரா.. உனக்கு நேர்த்திக் கடன் செய்ய வந்தேன். நீ எனக்கு வேற வழிய காட்டிட்ட. இத்தோட கெட்டதெல்லாம் போயி நல்லதே நடக்கட்டும் அய்யாவே” என்று மனமுருகி வேண்டி தனது நேர்த்திக்கடனை முடித்த மகிழ்வில் கடலில் மூழ்கி நீராடினாள் சாலாச்சி..

– தினமணிகதிர் 23-10-2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *