நேரமில்லை

 

‘டெமாக்கிளிஸ்’சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில் வழுக்கி விரையும் மனிதர்கள்….,வித விதமான அவர்களின் நடை,உடை பாவனைகள்…,முக அமைப்புக்கள்,அந்த ஆறு மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த பலதரப்பட்ட அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் வந்து இறங்கும் பல வண்ண சொகுசுக்கார்கள்..,முகப்பிலுள்ள பிரம்மாண்டமான முற்றத்தை முழுவதுமாய் நிரப்பியிருந்த இரண்டு சக்கர வாகனங்கள்!இப்படி…..இவற்றைஎல்லாம் பார்த்துக்கொண்டு நேரத்தைத்தள்ளும் மனநிலை தனக்கு வாய்க்கக்கூடும் என்றுகூட என்றாவது தோன்றியிருக்கிறதா?

“ஒரு நிமிஷம்,ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க!..இன்னும் ஒரு தோசை மட்டும் எடுத்துக்கிட்டு இதோ வந்திடறேன்.”-சொல்லிவிட்டு ஓட்டமும்,நடையுமாக அவள் வந்து சேர்வதற்குள்,தட்டில் கைகழுவிக்காலில் செருப்பு நுழைத்து,காம்பவுண்ட்
கேட்டையும் தாண்டி விரையும் ஓட்டம்,ஊர் அரவமெல்லாம் ஓய்ந்து போனநடுநிசிப் பொழுதிலேதான் நிலைக்கு வந்து சேரும்.

“அது என்னங்க அப்படி ஒரு ஓட்டம்?அடுத்த தோசையை எடுத்துக்கிட்டு வந்தா…..
ஆளையே காணோமே?”

”உனக்குத்தெரியாது பத்மா!ஓடற காலத்திலே ஓடலைன்னா…ஓய்ஞ்சு கிடக்கிறப்ப
ஒரு பய கூட சீண்டமாட்டான்.கொஞ்சம்அசந்திட்டோம்னா…ஒரு நிமிஷம்..,ஒரு
செகண்டிலே கூட எப்படிப்பட்ட ‘அய’னான சான்ஸ், அருமையான காண்டிராக்ட்
எல்லாம் கைநழுவிப்போயிடும் தெரியுமா?உன்னோடே தோசை மேல சபலப்பட்டு..
ஒரு அஞ்சு நிமிஷம் இன்னிக்கு லேட் ஆகியிருந்தேன்னு வச்சுக்க!அந்தப்பெரியபாலம் கட்டிக் கொடுக்கிற காண்டிராக்ட்டை இல்லே நான் கோட்டை விட்டிருப்பேன்?…இன்னிக்கு நான் ஒரு லாட்டரி பிரைஸ் இல்லே அடிச்சிருக்கேன்?”

வீறிட்டு அலறும் குழந்தையின் குரலோசை,கவனத்தை ஈர்க்கிறது.பிறந்து ஒரு வாரமே ஆகியிருந்த சிசுவைஏந்தியபடி,
ஒரு பெண்ணும் அவள் கணவனும் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த மருத்துவமனையில் காட்டுவதற்காக அதே வரவேற்புக்கூடத்தில் காத்திருக்கிறார்கள்.கண்ணாடியைக் கையாளும் பத்திரஉணர்வுடன்,தலைக்குக்கீழே கையை அணையாக்கிக்கொண்டு ,மனைவியிடமிருந்து அதிஜாக்கிரதையாகக்குழந்தையை
மெள்ளத்தூக்கிக்கொண்ட கணவன் ,அதை நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறான்.உதட்டை விரித்தும்,குவித்தும்,வினோதமான ஒலிகளை எழுப்பிஅவன் செய்கிற சேஷ்டைகளில் குழந்தை சற்றே சமாதானம்கொண்டது போலத்தோன்றுகிறது.தன்
ஆள் காட்டி விரலால் பிள்ளையின் பிஞ்சுப்பாதத்தை வருடி,நத்தையைப்போல அது தன் விரல்களைக்குறுக்கிக்கொள்ள முயலும் காட்சியில் சிலிர்த்துப்போகிறான் அவன்.

பிஞ்சுக் குழந்தையின் ஸ்பரிச சுகத்தில்…தொடுகை இன்பத்தில் மனம் கலந்து லயித்திருந்த நினைவு ஏதேனும் தன்னிடம் எஞ்சி இருக்கிறதா?அதன் குண்டுக்
கன்னங்களை முகத்தோடு அழுத்தி,உப்புக்கரிக்கும் கண்ணீரின் சுவையில்,உமிழ்நீர் ஒழுகும் அந்த உதட்டின் நெளிவில்…ரசனையோடு ஒன்றித் தோய்ந்த ஞாபகத் துணுக்கு ஏதாவது..தன் நினைவின் அடுக்குகளில் ஒட்டிக்கொண்டாவது இருக்கிறதா?


தொடர்ச்சியான
மலைச்ச்சரிவுகளுக்கு மேல் கூடாரம் போட்டுத்தங்கிப்பாலம்
கட்டுவதற்கான மூட்டைகளையும்,கற்களையும்,மணலையும் மழைக்கும்,வெயிலுக்கும் பொத்திப்பொத்திப்பாதுகாத்து….,வேலைபார்ப்பவர்களுக்குப்
பணப்பட்டுவாடா செய்து…,கோப்புகளைச்சுமந்தபடி நகர அலுவலகங்களுக்கும்,மலைக்காட்டுக்குமாய் அலைந்து திரிந்தபடி’ஷண்ட்டிங்’ அடித்துக்கொண்டு…உலகமே அதுவாய்…அதற்குள்ளேயே குறுகிப்போயிருந்த அந்த நாட்களின் சாயங்காலப்பொழுது ஒன்றிலேதான் அந்தத்தகவல் வந்தது.செல்பேசி
அறிமுகமாகாத….தொலைபேசியும் கூட எட்டியிராத அந்த மலைக்காட்டுக்கு,மகன் பிறந்த செய்தியைச்சுமந்தபடி..ஒரு தூதுவன்! சிரிப்பைக்கூட உதடுகள் உதிர்க்க முடியாதபடி..,களிப்பைக்கூட முகத்தில் காட்ட இயலாதபடி….பணிச்சுமையில்
இறுகிப்போய் மந்தித்துக்கிடந்த மனம்,சலனமே கொள்ளாமல் அமைதி காத்தது.
கால்நடையாய்ச்ச்சரிவிறங்கிக்கிடைத்த ஜீப்பிலும்,லாரியிலும் தொற்றியபடி வீடு வந்து சேர்ந்து,குளித்து முழுகிக்குழந்தையைக்கையில் ஏந்திய பிறகும்…கண்ணுக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்த பணக்கட்டுக்கள், அலை அலையாய் விழிகளுக்குள் மிதந்த கருங்கல் ஜல்லிகள்!
குறும்புக்காரர் என்று பெயரெடுத்திருந்தவரான தமிழாசிரியப்பெரியப்பா, என் மன
நிலையை மோப்பம் பிடித்தவராய்க்கிண்டல் செய்தார்.
“என்னடா?அதிகமான் மாதிரி முழிக்கிறே?”
‘அதிகமானா?மலையைத்தவிர அவனுக்கும் எனக்கும் வேறு என்ன சம்பந்தம்?’
“ஆமாண்டா!அதிகமான் போர்க்களத்திலே எதிரிகளோடே சண்டை செஞ்சுக்கிட்டிருக்கிறப்ப மகன் பொறந்த செய்தி அவனுக்குக்கிடைக்குது.அப்படியே நேரே அங்கே இருந்து வீட்டுக்கு வர்றான்.தன்னை எதிர்த்து சண்டை செஞ்சவங்களை எப்படிக்கோபமா….,கண்ணுமுழி செவந்து பார்ப்பானோ…அதேமாதிரி மகனையும் பார்க்கிறான் அந்த முட்டாள்பயல்! நீ இப்ப முழிக்கிற முழியைப்பார்த்தா…அப்படியே இல்ல இருக்கு?”
பேறுவலி எடுக்க ஆரம்பித்ததிலிருந்து,குழந்தைப்பிறப்பு வரை மனைவி பட்ட கஷ்டங்கள்..,குழந்தையின் எடை,அதன் முக அமைப்பு..,நிறம்..,அதற்கு வைக்கப்போகிற பெயர் என்று பலதையும் பேசிப்பேசி மனசு இந்தப்பக்கம் இறங்கப்பார்த்த வேளையில்..,வேலையும்,மலையும் கொக்கி போட்டு இழுக்க…,
பழைய ஓட்டம் …மறுபடியும் புதிய பாய்ச்சலோடு தன்னை உயிர்ப்பித்துக்கொள்ளும்.

தொடர்ஓட்டங்களுக்கெல்லாம் முடிவுரை எழுதி,முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
நிமிர்ந்து பார்த்த வேளையில்,கண்ணெதிரே ஸ்தூலமாக எஞ்சி நின்றவை,
கணிசமான வங்கிக்கையிருப்பு,இழைத்துக்கட்டிய மாளிகை மாதிரி வீடு,மகனின் பெயருக்குப்பின் ஒட்டிக்கொண்டு நீண்டிருக்கும் அயல்நாட்டுப்பட்டங்கள்….!

“என்னங்க! நம்ம கிரியோட கிளாசிலே அடுத்த வாரம் ‘டூர்’போகப்போறாங்களாம்.
உங்ககிட்டே இருநூறு ரூபாய் வாங்கிவைக்க சொல்லியிருக்கான்.”

”ஏண்டா?..பையன் கேட்ட உடனேபணத்தை உடனே எடுத்துக்கொடுக்கிறே ..சரி!
ஆனால்..அவன் எந்த ஊருக்குப் போகப்போறான்..,எத்தனை நாள் போகப்போறான்னு
கேட்கணுமுன்னு கூடவா உனக்குத்தோணலை?”-விருந்தாளியாக வீட்டுக்கு வந்த அக்கா,குறுக்கே புகுந்து கேள்வியை வைக்க,சரியான சந்தர்ப்பத்திற்காகக்காத்திருந்த மனைவி,அதையே ஆதாரமாகப்பிடித்தபடி,தன் ஆதங்கத்தைக் கொட்டிக்கவிழ்க்கிறாள்.
”நல்லாக்கேட்டீங்க அக்கா! அது கூடவே,இந்தக்கூத்தையும் கேளுங்க! இவர் ஊரிலிருந்து வந்தப்ப தற்செயலா ஒரு பிரன்ட் வந்திருந்தார்.பிள்ளை எந்தக்கிளாசிலே படிக்குதுன்னு கேட்டா…,அதைக்கூட சரியாச்சொல்லத்தெரியாமே என்னைப்பார்த்து அசடு வழிஞ்சுகிட்டு நெளிஞ்சார் பாருங்க! அந்தக்காட்சியை நீங்க பார்க்காமே போயிட்டீங்களே?”

”இங்க ஜகன்னாதன் யார் சார்?மேலே கூப்பிடறாங்க!”
முதல் மாடியில் ஏறியதும் தென்படும் நீண்ட தாழ்வாரத்தில்,வரிசையாக இட்டிருக்கும் இருக்கைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து அமர்கிறேன்.
”விசிட்டிங் கார்டு இருந்தால் கொடுங்க சார்..,காட்டிட்டு வரேன்”-பவ்வியமானகுரலில் பணியாள் கேட்க,
”அதெல்லாம் வேண்டாம்..சும்மா பேரைச்சொன்னா போதும்”என்கிறேன்.
‘பெயரைச்சொன்னாலே தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா இவன்’ என்ற அலட்சிய பாவத்தோடு கூடிய பார்வை ஒன்றை வீசி விட்டு,
மறைகிறான் அவன்.
மீண்டும் ஒரு காத்திருப்பு…! பக்கத்து இருக்கையில் இருந்தவர், செய்தித்தாளை விரித்தபடி,அதில் ஆழ்ந்திருக்கிறார்.செய்தித்தாளைப் பிரித்துப் பார்க்கக்கூடப்பொழுதின்றி ஓடிய என் இறந்த காலங்கள் மாறி…,இன்றைய என்
நிகழ்கால உலகம்,அதற்குள் மட்டுமே உயிர்ப்புடன் இயங்கி வருவது..,எனக்குள்
உணர்வாகிறது.ஆனால்..அந்த உலகத்திற்கு உள்ளேயும் கூட ஒரு தோழமையை…,
பகிர்தலை நாடித்தவித்த தருணங்கள்……!

பங்குச்சந்தை ஊழலைப்பற்றி இன்று வெளியாகி இருக்கும் ‘எடிட்டோரியல்’
கட்டுரையைப்பற்றி கிரியுடன் பேசியே ஆக வேண்டும்..! நாள் முழுவதும் அதற்காகவே காத்திருந்துவிட்டு,இரவு பத்து
மணிக்கு அவனைத்தேடிக்கொண்டு அவனுடைய அறைக்குப் போகிறேன். நல்ல வேளை..,அவன் இன்னும் தூங்கப்போகவில்லை.அறையில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருக்கிறது.பேச்சுக்
குரல் ஒலிக்கத் தயங்கியபடி,வெளியே நிற்கிறேன்.பிஸினெஸ் தொடர்பானதொடர்ந்த வாக்குவாதம் தொலைபேசியில் தீவிரமாய் நடந்துகொண்டிருக்கிறது. உரையாடல் முடிந்ததென்று ஒரு அடி முன்னேறும்முன் அடுத்தடுத்து அழைப்புக்கள் தொடர,உற்சாகம் வடிந்தவனாய்ப்பின்வாங்கியபடி ..என் அறைக்குள் போய் முடங்கிக்கொள்கிறேன்
அப்படித்தான் …மற்றும் ஒருநாள்,பேப்பரில் பட்ஜெட் அறிக்கை வெளியாகி இருக்க..,மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் மேலாளரும்,வர்த்தக சங்கத்தின் தலைவனுமாகிய கிரியுடன் அதைப்பற்றிப்பேசும் ஆசையில்,அவனுக்கு முன்பாகவே உணவு மேசையில் வந்து ஆஜராகி விடுகிறேன்.
”என்னங்க இது?வருந்தி,வருந்திக்கூப்பிட்டாலும் கூடக்காலையிலே ஒன்பதரை மணிக்கு முன்னாலே டிபன் சாப்பிட வரவே மாட்டீங்க..! இன்னிக்கு என்ன? எட்டு மணிக்கே வந்திட்டீங்க?மழைதான் வரப்போகுது!”-பத்மா ஆச்சரியப்படுகிறாள்.
பேரக்குழந்தைகள்,பள்ளிக்குத்தயாராகி உணவு கொள்ள வருகிறார்கள்.
”சாப்பிடுங்க மாமா! இன்னிக்காவது பிள்ளைங்களோட உட்க்கார்ந்து சாப்பிடுங்க!”-மருமகள் அன்போடு உபசரிக்கிறாள்.
ஆனால்….கிரி..கிரி…,அவன் எங்கே?
”கிரி எங்கேம்மா?”
”அவர் இன்னிக்குக் காலையிலே ஆறரை மணிக்கே ரெடியாகிக் கிளம்பிப் போயிட்டாரே..?பட்ஜெட் வந்திருக்கில்லே?முக்கியமான மீட்டிங் ஏதோ இருக்காம்…அதுக்குத்தயார் செய்யணும்..டிபனை ஆபீசுக்கே அனுப்பிடுன்னு சொல்லிட்டுப்போயிட்டார்! நீங்க சாப்பிடுங்க மாமா!”

மலைக்குப்போவதற்காக அவசரமாக ஜீப்பில் ஏறிக்கொண்டிருக்கும் வேளையில்,அரை டிராயர் அணிந்திருக்கும் கிரி,தன் கையில் பள்ளி ஆண்டு மலரைப்பிடித்தபடி,அவசரமாய் ஓடி வருகிறான்.
”அப்பா..அப்பா..,ஹெட்மாஸ்டர் கொடுக்கச்சொன்னார்”-மூச்சிரைக்கிறது அவனுக்கு.
”அதுக்கு இப்படி ஓடி வரணுமாடா?அம்மா கிட்டே கொடு ..! நான் அப்புறமா பார்க்கிறேன்.இப்ப…அப்பா,அவசரமாய்ப் போய்க்கிட்டு இருக்கேனில்லே ..? நேரமில்லடா கண்ணா!”
”இல்லேப்பா..! இதிலே..’ரேங்க்’எடுத்த பையன்களோடே பேரு,போட்டோ எல்லாம் போட்டிருக்காங்க.நீங்க கிளம்பறதுக்குள்ளே காட்டணும்னுதான் ஓடி வந்தேன்.”
”சரி குடு…”-வேக ஓட்டத்தில்,…ஒரே புரட்டலில் பார்த்ததாகப் பெயர் செய்து விட்டு,செல்லமாய் அவன் தலையைக்கலைத்து விட்டுக்கை அசைக்கிறேன்.ஜீப் பறக்கிறது..

”எக்ஸ்யூஸ் மீ சார்! நீங்க உள்ளேபோகலாம்” -கடைசி அழைப்பு வந்துவிட…,
ஜே.கிரிநாத் என்ற பெயர் பொன்வண்ண எழுத்துக்களில் மின்னிக்கொண்டிருந்த
பெரிய அறைக்கதவைத்தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிறேன்.விசாலமான அந்த அறைக்குள் முழுமையாக வியாபித்திருந்த
குளிர்,முகத்தில் வந்து அறைய…., இதமான இனிய ஒரு மணம்,என்னைச்சூழ்ந்து கொள்கிறது.
மிகப்பெரிய ‘எக்ஸிகியூடிவ்’மேசை.அதில் அணி வகுத்திருந்த பலவண்ண டெலிபோன்கள்,பர்சனல் கம்ப்யூட்டர்,அதன் துணை உபகரணங்கள்! அதன்பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்தபடி, கோப்புக்களைப்பார்ப்பதில் மூழ்கியிருந்த கிரி,
ஆள் வந்த அரவம் கேட்டுத்தலை நிமிர்கிறான்.கணப்பொழுதில் அவன் முக பாவத்தில் மாற்றம் மின்னலடிக்க,அதிர்ந்து போனவனாய் நாற்காலியை விட்டு
அனிச்சையாய் எழுந்தபடி,பதறுகிறான்.

”அப்பா! நீங்களா..?ஜகன்னாதன்னு பேர் சொன்னதும் உங்க பேரிலே வேறேயாரோ
வந்திருக்காங்கன்னு நெனைச்சேன்….நீங்களே வந்திருப்பிங்கீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே ….ஏம்ப்பா..ஒரு போன் அடிக்க வேண்டியதுதானே?…இவ்வளவு நேரம் காத்திருக்கணுமா? என்னோடே அப்பான்னு சொல்லிட்டு உரிமையோடே உள்ளே
வந்திருக்க வேண்டியதுதானே..?”
சற்றும் எதிர்பாராத எனது தாக்குதலால் அவனுக்கு விளைந்த பிரமிப்பையும்…..
பரபரப்பையும் சிறுபிள்ளையைப்போன்ற வேடிக்கையான மனநிலையுடன் ரசித்துப்பார்க்கிறேன்; அது,எனக்கு சந்தோஷமாகக்கூட இருக்கிறது. கண நேரத்திற்குள் தன் பதற்றத்தைக்கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட அவன்,தன்
உதவியாளரை அழைத்துத்தனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களையும்,தன்னைக் காணவரும் பார்வையாளர்களையும் சிறிது நேரம்
கண்டிப்பாகத்தவிர்த்து விடச்சொல்லி உத்தரவிட்டு அனுப்புகிறான்.பிறகு நான் விரும்பும் குளிர் பானம் ஒன்றை வரவழைத்துத்தருகிறான். அந்தப் பணியாளும்
சென்ற பிறகு,மெல்ல அருகில் வந்து,என் கைகளைப்பற்றிக் கொள்கிறான்..
”என்னப்பா ஆச்சு? எனிதிங் ராங்?”
பற்றிய அவன் கரங்களை மெதுவாக அழுத்துகிறேன்.
”ஒண்ணும் இல்லே கிரி..!உன்னை இங்கே வந்து பார்க்கணும்னு திடீர்னு எனக்குள்ளே ஒரு ஆசை…அவ்வளவுதான்! வீட்டிலேயும் பொழுதே போக மாட்டேங்குது.நீ சின்னப்பிள்ளையா ஸ்கூலிலே …காலேஜிலேஎல்லாம் இருந்தபோது,அங்கெல்லாம் வந்து உன்னைப்பார்க்க எனக்கு நேரமே இருந்ததில்லை…! இப்போ நீ பிசியாயிட்டே ..!ஆனா அதுதானே வாழ்க்கை”என்றபடி
வாய் விட்டுச்சிரிக்கிறேன்.நெகிழ்ச்சியான அந்தக்கணம் தந்த நெருக்கத்தில்,கிரி,தன் வேலைகளையெல்லாம்
புறந்தள்ளிவிட்டு,அந்தத்தளம் முழுவதும் விரவிக்கிடந்த அவனது அலுவலகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் என்னை அழைத்துச்சென்று,பணியாளர்களிடம்
பெருமையோடு அறிமுகப்படுத்துகிறான்.சுலபத்தில் எனக்குப்புரிபடாத அவனது நவீன தொழில் உத்திகளின் நெளிவு,சுளிவுகள் பற்றியெல்லாம் வாய் ஓயாமல்
பேசுகிறான்.அரைமணி நேரத்திற்கு மேல் ..,போனதே தெரியாமல் பொழுது
கழிந்தபின்,அவனது உதவியாளர் தயக்கத்தோடு குறுக்கிட்டுத் தொழில் துறை அமைச்சருடனான அவனது சந்திப்பு நேரத்தை நினைவுபடுத்த…
”சரிப்பா கிரி! நீ வேலையைப்பாரு.நான் எங்கே போயிடப்போறேன்?..இன்னொரு நாள் கூட சாவகாசமா வந்தாப்போச்சு…”என்றபடி விடைபெறுகிறேன்.

நான்கைந்து நாட்களுக்குப்பிறகு,ஒரு மாலைநேர வாக்கிங்கை முடித்துவிட்டு,நான்
வீட்டிற்குள் நுழைகையில்,பேரக்குழந்தைகள் காருக்குள் அமர்ந்தபடி ஆரவாரம் செய்து கொண்டிருக்க…கிரி,தானே டிரைவ் செய்தபடி,அவர்களை எங்கோ அழைத்துச்செல்வது கண்ணில் படுகிறது.அலுவலகத்தில் சென்று மகனிடம்
அப்பாயின்ட்மென்ட் பெறும் அவசியம்,அவனுக்கு நேர்ந்து விடாது என்று
அப்போது எனக்கு ஏனோ தோன்றியது..

நன்றி: சிறப்புச்சிறுகதையாக வெளியிட்ட ‘அமுதசுரபி’இதழுக்கு(அக்.2006) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஸ்கூல் விடுகிறநேரம் இந்தமழைக்கு எப்படித்தான் இவ்வளவு கணக்காய்த் தெரிகிறதோ தினம் நாலரைக்கு பெல் அடிக்க வேண்டியதுதான்...என்னவோ தனக்காகவே அது அடிக்கப்படுகிற மாதிரியல்லவா நினைத்துக்கொள்கிறது! எப்படியோ கடந்த மூன்று நாட்களாக உமா ஒருமாதிரி தப்பி விடுகிறாள்.ஒருநாள் கிருஷ்ண ஜெயந்தியைக்காரணம் காட்டி மூன்று மணிக்கெல்லாம் பர்மிஷன் ...
மேலும் கதையை படிக்க...
அன்று...இலங்கைப் பட்டினத்தில் அக்கினிப் பிரவேசம் அரங்கேறும் நாள் ! அன்றைய நிகழ்வுக்குத் தானும் ஒரு மௌன சாட்சியாய் இருக்கப் போவதை நினைந்ததாலோ என்னவோ..,கீழ்த்திசைக் கடலிலிருந்து முகம் காட்டத் தொடங்கியிருந்த ஆதவனின் செவ்வொளியிலும் கூடச் சில கருமையின் கீறல்கள் ! கடற்கரை ஓரமாய்க் கைகட்டி, ...
மேலும் கதையை படிக்க...
நுழையுமுன்.... 'சங்கிலி' என்ற தலைப்பில் 'புதிய பார்வை(டிச1-15,'05 )இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு....'தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு' என்பதே. அதுவே மிகவும் பொருத்தமானது என நான் கருதுவதால் அந்தப்பெயரையே வலையில் பயன்படுத்தி இருக்கிறேன். படைப்பைப் பேசவிட்டுப் படைப்பாளி ஒதுங்கிவிட வேண்டும் என்பது ...
மேலும் கதையை படிக்க...
உயிர்த்தெழல்..
ஒரு முன் குறிப்பு; கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் [பெயர் சுட்ட விரும்பவில்லை] ஒரு அனைத்துக் கல்லூரிக்கலை விழா நடந்து கொண்டிருந்தபோது மின் இணைப்பைத் துண்டித்து விட்டுப் பல மாணவியரைக் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கின ...
மேலும் கதையை படிக்க...
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி) ’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால வழிபாடு நடந்தேறுவதற்கு அறிகுறியாக நாத வெள்ளமாகப் பல முறை முழங்கி ஓய்கிறது. அதன் ஒலி முழக்கம் ஓய்ந்த பின்னரும் கூடப் பெரியாழ்வாரின் ...
மேலும் கதையை படிக்க...
இழப்புக்கள் எதிர்பார்ப்புக்கள்…
புதிய பிரவேசங்கள்
தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு
உயிர்த்தெழல்..
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்

நேரமில்லை மீது ஒரு கருத்து

  1. உமாமகேஸ்வரி மு says:

    என் பெருமைக்குரிய பேராசிரியர் அம்மா !! அவரை எண்ணி மனம் பெருமிதம் அடைகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW