Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நேசம்

 

ஏங்க…இந்தக் கதையைக் கேட்டீங்களா…நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன் அம்மா அப்பாவையும் அழைச்சுக்கிட்டு மதுரை, திருச்செந்தூர்னு கோயில் கோயிலா அலையப் போறாராம் மாப்பிள்ளை. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?”

என்று கணவனிடம் புலம்பினாள் மங்கையர்க்கரசி.

“”பொதுவா பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குற வரதட்சணை, சீர்வரிசையைப் பத்தி மாப்பிள்ள புது விளக்கம் கொடுத்ததும் எல்லாருமே அசந்துட்டீங்க. ஆனா இப்ப மாப்பிள்ள நடந்துக்குறதைப் பார்த்தா பொண்டாட்டிகிட்ட தனியா பேசுறதுக்குக் கூட அம்மாவோட அனுமதி இல்லாம செய்யமாட்டார் போலிருக்கே” என்று தன் பங்குக்கு மங்கையர்க்கரசியைக் குழப்பினார் நமச்சிவாயம்.

நேசம்ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவைப் பெண் பார்க்க வந்த நபர், “”உங்களுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகும் அதிர்ந்து பேசாத குணமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சம்மதத்தை தெரிவித்தான்.

ஆனால் அவனது பெற்றோர் கேட்ட வரதட்சணையை சசிகலாவின் பெற்றோரால் தர முடியாத நிலை. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க எங்களால் முடியாது. மன்னிக்கவும் என்று தகவல் அனுப்பி விட்டார்கள்.

அதைப் பார்த்து பதறிப் போய் ஓடிவந்த அந்த இளைஞன், “”என்னோட சேமிப்பு நிறையவே இருக்கு. அதைத் தர்றேன். எங்க அம்மா கேட்ட வரதட்சணையை நீங்களே செய்யுற மாதிரி சபையில பண்ணிடுங்க” என்று சொன்னான்.

“”உங்க அம்மாகிட்ட பேசி வரதட்சணையே வேண்டாம்னு சம்மதிக்க வெச்சிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். எனக்காக உங்களைப் பெத்தவங்களயே உதறத் துணிஞ்சுட்டீங்க. நாளைக்கு வேற காரணத்துக்காக என்னைய ஒதுக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்”…என்று சசிகலா கேட்ட கேள்வியில் அவன் பதில் சொல்ல இயலாமல் வியர்த்து விறுவிறுத்து எதுவும் சொல்லாமல் போனவன்தான். பிறகு பதிலே இல்லை.அதன்பிறகு வந்த வரன்கள் எல்லாம் ஜாதகப்பொருத்தம் இருந்தால் வரதட்சணையை இவர்களது சக்திக்கு மீறிக் கேட்டார்கள். குறைவாக கேட்டால் அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது குறையிருக்குமோ என்ற குழப்பத்தில் யாரிடமாவது சசிகலாவின் அப்பா விசாரிக்கப் போக, அது வம்பில் முடிந்துவிடும்.

இதையெல்லாம் விடுத்து நிஜமாகவே புரட்சிகரமான எண்ணத்துடன் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துகொள்ள வந்த வரனின் ஜாதகம் பொருத்தம் இல்லை என்று சசிகலாவின் தந்தை பின்வாங்கிவிட்டார்.

ஆனால் சுந்தரேசன் வரதட்சணையாகவும் கேட்கவில்லை. அதே சமயம் எதுவுமே வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

“”உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செஞ்சாலும் சரி. இது வெறும் சம்பிரதாய வார்த்தையா நான் சொல்றதா நினைக்காதீங்க. எனக்கு வரப்போற மனைவி சீர்வரிசை கொண்டு வரணும்னு அவசியமில்லை” என்று சொன்னான் தொடர்ந்து,”" ஆனா அவங்க எதுவுமே எடுத்துட்டு வரலைன்னா யாரோ ஒருத்தர் வீட்டுல விருந்தாளியா தங்கியிருக்குற எண்ணம்தான் அவங்களுக்கும் வரும்.

தான் பிறந்த வீட்டுல இருந்து பொருட்களை எடுத்து வந்தா இந்த வீட்டுல இருக்குறதும் இந்த மனுஷங்களும் என் சொந்தம்னு அன்னியோன்யம் வரும். இதுவும் என் வீடு அப்படின்னு மனது இயல்பு நிலைக்கு வந்துடும்” என்று அவன் தெளிவாகப் பேசியதும் சசிகலாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அவனைப்பற்றி மற்ற குணங்கள் அதிகம் தெரியவில்லை என்றாலும் இவன் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவன் என்பது புரிந்தது.

சீர்வரிசையின் அவசியத்தைப் பற்றி அவன் சொன்ன கருத்தைக் கேட்டு, “இந்த கோணத்தில் நாம சிந்திக்கவே இல்லையே…’ என்று சசிகலாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர்.

சுந்தரேசன் சசிகலா திருமணத்திற்கு முதல்நாள் வரவேற்பு நடந்து கொண்டிருந்த நேரம்.

அந்தக் கூட்டத்தில் இருந்தவன், “”பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்காங்கடா…” என்று மாப்பிள்ளயின் காதில் கிசுகிசுத்தான்.

“”இரட்டையர்கள் கிட்ட கூட பத்து வித்தியாசத்தை அவங்க தாயால சொல்ல முடியும். அந்த அளவுக்கு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு.

சசிகலாவோட நிறம் அவங்களாட தனித்தன்மை” என்று நண்பனைக் கடிந்து கொண்டான் மாப்பிள்ள சுந்தரேசன்.

“”சாரி நண்பா…ஒருத்தரோட நிறம், பிறப்பு, மாற்றுத்திறன் இதைப் பற்றி பேசுனா உனக்குப் பிடிக்காதுன்னு நல்லாவே தெரியும். அதை விடு. நிச்சயதார்த்தம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ வரவேற்பும் முடிஞ்சுடுச்சு.

ஆனா அவங்க, இவங்கன்னு மரியாதையா கூப்பிடுறதைப் பார்த்தா இன்னும் பொண்ணு மேல உனக்கு பயம் போகலை போலிருக்கே” என்று கிண்டல் பேச்சை ஆரம்பித்தான் அந்த நண்பன்.

“”போடி, வாடின்னு பேசுறதெல்லாம் எங்களோட பர்சனல். அதை நாங்க ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டணும்னு அவசியம் இல்லை” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் சுந்தரேசன்.

இந்த உரையாடல்களில் எந்த தவறும் இல்லாததால் யாரும் ரகசியமாகப் பேசவில்லை. அதனால் மணமகள் தம்பியின் தோழன் மூலமாக இந்த உரையாடல் சசிகலாவைச் சென்றடைந்தது.

“”இவ்வளவு சம்பாதிக்கிற ஆள் வரதட்சணை, சீர் எதையும் கட்டாயப்படுத்தி கேட்காம இருக்கவும் எனக்குச் சின்னதா சந்தேகம் இருந்துச்சுக்கா. இப்ப அவரோட பிரெண்ட்ஸ் கூட இயல்பா பேசினதைக் கேட்டதும் நம்பிக்கை வந்துடுச்சு. எதிர்பார்த்ததை விட பல மடங்கு சூப்பரான மாப்பிள்ள உனக்குக் கிடைச்சிருக்கார்” என்று அவன் புகழ்ந்துவிட்டு சென்றதும் சசிகலாவின் முகத்தில் இன்னும் பூரிப்பு கூடியது.

திருமணமும் வழக்கமான கேலி, கிண்டல், சாப்பாட்டில் இது தூக்கல், அது குறைச்சல் என்ற முணுமுணுப்புடன் இனிதே நடந்து முடிந்தது.

தேனிலவுக்கு எந்த ஊருக்கு அழைச்சுட்டு போகப்போறேன்னு சொல்லாம சஸ்பென்சா வெச்சிருக்காரே. நிச்சயம் நாம எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத்தான் தரப்போறாரு என்று குதூகலத்தை எதிர்பார்த்திருந்தாள் சசிகலா.

சுந்தரேசனும் கொடுத்தானே ஓர் அதிர்ச்சி வைத்தியம். அதை சசிகலா நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. ஆம்…திருமணத்தின் பிறகு மறுவீடு செல்லும் சடங்குகள் எல்லாம் முடிந்தவுடன் மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி என்று ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்துவிட்டான். அதுவும் அவனுடைய அப்பா அம்மாவுடன் சேர்த்து.

“கல்யாணம் முடிஞ்ச சூட்டோட மலை ஏரியாவுக்கு மனைவியை அழைச்சுட்டுப் போகாம அறுபதாம் கல்யாணம் செஞ்சவன் போல கோயில் குளத்தை சுத்த கிளம்பிட்டாரே என்று சசிகலாவின் பெற்றோர் கவலைப்பட ஆரம்பித்தார்கள்.

சசிகலாவிடம் அவள் அம்மா போனில் பேசியபோது, “”எல்லா விஷயத்துலயும் ரொம்ப பர்ஃபெக்டா இருக்குற ஆள்தான். கொஞ்ச நாள் அவர் போக்குக்கு விட்டுடுவோம். அவர் மனசுல என்ன இருக்குன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டு நான் இது பற்றி பேசுறேன். அவசரப்பட்டு குட்டையைக் குழப்பிட வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள் அவள்.

சசிகலா, திருமணத்தன்றே மாமியாரை நினைத்து சற்று குழம்பித்தான் இருந்தாள். “”நல்ல சந்தோஷமான மனநிலையில இருக்குறப்பவே புள்ளயையும் மருமகளயும் தனிக்குடித்தனம் விட்டுட வேண்டியதுதான். அப்புறம் பிரச்சனை பெரிசாகி அவளா கழுத்தைப்பிடிச்சு வெளியில தள்ளுறதுக்குள்ள நாமே மரியாதையைக் காப்பாத்திகிட்டா நல்லதுதானே” என்று சுந்தரேசனின் அம்மா, யாரிடமோ பேசிக்கொண்டிருந்த செய்தியும் காற்றிலே கலந்து சசிகலாவிடம் வந்து சேர்ந்துவிட்டது.

“”சசி…உன் மாமியார் மெகா சீரியல் பைத்தியம்னு நினைக்கிறேன். கொஞ்ச நாள்ல நீ உன் மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்டிடுவேன்னு பயந்து இப்பவே உங்களைத் தனிக் குடித்தனம் அனுப்பிடலாம்னு பேசிகிட்டு இருக்காங்க. சரியான முன்ஜாக்கிரதைன்னு தோணுது” என்று சசிகலாவின் சித்தி தன் காதில் விழுந்த செய்திகள சுருட்டி இவளிடம் பற்ற வைத்துவிட்டாள்.

அக்கம்பக்கத்தில் மாமியார் மருமகள் சண்டை நடக்கும்போது நம்ம தம்பி பொண்டாட்டி இதே மாதிரி நம்ம அம்மா, அப்பாகிட்ட நடந்துகிட்டா எவ்வளவு வேதனையா இருக்கும். அதனால நான் கல்யாணமாகி போற இடத்துல மாமனார் மாமியாரை நல்லபடியா வெச்சுக்கணும் என்று தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தாள் சசிகலா.

ஆனால் திருமணம் முடியும் முன்பே வரப்போகும் மருமகள் ராட்சசியாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படும் மாமியார் நம்முடன் ஒட்டுதலுடன் பழகுவாரா…நாம் நெருங்கிப்போனாலும் அவரது அடிமனதில் உள்ள அச்சத்தின் காரணமாக நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குற்றம் கண்டுபிடித்தால் என்ன செய்வது என்ற சந்தேகமான மனநிலையில்தான் சசிகலா இருந்தாள்.

அதனால்தான் சுந்தரேசன் தேன்நிலவுப் பயணம் போக வேண்டிய நேரத்தில் அவன் அம்மா அப்பாவை சேர்த்து அழைத்துக்கொண்டு கோவில், குளம் என்று அலைந்ததும் வெறுப்பு ஏற்படவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் நேர்த்தியாக செய்யும் அவன் இதைக்கூட ஏதாவது காரணமாக செய்யலாம் என்று நம்பினாள்.

அந்தரங்கமான நேரத்தில் கூட தொழில், பெற்றோர், உறவினர் என்று எதையாவது பேசி நேரத்தை வீணடிக்காமல் தன்னைப்பற்றி சொன்னதுடன் சசிகலாவுக்கு பிடித்ததைப் பற்றி கேட்டான். அதனாலேயே அவளுக்கு சுந்தரேசனை இன்னும் அதிகமாகப் பிடித்தது.

இவர்கள் ஆன்மிகத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வந்த ஒரு வாரம் ஆகியிருக்கும்.

அன்று இரவு சாப்பாட்டு நேரம். “”டேய் சுந்தரேசா…ரொம்ப வருஷமா நாங்க பார்க்கணும்னு ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போய்ட்டே… உங்களோட அந்தக் கோயில்களுக்குப் போய் தரிசனம் செய்யும்போது ரொம்பவே மனநிறைவா இருந்துச்சு.

எங்களுக்கு இந்த சந்தோஷம் போதும்…நீ முதல்ல உன் பொண்டாட்டியை அழைச்சுகிட்டு அவ ஆசைப்படுற இடத்துக்கு போயிட்டு வா”என்றாள் அவன் தாய்.

“”ஒவ்வொரு காரியமும் இவங்க சொன்னாத்தான் நடக்குமா…சுத்தம்…” என்று சசிகலாவின் மனதுக்குள் சலிப்பு தோன்றியது.

“”அந்த ஏற்பாடு எல்லாம் ரெடி. அவ போகணும்னு ஆசைப்பட்டதுல ஆறு ஊர்களுக்கு போற மாதிரி நாலு நாள் டூர் பிளான் பண்ணி டிக்கட்டும் ரிசர்வ் பண்ணிட்டேன். அடுத்த வாரம் வியாழக்கிழமை கிளம்பணும்” என்று சுந்தரேசன் சொன்னதும் சசிகலாவின் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது.

அன்று இரவு.

“”என்ன சசி…இவன் தேன்நிலவுக்குப் போக வேண்டிய நேரத்துல அம்மா அப்பாவோட கோவில் குளம்னு போறானே. நம்மள இனிமே எங்க தனியா அழைச்சுட்டு போகப்போறான்னு உன் மனசுல ஏமாற்றம் இருந்துருக்குமே…” என்று அவன் கேட்டதும் சசிகலா முகத்தில் வியப்பு.

“எதிராளி மனசுல என்ன ஓடுதுன்னு பேப்பர்ல இருக்குறமாதிரி தெரியுமா?…இவ்வளவு கரெக்டா சொல்றாரே…’ என்று நினைத்து எதுவும் பதில் சொல்லாமல் இருந்தாள். எப்படியும் அவனே இதற்கு விளக்கம் சொல்வான் என்று இவளுக்கும் தெரியும்.

“”எங்க அம்மா மட்டுமில்லை…ரொம்ப பேர் இப்படித்தான் பயப்படுறாங்க. அதே மாதிரி மருமகள்களும் நினைக்கிறாங்க.

மெகா சீரியல் வர்றதுக்கு முன்னால மாமியார் – மருமகள் சண்டை இல்லையான்னு கேட்கலாம். வாசல் கதவு இடிச்சுடுச்சு…அதனால மாமியாரை வீட்டை விட்டு அனுப்பனுங்குறதுக்கு மெகாசீரியலும் முக்கிய காரணம். இந்த சூழ்நிலையில மனைவி பக்கம் கணவன் சாஞ்சா பெத்தவங்களுக்கு முதியோர் இல்லம் அல்லது வீட்டு வராண்டா. ரெண்டு பக்கமும் முடிவெடுக்க முடியாம திணறுனா ரொம்ப சீக்கிரம் விவாகரத்துக்கு காரணமாயிடுது.

வேலை பார்க்குற இடத்துல யார் யாரையோ அனுசரிச்சு போறோம். ஆனா நம்மளாட வாழ்க்கையை நிம்மதியாவும் சந்தோஷமாவும் அமைச்சுக்க கொஞ்சம் கவனமா நடந்துகிட்டா போதும். எந்த பிரச்சனையும் வராது.

கல்யாணம் ஆன கையோட அவங்கள கோவிலுக்கு அழைச்சுட்டு போனதால அம்மா வாயிலேர்ந்தே உன்னைத் தனியா கூட்டிட்டு போகணும்னு சொல்லிட்டாங்க. மனைவியை சந்தோஷமா வெச்சுக்குறதுக்கும் யாரோட பர்மிஷனும் தேவையில்லைன்னு நினைக்குற ஆள்.ஆனால் உரசல் வரக் கூடாது பார்” என்று நீண்ட “லெக்சர்’ அடித்தான்..

பெத்தவங்களா, மனைவியோ பிரச்னை பண்ணினா யாராவது ஒருத்தர் பக்கம் சாய்ஞ்சுடாம அந்த சிக்கலுக்கான காரணம்னு பார்த்து அதை சரிசெய்யுற குணத்துடன் இருக்கும் கணவனை நினைத்து சசிகலாவு அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

“”புண்ணுக்கு புனுகு தடவாம காயத்தை ஆறவைக்கிற வித்தையை எங்க கத்துகிட்டீங்க…” என்று சசிகலா சொல்லவும் செய்தாள்.

அவளது கைகளைப் பற்றிக்கொண்ட சுந்தரேசன், “” மனுஷனை மனுஷனா மதிச்சு நேசிக்கணும். ரொம்ப சாதாரணம். மத்தவங்க நம்மள எப்படி நடத்தணும்னு நாம விரும்புறோமோ அப்படியே நாமளும் மத்தவங்கள நடத்தணும். இது ரொம்ப சிம்பிள் கான்செப்ட் ”என்றவனுக்குள் ஐக்கியமானாள் சசிகலா.

- க.சரண் (ஜனவரி 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
எந்தக் காலத்திலும் டைரி வைத்துக் குறிப்பு எழுதும் பழக்கம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய நடைமுறை ஒழுக்கம் என்று நம்புகிறவனல்ல நான் இதை விட வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டிய மனோதர்ம ஒழுக்கங்களையே பெரிதாக நம்புகின்ற என் கண் முன்னால் ...
மேலும் கதையை படிக்க...
தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான இடைவெளியே... பாலம், அது கடந்து பெட்ரோல் பங்க்,புது பஸ்டாண்ட், வொர்க் ஷாப்,அது கடந்து யார் தடுத்தும் நில்லாமல் வந்து விடுகிற ...
மேலும் கதையை படிக்க...
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு பார்ப்பாள். ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் கடிதம் இப்படித் தொடங்கி, அப்படி முடிந்தது... ‘உன் கணவன் இளம்பெண்களைப் பார்த்தால் வழிகிறான். நேற்றுகூட ஒரு அழகியுடன் ஹோட்டலில் சாப்பிட்டான். ஏகப்பட்ட போன் கால்கள்... மனைவிங்கற ஸ்தானம் பறிபோகாமல் பார்த்துக்கொள்! உண்மை விளம்பி’ கடிதத்தைப் படித்த சுதாகர் அதிர்ந்து, வியந்து கேட்டான்... ‘‘என்னடா, ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 உடனே தேவி “அப்படியா செந்தாமு.நீ அவ்வளவு படிப்பு படிச்சு,எல்லா படிப்பிலேயும் முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கியா.எனக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்று சொல்லி செந்தாமரையைக் கட்டிக் கொண்டாள்.உடனே ராஜ்ஜும் “அப்படியாம்மா.நீ இத்தனை படிப்பு ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் டைரி
தூரங்களின் விளிம்புகளில்…
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
கடிதம் – ஒரு பக்க கதை
சேற்றில் மலர்ந்த செந்தாமரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)