Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

நெருப்பு

 

தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான். அவர் உறுதிப் படுத்தினார்.

“ஆமாம் சந்திரன், பெயிண்ட் கடை ராகவ் பாகாயத்துலேர்ந்து மோட்டார் சைக்கிள்ல நேத்து சாயந்திரம் கௌம்பினப்பவே, வழக்கம்போல சரக்கை உள்ளே தள்ளிகிட்டுத்தான் கௌம்பியிருக்கான். காட்பாடி வர்றதுக்குள்ள நடுவுல ஆர்ட்ஸ் காலேஜ் சிக்னல்கிட்டே இருக்குற ஒயின் ஷாப்புல புகுந்து மறுபடியும் கொஞ்சம் ஏத்திகிட்டு வந்திருக்கான். வேலப்பாடி டர்னிங்குல பயங்கர ஸ்பீடுல டூ வீலரைத் திருப்பியிருக்கான். எதுத்தாப்புல வந்த கணியம்பாடி பஸ் மீது வேகம் கொறையாம மோதி, உடம்பு தூக்கி வீசப்பட்டு, கொஞ்ச தூரத்துல போய் விழுந்திருக்கான். ஹெல்மெட் போடற பழக்கம் வேற அவன்கிட்டே இல்லியா, மண்டையில பலமான அடி. ஸ்பாட்டுல அவுட்!”

“அட, கடவுளே!” என்றான் சந்திரன். இவனுக்கு, தானே விபத்தில் சிக்கிய உணர்வில் அடிவயிறு கலங்கியது.

“ஆமாம் சந்திரன், அவனோட அப்பா தேவராஜ் நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல நண்பர். காட்பாடி இலக்கிய மன்றத்துக்குப் புரவலர் வேற. அவர் ஹார்ட் அட்டாக்குல போய் ஆறு மாசம் கூட ஆகலை. இப்ப அவரோட ஒரே பையன் ராகவ் கதை முடிஞ்சிருச்சு. அவனோட இளம் மனைவி ரஞ்சிதா ரெண்டு வயசு கைக் குழந்தையோட கதறுது பாருங்க, அதை என் கண்ணால பார்க்க முடியலை..” என்றார் கவிஞர் குருமணி.

சந்திரன் அதிர்ந்து போய் பேசாமல் நின்றான்.

கவிஞர் தொடர்ந்தார். “தம்பி சந்திரன், சாயங்காலம் நாலு மணிக்கு எடுக்கறாங்களாம். பாலாற்று வடகரை மயானத்துலேதான் எரியூட்டறாங்களாம். நீங்க ராகவ் வீட்டுக்கு வந்துடுங்க. நெருங்கின நண்பர் மகனாச்சே. கூடப் போய் காரியம் முடியற வரை இருக்கறதுதானே மரியாதை?”

“குருமணி சார், நான் மூணு மணிக்கெல்லாம் வந்துடறேன். நீங்க வந்துடுவீங்கல்லே?”

“நிச்சயமா. நீங்க வரும்போது அங்கே இருப்பேன் தம்பி..” என்றார் கவிஞர்.

சந்திரனுக்கு நெஞ்சுக் குழியில் பந்து போல் எதுவோ அடைத்துக் கொள்ள மனசு வலித்தது.

லாங்கு பஜாரில் மாலை ஒன்றை வாங்கிக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து விருதம்பட்டு காந்தி நகருக்குப் போனான் சந்திரன்.

குளிர்ப் பெட்டிக்குள் இளைஞன் ராகவ் சிரித்த முகத்துடன் மீளாத் துயில் கொண்டிருக்க, பெட்டிக்கு மேல் ரோஜா மாலைக் குவியல்.

பாகாயத்தில் பிரபலமான பெயிண்ட் கடை வைத்திருந்தவர் தேவராஜ். பெரிய செல்வந்தர். அவருடைய மகன் ராகவ், சுறுசுறுப்பான இளைஞன். பெரியவர் மறைந்து விட்ட கவலை தீருவதற்குள் இவன் கதையும் முழ்்ததை நம்ப முடியாமல் ராகவின் அம்மா மீனாட்சி ஒரு ஓரமாக தலைவிரி கோலமாக, அழுது மாளாமல், சோகத்தின் பிரதிபலிப்பாய் துவண்டு காட்சியளித்தாள். ராகவின் மனைவி, கைக் குழந்தையுடன் ஒரு மூலையில் பேயறை பட்டவள் போல வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்கள் வரும்போதெல்லாம் அங்கு அமர்ந்திருந்தவர்கள் குரலை உயர்த்தி அழுதார்கள். சந்திரனும் கவிஞர் குருமணியும் மாலையை கண்ணாடிப் பேழை மேல் சார்த்தி, பூவாய் பெட்டிக்குள் இருந்தவனுக்குக் கைகூப்பி வணக்கம் செலுத்திவிட்டு, சிறிது நின்று பிறகு வெளியே வந்தார்கள்.

சரியாக மாலை ஐந்து மணிக்கு ஊர்வலம் கிளம்பியது. பெண்கள், குழுவாக தங்கள் கைகளைப், பக்கத்தில் இருந்த பெண்களின் தோள்மீது போட்டு ஒப்பாரி வைத்தார்கள். ரஞ்சிதாவும் ராகவின் சகோதரிகளும் மண்ணில் விழுந்து புரண்டு அழுதார்கள்.

புஷ்ப அலங்காரங்களுடன் ராகவின் உடல் பாலாற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கூடச் சென்ற கூட்டத்தில் கவிஞர் குருமணியும் சந்திரனும் இருந்தார்கள்.

பாலாற்றங்கரை மயானத்தில் விறகும் வரட்டியும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது உடம்பைக் கிடத்தி, மந்திரங்கள், சடங்குகள்: நடந்தன.

வந்த உறவினர்கள், நண்பர்கள் சிதறி நின்றும், மேடைகளில் உட்கார்ந்தும் காத்திருந்தனர். கவிஞர் குருமணி சந்திரனைச் சற்றுத் தள்ளி அழைத்துப் போய் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி பேசினார்.

“நானே ஒரு வாரமாய் சோகத்துல இருக்கேன் சந்திரன். போன வருஷம் என் மகள் பூங்கொடியைப் புதுச்சேரியில கட்டிக் கொடுத்திருந்தோம்ல, அங்கே ஒரே கொடுமை. என் மாப்பிள்ளை மகாத்மா காந்தி ரோடுல ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கான். கடையை விஸ்தரிக்க உங்கப்பன்கிட்டே அஞ்சு லட்ச ரூபா வாங்கிட்டு வான்னு என் பொண்ணுகிட்டே சொல்லி, சித்திரவதை பண்ணியிருக்கான். எங்கப்பா ஸ்கூல் வாத்தியாராக இருந்து ரிட்டயர் ஆனவர். பென்ஷன், கிராஜுவிட்டி, பிராவிடண்ட் பண்ட் பணம் எல்லாத்தியும் போட்டுத்தான் சீர் சீதனம்லாம் கொடுத்து என்னை உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சார். இப்ப அஞ்சு லட்சம் ரூவாய்க்கு அவர் எங்கே போவார்னு எம்மக சொன்னதுக்கு அவ மண்டையைச் சுவத்துல மோதி, மண்டை உடைஞ்சு இப்ப ஜிப்மர் ஆஸ்பத்திரியில இருக்கா. போய்ப் பார்த்துட்டு வந்தேன். ஈவு இரக்கம் இல்லாம சம்பந்தி வீட்டார் நடந்துக்கறாங்க. போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு பார்த்தேன். எம்மகளும் மாப்பிள்ளையும் அப்புறம் நிரந்தரமாப் பிரிய வேண்டி வந்துடுமோன்னு பயந்து ஆறுதல் சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு ரெண்டு லட்சமாவது தயார் பண்ணிக் கொடுத்தால் அந்தப் பிசாசுக் குடும்பம் கொஞ்சம் எம்மகளைக் கொடுமைப் படுத்தாம இருப்பாங்களேன்னு பணத்துக்கு அலைஞ்சுகிட்டு இருக்கேன் சந்திரன், இந்தக் கவலை ஒரு பக்கம், நம்ம தேவராஜ் மகன் மோட்டார் சைக்கிளை பஸ் மேல மோதி விபத்துல போய்ச் சேர்ந்துட்ட சேதி இன்னொரு பக்கம்… மனசு தாங்கலை சந்திரன்…” பொருமினார் குருமணி.

“வாய்க்கரிசி போடறவங்க போடலாம்” என்று சிலர் குரல் கொடுத்தார்கள். இவர்கள் இருவரும் சிதை முன் போய் அரிசியைப் போட்டுத் திரும்பினார்கள்.

கடைசியாக, திறந்திருந்த ராகவின் முகத்தைச் சில வறட்டியால் மூடினார் மயான பூமித் தொழிலாளி. எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தைக் கொண்டு சிதை பற்றவைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

செந்தணலும் புகையும் மேலெழுந்து திகு திகுவென்று எரிய ஆரம்பித்த போது, கவிஞர் குருமணி மடேல் மடேல் என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அலறினார். “ஐயோ, தேவராஜு, ஒன்னைப் பறிகொடுத்த துக்கம் மறையறதுக்குள்ள உன் பிள்ளையைப் பறி கொடுத்துட்டமேய்யா! இனிமே நாங்க என்னய்யா செய்வோம்?”

சந்திரனோடு சேர்ந்து நாலைந்து பேர் குருமணியை இழுத்துப் பிடிக்காமல் இருந்திருந்தால் கொழுந்து விட்டு எரிகிற சிதையில் போய் விழுந்திருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

இறந்து போன ராகவின் மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று ஒரு பெரிய உறவுக் கூட்டமே அங்கு இருந்தாலும் குருமணி போல யாரும் அலறவில்லை, அழுது குமுறவில்லை, துடிக்கவில்லை…

“ஐயோ ராகவ், இந்தச் சின்ன வயசுல போயிட்டியே ராஜா, போயிட்டியே!” என்று உரத்த குரலெடுத்து அழுதார் குருமணி.

அவருடைய கதறல் மற்றவர்களை வியப்புடன் கவனிக்க வைத்தது. ஆனால், சந்திரனுக்குப் புரிந்தது. அவர் அழுவது இறந்து போன ராகவை நினைத்து அல்ல, புதுச்சேரியில் மருமகனால் கொடுமைக்கு ஆளாகி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் மகளை நினைத்தும், அவள் வாழ்வு மலர, அவர் புரட்ட வேண்டிய சில லட்ச ரூபாய் தேவையை நினைத்தும்தான்.

மனதை அரிக்கும் தன் நெருப்புக் கவலைதான், ராகவ் எரியும் சிதை தரும் சோகத்தால் தூண்டப்பட்டு அவரை அவ்வாறு துடிக்க வைத்தது என்பது சந்திரனுக்கு நன்றாகப் புரிந்தது.

அவரை அணைத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான் சந்திரன்.

(ஆனந்த விகடன் வார இதழ்) 

தொடர்புடைய சிறுகதைகள்
அதிர்ஷ்டம் என்பது சில அடிகள் வித்தியாசத்தில்தான் தவறி விடுகிறது.. அல்லது கிடைத்து விடுகிறது. அழகேசனால் நம்பவே முடியவில்லை. உண்மைதானா? உண்மைதானா? கண்ணில் படுகிற ஒவ்வொருவரையும் வலுவில் அழைத்து, அதுபற்றிக் கூற வேண்டுமெனற பெருமிதத்துடன் கூடிய ஆவல், பரபரப்பு, மகிழ்வுத் துடிப்பு..! தமிழில் வெளிவரும் ...
மேலும் கதையை படிக்க...
கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு வரும் ``ஆதி டீலக்ஸ் பஸ்சில் நம்ம ஆபீசுக்கு புது ஹெட்கிளார்க் பஞ்சநாதம் வர்றார்.அவரை ரிஸீவ் பண்ணி நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸில் சேர்க்க வேண்டியது உம்ம பொறுப்புய்யா!'' என்று எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷன் ரங்காச்சாரி, ஸ்டோர்ஸ் தங்கப்பனிடம் முந்தின ...
மேலும் கதையை படிக்க...
அந்த அலுவலகத்தின் ரிக்கார்டு பிரிவில், உளுத்து, பழுப்பேறிய கோப்புகள் வைக்கப்பட்ட மர ஷெல்ஃபு வரிசையை ஒட்டி நின்றிருந்த ஐந்து இரும்பு பீரோக்களில், நடுவில் இருந்த ஒரு பீரோ மட்டும் வல்லிசாய் காணாமல் போயிருந்தது... ஒரு மாத லீவு முடிந்து ஹெட்கிளார்க் அன்று காலை ...
மேலும் கதையை படிக்க...
நிலக்கடலைக் காட்டில் ஐந்தாறு பெண்கள் நிலக்கடலைச் செடியைக் கொத்துக் கொத்தாகப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல முற்றின கொட்டைகள். ``இந்தப் பூமிக்கு நிலக்கடலை நல்லா வெளையும்... இந்த வச எச்சாவே வெளைச்சல் கண்டிருக்கு'' என்று வரப்பில் மீசையை முறுக்கியபடி நின்று சொன்னார் ராமசாமி ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத் துழாவினாள். கஞ்சி காய்ச்சலாம் என்றால் ஒரு பொட்டுத் தானியம் கூடச் சிக்கவில்லை. முந்தின நாள் இரவு, பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தது ...
மேலும் கதையை படிக்க...
எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று சொர்ணபுரி என்ற பெயர் கொண்ட அந்தக் கிராமத்துக்குக் கார்கள் வருவதுண்டு. சின்னக் கிராமம் என்றாலும் கிழக்கே சிவன் கோயில், மேற்கே பெருமாள் கோயில் ஊர் எல்லையில் அன்ன பூர்ணேஸ்வரி என்று ஒருகாலத்தில் பிரசித்திபெற்ற மூன்று கோயில்கள் அங்கு ...
மேலும் கதையை படிக்க...
காரை ஷெட்டில் விட்டுவிட்டு ஆனந்தர் மெல்ல நடந்து பங்களாவுக்குள் நுழைந்தபோது, பாலகாண்டம் நடந்து கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து மெய்மறந்து செவியுற்றுக் கொண்டிருந்த அவர் மனைவி பாலம்மாளையோ, அடக்க ஒடுக்கமாக நாற்காலியில் அமர்ந்து மிகவும் இலயிப்போடு எஜமானியம்மா வுக்கு இராமாயணம் படித்துச் சொல்லிக் ...
மேலும் கதையை படிக்க...
எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து முடிய இரவு எட்டு மணி ஆகி விட்டது. வழக்கத்தை விட அன்று ஒருமணி நேரம் தாமதம் என்று உணர்ந்தான் சதீஷ். அது ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். கிராமமும் இல்லை, பெரிய டவுனும் இல்லை. அந்த மாதிரி சின்னச் சின்ன ...
மேலும் கதையை படிக்க...
ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான். பாதிக்கு மேல் பண்டம் பாடிகள் மேய்க்கிற வறண்ட பூமியானாலும், மிச்சமிருந்த பூமியில் நல்ல விளைச்சல் காணும். கன்னியாத்தா கோயிலை ஒட்டியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
சத்தியங்கள் ஊசலாடுகின்றன…
சிக்கன் 88
நடுவுல ஒரு பீரோவைக் காணோம்!
தாகம்
கிழவி
பசி
இராமர் பதித்த அம்பு!
மசால் தோசை
நரிகள்
ஒரு நாள்… மறு நாள்!

நெருப்பு மீது ஒரு கருத்து

  1. தி.தா.நாராயணன் says:

    சே! அருமைங்க. களமும்,கருவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)