நெஞ்சில் கனத்துடன் ஓர் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 11,954 
 

வெகு நாட்களுக்கு பிறகு என் நெஞ்சம் கணப்பதை இப்பொது உணர்ந்து கொண்டிருக்கிறேன். தயக்கம் பயம் சோகம் பிரிவு வரும் நேரங்களில் இந்த கணம் எல்லோரையும் போல் என்னையும் தாக்கும். ஆனால் இவை எல்லாம் மறந்தநிலையில் மனதில் நினைத்ததை பேச எப்பொதும் எனக்கு நிழலாய் தொடர என்னுள் சந்தோஷத்தை விதைத்த நெஞ்சக்கணம் மறக்கடித்த ஒரு அழகான உறவில் விரிசல்களின் சாயல்கள் தெரிவதை என் மனம் காட்சியாய் வெளிபடுத்தியதால் அக்கணம் இப்போது என்னை மறுபடியும் சூழ்ந்துகொண்டது.

அந்த விரிசலின் காரணம் நானே என்று என்னுள் தோன்றும்போதெல்லாம் பாரம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உண்மையின் சுவை சிலவேளை கசக்கும் என்னும் கூற்று இங்கு என்னுள் நிஜமாகிகொண்டிருக்கிறது,

உனக்கும் எனக்கும் இடையில் வளர்ந்த உறவின் பெயரை வரையறுத்து கூறமுடியவில்லை. காதலின் பெயரை நம் உறவிற்கு சூட்ட விருப்பம் இல்லை. சிலநேரங்களில் அது தோன்றினாலும் வேண்டாம் என்ற பதிலும் அதனோடு சேர்ந்தே வந்தது. காரணம் காதல் நமக்குள் ஏற்படுத்திய வலிகள்.சரி நட்பு என்று சொன்னாலும் அதை மனம் முழுதாய் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நட்புக்கும் காதலுக்கும் இடையில் நூலளவே இடைவெளி என்று சொல்வதுண்டு. நாம் அந்த நூலில் ஊஞ்சல் கட்டி அமர்ந்தோம். காதலையும் நட்பையும் ஊஞ்சலாட்டதில் அங்குமிங்கும் அவ்வப்போது தொட்டுவந்ததொடு சரி.

துக்கத்தில் தோள் சாய மனபாரத்தை மடியில் இறக்கி வைக்க எவரும் இல்லாமல் நம்மை நாமே தேற்றி கொண்டிருந்த வேலையில் தான் நம் இருவருக்குமான சந்திப்பு முகநூல் வழியாய் கிடைத்தது. இருவருமே நமக்குள் இருந்த துயரங்களை அவசர அவசரமாக எழுத்துக்களின் பரிமாற்றத்தில் இறக்கி வைத்தோம். இருவருக்குமான ஒரே அலைவரிசை நம்மை வெகுவிரைவில் இணைத்தது. அதே அலைவரிசை தான் இன்று நம்முள் பிரிவினையை வளர்க்கிறதோ….???

பலதருணங்களில் அடிக்கடி பார்த்துக்கொள்ளும் சமயம் இருந்தபோதுகூட நமக்கு தெரியவில்லை நம் இருவருக்குள் இந்த உறவு பிறக்கும் என்று. இருவரும் ஒரே கல்லூரியில் பயின்றோம் என்பதை தவிர வேறு எந்த ஒரு காரணநிகழ்வும் இல்லாமல் தான் நம் சந்திப்பு நேர்ந்தது.

மூன்று வருடங்கள் ஒரே கல்லூரியில் பக்கத்து பக்கத்து வகுப்புகளில் இருந்தும் உன்னை நானோ என்னை நீயோ பார்த்ததாய் சிறு ஞாபகம் கூட இல்லை. படிப்பு முடிந்து மூன்று வருடங்கள் கழித்தே நமக்குள் அறிமுகங்கள். இன்றுடன் நம் உறவிற்கு கிட்டத்தட்ட இரண்டு வருட வயதாகிறது. ஆனால் நாம் நேருக்கு நேர் பார்த்து பழகியது வெறும் எட்டரை மணிநேரங்களே.

கல்லூரியின் ஞாபகங்களை பரிமாறும் நேரம் மறுபடியும் கல்லூரிக்கே சென்ற மாயை. என் அருகில் அமர்ந்து ஒவ்வொருவரையும் எனக்கு அறிமுகம் செய்வதுபோல் “அட இவளை எனக்கு தெரியுமே” என்று நான் சொல்வது போல் நமது முகநூல் எழுத்துக்கள் நெருக்கத்தை கொடுத்தது.

என் மாஜி காதலி உனக்கு நெருங்கிய தோழியாய் இருப்பதை கேட்கும்போது என் காதல் விளையாட்டுக்கள் கண்முன்னே வந்து சென்றது. உன் நெருக்கத்தால் அதே காதலி தந்த வலிகளும் வேதனைகளும் அவளுடன் சேர்ந்து மறைந்தன. உனக்கும் இந்த நிகழ்வுகள் என்னால் நிகழ்ந்தது என்று நீ கூறும்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லாமல் போனது.

உன்னை நானும் என்னை நீயும் மாறி மாறி தாங்கிகொண்டோம். சந்தோஷங்களை பகிர்ந்துகொண்டோம். சந்தோஷம் மட்டுமே நம் இருவருக்குள் இருக்கும் என்கிற கண்மூடித்தனமான அதே நேரம் திடமான நம்பிக்கை கொண்டோம். இன்று அதில் பிரச்னை புகுந்து ஆணிவேரையே அசைக்க பார்க்கிறது. இதற்கு காரணம் நான் செய்த தவறுகள் என்பதும் எனக்கு தெரிகிறது ஆனால் அதற்கு பரிகாரம் என்னவென்று தான் தெரியவில்லை. அப்படியே நான் செய்வதாய் இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் நீ இல்லை என்பதே நிதர்சனம்.

எல்லாம் நான் புது வீடு மாறியபோது ஏற்பட்டது. புது வீடு அதன் பக்கத்தில் இருந்த என் பழைய நண்பர்கள் என்று அதனுள் கொஞ்சம் அக்கறை எடுத்தால் உனக்கான நேரத்தை என்னை அறியாமலே குறைத்துக்கொண்டேன் தவறு தான்.

“என்னடா இப்பலாம் மொத மாத்ரி எண்ட பேச மாட்ற” சோகமாய் நீ ஆரம்பித்த போதே புரிந்திருக்க வேண்டும் எனக்கு.

“அப்படி எல்லாம் இல்லையே.. கொஞ்சம் பிஸி அவ்ளோ தான்..”

“எனகென்னமோ அப்டி தோனல. ஆர் யூ ட்ரயிங் டு இக்னோர் மீ..”

“நோ பக்கி. கொஞ்சம் ப்ரெண்ட்ஸ் ரூம்க்கு வந்துர்றாங்க அதான்… “

“ம்ம்ம்.. அப்புறம்..”

“நம்ம செல்லக்குட்டிட்ட வேற அடிக்கடி கால். அவட்ட பேசவே நேரம் சரியா இருக்கு..”

“இப்போ என்ன சொல்ல வர்ற..”

“உன்கிட்டயே எல்லா நேரமும் பேசிட்ருக்க முடியாது.. சோ புரிஞ்சுக்கோ என்ன..” என எகத்தாளமாய் உன்னை வம்பிழுக்க நான் நகையாய் பேசிய இந்த கடைசி பேச்சு தான் நம் உறவிற்குள் இடியாய் இறங்கும் என சத்தியமாய் தெரியாதெனக்கு.

இப்படி நான் பேசிக்கொண்டிருக்கும்போதே அணைக்கப்பட்ட உனது கைபேசி பின்பு எனது அழைப்பை ஏற்கவே இல்லை. மாறாய் குறுஞ்செய்திகளாகவே பதில் தந்தது…

சிறு பிரிவு உனக்கு ஏற்படுத்திய வலியை இப்பொது பெரிதாய் கிட்டத்தட்ட ஆறு மாத காலமாய் இருவரும் பெரிதாய் உணரந்து கொண்டிருக்கிறோம். நான் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்ற உன் நம்பிக்கையை நான் கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டேன். மிகவும் உடைந்துபோன உன்னை தேற்றும் வேலையில் நான் கோபம் கொண்டேன் கிண்டல் செய்தேன். இதிலும் என் தவறு மிகப்பெரிது தான்.

ஆனால் இதற்கு நீயும் ஒரு காரணம். முன்பு நான் கோபமோ கிண்டலோ செய்தால் அதில் உன் சோகத்தை மறந்தாயோ இல்லையோ எனக்காய் உன்னை மாற்றிக்கொண்டு சமாதானம் ஆனாய். சில மணிநேரங்களில் அந்த சோகத்தை மறந்தும் போனாய். அது போல் இந்த தடவையும் நடக்கும் என்று நான் நினைத்து செய்த தவறுகள் இன்னும் உன்னுள் வலியை தந்தது. அது உன்னுள் மட்டுமல்ல என்னுள்ளும் தந்தது.

இதோ இப்பொழுது உனக்காய் என்னை முழுதும் மாற்றிவிட்டேன். அது உனக்கும் தெரியும். ஆனால் அதை நம்பும் நிலையில் தான் நீ இல்லை. என்ன செய்வதேனும் புரியவில்லை. சில வேலைகளில் நம்பினாலும் நம்பாதது போல் இருக்கிறாய். எல்லாம் செய்தாகி விட்டது என்னுடன் நீ பேசினால் சமாதானம் செய்துவிட முடியும் என்று நான் நம்பியும் அதற்கான வாய்ப்பை நீ தருவதற்கு தயாராய் இல்லை.

என்னுடன் பேசாமல் போகிற அளவுக்கு நான் தப்பானவனா. அப்படியே இருந்தாலும் என்னை மன்னித்து உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதா. நான் இங்கு கவலை இல்லாமல் தான் இருக்கிறேன் என்று நீயாய் நினைக்கிறாயே அது உண்மை என உன்னால் என் மீது சத்தியம் அடித்து கூற முடியுமா.

நீ என்னை வெறுப்பது போல நடித்தால் நான் உன்னை வெறுத்துவிடுவேன் என்று நினைத்தாயா. எனக்கு திருமணம் என்பதை சந்தோஷமாய் ஏற்றவள் நீ. அப்பெண்ணை நமக்குள் இருக்கும் உறவில் ஏற்றவள் நீ. இன்று அவளை காரணமாய் சொல்லி உன்மீது எனக்கு வெறுப்பு ஏற்படுத்திவிடலாம் என்று நினைத்து நீ சொல்லும் வார்த்தை ஒன்றிலும் உண்மை இல்லை என்று அப்பட்டமாய் எனக்கு தெரியும்பட்சத்தில் நீ நினைத்து போலே வெறுப்பு வந்தது ஆனால் உன்மீது அல்ல என்மீது. அவளை உன் குழந்தை என சொன்னவள் நீ.

உன்னை அவளிடம் விட்டுக்கொடுத்து விட்டதாக கூறுகிறாய். வலி மிகுந்த வார்த்தை பிளவை ஏற்படுத்தும் என்று நான் எப்போதோ உன்னிடம் விளையாட்டாய் சொன்ன போது எனக்கு புரியவில்லை.

என்னை வெறுக்காமல் என்னை பிரியவும் முடியாமல் என்னிடம் வந்து விடலாம் என்றால் நான் சொன்ன வார்த்தையினால் நெருங்கவும் முடியாமல் நீ தவிக்கிற ஒவ்வோர் தவிப்பும் நீ அடைகிற ஒவ்வோர் அவஸ்தையும் என்னுள் முள்ளாய் இறங்குகிறது.

அதை நினைத்து நினைத்து இன்று உன்னை தேற்றிவிடலாம் நாளை உன்னை மாற்றிவிடலாம் என்று நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்குகிறது.

எனக்கு உன்மேல் வெறுப்பு ஏற்பட நீ செய்யும் விஷயங்கள் எதிலும் நீ என்னை வெறுப்பதாய் தெரியவில்லை, நீ என்னை வெறுக்க வேண்டாம் என்று நினைக்கும்போது உன்போல் தானே நானும் எப்படி அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறாய். நான் என் வருங்கால மனைவியிடம் சரியாக பேசவில்லை என நீயாய் சொன்னாய் அதற்கு காரணம் நீ என நீயாய் நினைத்து கொண்டாய்.

என் வருங்கால மனைவிக்காக என்னை விலக எத்தனித்து நீ செய்யும் அனைத்தும் நீயும் இங்கு என்னை விட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறாய் என்பதை ஏன் விளக்கவில்லை.

என் மனைவியாய் வருபவள் பற்றி என்னை விட உனக்கு தெரியும் தெரிந்தும் ஏனோ என்னை பிரிய நினைக்கிறாய். அதில் உனக்கு சந்தொஷமேன்றாலும் சரி என்று வேதனையுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால் உண்மை அதுவல்லவே.

ஆதலால் உன்னை நான் பிரிவதாய் இல்லை. உன்னை நம் பழைய சந்தோஷத்திற்குள் இலுக்காமல் விடுவதாகவும் இல்லை. அதற்கான படிகளில் நான் சறுக்கினாலும் எழுந்து வருவேன். அனைத்தும் கடந்து போனாலும் என் முயற்சி என்னை கடக்காது.

நீ ஒருநாள் நம் உறவிற்குள் வருவாய் என்பதில் சிறிதும் சந்தேகமில்லாமல் இருக்கிறேன். மன்னிப்பு கேட்கும் அருகதை நான் இழந்து விட்டேன் என்பது தெரியும் ஆனால் மன்னிக்கும் தன்மை உன்னிடம் இருந்து போகவில்லை என்பதை மட்டும் இன்னும் நம்பிகொண்டிருக்கிறேன்

இப்படி உன் ஜாங்கிரி (நீ என்னை செல்லமாய் கூப்பிடும் சொல். அப்டி நீ என்னை அழைத்து பல நாட்கள் ஆகிவிட்டது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *