கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 9,437 
 

ஏதோ சிறைவாசம் போனமாதிரி ஜந்து வருடங்களை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு ஊர் வந்த என்னை அந்த சி ரி பி பஸ் விட்டு விட்டு செல்கின்றது.

“எப்படியாவது நாட்டுக்குப்போகவேண்டும்”கடைசியாக விமானத்தில் ஏறி சீட்டில் அமரும் வரைஇருந்த அவா ஊரைக்கண்டதும் மேகக் கூட்டத்துள் தொலைந்த நிலவின் கதியாக…

சீ ரி பி விட்ட இடத்திலிருந்து ஒரு முக்கால் மைல் சென்றால்.. கடைசியாக வீட்டில் இருந்து வந்த கடிதத்தில்…”வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது நம்மட வீட்டைப்போல ஒரு வீடு நமது ஊரிலேயே கிடையாது”… இப்படியாக தங்கைதான் எழுதி இருந்தாள். இந்த வீட்டை அடைய நான் பல குறுக்குத்தெருக்களை சந்திக்கவேண்டீருக்கும்.

முதலில் நான் சந்திக்கும் நாலாம் குறுக்குத்தெரு எனது திசையில் முதலாம் குறுக்குத்தெருவாக கடந்து விடுகிறது .தெருவிற்கு பெயர் போட்டவன் இங்கிருந்து ஆரம்பித்திருந்தால் இதை முதலாம் குறுக்காக குறிப்பிட்டிருக்கக்கூடும். ..” அவன் அப்படி செய்யாமைக்கு சிலவேளை அவன் மனைவி…”.நம்மட வீட்டிலிருந்து மெயின் றோட்டுக்கு போவதற்கிடையில் முதலாவதாக வருகிற குறுக்குத்தெருவை முதலாம் குறுக்குத்தெரு என்று போட்டால்தான் நான் நீங்க சொல்றமாதிரி…”இப்படி ஏதாவது சரசம்கூட செய்திருப்பாள்.எது எப்படியோ நான் அவன் மனைவிக்கு எதிரானவன் அல்லது எதிர்கருத்துக்கொண்டவன் என்பது…தற்போதய முதலாம் குறுக்குத்தெருவுக்கு நான் மனதை பறிகொடுத்தவளின் பெயரைத்தான் போடவேண்டுமென நினைத்தேனோ அந்த வினாடியில்…நான் அவன் மனைவிக்கு எதிரிதான்…சும்மா போங்கள்.

என்னைப்போல் மனதை பறிகொடுத்தவர்கள் எல்லாம் நினைப்பார்களாயிருந்தால் பல புள்ளிகளின் மனைவிகளை எதிர்க்கவேண்டிவரும்…பல புதிய பாதைகள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும்…சில பாதைகள் சிலரின் வீட்டுக்குள்ளாலும் போகக் கூடும்…இன்னும் சற்றுசிந்தித்தால் ஊரே ஒரு வெளியாக இருக்கும்,அப்போது “மயானம்” என்றுகூட பெயர் சூட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
என்னைக் கண்டு..வாசல் கூட்டிக்கொண்டு நின்ற சுஸானா வீட்டுக்குள் ஓடிச்சென்றது எனக்கு நன்றாகதெரிகின்றது, வீட்டுக்குள்….அவள் முதலில் தரிசிக்கும்,தன் கணவனிடமோ அல்லது தன் தாயிடமோ இந்நேரம் என்னைப்பற்றி சொல்லியிருப்பாள் , எனக்கு…அவள் ,முதலில் அவளது தங்கசியிடம் சொல்லவேண்டும் என்ற,ஒரு சின்ன ஆசை,எனது விருப்பங்களும் ஆசைகளும் தொண்ணூறுவீதம் நிறைவேறுவதில்லை என்பதற்கு சுஸானா அவளது கணவனிடம் பேசிக்கொண்டிருப்பதே ஒரு சின்ன உதாரணம்.

நிறைவேறாத கற்பனைகளுக்கு மன்னனாகிவிட்ட நான்,இன்னும் கிடுகு களையா வேலிகளை ஏதோ ரா ணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொளும் தோரணையில் நடைகளை எண்ணிக்கொண்டிருக்கின்றேன் ,பின்னால் …எனது செண்ட் வாசனையில் மூக்குடைபட்டுப்போன சில சின்னஞ்சிறுசுகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.விஞ்ஞானிகள் சொல்வதுபோல் நான் ஆரம்பகால மனிதனாக இருந்திருந்தால் …”பிரயானக்களைப்பாக இருக்கிறது கொஞ்சம் வாலைத்தூக்கிக்கொண்டுவாருங்கள் “இப்படி இந்த சிறுசுகளிடம் சொல்லியிருப்பேன்.

ஊரில் இருந்தபோதே என்னக் கண்டு குரைத்து பழக்கப்பட்டுவிட்ட மர்ழியா வீட்டு நாய்,இப்போதும்கூட என்னைக் கண்டு பலமாக குரைத்துக்கொண்டு கேற்றுக்குள் மறைந்துகொள்வதில் எதுவித மாற்றமும் இல்லை என்னைக் காணாவிட்டால் அதற்கு குரைக்கக்கூட தெரிந்திருக்க மாட்டாது என்பதை புரிந்துதானோ என்னவோ அது நன்றி சொல்லும் பாவனையில் சில வேளை குரைத்துக்கொண்டு கேற்றுக்குள் மறைந்துவிடுவதும் உண்டு.சில வேளை ஓடிப்பழகும் ஆசையில்தானோ என்னவோ அது என்னைத் துரத்த முயல்வதும் உண்டு,அது குரைக்க,நான் “அடி..அடி…”என்று சொல்லிக்கொண்டு ஓட வேண்டும் இப்படி ஒரு ஆசை அதற்கு,எப்படியோ எனக்கு ஊரில்…எதிரிகள் இல்லா குறைக்கு மர்ழியா வீட்டில் அதை நன்கு வளர்த்திருக்கிறார்கள்.
அதோ கைக்கெட்டிய உயரத்தில் சிவப்பாக ஒரு பெட்டிதெரிகின்றதே ,அந்தப் பெட்டிக்குள்..

எத்தனை சரித்திரங்கள்தான் ஒளித்திருக்கின்றன .ஒரு காலத்தில் சிவப்பு பெட்டிகளை கண்டாலே மாலை சூடவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன்.

அதோ பெட்டிதான் எங்கள் கிராமத்தின் தபாலகம்,ஊருக்குள் தபாற்கந்தோர் திறக்கும் முடிவைக்கைவிட்டு விட்டு இப்படி அந்தக் சந்திக்கடையில் தபால் தபால் பகுதியினர் கொழுவி விட்டார்கள்.அதை முதன் முதலாகக் கொழுவியபோதுதான் எங்கள் ஊர் “எம் பி” க்குக் கூட ஒரு வரவேற்பும்,கழுத்தில் பூமாலைகளும் அந்த சந்தியில் காத்திருந்தன. அன்று பட்டாசு சத்தங்களுடன் கொழுவிவிட்டதுதான்,அடுத்த நாள் சந்திக்கடை முதலாளி அதை தரையில் இறக்கி வைத்துவிட்டார் .

நாளடைவில் …கடையில் தேனீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் இருப்பிடமாகவும் ,சில வேளை கரம் விளையாடுவதற்கோ,காட்ஸ் விளையாடுவதற்கோ உயரம் தெவைப்படும் போதும் ,இந்த தபால் தபால் பெட்டிதான் கைகொடுக்கும்.காலையில் கடை திறக்கும் நேரம் வரும் வரையும்,கடை திறக்காமல் போகும் நாட்களிலும்தான் அந்தப் பெட்டி உயரத்தில் இருக்கும்.மற்ற நேரங்களில் அந்தப் பெட்டியின் சேவை கடை முதளாளிக்கு அத்தியாவசியமாக ப் போய்விட்டதில் தபால் பகுதியினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
“2 பி எம்” என கறுப்பு மையால் தபால் எடுக்கும் நேரத்தை அப்பெட்டியில் குறிப்பிட்டிருந்தபோதும்,அந்த நேரத்தில் கரம்,அல்லது காட்ஸ் விளையாட்டுக்கள் நடைபைபெற்றுக்கொண்டிருந்தால் தபால் எடுக்கவரும் காக்கிச்சட்டை விளையாட்டுக்கு :டிஸ்டொப்” பண்ணக்கூடாது என்ற கரிசனையில் அடுத்த நாளைய “2 பி எம்” முக்கு வருவதும்,சில வேளை விளையாட்டு வீரர்களின் சிகரெட்டுகள் கூட காக்கிச் சட்டைக்கு டாட்டா காட்டி விடுவதும் கேட்பார் இல்லாத ஒரு நடைமுறையாகி விட்டது.”இப்படி எல்லாம் நீங்கள் நடந்து கொள்வது தேசத் துரோகம்”…இப்படி விளையாட்டு வீரர்களிடம் சொல்வதற்கு நான் பல முறை முயற்சித்து, வீரர்களின் முறுக்கு மீசைக்குப்பயந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

என்னதான் ஊழல்கள் நடந்தாதாலும் எனக்கு அந்தப்பெட்டியைக் கண்டாலே போதும் ,அதிலும் ஜெஸிமா வின் தம்பி அந்த கடைப்பக்கம் வந்தாலே…அவன் நேயர் விருப்பங்களுக்கு அனுப்பும் தபால் அட்டைகளைகூட எனக்குத்தான் ஜெஸிமா …சொல்லியிருப்பாள் என்ற கற்பனையில் சூடான பிளேண்டிக்கு ஓடர் போட்ட நாட்கள்தான் எத்தனை.?

ஜெஸி..சினிமா நடிகைகள் தங்கள் பெயரை சுருக்கி விடுவது போல் நானும் ஜெஸிமாவிற்கு ஜெஸியாக சுருக்கி அவளுக்கு ஒரு புதிய பெயரை வைத்துவிட்டேன் .அவள் பெற்றோர்கள் என்மீது வழக்கு தொடுக்காவிட்டால் சரிதான்.

ஜெஸியுடன் அடிக்கடி நேரில் கதைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் இந்த தபால் பெட்டியின் சேவை கடை முதலாளியைவிட எனக்குத்தான் அவசியமாக இருந்தது.

சும்மாவா…ஒரு முறை …”உன்னைக் காணாத போதெல்லாம் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு”…இப்படி நான் எழுதுவதற்கு நினைத்துகொண்டிருந்தபோதுதான் முத ன் முதலாக ,அவள்..”உன்னை” என்ற இடத்தில் “உங்களை” என்று என்னைக் குறிப்பிட்டு ஒரு குறுகிய (ஆனால் எனக்கு பெரிய) கடிதம் அனுப்பியிருந்தாள்.அன்றுமுதல் ஆரம்பித்த தபால் சேவைக்கு வேறாக ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும்.அல்லது உலக காதலர்களின் நினைவாக முத்திரை வெளியிடும்படி ஆலோசனை சொல்ல வேண்டும்.
நாளடைவில் எங்களுக்குள் கடிதங்களின்ல்தான் எதை எழுதுவது என்ற ஒரு வசனத்தட்டுப்பாடு ஏற்பட்டதின் பிரதிபலிப்பாய் வீட்டில் ஒரு திகதியில் “என்ன கறி” என்று கேட்டு எழுதும் அளவிற்கு கடிதங்களும் சிறுத்துப்போய்விட்டன,எப்படி இருந்தபோதும் “அந்தக்கடிதம் கிடைத்ததா?”என்றாவது ஒரு கடிதம் எழுதவேண்டும்போல் இருக்கும்.

நாட்கள் கவலை இல்லாமல் ஓடிக்கொண்டேஇருந்தன,நான் எதிர்பார்க்கவே இல்லை…என் தங்கையின் கழுத்தில் தாலி ஏறுவதென்றால் நிசாருக்கு சீதனமாக வீட்டுடன் ஜம்பதினாயிரம் …எங்கு செல்வது?..கடலுக்கப்பால் செல்வதைவிட வேறு வழி இருப்பதாகத்தெரியவில்லை .

வெளியே சென்று ஒருவருடத்தில் காரணமின்றி நிறுத்தப்பட்ட அவளது தொடர்புக்கும்,,நான் நித்திரை இன்றி தொலைத்த நாட்களுக்கும் ,என்றோ ஒரு நாள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனது அபிப்பிராயப்படி…இன்று நான் ஊர் வருவது ஜெஸிக்குத் தெரிந்திருந்தால் அவள் வீட்டு முற்றத்தால் செல்லும் அந்த முதலாம் குறுக்குத்தெருவே சிரித்துக்கொண்டிருக்கும்,ஆனால்…இன்னும் ஏன் அவள் என் மடல்களுக்குப் பதில் போடாமல் போனாள்? ஊரில் இருந்தவேளை வசனங்களுக்குத் தட்டுப்பாடாகிப்போன அந்த நாட்களை எண்ணிப்பார்க்கும்போது அவள் மேல் கொண்ட கோபங்கள் கூட எங்கோ ஓடி மறைந்துவிடும்
தங்கையின் கடிதத்தில் குறிப்பிட்ட புது வீட்டின் “ஹோலிங்” பெல்லை அழுத்திவிடுகின்றேன்.பின்னால் வந்த சின்னஞ்சிறுசுகள் எனது எனது சென்ற் வாசத்தை தொடர்ந்து சகித்துக்கொள்ளத் திரானியற்றுப் போய் எங்கோ ஒரு தெருவில் தொலந்திருக்கவேண்டும்.

வீட்டுக் கதவைத் திறப்பவர்கள் யாரா இருந்தாலும் முன்னறிவிப்பு இன்றி நிற்கும் என்னைக் கண்டு சில வினாடிகள் த்ங்கள் கண்களையே கசக்கப்போகிறார்கள்.

“ஒரு கடிதமாவது போட்டிருக்கக்கூடாதா?”…கோபத்துடன் மூஞ்சியை நீட்டிக்கொண்டாள் தங்கை.அவளுக்கு வந்த கோபத்திற்கு திறந்த கதவை மூடியிருக்கவேண்டும்.அவள் அப்படிச் செய்யாமைக்கு சிலவேளை நான் விமான டிக்கெட் எடுக்க கஷ்டப்படவேண்டியிருக்கும் என நினைத்திருக்கவேண்டும்.மூஞ்சை நீட்டிக்கொண்டு உம்மாவைக்கூப்பிட்டாள் .இனி..உம்மாவின் கோப மூஞ்சை தரிசிக்கவேண்டியதுதான்.

தொலைந்து போன ஜந்து வருடங்களை நினைக்கும்போது வேதனையாக இருந்த போதும் மீண்டும் விமானம் ஏறினால் என்ன என்று கேட்கும்படி….யாரை என் தங்கைக்கு மாப்பிள்ளையாக்க நினைத்தேனோ ..…அவன்…நிசார்… நான் நினைக்காத ஒன்றைச் செய்திருந்தான் .ஜம்பதினாயிரம் கேட்டவன் ஜந்து சதம் கூட வாங்காமல்…என்..ஜெஸியை…

“சரி …ஜெஸி என்னை எப்படி என்னை மறந்தாள்?”

இப்படி பின்பொருபொழுதில் நண்பனிடம் கேட்டதில் …

“அதுவா..நீ யாரோ ஒருத்தியை முடிக்கத்தானே போகிறாய், அவளை முடித்து, அவளுடன் ..உன்னை மறந்துபோகும்போது எல்லாம் புரியும்,இப்போ உனக்கு எது சொன்னாலும் புரியாது ” என்றவனிடம்

”நான் எவளையும் முடிக்காவிட்டால் …?”

எனது அடுத்த வினாவிற்கு அவன் கூறிய “மடையா…” என்ற அந்த வார்த்தையிலேயே ஒரு காலத்தில் முதலாம் குறுக்குத்தெருவிற்கு அவளின் பெயரப் போடவேண்டும் என நினைத்தது எவ்வளவு தப்பாகிப்போய்விட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.ஆனால் உலக காதலர்களின் நினைவாக ஒரு முத்திரை வெளியிடவேண்டும் என்று தபால் பகுதியினருக்கு ஆலோசனை கூறவேண்டும் என்பதில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *