கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 10,762 
 

குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில் என் பயணம் முடியப்போகிறது என்று சொல்கிறது. ரோஜாப்பூ நிறத்தில் நான் செல்கிற சாலையை சுட்டிக் காட்டியபடி அதன் இருபுறத்திலும் வெறும் பச்சைவெளிகளும் மலைகளும் இருப்பதை மலிவான க்ராஃபிக்ஸில் வரைந்து காட்டுகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் குரல் நிதானமாக அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி அதிகாரமில்லாமல் சொன்னது. கடந்த பத்து மைல்களாகவே இந்த சாலையில் யாரும் பயணிப்பதாக தெரியவில்லையாதலால் சுழல்தட்டு இசை அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தது. காற்றும் காரும் சுமார் மூன்று மைல்களை சல்லென விழுங்கி முடித்திருக்கக்கூடிய நேரத்தில் சந்தேகம் எழுந்து ஜிபிஎஸ்ஸை பார்க்க அது ஒளியிழந்திருந்தது. நம்ப முடியாதவனாக பார்வையை கூராக்கி பார்த்தும் அது அணைந்தே இருந்தது. ஒரு மைல் தாண்டி சாலையோரமாக வீக்கம் போல அகலமாக வளைந்து இழுக்கப்பட்டிருந்த சிறிய கிளைச் சாலையில் ஒதுங்கி காரை நிறுத்தினேன். அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி ஜிபிஎஸ் சொன்னது வந்த வேகத்தில் எங்கோ நினைவிலிருந்து நழுவியிருந்தது.

ஜிபிஎஸ்ஸை எடுத்து மீண்டும் இயக்கிப் பார்த்தும் ஏதும் பலனில்லை. ஐஃபோன் கையில் இல்லை. சுமார் நூற்றியறுபது மைல்கள் வீட்டைத் தாண்டி முதன் முறையாக இந்த அமெரிக்க மாகாணத்திற்கும் இடத்திற்கும் வந்துகொண்டிருப்பதால் அடுத்த திசை என்னவென்று தெரியவில்லை. சென்றடைய வேண்டிய இடம் ஒரு இசைப்பள்ளி என்பதைத் தவிர மூளையில் எதையும் பதிக்கவில்லை. ஆளில்லாத சாலையில் தனியாக நின்றுகொண்டிருந்தேன். இந்தியாவில் இப்போது நேரம் மாலை ஆறரை இருக்கும். அப்பாவை அழைத்தேன்.

‘கண்ணா?’

‘அப்பா, வீட்லயா இருக்கே?’

‘இல்ல, சுகந்தி வீட்டுக்கு வந்திருக்கேன், ஏன் கண்ணா?’

‘ஓ. இல்ல அட்ரெஸ் மறந்திட்டேன்’

‘அடடா. ம்ம்ம்.. ஸ்லேட்டர் ஸ்ட்ரீட்னு நினைக்கிறேன் கண்ணா, சரியா நினவில்ல’

‘எப்போ மறுபடி வீட்டுக்குப் போகப் போறே?’

‘நைட் இங்க தான் தூங்கச் சொல்லியிருக்கா அவ. மாப்பிள்ளையும் சொல்றார்’

‘சரி சரி’

‘வீட்டுக்குப் போயி பாத்து சொல்லவா?’

’வேண்டாம் வேண்டாம், நான் பாத்துக்குறேன்’

‘சரி’.

அலைபேசியை அணைத்துவிட்டு காற்று கலைத்த தலைகேசத்தை சரிசெய்தேன். காற்று ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் பலத்துடன் வீச, நினைவுகளை எடுத்து புரட்டியது போல ‘0.6 மைலில் வலதில் திரும்பவும்’ என்று ஜிபிஎஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. வந்த வழியே மீண்டும் சென்று முதல் இடது திருப்பத்தில் திரும்பிக்கொண்டேன். மனதில் கணக்கிட்ட பொழுது சரியான இடத்தில் திரும்பியிருக்கிறேன் என்று பட்டது. இன்னும் ஒரே திருப்பம் மட்டுமே பாக்கி. காரை கிளப்பி நேரே சென்று கொண்டேயிருந்ததில், சாலை இறுதியில் இரண்டாக நேரெதிராக பிரிந்து சவால் விட்டது. மீண்டும் நல்ல இடம் பார்த்து காரை ஓரங்கட்டினேன். மலையை நெருங்கிக்கொண்டிருப்பதால் நிறைய மரங்களும் அடர்ந்த நிழலுமாய் சூழ்நிலை ரம்மியமாக மாறியிருந்தது. அப்பாவை அழைத்து அட்ரெஸை பார்க்கச் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஸ்டியரிங்கில் கைகளை அழுந்த வைத்து யோசித்துக்கொண்டிருக்கையில் வலது பக்கத்திலிருந்து மட்டும் நிறைய பறவைகளின் ஒலிகள் கேட்டபடி இருந்தது புலப்பட்டது. கூர்ந்து கவனித்து நிச்சயப்படுத்திக்கொண்டு, என்ன தோன்றியதோ காரை வலதில் திருப்பி மெதுவாக சென்றுகொண்டே இருந்தேன். ஒரு மிகச்சிறிய கிளைச்சாலையின் முடியில் நான் தேடிவந்த இசைப்பள்ளி பெரிய வாயிலுடன் நின்றுகொண்டிருந்தது.

****

கடந்த காலத்திலிருந்து மீண்டு வருவது போல தொலைதூரத்திலிருந்து ஒரு பெருமேகம் மெல்ல எங்களை உற்று பார்த்தபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மலையுச்சியிலிருந்த அந்த பள்ளியின் முன்னே விரிந்திருந்த வெளியில் ஒரு மர பெஞ்ச்சில் மரத்தின் கீழே நானும் ரம்யாவும் அமர்ந்திருந்தோம். ரிஷப்ஷனிஸ்ட், ‘ராம்யா?’ என்று நிச்சயப்படுத்திக்கொண்ட ரம்யா. ‘ஃப்ரெண்ட்ஸ் கால் மீ ரம்’ என்றுட் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட ரம்யா. அழுக்கேறிய ஜீன்ஸும் பச்சை நிற டிஷர்ட்டும் அச்சு அசல் தமிழ் முகமும் குரலும் கொண்டிருந்தாலும், ஓவியத்தின் நிறத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வண்ணத்தில் வரைந்த வெளிக்கோடு போல இருபது வருட அமெரிக்க வாழ்க்கை அவளை தன்னுள் முற்றிலுமாக வாங்கியிருந்தது. கையில் வைத்திருந்த பேப்பர் கட்டை எங்களிருவருக்கிடையில் வைத்தேன். அவள் மீண்டுமொரு முறை தன் வயலினை தூரமாக நகர்த்த முற்பட்டாள். ‘நோ, தட்ஸ் ஃபைன்’ என்று சொல்லிவிட்டு பேசுவதற்கு தயாரானேன்.

‘தமிழ் புரியுமா?’

‘நல்லா, பேச தான் கொஞ்சம் கஷ்டம்’

’யு ஆர் ஃபைன். அண்ட் திஸ் ஈஸ் வாட் ஐ ஹாவ் ப்ராட்’ என்று கடிதங்கள் நிரம்பிய கட்டினை எடுத்து நீட்டினேன்.

‘உங்க மெயில் படிச்சேன். ஃப்ராங்க்கா சொன்னா, என்னால நம்ப முடில’

‘எத?’

‘தி ஃஹோல் திங்’

‘ரியலி?’ சிரித்தேன்.

‘திடீர்னு எப்படினு சந்தேகமா இருந்தது. நீங்க ஒரு தடவ திரும்ப சொல்றீங்களா?’ புன்னகைத்தாள். ‘மெயில்ல படிக்கறத விட நேர்ல கேக்கறது பெட்டர்ல? ஐ வாண்ட் டு ஹியர் இட்’

‘ஷ்யூர் ஷ்யூர்’, எங்கே தொடங்குவது என்று யோசித்து, ‘உங்கப்பா ஒரு ரைட்டர்னு உங்களுக்கு.. ஐ மீன் யு நோ ரைட்?’

‘கேள்விபட்டிருக்கேன்’

‘ம்.. ஆக்சுவலி எனக்கு ரொம்ப தெரியாது.. உங்கப்பா பத்தியோ நீங்களும் உங்கம்மாவும் அவரோட ஏன் இருந்ததில்லங்கறதப் பத்தியோ.. சோ இதெல்லாம் நேர்ல பேசலாமான்னு எனக்குத் தெரியல’

‘நோ ப்ராப்ளம். எனக்கே தெரியாது. யு வில் நாட் ஹர்ட் மீ’ புன்னகைத்தாள்.

‘ரைட். திருச்சில எங்கப்பா போஸ்ட்மேனா இருந்தப்போ உங்கப்பா அங்க இருந்திருக்கார். நிறைய கதைகள், கவிதைகள் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்ப போஸ்ட் ஆஃபீஸுக்கு வரும் பொழுது அப்பாகிட்ட ஒண்ணு ரெண்டு வார்தை பேசுவாராம். அப்பாக்கு கொஞ்சம் படிக்கிறதில இண்டிரஸ்ட். உங்கப்பா பத்திரிக்கைக்கா அனுப்பறத பாத்துட்டு அப்பா ஒரு முற கேட்டு கதைய வாங்கி படிச்சிட்டு போஸ்ட் பண்ணாராம். அதுக்கு அப்புறம் எல்லா கதையையும் உங்கப்பா நேரா அப்பாகிட்ட குடுத்துட்டு போயிடுவாராம். அப்பா படிச்சிட்டு போஸ்ட் பண்றது வழக்கமாச்சாம். சுமார்..’ யோசித்து, ‘ஐ திங்க் ரெண்டு வருஷம் இப்படியே போச்சு’.

‘இண்டரஸ்டிங். அம்மா சொல்லிருக்காங்க கதையெல்லாம் பத்திரிக்கைல வந்ததே இல்லனு’

‘ஆமா. அந்த ரெண்டாவது வருஷத்துல உங்கம்மா இங்க அமெரிக்காவுக்கு வந்துட்டாங்கன்னும் நீங்க இங்க பொறந்தீங்கன்னும் அப்பா சொல்லியிருக்கார்’

‘யா’.

‘உங்கம்மா கெளம்பினதும் உங்கப்பா திருவனந்தபுரத்துக்கு இடம் மாறிட்டார். அங்கிருந்தும் அப்பாவுக்கு மொதல்ல கதைகள அனுப்பி வைப்பாராம். அப்பா படிச்சிட்டு போஸ்ட் பண்ணுவாராம். ஆனா படிச்சிட்டு பெருசா கருத்துன்னு எதுவும் சொல்லிகிட்டதில்ல. இன்ஃபாக்ட் ஜாஸ்தி எதும் பேசிகிட்டதில்லனு கூட நினைக்கிறேன். ஆனா அப்பாவுக்கு உங்கப்பா எழுதறது ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். இல்லனா இவ்வளவு மெனக்கெட மாட்டார்’

‘அப்பாவ பிடிக்கும்கிறதால கூட இருக்கலாம்’

‘யா. இருக்கலாம். ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் இனிமே பத்திரிக்கைக்கு எதும் அனுப்ப வேண்டாம்னு உங்கப்பா எழுதியிருந்தாராம். ஆனா அதுக்கு அப்புறமும் நிறைய கதைகள் அப்பாவுக்கு போஸ்ட்ல வந்துட்டே இருந்தது. அதுல நிறைய இன்கம்ப்ளீட்னு அப்பா சொல்லியிருக்கார். அப்பா எல்லாத்தையும் படிச்சு பத்திரமா வெச்சுகிட்டார். அடுத்த எட்டு மாசத்துல வந்த முப்பத்தி ஏழு லெட்டர்ஸ் தான் இது’ என்று பேப்பர் கட்டை நீட்டினேன்.

’க்ரேட், சீர்யஸ்லி’ என்று அதை வாங்கிக்கொண்டாள்.

‘ம்ம்.. உங்கப்பாவ நீங்க நேர்ல பாத்ததில்லல?’ கேட்கக்கூடாதென்று நினைத்த கேள்வி தொண்டையிலிருந்து முள்ளென நழுவி விழுந்தது.

‘யெஸ்’

‘ஐயாம் சாரி’

‘தட்ஸ் ஓகே. அம்மா அங்கிருந்து கெளம்பும் போது நான் பொறக்கவே இல்ல. சோ நான் பாத்ததில்ல. ஒண்ணு ரெண்டு ஃபோட்டோஸ்ல பாத்தது. அவ்வளவு தான்’

‘ம்’

‘இங்க வந்தப்புறம் திரும்ப இந்தியா போனதேயில்ல. அப்பா சைட் ரிலேடிவ்ஸ் கிட்டயும் டச் இல்ல. அம்மா எப்பவாச்சும் பேசுவாங்க அவரப் பத்தி. ஷீ ஸ்டில் லைக்ஸ் ஹிம்’

‘குட்’

‘நீங்க மீட் பண்ணியிருக்கீங்களா எங்கப்பாவ?

‘யா. ஆனா ரொம்ப ஞாபகமில்ல. எனக்கு அப்போ ஒரு ஏழு வயசிருக்கும். ஸ்பெக்ஸ் போட்டிருப்பார். நல்ல தடியா மீசையிருக்கும்’

’ரைட்’

‘இந்த லெட்டர்ஸெல்லாம் அப்பா ரொம்ப நாளா படிச்சுப் படிச்சு பத்திரமா வெச்சிருந்தார். என்ன தோணிச்சோ திடீர்னு உங்கள பத்தி எதாச்சும் தகவல் கிடைக்குதான்னு தேட ஆரம்பிச்சு எப்படியோ கண்டுபிடிச்சிட்டார். இத உங்ககிட்ட சேக்க சொல்லி போன முற வெக்கேஷன் போனப்ப கொடுத்தார். ஐ திங்க் ஹீ ஃபீல்ஸ் ஓல்ட். உங்ககிட்ட பத்திரமா இருக்கும்னு நினச்சிருப்பார்’

‘ஹவ் ஈஸ் யுவர் டாட்?’

‘ஹி ஈஸ் ஃபைன்’

‘அம்மா?’

‘ஷீ பாஸ்ட் அவே. நாலு வருஷம் முன்ன’

‘ஓ. கஷ்டமா இல்லியா? இங்க தூரமா இருக்கிறது?’

‘யா. இன்னும் ஒரு வருஷத்துல போயிடுவேன்’

‘அவர் இங்க வந்திருக்காரா?’

‘மாட்டார். பிடிக்காது’ சிரித்தேன்.

‘ஈஸ் ஹி ஹாப்பி அபௌட் யு?’ முன்பின் தெரியாதவர்களால் தான் சில சமயம் இப்படி சுவாரசியமான அந்தரங்கமான கேள்வியை கேட்டுவிட முடிகிறது.

‘ஆ.. ஐ திங்க் சோ’

’குட். மை மாம் ஈஸ் ஹாப்பி அபௌட் மீ. அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரா தெரியல. அவர் நான் என்ன பண்ணுனும்னு நினச்சார், விருப்பப்பட்டார், ஹூ நோஸ்?’. என்று இடைவெளி விட்டவள். ’அப்பாவ கொஞ்சம் பாத்தது வெச்சு சொல்லுங்க. நான் அவர் ஜாடைல இருக்கேனா கொஞ்சமாச்சும்?’

மீண்டும் அவள் முகத்தை கவனித்துப் பார்த்துவிட்டு, ‘தெரில. ஐ வுட் சே மே பி நாட்.’

‘அம்மாவும் அதத் தான் சொல்றாங்க. நீங்க யார் ஜாடை? உங்க அப்பா எப்படி இருப்பார்னு யோசிச்சு பாக்க கேக்கறேன்’

‘அம்மா. எல்லாமே அம்மா மாதிரி. பேச்சு, யோசிக்கிறது எல்லாம் அம்மா மாதிரியே’

‘குட்’

‘பட், யு நோ… ஸ்ட்ரேஞ்..’ என்ன சொல்ல முனைகிறேன் என்று எனக்கே புரியாதது போல நிறுத்தினேன்.

புருவங்களை உயர்த்தினாள்.

‘இன்னிக்கு மே பி கேட்டா அப்படியில்லனு சொல்லத்தோணுது’

‘ஏன்?’

‘டோன்னோ. ஜஸ்ட் லைக் தட். ஸ்ட்ரேஞ். வெரி’ தோள்களை குலுக்கினேன்.

‘ம்’

‘ரெண்டு கைலயும் ரெண்டு நூல் கட்டி தொங்கவிட்ட பொம்ம மாதிரி. என்னிக்கி எந்த நூல் இழுக்கும்னு எப்படி சொல்றது’

பெரிதாக சிரித்தாள், உவமையை முழுதும் ரசித்தது போல. ‘ரைட்’ என்றாள்.

பேப்பர் கட்டை எடுத்துப் பார்த்தவள், ‘எனக்கு தமிழ் படிக்கக் கூட தெரியாது’ என்றாள். என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தேன்.

’திருவனந்தபுரத்தில் இருந்து உங்கப்பா எழுதின மொதல் லெட்டர்லயே நீங்க பொறந்தத பத்தி எழுதியிருக்காராம்’

‘ரியலி?’ என்று கடிதங்களைப் பார்த்தவள், ‘எனக்கிதுல செலது படிச்சு காட்டுறீஙகளா? என்றாள் சட்டென. நான் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘ஆஹ்.. தமிழ் படிக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டம்’

‘ஓ ஓகே’ என்றாள். ஏமாற்றம் குரலில் தென்பட்டது போல இருந்தது.

‘சரி குடுங்க’

‘ஒண்ணே ஒண்ணு படிச்சாக் கூட போதும்’

‘சரி’ புன்னகைத்தேன். அப்பா எல்லாவற்றை தேதி வாரியாக அடுக்கி வைத்திருந்ததால், முதல் கடிதம் நிச்சயம் அவள் பிறந்ததைப் பற்றி எழுதியதாக இருக்கக்கூடும். அதை எடுத்துப் பிரித்தேன். உள்ளே ஒரு நீண்ட கதை இருந்தது. அதனுடன் ஒரு துண்டு பேப்பர்.

‘இதுல ஒரு கதை இருக்கு’

’எதுவேணா படிக்க. ஐ ஜஸ்ட் வாண்ட் டு ஹியர் சம்திங். எனக்கு சவுண்ட்டோட தான் ரிலேட் பண்ணிக்க முடியும். குறிப்பா தமிழ பொறுத்த வர’

கடிதத்தின் நீளத்தை இன்னுமொருமுறை பார்த்துவிட்டு படிக்கத் துவங்கினேன். ‘சாலை முழுக்க பள்ளிச் சீருடையில் மாணவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். வானத்தில் இரு நீல பலூன்கள் இலக்கின்றி மிதந்துகொண்டிருக்கின்றன. ஒரு சிறுமி தனியாக நின்று தலைநிமிர்ந்து பலூனை பார்த்துக்கொண்டிருக்கிறாள். பாக்கெட்டில் ஏதும் பணமில்லை. இருந்தும் அப்படியே விட்டுவிட மனமில்லை. தெரிந்த கடையென்பதால் சிகரெட் கடையில் நின்று ஒரு ரூபாய் கொடு என்றேன். என் வறுமை புரிந்தவன் என்பதால் அவன் மறுக்காமல் கொடுத்தான். பலூனை வாங்கிக்கொண்டு நடந்தேன். சிறுமி இன்னுமும் அங்கேயே நிற்கிறாள்..’ என்று கொஞ்சம் மூச்சை எடுத்தேன்.

’சவுண்ட்ஸ் குட்’

’யா’

‘மெஷர் பண்ணி எழுதுனா மாதிரி இருக்கு’

‘புரிஞ்சுதா?’

‘வெரி வெல்’

‘மேல படிக்கவா?’

‘இல்ல. ஆனா எதுல என்ன பத்தி எழுதிருக்கார் சொன்னீங்க? அத மட்டும் படிச்சு காட்டுறீங்களா?’

‘ஷூயர்’

‘உங்க வாய்ஸ் நல்லாருக்கு. தமிழ்ல அத கேக்க நல்லாருக்கு’

‘சீரியஸ்லி?’

அமைதியாக புன்னகைத்தபடி ஆமோதித்தாள். அந்த கடிதத்துடன் இருந்த துண்டு காகிதத்தை எடுத்துப் பார்த்தேன். ‘இதுல இருக்கு’ என்றதும் அவள் ஆர்வமானாள்.

’சேதி வந்திருக்கிறது. பெண் பிறந்திருக்கிறாள். எப்படி கற்பனை செய்தும் அந்த காட்சியை கைவசப்படுத்தமுடியவில்லை. என்னுடைய..’ நிறுத்தினேன். ‘இங்க அழிஞ்சு போயிருக்கு’. ‘என்னுடைய….. எனினும் இனி நானே அதில் இருக்கப்போவதில்லை. வேடிக்கையாக இருக்கிறது. கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது’ ’அவ்வளவு தான் இருக்கு’.

’தாங்க்ஸ்’

’வேற எதாச்சும் படிக்கவா? இல்ல இதயே திரும்பி படிக்கவா?’

‘நோ. போதும். நான் தமிழ் படிக்க நிச்சயம் கத்துக்கப்போறேன்’ என்று அழகாகச் சிரித்தாள். திடிரென அவள் மிக அழகு என்று தோன்றியது. கண்களில் எப்போதும் ஆர்வமும் இதழில் எப்போதும் புன்னகையும் தேங்கியிருந்தன.

கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். அவள் சிற்சில கடிதங்களை எடுத்துப் பார்த்துப் படித்துவிட்டு அங்கங்கே சில வார்த்தைகளை என்னவென கேட்டாள். பின்னர் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு நான் விடைபெற்றுகொண்டேன்.

கார் வரை உடன் நடந்து வந்தாள். மரங்களின் மேலே நிறைய பறவைகள் அமர்ந்து பள்ளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த இசைக்கு பதில் பாடிக்கொண்டிருந்தன. முற்றிலும் பேச ஏதுமற்றவர்கள் போல அமைதியானோம். அடிக்கடி அழைப்பதாகச் சொன்னாள். நானும் என்று உறுதியளித்து விட்டு காரை கிளப்பினேன். ஜிபிஎஸ் எதிர்பார்த்ததைப் போல தடையின்றி இயங்கியது.

*****

’ஷிவா?’

‘யெஸ்?’

‘ரம் பேசறேன்’

‘ஹாய்!’

‘அந்த வார்தையை கண்டுபிடிச்சிட்டேன்’

‘எந்த வார்த்தை?’

‘அந்த லெட்டர்ல அழிஞ்சிருந்ததே?’

‘யா?’

‘நீட்சி’

‘அப்படின்னா?’

‘கண்டினியுவேஷன். இன்னும் பெட்டரா ப்ரொட்ராக்‌ஷன். பட் தமிழ் வார்த்தை இன்னும் அதிக அர்த்தம் கொடுக்குது’

’நான் வார்த்தை கேள்விபட்டதேயில்ல. என்னவிட தமிழ் கம்மியா தெரிஞ்சும் ஒரே நாள்ல கண்டுபிடிச்சிட்டீங்க?’

‘அந்த இடத்துல இட் சவுண்டட் பெர்ஃபெக்ட். எனக்கும் தெரியல. அம்மாகிட்ட ரெண்டு மூணு வார்த்தை கேட்டுட்டே வந்தேன், அதுல நான் கெஸ் பண்ண மூணாவது வார்த்த இது. அம்மா அப்படி ஒரு வார்த்த இருக்குன்னு சொன்னாங்க. அர்த்தமும் சரியா இருக்கு. கண்டிப்பா அது தான்’

‘இம்ப்ரெசிவ்!’

‘ரைட். ஜஸ்ட் இத சொல்லணும்னு தோணுச்சு. திரும்ப கூப்பிடறேன். தாங்க்ஸ்’

’பை’

ஃபோனை வைத்துவிட்டு அப்பாவிடம் பேச்சை தொடர்ந்தேன். அப்பா குறுகுறுவென வெப் காமில் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘அவ தான்பா. சும்மா கூப்பிட்டிருந்தா’

‘தமிழ் பேசறாளா?’

‘நல்லா’

’இல்லனா வருத்தப்பட்டிருப்பார்’

‘ம்’

‘அவங்கம்மா அவங்கப்பா பத்தி பேசறாங்களாமா?

‘தெரியல. அதெல்லாம் கேக்கல. அம்மாவுக்கு அப்பாவ பிடிக்கும்னு சொன்னதா ஞாபகம்’

‘நல்லது. திரும்ப வரப்போ வழி எப்படி பாத்தே?’

‘ஜிபிஎஸ் இருந்ததே’

’சரி சரி. சரி கண்ணா, நான் வெக்கட்டா?’

‘சரிப்பா, நாளைக்கு கூப்பிடறேன்’

அப்பா மவுஸை மெல்ல அழுத்திப் பிடித்து நகர்த்துவது தெரிந்தது. எதையோ க்ளிக் செய்துவிட்டு கைகளை எடுக்கிறார். தூக்க கலக்கத்தில் மெல்ல என் வலது உள்ளங்கை வலது கண்ணோரமாக அழுந்த துடைத்து அப்படியே சோம்பல் முறிக்கிறது. அதே கணம் அப்பாவும் வெப் காமில் அதையே அச்சுஅசலாக செய்துகொண்டிருக்க, என்னுடைய வெப்காம் ஒளிபரப்பு எனக்கே சிறியதாக கீழே தென்பட்டுக்கொண்டிருப்பதிலும் நான் அதையே செய்துகொண்டிருக்கிறேன். ஒரு நொடி அசைவின்றி அதை பார்த்துக் கிரகிப்பதற்குள் இணைப்பு சட்டென துண்டாகிறது.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *